top of page

சாக்கில் உட்கார்ந்து படித்து...

ree

அம்பேத்கர் சினிமாவிற்குப் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு வந்தான் மணி. ஒவ்வொரு காட்சியும் அவன்  முன் வந்து வந்து போனது. அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்.இல்லை அம்பேத்கர் நம் நாட்டிற்கு எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார். கஷ்டத்தை அனுபவித்து நல்லதை செய்துள்ளார். ஆம் அதனால்தான் அவரைப் பற்றி சினிமா எடுத்துள்ளார்கள். அதனால்தான் அந்த சினிமாவிற்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அது எப்படி நியாயம்?...மணியின் சிந்தனையை நிறுத்த முடியவில்லை. 


 ‘வகுப்பறைக்கு வெளியில் உட்கார்ந்து எப்படிப் படித்திருப்பார்? அவரை எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளார்கள். அதுவும் பள்ளிக் கூடத்தில். வாசப்படியில் உட்கார்ந்து, சாக்கின் மேல்... அவர் அறிவாளிதான். அந்த சாக்கின்மேல் உட்கார்ந்து படித்ததால்தான் அவருக்கு அவ்வளவு படிப்பு வந்திருக்குமோ?...மணியின் மனம் கேள்விகளாலும் சினிமா காட்சிகளாலும் நிறம்பியிருந்தது.      

அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்தான். “எனக்கு ஒரு சாக்கு வேண்டும்.“ அம்மாவிடம் கேட்டான்.


 “சாக்கா? சாக்கு எதற்கு?


  சாக்கு போக்குன்னு சொல்லிகிட்டு...” என்றார் அம்மா. 


அதன் மேல் உட்கார்ந்து படிக்க என்று சொன்னால் திட்டுவார்கள். என்பதால் சொல்லவில்லை. 

“நம் வீட்டில் சாக்கு இருக்கிறதா இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டான் மணி. 

“அது எதுக்குடா இந்த வீட்டுக்கு?  மாடு வைத்திருக்கும் வீட்டில்தான் சாக்கு இருக்கும். எங்க அம்மா வீட்டில் இருந்தது. இப்ப, அங்கயும் மாடு இல்லை. நெல் மூட்டை வைத்திருக்கும் வீட்டில் இருக்கலாம். இப்ப யார் வீட்டிலும் நெல்லுமில்ல. மாடுமில்ல...” என்றார் அம்மா. 


“மாடு வைத்திருக்கும் வீட்டில் சாக்கை என்ன செய்வார்கள்?” 


“சாக்கை வைத்து ஆயிரம் செய்யலாம். மாட்டுத்தீவனம் கொட்டி வைக்கலாம். மாடு கண்ணுகுட்டி போட்டா, குட்டியை பத்திரமா அதில் கிடத்தி வைக்கலாம். மாட்டுக் கொட்டாய்க்கும் வீட்டுக்கும் இடையில் உள்ள வாசப்படியில் மிதியடியாய் போடலாம். குளிரடிச்சா மாட்டுக்கு மறைவு கட்டலாம்...சாக்கை வைத்து இப்படிதான் எதையாவது செய்யலாம்.” என்றார் அம்மா. 


“அம்மா, அம்பேத்கர் பென்ச் மீது உட்காராமல் சாக்கு மீது உட்கார்ந்து எப்படிப் படித்தார். என்பதைத் தெரிந்து கொள்வதற்குதான்.” என்றான் மணி. 

 

அம்மா அமைதியாய் இருந்தார்.பின், “அவர் எஸ் சி. அதனால்தான், அதெல்லாம் செய்தாங்க. போ! உனக்கெதுக்கு அதெல்லாம் போய் படி.” என்று முடித்தார். அடுத்து அவனுக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்க அம்மா அனுமதிக்கவில்லை. மணி எழுந்து போய்விட்டான்.


