top of page

காணாமல் போன கடைசிப் பக்கம்

ree

சொல்லவே முடியாத துயரத்தில் இருந்தேன் நான். எப்போதும் எல்லோரோடும் சேர்ந்தே இருப்பதுதான் என் வழக்கம். ஆனாலும் இப்போதெல்லாம் யாருடனும் சேர்ந்திருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சுவர் ஓரத்தில் சாய்ந்துகொண்டு, ‘உம்’மென்று உட்கார்ந்து இருக்கிறேன்.   


காற்று மெதுவாக வீசத் தொடங்கியது.    மேசை மேலே, தரையில் இருந்தவை எல்லாம் லேசாக உடலைச் சிலிர்த்துக்கொண்டன. எனக்கு மட்டும் ஏனோ அவ்வாறு இருக்கப் பிடிக்கவில்லை. உடலை இறுக்கமாக்கிக்கொண்டு, அசையாமல் இருந்தேன்.   


இந்த வீட்டிற்கு நான் வந்து முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். நல்லசிவன் தான் முதன்முதலாக இந்த வீட்டிற்கு என்னை அழைத்து வந்தார்.     என்னை அழைத்து வந்தவர் மேசை மேல் என்னை வைத்துவிட்டு, அவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எனக்கோ ஏக்கமாக இருந்தது.  ‘யாராவது என்னை எடுங்களேன்...’ என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது.   


என்ன கெஞ்சி, என்ன செய்வது? அவரவர் வேலை அவரவர்களுக்கு. வீட்டில் யாரும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.    திடீரென்று ஒரு நாள் நல்லசிவன் என்னைக் கையில் எடுத்தார்.


அப்படியே என்மேல் பார்வையை ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை அப்படியே எனக்குள் உள்ளிழுத்துக் கொண்டேன். சில மணி நேரத்திற்குள் எனக்குள்ளேயே கரைந்துபோனார். காலை, மாலை, இரவு என எப்போது நேரம் கிடைத்தாலும் என்னிடமே தஞ்சம் அடைந்தார்.   


சில வெளியூர்ப் பயணங்களுக்கும் அவர் கூடவே நானும் போனேன். அவர் தோளில் மாட்டி இருந்த ஜோல்னா பைக்குள் நான் இருந்தேன். சில நிமிடங்கள் கிடைத்தாலும் உடனே என்னை எடுத்துக்கொள்வார்.    “நேரமாச்சு... சாப்பிட வாங்க..!” என்று அழைத்தாலும் உடனே போக மாட்டார்.    “இதோ... வர்றேன்...” என்று சொல்வார்.


சில நிமிடங்களாவது என்னோடு தான் இருப்பார். அவரது ஆர்வம் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.    என்னை மொத்தமாக அவர் உள்வாங்கிக்கொண்ட அந்த நாள் என் நினைவில் இன்னமும் இருக்கிறது.    மே-1. காலையிலேயே மே தினப் பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிப்போனார் நல்லசிவன்.    கூட்டம் முடிந்து, மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டார்.


ஒரு குட்டித் தூக்கம் போடப் போகிறார் என்று நானும் நினைத்தேன். ஆனால், என்னைக் கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார்.    மாலை 4 மணி... 5 மணி... 6 மணி, இரவு 7 மணி... சரியாக இரவு 7.30 மணிக்கு என்னை முழுவதுமாக முடித்தார். என்னை மூடும்போது அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்தக் கலங்கிய கண்களில் ஒளி தெரிந்தது.   


சற்றுநேரம் என்னை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். எனக்கு அது மிகவும் இதமாக இருந்தது. திரும்பவும் என்னை எடுத்து, முகத்துக்கு முன்னே தூக்கிப் பிடித்தார். அப்படியே அருகே கொண்டுசென்று, ஒரு முத்தம் வைத்தார்.


என் உடல் சிலிர்த்துப்போனது. நான் பிறந்த பயனை அடைந்த உணர்வு எனக்கு உண்டானது. அந்த நாளை இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பாக இருக்கும்.     நல்லசிவனுக்குத் திருமணம் ஆனது. வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது.


ஒருநாள் தனது மனைவி பார்வதியைக் கூப்பிட்டார். என் அருகே இருவரும் வந்தனர். என்னைக் கையில் எடுத்தார். பார்வதி கையில் என்னைக் கொடுத்தார்.    “எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இந்த உலகமே இப்படித்தான் என்று நான் மனம் உடைச்சு இருந்தேன்.


