பேசும் கடல் - 7
- சகேஷ் சந்தியா

- Nov 15
- 2 min read

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குழந்தைகளைத் தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார் மலர்.
" நேரமாகிட்டே வீட்டுக்கு வரவில்லையா"
கொஞ்சம் குரலை உயர்த்தி கோபத்துடன் கேட்டாள் மலர்.
அம்மாவைக் கண்டவுடன் அமுதாவும், இனியனும் நடந்தவைகளை எல்லாம் ஆச்சரியத்தோடு கூறினார்கள். இருவரும் அம்மாவின் கைப்பிடித்துக் கொண்டார்கள்.
" அம்மா....... அப்பாவை கூப்பிடலையா?"
"அப்பாவுக்கு வலை கட்டுற வேலை இருக்கும்"
" காலையில தொழிலுக்கு போறாங்க.... பிறகு வந்து வலைகட்டுறாங்க அவங்களுக்கு ரெஸ்ட்டே இல்லையே...."
"அப்படி உழைச்சாதான் நாம சாப்பிட முடியும்" அம்மா தன் பிள்ளைகளிடம் பேசிக்கொண்ட வீட்டை நோக்கி சென்றாள்.
அம்மா..... அப்பா ரொம்ப நேரம் கடல்ல கஷ்டப்பட்டாத்தான் நாம சாப்பிட முடியுமா? - அமுதா கேட்டாள்.
'ஆமாம்' அமுதா.... நமக்கு என்ன சொத்தா இருக்கு.... கடன் தான் இருக்கு ” சலித்துக் கொண்டாள் மலர்.
" கடனா....... ஏன்? இவ்வளவு கஷ்டப்பட்டும் நமக்கு ஏன் கடன்" இனியன் கேட்டான்.
" உங்க இரண்டுபேருக்கும் பதில் சொல்ல எனக்கு முடியாது, நீங்க சாப்பிட்டா போதும்" என்று கூறி உணவு பரிமாறினாள்.
இப்பொழுது இனியன் எந்த கேள்வி என்றாலும் கடல் பாட்டியிடம் கேட்டால்தான் சரியானப் பதில் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். சாப்பிட்டு முடித்ததும் கடல் பாட்டியிடம் பேச விரைந்தான்.
பொங்கி எழும் அலை நீரில் காலை நனைத்தவாறு பாட்டியிடம் பேசத் தொடங்கினான்.
" பாட்டி பாட்டி......
"என்னப்பா சாப்பிட்டியா...... உங்க அம்மா வேகமா கூட்டிட்டு போனாங்களே....."
"நான் சாப்பிட்டேன். எனக்கொரு கேள்வி" இனியன் அவசரப்பட்டான்.
" என்னப்பா..... கேளு, கேள்வி கேட்பதுதான் குழந்தைகள் இயல்பு, எனக்கு தெரிந்ததைச் சொல்றேன்" கடல் பாட்டி கூறியது.
" எங்க அப்பா ......நாள் முழுவதும் உன்கிட்டதான் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க...... அப்போ எதுக்கு கடன் இருக்கு?"
கடல் பாட்டி பதில் சொல்வதற்கு முன் அமுதா வேகமாக ஓடி வந்தாள்.
"பாட்டி பாட்டி என்னைய விட்டுட்டு வந்துட்டான். இப்போ சொல்லுங்க...."
" என்னைய நம்பி வாழும் கடல் பழங்குடிகள், மீனவர்கள் சேமிக்க மாட்டாங்க,"
இருவரும் ஈர மணலில் அமர்ந்து கொண்டார்கள். ஆர்வமாய் கேட்க தொடங்கினார்கள்.
" உலகம் முழுவதும் வாழும் பழங்குடிகளுக்கு சேமிப்பு வழக்கமே இருக்காது"
" ஏன் பாட்டியம்மா"- அமுதா முந்திக்கொண்டு கேட்டாள்.
" இயற்கையை நம்பி வாழ்பவர்கள் தங்களுக்கு தேவையானதை இயற்கை தரும் என்று நம்புவார்கள்"
" பாட்டி இன்னும் விளக்கமா சொல்லுங்க...."அமுதா குறிக்கட்டாள்.
" அப்பா தினமும் கடலுக்கு போறாங்க தானே"
" ஆமாம்"
" தினமும் மீன் கிடைக்குமா....?" கடல் பாட்டி
"ஆமாம்.... கிடைக்குமே" இனியனும் ,அமுதாவும் கோரசாகப் பதில் கூறினார்கள்.
" நான் (கடல்) வற்றிப் போவேனா?, என்னைய அழிக்க முடியுமா? நான் இல்லாம உலகம் இயங்குமா?"
" இயங்காது, கடல் இல்லாட்டி பூமியோ, உயிரினங்களோ இல்லையே" இது இனியன்.
" நீங்க இல்லாட்டி எங்களுக்கு போரடிக்குது தெரியுமா?" அமுதா கொஞ்சல் மொழியில் கூறினாள்.
" யாருமே அழிக்க முடியாத கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களுக்கு, வாழ்வதற்கு தேவையான உணவும், பொருளும் தினம் தினம் கிடைக்கும் போது ஏன் அவர்கள் சேமிக்க வேண்டும்....?
"அதுசரி .....எங்கம்மா கடன் கடன்னு தினமும் புலம்புறாங்க"
அமுதா கேட்டாள்.
" குட்டி பிள்ளைகளா? சேமிப்பு என்பதே பொதுவுடமைக்கு எதிரானதுதான். சேமிப்புதான் தனிஉடமையின் தொடக்கம்."
" தனிஉடமைன்னா என்ன?" இனியன்.
தன்னுடைய சொத்து, தன்னுடைய பொருட்கள், தனக்கு மட்டும் என்று சுயநலமாய் நினைப்பது தான் தனி உடமை "
"அய்யோ.... நீங்க இரண்டு பேரும் எனக்கு புரியாத மாதிரி பேசுங்க...." அமுதா
"பாட்டி எனக்குப் புரிஞ்சத சொல்லவா?" இனியன்
"சூப்பர் சொல்லுமா?" கடல் பாட்டி.
" இயற்கையை நம்பி வாழும் பழங்குடிகள் எதையும் சுயநலமாய் சேமிக்க மாட்டார்கள். இயற்கை தான் அவர்களின் சொத்து. கடல் எங்கள் சொத்து. தேவையானதைத் தினம் தினம் கடல் கொடுக்கும். கடல் பொதுவாக இருக்கும் வரை நாம் சேமிக்க வேண்டாம். அதனால் மீனவர்கள் சேமிக்கவில்லை."
"சபாஷ் சரியாக புரிந்து கொண்டாய் தம்பி"
"பாட்டி எங்கிட்ட கேட்கவில்லை" அமுதா
" சொல்லுமா"
" நாங்க எவ்வளவு விளையாண்டாலும் அம்மா மூன்று வேளையும் உணவு தருகிறார்களே அதுபோல கடல் பாட்டி, அதனால நாங்க பயப்படாம வாழ்றோம். ஏன் சேமிக்கனும்"
" சூப்பர்..... இரண்டு பேரும் அருமை. ஆனால் கடல் நமக்கு உரிமை என்றால்தான் சேமிக்க தேவையில்லை, கடல் நமக்கு உரிமை இல்லை என்றால் நாம் கடனாளிகள் ஆவோம்...
அய்யோ..... மறுபடியும் ஒரு புதிரா?
- கடல் பேசும்




Comments