top of page

வளரிளம் புதிர்ப்பருவம் -5.

ree

கேட்டி கொலை பற்றிய கேள்விகளால் சுதாரித்த ரயான் முதலுதவி அறையிலிருந்து வெளியேறுகிறான். 


ஆசிரியை ஒருவருடன் ஜேட் ஓர் அறையில் இருக்கிறாள்.  பதற்றம் குறையவில்லை. அவளது அம்மா வந்து கொண்டு இருக்கிறார் என்று ஆசிரியை சொன்னதும் அவளது பதற்றம் அதிகரிக்கிறது. வேலையிலிருந்து  வருவதால் அம்மா என் மீது கோபப்படுவார் என்று ஜேட் சொல்கிறாள். ரயானை அடித்ததால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகிறாள். ஆசிரியை அவளோடு பேசுகிறார். 


"கேட்டி மட்டுமே எனது தோழி. என்னை நன்றாகப் புரிந்து கொண்டவள். இயல்பாக என்னை ஏற்றுக் கொண்டவள். இப்போ எனக்கென்று யாருமில்லை." என்று ஜேட் கலங்குகிறாள். 


ஆசிரியை ஜேட்டை சமாதானப்படுத்துகிறார். உனக்கென நிறையப்பேர் இருக்காங்க என்கிறார். உளவியலாளரிடம் பேசலாம் என்கிறார். "மீண்டும் உளவியலாளரா!"  என்று ஜேட் பதறுகிறாள். அந்த அறையிலிருந்து வெளியேறுகிறாள். 


குழந்தைகள் தாங்கள் பழகியவரோடு, நம்பிக்கையானவரோடு பேச விரும்புகிறார்கள். வீட்டில் அதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டன. சமூகத்தில் குழந்தைகள் கலந்துகொள்ளும் உரையாடல்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பள்ளியிலும் உரையாடும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. பெரியவர்கள், குழந்தைகளின் குரலைக் கேட்காமல் அறிவுரை சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். இதைத்தான்  ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. 


ஆதம் தனது அப்பா எந்த வகுப்பில் இருக்கிறார் என்று தேடி வருகிறான். பாஸ்கம் ஒரு வகுப்பில் மாணவருடன் பேசிவிட்டு வெளியே வருகிறார். "உங்களோடு நான் தனியாகப் பேசலாமா?" என்று ஆதம் கேட்கிறான். இருவரும் ஓர் அறைக்குச் செல்கிறார்கள். 


பாஸ்கம், ஆதமோடு பேசும் இந்தக் காட்சி மிகவும் முக்கியமானது. 


 ஆதம் பதற்றமாக இருக்கிறான். தயங்கித் தயங்கி பேசத் தொடங்குகிறான். 


"ஆதம், என்னைப் பயமுறுத்தாதே. இங்கு என்ன நடக்குது?" என்று அவசரமாக பாஸ்கம் கேட்கிறார். 


"என்ன நடக்குதுன்னு புரியறதுக்கு உதவுற மாதிரி சில பேர்கிட்ட பேசணும்னு சொன்னீங்கல்ல..." என்று ஆதம் சொல்லும் போதே " நீ எனக்குப் புரிய வைக்கப் போறியா?" என்று பாஸ்கம் கேட்கிறார். 


ஆதமின் முகம் இன்னும் இறுகுகிறது. அப்பா, நீங்க கிளம்புங்க என்கிறான். 


"ஆதம், உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா? அந்தக் கத்தி எங்கே இருக்குன்னு தெரியுமா? யாராவது ஏதாச்சும் உன்கிட்டே சொன்னாங்களா?" தொடர்ந்து கேள்விகளை வேகவேகமாகக் கேட்கிறார் பாஸ்கம்.


"அப்பா, உங்களுக்கு இங்கே என்ன நடக்குதுன்னு புரியல. இங்க நடப்பதை எல்லாம் நீங்க கவனிக்கல." என்று ஆதம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நீ எதைப் பற்றிப் பேசுற?" என்று பாஸ்கம் கேட்கிறார்.


"இன்ஸ்டா. நீங்க இன்ஸ்டா பார்த்துட்டு இருக்கீங்கல்ல!" 


ஆமாம்.


"அவ, என்ன எழுதியிருக்கான்னு பார்த்தீங்களா?" 


"ஆமாம். பார்த்தேன்."


தனது செல்பேசியை எடுத்து கேட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவை பாஸ்கமிடம் காட்டுகிறான் ஆதம். அவ நல்ல பொண்ணு மாதிரி தெரியலாம். ஆனால் அது உண்மை இல்லை என்றும் சொல்கிறான்.