எனக்குள் நம்பிக்கையை விதைச்சது. என்னோட ஆத்மார்த்தமான நல்ல நண்பன். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீயும் இதோடு இரு..!” என்று சொன்னார் நல்லசிவன்.    பார்வதிக்கோ வீட்டு வேலைகள் ஏராளமாய் காத்திருந்தன.    


காலையில் 5 மணிக்கு எழுந்து விடுவார். வாசல் பெருக்குவது, கோலம் போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தேநீர் போடுவது, காலை உணவுக்காகச் சமைப்பது, பிறகு துணி துவைப்பது, மதிய உணவுக்குச் சமைப்பது... என நாள் முழுக்கவே அவருக்கு ஓயாத வேலைதான்.    பல நாள்கள் ஆகியும் அவரது கவனம் என் பக்கம் திரும்பவேயில்லை.


அன்றொரு நாள். பார்வதியிடம் நல்லசிவன் கேட்டார்;        “நான் உன்கிட்டே ஒன்னு கொடுத்தேனே... அதைப் பாத்தியா..?”    இப்படிக் கேட்பார் எனப் பார்வதி எதிர்பார்க்கவே இல்லை.    “இல்லீங்க, வீட்டு வேலையே எனக்குச் சரியா இருக்கு. இதுலே அதுக்கு எங்க நேரம்?”என்று சொன்னார் பார்வதி.    “ஆமாம், உனக்கும் இங்க வேலை ரொம்ப அதிகமா இருக்கு...” என்றவர், சில நிமிடங்கள் யோசித்தார்.    “நான் நைட் டூட்டி முடிச்சிட்டு வர்ற நாள்ல, நீ துணி துவைக்க வேண்டாம். நானே துவைக்கிறேன். அதே மாதிரி இனி சமையல் வேலைகளை நானும் செய்யிறேன். கிடைக்கிற நேரத்திலே நீ அதுக்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்கு.


சரியா?”என்றார் நல்லசிவன்.    அன்று சொன்னது வெறும் வார்த்தையாக இல்லை. அன்றிலிருந்தே அதைச் செயல்படுத்தினார். பார்வதிக்கும் கொஞ்ச நேரம் கிடைத்தது. அந்த நேரத்தைப் பார்வதி என்னோடு கழிக்கத் தொடங்கினார்.     என்னோடு இருப்பார். சட்டென மூடிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்வார். நல்லசிவனை விடவும் சீக்கிரமாகவே என்னை உள்வாங்கித் தொடங்கினார் பார்வதி.    தூங்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் என் கூடவே இருந்தார்.


எனக்கும் நல்ல தோழி கிடைத்த மனநிறைவு ஏற்பட்டது.    அன்றைக்குப் பார்வதி சீக்கிரமே எழுந்து கேசரி செய்தார். எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, என்னிடம் வந்தார். நிரம்பித் ததும்பிய பார்வதியின் மனம், என்னை என்னவோ செய்தது. கையில் என்னை எடுத்தார். இதோ... இதோ... ஐந்தே நிமிடத்தில் முழுவதுமாக என்னை நிறைவு செய்தார்.    “பார்வதி... சாப்பிடலாமா..?”என்று நல்லசிவன் கேட்டார்.    “ம்ம்... ரெடியா இருக்கு. வாங்க..!” என்று சொல்லிவிட்டு, என்னையும் கூடவே எடுத்துச் சென்றார்.    தட்டில் கேசரியைக் கண்ட நல்லசிவன், “என்ன விசேசம் இனிப்பெல்லாம் பலமா இருக்கு..!” என்றார்.   


“நானும் முடிச்சிட்டேனே...” என்று என்னை கையில் உயர்த்திக் காட்டிய பார்வதி, “எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டை அறிமுகப்படுத்தி வச்சதுக்கு நன்றி...” என்றார் பார்வதி. நல்லசிவனிடம் புத்தகம் கொடுக்கும்போது பார்வதியின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. இருவருக்கும் இடையில் நான் இருந்த அந்தச் சில நிமிடங்கள், என் வாழ்வின் வரங்கள் என்பேன்.    பிறகென்ன... என்னைப்போலவே பலரும் அந்த வீட்டிற்கு அவ்வப்போது வரத் தொடங்கினர். ஆனாலும், எனக்கு மட்டும் அந்த வீட்டில் சிறப்பான கவனிப்பு எப்போதும் இருந்தது.


