top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • தத்துவம் அறிவோம்-17 : அடிமை முறை தோன்றியது.

    மனிதனின் சுயநலம் என்ன செய்யும்? எல்லாம் தனக்கே என்று நினைக்கச் சொல்லும். நம்முடன் கூட இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைக்க வைக்கும். யோசித்துப் பாருங்கள். நாம் கூட அப்படி நினைத்திருக்கிறோமில்லையா? நிலத்தில் ஒரு பயிர் முளைப்பதற்கு மனிதன் மட்டுமா காரணம்? யோசித்துப்பார்ப்போம். மண், மழை, காற்று, விதை, எல்லாம் சரியானபடி இருந்தால் தானே ஒரு பயிர் முளைக்கிறது. மண் சரியில்லை என்றால் முளைக்காது. தண்ணீர் இல்லை என்றால் முளைக்காது. விதை சரியில்லை என்றால் முளைக்காது. பருவத்துக்கேற்ற காற்று வீசவில்லை என்றாலும் முளைக்காது. இதில் மனிதன் என்ன செய்கிறான்? மண்ணை உழுது விதைக்கிறான். மழை இல்லாத காலங்களில் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுகிறான். விதைகளைப் பக்குவப்படுத்துகிறான். அதனால் தான் உலகம் முழுவதும் மனிதர்கள் ஆற்றங்கரைகளில் குடியேறி இருக்கிறார்கள். அங்குதான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது. சிந்து நதி நாகரிகம் நைல் நதி நாகரிகம் மஞ்சள் நதி நாகரிகம் வால்கா நதி நாகரிகம் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்குத் தண்ணீர் முக்கியப்பங்கு வகித்திருக்கிறது. சரிதானா? நிலச்சொந்தக்காரன் தன்னுடைய நிலத்தில் மற்றவர்களை உழைக்க வைக்கிறான். வரும் விளைச்சலில் சிறிதளவே உழைத்தவர்களுக்குக் கொடுக்கிறான். அதுவே கூலி எனப்படுகிறது. கூலி என்றால் உழைப்புக்குக் கிடைக்கும் சன்மானம். ஆனால் ஒருவர் உழைப்பைக் கொடுத்தால் அதற்கு உரிய கூலியைப் பெறுகிறாரா? உதாரணத்துக்கு ஒரு வயலில் எட்டு மணிநேரம் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு எட்டு மணிநேர வேலைக்கான கூலி கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக நான்கு மணிநேர வேலைக்கான கூலியே கிடைக்கிறது. அப்படி என்றால் அவர் உழைத்த மீதியுள்ள நான்கு மணி நேர உழைப்புக்கான கூலி எங்கே போகிறது? யார் நிலத்துக்குச் சொந்தக்காரரோ அவருக்குப் போகிறது. ஆக அவர் உழைக்காமலேயே மற்றவர்களின் நான்குமணி நேர உழைப்புக்கான கூலியை எடுத்துக் கொள்கிறார். என்ன சரிதானா? இப்படி அவருடைய நிலத்தில் உழைக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான்கு மணிநேர உழைப்புக்கான கூலியை எடுத்துக் கொள்ளும்போது என்ன நடக்கும்? அவர் மிகச் சுலபமாகப் பணம் படைத்தவாராகி விடுவார் தானே. அவர் மட்டும் உழைத்தால் இந்த மாதிரி ஆக முடியுமா? மற்றவர்களுக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்காமல் எடுத்துக் கொள்வதால் தான் பணக்காரராகிறார். இது தான் சுயநலம். ஒரு சமூகத்தில் கிடைக்கும் அத்தனையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இல்லையா? ஆனால் அப்படி இல்லாதபோது என்ன நடக்கும்? ஒருவர் ஏழையாகவே இருப்பார். அவருக்கு எந்த வசதிவாய்ப்பும் கிடைக்காது. அவருக்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பம், குழந்தைகள், எல்லாரும் ஏழைகளாகவே இருப்பார்கள். பணக்காரருக்கு அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். அவருடைய குடும்பம், குழந்தைகள் எல்லாரும் பணக்காரர்களாகவே இருப்பார்கள். இல்லையா?. முதன்முதலில் இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிய சமூகம் தான் நிலவுடைமைச் சமூகம். நிலக்கிழார்கள், பண்ணையார்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகளை விட்டு விடுவார்களா? தங்களிடம் வேலை பார்த்த சக மனிதர்களை அடிமைகளாக்கினார்கள். மற்ற இனக்குழுக்களுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று, தோற்றுப் போன இனக்குழு மனிதர்களை அடிமைகளாக்கினார்கள். இப்படி அடிமை முறை தோன்றியது. அடிமை முறை என்றால் என்ன? ஒரு மனிதனுடைய உடல், பொருள், உயிர் அனைத்தும் அவனை அடிமையாக வைத்திருப்பவனுக்குச் சொந்தம். அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடிக்கலாம். ஊனமாக்கலாம், உணவு கொடுக்காமல் பட்டினி போடலாம். கொல்லலாம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. தப்பித்துப் போய் விட முடியாது. அப்படி யாராவது ஓடினால் என்ன ஆகும்? அவர்களைப் பிடித்து கைகால்களை வெட்டி ஊனமாக்குவார்கள். அல்லது மரண தண்டனை கொடுப்பார்கள். அது மட்டுமல்லை. அடிமைகள் ஓடிப் போனால் அவர்களை அடையாளம் காண்பதற்காக உடம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முத்திரையைப் பதித்து விடுவார்கள். ஓடியவன் அடிமை என்று எல்லாருக்கும் தெரியும்படி செய்து விடுவார்கள். இந்த மாதிரி வேறு வேறு வகைகளில் அடிமைகளாகியவர்கள் வேலை செய்தார்கள். நிலவுடைமைச் சமூகம் இப்படித் தான் தொடங்கியது. விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு தான் மனிதனை மனிதன் அடிமைப் படுத்தும் முறையும் தோன்றியது. இது மட்டும் தானா? ( அறிவோம் தெளிவோம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • சிறார் வாசிப்பு பண்பாடு – 3

    ரஷ்ய இலக்கியங்களின் தாக்கம் அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியரான அம்மா, ஒரு கட்டுப் புத்தகங்களோடு வீட்டுக்கு வந்தார்கள். ஒன்று, இரண்டு மூன்று... என புத்தகங்களை எண்ணினோம். 17 புத்தகங்கள். பன்றிக்குட்டி வரையச் சொல்லிக் கொடுத்த புத்தகம் சைக்கிள் ஓட்டும் சிறுவனைப் பற்றிய கதைப் புத்தகம் குருவிக்கதை – படப்புத்தகம் டால்ஸ்டாயின் படக்கதைப் புத்தகம் ... என வண்ண ஓவியங்களுடன் அவை இருந்தன. நாங்கள் நால்வரும் அவற்றை திரும்பத் திரும்பப் பார்த்தோம், படித்தோம், படிக்க முடியாத புத்தகங்களின் கதைகளைக் கேட்டோம். புத்தகங்களைப் படிக்கப் பக்கத்து வீடுகளில் இருந்து எங்கள் வீட்டிற்குப் பிள்ளைகள் வந்தனர். “சேர்ந்து உட்கார்ந்து படிங்க. சத்தமாக படிங்க. படிச்ச கதையை சொல்லுங்க...” என்பார் ஆசிரியர் அம்மா. “ஒரு புத்தகம் 25 பைசாதானா?” என்ற கேள்வியோடு குழந்தைகளின் அம்மாக்கள் என் அம்மாவை பார்க்க வந்தனர். அம்மாவும் அவர்களுக்கு ரஷ்யப் பதிப்பகம் பற்றி விவரிப்பார். “அவர்கள் எப்பொழுதாவது பஸ் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்து விற்பார்கள். அந்த பஸ் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் விற்றுவிட்டு வேறு ஊருக்கு புத்தகங்களை விற்க சென்றுவிடும். அடுத்து அவர்கள் வருவதற்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். பெட்டி பெட்டியாக கப்பலில் வந்திறங்கும், ரஷ்யாவிலிருந்து...” என்று விளக்குவார்கள். 70, 80, 90 களில் குழந்தைகளின் படிப்பில் அக்கறைப்பட்ட குடும்பங்களின் அனுபவங்களில் ரஷ்ய சிறார் இலக்கியத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்ததை மறுக்கவே முடியாது. நான் வளர்ந்து கல்லூரி முடித்த காலத்தில் அதே புத்தகங்களும் அதைப் போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்களும் என். சி. பி. ஹெச் புத்தகக் கடைகளில் கிடைத்தன. திருச்சியில் நானும், தோழி சுபத்ராவும் தொடர்ந்து செல்லும் புத்தகக் கடையாக என். சி. பி. ஹெச் இருந்தது. புத்தகங்களை வாங்கும் கடையாக மட்டுமல்லாமல், வாசிப்பில் ஈடுபடும் இலக்கியவாதிகளையும், அரசியலில் ஈடுபடும் தோழர்களையும் சந்திக்கும் இடமாகவும் இருந்தது. மேலும் குழந்தைகளை புத்தகக் கடைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களை, அங்கு பார்க்கவும் பேசவும் முடிந்தது. 90களில் அப்புத்தகங்கள் திருத்தப்பட்ட விலைகளோடு பழைய புத்தகக் கடைகளில் விற்பனையாகின. தற்போது, அவற்றை பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்திருந்தவர்களிடமிருந்து பெற்று, சிறார் இலக்கியப் பதிப்பகங்கள் பதிப்பித்து வருகின்றன. பின்னாளில், ரஷ்ய நாட்டுப்புறக் கதைகள், நிக்கோலாய் நோசவின் வெவ்வேறு கதைகள், மாக்சிம் கார்கியின் ‘ஈவ்சேகா மீன் பிடிக்க செல்கிறான்’ போன்ற சிறார் கதைகளை நான் மொழிபெயர்க்க வித்திட்டவை, குழந்தைப் பருவத்தில் நான் வாசித்த இக்கதைகள்தான் என்று சொல்லலாம். சோவியத் யூனியனின் மாஸ்கோ நகரில் இயங்கிய ராதுகா பதிப்பகம் மற்றும் பிராகிரஸ் போன்ற பதிப்பகங்கள் உலகப் புகழ்பெற்ற சிறந்த புத்தகங்களை வெளியிட்டன. ரஷ்ய எழுத்தாளர்களின் நவீன சிந்தனையும், ரஷ்ய ஓவியர்களின் திறன்மிக்க ஓவியங்களும் நேர்த்தியான வடிவமைப்பும் பதிப்புத் தரமும் தமிழ்க் குழந்தைகளையும் வியப்பில் ஆழ்த்தின. ரஷ்யா, உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புத்தகங்களை அனுப்பியது. ரஷ்யக் கதைகளை உலகின் அனைத்து மொழிகளைப் பேசுபவர்களும் படித்தனர். எல்லா நாடுகளிலிருந்தும் மொழிபெயர்ப்பாளர்கள் ரஷ்யாவிற்குச் சென்று மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மொழிபெயர்த்தப் படைப்புகளைத் தரமான புத்தகங்களாக மாற்றினர். அந்தந்த நாடுகளுக்கு பெட்டிப் பெட்டியாகக் கப்பல்களில் அனுப்பி வைத்தனர். சித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள், விசித்திரக் கதைகள்,மந்திரக் கதைகள், அறிவியல் கதைகள், கற்பனைக் கதைகள், படக் கதைகள்… என, குழந்தைகள் மத்தியில் அவை உலா வந்தன. அவை, குழந்தைகளை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் பற்றிய உண்மைகளை எடுத்துரைப்பதாகவும், கற்பனையைத் தூண்டுவதாகவும், மனிதநேயத்தை வளர்ப்பதாகவும், நற்பண்புகளை கடைபிடிப்பதற்கு உதவுவதாகவும், இயற்கையை நேசிக்க சொல்லிக் கொடுப்பதாகவும், கூட்டுணர்வை பண்பாக வளர்த்தெடுப்பதாகவும் இருந்தன. சோவியத் யூனியனின் மாஸ்கோ நகரத்திலிருந்து வந்த புத்தகங்கள், குறைவான விலையில், வண்ண ஓவியங்களுடன், உலகத் தரத்தில் குழந்தைகள் கைகளில் தவழ்ந்தன. ராதுகா பதிப்பகமும் பிராகிரஸ் பதிப்பகமும் தலைமுறை தலைமுறையாக குழந்தைகளின் வாசிப்பை அவர்களின் விருப்பத்தோடு எடுத்துச் சென்றன. சிறார்களை அவர்களின் அக உலகிற்குள் சென்று, வாசிப்பை நேசிக்கும் மனிதர்களாக மாற்றியதன் பங்கை பற்றி, இன்னும் நிறைய பேச வேண்டி உள்ளது. சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

  • பன்முகத்தன்மையைக் கொண்டாடும் சிறார் வெளி : ‘காஷ்குமரி’

