இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
பெயரும், தேசிய இனமும் : எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?" ஒரு நல்ல நாளில், பெற்றோரும், உற்றார் உறவினரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையின் இல்லத்தில் கூடுவார்கள். வீட்டின் முன் அறையில், தரைப்பரப்பில் நெல்மணிகள் பரப்பப் பட்டிருக்கும். அவற்றின் மீது, குழந்தையின் தாய்மாமன் தன் சுட்டுவிரலினால் ஒரு பெயரை எழுதுவார். அதை அவர் உரக்கப் படித்துச் சொன்னதும்,அதுவே அந்தக் குழந்தையின் பெயர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில், வீடுகளில் குழந்தைகளுக்குப் பெயர் இடுவது இந்த முறையில் நடப்பதை நாம் அறிவோம். இது வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு மனித இனங்களில் வெவ்வேறு முறைகளில் நடக்கும். யுனிசெப் நிறுவனப் பிரகடனத்தின் ஏழாவது விதி,ஒவ்வொரு குழந்தைக்கும் அவன் / அவளுக்கென்றே உரிய பெயர் ஒன்றைப் பெற்றிருப்பது அவர்களின் உரிமை என்கிறது. எனவே, "பெயரில் என்ன இருக்கு?" என யாரும் யாரையும் கேட்டு விட முடியாது / கூடாது ! ஒவ்வொரு குழந்தையையும்,அதற்கே உரிய பெயரையும், அது பிறந்த நாளையும்,பிறந்த ஊர்,இடம் போன்ற எல்லா விவரங்களையும், அவற்றைப் பதிவு செய்வதற்கென்றே இயங்கும் அரசு அலுவலகத்திற்குப் போய், உரிய படிவம் ஒன்றில் பூர்த்தி செய்து கொடுத்தால், அவற்றை அங்குள்ள ஒரு பதிவேட்டில் அலுவலர்கள் பதிவு செய்து விடுவார்கள். சில நாள்களில், அவையனைத்தையும் சரி பார்த்து விட்டு ஓர் அரசுச் சான்றிதழ் பெற்றோருக்கு வழங்கப்படும். அதுதான் அந்தக் குழந்தையின்பிறப்புச் சான்றிதழ். பிற்பாடு அந்தக் குழந்தை தொடக்கப்பள்ளியில் பெறுவதற்கும், அடுத்தடுத்த உயர்கல்வி நிலையங்களில் பெறுவதற்கும், இன்னும் பல்வேறு காரியங்களுக்கும் அந்தப் பிறப்புச்சான்றிதழ் ஓர் அத்தியாவசியமான ஆவணமாகி விடுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசாங்கம், இந்தப் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பல இலட்சம் மக்களைக் கணக்கெடுத்து, அவர்கள் இந்த நாட்டு மக்கள் அல்லர் எனவும், அவர்கள் பங்களாதேஷ், பர்மா, மலேஷியா போன்ற பல்வேறு அண்டை அயல் நாடுகளிலிருந்து இங்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அறிவித்து விட்டது. அவர்கள் அனைவரையும் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், அவ்வாறு அனைவரும் வெளியேற்றப்படும் வரை அவர்களைத் தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமான முறையில் ஒன்றிய அரசாங்கம் செய்து வருகிறது. நமது அன்புக்குரிய குழந்தைகளிடம் உரிய பிறப்புச்சான்றிதழ் இல்லாமற்போனால், அவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதற்கு மேற்கண்ட அரசாங்க நடவடிக்கை ஓர் எச்சரிக்கை மணியாகும். தமிஸ்நாடு போன்ற மாநிலங்களில், இன்னும் நாம் இப்படியான நெருக்கடிகளை நேரடியாக எதிர்கொள்ளவில்லைதான். ஆனால் மேற்கு வங்காளம்,பஞ்சாப், காஷ்மீர்' இமாச்சலப்பிரதேசம் போன்ற எல்லையோர மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இது மக்கள் நடுவே மிகப்பெரிய ஓர் அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கென்று ஒரு பெயரைப்பெற்றிருக்கும் உரிமையைப் போலவே, அவர்களுக்கென ஒரு தேசிய இன ( Nationality ) அடையாளம் ஒன்றையும் பெற்றிருக்க உரிமையுண்டு என யுனிசெப் பின் மேற்கண்ட ஏழாவது விதி மேலும் கூறுகிறது. அதோடு, ஒரு பெயர், தேசிய இனம் இவற்றுடன், குழந்தைகள் தமது பெற்றோர் இன்னார்தாம் என்பதையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்;அதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் கூறுகிறது. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் நன்கு பராமரித்துக் கொண்டு வருவது அவர்களின் சட்டபூர்வமான கடமை; அது குழந்தைகளின் உரிமையும் கூட எனவும் யுனிசெப் விதித்திருக்கிறது. நமக்கு இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம். அம்மா, அப்பா யாரென்று தெரியாமல் கூடக் குழந்தைகள் இருப்பார்களா,என்ன? ஆம், இருக்கிறார்களே! வறுமை, முறையற்ற உறவுகள், இணையருக்கிடையே நேரும் பிணக்குகள், சாதிய ரீதியான நெருக்கடிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் கணவர்கள், தமது மனைவி-குழந்தைகளைக் காய் விட்டு விட்டுப் போய் விடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்,கேள்விப்படுகிறோம். உலகம் எங்கும் போர்களின் போது பெற்றோரைப் பறிகொடுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய் யார்,தந்தை எவர் என்பது எப்படித் தெரிந்திருக்கும் ? கணவர் கைவிட்டு விட்டுப் போனபின், பல குடும்பங்களில் பெண்கள் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து சம்பாதித்துப் போராடி குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கி விடும் அனுபவங்கள் எத்தனையோ! இப்படியான குழந்தைகளும் உலகமெங்கும் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஒப்பீட்டு அளவில் பெரும்பான்மையான குழந்தைகள் பாதுகாப்பாக,அன்பான பெற்றோரின் பாசமிக்க அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஒரு வாதத்திற்காக நாம் வைத்துக் கொள்வோம். ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி ஓர் அரண் அமைய வேண்டுமென்பதே யுனிசெப் அமைப்பின் இல்டசியம். அதன் பொருட்டேமேற்கண்ட உரிமைப் பிரகடனம் ! ஒரு பெயர் ! ஒரு நாடு ! பாதுகாப்பான ஒரு வீடு ! குழந்தைகளுக்கு இவற்றைப் பெறுவதற்கு உரிமைகள் உள்ளன. அவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. அரசுகளின் கடமை. கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- இலண்டனிலிருந்து அன்புடன் - 6
