வளரிளம் புதிர்ப்பருவம்-4
- கலகல வகுப்பறை சிவா

- Aug 15
- 2 min read

திடீரென தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. தீவிபத்து ஏதும் இருக்காது. பயிற்சிக்காக இருக்கலாம் என்று ஆசிரியர், காவலர்களிடம் சொல்கிறார். ஆனாலும் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மாணவர்கள் அனைவரும் வரிசையாக, விரைவாக மைதானத்திற்குச் செல்லுங்கள் என்று சொல்கிறார். எல்லா வகுப்பறைகளிலும் இருந்து மாணவ மாணவியர் வரிசையாக மைதானத்திற்குச் செல்கிறார்கள். ஆங்காங்கே ஆசிரியர்கள் நின்று நெறிப்படுத்துகிறார்கள்.
மைதானத்திற்கு அருகே காவல்துறை அலுவலர் பாஸ்கம் ஜேமியின் வகுப்பாசிரியரைப் பார்க்கிறார். அவரோடு பேச முயல்கிறார்.
நான் ஓர் ஆசிரியர். எனக்கு வேறு எதுவும் தெரியாது. இவர்களை என்னால் சமாளிக்கவே முடியவில்லை என்று சொல்லிச் செல்கிறார்.
மைதானத்தில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையாக நிற்கிறார்கள். ஜேட், ரயானைப் பார்க்கிறாள். கோபம் அதிகமாகிறது. "என் தோழியை ஏன் கொன்றாய்?" என்று கத்திக் கொண்டே ரயானைக் கண்டபடி அடிக்கத் தொடங்குகிறாள். மாணவர் பலரும் சுற்றி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். ஆசிரியர்களும் காவலர்களும் அங்கே விரைகிறார்கள். 'ஒரு பொண்ணு இவனை அடிச்சிட்டா...' என்று ஒரு சிறுவன் கேலி செய்கிறான்.
ரயானுக்கு லேசான ரத்தக் காயம். அவனை முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். பாஸ்கம் அங்கே சென்று அவனோடு பேச விரும்புகிறார்.
தீவிபத்து ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு அனைவரும் வகுப்பறைகளுக்குத் திரும்புகிறார்கள். மாணவ, மாணவியர் செல்பேசியை வைத்துப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். பாஸ்கமை அழைத்துச் செல்லும் ஆசிரியை அவர்களைப் பார்க்கிறார். "எல்லோரும் வகுப்புக்குப் போங்க!" என்று சொல்லியபடியே செல்கிறார். செல்பேசி வைத்திருந்த சிறுவன், " வாயை மூடுங்க மிஸ்!" என்று சொல்கிறான். சற்று தூரத்திலிருந்து அந்த ஆசிரியை, 'என்ன சொல்ற?' என்ற தொனியில் சத்தமாகக் கேட்டபடியே செல்கிறார்.
குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றிய எதை வேண்டுமானாலும் அப்படியே ஆசிரியரிடம் சொல்லலாமா?
மாணவர்கள் வகுப்பறையில், பள்ளி வளாகத்தில் ஆசிரியரைக்
கேலி செய்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடுகிறார்கள். ஆசிரியரோடு வாக்குவாதம் செய்கிறார்கள். அவை காணொலிகளாக வெளிவருகின்றன. மாநிலம் முழுவதும் மாணவர்கள் அப்படித்தான் என்று பலரும் பேசுகிறார்கள். உடனே நீதிநெறி வகுப்புகள் வேண்டும் என்று பலரும் குரல் எழுப்புகிறார்கள்.
இவை ஒவ்வொன்றும் பல்வேறு தளங்களில் கலந்துரையாட வேண்டியவை.