    தமிழ் இலக்கியத்தில் அனைத்து வகைமைகளிலும் சிறந்த படைப்புகளை தந்து, பல விருதுகளையும் பெற்றிருப்பவர் ‘நெய்வேலி பாரதிக்குமார்’. சிறார் இலக்கியத்தில் அவருடைய முதல்படைப்பு ‘காஷ்குமரி’, நிவேதிதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. ஒரு வலசைப் பறவையின் மேல் ஏறிக்கொண்டு, இந்தியா என்ற பரந்து விரிந்த தேசத்தின் தென்முனையான குமரியில் தொடங்கி, வடக்கே உள்ள லே, லடாக் வரை ஒரு பயணம் போய் வந்தால் எப்படி இருக்கும்? அந்தப் பயணத்தின் ஊடாகத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கும் ஐந்திணைகளையும் கண்டு களித்தால் அது எப்படிப்பட்ட ஒரு பூரிப்பைத் தரும்! ஒவ்வொரு நிலத்தின் மனிதர்களும் தனித்துவமான மொழி, பண்பாடு, கலை, உணவு எனப் பல்வேறு விருந்துகளைப் படைக்கிறார்கள். அந்த விருந்து நம் குழந்தைகளுக்குப் பரந்த சிந்தனையை வளர்த்தெடுக்க ஊட்டமளிக்கிறது. ஒரே மொழி, ஒரே பண்பாடு மட்டுமே உலகம் என்று நினைக்கும் கிணற்றுத் தவளைகளாக இல்லாமல், உலகத்தை எட்டிப் பார்க்கும்போது பன்முகத்தன்மையின் அழகிலும் வசீகரத்திலும் தொலைந்துபோகாமல் இருக்க முடியாது. எல்லோரையும் மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அன்புடன் நடக்கவும் கற்றுக்கொள்வார்கள். அதே நேரத்தில், இந்தப் பயணத்தின் வழியாகத் தங்களின் தனித்துவமான அடையாளத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். பேதமை பரப்பப்படும் இன்றைய காலகட்டத்தில், பன்முகத்தன்மையின் அழகைப் போற்றும் ‘காஷ் குமரி’ போன்ற படைப்புகள் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவை. ஒரு நல்ல சிறார் இலக்கியப் படைப்பு, வாசிப்பவருக்கு வெறும் வாசிப்பு அனுபவத்தை மட்டும் தருவதில்லை; அது ஒரு வாழ்வனுபவமாகவும் மாறுகிறது. அந்த வகையில், இந்தக் கதைகள் அகரனோடு சேர்ந்து பயணித்த ஓர் அனுபவத்தைத் தருகின்றன. அவன் கண்டுணர்ந்த ஆச்சரியங்களை நமக்குக் கடத்துகின்றன. அவனுடைய சோகங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இந்தக் கதைகள் அன்பை விதைக்கும் கதைகள். சக மனிதர்கள் மீது அன்பாக இருப்பது இயல்பானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. இந்தப் படைப்பை வாசிக்கும் எவரும், இந்தச் சமூகத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சலுகைகளை நினைவுகூராமல் இருக்க முடியாது. அந்தச் சலுகைகள் நமக்கு வழங்கியிருக்கும் பொறுப்புகளையும் அவை ஞாபகப்படுத்துகின்றன. ‘லங்கர் சிங்’ கதையில், இந்திய தேசத்தில் இன்னமும் எண்ணற்ற மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது. ‘படிக்கிணறு’ கதையில், தண்ணீர் என்னும் அமுதத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பற்றாக்குறையால் மனித சமூகம் எதிர்கொள்ளும் துயரங்களையும் பேசுவதோடு, அதன் விளைவாகப் பெண்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளையும் சேர்த்துச் சொல்கிறது. குழந்தைகளின் மனதை அழகாகப் பிரதிபலிக்கும் கதைகள் இவை. குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட வலிகளையே பெரிதும் நினைவில் கொள்கிறார்கள். ‘இன்பச் சுற்றுலா தந்த இனிய சிந்தனை’ என்ற கதையில், நண்பனால் சுற்றுலாவுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்படுத்தும் மனவேதனையே மேலிடுகிறது. இந்தச் சமூகத்தின் சமத்துவமின்மை குழந்தைகளை எவ்வாறு கையறு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை அந்தக் கதை பேசுகிறது. அறிவியல் மனப்பான்மையையும் இந்தக் கதைகள் குழந்தைகளிடத்தில் விதைக்கின்றன. அகரனின் தந்தை தொல்லியல் துறையில் பணிபுரிகிறார். புராணங்களை வரலாறாக மாற்ற முற்படும் தற்போதைய சூழலில், வரலாறும் அறிவியல் அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டியது என்பதை இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. ‘காந்த மலை’ கதையிலும், அடிப்படை அறிவியல் சார்ந்த கேள்விகளை எழுப்புவதன் மூலம் நம்மைச் சுற்றிச் சொல்லப்படும் கட்டுக்கதைகளையும் புரட்டுகளையும் கண்டறிந்து புறந்தள்ள முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பன்முகத்தன்மையைப் போற்றும் இந்தக் கதைகள், தனித்துவத்தின் அவசியத்தையும் வெளிச்சப்படுத்துகின்றன. ஒருவருடைய பெயர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் சொல்கின்றன. அகரன் தனது பெயருக்கான விளக்கத்தைச் சொல்லும்போது, அது தமிழ் மொழியின் தொடக்க எழுத்து என்றும், எல்லாவற்றிற்கும் தொடக்கமானவன் என்றும் சொல்கிறான். இதைக் படிக்கும்போது, வடமொழி ஜாதகப் பரிந்துரைகளின்படி பெயரிடப்படும் பெரும்பான்மையான நம் தமிழ்ச் சமூகக் குழந்தைகளிடம் 'உன் பெயரின் அர்த்தம் என்ன?' என்று கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை எழாமல் இல்லை. அதே சமயத்தில், நாவலின் உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். மேலும், தமிழ் எழுத்துகளில் ஆங்கிலச் சொற்களை வாசிப்பது, வாசிப்புச் சுமையை அதிகமாக்குகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சூழ்நிலைகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வது, கேள்விகள் கேட்பது, சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது, இயற்கையைப் பாதுகாப்பது, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய தேசிய உணர்வை வளர்த்துக்கொள்வது என ஏராளமான பாடங்களை குழந்தைகளின் மனதில் இயல்பாகவே பதிய வைத்துவிடுகின்றன இந்தக் கதைகள். தொடர்கதைகளின் வழியாக ஒரு பயணத்தை உருவாக்கியிருப்பதும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அகரன் அடுத்து எங்கே போகப் போகிறான் என்ற ஆவல் வாசிப்பவரிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கும் போதும், ஒரு கதையை முழுமையாக வாசித்த திருப்தியையும் இந்தத் தொடர் தருகிறது. உள்ளடக்கத்திலும் சரி கதைச் சொல்லும் முறையிலும் சரி ‘காஷ்குமரி’ தமிழ் சிறார் இலக்கியத்திற்கு ஒரு இனிமையான நல்வரவு. மெய்நிகர் உலகத்தின் அதீதங்களில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகளை மீட்டு, இயல் உலகத்தின் அற்புதங்களைக் காட்ட வழிகாட்டுகிறது. யாவர் கரங்களிலும் கைபேசியின் இடத்தை ‘காஷ்குமரி’ ஆக்கிரமிக்கட்டும். நூல்: காஷ்குமரி எழுத்தாளர்: நெய்வேலி பாரதிக்குமார் வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், தொடர்புக்கு: 89393 87296 சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.

  • மாயக் கரண்டி

    இரவு எப்பொழுது வரும் என்று ஆனந்தன் காத்திருந்தான் இரவு வந்தால் தானே கனவு வரும். கனவு வந்தால் தானே தேவதையும் வரும். 'என்ன இன்னைக்கு நேரம் ஓடவே மாட்டேங்குது' என்று கடிகாரத்தையே பார்த்தபடி வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான் ஆனந்தன். “ஆனந்தா டைம் ஆச்சு சாப்பிட்டு படு“ என்று அம்மா அழைத்தவுடன் ஓடிப்போய் இரவு உணவை வேக வேகமாக சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். பல நாட்களுக்கு முன் ஆனந்தனின் கனவில் ஒரு தேவதை வந்தது. ”ஆனந்தா நான் ஒரு மாதம் உன்னை கண்காணிப்பேன். நீ நம்பிக்கையானவன், நல்லவன் என்று தெரிந்தால் உனக்கு ஒரு மாயக்கரண்டியை பரிசாக தருவேன்" என்று சொல்லிவிட்டு சென்றது. 'ஒரு மாதம் இன்றோடு முடியுது . தேவதை வருமா பரிசு கிடைக்குமா?' என ஆனந்தன் படுக்கையில் காத்திருந்தான். கனவும் வந்தது தேவதையும் வந்தது. ”ஆனந்தா உனக்கு பரிசைக் கட்டாயம் தருகிறேன். அதை நல்ல காரியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. ஒரு வாரம் கழித்து இந்த பரிசை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் “என்று சொல்லி விட்டு தேவதை மறைந்து விட்டது. காலையில் கண்விழித்த ஆனந்தனின் சட்டப்பையில் ஏதோ நெருடியது.. கையை விட்டு தேடி எடுத்தான். ஆஹா! அழகான ஒரு கரண்டி. இதுதான் அந்த பரிசா! என்று ஆர்வத்தோடு அதனை பார்த்த ஆனந்தன் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டான். பள்ளிக்குப் போகும் வழியில் அந்த கரண்டியை எடுத்து இது என்ன தரும் என்று பார்க்கலாம் என்று யோசித்தபடியே, 'எனக்கு ஒரு நெல்லிக்காய் தருகிறாயா?' என்று கேட்ட அடுத்த நொடியே கரண்டியின் மேல் ஒரு நெல்லிக்காய் இருந்தது . “ரோட்டுக்கு நடுவுல ஒரு பள்ளம் இருக்கு அங்க கொஞ்சம் மண் அள்ளிப் போட்டு அதை மூடு” என்று அவன் கரண்டியிடம் சொன்ன சில நிமிடங்களில் பள்ளத்தில் மண் நிரம்பி ரோடு சரியாகிவிட்டது. ஆனந்தனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஐய், ஜாலி ஜாலி என்ற படியே கரண்டியை பத்திரமாக பைக்குள் வைத்துக் கொண்டான். ஆனந்தனின் அப்பா இரவுச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். “ஆனந்தா இங்க பாரேன் இந்த நாட்டுல போர் நடக்கிறதுனால குழந்தைகளுக்கு சாப்பாடே இல்லையாம்.. அச்சச்சோ! இந்த நாட்டுல வெப்ப அலை தாக்கத்தினால பயிர்கள் எல்லாம் வாடி போச்சாம்.. கிணத்துல குளத்துல எல்லாம் தண்ணியே இல்லையாம்….. ஐயோ அடுத்த செய்தியும் வருத்தமான செய்தியா தான் இருக்கு.. எரிமலை வெடிச்சு சிதறது. அதனால அந்த ஊரே தூசியும் எரிமலை குழம்புமா நிறைஞ்சிருக்காம்.. உலகத்துல மக்கள் எப்படி தான் வாழாறதுனே தெரியல ஆனந்தா “ என்று புலம்பி தீர்த்தார் அப்பா. ஆனந்தன் வருத்தத்தோடு தன் வீட்டு பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான்.. சில நாட்கள் கழித்து,,”அம்பிகா இங்க வாயேன் டிவில இந்த செய்தியை பாரேன் … போர் நடந்த ஊர்ல மூட்ட மூட்டையா உணவுப்பொருட்கள் வந்து குவிஞ்சி கிடக்குதாம்…எரிமலை வெடிச்ச நாட்ல தூசி எல்லாம் மறைஞ்சே போச்சாம், அந்த இடம் எரிமலை வெடிக்காத மாதிரியே சுத்தமா இருக்குதாம், ஒரு நாட்டுல கிணத்துல கொளத்துல தண்ணி இல்லன்னு சொன்னாங்க இல்ல, அந்த நாட்டுல தரிசா கிடந்த நிலத்தில் எல்லாம் எங்க பாத்தாலும் மரமா முளைச்சி நாடே பச்சைப்பசேல்னு இருக்காம் .ஏரி, குளம் ,கிணறு எல்லாம் தண்ணீர் நிரம்பி வழியுதாம். இதெல்லாம் எப்படி நடந்தது என்று யாராலயும் கண்டுபிடிக்கவே முடியலையாம்னு செய்தில சொல்றாங்க பாரு என ஆச்சரியத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.. " "ஆமாங்க இயற்கைக்கு எதிரா நடக்காம மக்கள் இருந்தாலே உலகம் நல்லா இருக்கும்" என்றபடியே ஆனந்தனின் அம்மாவும் ஆச்சரியத்தில் மூழ்கினார். ஆனந்தன் மெதுவாக சிரித்துக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பல மாதங்கள் ஆகியும் தேவதை அவனிடமிருந்து அந்த கரண்டியை திரும்ப வாங்கிக் கொள்ள கனவில் வரவே இல்லை.. கரண்டி அவனிடமே இருந்தது. ஷீலா ராஜன் தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியரான இவர், ஒரு கதைசொல்லி ஆவார். தமிழ்நாடு அரசின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகக் கதைகளுக்கான காணொலிகளுக்குப் பின்னணிக் குரல் (Voice-over) கொடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் எழுத்தாளராகவும், குழந்தைகளுக்கான விழுமியக் கல்வி (Value Education) பாடப்புத்தகக் கதைகளின் ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்

