top of page

என் இனிய பறவையே

ree

புத்தக வாசிப்பும்,பறவை நோக்கலும்,எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள்.  எனக்கு  வாசிப்பின் மீதும், பறவை  நோக்கலிலும் ஆர்வத்தை வர வைத்தவர்கள் என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான்.


    என்னுடைய அம்மா நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டே இருப்பார்.. வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புத்தகங்கள் பற்றி என்னிடமும் என் தங்கை மதியிடமும்  கதையாக சொல்வார். புத்தகங்களின் அறிமுகம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் கொண்டு வந்தது. அதேபோல் அப்பாவுக்கு இயற்கை மேல் இருக்கும் ஆர்வம், பறவைகள் பற்றியும் , மரங்களைப் பற்றியும் தேடலை எனக்குள் விதைத்தது.


        இந்த மாற்றங்கள் நிகழ்ந்த காலம், கொரோனா காலகட்டம். அந்த நாட்களில் பள்ளிக்குச் செல்லாததால் எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது.  வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. முன்பே நூல்கள் வாசித்தாலும், அப்போது நிறைய நூல்கள் வாசித்தேன்.


    குடும்பத்தோடு செலவிட நிறைய நேரமும் கிடைத்தது. ஒரு நாள் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு மதில் சுவரில் குரங்கு ஒன்று  அமர்ந்து இருப்பதைப் பார்த்தோம். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தோம். தினமும் வருமா? என்று பார்க்கும் ஆவலில் பால்கனியில் . தினமும் அமர ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய பறவைகள் வருவதை கவனித்தோம். அதற்கு முன்பு பள்ளி செல்லும் அவசரத்தில் இத்தனை பறவைகள் வருவதை கவனிக்காமல் இருந்தோம். 


      முதன்முதலில் நாங்கள் பார்த்த பறவை பச்சைக்கிளி. பறவை பார்ப்பதில் எங்கள் ஆர்வத்தை உணர்ந்த அப்பா, நிறைய பறவைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். செம்பருந்து, கானாங்கோழி, சிறிய நீர்காகம், வக்கா, தகைவிலான், சின்னான் , சிலம்பன், கரிச்சான், குயில், வால் காகம் போன்ற பறவைகளைப் பார்த்தோம் அதைப் பற்றிய தகவல்களை அப்பா நிறைய சொன்னார். அப்படி ஆரம்பித்தது பறவை நோக்கல் ஆர்வம்.


         பச்சைக்கிளியில் ஆரம்பித்த எங்கள் பறவை பார்த்தல் பயணம்,  தற்போது பூமன் ஆந்தை வரை, கிட்டத்தட்ட 194 பறவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். சரணாலயங்கள், ஏரிகள் குளங்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள், எங்கள் தோட்டத்தின் அருகே உள்ள புதர்கள் புல்வெளிகள்  போன்ற பல்வேறு இடங்களில் பறவைகளை அவதானித்திருக்கிறோம்.  


        பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடு ஆரம்பகட்டத்தில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாய் இருந்தது. அதற்குப் பிறகு பறவைகள் சார்ந்து நிறைய நூல்களை வாசித்தேன். அதில் தெரிந்து கொண்ட  அடையாளங்களை வைத்து பறவைகளின் பெயர்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். தற்போது பறவைகளின் குரலை வைத்து அடையாளப்படுத்தத் துவங்கி இருக்கிறேன். இந்தப் பறவை பார்த்தல் பயணத்தை எங்கள் மொத்த குடும்பமும் ஈடுபாட்டோடு செய்கிறோம்.

         பொதுவாக பறவை ஆர்வலர்கள் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு பறவை உண்டு. அந்தப் பறவை தான் என் இனிய பறவையும் கூட. அந்தப் பறவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் கருப்பு வெள்ளைஇருவாச்சி பறவை தான்.

           அந்தப் பறவையை நாங்கள் பார்த்த அனுபவம் அலாதியானது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் ஒரு நாள் பயணமாக , மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறைக்கு சென்று இருந்தோம். என் இனிய பறவையை அன்று எப்படியும் பார்த்து விட வேண்டும்   என்ற ஆவலில் தான் அந்தப் பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பு மிக அருகில் இருவாச்சியின் குரலை கேட்டும் கூட எங்களால் அந்த பறவையை பார்க்க இயலாமல் திரும்பி இருக்கிறோம். பயணம் ஆரம்பித்தபோது இன்று கண்டிப்பாக பார்ப்போம் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.


