top of page

ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)

ree

தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துக் கிளம்பிய எரிமலை குளிர்ந்ததால் இந்தத் தீவு கடலுக்கு நடுவே உருவானது. முக்கோண வடிவிலான இந்தத் தீவு அறுபத்தி மூன்று சதுர மைல் பரப்பே உடையது. முழுத் தீவும் பெரும்பாலும் எரிமலைக் கற்களால் ஆனது. மூன்று முக்கிய எரிமலைகளான ரானோ காவு, தேரெவாகா மலை மற்றும் ரானோ அரேகா போன்றவை இந்தத் தீவின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றன.

இந்தத் தீவில் என்ன சிறப்பு?


1722 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, ஈஸ்டர் திருநாள் அன்று, டச்சு மாலுமியான ஜேக்கப் ரகவீன் என்பவர் இந்தத் தீவுக்கு முதன்முதலில் வந்திறங்கினார். இத்தீவுகளில் மனிதர்கள் வாழ்வதை வெளியுலகத்துக்கு அறிவித்தார். அவர் வந்திறங்கிய நாளின் நினைவாக அவர் இதற்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். ஆனால் இங்கு வசித்துக் கொண்டிருந்த பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர் ராப்பா நூயி. இங்கு கண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கற்சிலைகளே ஜேக்கப் ரகவீன் கண்டறிந்த ஆச்சரியம்.


ஒவ்வொரு சிலையும் ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தச் சிலைகளை மோவாய் என்று அழைக்கிறார்கள். மோவாய் சிலைகள் மனித முக வடிவமைப்புடன், நீண்ட காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதியில், சிலைகளுக்கு ஒரு சிவப்பு நிற 'தொப்பி' போன்ற அமைப்பு (புக்கவ்) வைக்கப்பட்டிருக்கும். இச்சிலைகள் பெரும்பாலும் மார்பளவு வரையிலான உருவங்களாகவே உள்ளன. இருப்பினும் சில முழு உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. பத்து மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலைகள் சுமார் 80 டன் எடை கொண்டவை. இதுவரை எண்ணூற்று எண்பத்து ஏழு சிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்தச் சிலைகள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின?


இந்தத் தீவுகளின் பூர்வகுடிகளான ராப்பா நூயி மக்கள் இச்சிலைகளை உருவாக்கியவர்கள் ஆவர். அவர்கள் பாலினேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழியும் ராப்பா நூயி என்றே அழைக்கப் படுகிறது. அவர்களது நாகரீகத்தில் இறந்த தங்களது மூதாதையரின் ஆவிகளைச் சிறப்பிக்கும் விதமாக இந்தச் சிலைகளை அமைத்தனர். தீவைக் காக்கும் தெய்வங்கள் போல இச்சிலைகள் கடலைப் பார்க்காமல், கடலுக்கு முதுகு காட்டி, தீவின் கிராமங்களைப் பார்க்கும் வண்ணம் வரிசையாக நிற்கின்றன. எரிமலைப் பாறைகளால் இந்தச் சிலைகளைச் செதுக்கினர். பின்னர் இச்சிலைகளைக் கயிறுகள் கொண்டு கட்டி, மரக்கட்டைகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மீது வைத்து நகர்த்தி, கடற்கரைப் பகுதிக்குச் சென்று கல்மேடைகளில் நிறுத்தி வைத்தனர். இந்தக் கல்மேடைகள் ‘ஆஹூ’ என்று அழைக்கப்படுகின்றன.


கி.பி. 1200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் மோவாய் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராப்பா நூயீ நாகரிகம், சில நூற்றாண்டுகளுக்குள் திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. இருப்பினும், ஆய்வாளர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்:

  • காடழிப்பு: மோவாய் சிலைகளை நகர்த்தவும், போக்குவரத்திற்காகவும் ராப்பா நூயீ மக்கள் தீவில் இருந்த அனைத்து பெரிய மரங்களையும் வெட்டித் தீர்த்தனர். மரங்கள் இழந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, படகு கட்ட முடியாமல் மீன்பிடித்தலும் தடைபட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

  • உள்நாட்டுப் போர்: பஞ்சம் தலைவிரித்தாடியபோது, குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிலைகளைத் தூக்கி நிறுத்துவதைக் கைவிட்டு, ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன.

  • வெளியார் வருகை: ஐரோப்பியர்கள் தீவுக்கு வந்த பிறகு, அங்கு அடிமை வியாபாரம், தொற்றுநோய்கள் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பூர்வீக மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.


இன்று, ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு மண்டலமாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிலி நாட்டினர் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகளைக் கொண்டுவந்தனர். இத்தீவுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. மோவாய் சிலைகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஈஸ்டர் தீவு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மோவாய் சிலைகளை எப்படி நகர்த்தினார்கள், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, அந்த நாகரிகம் ஏன் வீழ்ச்சியடைந்தது போன்ற கேள்விகளுக்கு முழுமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பதில்கள் இன்னமும் இல்லை. இந்த மர்மங்களே ஈஸ்டர் தீவை இன்றுவரை உலகின் மிகவும் வியப்புக்குரிய இடங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றன. இவர்களது எழுத்துமொழியை எப்படிப் படிப்பது என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈஸ்டர் தீவு மனிதக் கலைப்படைப்புகளுக்கு ஒரு அற்புதச் சான்று. இயற்கையும் மனிதக் கலைத்திறனும் இணைந்தது இந்த தீவு. பழங்கால நாகரிகங்கள் எவ்வளவு திறமையானவை என்பதை இன்றும் உலகுக்கு நினைவூட்டுகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தத் தீவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டு பழைய நாகரீகத்துக்குள் பயணம் செய்யலாம்!


(படங்கள் உதவி: விக்கிபீடியா)


எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி

இயற்பெயர்: எழில் மயில் வாகனன்.

தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன.

வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’

‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page