சமூகத்தில் மனிதர் கூடும் இடங்கள் எல்லாமே சத்தமும் இரைச்சலும் நிறைந்தவை. பள்ளிக் கூடங்கள் பெரும்பாலும் சத்தத்திற்கு எதிரானவை. மாணவர்கள் அமைதியாக இருக்கும் வகுப்பறையே சிறந்தது. வகுப்பறையை அமைதியாக வைத்திருப்பவரே சிறந்த ஆசிரியர்.
ஆசிரியருடன் அல்லது வயதில் மூத்தவருடன் பணிவுடன் பேச வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. சமூகத்தில் பெரும்பாலும் நீங்கிக் கொண்டே இருக்கும் அறங்கள் அனைத்தையும் பள்ளி தான் வளர்க்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டோம்.
குழந்தைகள் தன்னைவிட மூத்தவருடன் பேச விரும்புகிறார்கள். அவர்களின் குரலைக் கேட்கும் மூத்தவர் மீது ஆர்வமும் அன்பும் காட்டுகிறார்கள். அத்தகைய ஆசிரியர் நுழைந்ததும் வகுப்பறை கலகலப்பாக மாறுகிறது. குழந்தைகள் அனைவரும் பேச விரும்புவதால் எழும் சத்தத்தைக் கலந்துரையாடலாக மாற்றும் உத்திகளே குழந்தை நேய ஆசிரியருக்குத் தேவை. இது குறித்த கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம். மிகவும் அவசரம்.
பாஸ்கம், ரயானுடன் பேச முயல்கிறார். 'உன்னுடைய கண் வீங்கப் போகுது என்று நினைக்கிறேன்.' என்று தொடங்குகிறார். ரயானும் ஆமாம் என்கிறான்.
சின்ன வயசுல என்னுடைய கண்ணை வீங்க வைக்கணும்னு ஆசையா இருந்துச்சு. ஒரு இடத்தில் வேணும்னே இடிச்சுக்கிட்டேன் என்று பாஸ்கம் சொல்கிறார்.
'உண்மையாகவா!' என்று ரயான் கேட்கிறான். ஆமாம், ஓரளவு. அப்போ நான் உன்னைவிடச் சின்னப் பையன். ஒன்பது வயது. பல் விழுந்து பார்க்கவே ஒரு மாதிரியா இருப்பேன். எனக்கு ஒரு கெளபாய் போல இருக்கணும்னு ஆசை என்று பாஸ்கம் சொல்கிறார்.
"அப்போ நீங்க புகழோடு இருந்திருப்பீங்க!" என்று ரயான் சொல்கிறான். "ஆமாம். உனக்கு புகழ் முக்கியமா ரயான்?" என்று பாஸ்கம் கேட்கிறார்.
"ஆமாம். கண்டிப்பா. டாமி கிட்டேயும் நீங்க பேசுனீங்க என்று அவன் சொன்னான். அவங்க அப்பா சொன்னதால் அவன் எதுவும் பேசவே மாட்டான்." என்று ரயான் சொல்கிறான்.
"நீங்க உண்மையாகவே புகழ் பெற்றவரா இருந்தீங்களா? அதுவும் பொண்ணுங்க கிட்டே?" என்று ரயான் கேட்கிறான்.
பாஸ்கம் ' ஆமாம்' என்று சொல்கிறார்.
புகழை, பாராட்டை அனைவரும் விரும்புகிறோம். கடமையைச் செய்தாலும் யாராவது பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பாராட்டைத்தான் அங்கீகாரம் என்று மனம் எதிர்பார்த்து ஏங்குகிறது.
ஏதாவது ஒன்றிலாவது சிறந்தவர் என்ற பெருமை வேண்டும் என்று மனம் விரும்புகிறது. எந்தக் காரணமும் இல்லை என்றாலும் இங்குதான் சாதி, மதம் போன்றவை பெருமிதமாக மாறுகின்றன.
ரயானின் போக்கிலேயே பேச்சை வளர்க்கிறார், பாஸ்கம். "ரயான், உன்னால் தான் எனக்கு உதவ முடியும். கேட்டி கொலைக்கான காரணம் என்ன?" என்று பாஸ்கம் கேட்கத் தொடங்குகிறார். ரயான் சுதாரிக்கிறான். பேசுவதை நிறுத்துகிறான். முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான். பாஸ்கம் அவனைப் பின்தொடர்கிறார்.
( தொடரும் )




Comments