      சீகாரப் பூங்குருவி,  நாட்டு உழவாரன், காட்டுச் சிலம்பன் போன்ற புதிய ப் பறவைகளை  பார்த்தோம். ஆனால் இருவாச்சியை மட்டும் பார்க்க இயலவில்லை. வால்பாறையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தோம். திடீரென ஒரு திருப்பத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பெரிய பறவை பறந்ததை பார்த்தேன். உடனே எங்கள் மகிழுந்தை அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காத்திருந்தோம்.


       அடர்ந்த மரம் என்பதால் அந்தப் பறவை அமர்ந்திருந்தது முதலில் தெரியவில்லை. ஆனால் இலைகளுக்கிடையே அதன் தனித்துவமான அலகு தெரிந்தது. அப்போதே அது இருவாச்சி தான் என்று அறிந்து கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் வால் பகுதி தெரிந்தது. இரு கண்ணோக்கியைக்  கொண்டு பார்த்ததில், நாங்கள் மூன்று வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் என் இனிய பறவை தான் என்பதை  அறிந்தேன். சிறிது நேரத்தில் அதன்  பெரிய இறக்கைகளை விரித்துக்கொண்டு மேல் நோக்கி மிக அழகாய் பறக்கத்துவங்கியது.. அது ஒரு ஆண் இருவாச்சிப் பறவை. அதன் பிரம்மாண்டமான அழகிய தோற்றம் கண்ணுக்குள் சித்திரமாய் தங்கி விட்டது. இன்றும் கூட இருவாச்சிப் பறவையைப் பற்றி நினைக்கும் போது அந்தக் காட்சி தான் கண்ணுக்குள் வரும்.  

         மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு எங்கள் மகிழுந்தை இயக்கிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். கண்ணா ரெண்டு லட்டு  தின்ன ஆசையா?  என்பது   போல நம் மாநில விலங்கான வரையாடு அங்கே ஒரு கொண்டை ஊசி வளைவில் மெல்ல சாவகாசமாய் இறங்கி கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதை சிறிது நேரம் நின்று ரசித்துப் பார்த்துவிட்டு கீழே இறங்கினால் அதே திருப்பத்தில் மற்றுமொரு வரையாடு. அன்றே மேற்கு தொடர்ச்சி மலையில் மிகக் குறைந்த அளவில் எண்ணிக்கையில் உள்ள சோலை மந்தியையும் பார்த்தோம். பறவை பார்த்ததில் எங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தந்த அந்த நாளை இன்று வரை கூட மறக்க இயலாது.


     தரை பறவைகள், மரத்தில் வாழும் பறவைகள், நீர்ப்பறவைகள், வான்வெளிப்  பறவைகள், வேட்டையாடி பறவைகள் என பல்வேறு வகையான பறவைகள் இந்த பூமியில் இருக்கின்றன. இந்த பூமியில் இருக்கின்ற பெரும்பான்மையான காடுகள் இந்த பறவைகளின் எச்சத்தால் உருவானவை தான். எனவே பறவைகளைப் பாதுகாத்தால் மரங்களை அதிக அளவில் பாதுகாக்க முடியும். மரங்கள் அதிக அளவில் இருந்தால் நாட்டின் இயற்கை வளமும் அதிகரிக்கும். சூழலும் பாதுகாக்கப்படும்.


        பறவை பார்த்தல் என்ற இந்த இனிய அனுபவமானது, இயற்கையின் மீதான காதலை வரவைத்து, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை தந்தது.  அலைபேசியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்க விடாமல் இயற்கையை நோக்கி எங்களை மடை மாற்றியது வாசிப்பும் பறவை பார்த்தலும் தான்.

செல்வ ஸ்ரீராம். பா
செல்வ ஸ்ரீராம். பா

எட்டாம் வகுப்பு படிக்கிறார். மூன்று புத்தகங்கள் கரிச்சான்குஞ்சும் குயில்முட்டையும், என்ன சொன்னது லூசியானா? அற்புத எறும்பு , எழுதி இருக்கிறார்.

பறவை பார்த்தலும், புத்தக வாசிப்பும் மிகப் பிடித்த விஷயங்கள்.


4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Nov 15
Rated 5 out of 5 stars.

இனிய பறவை கட்டுரை இனிமை ஸ்ரீராம். வாழ்த்துகள் ஸ்ரீராம் 😍😍

Like

Guest
Nov 15
Rated 5 out of 5 stars.

பறவைகள் மீதான உன் ஆர்வம் வியக்க வைக்கிறது ஶ்ரீராம்.மென்மேலும் வளர அன்பு வாழ்த்துகள் 💐 ♥️

Like

Guest
Nov 15
Rated 5 out of 5 stars.

வாழ்த்துகள் தங்கமே..♥️♥️

Like

ராஜலட்சுமி நா
Nov 15
Rated 5 out of 5 stars.

வாழ்த்துகள் ஸ்ரீராம்.. பறவைகளின் தோழனே

Like
bottom of page