இலண்டனிலிருந்து அன்புடன் தொடரில் தற்போது நாம், Dav Pilkey அவர்கள் உருவாக்கிய “Dog Man” series புத்தகங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம். இது காமிக்ஸ் வகையைச் சார்ந்தது. இங்குள்ள நூலகங்களில் குழந்தைகளால் அதிகம் வாசிக்கப்படும் புத்தகம் இது. ஒரு புத்தக உருவாக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்? எழுத்தாளர், மொழிபெயர்ப்பு நூல் என்றால் அதனை மொழிபெயர்த்தவர், ஓவியர், வடிவமைப்பாளர், அட்டைப்பட வடிவமைப்பாளர், காமிக்ஸ் புத்தகம் என்றால் அதற்கான பிரத்யேக வடிவமைப்பாளர், மேற்பார்வையிட்டு கருத்துகளையும் தகவல்களையும் சரி பார்ப்பவர்கள் (அவர்களை எடிட்டர் என்று குறிப்பிடலாம்), பிழைத்திருத்துபவர், பிறகு இறுதியாகப் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளர். இவர்களைத் தாண்டி வேறு யாராவது இருக்க வாய்ப்புள்ளதா? எனக்கு எதுவும் தோன்றவில்லை. உங்களுக்கு? இந்த வரிசையில் புதிய பெயரை “Dog Man” புத்தகத்தில் பார்த்தேன். அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன். அதற்கு முன்பு புத்தகத்தின் அறிமுகத்தைப் பார்த்துவிடுவோம் வாருங்கள். “Dog Man” புத்தகத்தின் ஆசிரியர் டேவ் அவர்கள் சிறு வயதில் கற்றல் குறைபாடு உள்ளவராம். வகுப்பில் மிகுந்த சேட்டை செய்பவராகவும் இருந்துள்ளார். வகுப்பில் இருந்ததைவிட தண்டனைப் பெற்று வகுப்பிற்கு வெளியேதான் அதிகம் இருந்தாராம். அப்படி வெளியே நின்ற நாட்களில் தனது நோட்டுப் புத்தகத்தில் நிறைய காமிக்ஸ் படங்களை வரைந்துள்ளார். இரண்டாம் வகுப்பில் இருக்கும்போது அவர் சொந்தமாக சூப்பர் ஹீரோ கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். “Captain underpants” என்று சூப்பர் ஹீரோவுக்குப் பெயரும் வைத்துள்ளார். அந்த புத்தகத்தைப் பார்த்த அவரது பள்ளி ஆசிரியர், “இப்படி ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்” என்று திட்டிவிட்டு சென்றாராம். ஆனால் நல்ல வேளை தான் அந்த ஆசிரியரின் பேச்சைக் கேட்கவில்லை, அதனால் எழுத்தாளாராகிவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். டேவ் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அங்கிருந்த பேராசிரியர் ஒருவர்தான் அவருடைய ஓவியத்திறமையைப் பார்த்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். அப்படித்தான் அவர் குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும், ஓவியராகவும் உருவாகியிருக்கிறார். தனது பள்ளிப்பருவத்தில் அவர் விளையாட்டாக உருவாக்கிய கதாப்பாத்திரம்தான் நாய்மனிதன்(Dog Man). நாய்மனிதன் புத்தகத் தொடரில் மட்டும் 13 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஒரு காவல் அதிகாரியும் அவரது நாயும் திருடனைப் பிடிக்கச் செல்கிறது. அப்போது அங்கு ஒரு டைம் பாம் இருக்கிறது. அதிலிருக்கும் தவறான பட்டனை அழுத்தியதால், பெரிய விபத்து நடந்துவிடுகிறது. காவல் அதிகாரியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அவருடைய நாயின் தலையும் காவல் அதிகாரியின் உடலையும் இணைக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படித்தான் நாய் மனிதன் உருவாகிறான். அந்த நாய் மனிதன் காவல் அதிகாரியாக இருந்து எப்படியெல்லாம் தனது ஊரைக் காப்பாற்றுகிறான் என்பதே இதன் கதை. இந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர் கப், பார்சல் கவர்கள்கூட இதில் கதாபாத்திரங்களாக வருகின்றன. இவை காமிக்ஸ் என்பதாலும், மிகவும் வண்ணமயமாக இருப்பதாலும், குட்டி குட்டி அத்தியாங்கள் இருப்பதாலும் முழு புத்தகத்தையும் கடகடவென வாசித்துவிடலாம். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நாம் விழுந்து விழுந்து சிரிக்கவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனுடன், புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களை எளிமையாக வரைந்தும் பார்க்கலாம். ஓவியங்களை வரைந்து பார்ப்பது போலவே, இதிலுள்ள கதாபாத்திரங்களைப் பொம்மையாகவும் செய்யலாம். அதற்காக தனியே step-by-step instructionsகளும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல சுட்டிகளே, இந்தப் புத்தகத்துடன் நாம் விளையாடவும் செய்யலாம். அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்…இருங்கள் சொல்கிறேன். Flip Pages என புத்தகத்தில் ஒரு புதிய உத்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். புத்தகத்தின் பக்கங்களை வேகமாக திருப்பி விளையாடும் முறை இது. அதன் மூலம் இரண்டு பக்கங்களிலுள்ள ஓவியங்கள் நகர்வதுபோல் நமக்குக் காட்சியளிக்கும். “Cat Kid”, “Captain Underpants”, “Mighty Robot”,”Dragons”, “Kat Kong” என நிறைய காமிக்ஸ் தொடர்களையும் டேவ் உருவாக்கியிருக்கிறார் “Dog Man” சமீபத்தில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் புத்தகத்தின் உருவாக்கத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன் அல்லவா? இந்தப் புத்தகத்தை எழுதி ஓவியம் வரைந்தவர் டேவ் பில்கி, அவருடன் “COLORIST” என “Jose Garibaldi” என்பவரை குறிப்பிட்டிருந்தனர். என்னது வண்ணம் தீட்ட தனியே ஒருவரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா. ஆமாம் செல்லங்களே! ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட தனியே ஒருவர் இந்தப் புத்தகத் தொடரில் இருக்கிறார். இதுபோல் நிறைய புதுமைகளை இந்தப் புத்தக வரிசை கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தக வரிசை குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப் பாருங்கள். அவை கட்டாயம் உங்களை மகிழ்விக்கும்.
