லண்டனிலிருந்து அன்புடன் - 7
- பஞ்சுமிட்டாய் பிரபு
- 4 days ago
- 2 min read

அக்டோபர் 2025 – மிகத் துயரத்துடன் துவங்கியுள்ளது. அக். 4 ஆம் தேதி சிறார் இலக்கியத்தின் முன்னோடியான குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இயற்கை எய்தினார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அக். 1 ஆம் தேதி சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall அவர்கள் மறைந்தார். அதற்கு முன்பு செப். 27ஆம் தேதி கரூர் கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 மக்கள் இறந்துள்ளனர். மறைந்த அனைவருக்கும் நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.
தொடர் மரணச் செய்திகள் பெரும் துக்கத்தையும் வருத்தத்தையும் தருகின்றன. நீங்களும் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தி அல்லது சமூக ஊடகம் மூலமாகவும் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் மூலமாகவும் கரூர் துயர்ச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் இறப்புச் செய்தி உங்களையும் வருத்தப்படச் செய்திருக்கும். மன தைரியத்துடன் இருப்போம். பாதுகாப்பு விதிகளை சரியாகப் பின்பற்றுவோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். பெரியவர்கள் போலவே குழந்தைகள் உங்களுக்கும் சில பொறுப்புகள் உண்டு. பிடித்த நாயகர்கள் இதுபோன்று பெரும் நிகழ்வுகளை நடத்தும்போது, அதற்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சரி வாருங்கள்! சுற்றுச்சூழல் அறிஞரான Jane Goodall பற்றியும் அவர் எழுதிய குழந்தைகள் புத்தகங்கள் குறித்தும் இனி பார்ப்போம். ஜேன் குடால் இறந்த போது அவருக்கு 91 வயது. அவரது மரணத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள், ஓவியர்கள், அறிஞர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜேன் குடால் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. அவர் பணி புரிந்தது முழுதும் ஆப்பிரிக்கா தேசத்தில். அப்படியிருக்க நமது தமிழ்நாட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினர் என்றால், அவர் யார்? அவரது முக்கியத்துவம் என்ன? உங்களைப் போன்று எனக்கும் இந்தக் கேள்விகள் எழுந்தன.
அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்த “Good Night Stories For Rebel Girls” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அதில் உலகப் புகழ்பெற்ற 100 பெண்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருந்தன. ஒரு பக்க அளவில் சுருக்கமாகவும், கூடவே அவர்களது ஓவியம் இடம் பெற்றிருப்பதும் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. எனது அதிர்ஷ்டம், அதில் ஜேன் குடால் அவர்களும் இடம் பெற்றிருந்தார். எனது மகன் மற்றும் மகளுடன் ஜேன் குடால் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை வரலாறு என்றாலே, எங்களுக்கு “Little People Big Dreams” எனும் புத்தக வரிசை மிகவும் பிடித்தமானது. அந்த புத்தக வரிசையில் 32 பக்கங்களில் அழகிய ஓவியங்களுடன் எட்டு வயதினர் முதல் வாசிக்கும் வகையில் எளிமையான வகையில் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும். அந்தப் புத்தகத்தையும் நூலகத்தின் வழியே டிஜிட்டல் புத்தகமாக வாசித்தோம்.
ஜேன் குடால் (Jane Goodall) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. சிறு வயது முதலே விலங்குகள் மீதும் பூச்சிகள் மீதும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வந்தவர். 11ஆம் வயதில் டார்சன் புத்தகம் வாசித்ததிலிருந்து அவருக்கு ஆப்பிரிக்கா செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆப்பிரிக்கா செல்வதற்கான பணத்தை அவரே சம்பாதித்து, 23ஆம் வயதில் கப்பல் வழியே ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு நாடான கென்யாவிற்குச் சென்றார். முறையான கல்வி பெற அவரிடம் வசதியில்லாத போதும், கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் எப்பொழுதும் இருந்தது. அதனைவிட விலங்குகள் மீதான அன்பும் அக்கறையும் அவருக்குத் துணை நின்றது. அதன் மூலம், பிரபல விஞ்ஞானியான லூயிஸ் லீக்கியின் உதவியாளராக ஆனார். சிம்பன்சி குரங்குகள் குறித்தும் ஆய்வு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
பொதுவாக, விஞ்ஞானிகள் தாங்கள் ஆய்வு செய்யும் விலங்குகளுக்கு எண்களையே வழங்கினர். ஆனால் ஜேன் அவர்களோ சிம்பன்சிகளுக்கு பெயர்களைச் சூட்டினார். மற்ற விஞ்ஞானிகளோ, விலங்குகளைக் கூட்டில் வைத்து ஆய்வு செய்தனர், சிலர் தூரத்திலிருந்து அதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் ஜேன் அவர்களோ, காட்டுக்குள் சென்று, போதிய காலம் எடுத்துக்கொண்டு, சிம்பன்சி குரங்குகளோடு பழகினார். சிம்பன்சி குரங்குகளும் ஜேன் அவர்களை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டன.
ஜேன் அவர்கள் சிம்பன்சி குரங்குகள் குறித்து மிக நீண்ட ஆய்வுகளைச் செய்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளும் கருவிகளைப் பயன்படுத்துகிறது என்பதை அவர்தான் முதன்முதலாக அறிவித்தார். மனிதர்கள் போலவே சிம்பன்சிகளிலும் அன்பு, கோபம், ஏமாற்றும், துரோகம் என மனிதர்கள் போலவே குணங்களும் உடையவை என்பதையும் கண்டறிந்தார். அவரது ஆய்வின்படி மனித இனத்திற்கும் சிம்பன்சி இனத்திற்கும் 98.8 சதவீதம் டின்ஏ பொருந்துகிறது என்பதையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறினார்.
இந்த ஆய்வுகள் அனைத்திற்கும் அவரது பொறுமைதான் மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகிறேன். விலங்குகளுடன் காடுகளில் அவர் மிக நீண்ட காலம் வாழ்ந்து அதன் பிறகே அவர் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உலகிற்கு அறிவித்தார்.
ஜேன் தனது அனுபவங்களையெல்லாம் புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாகக் குழந்தைகள் உங்களுக்காகவும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். அதுகுறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.
Comments