top of page

மீன் உண்டியல்

ree

என் பிஞ்சுக் கையைப் பற்றித் தரத்தரவென்று இழுத்துச் செல்லும் என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. பொது இடம் என்று பார்க்காமல் நான் ஆர்ப்பரித்து அழுதேன். அம்மா அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நான் வீட்டிலும் அப்படித்தான். எனக்கு பிடித்த எதாவது கிடைக்கவில்லை என்றால் கத்திக்கூப்பாடு போட்டு அழுவேன். அம்மா எதையும் கண்டுகொள்ளாமல் அடுப்படியில் சமையல் செய்துகொண்டிருப்பாள். மீறி அழுதால், அங்கிருந்தவாறே திரும்பிப் பார்த்து முறைப்பாள். அதில் ஏராளமான அர்த்தம் பொதிந்திருக்கும். நான் அழுகையை அடக்கிக்கொள்வேன். 


ஒரு முறை, வாசலில் கிடந்த உடைந்துபோன கரண்டியை வைத்துக்கொண்டு கழுவி அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றின் மீதும் தட்டித் தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். ’தட்டாதே’ என்றாள். அவளிடமிருந்து ஒற்றை வார்த்தைதான் தடித்து வெளியே வந்து விழுந்தது. நான் கண்டுகொள்ளவில்லை. அன்று எனக்கு நேரம் சரியில்லை போலும். நான் தட்டும்போது, ஒவ்வொரு பாத்திரங்களில் இருந்தும் வெளியாகும் ஓசை அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. என் தோள்களை உலுக்கித் ’தட்டாதே’ என்றபடி என் கையிலிருந்த உடைந்துபோன கரண்டியைப் பிடுங்கித் தெருவில் எறிந்தாள். நான் வீறிட்டு அழுதேன். 


உதட்டின் மீது விரலை வைத்து ‘உஷ்’ என்றாள். அதற்கு மேல் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அம்மாவின் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்தேன்.


அவ்வளவுதான். அதன் பிறகு என் அழுகை, ஆர்ப்பாட்டம் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். என் அம்மா முறைத்தால் என் சப்தநாடியும் அடங்கிவிடும். அழுகையை உடனே நிறுத்திக்கொண்டாலும், பெருமூச்சோடு கூடிய தேம்பல் நீண்ட நேரம் கழித்தே அடங்கும். 


நகரத்திற்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிவரப் பேருந்துக்குக் காத்திருந்தபோதுதான் இது நிகழ்ந்தது. பெரிய கண்ணாடிக் கதவுகளின் வழியே அழகழகான தொட்டிகளில் மீன்கள் நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, என் வயதுச் சிறுவனும் சிறுமியும் ஒரு வாலிபால் அளவுள்ள அழகான கண்ணாடிக் குடுவையில் சிவப்பு நிற மீன் குட்டியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தனர். வெள்ளைநிறக் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்ததும் அவர்கள் ஏறிக்கொண்டார்கள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.


தலையை உயர்த்தி என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். நான் விடுவதாய் இல்லை. எங்களது குட்டி வீட்டிற்குள் அந்தக் குடுவையை வைப்பதற்கு ஏதாவது ஒரு மூலை கிடைக்காதா என்ன?. நாங்கள் ஒரு ஓரத்திலும், குட்டி மீன் ஒரு ஓரத்திலும் இருந்துவிட்டுப் போகட்டுமே! என்று நினைத்தேன். 


நான் அம்மாவின் அருகில்தான் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை அவள் பற்றியிருக்கவில்லை. நான் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு இருக்கும் கடையின் முன்னால் போய் வேடிக்கை பார்க்கத்தான் நின்றேன். யாருமே இல்லாமல் கதவு மட்டும் தானே திறந்துகொண்டது. எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. என்னை யாரும் உள்ளேயும் அழைக்கவில்லை. வெளியே போ என்றும் சொல்லவில்லை. 