பாஸ்கம் அவனது செல்பேசியை வாங்கிப் பார்க்கிறார். எதுவுமே புரியவில்லை என்று சொல்கிறார். 


"இதைப் பாருங்க. இது டைனமைட்." என்று ஆதம் சொல்கிறான்.


எனக்கு எதுவுமே புரியவில்லை என்று பாஸ்கம் சொல்கிறார். 


" டைனமைட்னா வெடி. அதன் அருகே சிவப்பு, மாத்திரை.அடுத்தது நீல மாத்திரை. நீல மாத்திரைன்னா இந்த உலகத்தை நீங்க எப்படிப் பார்க்கணும்னு நினைக்கறீங்களோ அப்படிப் பார்ப்பது." என்கிறான் ஆதம்.


பாஸ்கமுக்கு Matrix திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில்தான் சிவப்பு மாத்திரை அல்லது நீல மாத்திரையைத் தேர்ந்தெடுப்பது வரும். 


ஆதமிடம்,"நீ Matrix படம் பார்த்திருக்கிறாயா?" என்று பாஸ்கம் கேட்கிறார். 


"சிவப்பு மாத்திரைன்னா நான் உண்மையைப் பார்க்கறேன்.  ஆண்கள் குழுவுக்காக வேலை செய்யணும்னு  அர்த்தம். அங்கே இருந்துதான் 100 தொடங்கும். 80-20 விதி."என்று ஆதம் சொல்கிறான்.

ஆதம், எனக்கு எதுவுமே புரியவில்லை. தெளிவாகச் சொல்லு என்று பாஸ்கம் கேட்கிறார்.


நாமும் சற்றே emoji களைப் பார்த்துவருவோம்.


சமூக ஊடகங்கள் வந்தபிறகு கொஞ்சநஞ்சம் இருந்த கையால் எழுதும் பழக்கம் வேகமாக மறைந்து வருகிறது. செல்பேசியில் தட்டச்சு செய்பவர்களாக மாறியிருக்கிறோம். குழந்தைகளுக்குக் கையால் எழுதுவதில் உள்ள சோம்பலும் வெறுப்பும் செல்பேசியில் தட்டச்சு செய்வதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. வார்த்தைகளின் சுருக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்.


இறப்புச் செய்திகளில் 'இரங்கல்' கூட இல்லாமல் RIP ஆக மாறிவிட்டது. வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கத்தை தட்டச்சு செய்வதை விட emoji என்ற சிறுபடங்களை பயன்படுத்துவது எளிதாக ஆனது. உணர்வுகளை வெளிப்படுத்தச் சுலபமான வழியாகவும் மாறியது.  அவற்றிற்கான பொது அர்த்தம்  இருந்தாலும் இளம்பருவத்தினர் பயன்படுத்தும் படங்களுக்கான அர்த்தத்தில் மாறுபாடு இருக்கலாம். 


சிவப்பு மாத்திரை, நீல மாத்திரை என்ற கருத்தாக்கம் முதலில் 1999-ல் வெளியான The Matrix திரைப்படத்தில் இருந்து வந்தது. அந்தப் படத்தில், 🔴“Red Pill” (சிவப்பு மாத்திரை) எடுத்தால் உண்மையை தெரிந்துகொள்ளலாம், 🔵“Blue Pill” (நீல மாத்திரை) எடுத்தால் பழைய போலி உலகத்திலேயே வாழலாம் என்று காட்டப்பட்டது.


ree

(பட உதவி: chatgpt)


இணையக் கலாச்சாரங்களில் “Red Pill” புதிய அர்த்தங்களைப் பெற்றது.


உண்மையை உணர்தல்.

பொதுவாகச் சமூக, அரசியல் அல்லது பாலினம் தொடர்பான, கடினமான உண்மைகளை புரிந்து கொள்ளுதல்.


ஆண்மை சார்ந்த இயக்கங்கள் .

பெண்கள், உறவுகள், திருமணம், சமூக விதிகள் ஆகியவை ஆண்களுக்கு எதிராக உள்ளன என்று வாதிடும் குழுக்கள் “Red Pill” என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தன.


Incel / Manosphere கலாச்சாரம்.  பெண்களைச் சுலபமாக ஈர்க்க முடியாது. பெண்கள் சில ஆண்களையே விரும்புகிறார்கள்” போன்ற கோட்பாடுகள் உருவாயின.



தொடர்ந்து பார்ப்போம்!...



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page