top of page

இலண்டனிலிருந்து அன்புடன் - 6

ree

இலண்டனிலிருந்து அன்புடன் தொடரில் தற்போது நாம், Dav Pilkey  அவர்கள் உருவாக்கிய “Dog Man” series புத்தகங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம். இது காமிக்ஸ் வகையைச் சார்ந்தது. இங்குள்ள நூலகங்களில் குழந்தைகளால் அதிகம் வாசிக்கப்படும் புத்தகம் இது.


ஒரு புத்தக உருவாக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்? எழுத்தாளர், மொழிபெயர்ப்பு நூல் என்றால் அதனை மொழிபெயர்த்தவர், ஓவியர், வடிவமைப்பாளர், அட்டைப்பட வடிவமைப்பாளர், காமிக்ஸ் புத்தகம் என்றால் அதற்கான பிரத்யேக வடிவமைப்பாளர், மேற்பார்வையிட்டு கருத்துகளையும் தகவல்களையும் சரி பார்ப்பவர்கள் (அவர்களை எடிட்டர் என்று குறிப்பிடலாம்), பிழைத்திருத்துபவர், பிறகு இறுதியாகப் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளர். இவர்களைத் தாண்டி வேறு யாராவது இருக்க வாய்ப்புள்ளதா?

எனக்கு எதுவும் தோன்றவில்லை. உங்களுக்கு?

இந்த வரிசையில் புதிய பெயரை “Dog Man” புத்தகத்தில் பார்த்தேன். அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன். அதற்கு முன்பு புத்தகத்தின் அறிமுகத்தைப் பார்த்துவிடுவோம் வாருங்கள்.

 

“Dog Man” புத்தகத்தின் ஆசிரியர் டேவ் அவர்கள் சிறு வயதில் கற்றல் குறைபாடு உள்ளவராம். வகுப்பில் மிகுந்த சேட்டை செய்பவராகவும் இருந்துள்ளார். வகுப்பில் இருந்ததைவிட தண்டனைப் பெற்று வகுப்பிற்கு வெளியேதான் அதிகம் இருந்தாராம். அப்படி வெளியே நின்ற நாட்களில் தனது நோட்டுப் புத்தகத்தில் நிறைய காமிக்ஸ் படங்களை வரைந்துள்ளார். இரண்டாம் வகுப்பில் இருக்கும்போது அவர் சொந்தமாக சூப்பர் ஹீரோ கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். “Captain underpants” என்று சூப்பர் ஹீரோவுக்குப் பெயரும் வைத்துள்ளார். அந்த புத்தகத்தைப் பார்த்த அவரது பள்ளி ஆசிரியர், “இப்படி ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்” என்று திட்டிவிட்டு சென்றாராம். ஆனால் நல்ல வேளை தான் அந்த ஆசிரியரின் பேச்சைக் கேட்கவில்லை, அதனால் எழுத்தாளாராகிவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.


டேவ் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அங்கிருந்த பேராசிரியர் ஒருவர்தான் அவருடைய ஓவியத்திறமையைப் பார்த்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். அப்படித்தான் அவர் குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும், ஓவியராகவும் உருவாகியிருக்கிறார். தனது பள்ளிப்பருவத்தில் அவர் விளையாட்டாக உருவாக்கிய கதாப்பாத்திரம்தான் நாய்மனிதன்(Dog Man).  நாய்மனிதன் புத்தகத் தொடரில் மட்டும் 13 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.


ஒரு காவல் அதிகாரியும் அவரது நாயும் திருடனைப் பிடிக்கச் செல்கிறது. அப்போது அங்கு ஒரு டைம் பாம் இருக்கிறது. அதிலிருக்கும் தவறான பட்டனை அழுத்தியதால், பெரிய விபத்து நடந்துவிடுகிறது. காவல் அதிகாரியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அவருடைய நாயின் தலையும் காவல் அதிகாரியின் உடலையும் இணைக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படித்தான் நாய் மனிதன் உருவாகிறான். அந்த நாய் மனிதன் காவல் அதிகாரியாக இருந்து எப்படியெல்லாம் தனது ஊரைக் காப்பாற்றுகிறான் என்பதே இதன் கதை.

இந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர் கப், பார்சல் கவர்கள்கூட இதில் கதாபாத்திரங்களாக வருகின்றன.


இவை காமிக்ஸ் என்பதாலும், மிகவும் வண்ணமயமாக இருப்பதாலும், குட்டி குட்டி அத்தியாங்கள் இருப்பதாலும் முழு புத்தகத்தையும் கடகடவென வாசித்துவிடலாம். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நாம் விழுந்து விழுந்து சிரிக்கவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனுடன், புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களை எளிமையாக வரைந்தும் பார்க்கலாம். ஓவியங்களை வரைந்து பார்ப்பது போலவே, இதிலுள்ள கதாபாத்திரங்களைப் பொம்மையாகவும் செய்யலாம். அதற்காக தனியே step-by-step instructionsகளும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல சுட்டிகளே, இந்தப் புத்தகத்துடன் நாம் விளையாடவும் செய்யலாம்.

அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்…இருங்கள் சொல்கிறேன்.


Flip Pages என புத்தகத்தில் ஒரு புதிய உத்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். புத்தகத்தின் பக்கங்களை வேகமாக திருப்பி விளையாடும் முறை இது. அதன் மூலம் இரண்டு பக்கங்களிலுள்ள ஓவியங்கள் நகர்வதுபோல் நமக்குக் காட்சியளிக்கும். 


“Cat Kid”, “Captain Underpants”, “Mighty Robot”,”Dragons”, “Kat Kong” என நிறைய காமிக்ஸ் தொடர்களையும் டேவ் உருவாக்கியிருக்கிறார் “Dog Man” சமீபத்தில் திரைப்படமாக வெளியாகியுள்ளது.


இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் புத்தகத்தின் உருவாக்கத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன் அல்லவா? 


இந்தப் புத்தகத்தை எழுதி ஓவியம் வரைந்தவர் டேவ் பில்கி, அவருடன் “COLORIST” என “Jose Garibaldi” என்பவரை குறிப்பிட்டிருந்தனர். என்னது வண்ணம் தீட்ட தனியே ஒருவரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா.  ஆமாம் செல்லங்களே! ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட தனியே ஒருவர் இந்தப் புத்தகத் தொடரில் இருக்கிறார். 


இதுபோல் நிறைய புதுமைகளை இந்தப் புத்தக வரிசை கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தக வரிசை குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப் பாருங்கள். அவை கட்டாயம் உங்களை மகிழ்விக்கும்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page