top of page

தத்துவம் அறிவோம் - 8

ஏன்? எதற்கு? எப்படி?

ree

தத்துவத்தின் அடிப்படைகள்

தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது? 

மனித உழைப்பு. 


இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, சரியா?. 


ஒரு விஷயம் தெரியுமா? 


இன்று இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், வரலாற்றியல், பண்பாடு, இலக்கியம் என்று எத்தனையோ அறிவுத்துறைகள் இருக்கின்றன அல்லவா?  


தொடக்கக் காலத்தில் இவற்றையும் இயற்கைத் தத்துவ இயல் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். 

அதன்பிறகே அறிவியல் துறைகளிலிருந்து தத்துவத்தை பிரித்திருக்கிறார்கள். 


அதனால் என்ன? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், தத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். 


அதாவது எல்லா அறிவுத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுபவை. 


இன்னொரு வகையில் இந்த உலகம், இயற்கை, மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 


ஒன்று பாதிப்படையும்போது, இன்னொன்றும் அதனால் தாக்கம் பெறும். 


எடுத்துக்காட்டுக்கு காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியது யார்?


மனிதர்கள்! இப்போது அதன் விளைவுகளை அனுபவிப்பது யார்?


மனிதர்கள் மட்டுமா? நிச்சயமாக இல்லை. அதற்கு நேரடியாகக் காரணமாக இருக்காத அனைத்து உயிர்களும் தாக்கத்தை அனுபவிக்கின்றன. 


இயற்கையின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. 


உயிர்ச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது. 


மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.


எனவேதான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்கிறோம். உலகில் எதுவும் தனியாக நிகழ்வதில்லை. 


இந்த உலகத்தில் நடைபெறும் எல்லாச் செயல்களுக்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன.

தத்துவம் என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான். 


தத்துவம் என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை அல்ல. 


அந்தரத்தில் அரண்மனை கட்டுவதும் இல்லை. மாயாஜாலமும் இல்லை. 

சரியா?


தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளைப் போன்ற மற்றுமொரு அறிவுத்துறை. மூளை என்கிற உறுப்பின் செயல்பாடு. மனிதர்களின் மூளை வளர்ச்சியடையும்போது அதன் செயல்பாடுகளும் நுட்பமடைகிறது. 


புதிய சிந்தனை முறைகள் உருவாகின்றன. 


ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய விளக்கம் என்று சொல்லலாம். அவையும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவைதான்.


ஆனால், இலக்கியமும் தத்துவமும் மனிதர்களின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கம் செலுத்துகிற அறிவுத்துறை எனலாம்.    


மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றிய காலம் முதல் அவர்களிடம் கேள்விகள் உருவாகிவிட்டன. 

நான் ஏன் பிறந்தேன்?


எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு? 


இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? 


இந்த வாழ்க்கையின் முடிவு என்ன?


மனிதர்களிடையே பாகுபாடுகள் எப்படி வந்தன?


கடவுள் இருக்கிறாரா?


யார் கடவுள்?


கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன?


மதம் என்றால் என்ன?


இவ்வளவு கடவுளர்கள் எப்படி உருவானார்கள்?


இவ்வளவு மதங்கள் எப்படி உருவாயின?


சாதி என்றால் என்ன?


மேல்சாதி, கீழ்சாதி என்கிற வேறுபாடு எப்படி உருவானது?


மரணம் என்றால் என்ன?


மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்?


மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டா?


மரணத்துக்குப் பிறகு மறுபிறவி உண்டா?


மனிதனைவிட உயர்வான உயிரினம் தோன்றுமா?


இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றின. தோன்றிக்கொண்டே இருக்கினறன. தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.


இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

யார், என்ன, எப்படிச் சொன்னார்கள்?


அடுத்தடுத்து பார்ப்போம்.


(தத்துவம் பயில்வோம்)

உதயசங்கர்
உதயசங்கர்

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page