- மனதை மலர்த்தும் நெருப்பு விதை
இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன. குகைகளில் வாழ்ந்த காலம் முதற்கொண்டு மனிதர்களிடம் இப்பழக்கம் நீட்டித்துக் கொண்டிருப்பதை பல சான்றுகளின் மூலம் அறிய முடியும். மனிதர்களின் வாழ்க்கை பல்வேறு கட்ட மாறுதல்களைக் கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. அவர்களது அந்தந்த காலத்தின் வாழ்வியல்களை ஆவணமாக பாதுகாத்து வைத்திருப்பது நாட்டுப்புற இலக்கியங்கள் தான். எழுத்துவடிவம் இல்லாது வாய்வழியாகவே கடத்தப்படும் கதைகள், கதைப்பாடல்கள், புதிர்கள், பழமொழிகள், விடுகதைகள் என பல வடிவங்களில் நாட்டுப்புற இலக்கியங்கள் வகைபடுத்தப்பட்டிருந்தாலும் நாட்டுப்புறக் கதைகள் பலரின் விருப்பமான வாசிப்பிற்கானதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களின் வழியே அக்கால மக்களின் அற உணர்வு, பண்பாடு, வரலாறு, பொழுதுபோக்கு, அறிவு உணர்ச்சி, விளையாட்டு ஆகியன குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் நிலம் சார்ந்த எண்ணற்ற நாட்டுப்புறக் கதைகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதை பல நேரங்களில் நம்மால் உணர முடியும். உலகின் பல நாடுகளின் நாட்டுப்புற இலக்கியங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமலே மெய்நிகர் பயணமொன்றை நாம் அந்தந்த நாடுகளுக்கு நிகழ்த்தியவர்களாக நாம் உணர முடியும். உலக மொழிகளின் நாட்டுப்புறச் சிறார் கதைகள் என்கிற குறிப்பினைத் தாங்கி வெளியாகி உள்ள “நெருப்பு விதை” புத்தகம் முழுவதும் உலகின் பல மொழிகளில் வெளியாகியுள்ள நாட்டுப்புறக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் அனைத்தும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர் பிம்பம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் நாணற்காடன் அவர்கள். அல்பேனியா முதல் பாகிஸ்தான் வரையில் உலக வரைபடத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டதாக இருபத்தியிரண்டு நாட்டுப்புறக் கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நூலின் பின்னட்டை குறிப்பிடுவது போல வெவ்வேறு நிலங்களில் உலவும் கற்பனைகளும் படிமங்களும் தன்னியல்பானதாகவும் அவற்றுக்குள் பொதுத்தன்மை கொண்டிருப்பதாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. இந்த நூலிலுள்ள கதைகள் அதிக விவரிப்புகள் இல்லாது நேரடியாக கதையின் மையத்தை தொட்டுவிடுகின்றன.ஒவ்வொரு கதையும் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. கதையின் முடிவுகள் சிக்கலில்லாது மிக எளிதானதாக அமைந்திருக்கின்றது. குறைவான பக்கங்களிலேயே கதைக்கான நல்ல தீர்வையும் சொல்லிவிடுகிறது. குழந்தைகள் விருப்பமாக வாசிக்கக்கூடிய கதைத் தேர்வுகளாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. தொகுப்பு முழுவதும் அறிவிற்கு வேலை கொடுக்கும் கேள்விகளுக்கு விடை காணும் கதாபாத்திரங்களாக பெரும்பாலும் பெண்களின் கதாபாத்திரங்களே அமைந்திருக்கின்றன. காடுகளில், மலைகளில் உழைக்கும் கதாபாத்திரங்களாக ஆண்களே உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது உலகின் பொதுசிந்தனையை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. மரங்களில் இலைகளை ஒட்ட வைக்கும் மனிதர்கள், மனிதத் தலையை நிலத்தில் புதைத்து வளர்க்கும் செடி, பூமிக்கு வெளிச்சமளிக்கும் நெருப்பு விதைகள் என குழந்தைகள் கற்பனையாக கண்டுணர நிறைய காட்சிகள் நிறைந்தனவாக இந்நூல் அமைந்திருக்கின்றது. அதேபோல உலகின் தோற்றம் குறித்த பண்டைய நாடுகளின் பார்வை இந்த நூலில் கதைகளாக அமைந்திருக்கிறது. இது குழந்தைகளின் வாசிப்பிற்கு மட்டுமல்ல அவர்களின் அறிவின் தேடலுக்கும் உதவியாக அமையும். குழந்தைகளை மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள இக்கதைத் தொகுப்பு குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூலாக அமைந்திருக்கின்றது. மொழிபெயர்ப்பு என்றுணர முடியாதபடி தமிழில் அனைவரும் எளிதாக வாசிக்க முயற்சியெடுத்திருக்க எழுத்தாளரும் பாராட்டுக்குரியவர். நெருப்பு விதை, வாசிப்பவர்கள் மனதை நிச்சயம் மலர்த்தும். நீங்களும் வாசியுங்கள்.
- பூந்தட்டில் பூமிபந்து
பூவைப் போல நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்குதே – வானில் பூத்துக் குலுங்குதே! படகைப் போல நிலவின் பிம்பம் குளத்தில் தெரியுதே – ஊர்க் குளத்தில் தெரியுதே! கொன்றை மலரின் வாசம் தாங்கி காற்று வீசுதே – தென்றல் காற்று வீசுதே! முத்து முத்தாய்ப் பனித்துளிகள் முதுகுக் கூடாகுதே – புல்லின் முதுகுக் கூடாகுதே! பந்தைப் போன்ற நமது உலகம் பல்லுயிர்க்கு வீடானதே – அதைப் பாதுகாத்தல் என்றும் நமதானதே!
- மாயாஜாலக்கதைகளின் ராணி ரௌலிங்
ஜோ: இன்று நாம் பேசப்போகிற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரைப் பற்றி. அவர் பெயர் ஜே.கே. ரௌலிங். அவருடைய முழு பெயர் Joanne kathleen Rowling. நகுலன்: ஹாரி பாட்டர் கதையை எழுதியவர் தானே? ஜோ: சரியாகச் சொன்னாய், நகுலா! ரௌலிங் 1965-ல் இங்கிலாந்தில் பிறந்தார். அவருடைய வீட்டில் புத்தகங்கள் நிறைய இருந்தன. அவர் சிறு வயதில் கனவுகள் நிறைந்தவராக இருந்தார். கற்பனை வளம் அவருக்கு அதிகம். நகுலன்: அவர் அப்போவே கதைகள் எழுதினாரா? ஜோ: ஆம். சிறு வயதில் அவருக்கு கதைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் ஆறு வயது இருக்கும்போது “Rabbit” என்ற கதையை எழுதினார். பத்து வயதில் “Seven Cursed Diamonds” என்ற ஒரு சாகசக் கதையை எழுதினார். அந்த வயதிலேயே எவ்வளவு கற்பனைக்காரியாக இருந்திருக்கிறார். சிறுவயதில் பாட்டியிடம் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். பதின் பருவத்தில் ஏராளமான புத்தகங்களை வாசித்தார். மாயாஜால மந்திர சாகசங்கள் நிறைந்த கதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். ரதி: அவர் அப்போவே ஹாரி பாட்டர் கதையை உருவாக்கி விட்டாரா? ஜோ: ஹாரி பாட்டர் நேரடியாக அப்போ யோசிக்கப்படவில்லை. ஆனால் அவரது பால்யகால அனுபவங்கள், தனிமையான