  • ஓர் அங்குலச் சிறுவன்

    (ஜப்பானிய நாடோடிக் கதை) தமிழில் : சுகுமாரன் உங்களுக்குத் தெரியுமா? முன்னொரு காலத்தில் ஒரு பையன் இருந்தான். உங்களை விட வயதானவன். அவன் உயரம் ஓர் அங்குலம் தான். அவன் பெயர் இசன் போஸ்கி. உங்கள் கட்டைவிரலை விட உயரமாக இருக்க மாட்டான். ஆனால் பல சிறிய உயிரினங்களைப் போலவே அவனிடமும் பெரிய ஆச்சரியங்கள் இருந்தன. உங்கள் இதயமே பிளந்து விடும் அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்காக அதிகம் ஆசைப்பட்டிருக்கிறீர்களா? ரொம்ப, ரொம்ப காலத்திற்கு முன்பாக ஒரு தாத்தாவும் ஒரு பாட்டியும் அவ்வாறு ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டதாலேயே இறந்து விடுவோம் என்று நினைத்தார்கள். அப்படியென்ன அவர்கள் ஆசைப்பட்டார்கள்? அன்பு செலுத்த ஒரு குழந்தை. 'மிகச் சிறிய குழந்தையாக இருந்தாலும் போதும்' என்றார் பாட்டி. 'என் சுண்டு விரலை விட சின்னதாக இருந்தாலும் போதும்' என்றார் தாத்தா. பத்து முழு நிலாக்கள் வந்தன, போயின. அந்த வயதான தம்பதியின் ஆசை உண்மையானது. நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகச் சிறிய குழந்தை பிறந்தது. அவன் தன் தாயின் கட்டை விரலில் இருந்து உலகிற்குள் அடியெடுத்து வைத்தான். 'இசன் போஸ்கி' அவனுடைய அம்மா மகிழ்ச்சியில் கத்தினார். அவளுடைய உள்ளங்கையில் ஏந்திக் கொண்டாள் 'ஓர் அங்குலச் சிறுவன்'. காலம் சென்றது. இசன் போஸ்கி குறைந்தபட்சம் பார்ப்பதற்காக கூட பெரிதாக வளரவில்லை. ஆனால் உள்ளே அவன் மனம் ஆர்வங்களோடு வளர்ந்தது. அவனுடைய இதயம் உலகத்தைப் பார்க்கும் ஆசையோடு வளர்ந்திருந்தது. இசன் போஸ்கி ஒரு நாள் அப்பா, அம்மாவிடம் சொன்னான். 'எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.' ஜப்பானின் தலைநகர் 'கியாடோ' செல்ல வேண்டும். அங்கு பார்க்க முடிந்ததை பார்க்க வேண்டும் என்பது அவனுடைய ஆசையாக இருந்தது. நல்லது இசன் போஸ்கி என்று அவனுடைய பெற்றோர் கூறினர். நிறைய வாழ்த்துகள், கொஞ்சம் கவலையுடன் வழியனுப்ப தயாராயினர். 'இதை எடுத்துக் கொள், அதை எடுத்துக் கொள் என்று அம்மா கூறினார்.' இசன் போஸ்கி தன்னுடன் ஒரு தைக்கும் ஊசி, ஒரு கிண்ணம் அரிசி, 'சாப் ஸ்டிக்' ஆகியவற்றை எடுத்துக் கொண்டான். இசன் போஸ்கி ஓடுகின்ற ஒரு ஆற்றுக்கு வந்தான். கிண்ணத்தில் ஏறி அதை படகுப் போல் பயன்படுத்தி ஆற்றில் பயணம் செய்தான். 'சாப் ஸ்டிக்' யை துடுப்பு போல் பயன்படுத்தினான். சில நாட்களுக்குப் பிறகு இசன் போஸ்கி 'கியாடோ' வந்து சேர்ந்தான். பரபரப்பான இடம். கற்களால் ஆன தெருக்களில் 'கடா, கடா..' என்று சத்தம் எழுப்பி காலணிகள் நடந்தன. வண்டி சக்கரங்கள் அவன் மேலே ஓடின. இசன் போஸ்கி ஜாக்கிரதையாக தன் பாதையில் நடந்தான். இறுதியாக அவன் நகரத்திலுள்ள பெரிய, அழகான வீட்டுக்கு வந்தான். சான்ஜோ வின் வீடு என்று இசன் போஸ்கி ஆச்சரியத்தோடு கூறினான். அவன் அந்த வீட்டின் அன்பான, துணிச்சலான எஜமானரான சான்ஜோ பற்றி நிறைய அதிசயமான கதைகளைக் கேட்டிருக்கிறான். அந்த வீட்டின் பெரிய கதவருகே இசன் போஸ்கி காத்திருந்தான். நீல நிற வானம் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்ச் வண்ணத்திற்கு மாறியது, கடைசியாக கதவு திறக்கப்பட்டது. 'நான் இசன் போஸ்கி' என்று கூறி அவன் குதித்தான், கத்தினான். 'நான் உங்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன், பிரபு சான்ஜோ' என்றான். அந்த உயர்ந்த மனிதன் உற்று நோக்கினான். இடது பக்கம் பார்த்தான், வலது பக்கம் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். 'கீழே பாருங்கள்' என்று இசன் போஸ்கி கத்தினான். பிரபு சான்ஜோவின் வாய் ஆச்சரியத்தில் திறந்தது. அவர் குனிந்து அந்த குட்டி சிறுவனை தூக்கிக் கொண்டார். 'என் மகனே! நீ என் கட்டை விரலை விட சிறிதாக இருக்கிறாய். எனக்கு நீ என்ன செய்ய முடியும்?' இசன் போஸ்கி சிரித்துக் கொண்டு சொன்னான்: 'கண்களால் மட்டும் பார்ப்பவர்களை இசன் போஸ்கி ஆச்சரியப்படுத்துவான்'. அப்போது அவன் தனது தையல் ஊசியை வெளியே எடுத்தான். அந்தப் பெரிய மனிதரின் காதுக்கு அருகே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஈ ஒன்றை வெட்டி வீழ்த்தினான். இசன் போஸ்கி சீக்கிரத்தில் சான்ஜோ வீட்டின் நம்பிக்கைக்குரிய வேலையாளாக மாறினான். குறிப்பாக இளவரசி சான்ஜோ அவனை சார்ந்தே இருந்தாள். ஏனெனில், அவள் தலையில் அணிந்திருந்த சீப்புகளின் மீது மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை அவனால் மட்டுமே வரைய முடிந்தது. அவளுடைய அலங்கார மேசையின் அடியில் தவறி விழுந்த மிகவும் சிறிய காதணிகளை அவனால் கண்டுபிடித்து கொடுக்க முடிந்தது. நாள் முழுவதும் கூட இளவரசியின் தோளின் மீது அமர்ந்து அவளுக்குத் துணையாக இருந்தான். பனிக் காலம் வந்தது. கறுப்பு மரக்கிளைகளில் பனி பூசப்பட்டிருந்தது. வசந்தக் காலத்தில் மரக்கிளைகள் 'செர்ரி' மலர்களை இளஞ்சிவப்பு, வெள்ளை நிற மடிப்புகளுடன் ஆடையாக அணிந்திருந்தன. நாள் முழுவதும் இளவரசியும் இசன் போஸ்கியும் 'செர்ரி' மலர் விழாவைக் கொண்டாடினர். இருவரும் வீட்டுக்கு நடந்தப் போது இளவரசி இசன் போஸ்கியை நகைச்சுவை ஒன்றை கூறும்படி கேட்டாள். ஆனால் இசன் போஸ்கி வாயைத் திறந்து சொல்லுவதற்கு முன்பாக ஒரு நிழல் அவனைக் கடந்தது. அவன் அதைப் பார்த்து நடுங்கினான். வானத்தை அடைத்திருந்தது ஓனி. அது பயங்கரமான, மனிதரை தின்னும் பூதம் அவர்களைப் பார்த்து சிரித்தது. 'ஓனி, தூரம் போய் விடு, இல்லையென்றால்.' கையிலிருந்த ஊசி வாளை சுழட்டி இசன் போஸ்கி எச்சரிக்கை செய்தான். 'ஹா... ஹா...' பூதத்தின் சிரிப்பு இசன் போஸ்கியை காற்றில் சுழலச் செய்தது. 'உன்னைப் பார்த்தால் எலியை விட சிறியதாக இருக்கிறாய். உன்னால் என்னை துன்புறுத்த முடியுமா?' என்று கேட்டது பூதம். இசன் போஸ்கி சிரித்தவாறே சொன்னான்: 'கண்களால் மட்டும் பார்ப்பவர்களை இசன் போஸ்கி ஆச்சரியப் படுத்துவான்.' பறக்கும் பூச்சியை விட வேகமாக இசன் போஸ்கி சிரிக்கும் பூதத்தின் வாய்க்குள் பாய்ந்தான். அவன் அப்படியே வழுக்கி பயங்கர பூதத்தின் தொண்டைக்கு வந்தான். 'க்ளப்...' அவன் ஓனி பூதத்தின் வயிற்றுக்கு வந்தான். ஸ்லாஸ்...பக்...இஷ்...சப்... அவன் பூதத்தின் வயிற்றை ஊசியால் தாக்கினான். 'ஊ...யா...ஓ...வாவ்...' ஓனி பூதம் கதறியது. 'தயவு செய்து...' ஓனி கெஞ்சியது... தயவுசெய்து... இசன் போஸ்கி வெளியே வா...' இசன் போஸ்கி இன்னொரு குத்து விட்டான். 'உன்னுடைய பாடத்தை படித்து விட்டாயா?' என்று கேட்டான். 'ஆமாம்... ஆமாம்... ஆமாம்...' பூதம் உரத்தக் குரலில் பதில் சொன்னது. இசன் போஸ்கி தாவிக் குதித்து தொண்டைக்கு வந்தான். பின்பு பூதத்தின் வாயிலிருந்து வெளியே குதித்தான். டெம்... டம்... டமா... பூதம் தரை குலுங்க ஓட்டம் பிடித்தது. 'ஹா... ஹா...` இசன் போஸ்கி சிரித்தான். அவன் பூதத்தை தோற்கடித்தது மட்டுமல்லாமல், பூதம் விட்டு சென்ற மந்திர சுத்தியலும் கிடைத்தது. இசன் போஸ்கி வெள்ளியால் ஆன மந்திர சுத்தியலைத் தொட்டவுடன்... இசன் போஸ்கி அழகான இளைஞனாக தரையில் நின்றான். முன்பு அவனால் இளவரசியின் 'ஷீ'வைத்தான் நேராக பார்க்க முடிந்தது. இப்போது அவளுடைய முகத்தைப் பார்த்தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்! இளவரசிக்கும் அந்த அழகான வீரனுக்கும் திருமணம் நிச்சயமானது. கிராமத்திலிருந்த அவனுடைய வயதான பெற்றோர் சான்ஜோ வீட்டுக்கு வந்தனர். இப்போது இசன் போஸ்கியின் வெளித்தோற்றம் அவனது உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமாக இருந்தது. சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.

  • ‘டாட்டூ’ – உடலில் வரையும் ஓவியம் அல்ல. ஆழ்மனதைத் திறக்கும் கதவு!

