top of page

சாராவின் வண்ணத்துப்பூச்சி

Updated: 3 days ago

ஆங்கிலத்தில் – டிஒய். சாப்மேன்

தமிழில் : சுகுமாரன் 

ree

என்னுடைய காலைப் பொழுது எல்லோரையும் போலத்தான் ஆரம்பித்தது.

நான் காலையில் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று என் செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன். 


பூச்சிகள் சாப்பிட இலைகளைப் போட்டேன். எறும்புகளுக்கு என் பற்பசையைக் கொடுத்தேன். அவை அதை விரும்புகின்றன. இதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டாம்.


இப்படி ஒவ்வொன்றிற்கும் உணவளித்த பிறகு பள்ளிக்குப் புறப்பட தயாரானேன்.


அப்பா என் அறைக்கு வந்தார். இன்று நான் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றும் ஒரு போராட்டத்திற்குப் போகிறோம் என்றும் கூறினார்.


'கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் கொன்று விட்டது' என்று அப்பா என்னிடம் கூறினார்.

'நமக்கு சேவை செய்ய வேண்டிய, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ் நம்மைத் தாக்குகிறது. நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் உரிமைக்களுக்காக நிற்க வேண்டும்' என்றும் அப்பா கூறினார்.


நானும் அப்பாவும் போராட்டம் நடக்கும் இடத்திற்குப் போனோம். அங்கு நாங்கள் பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்தோம். அப்பா என் கையைப் பிடித்திருந்தார். நாங்கள் கூட்டத்திற்குள் சென்றோம்.


கூட்டம் சத்தம் போட்டது. பயம் தந்தது. நான் அப்பாவுடன் பத்திரமாக இருந்தேன்.

அப்பா என் கையை இறுக்கமாகப் பிடித்து இருந்தார். 'நீதி இல்லை. அமைதி இல்லை' என்று முழக்கம் கேட்டது.


நானும் கூட்டத்தில் முழக்கமிட்டேன். ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி என்னைக் கடந்துப் பறந்தது.

நான் வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னால் போனேன். ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்பாக கூட்டம் இருந்தது.


கூட்டத்திலிருந்த ஒரு போலீஸ்-யின் முகம் அருகே வண்ணத்துப் பூச்சி பறந்தது. போலீஸ்காரன் பின்னால் நகர்ந்தான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி கையை வீசினான். வண்ணத்துப்பூச்சி கீழே விழுந்தது. அது எழுந்துப் பறக்கவில்லை.


நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். உயிர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் போராட வந்தவள் நான். வண்ணத்துப்பூச்சியை நோக்கி நான் ஓடினேன்.


போலீஸ்காரன் சத்தமிட்டான். 'பின்னால் போ' என்று கத்தினான். நான் ஏதோ தவறான ஒன்றை செய்வதாக அவன் நினைத்தான்.


நான் பயந்து கூட்டத்திற்குள் ஓடினேன். என் கைக்குள் வண்ணத்துப் பூச்சி இருந்தது. உயரமான மரங்களைப் போல் மக்கள் நின்றிருந்தனர்.


ஒரு போலீஸ்காரனின் வேலை எங்களைப் பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? நான் ஓடாவிட்டால் பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டேன். அப்பாவை பிரிந்து விட்டதை உணர்ந்தேன். எனக்குப் பயமாக இருந்தது.


நான் ரொம்ப நேரம் அப்பா, அப்பா... என்று கத்தினேன். அப்பாவை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.


திடீரென்று உயரமான பெண் என்னருகில் குனிந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். அவள் முகத்தில் சோகம் இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன்.


அவள் என்னை தோள்களின் மீது உட்கார வைத்தாள். இப்போது நான் கூட்டத்தினரைப் பார்க்கும்படி உயரத்தில் இருந்தேன்.


நான் பாதுகாப்பாக உட்கார்ந்துக் கொண்டு தேடினேன். சத்தம் போட்டேன். அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.


என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டது. நான் அப்பாவை பார்த்து விட்டேன்.

நான் தோளிலிருந்து இறங்கி ஓடினேன். அப்பா என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார்.

நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்தோம். நான் அப்பாவின் கையை இறுக பிடித்து இருந்தேன். 'நீதி இல்லை... அமைதி இல்லை...' என்கிற கூட்டத்தின் முழக்கத்தோடு என் குரலும் கலந்தது.


சூரியன் மறைவதற்கு முன்பாக நாங்கள் வீட்டுக்கு வந்தோம். இரவு உணவு சாப்பிட்டதும் நான் நேராக படுக்கைக்குச் சென்றேன்.


எனக்கு தூக்கம் வரவில்லை. 'இன்று மோசமான நாள்' என்று நினைத்தேன்.

ஆனால் அப்பா சொன்னார். 'எல்லாம் சரியாகும். நான் உன்னைப் பாதுகாப்பேன். நீ உன்னுடைய வண்ணத்துப்பூச்சியைப் பார்த்துக் கொண்டது போல்.' என்றார்.


அடுத்த நாள் காலை. நான் சாப்பிடுவதற்கு முன் கதவருகே ஓடிச் சென்று செல்லப் பிராணிகளுக்கு உணவளித்தேன்.


சில நாட்களுக்குப் பிறகு என் வண்ணத்துப்பூச்சி குணமாகியிருந்தது. நான் அதை வெளியே பறக்க விட்டேன். யாரும் துன்புறுத்தாத இடத்திற்கு பறந்து செல்லும் வரை கவனித்தேன்.


பின் குறிப்பு:

இச்சிறுகதையை எழுதிய டி.ஒய்.சாப்மேன் (TY Chapman) ஒரு கவிஞர், நாடகாசிரியர். ஐரோப்பா வம்சாலவளியைச் சேர்ந்த நைஜீரியர். அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கைப் பற்றி பேசுவதில் ஆர்வமுடையவர். அமெரிக்காவில் வாழ்கிறார்.


போலீஸ்-யின் தாக்குதலில் கருப்பினத்தவர் ஒருவர் உயிரிழக்கிறார். அதைக் கண்டித்து கருப்பின சமூகத்தினர் நீதி வேண்டுமென்று போராடுகின்றனர். அப்போராட்டத்தில் சிறுமி சாராவும் அவளது தந்தையும் கலந்துக் கொள்கின்றனர். பிறரின் உயிரைக் காப்பதில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதை சாரா கற்றுக் கொள்கிறாள். அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுவது போல் என்று உருவகப்படுத்துவதின் மூலம் கதை கவிதையாகி இருக்கிறது.

சுகுமாரன்
சுகுமாரன்

1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page