மனநிலை, அதிகம் கனவு காணும் பழக்கம் — எல்லாமே பின்னாளில் ஹாரி பாட்டர் உலகத்தை உருவாக்க உதவின நகுலன்: அவர் படிப்பில் எப்படி இருந்தார்? ஜோ: பள்ளியில் அவர் ஆங்கிலப் பாடத்தை மிகவும் விரும்பினார். கதைகளைப் படித்து, எழுதுவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நகுலன்: எப்போது அவர் ஹாரி பாட்டர் கதை எழுத ஆரம்பித்தார்? ஜோ: 1990-ல், மான்செஸ்டர் ரயில் நிலையத்தில் தாமதமாக வந்த ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென்று ஒரு சிந்தனை வந்தது. “ஒரு சிறுவன் – அவன் சாதாரணமா இருக்கிறான் என்று நினைத்தாலும், அவன் ஒரு மந்திரவாதி” என்ற யோசனை. அப்படித்தான் ஹாரி பாட்டர் பிறந்தது. ரதி: வாவ்! உடனே புத்தகமா வெளியானதா? ஜோ: இல்லை ரதி. அவர் அப்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார். அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு போர்ச்சுகல் நாட்டில் ஆங்கிலம் கற்பிக்கச் சென்றார். அங்கே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணவனிடமிருந்து பிரிந்து, தன் குழந்தையுடன் தனியாக வாழத் தொடங்கினார். அப்போது அவர் மிகவும் வறுமையில் இருந்தார். வேலை இல்லாமல், அரசாங்க உதவியில்தான் வாழ்ந்தார். அதற்கிடையில் அவர் ஹாரி பாட்டர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் தனது முதல் “Harry Potter and the Philosopher’s Stone” கையெழுத்துப் பிரதியை பல பதிப்பகங்களுக்கு அனுப்பினார். பன்னிரெண்டு பதிப்பகங்கள் மறுத்துவிட்டன. “குழந்தைகளுக்கு மந்திரக் கதைகள் சந்தையில் விற்காது” என்று சொல்லிவிட்டார்கள். நகுலன்: பன்னிரெண்டு தடவை நிராகரிப்பா? ஜோ: அதுதான் அவரின் தன்னம்பிக்கை. “இது தான் என் வாழ்க்கையின் கதை” என்று நம்பி தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு சிறிய பதிப்பகம் ஏற்றுக்கொண்டது. ரதி: அப்புறம் என்ன நடந்தது? ஜோ: 1997-ல் ஹாரி பாட்டர் முதல் பாகம் வெளிவந்தது. ஆரம்பத்தில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. ஆனால் படிப்படியாக பள்ளி மாணவர்கள் அதை விரும்ப ஆரம்பித்தார்கள். செய்தித்தாள்கள், விமர்சகர்கள் எல்லாரும் பாராட்டினார்கள். அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்தன. உலகம் முழுவதும் குழந்தைகள் ஹாரி பாட்டர் கதையை ஆவலுடன் காத்திருந்தனர். ரதி: ஹாரி பாட்டர் மொத்தம் எத்தனை பாகங்கள்? நகுலன் : ஏழு பாகங்கள். நான் மூன்று பாகங்கள் வாசித்திருக்கிறேன். இரண்டு படங்களும் பார்த்திருக்கிறேன். ஜோ: அருமை நகுலா! ஹாரி பாட்டர் தொடர் உலகின் மிகவும் அதிகம் விற்கப்பட்ட குழந்தைகள் நாவல். உலகம் முழுவதும் 500 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அது மட்டும் இல்லாமல் 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ரதி: வாவ்! அப்படின்னா நாவலே ஒரு உலக சாதனையா? ஜோ: கண்டிப்பாக! ஹாரி பாட்டர் புத்தகங்கள் இவ்வளவு பிரபலமாக இருந்ததால், உலகம் முழுவதும் “ஹாரி பாட்டர் கலாசாரம்” உருவானது. குழந்தைகளும் பெரியவர்களும் ஒரே மாதிரி ரசிக்க ஆரம்பித்தார்கள். நகுலன்: ஹாரி பாட்டர் படமும் சாதனை செய்திருக்கிறதா? ஜோ: நல்ல கேள்வி நகுலா. ஹாரி பாட்டர் திரைப்படத் தொடர் உலகின் மிகவும் வசூல் செய்த திரைப்படத் தொடர்களில் ஒன்று. எல்லா படங்களையும் சேர்த்துப் பார்த்தால், பில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. உதாரணமாக Harry Potter and the Deathly Hallows – Part 2 படம் மட்டும் வெளியான முதல் நாளிலேயே உலக சாதனை படைத்தது. நகுலன்: ஜே. கே. ரௌலிங் உலகின் பணக்கார எழுத்தாளர்களில் ஒருவராக மாறிவிட்டார் தானே அத்தை. ஜோ: மிகச் சரியாகச் சொன்னாய் நகுலா! ஜே.கே. ரௌலிங் உலகின் மிகவும் பணக்கார எழுத்தாளர்களில் ஒருவர் ஆனார். அவர் எழுதிய ஹாரி பாட்டர் நாவலால் எழுத்தாளர் உலகில் புதிதாக ஒரு உயரத்தை எட்டினார். ரௌலிங் “Forbes” பத்திரிகை பட்டியலில், “பில்லியனராக மாறிய முதல் எழுத்தாளர்” என்ற பெருமையையும் பெற்றார். ரதி: அதனால் ரௌலிங் மட்டும் இல்லாமல், அவர் உருவாக்கிய ஹாரி பாட்டரும் உலக சாதனையே! ஜோ: ஆம் ரதி. ஹாரி பாட்டர் நாவலும், திரைப்படமும், எழுத்தாளரின் வாழ்க்கையும்—மூன்றும் சேர்ந்து உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நகுலன்: வாவ்! இப்போ எனக்கு ரௌலிங் மேல் ரொம்ப மதிப்பு வந்துவிட்டது. ஜோ: அதுதான் இன்றைய பாடம். முயற்சி, கற்பனை, நம்பிக்கை இருந்தால், உலக சாதனைகள் கூட உங்களை வந்து சேரும். ரதி : நான் வாசிக்க போகிற அடுத்த புத்தகம் ஹாரிபட்டார். பார்க்கப் போகிற அடுத்த படம் ஹரி பட்டர். ஜோ: கண்டிப்பாக நீ வாசிக்கனும். ரதி: அத்தை, அவருடைய கதையில் மாயாஜாலத்தை தாண்டி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா? ஜோ: மிகச் சிறந்த கேள்வி ரதி. கனவு காணுங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் விடாமல் முயற்சி செய்யுங்கள். நிராகரிப்புகள் வந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம். இவையெல்லாம் இருக்கின்றன. நகுலன்: அப்படியானால் நாமும் எத்தனை தடைகள் வந்தாலும் கைவிடக்கூடாது. ஜோ: சரி நகுலா! அதுதான் ரௌலிங் அவர்களின் வாழ்க்கை சொல்லும் மிகப் பெரிய பாடம். ரதி, நகுலன் : நன்றிங்க அத்தை! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- செல்வி சாப்பிடணும்
செல்ல நிலா, வெண்ணிலா – என் உள்ளங் கையில் வருவாயா? செல்வி பாப்பா இப்போது - ஏனோ சோறு சாப்பிட மறுக்கிறாள். ஆரஞ்சு வண்ணப் பட்டாம்பூச்சி- நீ அழகோவியம் வரைவாயா? நூறு தடவை கொஞ்சியும் - பாப்பா சோறு சாப்பிட மறுக்கிறாள். கொன்றை மரக் கருங்குயிலே- நீ காதோரம் பாட்டுப் பாடாயோ? குறும்புக்காரி ராசாத்தி- ஒரு வாய்ச் சோறு சாப்பிட மறுக்கிறாள். மிளகாய் மூக்கு கிளியக்கா- நீ மிட்டாய்க் கதை சொல்லாயோ? செல்லக் குட்டி இளவரசி- ஒரு கவளச் சோறு சாப்பிட மறுக்கிறாள். தட்டாம் பூச்சி தங்கச்சி- நீ ‘தையத் தக்கா’ நடனமாடாயோ? குட்டிப் பாப்பா குறும்பு மறையும்! கிண்ணத்தில் சோறு குறையும்!
- முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்
என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன். இல்லையில்லை. என் பெயர் அமெலினா. நான் உக்ரைன் நாட்டிலுள்ள கீவ் நகரில் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கிறேன். எந்தப் பெயராக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு நேரத்தில் தான் யுத்தம் ஒரு புயலைப் போல வீசியது. எங்கள் பள்ளிக்கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாகி ஓராண்டு ஆகிறது. நேற்று கூட என்னுடைய பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கிய என்னுடைய அறிவியல் புத்தகத்தைத் தேடிப் போனேன். என்னுடைய வகுப்பு இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றேன். அந்த வகுப்பு நடப்பதைப் போலவே கண்டேன். என் வகுப்புத்தோழி அதோ ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது இல்லை. சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறாள்.. அவள் எவ்வளவு அழகு தெரியுமா? எனக்கு அழுகை வருகிறது. நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அமைதியாக வாழ்ந்தோம். எங்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதம் இருந்தது. சிலநேரம் நல்வாய்ப்பாக மூன்று வேளைகூட கிடைத்தது. நான், என் தங்கை,தம்பி, எல்லாரும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவோம். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறாண்டிக் கொள்வோம். சிலசமயம் எங்களுக்கு அடி விழும். அழுவோம். பிறகு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். சிரிப்போம். கேலி செய்வோம். ஓடிப்பிடித்து விளையாடுவோம். ஆமாம்.காலையில் சூரியன் எல்லாருக்கும் போல எங்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சினான். இரவில் நிலவின் குளிர்ந்த ஒளி எங்களையும் குளிப்பாட்டியது. மழை எங்களையும் நனைத்தது. பூக்கள் எங்களுக்கும் மணம் வீசின. எனக்கு அருகிலுள்ள ரோஜா தோட்டத்திலிருந்து வரும் வாசனை மிகவும் பிடிக்கும். அதை அப்படியே முகர்ந்து கொண்டே அந்த ரோஜா தோட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்வேன். காலையில் குயில்கள் எங்களுக்காகவும் பாடின. எங்களுக்கு என்று ஒரு வீடு இருந்தது. சின்னஞ்சிறிய வீடு.. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு வரும் அப்பாவும் அம்மாவும் காலை நீட்டிப் படுக்க ஒரு வீடு. எல்லாருக்கும் படுக்க இடம் போதாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவ்ர் இடித்துக் கொண்டு படுத்து உறங்கினோம். உறக்கம் நன்றாகவே வந்தது. எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்களுக்கு இருப்பதைப் போலவே. எங்கள் கடவுளும் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் ஏழைகளுக்கு உதவியிருக்கிறார் . ஒவ்வொரு நாளும் கடவுளைத் தொழுகிறோம், உங்களைப் போலவே. ஒவ்வொரு நாளும் கடவுள் உதவி செய்வார் என்று நம்புகிறோம் உங்களைப் போலவே. ஒரு சிறிய நன்மை நடந்தாலே இந்தக் காரியம் கடவுளால் நடந்தது என்று புகழ் பாடுகிறோம் உங்களைப் போலவே. அவர் இந்த யுத்தத்தை எப்படியாவது நிறுத்தி விடுவார் என்று உங்களைப்போலவே நாங்களும் நம்புகிறோம். எங்கள் பாட்டி இருந்தபோது தினமும் கதைகளைச் சொல்வார். நல்லவர்களைப் புகழ்கிற கதைகள். தீயவர்கள் அழிவது உறுதி என்று சொல்கிற கதைகள். கடவுள் ஒருபோதும் ஏழை, எளிய மக்களைக் கைவிடமாட்டார் என்கிற கதைகள் வாழ்க்கை சொர்க்கம் போல மாறும் என்று நம்பிக்கை தரும் கதைகள். நான் நம்பினேன் எங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பினேன். சொர்க்கம் எல்லாம் வேண்டாம். மூன்று வேளை உணவு, கிழியாத உடைகள், படிப்பதற்குப் பள்ளிக்கூடம் இவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பினேன். எங்கள் பள்ளிக்கூடம் குண்டு வீச்சில் தகர்ந்து வெகுகாலம் ஆகி விட்டது. புத்தகங்கள் தொலைந்து விட்டன. மருத்துவமனையின் மீது கூட குண்டு வீசப்பட்டது. வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. தினம் நிறையப்பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற குழந்தைகள் உடல் சிதறி, தலை சிதறி, இறந்து போகிறார்கள். நேற்று கூட குண்டு வீச்சினால் இடிந்த வீட்டிலிருந்து என் தம்பிக்கு ஒரு காலணி எடுத்தேன். ஒரு காலணியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைக்கிறாயா? காலணிகளே இல்லாத என் தம்பிக்கு அந்த ஒரு காலணி அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது தெரியுமா? ஆனால் சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக மறைந்து விட்டது. ஆமாம். தெருவில் இறங்கி நண்பர்களிடம் காட்டுவதற்காகப் போன தம்பி திரும்பவில்லை. இடிந்த கட்டிடத்தின் சிதைவுகளில் அவனுடைய காலணி அணிந்த அந்த ஒரு கால் மட்டுமே தெரிந்தது. எனக்குக் கண்ணீர் வரவில்லை. தினம் தினம் என்னைப் போன்ற குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன். அழுதழுது கண்கள் மரத்துப் போய் விட்டது நாளை நான் இருப்பேனா என்று தெரியாது. என் அப்பா அம்மா நாங்கள் இருக்கும் சின்னஞ்சிறு வீடு, சின்னஞ்சிறு ரோஜாச்செடி, அதன் வாசனை எல்லாம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சூரியன் இருக்கும். சந்திரன் இருக்கும். நாளையும் வெயில் அடிக்கும். மழை பொழியும். மனிதர்கள் இருக்கும்வரை உன் கடவுளும் இருப்பார். என் கடவுளும் இருப்பார். மனிதர்கள் நம்புவதற்கு யாராவது வேண்டுமில்லையா? இந்த பூமி எல்லாருக்கும் சொந்தமானது தானே. ஈ, எறும்பு முதல் யானை வரை எல்லாருக்குமானது தானே. அப்புறம் ஏன் மனிதர்கள் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். குண்டுகளை வீசி யுத்தம் செய்கிறார்கள். மனிதர்களைக் கொல்கிறார்கள். பெண்களைக் கொல்கிறார்கள். குழந்தைகளைக் கொல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடும்? இதோ போர் விமானங்கள் மேலே பறக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் என் மீது விழலாம். இறந்து போன என் தம்பியுடன் நானும் சொர்க்கத்தில் கண்ணாமூச்சி விளையாடலாம். குழந்தைகளுக்காகக் கடவுள் சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். தம்பியின் இறுதிச்சடங்கில் மதபோதகர் சொன்னார். முகம் தெரியாத என் சிறுமியே! உன்னுடைய நாடு எதுவாயினும் சரி. உன்னுடைய நகரம் எதுவாயினும் சரி. அங்கே யுத்தம் வராமலிருக்கட்டும். குண்டுகளின் கரும்புகை வெண்மேகங்கள் மிதந்து செல்லும் நீலவானத்தைக் களங்கப்படுத்தாமலிருக்கட்டும். மனிதர்கள் இயற்கையாகவே மரணமடையட்டும். மனிதனின் மிகக் கொடிய கண்டுபிடிப்பு யுத்தம். நான் போரிடும் இந்த உலகத்தின் மனசாட்சியைப் பார்த்துக் கேட்கிறேன். குழந்தைகள் இல்லாத இந்த உலகத்தில் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் நீங்கள்? உனக்கும் இப்படி ஒரு கேள்வி வந்தால் நீயும் என்னுடைய அன்புத்தோழி தான். உனக்கு நீண்ட வாழ்நாளை உன்னுடைய கடவுள் அருளட்டும் என என்னுடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன். உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- மன்சூர்
கீதா துர்வே தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான். குச்சுப்புடி நடனக் கலைஞர்கள் கண்களை அசைப்பதுபோல, அவனும் தனது கண்களை இட வலமாக அசைத்துப் பார்த்து சிரிப்பான். சில நேரங்களில் நெற்றியிலும், கன்னத்திலும் சிறிய பொட்டு வைத்துக்கொள்வான். அவனுக்கு நிறைய தோழிகள் இருந்தனர். ஒரு நாள் தனது தோழி சஹத்தின் உடையைக் கேட்டு அணிந்து, உதட்டுச் சாயம் பூசிக்கொண்டான். அவளிடம் “நான் அழகாக இருக்கிறேனா? இந்த உடை அலங்காரத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது" என்றான். அதற்கு சஹத், "உன்னை இந்தக் கோலத்தில் உனது அம்மா பார்த்தால் அடிப்பார். என்னையும் பிடித்து உதைப்பார். நான் வரமாட்டேன்" என்றாள். மன்சூர், சஹத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "வா!.. என்னிடம் சிறுமிகள் அணியும் உடைகள் இல்லை. அம்மா அப்பாவுக்கு முன்னால் இதை உடுத்திக் கொள்ள முடியாது. சீக்கிரம் போய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம்" என்று கெஞ்சினான். சஹத், "சரி வா. ஆனால் முதலில் நீ இந்த உடைகளைக் கழற்றிவிட்டு, உதட்டுச் சாயத்தைத் துடைத்துவிடு" என்றாள். மன்சூர், "ஏன்?" என்று கேட்டான். சஹத், "இப்படி அலங்காரம் செய்துகொண்டு போனால், சனங்கள் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்... அங்கே போனதும் போட்டுக்கொள்" என்றாள். மன்சூருக்கு சஹத்தின் யோசனை பிடித்திருந்தது. உடனே அவன் அலங்காரத்தைக் களைந்துவிட்டான். புகைப்படம் எடுக்கும் கடைக்கும் வந்ததும், "சரி, நீ உன் வளையல்களைக் கொடு. எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறேன்" என்றான். சிறுவயது முதல் மன்சூருக்கு தோழிகளின் அழகான உடைகளை அணிந்து நடனமாடுவது மிகவும் பிடிக்கும். அந்த உடைகளை அணியும்போது, தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதுபோல மகிழ்ச்சியாக உணர்ந்தான். தோழிகளுடன் விறகு சேகரிக்கச் செல்லும்போது, அவனது கண்கள் பெரும்பாலும் குப்பையில் கிடக்கும் பெண்களின் கைப்பைகள் மீது பதியும். அவற்றில் உதட்டுச் சாயம், பவுடர், வேறு ஒப்பனைப் பொருட்களைத் தேடுவான். ஏதாவது கிடைத்தால் உடனே எடுத்து அதை பூசிக்கொண்டு அழகு பார்ப்பான். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனக் கண்ணாடிகளில் தன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்வான். பிறகு கால்சட்டைப் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு வட்டமாகச் சுழன்று நடனமாடுவான். சிறுவயது முதலே மன்சூர், தோழிகள் விளையாடும் கோ-கோ, கயிறு தாண்டுதல் போன்ற எல்லா விளையாட்டுகளையும் விளையாடினான். அவனுக்கு இதுபோன்ற விளையாட்டுகள்தான் பிடிக்கும். சில நேரங்களில் அவர்கள் யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் நாடகம் நடத்துவார்கள். மன்சூர், எப்போதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பான். சில நேரங்களில் அம்மா, சில நேரங்களில் அக்கா, சில நேரங்களில் மனைவி எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பான். ஆண் கதாபாத்திரங்களில் நடிப்பது அவனுக்குப் பிடிக்காது. முதலில், மன்சூரின் தோழிகள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அப்போது அவன் கவலை அடைந்தான். சில நேரங்களில் அழுதான். ஆனால் அவன் தோழிகளுடன் தொடர்ந்து பழக விரும்பியதால், கவலையை மறந்து சிரிக்கத் தொடங்கினான். மகன் உதட்டுச் சாயம் பூசி, வளையல்கள் அணிந்திருப்பதை மன்சூரின் அம்மா பார்த்தால் கோபம் அடைவார். எப்போது சிக்கினாலும் அவனைப் பிடித்து நன்றாக அடிக்க வேண்டுமென்று கையில் தடியுடன் தெரு முழுவதும் தேடுவார். நாள் முழுவதும் தோழிகளுடன் சந்தோஷமாக இருப்பான். ஆனால் வீடு திரும்பும் நேரம் வந்ததும் வருத்தமடைவான். வீட்டிற்குப் போனால் அடி விழும் என்று அவனுக்குத் தெரியும். அம்மாவைச் சமாதானம் செய்வது எளிது, ஆனால் அப்பா...? ஒருமுறை அவர் கையில் சிக்கினால், வீட்டிற்குள் கட்டி வைத்து அடிப்பார். "உதட்டுச் சாயம், கண் மை போடுவியா? உனக்கு பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசையா? பெண்களுடன் சுற்றுவியா? இந்தத் தெருவில் எங்களது மானத்தைக் கெடுப்பியா?" என்று கேட்பார். அப்பாவின் அடியைவிட அவரது வார்த்தைகள்தான் மன்சூரைத் ததுன்புறுத்தும். வெடித்து அழ வைக்கும். அவன் அழுதாலும், "பெண்கள் மாதிரி அழுவதை நிறுத்து" என்று அதட்டுவார் அப்பா. மன்சூரின் அம்மா அவனைத் தெருவிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் போது, "பெண்களுடன் பழக வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன். ஏன் நீ பெண்கள் மாதிரி நடக்கிறாய்?" என்று கேட்பார். அவனை நீண்ட நேரம் திட்டிவிட்டுத் தானும் அழுவார். மன்சூரின் செயலால் அக்கம் பக்கத்தவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். சிலர் அவனை ‘திருநங்கை’ என்று அழைக்கிறார்கள். அதைக் கேட்டு மன்சூருக்குக் கோபம் வரும், ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். வீட்டில் உள்ளவர்கள் அப்படிப் பேசும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும். சஹத்தும், தமன்னாவும் மன்சூருக்குப் பிடித்த தோழிகள். அவர்கள் இருவரும் அவனை ஒருபோதும் அன்னியமாக நினைத்ததில்லை. மன்சூர் எப்படி இருந்தானோ அப்படியே அவனை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடன் சுற்றுவதும், வேலை செய்வதும் மன்சூருக்கு நிம்மதி அளித்தது. தோழிகளுடன் சேர்ந்து சமையல் செய்வது, சாணம் மெழுகுவது, வீட்டைப் பெருக்கி துடைப்பது போன்ற பல வேலைகளைக் கற்றுக்கொண்டான். இரண்டு மூன்று வீடுகளில் பெருக்கி, குப்பைகளை அகற்றும் வேலையும் அவனுக்குக் கிடைத்தது. தீபாவளி நேரத்தில், வீட்டு முற்றத்தில் சாணம் மெழுகும்போது, அக்கம்பக்கத்தவர்கள் அவனை ‘பொட்டை’ என்று சொல்லிக் கேலி செய்தார்கள். மன்சூர், யாரையும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஒருநாள் சஹத், மன்சூரிடம் அவனது பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னாள்: "கோண்டி மொழியில் மன்சூர் என்றால் அழகான மயில். மயில் தோகையில் உள்ள வண்ணங்கள் அவற்றின் அழகை இரட்டிப்பு ஆக்குகின்றன. ஆனால் அவற்றின் கால்கள் அழகற்றவை. மக்கள் மனதில் மயிலின் அழகான தோகைக்கு கிடைத்த இடம் கால்களுக்குக் கிடைக்கவில்லை. மன்சூர் என்பதற்கு 'ஏற்றுக்கொள்ளுதல்' அல்லது 'அங்கீகரித்தல்' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு" என்றாள். சஹத்தின் வார்த்தைகளைக் கேட்ட மன்சூர், "நான் மன்சூர் என்பதால் என்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையோ? இந்த உலகில் நான் மட்டும் விசித்திரமானவனா? நான் எந்த அடையாளத்துடன் வாழ விரும்புகிறேனோ, அதற்கு இங்கு இடம் கிடைக்குமா?" என்று கேட்டான். சஹத் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் மன்சூரின் கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
- பிளமிங்கோ
ஓவியம் : கண்ணன்
- பிரம்மாண்ட ஊசிக்கணவாய்
ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம் இந்த விலங்கை பிரம்மாண்ட ஊசிக்கணவாய் என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும் இல்லை இந்த பிரம்மாண்டம். இது 43 அடி, அதாவது 13 மீட்டர் நீளம் வளரக்கூடியது, பெண் ஊசிக்கணவாய்கள் 275 கிலோ எடை வரை இருக்கும். இது 3 யானைக்குட்டிகளின் எடைக்கு சமம். இதன் கண் எவ்வளவு பெரியது தெரியுமா? கண்ணுடைய விட்டம் மட்டுமே ஒரு அடி இருக்கும்! 300மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கடற்பகுதியில் மட்டுமே இவை வசிக்கும்.ஆகவே இவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன,இந்த விலங்குகளை நேரில் பார்ப்பதும் தகவல்களை சேகரிப்பதும் கடினமாக இருக்கிறது. இப்போதைக்கு வெப்பமண்டல மற்றும் துருவக்கடல்களில் இந்த ஊசிக்கணவாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1850களிலேயே இதுபற்றிய குறிப்புகள் வந்துவிட்டன. ஆனால் 2004ல்தான் இந்த விலங்கின் முதல் வீடியோ எடுக்கப்பட்டது, அந்த அளவுக்கு இது அறியப்படாத இனமாகவே இருக்கிறது. இது மிகத்திறமையாக வேட்டையாடக்கூடிய விலங்கு. 32 அடி தொலைவில் இரை இருந்தாலும் தனது கைகளை நீட்டி இரையைப் பிடித்துவிடும். பெரிய ஆழ்கடல் மீன்களை விரும்பி சாப்பிடும். இவ்வளவு பெரிய விலங்காக இருக்கிறதே, இதற்கு எதிரிகளே கிடையாது என்று யோசிக்கிறீர்களா? அதுதான் இல்லை. இயற்கையில் எல்லாவிதமான விலங்குகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வேட்டையாடிகள் உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள், பைலட் திமிங்கிலங்கள், ஒருவகை சுறாக்கள், ஆர்காக்கள் எனப் பல பெரிய விலங்குகள் இந்த பிரம்மாண்ட ஊசிக்கணவாய்களை வேட்டையாடுகின்றன! அளவில் பிரம்மாண்டமாக இருந்தாலும் இந்த விலங்குகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. இவை ஆழ்கடலில் வசிக்கின்றன. நாமாகப் போய் தொந்தரவு செய்து இவற்றை எரிச்சல்படுத்தாதவரை இந்த ஊசிக்கணவாய்கள் மனிதர்களைத் தாக்காது.
- மா லியாங்கின் மாயத்தூரிகை
சீனமொழியில்: ஹாங் ஷிண்டாவ் (1950) ஆங்கிலம் வழி தமிழில்: எழில் சின்னத்தம்பி முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன். இரக்க குணம் கொண்டவன்; ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இரவு, அவன் ஒரு கனவு கண்டான். அதில் வயதான மனிதர் ஒருவர் மாயத் தூரிகை ஒன்றை அவனிடம் கொடுத்து, ஏழைகளுக்கு உதவ அதைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். விழித்துப் பார்த்தபோது, அந்த மாய தூரிகை அவனது மேசையில் இருப்பதைக் கண்டான். அன்றிலிருந்து, ஏழைகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவன் அந்தத் தூரிகையைப் பயன்படுத்தினான். மக்கள் தங்கள் வயல்களுக்குப் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் இருப்பதை அவன் கண்டபோது, ஒரு நதியை வரைந்தான். அந்த நதி உயிர் பெற்றது. மக்கள் அந்த நதியிலிருந்து வயலுக்குத் தண்ணீர் கொண்டு வந்து தங்கள் பயிர்களை வளர்க்க முடிந்தது. கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கச் சிரமப்படுவதைக் கண்டபோது, அவர்களுக்குச் சாப்பிட உணவு வரைந்தான். விரைவில், பலர் மாயத் தூரிகையைப் பற்றி அறிந்தனர்; அவர்கள் மாயத்தூரிகையினால் பயன் பெற்று, மா லியாங்கிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் மோசமானவன். மேலும் பணக்காரனாக