    எந்த ஒரு டாட்டூவைப் பார்த்தாலும் நமக்கு அறிமுகமில்லாதவராயினும் ஒரு கணம் நமது பார்வை அந்த ஓவியத்தில் நிலைகுத்தி மீள்வது இயல்பு. அதுவும் ஓவியத்தின் அழகு நம்மை ஈர்த்துவிட்டால் அங்கிருந்து கண்களை எடுப்பது கடினம்தான். சரிதா ஜோ எழுதியுள்ள ‘டாட்டூ’ நாவல், “உடலில் வரையப்படும் இந்த ஓவியங்களுக்குள் நினைவுகளையும் வலிகளையும் புதைக்க முடியுமா?” என்ற சுவாரஸ்யமான கேள்வியை முன்வைக்கிறது. கதையின் நாயகி மாயாவைத் துரத்தும் கொடூரமான கனவுகளுடன் தொடங்குகிறது நாவலின் கதைக்களம். தீ, பாம்பு, டிராகன், கழுகு, பாலைவனம், புழுக்கள், திமிங்கலம் என அவளைத் தூங்க விடாமல் விரட்டும் கனவுக் குறியீடுகளுக்குக் காரணம் தெரியாமல் துடிக்கிறாள். மாயாவின் தோழி நட்சத்திராவுக்கு டாட்டூ மீது இருக்கும் ஈடுபாடு, கதையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. டாட்டூ என்பது அலங்காரத்திற்காக வரையப்படுவதல்ல, அது ஒரு மனிதனின் நினைவு, அவன் சார்ந்த கலாச்சாரம், அவனுக்குள் உறைந்திருக்கும் உணர்வு என்பதை நாவல் அழகாக எடுத்துரைக்கிறது. 5000 முதல் 7000 ஆண்டுகள் பழமையான பச்சைக் குத்தும் கலாச்சாரம் முதல், ஐஸ்மேன் உடலில் காணப்பட்ட டாட்டூக்கள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நிலவிய மரபுகள், ஜப்பானின் ‘ஐரேசுமி’, நியூசிலாந்தின் மோரியர் பழங்குடியினரின் பச்சைக் குத்தும் வழக்கம் என டாட்டூவின் வரலாற்றுச் செய்திகளை ஆங்காங்கே தூவிச் செல்வதன் மூலம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பயணத்தையும் தருகிறார் எழுத்தாளர் சரிதா ஜோ. அம்மாயி – அப்புச்சி வீடு, பொங்கல், ஜல்லிக்கட்டு, வள்ளித் திருமணம் போன்ற நினைவுகள் கிராமியச் சூழலை கண்முன் காட்டுகிறது. நாவலின் மிக முக்கியமான பலம் சிக்மண்ட் ஃப்ராய்டின் கனவு பற்றிய உளவியல் கோட்பாடுகளை கதைக்குள் இயல்பாகப் பின்னியிருப்பதுதான். நனவிலி மனம், ஒடுக்கப்பட்ட ஆசைகள், மறக்கப்பட்ட நினைவுகள், மனக்காயங்கள் ஆகியவை கனவுகளின் வழியாக வெளிப்படுகின்றன. நமக்கே தெரியாத நம்முடைய மன அழுத்தங்களை, நாம் மறக்க நினைக்கும் நினைவுகளை, கனவு மூலமாக வெளியே கொண்டு வருகிறது. ஒரு கயவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமி தனது எட்டு வயது முதல் 23 வயது வரை தூங்க முடியாமல் வலியைச் சுமந்து கொண்டிருப்பது எத்தனை கொடியது? ஆனால் அந்த கொடூரத்தைச் செய்த ஆண் எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தன் வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது எத்தனை பெரிய முரண்? இறுதியில் அந்தக் கயவனைத் தேடும் மாயாவும் அவளது நண்பர்களும் எப்படி அவனைக் கண்டு பிடிக்கிறார்கள்? என்ன தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதை தனது விறுவிறுப்பான நடையில் கொண்டு செல்கிறார் ஆசிரியர். பெண்ணியக் கருத்துகள் திணிக்கப்படாமல் மெல்லிய நூலாக இழையோட விடுவது ஆசிரியரின் டச். பச்சை குத்தாமல் ஆண்களுக்கு பெண்கள் உணவு பரிமாறக்கூடாது என்ற கிராமத்து வழக்கம் பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு உளவியலோ என சந்தேகத்தை முன் வைக்கிறார். நிஜ உலகமும் கனவு உலகமும், கடந்த காலமும் நிகழ்காலமும், நினைவும் கற்பனையும் ஒன்றுக்கொன்று கலக்கும் விதம் இளையோர் வாசகர்களுக்கு புதுமையான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. ‘டாட்டூ’ என்பது உடலில் குத்தப்படும் ஒரு குறியீட்டின் கதை மட்டுமல்ல. மனதில் அழிக்க முடியாமல் பதிந்திருக்கும் நினைவுகளின் கதை. நாம் மறந்துவிட்டதாக நினைக்கும் சில அனுபவங்கள் உண்மையில் நம்மை விட்டு மறைவதில்லை. அவை கனவுகளாகவும், பயங்களாகவும், குறியீடுகளாகவும் நம்மிடம் திரும்பி வருகின்றன. அந்த மறைக்கப்பட்ட நினைவுகளின் கதவுகளைத் திறக்கிறது ‘டாட்டூ’ என்ற சுவாரஸ்யமான கதை. டாட்டூ இளையோருக்கான நூலா? ஆம், இளையோருக்கான நூல். ஆனால் பெரியோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். டாட்டூ உளவியல் நூலா? ஆம் நூலின் மையக் கருத்தே உளவியல் சிக்கல்கள் தான். டாட்டூ த்ரில்லிங் நூலா? ஆம் விறுவிறுப்பான மர்ம நாவல் போன்றது. டாட்டூ பெண்ணிய நூலா? ஆம் பெண்ணியமும் பேசுகிறது. டாட்டூ பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வூட்டும் நூலா? ஆம் பெண்குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெண்குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் நூல். இத்தனையும் ஒரே நாவலில் எப்படி இருக்க முடியும்? இருக்கிறதே, அது தான் 'டாட்டூ'. இளையோர் இலக்கியத்தில் கவனிக்கத்தக்க ஒரு புதிய முயற்சி. நூல் : டாட்டூ ஆசிரியர்: சரிதா ஜோ வகை : இளையோர் நாவல் பதிப்பகம்: ஆலா பதிப்பகம் பக்கங்கள்: 144 விலை: ₹180 ரமாதேவி ரத்தினசாமி அரசுப்பள்ளி ஆசிரியையாக 29 ஆண்டுகள் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அமெரிக்கா, பெல்ஜியம்,ஸ்வீடன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்விசார் கருத்தரங்குகளிலும் பாலினச்சமத்துவம், பெண்கல்வி, பெண், தலைமைத்துவம் போன்ற கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர். ஆசியாவின் சார்பாகவும் இந்தியாவின் சார்பாகவும் ஐ.நா. சபையில் இருமுறை பங்கேற்று இந்தியாவின் குரலை உலக நாடுகளில் பதிவு செய்தவர். 18 நூல்களை எழுதியுள்ளதுடன் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுபெற்ற எழுத்தாளர். வெளிநாடுகளில் தான் கண்ட பள்ளிகளின் மாதிரியாக தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கென SKYWALK E International Play School துவங்கி நடத்தி வருபவர்.

  • இரண்டு வயது குழந்தைகளுக்கு குட்டி குட்டி சமையல் விளையாட்டுகள் பாதுகாப்பானதா?

    ஆம், இரண்டு வயது குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் நேரடி மேற்பார்வையில் குட்டி குட்டி சமையல் விளையாட்டுகளைச் செய்யலாம். இது அவர்களின் உடல், மன மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். உளவியல் அலசல் மற்றும் ஆய்வு விளக்கம் 1. மோட்டார் திறன் வளர்ச்சி (Motor Skills Development) குழந்தைகள் சமையல் விளையாட்டுகளில் ஈடுபடும்போது, அவர்களின் நுண் மோட்டார் திறன்கள் (fine motor skills) மேம்படுகின்றன. - சிறிய பொருட்களைக் கையாளுதல் (கரண்டி, கப், கரிக்காய் போன்றவை) - கை-கண் ஒருங்கிணைப்பு (hand-eye coordination) வளர்தல் - விரல்களின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரித்தல் 2. கற்பனை மற்றும் படைப்பாற்றல் (Imagination & Creativity) சமையல் விளையாட்டுகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கின்றன. - "இது என்ன உணவு?" என்ற கேள்விக்கு அவர்களே பதில் சொல்வதன் மூலம் மொழி வளர்ச்சி - புதிய உணவு வகைகளை உருவாக்கும் ஆற்றல் - கதை சொல்லும் திறன் (storytelling) மேம்படுதல் 3. உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி (Emotional & Social Development) குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம்: - பெற்றோர்-குழந்தை உறவு வலுப்படுகிறது - பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை (sharing) வளர்கிறது - ஒத்துழைப்பு மற்றும் பொறுமை கற்றுக்கொள்ளப்படுகிறது 4. அறிவுசார் வளர்ச்சி (Cognitive Development) வண்ணங்கள், அளவுகள், எண்கள் பற்றிய அறிமுகம் - "சிறியது", "பெரியது", "அதிகம்", "குறைவு" போன்ற கருத்துகள் புரியும் - பிரச்சினை தீர்க்கும் திறன் (problem-solving) வளரும் 5. பாதுகாப்பு மற்றும் கவனம் (Safety & Attention) பெற்றோர்களின் மேற்பார்வையில் விளையாடுவதால்: - பாதுகாப்பான விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம் - குழந்தையின் கவனத்தைச் சிதறாமல் வைத்திருக்கலாம் - ஆபத்தான பொருட்களிலிருந்து விலக்கலாம் பெற்றோருக்கான ஆலோசனைகள் பாதுகாப்பான விளையாட்டுப் பொருட்கள்: - நெகிழித்தன்மை உள்ள மென்மையான விளையாட்டுப் பொருட்கள் - சிறிய துண்டுகள் இல்லாதவை (விழுங்கும் அபாயம் இல்லாதவை) - நச்சுத்தன்மை இல்லாத வண்ணங்கள் கொண்டவை விளையாட்டு நேரம்: - 10-15 நிமிடங்கள் போதுமானது (குழந்தையின் கவனம் குறைவாக இருக்கும்) - தினமும் அல்லது வாரத்தில் சில நாட்கள் விளையாட்டு வகைகள்: - மணலில் சமைத்தல் (sand play) - நீர் விளையாட்டு (water play) - பிளாஸ்டிக் சமையல் செட் (toy kitchen set) - உண்மையான சமையல் பொருட்கள் (மென்மையான காய்கறிகள், பழங்கள்) இரண்டு வயது குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் மேற்பார்வையில் குட்டி குட்டி சமையல் விளையாட்டுகள் செய்யலாம். இது அவர்களின் உடல், மன, உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். குழந்தையின் ஆர்வத்திற்கு ஏற்ப விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பான சூழலில் விளையாட வைப்பது முக்கியம். குறிப்பு: எந்த விளையாட்டையும் குழந்தையின் தனித்திறனுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர் என்பதால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டுகளை மாற்றியமைக்கலாம். கோ.சுரேஷ்குமார் மேனாள் மேல்நிலைக்கல்வி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி ஆசிரியர், கல்வியாளர், சிறார் கதை ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர், "மைக்ரோகிரின்" வளர்ப்பு செயல்பாட்டாளர், வேளாண் விழிப்புணர்வு கட்டுரையாளர், பயிற்சியாளார்.