நல்லசிவன் - பார்வதி தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்தனர். மூத்தவன் பெயர் அகிலன். அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தைக்கு நீநிகா எனப் பெயர் சூட்டினர்.    தன் ஆண் பிள்ளைக்கு அழகான தமிழ்ப் பெயர். பெண் பிள்ளைக்கு மட்டும் ஏன் அர்த்தமில்லாத இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்... நீநிகா என்று..? அந்தப் பெயருக்கான அர்த்தம் தெரியாமல் நானும் ரொம்பவே குழம்பிக் கொண்டிருந்தேன்.    அதற்கும் ஒரு நாள் விடை கிடைத்தது.   


நல்லசிவனின் அலுவலக நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். நண்பரிடம் தன் பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார் நல்லசிவன்.    தேநீர் அருந்திக்கொண்டே, “அதென்னப்பா, நீநிகா..?”என்று கேட்டார் நண்பர். நானும் காதைக் கூர்த்தீட்டிக்கொண்டு கவனித்தேன்.    “வேறொண்ணுமில்லப்பா. இந்தப் பூமியே நீர், நிலம், காற்று ஆகிய மூன்று சக்திகளினால் தான் இன்னமும் நிலைச்சிருக்கு. அந்த மூன்றின் முதல் எழுத்தோட சேர்ப்புதான் நீநிகா...” என்றார் நல்லசிவன்.    “சூப்பர்ப்பா..!” என்றார் நண்பர்.    எனக்கு அந்தப் பெயரும், பெயருக்கான விளக்கமும் ரொம்பவும் பிடித்திருந்தது.

 

காலச் சக்கரம் சுழன்றது.    பிள்ளைகள் வளரத் தொடங்கினார்கள். பள்ளிக்கல்வி படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினான் அகிலன்.    ஒரு நாள், பார்வதி அகிலனை அழைத்தார்.    அகிலனின் கையில் என்னைக் கொடுத்தார்.    “தம்பி, உனக்கு எப்பவெல்லாம் நேரம் கிடைக்கிதோ, அப்பப்ப இதோட கொஞ்சம் நேரத்தைச் செலவளி...” என்றார்.    தன் மேசை மீது என்னையும் அகிலன் வைத்துக்கொண்டான். பாடப் புத்தகங்களைப் படிப்பான்; கொஞ்ச நேரம் எழுதுவான். தூங்கச் செல்லுமுன் என்னைக் கையில் எடுப்பான். ஏதோ யோசனையோடு பார்ப்பான்.


பிறகு மூடிவிட்டு, தூங்கப்போய் விடுவான்.    என்றாவது ஒரு நாள் எனக்கான நேரத்தைக் கொடுப்பான் என்று ஆவலோடு நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நாள்கள் நகர்ந்தன. சில மாதங்கள் கடந்தன. சில ஆண்டுகளும் கடந்து ஓடின.    இப்போதெல்லாம் மேசையில் உட்காரும்போதே கையில் ஒரு குட்டிக் கருவியோடு தான் உட்காருகிறான் அகிலன். அதன் பெயரென்ன... ஏதோ  ‘செல்பேசி’யாமே..?    அம்மா, அப்பா ஏதாவது கேட்டாலும் ஒன்று, இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவன் பதில் சொல்வதில்லை. சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கையில் அந்தச் ‘செல்பேசி’ கூடவே இருக்கிறது. அன்றைக்கு கழிவறைக்குச் சென்றான்.


அப்போதும் அதில் பேசிக்கொண்டே சென்றான்.    தூங்குவதற்காகப் படுக்கையில் படுப்பான். ஆனாலும் தூங்க மாட்டான்.  ரொம்ப நேரம் செல்பேசி பார்த்துக்கொண்டே இருப்பான். எப்போது தூங்குகிறான் என்றே தெரியாது. ஆனால், காலையில் மிகவும் தாமதமாகவே எழுவான்.    ‘எனக்கான நேரத்தை இவன் தருவான்…’ எனும் எனது எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே போனது.    ஒரு நாள்.            நல்லசிவன் அகிலனின் மேசை அருகே வந்தார். மேசை மேல் இருந்த என்னை, அவரது கை விரல்கள் வாஞ்சையோடு வருடின.    “ஏம்ப்பா, இதுக்கு உன்னால நேரத்தைக் கொடுக்க முடிஞ்சதா..?”என்று அகிலனிடம் கேட்டார்.   


“இல்லைப்பா. என்னால முன்னை மாதிரி பாடப்புத்தகத்தைக் கூட படிக்க முடியலே. கண்ணு எரியிது. தலை வலிக்கிது. கண்ணில தண்ணீயா வருது...” என்றான் அகிலன்.    அடுத்த நாளே, கண் மருத்துவரிடம் அகிலனைக் கூட்டிப்போனார் நல்லசிவன்.    இப்போது அகிலன் கண்ணாடிப் போட்டுக்கொண்டு தான் எதையும் படிக்கிறான். ஆனாலும், செல்பேசி பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டான்.


