top of page

குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை

ree

பெயரும், தேசிய இனமும் : 


எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?"  ஒரு நல்ல நாளில், பெற்றோரும், உற்றார் உறவினரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையின் இல்லத்தில் கூடுவார்கள். வீட்டின் முன் அறையில், தரைப்பரப்பில் நெல்மணிகள் பரப்பப் பட்டிருக்கும். அவற்றின் மீது, குழந்தையின் தாய்மாமன் தன் சுட்டுவிரலினால் ஒரு பெயரை எழுதுவார். அதை அவர் உரக்கப் படித்துச் சொன்னதும்,அதுவே அந்தக் குழந்தையின் பெயர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில், வீடுகளில் குழந்தைகளுக்குப் பெயர் இடுவது இந்த முறையில் நடப்பதை நாம் அறிவோம். இது வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு மனித இனங்களில் வெவ்வேறு முறைகளில் நடக்கும். 


யுனிசெப் நிறுவனப் பிரகடனத்தின் ஏழாவது விதி,ஒவ்வொரு குழந்தைக்கும் அவன் / அவளுக்கென்றே உரிய பெயர் ஒன்றைப்  பெற்றிருப்பது அவர்களின் உரிமை என்கிறது. எனவே, "பெயரில் என்ன இருக்கு?" என யாரும் யாரையும் கேட்டு விட முடியாது / கூடாது ! 


ஒவ்வொரு குழந்தையையும்,அதற்கே உரிய பெயரையும், அது பிறந்த நாளையும்,பிறந்த ஊர்,இடம் போன்ற எல்லா விவரங்களையும், அவற்றைப் பதிவு செய்வதற்கென்றே இயங்கும் அரசு அலுவலகத்திற்குப் போய், உரிய படிவம் ஒன்றில் பூர்த்தி செய்து கொடுத்தால், அவற்றை அங்குள்ள ஒரு பதிவேட்டில் அலுவலர்கள் பதிவு செய்து விடுவார்கள். சில நாள்களில், அவையனைத்தையும் சரி பார்த்து விட்டு ஓர் அரசுச் சான்றிதழ் பெற்றோருக்கு வழங்கப்படும். அதுதான் அந்தக் குழந்தையின்பிறப்புச் சான்றிதழ். பிற்பாடு அந்தக் குழந்தை தொடக்கப்பள்ளியில் பெறுவதற்கும், அடுத்தடுத்த உயர்கல்வி நிலையங்களில் பெறுவதற்கும், இன்னும் பல்வேறு காரியங்களுக்கும் அந்தப் பிறப்புச்சான்றிதழ் ஓர் அத்தியாவசியமான ஆவணமாகி விடுகிறது. 


கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசாங்கம், இந்தப் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பல இலட்சம் மக்களைக் கணக்கெடுத்து, அவர்கள் இந்த நாட்டு மக்கள் அல்லர் எனவும், அவர்கள் பங்களாதேஷ், பர்மா, மலேஷியா போன்ற பல்வேறு அண்டை அயல் நாடுகளிலிருந்து இங்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அறிவித்து விட்டது. அவர்கள் அனைவரையும் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், அவ்வாறு அனைவரும் வெளியேற்றப்படும் வரை அவர்களைத் தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமான முறையில் ஒன்றிய அரசாங்கம் செய்து வருகிறது. நமது அன்புக்குரிய குழந்தைகளிடம் உரிய பிறப்புச்சான்றிதழ் இல்லாமற்போனால், அவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதற்கு மேற்கண்ட அரசாங்க நடவடிக்கை ஓர் எச்சரிக்கை மணியாகும்.  தமிஸ்நாடு போன்ற மாநிலங்களில், இன்னும் நாம் இப்படியான நெருக்கடிகளை நேரடியாக எதிர்கொள்ளவில்லைதான். ஆனால் மேற்கு வங்காளம்,பஞ்சாப், காஷ்மீர்' இமாச்சலப்பிரதேசம் போன்ற எல்லையோர மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இது மக்கள் நடுவே மிகப்பெரிய ஓர் அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 


குழந்தைகளுக்கென்று ஒரு பெயரைப்பெற்றிருக்கும் உரிமையைப் போலவே, அவர்களுக்கென ஒரு தேசிய இன ( Nationality ) அடையாளம் ஒன்றையும் பெற்றிருக்க  உரிமையுண்டு என யுனிசெப் பின் மேற்கண்ட ஏழாவது விதி மேலும் கூறுகிறது. அதோடு, ஒரு பெயர், தேசிய இனம் இவற்றுடன், குழந்தைகள் தமது பெற்றோர் இன்னார்தாம் என்பதையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்;அதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் கூறுகிறது. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் நன்கு  பராமரித்துக் கொண்டு வருவது அவர்களின் சட்டபூர்வமான கடமை; அது குழந்தைகளின் உரிமையும் கூட எனவும் யுனிசெப் விதித்திருக்கிறது. நமக்கு இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம். அம்மா, அப்பா யாரென்று தெரியாமல் கூடக் குழந்தைகள் இருப்பார்களா,என்ன? ஆம், இருக்கிறார்களே! 


வறுமை, முறையற்ற உறவுகள், இணையருக்கிடையே நேரும் பிணக்குகள், சாதிய ரீதியான நெருக்கடிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் கணவர்கள், தமது மனைவி-குழந்தைகளைக் காய் விட்டு விட்டுப் போய் விடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்,கேள்விப்படுகிறோம். உலகம் எங்கும் போர்களின் போது பெற்றோரைப் பறிகொடுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய் யார்,தந்தை எவர் என்பது எப்படித்  தெரிந்திருக்கும் ? கணவர் கைவிட்டு விட்டுப் போனபின், பல குடும்பங்களில் பெண்கள் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து  சம்பாதித்துப் போராடி  குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கி விடும் அனுபவங்கள் எத்தனையோ! இப்படியான குழந்தைகளும் உலகமெங்கும் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? 


ஒப்பீட்டு அளவில் பெரும்பான்மையான குழந்தைகள் பாதுகாப்பாக,அன்பான பெற்றோரின் பாசமிக்க அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஒரு வாதத்திற்காக நாம் வைத்துக் கொள்வோம். ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி ஓர் அரண் அமைய வேண்டுமென்பதே யுனிசெப் அமைப்பின் இல்டசியம். அதன் பொருட்டேமேற்கண்ட உரிமைப் பிரகடனம் ! 


ஒரு பெயர் ! ஒரு  நாடு ! பாதுகாப்பான ஒரு வீடு ! குழந்தைகளுக்கு இவற்றைப் பெறுவதற்கு உரிமைகள் உள்ளன. அவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. அரசுகளின் கடமை.


கமலாலயன் 
கமலாலயன் 

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று

பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page