என்னைக் கடந்து வேறொரு குடும்பம் உள்ளே சென்றது. நான் கொஞ்சம் நகர்ந்து நின்றுகொண்டேன். கதவு தானாக மூடிக்கொண்டது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் அம்மா நின்று கொண்டிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவள் பேருந்து வரப்போகும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தேன். கதவு திறந்துகொண்டது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் உள்ளே சென்று ஒவ்வொரு குடுவைக்குள்ளும் நீந்திக்கொண்டிருக்கும் விதவிதமான மீன்களை ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். உயரமான தொட்டிக்குள் வளைய வந்துகொண்டிருந்த வெள்ளை நிற மீனை வேடிக்கை பார்த்தேன். ‘எவ்வளவு பெரிய மீன். அந்தக் கண்ணாடித் தொட்டியை வைப்பதற்கு எங்கள் வீடு நிச்சயம் போதாது’. அந்த மீன் நான் நிற்பதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வளைந்து வளைந்து நீந்திக்கொண்டிருந்தது.


சட்டென்று என் கைகளைப் பற்றி யாரோ வெடுக்கென்று இழுப்பது போல் இருந்தது. அது என் அம்மாதான். நான் கடைக்கு உள்ளே இருப்பதை எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டாள். தரத்தரவென்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றாள்.  


என்னை மட்டும்தான் அந்தக் கடைக்குள்ளிருந்து இழுத்து வர முடிந்தது. என் மனதை அல்ல. எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அந்த கடைக்குள் இருந்த ஒளி, வண்ண வண்ண மீன்களின் அழகு, கண்ணாடித்தொட்டி, இது எதுவுமே என் கண்களைவிட்டு அகலவில்லை. எல்லா மீன்களும் என்னைப் பின் தொடர்ந்து வந்துவிடாதா என்று ஏங்கினேன். அதெல்லாம் கதைகளில்தான் நடக்கும் போலும். ஒவ்வொரு நாள் கனவிலும் தண்ணீர் இல்லாத தரையில் மீன்கள் என்னைத் தேடி வந்தன. நான் பயந்துவிடக்கூடாது என்பதற்காக மீன்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டன. நாங்கள் பெருந்திரளான கூட்டத்திற்கு நடுவே பேருந்தில் பயணித்தோம். தெருவோரத்தில் விற்ற கொய்யாப்பழங்களை ஆசை தீர வாங்கிச் சுவைத்தோம். ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டோம். என் உலகம் இப்படிப்பட்டதுதான் என்று சொன்னால் யாருக்கும் புரியவில்லை. என் அம்மாவிற்கே புரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 


நான் ஏழை சிறுமி என்பதை என் மனம் நம்பவே இல்லை. நான் கூரை வீட்டிற்குள் இருக்கிறேன். ஆனால், ஏழை இல்லை. மீன்கள் இரவெல்லாம் விளையாடிவிட்டுப் பகலில் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவு போட்ட கடையில் இருக்கும் பெரிய பெரிய குடுவைகளில் சென்று நீந்தத் தொடங்கிவிடும். நான் இரண்டாவது முறை அங்கே சென்றபோது கடைக்கு வெளியில் இருந்து பார்த்தேன்.


எனக்குக் கவலையெல்லாம் என்னால் ஒரு நிஜமான மீன் வாங்கி வளர்க்க முடியவில்லை என்பதுதான். ஆனால், தினசரி கனவில் வண்ண வண்ண மீன்களோடு நான் வலம் வந்துகொண்டிருந்தேன். 


ஒரு நாள் வேலை முடித்து வீடு திரும்பும் என் அம்மா ஒரு மீன் வடிவ மண் உண்டியலை வாங்கி வந்தாள். அது உண்மையான மீன் போல இல்லை. ஆனாலும், அது எனக்குப் பிடித்திருந்தது.  பச்சை, நீலம், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மீன் உண்டியல் அது. என் தினசரிக் கனவில் வந்த மீன்களைவிட இது அழகாக இருந்தது. 


