top of page

வளரிளம் புதிர்ப்பருவம் - 7

ree

இன்றைய குழந்தைகள் பள்ளிக்குள் செல்பேசி இல்லாததால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சத்தமாகவும் சத்தமில்லாமலும் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்திலிருந்து  என்ன கற்கிறார்கள்? 

அவர்களின் கருத்து என்ன? போன்றவற்றை அறிய கலந்துரையாடலே சிறந்த வழி. 


ஏதேனும் ஒரு பொருள் குறித்துக் குழந்தைகளுடன் எவ்வாறு கலந்துரையாடுவது? என்பது முக்கியம். 

என்ன கேள்வியைக் கேட்கலாம்? சம்பந்தமில்லாமல் வேறு ஏதேனும் பேசினால், வேண்டுமென்றே கேலியாக எதையாவது பேசினால் எப்படி அவர்களைப் பேசு பொருள் நோக்கித் திருப்புவது போன்றவை நெறியாளரின் திறன்கள்.  


Adolescence தொடரின் மிக முக்கியப் பகுதி, உளவியலாளர் ஜேமியோடு உரையாடும் பகுதி. ஒரு பொருள் சார்ந்த  உரையாடலை இயல்பாக  நிகழ்த்துவது குறித்து நாம் இதிலிருந்து கற்கலாம். 


பிரையோனி ஆரிஸ்டன், ஓர் உளவியலாளர். ஜேமியைப் பார்க்க வருகிறார். ஜேமி சிறார் சீர்திருத்த  மையத்தில் இருக்கிறான். 


சூடான சாக்லேட், சாண்ட்விச் உடன் பிரையோனி உரையாடத் தொடங்குகிறார். என்ன சாப்பிடுவாய்? தாத்தா, பாட்டி பிடிக்குமா? எனப் பொதுவான உரையாடல். ஜேமி மகிழ்ச்சியாகப் பேசுகிறான். பாட்டி என்ன சொல்வாங்க என்பதை அவர் பேசுவது போலக் குரலை மாற்றிப் பேசுகிறான். 


பிரயோனி, ஜேமியின் தாத்தாவைப் பற்றிக் கேட்கிறார். 

உன் அப்பா, உங்க தாத்தா போல இருப்பாரா, ஆம்பளைத் தனமா? என்று கேட்கிறார். 


வெளியே சென்று குடிப்பாரா?


எப்போதாவது போவார். தாத்தா அளவு இல்ல.


ஆம்பளைத்தனம் என்ற வார்த்தை பற்றி என்ன நினைக்கற?


நீங்க ஏதேதோ பேசுறீங்க. போன முறை வந்தப்போ இப்படித்தான் பேசுனீங்க. இந்த முறை ஆம்பளைத் தனம் என்று பேசுறீங்க. நீங்க ஏதாவது தந்திரம் பண்றீங்களா?


இல்ல ஜேமி. நான் தந்திரம் பண்ணல. உனக்கு அப்படித் தோணினா சாரி!


உங்களை நான் கடுப்பேத்திட்டேன்ல.


இல்லை. 


உங்க குறிப்புகளை நான் பார்க்கலாமா? என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கீங்க?


இப்போ நான் எழுதிட்டா இருக்கேன்?


இல்லை. ஆனா எழுதுவீங்கல்ல. அதைப் பார்க்கலாமா?


எழுதுவேன். ஆனா பார்க்க முடியாது.


நீங்க எனக்காக வேலை செய்றதா சொன்னாங்க.


இல்லை. உங்க ஆட்களால் தான் நான் இங்கு வந்தேன். ஆனா சுதந்திரமா எனது அறிக்கையை எழுதறேன். அதைப் படிக்கும் போது உனது குற்றத்தை நீ எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கே என்று நீதிபதிக்கு ஒரு  தெளிவு கிடைக்கும். என்று பிரையோனி சொல்கிறார். 


நான் இங்கு வந்ததே  உன்னோடு கலந்துரையாடத் தான். நான் நேரடியான கேள்விகளை உன்னிடம் கேட்டிருக்கேன். போன முறை பேசியவற்றைப் பேசலாமா?


போன முறை என்ன பேசினோம்?


உன் நண்பர்கள், அம்மா பற்றிப் பேசினோம்.


அப்படியா, எனக்கு ஞாபகம் இல்ல. 


உன் அக்கா என்ன நினைப்பா? அம்மா என்ன நினைப்பாங்க? 


இதெல்லாம் எனக்குத் தேவையில்ல. 


சரி ஜேமி. உனக்கு வேணும்னா இன்று என்னென்ன கேள்விகள் கேட்கணும்னு எழுதிட்டு வந்திருக்கேன். அதை வாசிக்கவா?


சரி, வாசிங்க. 


நீ சண்டை போட்டதை பற்றிப் பேசணும். 


ஓ… அதெல்லாம் சும்மா.


நீ இங்கு ஒருத்தனோட ஏன் சண்டை போட்டாய் என்பதை நான் தெரிஞ்சுக்கணும். 


அது சண்டையே இல்ல. சும்மாதான். அதுக்கும் ஏதாவது தண்டனை இருக்கா?


இருக்கலாம். நீ ஒரு ஆணாக எப்படி உணர்கிறாய்? என்றும் கேட்கணும். 


என் உறுப்புகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணுமா?


இல்லை. உன்னைப் பொறுத்தவரை ஓர் ஆணா  இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று தெரிஞ்சிக்கணும்.


எனக்குத் தெரியல.


இது பெரிய கேள்வியா தெரியுது. சண்டையைப் பற்றிக் கேட்டது சின்னதா தெரியுது. அதனாலதான் உன் அப்பா, தாத்தா பற்றித் தெரிஞ்சுக்கறது எனக்கு உதவியா இருக்கும். அவங்க எப்படிப்பட்ட ஆம்பளைங்க என்று நினைக்குற? என்பதை விட்டுட்டு பொதுவா, ஜேமி ஒரு  ஆணா இருப்பதைப் பற்றி என்ன நினைக்கற என்று கேட்டா நல்லா இருக்குமா? 


ஜேமி, பிரையோனி பேசும் தொனியில் அவரது கேள்வியைச் சொல்லுகிறான். 


பிரையோனி சிரித்தபடி, “ இது தந்திரம் இல்லை. உரையாடல். இப்போ உங்க அப்பாவைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்கிறார். 


“ குறிப்புகளை மட்டும் நான் பார்க்கலாமா? என்ன எழுதியிருக்கீங்க? எப்படி எழுதியிருக்கீங்க?” என்று ஜேமி ஆவலாகக் கேட்கிறான். 


இல்லை. அது மட்டும் முடியாது என்று பிரையோனி மறுக்கிறார். 


என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். என்னால் இங்கே இருக்க முடியாது. எந்த நேரமும் யாராவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள். என்று ஜேமியின் குரல் உயர்ந்து கொண்டே வருகிறது. அவனது கோபம் அதிகரிக்கிறது. எழுந்து நின்று கத்துகிறான். மேசையில் இருந்தவற்றைக் கீழே  தள்ளுகிறான். பிரையோனிக்கு அருகே செல்கிறான். அவரது முகம் மாறுகிறது. வீடியோவில் கவனித்துக் கொண்டு இருந்த  காவலர் அறைக்குள் விரைந்து வருகிறார்.


தொடர்ந்து பேசுவோம்!



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page