மாற அந்த இளைஞனிடமிருந்து தூரிகையைத் திருட முடிவு செய்தான். எனவே அவன் தனது வேலைக்காரர்களை மா லியாங்கின் வீட்டிற்கு அனுப்பி அந்த மாயத் தூரிகையை திருடச் செய்தான். தூரிகை அவனிடம் வந்ததும், அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனது புதிய உடைமையைக் காண்பிக்கத் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்தான். அவர்கள் வந்ததும் அவன் நிறையப் படங்களை வரைந்தான்; ஆனால் அவை எதுவும் உயிர் பெறவில்லை. தூரிகை அவனுக்காக வேலை செய்யாததால் அவன் மிகவும் கோபமடைந்து, மா லியாங்கிற்கு ஆள் அனுப்பி வரவழைத்தான். அவன் மா லியாங்கிடம் "நீ எனக்காகச் சில படங்களை வரைந்து அவற்றை உயிர்ப்பித்தால், நான் உன்னை விடுவித்து விடுவேன்" என்றான். மா லியாங் அந்த மோசமான மனிதனுக்கு உதவ விரும்பவில்லை, ஆனால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் அந்த கெட்ட மனிதனிடம், "நான் உங்களுக்கு என்ன வரைய வேண்டும்?" என்று கேட்டான். பணக்காரன், "எனக்கு ஒரு தங்க மலை வேண்டும். அங்கு சென்று நான் அந்தத் தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொள்வேன்" என்றான். ஆனால் மா லியாங் முதலில் ஒரு கடலை வரைந்தான். பணக்காரன் கோபமடைந்து, "ஏன் ஒரு கடலை வரைந்தாய்? எனக்கு ஒரு தங்கமலை வேண்டும். அதை விரைவாக வரை!" என்றான். எனவே மா லியாங் ஒரு தங்கமலையை வரைந்தான். அது கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. பணக்காரன், "ஒரு பெரிய கப்பலை விரைவாக வரை. நான் மலைக்குச் சென்று தங்கம் சேகரிக்க வேண்டும்" என்றான். மா லியாங் அமைதியாகப் புன்னகைத்து ஒரு பெரிய கப்பலை வரைந்தான். பணக்காரன் கப்பலில் ஏறித் தங்கத்தைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் கப்பல் கடலின் நடுப்பகுதிக்குச் சென்றபோது, மா லியாங் அந்த ஓவியத்தில் ஒரு பெரிய அலையை வரைந்தான். அந்த அலை சுழன்றடித்துக் கப்பலை அழித்தது. அதன் பிறகு அந்தப் பணக்காரன் மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப வரவேயில்லை. அதன் பிறகு, மா லியாங் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். வயதான மனிதர் கேட்டுக் கொண்டபடி ஏழைகளுக்கு உதவ மாயத் தூரிகையைப் பயன்படுத்தினான். அந்த மாயத் தூரிகை அனைவராலும் விரும்பப்பட்டு மென்மேலும் உதவிகள் செய்தது.
- சமூக நூலகங்கள்
புதிய சிந்தனை நூலகம் செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. குழந்தை ரதி பிரார்த்தனா (3-ஆம் வகுப்பு) தான் கண்ட சில நூலகங்களைக் கண்டு அதன்படி தங்களது வீட்டிலும் ஒரு நூலகம் வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அவரது அம்மா வீட்டில் மாலை நேர தனி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். அவர்களும் வாசிக்கட்டும், தனது மகளின் நண்பர்களும் வாசிக்கட்டும் என்ற நோக்கில், தொடங்கப்பட்டது. தசிஎகச முக்காணி கிளை சுப்புலெட்சுமி, சண்முக வடிவு, தூத்துக்குடி கிளை வாலண்டினா ஆகியோர் சார்பில் சிறார் புத்தகங்கள் புதிய சிந்தனை நூலகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன. மகிழினி IFS நூலகம். செப்டம்பர் 5 தெற்கு ஆத்தூர் புதிய சிந்தனை நூலகம் தொடக்க நிகழ்வு முடிந்து திரும்பி வரும்வழியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி முத்து நித்யா, தங்கள் வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மகிழ்வுடன் சென்றபோது, தனது சேகரிப்பு புத்தகங்களை பெரும் மகிழ்வுடன் காண்பித்து, தன்னிடம் 33 புத்தகங்கள் உள்ளன, இதனை வைத்து ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். அவரது அம்மாவும் உற்சாகப்படுத்தினார். வேகவேகமாக உடனிருந்த குழந்தைகள் அந்தப் புத்தகங்களை ஒரு இரண்டு அடுக்கு சிறிய அலமாரியில் அடுக்கத் தொடங்கினர். ஆஹா! அற்புதம்! என்றனர் குழந்தைகள். சரி, இன்னொரு நாள் எதற்கு? இப்போதே நூலகம் தொட ங்கிவிடலாம் என்று முடிவு செய்து, ஆளுக்கொரு பெயர் சொல்ல, தனக்கு செப்டம்பர் 2ல் அறிவுச் சுடர் படிப்பகம் சார்பில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த, மகிழினி IFS புத்தகத்தை, அதே புத்தகத்தை இரண்டு பிரதிகள் தனது சேமிப்பு உண்டியல் தொகை மூலம் வாங்கி, தனது பள்ளிக்கும், தனது மாலைநேர தனிபயிற்சி வகுப்புக்கும் பரிசாக அளித்த , தனக்கு மிகவும் பிடித்த அதே மகிழினி IFS எனும் புத்தகத்தின் தலைப்பையே தனது நூலகத்திற்கு சூட்டி மகிழ்ந்தார் மாணவி முத்து நித்யா. ஒரு புத்தகப் பரிசு என்ன செய்யும்? ஒரு நூலகத்தையே உருவாக்கும்! இப்படித்தான் உருவானது மகிழினி IFS நூலகம். இது நமது 12வது நூலகம். சமூக நூலகங்கள். Community Libraries 1.அறிவுச்சுடர் படிப்பகம், நவம்பர் 14 - 2022. சண்முக வடிவு மற்றும் பலர் இணைந்து... ஆத்தூர் . 2.அல்முபின் தையல் நூலகம், நவம்பர் 14- 2023 செய்யதலி பாத்திமா ஆத்தூர் . 3.வானவில் நூலகம், மார்ச் 8 - 2024 சுப்புலெட்சுமி முக்காணி. 4.சிறகுகள் சிறார் நூலகம், ஏப்ரல் 23 - 2024. வாலண்டினா தூத்துக்குடி . 5.அரும்பு நூலகம், ஜனவரி 01 - 2025 மரியம் ஆயிஷா ஆத்தூர் . 6.Rise and Shine Library, பிப்ரவரி 16 - 2025. மாணவச் செல்வங்கள், மரிய ஸ்டெர்லி & கிரேசி ஆத்தூர். 7.பெருங்கனா சிறார் நூலகம் . பிப்ரவரி 24 - 2025. ஜோசப் டெரின் குருவிநத்தம் கிராமம் 8.குரூப்ஸ்கயா நூலகம் ஏப்ரல் 14 2025 கோமதி அம்மாள் தோப்பூர் திருச்செந்தூர் 9.பெனோ ஜெபைன் நூலகம் , ஏப்ரல் 23 2025. சகாயமேரி காமநாயக்கன்பட்டி. 10.வாசிப்பை நேசிப்போம் நூலகம் மே 11 2025. தங்கலெட்சுமி பூஜாஸ்ரீ, வினோத் குமார் தெற்கு ஆத்தூர். 1 1.புதிய சிந்தனை நூலகம்.. செப்டம்பர் 5 2025. முத்துலெட்சுமி ரதி பிரார்த்தனா. தெற்கு ஆத்தூர். 12.மகிழினி IFS நூலகம் செப்டம்பர் 5 2025. சிவரஞ்சனி முத்து நித்யா தெற்கு ஆத்தூர். - தொடரும்...