”இது களிமண்ணால் செய்தது, ஜாக்கிரதை” என்று சொன்னாள் அம்மா. எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் முதுகில் நாணயங்களைப் போடுவதற்கு ஏதுவாக நீள்வாக்கில் ஒரு துளை இருந்தது. எனக்கு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு சேமிப்பது எப்படி என்று காண்பித்தாள். 


ஆனால், எனக்கு அது சேமிக்கும் ஒன்றாகத் தெரியவில்லை. தினசரி மீனின் வயிற்றுப்பசிக்குப் போடும் தீனியாக என் மனதிற்குப் பட்டது. அதைவிட, நான் போடும் காசு அதன் வால் பகுதிக்குள் எல்லாம் சென்று சேரவேண்டும் என்பதற்காக நாணயத்தைப் போட்டதும் அதை எல்லா கோணங்களிலும் அந்த மீன் உண்டியலைத் திருப்பித் திருப்பி குலுக்குவேன். 


ஆனால், என் அம்மாவிற்கு நான் எங்கே அந்த உண்டியலை உடைத்துவிடுவேனோ என்ற பயம் இருந்தது என்று நினைக்கிறேன். நான் அந்த மீன் உண்டியலைத் தொடும்போதெல்லாம் முறைத்துப் பார்ப்பாள். அவள் இல்லாத நேரமாகப் பார்த்து நான் அந்த மீன் உண்டியலோடு விளையாடுவேன். இரவில் படுத்து உறங்கும் போது கூட அதை என் அருகில் வைத்துக்கொண்டுதான் தூங்குவேன்.


நான் முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்லத் தொடங்கியிருந்தேன். தினமும் அல்லது நாணயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த உண்டியலில் போட்டு வந்தேன். தினமும் அதனுடன் விளையாடுவதையும் நான் மறக்கவில்லை. ஒரு நாள் விடுமுறை தினத்தின் மதிய வேளையில், என் அம்மா நான் வைத்து விளையாடிக்கொண்டிருந்த மீன் உண்டியலைச் சுட்டிக்காட்டி, ”இது நிறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதில் உள்ள காசுகளைக் கொண்டு, வருகிற தீபாவளிக்குத் துணிமணி எடுக்கலாம்” என்றாள். நிறைய தின்றதால் மீனின் வயிறு நிரம்பிவிட்டதா? அது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது? எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 


நமக்கெல்லாம் தினமும் தின்றால் வயிறு பசிக்கும்தானே? மீனின் வயிறு நிறைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கும் புதுத்துணி அணிந்துகொள்ள ஆர்வம்தான். சென்ற வருட தீபாவளிக்குக் கூட நானும் சரி, என் அம்மாவும் சரி புதுத்துணி அணிந்துகொள்ளவில்லை. 


நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அம்மா அந்த உண்டியலைத் தேங்காய் உடைப்பது போல் தரை அடித்தாள். மீன் உண்டியல் சிதறு தேங்காயைப் போல துண்டுதுண்டாக உடைந்தது. அவற்றிற்கு நடுவில் சில்லரைக் காசுகள் சிதறிக்கிடந்தன. எனக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்கள் நான் ஆசை ஆசையாக வைத்திருந்த மீன் இப்பொழுது செத்துவிட்டது. இனி அவ்வளவுதான். நான் தேம்பித் தேம்பி அழுதேன். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அம்மா, சிதறிக்கிடந்த நாணயங்களைப்  எடுத்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள். நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

வே.சங்கர் 
வே.சங்கர் 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ”எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு”, “கானகத்தில் ஒரு கச்சேரி”, ”என் பெயர் ‘ஙு’”, “டுட்டுடூ”, “வட்டமாய் சுட்ட தோசை”, “திகில் பங்களா” ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page