தானே தனக்குள் கேட்டுக் கொண்டான். ‘பாடம் நடத்தியது அவர் காதில் விழுந்திருக்குமோ? விழவில்லையென்றால் என்ன செய்திருப்பார். தினம் தினம் வாசப்படியில்தான் உட்கார்ந்திருப்பாரா? அவர் உட்கார்ந்திருந்த சாக்கை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு போயிருப்பார்களோ? சாக்கை மிதிப்பது போல் அவருடைய கை கால்களை, நோட்டுப் புத்தகங்களை மிதித்திருக்கலாம். நோட்டு பென்சில்களை எட்டித் தள்ளியிருக்கலாம். ஆமாம் நிச்சயமாக மிதித்திருக்கலாம். இன்றைக்கும்கூட மற்றவர்களை அடிக்கும் சீண்டும்  பையன்கள் இருக்கிறார்கள்தானே. 


சாக்கில் உட்கார்ந்திருப்பதை பென்ச்சில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள்? அவர்களுக்கு பென்ச்சில் உட்கார்ந்திருப்பது பெருமையாக இருந்திருக்குமா? இப்படிக் கஷ்டப் படுபவர்களைப் பார்த்துக் கவலையாய் இருந்திருக்காதா?... 


  ஒரே கவலை. யோசனைமேல் யோசனை. கேள்வி மேல் கேள்வி... அந்த சினிமா பார்த்ததிலிருந்து அம்பேத்கர் நினைவுதான். 


சாக்கில் உட்கார்ந்து படிப்பதற்குப் பெயர்தான் தீண்டாமையா? – என்று கேள்வி கேள்வியாய் தோன்றிக் கொண்டிருந்தது. 


பானையிலிருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது? எல்லாரும் குடிக்கும் தம்ளரில் குடிக்கக் கூடாது. என்றால் அம்பெத்கர் மட்டும் தனியா சாக்கில் உட்கார்ந்திருந்தாரா. அம்பேத்கர் மீது மட்டும்தான் எல்லாருக்கும் கோவமா? 


‘ லூசா நீ, சினிமாவை ஒழுங்கா பாத்தியா? அம்பேத்கருடன் இன்னும் இரண்டு பையன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் எஸ் சி பசங்க. என்று மற்ற பசங்க பேசிக் கொண்டதை நீ கேட்கவில்லையா? ஒழுங்கா சினிமா பாரு.’ என்று தானே தனக்கு சொல்லிக் கொண்டான். அவனுக்கே அது புரிந்தது. சினிமாவில் சில காட்சிகள் பதிகிறது. மத்ததெல்லாம் மறந்து விடுகிறது.  

அம்பேத்கர் பற்றி மணிக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. அது பற்றி பேசுவற்கு யாருமே இல்லை. சினிமா பற்றியும் பேச வேண்டும். தெரிந்தும் கொள்ள வேண்டும். 


அப்பாவிடம் கேட்கமுடியாது. அவருக்கு அறிவியல் அல்லது கணக்குப் பாட கேள்விகள் மட்டும்தான் கேட்க வேண்டும்.  


அம்மாவிடம் கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லியிருப்பார்கள்? “அது எஸ் சி. க்கானது. உனக்கெதுக்கு...” என்று சொல்லியிருக்கலாம்.


பாட்டியிடம் கேட்டிருந்தால், “டேய் ஒழுங்கா படி. இந்த மாதிரி அதையும் இதையும் பார்க்காத.” என்று சொல்லியிருப்பார். 


எந்த ஆசிரியரிடமாவது இது பற்றிப் பேச முடிந்தால்கூட நன்றாக இருக்கும். எந்த ஆசிரியரிடம் பேச முடியும்? “ஆனால் எனக்குப் பேசணும். கேக்கணும். என் கேள்விகளையெல்லாம் கேக்கணும். தீண்டாமை பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும்.  

  

“இதுதான் தீண்டாமையோ!” என்று மணி தனக்குள் கேட்டுக் கொண்டான். 

சாலை செல்வம்
சாலை செல்வம்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page