தத்துவம் அறிவோம் - 7
- உதயசங்கர்

- Oct 15
- 2 min read

நம் சிந்தனை நம் கைகளில்....
மனிதர்களுடைய சிந்தனை அவர்களுடைய விரல்களில்தான் தொடங்கியது.
எப்படி?
டார்வின் என்கிற அறிவியலறிஞர் பரிணாமவியல் கோட்பாட்டை முன்மொழிந்தார். அப்படி என்றால்?
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குரங்குக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னவர் டார்வின்.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம் என்றால், இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் எப்படி தோன்றின?
எப்படி எல்லாம் உருமாறின?
எவை எல்லாம் அழிந்தன?
ஏன் அழிந்தன?
எவை எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன?
இயற்கையின் விதிகள் என்ன என்று அறிவியல்பூர்வமாக
ஆராய்ந்து சொன்னார் டார்வின்..
அப்படி என்றால் மனித இனத்தை,
இந்த பூமியில் உள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள், மீன்கள் இன்னபிற உயிர்களை எல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கடவுள் படைத்தார் என்று சொல்லப்படுகிறதே அது சரியா என்று நீங்கள் சந்தேகப்பட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அறிவியல் என்பது ஒன்றை ஆராய்ந்து நிரூபிக்கும் உண்மை.
நம்பிக்கை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது என்று சொல்லலாம்.
டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டின்படி ஒவ்வோர் உயிரினமும் இயற்கைச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துகொண்டது. அப்படி தகவமைத்துக்கொண்டதால் உயிர் வாழ்ந்தது. தகவமைத்துக்கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்துவிட்டன.
தகவமைத்துக்கொள்ளுதல் என்றால் என்ன?
இயற்கையின் தட்பவெப்ப மாற்றம், கிடைக்கும் உணவுப்பொருட்கள், உணவுப்பொருட்களுக்கு ஏற்ற தனித்துவமான உடலமைப்பு, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், இனப்பெருக்கத் திறன், இவற்றில் வெற்றி பெறுதலைத் தான் தகவமைத்துக்கொள்ளுதல் என்கிறோம்.
வெற்றிகரமாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு பூமியின் முதல் உயிரினமான சயனோபாக்டீரியா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இரண்டு கோடி ஆண்டுகளுக்கு மேல் கரப்பான் பூச்சி வாழ்ந்துவருகிறது.
ஒன்றரைக் கோடி ஆண்டுகளாய் இலைவெட்டி எறும்பு வாழ்ந்துவருகிறது.
இப்படித் தாவரங்கள், பூச்சிகள், பிரைமேட் என்று அழைக்கப்படுகிற குரங்கின உயிரினங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன.
ஆனால் எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு, மனித இனத்துக்கு மட்டுமே உண்டு.
அதுதான் சிந்தனை.
மூளையின் செயல்பாடுகளில் ஒன்றான சிந்தனை, நம்முடைய கட்டைவிரலிலிருந்து பிறந்தது.
என்னது கட்டை விரலா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆமாம். வாலில்லாக்குரங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அவற்றின் கட்டைவிரல் மற்ற நான்கு விரல்களுடன் ஒட்டியே இருக்கும். வாலில்லாக்குரங்குகள் கட்டைவிரலை அதிகம் பயன்படுத்துவதும் இல்லை.
ஆனால் எப்போது ஒட்டியிருந்த கட்டைவிரலை ஹோமோ சேப்பியன்ஸ் முதன்முதலாக விரித்தார்களோ, அப்போதே சிந்தனை தோன்றத் தொடங்கிவிட்டது.
அது எப்படி?
அதுவரை மரங்களில் ஏறித் தாவித் திரிந்த குரங்கின உயிரினங்கள், வாலில்லாக்குரங்குகளாக மாறி தரைக்கு வந்தபோது கைகளுக்கும் வாலுக்கும் பெரிய வேலையில்லை. அவை விடுதலை அடைந்தன.
இயற்கையில் கிடைத்த பழங்கள், காய்கறிகள், கொட்டைகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹோமோ சேப்பியன்ஸ் கூட்டத்துக்கு உணவுப்பஞ்சம் வந்தபோது அதைச் சமாளிக்க வேறு ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தோன்றியது.
அப்போது இயற்கையில் கீழே கிடக்கும் கற்களை எடுத்து எறிந்து சிற்றுயிர்களை கொன்று சாப்பிட்டார்கள். பிறகு கற்களைத் தீட்டிக் கூர்மையாக்கி எறிந்தார்கள். வேட்டை இன்னும் சிறப்பாக இருந்தது. இப்படி கல்லின் மீது தங்களுடைய உழைப்பைச் செலுத்தியபோது, இயல்பாக கட்டைவிரல் தனியாகப் பிரிந்தது.
கட்டைவிரல் பிரிந்தவுடன் உழைப்பு இன்னும் எளிதானது, அதாவது கற்களைத் தீட்டி ஆயுதங்களை உருவாக்குவது எளிதானது. உணவுப் பஞ்சம் இல்லை. தாவர உணவைவிட இறைச்சி உணவில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாகவும் நேரிடையாகவும் கிடைத்தன.
அதன் விளைவாக மூளையில் பல புதிய வேதி மாற்றங்கள் நடைபெற்றன. அந்த மாற்றங்களின் விளைவாக மனித இனம் சிந்திக்கத் தொடங்கியது.
அதாவது மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தன. இயற்கை மற்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்தியது. இயற்கைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டன.
அந்த உயிரினங்களும் வாழ்வதற்கான அடிப்படை செயல்பாடுகளை மட்டும் இயல்பூக்கமாக (instinct) கொண்டிருந்தன.
ஆனால், மனித இனம் மட்டும்தான் இயற்கையை, ஆராய்ந்தது. அதன் காரண காரியங்களை ஆராய்ந்தது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது.
இயற்கையின் விதிகளை அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தியது.
தான் வாழ்வதற்காக இயற்கையைத் தகவமைத்துக்கொண்டது.
சிறிதுசிறிதாக தன் வாழ்வைத் தானே தீர்மானித்தது.
அதற்குக் காரணம் மனித இனத்தின் சிந்தனை அல்லது பகுத்தறிவு.
அது மனிதர்களையும் இந்த உலகத்தையும் சூழலையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க வைத்தது. இந்த உலகம் குறித்து ஒரு நோக்கு மனிதர்களுக்கு உருவானது. அவர்களுடைய வாழ்க்கை குறித்து யோசிக்க வைத்தது.
பிறப்பு, இறப்பு குறித்து ஆராய வைத்தது.
தத்துவம் பிறந்தது.
இப்போது சொல்லுங்கள்!
நம்முடைய சிந்தனை உருவானதற்கு எது காரணம்?
கட்டைவிரல்.
அது மட்டுமா?
மனித இனத்தின் உழைப்பும் சிந்தனைக்குக் காரணம்.
சரிதானே!.

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




Comments