top of page

வாசித்தீர்களா? - நத்தை வீடு

ree

ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் தாய்தமிழ் பள்ளியில் “நத்தை வீடு” என்கிற சிறார் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது. லாலிபாப் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை சமூக செயற்பாட்டாளர் பாவலர் கனல் அவர்கள் படைத்திருக்கிறார் என்பதறிந்தேன். பள்ளியின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த நான் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தேன். 

 

நிகழ்வின் தொடக்கத்தில் அப்பள்ளி குழந்தைகள் நூலிலுள்ள சில பாடல்களை அழகான பாவனைகளோடு பாடிக் காட்டினர். குழந்தைகளுக்கு ஏற்ற எளிய சந்த நடையில் உருவாகியிருந்த அப்பாடல்களை தங்களின் வெளிப்பாட்டுத் திறத்தினால் இன்னமும் அழகாக்கி இருந்தனர் குழந்தைகள்.

 

பள்ளிக்கூடங்களின் கற்றல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்டுள்ள இத்தருணத்தில் எளிமையும் இனிமையும் கலந்து வெளிப்பட்ட இப்பாடல்கள் பங்கேற்பாளர்களிடம் நல்லதொரு உணர்வெழுச்சியை உருவாக்கியதை உணர முடிந்தது. எளிய வடிவத்தில் எத்தனை எத்தனை விசயங்களை எளிதாக குழந்தைகளிடம் கடத்திவிட முடிகிறது என்கிற எண்ணம் எழாதவர்கள் யாரும் அங்கிருந்திருக்க முடியாது. இதையே எதிர்பார்த்திருந்த பள்ளி தாளார் கு. ந. தங்கராசு அவர்களிடம் மகிழ்ச்சி பெருமிதம் கூடியிருந்தது.

 

புதியதன் வாசம் மறையாத அப்புத்தகங்கள் அனைத்தும் அங்கேயே விற்றுத் தீர்ந்தன. நானும் வாங்கி வந்திருந்த புத்தகத்தினை அன்றைய தினமே வாசித்து முடித்தேன். வாசிப்பின் இடைவெளியிலெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் பாவனைகள் நினைவில் முன்வந்து நின்றன. பழஞ்சோறு சாப்பிடும்போது கடித்துக் கொள்ளும் வெங்காயத் துண்டு போல் மனதில் சுவை கூட்டியது.

 

எளிமையான சந்த நடையில் தேர்ந்த சொற்களால் தொகுக்கப்பட்டிருந்தது இந்நூல். சிறார் பாடலுக்கென்றே உள்ள பொதுவான உள்ளடக்கங்களைத்தான் இந்த நூலும் பாடலாக்கி இருக்கின்றன என்றாலும் அதை சொல்லும் முறை ஈர்ப்பாகவே இருக்கின்றன. கறிக்குழம்பு, அறிவின் வளர்ச்சி, கணினி உலகம் என்கிற பல புதிய உள்ளடக்கங்களும் இல்லாமலும் இல்லை.

 

திருவிழா என்பதன் வடிவங்கள் இறுக்கமான பக்திநெறிக்கானதாக மாறிப் போயிருக்கும்போது உணவும் கொண்டாட்டங்களும் உறவுகளின் கூடுகையுமே திருவிழாவின் அடிநாதமாக விளங்கிய பண்பாட்டினை

காட்டுக்குள்ளே திருவிழா … என்கிற பாடலில்

 

………..

கறிசமைச்சு சாப்பிட்டதும்

திருவிழாவும் முடிஞ்சுதாம்

 

என்கிற முடிவில் நன்றாகவே உணர்த்தியிருக்கிறார் பாடலாசிரியர்.

 

குழந்தைகளுக்கு பறவைகளும் விலங்குகளுமே உயிருள்ள பொம்மைகள். குழந்தைகள் எவ்வளவுதான் விலகியிருந்தாலும் அவர்களது உள்ளுணர்வில் எப்போதும் நிரம்பி இருப்பது அவைகள் தான். அறிந்த சொற்களில் எளிய ஓசையில் குழந்தைகள் விரும்பும் உலகம் ‘எங்க ஊரு கேணி’ என்கூறி பாடலில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பாடல்

 

எங்க ஊரு

கேணியிலே

தண்ணி இருக்குது

 

தண்ணிக்குள்ளே

கெண்டை மீன்கள்

நிறைய இருக்குது

 

………………..

………………..

………………..

 

தண்ணி பாம்பு

நாக்கை நீட்டி

நீச்சல் அடிக்குது

 

நாங்கள் எல்லாம்

குதிக்கும் போது

ஓடி ஒளிது

  -  என்பதாக முடிகிறது.

 

குழந்தைகள் பாடல்களில் கேள்வி பதில் வடிவம், கதை சொல்லும் வடிவம்  என பல உத்திகள் கையாளப்படுவது வழக்கம். இந்த தொகுப்பில் கேள்வி பதில் வடிவங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் சிறப்பாக கள்ளிப்பழம், கற்றுத் தந்தது யார்? மற்றும் நத்தை வீடு ஆகிய பாடல்கள் நல்ல உதாரணங்கள். வாசித்துப் பாருங்கள்.

 

குழந்தைகளுக்கானதாக இருந்தாலும்கூட “சிறார் பாடல்” என்கிற கலை வடிவம் சமூக சிந்தனை மாற்றங்களுக்கு வாய்ப்பானதாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பா… பா…. பிளேக் சிப், ரிங்க் ஆ ரிங்க் ஆ ரோஷஸ் ஆகிய பாடல்களை குறிப்பிடலாம். தமிழில் கூட பாரதியின் பாப்பா பாட்டு முதல் இன்று வரை பல உதாரணங்கள் உண்டு. இந்த நூலிலும் கூட சமூக மாற்றம் குறித்த பார்வை மாற்றம் ஏற்படுத்தும்படியான பாடல்கள் பல உள்ளன. புரிதலுக்காக ஒரு பாடலின் சில வரிகள்

 

உடைந்த ரோடு


நான் பிறந்த போது

போட்ட ரோடு

ஒடஞ்சு கிடக்குது …..

 

கல்லு பேந்து

குழி குழாய்

தண்ணி தேங்குது

 

….

ரோட்டுக் குழியில்

இடறி விழுந்து

மண்டை உடையுது.

 

இப்படி மனம் ஈர்க்கும் நல்ல பாடல்கள் பல உள்ளன. குறைந்த சொற்கட்டுகளில் யாவரும் விரும்பும்படியாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் குழந்தை பாடல்களுக்கான நிறைய உத்திகள் பயன்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளது மட்டும் சிறு குறையாக உணர முடிந்தது.

 

நீங்களும்கூட இந்த நூலை வாசித்து உங்கள் பார்வையை மறக்காமல் பதிவிடுங்கள்.

க.சம்பத்குமார்
க.சம்பத்குமார்

அரசுப்பள்ளி ஆசிரியர். பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று என்ற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொருப்பாளர்.

 


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Mohan
Oct 15
Rated 5 out of 5 stars.

சிறப்பான பதிவு.

Like
bottom of page