  • டைட்டன் – சனிக்கோளின் மர்ம உலகம்

    (காசா விண்கலம் எடுத்த டைட்டனின் புகைப்படம் – பட உதவி – நாசா) சூரியக் குடும்பத்தின் ஆறாவது கோளான சனியைப் பற்றி நினைக்கும் போதே, அதன் அழகிய வளையங்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால், அந்த வளையங்களைத் தாண்டி, வானியலாளர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு விசித்திர உலகம் இருக்கிறது. அது - சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன். நமது சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எங்கு இருக்கலாம் என்ற கேள்வி எழும்போதெல்லாம் அறிவியலாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் விண்பொருட்களில் ஒன்றாகச் சனிக்கோளின் நிலவு, டைட்டன் திகழ்கிறது. முதற்பார்வையில் அது பனியால் மூடப்பட்ட குளிர்ந்த வெற்று உலகமாகத் தோன்றினாலும், அதன் அடர்த்தியான வளிமண்டலம், மீத்தேன் ஏரிகள், மழை, ஆறுகள், மணற்குன்றுகள், பருவநிலை மாற்றங்கள் என்று பூமியை ஒத்திருக்கும் நிலையை நினைவூட்டுகிறது. அதே நேரத்தில், அங்குள்ள திரவங்கள் நீரல்ல; அங்கிருப்பவை, திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன். அங்கிருக்கும் வெப்பநிலை மனித வாழ்விற்கு ஏற்றதல்ல; இந்த முரண்பாடுகளின் கலவையே டைட்டனை சூரியக் குடும்பத்தின் மிக வினோதமான உலகங்களில் ஒன்றாக மாற்றுகிறது. டைட்டனின் கண்டுபிடிப்பு 1655 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் வானியலாளர் கிறிஸ்டியான் ஹெய்கென்ஸ் தொலைநோக்கியின் உதவியால் டைட்டனை முதன்முதலாகக் கண்டறிந்தார். சனிக்கோளைச் சுற்றிவரும் முதல் நிலவாகக் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டன், பின்னர் அதன் மிகப்பெரிய துணைக்கோளாகவும் அறியப்பட்டது. இன்று வரை சனிக்கோளைச் சுற்றும் நூற்றுக்கணக்கான நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; அவற்றில் அளவிலும், அமைப்பிலும், அறிவியல் முக்கியத்துவத்திலும் டைட்டன் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. டைட்டன் சனிக்கோளை ஒரு முறை சுற்றி வர சுமார் 16 நாட்கள் ஆகின்றன (பூமியின் நாட்கணக்கின்படி). அளவும் அமைப்பும் டைட்டனின் விட்டம் சுமார் 5,150 கிலோமீட்டர். இது புதன் கோளைவிடச் சற்றுப் பெரியதாகும். இருப்பினும் புதன் அதிக அடர்த்தியுடைய பாறைக்கோள் என்பதால் அதன் நிறை டைட்டனைவிட அதிகமாகும். டைட்டனின் உட்புற அமைப்பு பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அதன் மையத்தில் பாறைகளும் உலோகங்களும் கலந்த பகுதியாக இருக்கலாம்; அதைச் சுற்றி மிக உயர்ந்த அழுத்தத்தில் நீர்-பனிப் படலம் இருக்கலாம்; அதன் மேலே அமோனியா கலந்த திரவ நீர்க் கடல் இருப்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. வெளிப்புறத்தில் தடிமனான நீர்ப் பனியால் ஆன உறைந்த மேற்பரப்பு காணப்படுகிறது. இதனால், வெளியில் உறைந்த உலகமாகத் தோன்றும் டைட்டனின் அடியில் ஒரு மாபெரும் மறைகடல் இருக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. வளிமண்டலம் டைட்டனை மற்ற எல்லா நிலவுகளிலிருந்தும் வேறுபடுத்துவது அதன் வளிமண்டலமாகும். சூரியக் குடும்பத்தில் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரே நிலவு இதுவே. அதன் வளிமண்டலத்தில் சுமார் 95% நைட்ரஜனும் 5% மீத்தேனும் நிறைந்திருக்கின்றன. மிகச் சிறிய அளவில் ஹைட்ரஜன், ஈத்தேன் மற்றும் பிற கரிம வாயுக்கள் உள்ளன. டைட்டனின் வளிமண்டல அழுத்தம் பூமியைவிட ஒன்றரை மடங்கு அதிகம். அதன் மேல் வளிமண்டலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களும், சனிக்கோளின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள மின்துகள்களும் மீத்தேனைப் பிரித்து எண்ணற்ற கரிம வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன. அவை மெல்லக் கீழிறங்கி ஆரஞ்சு நிற மங்கல்மூட்டத்தை உருவாக்குகின்றன. இந்தப் புகைமூட்டத்தினால்தான் டைட்டனை சாதாரணத் தொலைநோக்கிகளால் காணமுடிவதில்லை. பூமியைப் போன்ற காலநிலை டைட்டனில் நீருக்குப் பதிலாக மீத்தேன் சுழற்சி நடைபெறுகிறது. அங்கு மேகங்கள் உருவாகின்றன; மழை பெய்கிறது; மழைநீர் போல மீத்தேன் பள்ளங்களில் தேங்குகிறது; ஆறுகள் உருவாகின்றன; அவை ஏரிகளிலும் கடல்களிலும் கலக்கின்றன; பின்னர் மீண்டும் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. இந்த முழுச் சுழற்சியும் பூமியின் நீர்ச் சுழற்சியைப் போலவே இருக்கிறது; ஆனால் அங்கு நீருக்குப்பதில் மீத்தேனும் ஈத்தேனும் இருக்கின்றன. டைட்டனின் வட துருவப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏரிகளும் கடல்களும் உள்ளன. இவை திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேனால் நிரம்பியுள்ளன. சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலைத்திருக்கும் திரவக் கடல்கள் கண்டறியப்பட்ட ஒரே உலகம் டைட்டன்தான். ஆறுகளும் பள்ளத்தாக்குகளும் மணற்குன்றுகளும் டைட்டனைப் படமெடுத்த விண்கலங்கள் அங்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றுப் பாதைகள் இருப்பதைக் காட்டின. சில ஆறுகள் கிளைகளாகப் பிரிந்து மீண்டும் ஒன்றுசேரும் விதம் பூமியின் ஆற்றுத் தொகுதிகளை நினைவூட்டுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மீத்தேன் மழை நிலப்பரப்பை அரித்துக்கொண்டிருப்பது தெரியவருகிறது. டைட்டனின் நடுப்பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள கருமை நிற மணற்குன்றுகள் உள்ளன. இவை பூமியில் காணப்படும் பாலைவன மணற்குன்றுகளைப் போன்றவை. ஆனால் பூமியின் மணல் போன்றவை அல்ல; வளிமண்டலத்தில் உருவாகும் கரிமத் துகள்கள் காற்றால் சேர்க்கப்பட்டு உருவானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலைகளும் பனிமலை எரிமலைகளும் டைட்டனில் சில மலைத்தொடர்களும் உயரமான நிலப்பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. சில ஆய்வுகள் அங்கு பனிமலை எரிமலைகள் இருக்கக்கூடும் எனக் கூறுகின்றன. பூமியில் எரிமலைகள் உருகிய பாறைகளை வெளியேற்றுகின்றன; ஆனால் டைட்டனில் அவை நீர், அமோனியா போன்ற மிகக் குளிர்ந்த திரவங்களை வெளியேற்றியிருக்கலாம். இது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், டைட்டனின் உள்பகுதி இன்னும் செயலில் இருக்கலாம் என்பதற்கான சாத்தியத்தை இது முன்வைக்கிறது. வெப்பநிலை டைட்டனின் சராசரி வெப்பநிலை சுமார் –179° செல்சியஸ். இந்த அளவுக்குக் குறைந்த வெப்பநிலையில் நீர் பாறையைப் போல உறைந்திருக்கும்; மீத்தேனும் ஈத்தேனும் திரவமாக இருக்கும். மனித இனம் ஒரு கணமும் இங்கு உயிர்வாழ முடியாது. ஈர்ப்பு விசை டைட்டனின் ஈர்ப்பு விசை பூமியின் ஏழில் ஒரு பங்கு மட்டுமே. இங்கு மனிதன் வாழ்ந்தால், மிகவும் உயரமாகக் குதித்து நடக்க முடியும். கனமான பொருட்களைக்கூட எளிதாகத் தூக்க முடியும். அடர்த்தியான வளிமண்டலத்துடன் இந்தக் குறைந்த ஈர்ப்பு விசையும் இருப்பதால், சிறகுகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின் உதவியோடு இங்கே மனிதன் எளிதாகப் பறக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். காசினி – ஹெய்கென்ஸ் ஆய்வுப் பயணம் 1997 ஆம் ஆண்டு ஏவப்பட்ட காசினி – ஹெய்கென்ஸ் திட்டம் டைட்டனைப் பற்றிய மனிதனின் புரிதலை முற்றிலும் மாற்றியது. காசினி விண்கலம் சனிக்கோளைப் பல ஆண்டுகள் சுற்றி ஆய்வு செய்தது. அதனுடன் சென்ற ஹெய்கென்ஸ் ஆய்வுக்கலம் 2005 ஜனவரி 14 அன்று டைட்டனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதுவே பூமியிலிருந்து மிகத் தொலைவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் ஆய்வுக்கலமாகும். இந்த விண்கலம் வளிமண்டலத்தின் அடுக்குகளை அளந்தது; இறங்கும் வழியில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்தது; தரையிறங்கிய இடத்தில் பனியுடன் கலந்த சிறுகற்களைப் பதிவுசெய்தது; அங்குள்ள காற்று, வெப்பநிலை, வேதியியல் அமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்தது. உயிர் தோன்றும் சாத்தியம் டைட்டனில் கடுமையான குளிர் நிலவுவதால் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் உயிர் உருவாகத் தேவையான கரிம மூலக்கூறுகள் அங்கு மிகுந்தளவில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அதன் மேற்பரப்புக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது உண்மையெனில், அங்கு வேறுவிதமான நுண்ணுயிர் வடிவங்கள் தோன்றியிருக்குமா என்ற கேள்வி இன்னும் விடைதெரியாத நிலையிலேயே உள்ளது. உயிர் பூமியில் மட்டும்தான் தோன்றியதா, அல்லது வேறு உலகங்களிலும் தோன்ற முடியுமா என்ற அடிப்படை அறிவியல் கேள்விக்கு விடை காண உதவக்கூடிய இடங்களில் டைட்டன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டிராகன்ஃப்ளை திட்டம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, டிராகன்ஃப்ளை எனப்படும் புதிய ஆய்வுத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, அணுசக்தியால் இயக்கப்படும் பறக்கும் ஆய்வுக் கருவி டைட்டனின் பல இடங்களுக்கும் பறந்து ஆய்வு மேற்கொள்ளும். பல்வேறு நிலப்பகுதிகளில் தரையிறங்குவதற்கும், கரிம வேதிப்பொருட்களை ஆய்வு செய்வதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. உயிர் தோன்றுவதற்கான வேதியியல் சூழலையும் இந்தத் திட்டம் ஆராயும். ஒரே இடத்தில் நிலையாக இருப்பதற்குப் பதிலாக பல இடங்களில் பறந்து ஆய்வு செய்யும் முதல் கோளாய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். டைட்டன் என்பது சனிக்கோளின் ஒரு நிலவு மட்டுமல்ல. அது பூமியை நினைவூட்டும் பல இயற்கை நிகழ்வுகளைக் கொண்டிருந்தாலும், அவை முற்றிலும் வேறுபட்ட வேதியியல் அடிப்படையில் நடைபெறும் ஒரு அன்னிய உலகம். அங்கு மழை உண்டு; ஆனால் அது நீரல்ல. ஆறுகள் உண்டு; ஆனால் அவற்றில் ஓடுவது மீத்தேன். கடல்கள் உண்டு; ஆனால் அவை குளிர்ந்த கரிமத் திரவங்களால் நிரம்பியவை. உறைந்த மேற்பரப்பின் கீழ் மறைந்திருக்கும் பெருங்கடலும், வளிமண்டலத்தில் உருவாகும் சிக்கலான கரிம வேதிப்பொருட்களும், உயிரின் தோற்றத்தைப் பற்றிய மனிதனின் மிகப் பெரிய அறிவியல் கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய தடயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கலாம். அதனால், டைட்டன் இன்று வெறும் வானியல் ஆய்வின் பொருளாக மட்டுமல்லாமல், “உயிர் எவ்வாறு தோன்றுகிறது?” என்ற மனிதகுலத்தின் அடிப்படை வினாவிற்கு விடை தேடும் அறிவியல் பயணத்தின் முக்கிய இலக்காகவும் விளங்குகிறது. எழில் சின்னத்தம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • மகிழ்ச்சி

    மகிழ்ச்சி இருக்குது மனசுக்குள்ள! சோப்பு டப்பாவும் செல்போன் ஆகும் எங்க கையிலே - அதில் செல்பி எடுத்து சிரிச்சுக்குவோம் பிள்ளைங்க நாங்க! மழை பெஞ்சா சேமை இலையை குடையா பிடிப்போம் ! முழுதாக நனைந்தபடி வீடு சேருவோம் ! வெறுங்கையில் ஸ்டீரிங் பிடித்து காரும் ஓட்டுவோம் . வீல் இல்லாத காருக்கு பிரேக்கும் போடுவோம் ! சின்ன சொப்பில் சோறு ஆக்கி விருந்தே வைப்போம். இலை தழையை பிச்சுப்போட்டு கூட்டும் சமைப்போம். வாளி மணலில் மாடி வீடு கட்டி எழுப்புவோம்! வாசலிலே அழகான கோலம் போடுவோம். இல்லேன்னு சோர்ந்து போய் உட்கார்ந்ததில்லை. மகிழ்ச்சி எல்லாமே இருக்குது எங்க மனசுக்குள்ள! குருங்குளம் முத்துராஜா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர். இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024 கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

  • மாறாத உலகு

    மின்னல் வெட்டி வானம் கிழியாது! – பெரும் நிலவு மண்ணில் இறங்கி ஒளியாது! வெள்ளம் வந்து மலைகள் கரையாது! – கடல் அலைகள் மோதி கரையும் தகராது! பறவை பறந்தால் வானுக்கு வலிக்காது! – பழுத்த பழங்கள் விழுந்தால் நிலமும் வெடிக்காது! நெருப்பில் சுட்டாலும் தங்கம் அழியாது – ஓயா நீலக் கடலலைகள் தூங்கி விழாது! இரவு வந்தாலும் சூரியன் மடியாது – சுடர் இறைக்கும் விண்மீன்கள் கீழே விழாது! ஏழை வீட்டில் கர்வம் நுழையாது – என்றும் எளியவர் நெஞ்சில் பகை வளராது! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

  • அறிவோம் ஆளுமை -17 : மணலூர் மணியம்மா

    நகுலன்: அத்தை, இன்னைக்கு சிலம்பப் பள்ளிக்குத்தானே போறோம்? ஜோ: ஆமாம். சிறுவயதில் நான் குங்பூ கற்று இருக்கிறேன். இன்றிலிருந்து நீங்கள் இருவரும் சிலம்பப் பள்ளிக்குச் சென்று சிலம்பம் கற்றுக் கொள்ளுங்கள். நகுலன் : பெரிய சாதனை செய்து இருக்கிறீர்கள் அத்தை. அந்தக் காலத்திலேயே நீங்கள் குங்ஃபூ எல்லாம் கற்று இருக்கிறீர்கள்! ஜோ: இதெல்லாம் சாதனை இல்லை. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண்கள் சிலம்பம் கற்று இருக்கிறார்கள். ரதி : தெரியும் அத்தை. வேலுநாச்சியாரைத் தானே கூறுகிறீர்கள்? ஜோ: அவரும்தான். வேறொருவரும் இருக்கிறார். ரதி: அப்படியா! அவங்க யாருங்க அத்தை? ஜோ: அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை எதிர்த்து நின்ற சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். ரதி: சரி அத்தை. சொல்லுங்க. ஜோ: பெண்கள் இயற்கையாகவே ஆளுமைப் பண்பு கொண்டவர்கள். மனித இனம் தோன்றிய காலத்திலும், அதற்கு முற்பட்ட விலங்காகத் திரிந்த காலத்திலும் பெண்களே பல குழுக்களை வழிநடத்தி இருக்கிறார்கள் என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாகரிகம் வளர்ந்த பிறகும், பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகத் திறமையானவர்களாக வளர்ந்த பிறகும், பெண்களைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுவருவதில் இன்னும் தயக்கம் இருக்கிறது. நகுலன்: ஏன் அத்தை? ஜோ: சமூகமே உருவாக்கிய சில கற்பிதங்கள். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்.‌ பெண் இப்படித்தான் உடை அணிய வேண்டும். பெண் இதைத் தான் செய்ய வேண்டும் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்ட கருத்துகள். ரதி: அதை எல்லாம் தகர்த்த பல ஆளுமைகளைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமே..அத்தை.. நீங்கள் இப்போது கூறப்போகும் ஆளுமையும் அப்படிப்பட்டவர் தானா அத்தை? ஜோ: ஆமாம், சிலருடைய வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கிறது... அப்படிப்பட்ட ஒரு வீரமங்கைதான் மணலூர் மணியம்மா. நகுலன்: அவர் என்ன செய்தார் அத்தை? ஜோ: நாகைப் பகுதியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர்களில் முக்கியமானவர். ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடியவர். ரதி: அந்தக் காலத்தில் ஒரு பெண் விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடினாரா? ஜோ: அதுதான் மணியம்மாவின் தனிச்சிறப்பு. அவர் பெண்களுக்காக மட்டுமல்ல. சாதி, வர்க்கம், வறுமை, உழைப்புச் சுரண்டல் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகப் போராடினார். சமத்துவத்துக்காகப் போராடினார். நகுலன்: அவர் எப்படி இருப்பார்? ஜோ: அவருடைய தோற்றமே அந்தக் காலத்தில் மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. மேல்பாக்கெட் வைத்த ஜிப்பாவைப் போன்ற ஒரு உடையைத் தானே வடிவமைத்து அணிந்துகொள்வார். தோளில் துண்டு. கதர் வேட்டி. ஆண்களைப் போல கிராப் வெட்டிய தலை. தோளில் ஒரு பை. காலில் செருப்பு. கையில் குடை. அந்தக் குடைக்குள் தன்னுடைய பாதுகாப்புக்காக ஒரு குறுவாளையும் வைத்திருப்பார். நகுலன்: குடைக்குள்ளேயா? ஜோ: ஆமாம். நகுலன்: குடை மழைக்காகவா, குறுவாளுக்காகவா? ரதி: இரண்டுக்கும் போல! ஜோ: மழைக்கு குடை. தேவையானால் தற்காப்புக்கு குறுவாள்! ரதி: கிராப் வெட்டிக்கொண்டு ஆண்கள் போல் உடை அணிவதெல்லாம் பெரிய விஷயமா அத்தை? இப்போது நிறையப் பேர் அப்படித்தானே இருக்கிறார்கள்? ஜோ: அந்தக் காலம் வேறு இந்த காலம் வேறு அந்த காலத்தில் பெண்கள் அப்படி தன் உடையை மாற்றிக் கொள்ள முடியை வெட்டிக்கொள்ள மிகப்பெரிய தைரியம் வேண்டும். இன்னும் கேளு. ஒற்றைக் காளை பூட்டிய வண்டியையும் அவரே ஓட்டிச் செல்வார். ரதி: வாவ்! நகுலன் : அப்போது பெண்கள் வண்டி ஓட்ட முடியாதா? ஜோ: வீட்டை விட்டு வெளியே வரவே அனுமதி வேண்டும். அப்படி என்றால் வண்டி ஓட்டுவது எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது… அப்படிப் பட்ட காலத்தில் தான் அவர் வண்டி ஓட்டினார்…அது மட்டுமல்ல.. அவர் கீழத்தஞ்சை முழுவதும் நிலவுடைமையாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு தோழமையின் அடையாளமாகவும் இருந்தார். நகுலன்: அத்தை, அவருடைய உண்மையான பெயர் மணியம்மாவா? ஜோ: இல்லை. அவருடைய இயற்பெயர் வாலாம்பாள். மணி என்பது செல்லப்பெயர். பின்னாளில் அதுவே மணியம்மா என்ற பெயராக நிலைத்துவிட்டது. ரதி: என் பெயர் ரதி தான். ஆனால் வீட்டில் பாப்பா என்றும் குட்டி என்றும் செல்லமாக அழைக்கிறார்கள் அதுபோல! ஜோ: ஹ ஹ ஹ அது போல தான். நகுலன்: சிறுவயதிலேயே நிறைய படித்திருப்பாரோ? ஜோ: இல்லை. சனாதனமான பிராமணக் குடும்பத்தில், மூன்றாம் தாரத்தின் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். அவருக்குப் பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ரதி: பத்து வயதிலேயே? ஜோ: ஆமாம். நாகையைச் சேர்ந்த செல்வந்தரும் வழக்கறிஞருமான குஞ்சிதபாதத்துக்கு இரண்டாம் தாரமாக பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நகுலன்: பத்து வயது குழந்தைக்கு திருமணம்? இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு..! ஜோ: ஆமாமா!. அப்போது குழந்தைத் திருமணம் சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. பெண்களின் வாழ்க்கை அவர்களுடைய விருப்பப்படி அமையவில்லை. ரதி: அப்படியென்றால் மணியம்மாவின் வாழ்க்கை எப்படி மாறியது? ஜோ: திருமண வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த முக்கியமான ஒன்று ஆங்கிலக் கல்வி. கிறித்துவ திருச்சபையைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். நகுலன்: ஆங்கிலம் கற்றுக்கொண்டதாலேயே அவர் போராளியாக மாறிவிட்டாரா? ஜோ: ஆங்கிலம் என்பது ஒரு மொழி அவ்வளவுதான். ஆங்கிலக் கல்வி மட்டும் காரணமல்ல. அந்தப் பெண்மணி அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார். சீர்திருத்தக் கருத்துகளையும் அறிமுகப்படுத்தினார். சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் கற்றுக்கொடுத்தார். ரதி: அதுதான் அவருடைய மாற்றத்துக்குக் காரணமா? ஜோ: ஆமாம் ரதி. கல்வி என்பது எண்ணையும் எழுத்தையும் தெரிந்து கொள்வதல்ல... ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கேள்வி கேட்க வைப்பதும் கல்வியின் பணி தான்.. நகுலன்: பிறகு என்ன நடந்தது? ஜோ: தனது 27-வது வயதில் மணியம்மா கணவரை இழந்தார். அதன் பிறகு மணலூரில் இருந்த தாய் வீட்டுக்குத் திரும்பினார். ரதி: அப்போது விதவைகளுக்கு மொட்டை அடித்து விடுவார்களே? ஜோ: ஆமாம். மிகவும் கொடுமையானது. மணியம்மாவும் ஒரு சராசரி பிராமண விதவைப் பெண்ணைப் போல மொட்டை அடித்து, எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நகுலன்: அவர் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்? ஜோ: அவர் கற்ற ஆங்கிலமும், சீர்திருத்தக் கருத்துகளும் அவரை அமைதியாக இருக்க விடவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் தொடங்கினார். அப்போது காந்தியடிகள் தஞ்சைக்கு வந்திருந்தார். உறவினர் ஒருவரின் மூலம் காந்தியைக் காணச் சென்றார். அந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நகுலன்: அரசியலில் இறங்கினாரா? ஜோ: ஆமாம் ஒருமுறை காந்தியைச் சந்தித்தார்.அந்தச் சந்திப்பு அவரை முழுநேர அரசியல் பணிக்குள் இழுத்துச் சென்றது. சமூகத்தையும் அரசியலையும் வேறொரு பார்வையில் பார்க்கத் தொடங்கினார். ரதி: அதன்பிறகுதான் அவர் தன் தோற்றத்தை மாறினாரா? ஜோ: முதலில் மொட்டைத் தலையை மாற்றி கிராப் வைத்துக்கொண்டார். புடவைக்குப் பதிலாக ஆண்கள் அணியும் வேட்டி, அரைக்கை ஜிப்பா போன்ற உடைகளை அணியத் தொடங்கினார். செருப்பு அணிந்தார். குடை எடுத்துக்கொண்டார். நகுலன்: அதாவது அவர் ஆணுடைகளுக்கு மாறியது ஒரு சமூக எதிர்ப்பு தான் இல்லையா அத்தை? ஜோ: ஆமாம். நான் பெண் என்பதற்காக என் உடையையும் வாழ்க்கையையும் மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற சுயமரியாதையின் வெளிப்பாடாக அது இருந்தது. ரதி: அந்தக் காலத்தில் இதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? ஜோ: எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சனாதனவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் மணியம்மா யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். காங்கிரஸின் முக்கியமான கொள்கைகளில் மதுவிலக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவையும் இருந்தன. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்தவர்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மணியம்மா பார்த்தார். ரதி: அதற்கு அவர் என்ன செய்தார்? ஜோ: தாழ்த்தப்பட்ட மக்களோடு நெருக்கமாகப் பழகினார். அவர்களின் வாழ்க்கையை நேரில் அறிந்தார். விவசாயத் தொழிலாளர்களின் கூலி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிட்டார். தன்னுடைய சொந்த நிலத்தில் பணியாற்றிய ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான கூலி கொடுக்கத் தொடங்கினார். அவர்களைப் பாதுகாத்தார். ரதி: அதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்களே? ஜோ: அவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டிக்கொண்டிருந்த சூழலில் மணியம்மா நியாயமான கூலி கொடுத்தது அவர்களுக்கு இடையூறாக இருந்தது. அதனால் அவருக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் தனது நிலங்களையும் வீட்டையும் இழந்தார். சிறிய வாடகை வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதி: அப்படியும் கூட தொடர்ந்து போராடினாரா? ஜோ: ஆமாம். அந்த நேரத்தில் பொதுவுடைமை இயக்கம் அவரை ஈர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தீவிரமாகப் பணியாற்றினார். கீழத்தஞ்சை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மணியம்மா கட்சி அல்லது மணியம்மாவின் செங்கொடி கட்சி என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரதி: அவ்வளவு பெரிய செல்வாக்கா? ஜோ: ஆமாம். விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும், போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். தொழிற்சங்கங்கள் உருவாக்குவதிலும், விவசாய மாநாடுகள், பேரணிகள் நடத்துவதிலும் தீவிரமாகச் செயல்பட்டார். நகுலன்: அது சரி சிலம்பம் எதற்குக் கற்றார்? ஜோ: தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக்கொண்டார். சைக்கிள் ஓட்டவும் தானே கற்றுக்கொண்டார். ரதி: அந்தக் காலத்தில் ஒரு பெண் தனியாக சைக்கிள் ஓட்டுவது பெரிய விஷயம்தானே? ஜோ: ஆமாம். தன்னுடைய பயணங்களுக்காகச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார். யாரையும் சார்ந்து இருக்காமல் தன் வேலைகளைத் தானே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரதி: அவர் சிறைக்குச் சென்று இருக்கிறாரா? ஜோ: ஆமாம். அவரது காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. பல முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மணியம்மாவும் கைது செய்யப்பட்டு கடலூர், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். நகுலன்: கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது அத்தை. அவரின் இறப்பு எப்படி ஏற்பட்டது? ஜோ: பூந்தாழங்குடி என்ற கிராமத்திலிருந்து ஒரு பண்ணை விவகாரத்தைத் தீர்க்க மணியம்மாவை அழைத்தனர். விவசாயத் தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, விவசாயிகள் விட்டுக்கொடுக்காமல் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்று உரையாற்றினார். அங்கிருந்து திருவாரூர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அங்கே ஒரு பண்ணையாரின் வளர்ப்பு விலங்காக இருந்த ஒரு கலைமான் பாய்ந்து வந்து அவரைத் தாக்கியது. அதில் மணியம்மா உயிரிழந்தார் என்று அரசு ஆவணங்கள் கூறுகின்றன. நகுலன்: அரசு ஆவணங்கள் கூறுகிறது என்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன அத்தை? ஜோ: அதுதான் இன்றுவரை தெளிவாகத் தீர்க்கப்படாத கேள்வி. ரதி: வேறு கருத்தும் இருக்கிறதா? ஜோ: இருக்கிறது. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் 1980களில் பாதையில் பதிந்த அடிகள் என்ற நாவலுக்காக கள ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் இந்த மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. நகுலன்: அந்தத் தகவல் யாரிடமிருந்து கிடைத்தது? ஜோ: பிணவாசலைச் சேர்ந்த நாகப்பன் என்ற விவசாயி கிடைத்த தகவல். ஒரு பண்ணையார் கலைமானை வளர்த்துக்கொண்டிருந்ததாகவும் அந்த மானைப் பராமரித்த ஒரு பையன் அதன் மூக்கில் குச்சியை நுழைத்து அதை வெறியேற்றி மணியம்மா நடந்து வந்த திசையில் ஏவியதைத் தாம் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ரதி: அப்படியென்றால் அது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதுகிறார்களா? ஜோ: ஆம். ஆனால் அந்தப் படுகொலை இதுவரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. அரசு ஆவணங்களில் அது மான் தாக்கிய விபத்து என்றே உள்ளது. நகுலன்: இவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்ந்த ஒருவரைப் பற்றி வெளியில் ஏன் தெரியவில்லை? ஜோ: அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி. குறிப்பாக கட்சி அரசியலின் வரலாற்றை ஆண்மைய மையமாகப் பதிவு செய்தபோது, பெண்களின் பங்களிப்பு பல நேரங்களில் இருட்டடிப்புக்குள்ளானது. ரதி: மணியம்மாவை அந்த மக்கள் கூட மறந்து விட்டார்களா? ஜோ: இல்லை. படிக்கத் தெரியாத ஏழை எளிய விவசாய மக்கள்கூட அவருடைய பெயரை நாட்டுப்புறப் பாடல்களில் தலைமுறைகளாகப் பாடி வந்திருக்கிறார்கள். நகுலன்: என்ன பாடல்? ஜோ: மணியம்மாவைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களில், அவர் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்து அநியாயத்துக்கு எதிராகக் கேள்வி கேட்பவர், ஏழை மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த வந்தவர் என்ற உணர்வு வெளிப்படும். ரதி: அதாவது புத்தகங்களில் இல்லாவிட்டாலும் மக்களின் நினைவில் இருக்கிறாரே? ஜோ: சரியாகச் சொன்னாய். வரலாறு புத்தகங்களில் மட்டும் இருப்பதில்லை. மக்களின் நினைவிலும், பாடல்களிலும், போராட்டங்களிலும் இருக்கிறது. நகுலன்: அத்தை, மணியம்மாவைப் பற்றி கேட்ட பிறகு ஒரு விஷயம் புரிகிறது. ஜோ: என்ன? நகுலன்: சிலம்பம் கற்றுக்கொள்வது தற்காப்புக்காக மட்டும் இல்லை போல. ரதி: ஆமாம். தன்னம்பிக்கைக்கும். ஜோ: அதுதான். மணியம்மா சிலம்பம் கற்றது மட்டும் முக்கியமல்ல. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் என்ற சுயமரியாதையோடு வாழ்ந்தது முக்கியம். ரதி: பத்து வயதில் திருமணம். 27 வயதில் கணவர் இறப்பு. அதன்பிறகு கல்வி, கேள்வி, அரசியல், விவசாயத் தொழிலாளர்களின் உரிமை, சிறை, போராட்டம்... இவ்வளவு மாற்றமா? ஜோ: ஆமாம். ஒரு மனிதரின் வாழ்க்கை அவருக்குக் கிடைத்த சூழ்நிலையால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அந்தச் சூழ்நிலையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் முக்கியம். நகுலன்: அப்படியென்றால் மணியம்மாவின் மிகப்பெரிய ஆயுதம் என்ன? ஜோ: கேள்வி கேட்கும் துணிவு. சுயமரியாதை. உழைக்கும் மக்களுடன் நிற்கும் மனம். அநியாயத்தை எதிர்க்கும் தைரியம். நகுலன்: அத்தை, ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த பெண், பத்து வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், இளம் வயதில் விதவையான பெண், அதற்குப் பிறகு ஒரு போராளியாக மாறியிருக்கிறார். ஜோ: அதுதான் மணலூர் மணியம்மாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் மிகப்பெரிய செய்தி. ரதி: என்ன செய்தி? ஜோ: ஒரு பெண்ணின் வாழ்க்கையை அவள் பிறந்த குடும்பம் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவள் மீது சமூகம் கட்டிய கற்பிதங்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவளுடைய கேள்விகளும், சிந்தனையும், செயல்களும் அவளுடைய வாழ்க்கையை மாற்ற முடியும். நகுலன்: அப்படியென்றால் நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களிலும் அப்படிப்பட்ட போராளிகள் இருக்க முடியுமா? ஜோ: ஏன் முடியாது? நம் வீட்டில் இருக்கும் பெண்களிலும், பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களிலும், அலுவலகத்தில் இருக்கும் சக தோழிகளிலும், நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் பெரும் ஆளுமை இருக்கலாம். ரதி: அந்த ஆளுமையை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ஜோ: முதலில் அவர்களைத் தடுக்காமல் இருக்க வேண்டும். பெண்களுக்குள் இருக்கும் போராளி வெளியே வரும்போது, ஆண்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். ரதி: என்ன? ஜோ: குறுக்கே நிற்காமல் இருப்பது. நகுலன்: ரதி இப்போ சிலம்பம் கத்துக்கறதுக்கு ரெடியா? ரதி: ரெடி. நகுலன்: ஆனால் ஒரு விஷயம்... ரதி: என்ன? நகுலன்: குடைக்குள்ள குறுவாள் வைக்க வேண்டாம்! ஜோ: மணியம்மாவைப் புரிந்துகொண்டால், குறுவாளைத் தேட வேண்டிய அவசியமே இல்லாமல் தைரியமாக வாழக் கற்றுக்கொள்வாய். ரதி, நகுலன்: நன்றி அத்தை! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • கோமாளி ராஜா