   அன்றைக்கு அகிலனின் நண்பன் வெங்கட் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அம்மா இருவருக்கும் தேநீர் கொடுத்தார்.    “ஒரு நிமிசம் இங்கே வா...” என அகிலனைக் கூட்டிப்போனார் அம்மா.    தேநீர் குடித்துக்கொண்டிருந்த வெங்கட், கோப்பையைக் கீழே வைத்தான். வேகமாக வைத்ததில் தேநீர் இரண்டொரு சொட்டுக்கள் மேசை மேல் சிந்தின.    அங்கும் இங்குமாகப் பார்த்த வெங்கட்டின் பார்வை, என் மேல் விழுந்தது. ஏனோ எனக்கு அவனது பார்வை அச்சத்தைத் தந்தது. ‘வெடுக்’கென என்னை எடுத்தான். ‘சரட்’டென எனது கடைசிப் பக்கத்தைக் கிழித்தான்.   


“அய்யோ...” எனக்கு வலித்தது. சத்தம் போட்டேன். யார் காதிலும் விழவில்லை. என் கடைசிப் பக்கத்தைக்கொண்டு, தேநீர் சொட்டுகளைத் வேகமாகத் துடைத்தான். பின்னர் கசக்கி, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு போய்விட்டான்.    என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தேன். இனி நான் யாருக்குப் பயன்படப் போகிறேன்..? ஒரு பயனும் இல்லாமல் இப்படிச் சும்மா இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.     இனி என்னை யார் தான் கையில் எடுப்பார்கள்? கடைசியாகக்கிழிந்திருக்கும் என்னை இனி என்ன செய்வார்கள்? நாளுக்கு நாள் என் குழப்பம் அதிகமாகிக்கொண்டே சென்றது.


   அன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அம்மா.


    அகிலனின் அறைக்குள் வந்தார். கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கினார். மேசையைத் துடைத்தார். அதன் மேலிருந்த என்னைப் பார்த்தார். மெதுவாக என்னை வருடினார். கையில் எடுத்தார். கண்களில் ஈரம் கோர்த்தன.


    “என்னாச்சும்மா, அப்படியே நின்னுட்டே..?”என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் நீநிகா. எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.


    அம்மாவின் கலங்கிய கண்களையும், கையில் இருந்த என்னையும் மாறி மாறிப் பார்த்தாள்.


“அவசியம் நீ இதுகூட உன் நேரத்தைச் செலவளிக்கணும்மா. உங்க அப்பாவுக்கும், எனக்கும் ரொம்ப பிடித்தமான நண்பன்...” என்ற அம்மா, தன் கையில் இருந்த என்னை நீநிகா கையில் கொடுத்தார்.


கையில் வாங்கிய என்னை அப்படியே புரட்டிப் பார்த்தாள் நீநிகா.


“அட... என்னம்மா, கடைசிப் பக்கத்தைக் காணோம்..!” என்று நீநிகா சொன்னதும், “அச்சச்சோ... அப்படியா?”என்று அம்மா மனம் கலங்கியது.


அம்மா சில நிமிடங்கள் பேச்சற்று நின்றார்.


“நீ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதோட இரும்மா. இதை நீ முடிக்கப் போகும்போது கடைசியிலே என்னாங்கிறதை நா உனக்கு சொல்றேன். சரியா?”என்றார் அம்மா.


“சரிம்மா...” என்று சொன்ன நீநிகா, என்னைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தாள்.


என் காயங்கள் எல்லாம் சட்டென ஆறின. எனக்குப் புத்துணர்வு பிறந்தது போலிருந்தது. நீநிகாவோடு சேர்ந்து நானும், என்னோடு சேர்ந்து நீநிகாவும் மெல்ல மெல்ல மேலேறிப் பறக்கத் தொடங்கினோம்.


எனது பக்கங்கள் எல்லாம் சிறகுகளெனப் படபடத்தன.


மு.முருகேஷ்
மு.முருகேஷ்

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
மு.தமிழ்ச்செல்வன்
2 days ago
Rated 5 out of 5 stars.

புத்தகத்திற்கு உயிர் உண்டு. அதற்கு உணர்வு கொடுத்து எழுதிய விதமும், அதனை பெற்றோர்களே முன்னெடுக்கும் விதமாகக் கதை எழுதியிருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இதுபோன்ற முன்னெடுப்பை செய்ய வேண்டும்.

Like
bottom of page