    காலை நேரம் வந்ததுமே அரண்மனை வாசல் சங்கு முழக்கம் ஒலித்தது. "அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த நம் மாமன்னன் - கோணாங்கி நாடு திரும்பி தேரில் வந்து கொண்டிருக்கிறார்" என்று குதிரையில் அறிவிப்பு சொல்லியபடியே காவலாளி செல்ல, பின்னால் குதிரையில் படை வீரர்கள் செல்ல, அழகிய புதிய அரபு நாட்டு தேரில் மன்னர் திரையை விளக்கி மக்களை கவனித்து கையசைத்தபடியே வந்தார். சாலையில் இருபுறமும் நின்றிருந்த மக்கள், "வணக்கம்...வணக்கம்" என்று சந்தோஷம் இல்லாமல் வணங்கி நின்றார்கள். ஆனால் தனது புதிய தேரைத் தான் மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்று நினைத்து வந்தார். சிலர் கிழிந்த உடையுடன் கூட்டத்தில் நிற்பதை மன்னர் கண்டுகொள்ளாமலே வந்தார். உடன் அமைச்சர் நெடுமுடியும் அமர்ந்திருந்தார். "அரசே, மக்களை கவனித்தீர்களா?", என்றார் அமைச்சர் நெடுமுடி. அவர்களை நோக்கி மகிழ்ச்சியாக கையசைத்தபடி, " எல்லாரும் என்னை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எனக்கு பரிசாக அரபு நாட்டு மன்னன் அக்கிம் கொடுத்த தேரையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். "நன்றாக பாருங்கள் அரசே! அவர்கள் உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்களா? இல்லை சோகமாக வரவேற்கிறார்களா ?" என்றார் அமைச்சர். எதையும் கண்டு கொள்ளாதது போல, "ஏன் அவர்கள் என்னை சோகமாக வரவேற்க வேண்டும் ?" என்று கேள்வி கேட்டார். "மன்னா, அரபு நாட்டு பயணம் முடிந்து வந்த உங்களிடம் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணி விட வேண்டாம். கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் தண்ணீர் பிரச்சனை, அதனால் விவசாயமும் இல்லை, போதிய இருப்பு தானியங்களும் இல்லாமல் போனதால், கடும் பஞ்சம் நிலவ தொடங்கியுள்ளது. நிலைமையை சரி செய்ய, நம் பக்கத்து நாட்டிடம் தண்ணீர் கேட்டும், அவர்கள் அணையில் தடுப்பு போட்டு விட்டார்கள். அணையில் இருந்து தண்ணீரை அனுப்பவில்லை .நம் நாடு பெரும் வறட்சிக்கு உள்ளாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. அரண்மனையிலும் இப்பொழுது வறட்சி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலைமை கை மீறி போய்விட்டது." அமைச்சர் தொடர்ந்தார், "இந்த நிலைமையை சரி செய்யாமல், நீங்கள் உல்லாசமாக அரபு நாட்டுக்கு சென்று வந்தது மக்களுக்கு சற்று பிடிக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நீங்கள் குதூகலமாக இருப்பதாக அனைவரும் உங்களை விமர்சிக்கிறார்கள். அதுவும் நீங்கள் முற்காலத்தில் ஒரு நாடக நடிகர். அரசி உங்களின் நடிப்பை பார்த்து உங்களை மணந்து கொண்டதால், கிடைத்த மன்னர் பதவியை வைத்து, மக்களை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று பல பெரும் வணிகர்கள் கூட விமர்சிக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை உங்களை 'கோமாளி அரசன்' என்று கூட உங்களை வர்ணிக்கிறார்கள்" என்று சற்று சிரித்தவாறு நெடுமுடி சொன்னவுடன், சட்டென்று கோபப்பட்டு, "மக்கள் கூறியதா?, இல்லை மனத்திற்குள் நீர் தேக்கி வைத்ததை என்னிடம் மக்கள் கூறுவதாக கூறுகிறாயா ?" என்றார். " தங்களை நான் ஏன் தரகுறைவாக சொல்ல போகிறேன் ?, மக்கள் சொல்வதை தான் நான் சொல்கிறேன் மன்னா!" என்றார். "அப்படியென்றால் என்னை 'கோமாளி ராஜா' என்று சொல்லி திரியும் ஆட்களை பிடித்து கைது செய்து சிறையில் அடையுங்கள்" என்றார். "மன்னா!, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், இது போன்று செய்தால் மக்கள் நம் மீதும், ஆட்சி மீதும் மிகுந்த கோபம் அடைவார்கள்" என்றார் அமைச்சர். கடுகடுப்பின் உச்சத்தில், "கள்ளி வள்ளி" என்றார் மன்னர். "அப்படி என்றால் என்ன மன்னா ?" என்று குழப்பத்தில் அமைச்சர் கேட்க, "அது அரபு சொல். அதற்கு அர்த்தம் போகப் போக புரியும்" "மன்னா...." என்றவாறு இழுத்த அமைச்சரின் பேச்சை நிறுத்தி, "சற்று பொறு. இப்போது தான் பயணம் முடித்து வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஓய்வு தேவை. பின் மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையை போக்க ஆலோசனை செய்யலாம்" என்று மன்னர் வெறுப்பாக சொன்னவுடன், அமைச்சரும் அமைதியானார். மன்னன் அரண்மனைக்கு வந்து தன் மனைவி ராணி லட்சுமி, மகன்களை பார்த்து மகிழ்ந்தார். வெகு நாட்களுக்கு பிறகு அவர்களை பார்ப்பதால் சற்று நேரம் அரபு நாட்டு பயணத்தில் நடந்தவற்றை மனம் விட்டு பேசினார். ஆனாலும் ஓய்வெடுக்க இயலாமல், அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் உண்மையாகவே தன்னை, 'கோமாளி ராஜா' என்று தான் அழைக்கிறார்களா ?, இல்லை அமைச்சரின் சூழ்ச்சியா ? என்ற குழப்பம் தான். "சரி குழப்பத்திற்கு தீர்வு காண்போம்" என்று தீர்மானித்து, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் செல்ல குதிரையில் ஏறி புறப்பட்டார். சில தூரம் பயணம் செய்து அருகிலிருந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். குதிரையை சாவடி பக்கத்தில் கட்டி வைத்து, ஊருக்குள் நடைபயணமாக சென்றார். மக்கள் கூடும் இடங்களான கோவில், சந்தை என சுற்றினார். அப்போது பூங்கா வாசலில் பலர் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக சென்று நின்று கவனித்தார். அதில் அவர்கள் நாட்டு சமாசாரங்களை பேசினார்கள். அப்போது மன்னர் தெரியாமல் ஒருவரின் காலை மிதித்தார். உடனே அவன் "அறிவு கெட்டவனே, கண் இல்லாதவனை" என்று திட்டி கொண்டிருக்க, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னர் கூறியும் அடிப்பதற்கு கையை ஓங்கி பின் அடிக்காமல் விட்டு விட்டு சென்றான். ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த மன்னருக்கு மீண்டும் கோபம் அதிகமானது. "நான் மாறுவேடத்தில் இருப்பதால், என்னை யாரென்று உனக்கு தெரியவில்லை" என்று மனதில் நினைத்தவாறு சென்றார். அந்தக் கூட்டத்தில் ஒருவர், "கோமாளி ராஜாவின் அடுத்த பயணம் எங்கவோ?" என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது "சத்தமாக பேசாதே நண்பா, காலையில் தான் ஒரு செய்தி வந்தது. 'கோமாளி ராஜா' என்று மன்னரை யாராவது கிண்டலாக சொன்னால் உடனே அவர்களை கைது பண்ணி பாதாள சிறையில் அடைக்கிறார்களாம். அதனால அமைதியாக இருங்கள்" என்று ஒருவன் சொல்லி கொண்டிருக்க, ஓரத்தில் இதை கேட்டு கொண்டிருந்த மன்னனுக்கு ஒரே இறுமாப்பு ஏற்பட்டது. "மக்கள் பயந்து இனிமேல் யாரும் 'கோமாளி ராஜா' என சொல்ல மாட்டார்கள்" என்று அங்கிருந்து புறப்பட்டு சந்தை பகுதிக்கு வந்தார். அங்கு குதிரையும் ஓரிடத்தில் நின்றது. குதிரையில் அமர்ந்தவாரே மன்னன் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க, சாலையோரத்தில் வெளிச்சத்திற்காக எரிபந்தங்களில் நெருப்பை பற்ற வைத்து ஏற்ற, நெருப்பு சிதறிஅருகில் நின்றிருந்த குதிரை முகத்தின் மீது பட்டது. சட்டென்று குதிரை தனது முன் கால்களைச் சட்டென்று தூக்கியது, மன்னர் கீழே விழுந்து கல்லில் தலை மோதி மயங்கிய நிலையில் கிடந்தார். சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு, பக்கத்தில் இருந்த கோவில் மண்டபத்தில் உட்கார வைக்க, மன்னருக்கோ தண்ணீர் தாகம் ஏற்பட்டு, "தண்ணீர்...தண்ணீர் கொடுங்க" என்று பரிதாபமாக கேட்டார். ஒருவன் தன் குடுவையைப் பார்த்தான். அது தண்ணீர் இல்லாமல் காலியாக இருந்தது. "என்னுடைய குடுவையில் தண்ணீர் இல்லை. இங்கு வேறு யாரிடமும் தண்ணீர் இல்லை. அந்த கடையில் தண்ணீர் இருக்கும். ஆனால் ஒரு குவளைத் தண்ணீர் ஒரு ரூபாய் சொல்லுவாங்க. எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்றார். மன்னனின் தலையில் லேசாக இரத்தம் வந்தது. வயதான மூதாட்டி அதை துடைத்து விட்டு, தன் சுருக்கு பையில் இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து, "இந்தா! தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல், நான் சாப்பிட்டு என்ன பண்ண போறேன். இந்தாப் புடி" என்று காசை அவனிடம் கொடுத்து தண்ணீர் வாங்கி வரச் சொன்னாள். அவரும் வேகமாக சென்று ஒரு குவளைத் தண்ணீர் வாங்கி வந்து மன்னருக்கு கொடுக்க அதைக் குடித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக அமர்ந்தார். அந்த பகுதியில் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருப்பதையும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அளவுக்கு தன்னுடைய ஆட்சி நடைபெறுவதையும் எண்ணி மன்னர் மனதிற்குள் வருந்தினார். யாரென்று தெரியாத நபருக்காக தண்ணீர் வாங்கி வந்தவரையும், அதற்கு பணம் கொடுத்து உதவிய அந்த மூதாட்டியைப் பார்த்தும் மன்னர் கையெடுத்து கும்பிட்டார். "சாப்பிட்டியா" என்று மூதாட்டி கனிவாக கேட்க மன்னரின் கண்களோ கலங்கியது. அருகில் இருந்த நபர் தனது சோற்று பொட்டலத்தை சாப்பிடக் கொடுத்தார். மன்னரும் அதை வாங்கி, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தார். "யாரப்ப நீ ?, ஊருக்கு புதுசா ?" என்று கேட்டாள் அந்த மூதாட்டி. "ஆமாங்க" என்று சாப்பிட்டபடியே சொல்லி சுற்றி பார்த்தார். அந்த இடத்தில் பலர் ஆங்காங்கே படுத்துக் கிடந்தனர். "என்னப்பா அப்படி பார்க்குற" என்றாள். "பாட்டி, உங்களுக்கு வீடு இல்லையா ?" என்றார் மன்னர். "இருக்குப்பா, நான் இங்க பொருள் விற்பதற்காக வந்தேனப்பா, இரவு பொழுது ஆச்சுன்னு நான் இங்கேயே தங்கிட்டேன்" என்றாள் பாட்டி. மூதாட்டியைப் போலவே பலரும் வெவ்வேறு தொழில் செய்வதற்காக வந்து இரவு அங்கு தங்கியிருந்தனர். மன்னரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, மூதாட்டியின் அருகிலேயே அமர்ந்தார். அப்போது பக்கத்தில் ஒருவர், மற்றவரிடம் "என்ன பண்ண பொழப்புக்காக நான் இப்படி மாறி மாறி அலைஞ்சுகிட்டு இருக்கேன். எல்லாம் விலைவாசி ஏறிடுச்சு. தண்ணி பஞ்சம்.அதனால விவசாயம் பண்ண முடியல. நானும் வேற வேற பக்கம் வேலை தேடி போயிட்டு இருக்கேன். ஒரு கோமாளி அரண்மனைக்கு சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. மாறாக அரண்மனை வட்டரங்கு (சர்க்கஸ்) கூடாரமாகிவிடும்ன்னு பழமொழி சொல்ற மாதிரி இருக்கு நம்ம மன்னர் ஆட்சி " என்று வருத்தமாக சொல்லி கொண்டிருக்க மன்னர் அதை கேட்டு வருந்தினார். "ஆமாங்க இப்ப கோமாளி ராஜான்னு சொன்னா கூட கைது பண்றாங்க. அதனால அந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமா இருக்கு. மக்களுக்கு நல்லது பண்ணினா, அந்த பேரு மாறிட்டு போகுது" என்று கிண்டலாக இன்னொருவர் சொன்னார். "தலைமுறை தலைமுறையா, மன்னர் வம்சம் இல்லாம, நம்மில் இருந்த மனிதன், நாடக நடிகராக இருந்து இப்போ மன்னர் ஆகிருக்காரு. ஒவ்வொரு நாடகத்திலேயும் நல்லது செய்ற மாதிரி தான் நடிப்பாரு. நிஜத்திலும் கண்டிப்பா நல்லது செய்வார். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா" என்று அவர்களிடம் மூதாட்டி சொன்னார். மூதாட்டி சொன்னதைக் கேட்டு மன்னருக்கு மனதில் ஒரு உத்வேகம் உண்டானது. அந்த மூதாட்டியை பார்த்து, "எனக்கு மிகவும் பெரிய வேலை வந்துவிட்டது. மிகப் பெரிய பொறுப்பு எனக்கு இருப்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். அந்த பொறுப்பை முடித்துவிட்டு நான் ஓய்வெடுக்க பார்க்கிறேன்" என்று மூதாட்டியை வணங்கி விட்டு, தனது குதிரையை லேசாக தட்டிக் கொடுத்து, ஏறி அரண்மனைக்கு புறப்பட்டார். குதிரையில் செல்லும் போது, அந்த மூதாட்டியின் வார்த்தை மன்னனின் மனதை ஏதோ செய்தது. விடியற்காலை பொழுதில் அரண்மனை வந்து சேர்ந்தார். பக்கத்து நாடு, கரிநாடக மன்னன் விஷ்ணு வர்மனின் பிறந்தநாள் விழாவிற்கு கோணங்கி மன்னனையும் அழைத்திருந்தார்கள். அந்த விருந்திற்கு மன்னனும் சென்றார். "பக்கத்து நாட்டு மன்னன் தான், அணையில் நீரை தடுத்து தண்ணீர் வரவிடாமல் செய்துள்ளார். அவர் அழைப்புக்கு நம் மன்னரும் சென்றுள்ளார்..!" என்ற செய்தி நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது. மன்னன் கோணங்கிக்கு கரிநாடாக நாட்டில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. 64 வகையான உணவு பரிமாறி விருந்து வழங்கப்பட்டது. மன்னர் கோணங்கியும் மகிழ்ச்சியாக விருந்து உணவை உற்சாகமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் சற்று வேகமாக சாப்பிட்டதாலோ என்னவோ விக்கல் ஏற்பட ஆரம்பித்தது. பதறிய மன்னன் விஷ்ணு, "அடடே மன்னருக்கு தண்ணீர் கொடுங்கள்" என்றார். மூன்று நான்கு வேலைக்காரர்கள் குடுவையில் தண்ணீரோடு அவர் முன்னால் வந்து நின்றார்கள். ஆனால் கோணங்கி தண்ணீரை குடிக்காமல் விக்கி கொண்டே இருந்தார். "தண்ணீர் ஏன் குடிக்காமல் இருக்கிறார்" என்று விஷ்ணுவுக்கு கோணங்கியின் செயல் ஒன்றும் புரியாமலே இருந்தது. "விருந்து போதும் நண்பா" என்று விக்கியபடியே கூறிவிட்டு வெளியில் கோணங்கி வந்தார். விஷ்ணுவிற்கும், அவரது அம்மாவிற்கும் பெரும் மனக்கசப்பு ஆகியது. "விருந்துக்கு வந்தவர், விக்கல் எடுத்தும் நம் நாட்டு தண்ணீரை குடிக்காமல் செல்கிறாரே" என்று அந்த தாய் புஷ்பா அம்மாள் கோணங்கியை நிறுத்தி, "தண்ணீர் இருந்தும் ஏன் குடிக்காமல் செல்கிறீர்கள்?" என்றாள். "அம்மா, எனக்கு விக்கல் எடுக்கிறது. நீங்கள் தண்ணீர் கொடுத்து விடுவீர்கள். ஆனால் என் நாட்டு மக்கள் தண்ணீர் இல்லாமல் எத்தனையோ கவலைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி தண்ணீர் கொடுப்பது?, நீங்கள் அணையில் தண்ணீர் விடாமல் தடுத்து, அங்கு பெரும் துன்ப சூழல் நிலவிக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அம்மா உங்கள் தண்ணீரை குடிக்க முடியும்?, நான் பொறுத்துக் கொண்டு என் நாட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று வருத்தமாக கோணங்கி சொன்னது. விஷ்ணுவிற்கு தூக்கி வாரிப் போட்டது. "என் நாட்டு மக்களின் எதிர் காலத்திற்காகதான் தண்ணீரைத் தடுத்தேன். அதை எங்கள் நாட்டில் வேறு பகுதிக்கு திருப்பி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார் விஷ்ணு. "இயற்கை நமக்கு தந்த பெரும் கொடையை, என் தண்ணீர், உன் தண்ணீர் என்று நாம் பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு. தங்கள் நாட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தும் விளக்கு, எண்ணெய் பொருட்கள் எங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள். அதை நாங்கள் உங்களுக்கு தர மறுத்தால், உங்கள் நாடு இருளிலே மூழ்கிவிடும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. நட்போடு இருக்கிறோம்.. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம்" என்று விக்கியபடி கோணங்கி சொல்ல, "நான் பெரும் தவறு இழைத்து விட்டேன். நீங்கள் தண்ணீர் குடியுங்கள். இந்த கணம் முதல் உங்கள் நாட்டிற்கு தண்ணீர் பாயும். இனி அணையில் தண்ணீரை தடுக்கமாட்டேன்" என்று சொல்லியபடி, அமைச்சரிடம், தண்ணீரை திறந்து விட விஷ்ணு உத்தரவிட்டார். மன்னன் கோணங்கியும் மகிழ்ச்சியாக தண்ணீரை வாங்கி குடித்தார். விருந்தும் சிறப்பாக முடிந்தது. நடந்த இந்த மனக்கசப்பான விஷயத்திற்கு கோணங்கி, விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். பின் தான் அரபு நாட்டில் இருந்து கொண்டு வந்த பேரிச்சம் பழங்களை அவருக்கு கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். விஷ்ணு தன் நாட்டின் சிறந்த இனிப்புகளை அவருக்கு பரிசாக கொடுத்தார். நட்புறவாக இருவரும் கைக்குலுக்கிக் கொண்டு விடை பெற்றார் கோணங்கி. மூன்று நாட்கள் கழித்து அரண்மனை சங்கு ஒலித்தது. மன்னர் வந்து கொண்டிருக்கிறார் என அரண்மனை கதவு திறந்தது. பொது மக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்றார்கள். சந்தோஷத்தில் மன்னருக்கு வணக்கம் தெரிவித்தும், சிலர் கைகுலுக்கியும் வரவேற்றார்கள். அமைச்சர் நெடுமுடி, மக்களின் மகிழ்ச்சியை கண்டு திக்குமுக்காடினார். அமைச்சரை அழைத்து, "உடனே நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள் அனைத்தையும் தூர் வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நடுங்கள். முக்கியமாக பனை மரங்களை நடுங்கள் இதை துரிதப்படுத்துங்கள்" என்றார். நெடுமுடி மன்னரிடம், "மன்னா, கள்ளி வள்ளி என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் பிறகு சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள்" என்றார். சிரித்தவாரே, "அது இருக்கட்டும் விடுங்கள்" என்றார். கார்த்திக் கிருபாகரன் அபுதாபியில் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர். கணையாழி, குமுதம், தீராநதி போன்ற அச்சிதழ்களிலும், சொல்வனம், பதாகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 2019-இல் 'தீதும் நன்றும்' என்ற இவரது நாவலும், 2024-இல் 'ஒரு கோடி' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் புத்தகமாக வெளிவந்துள்ளன.

bottom of page