top of page

குழந்தைகளின் உரிமைகள் - 8

யூனிசெப் சர்வதேசப் பிரகடனம்


ree

ஒரு குழந்தைக்கு இருக்கும் உரிமைகள் என யூனிசெப் அமைப்பு வரையறுத்துள்ள பிரகடனத்தில் அடுத்து நாம் பார்க்க இருப்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோருடனேயே சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை. "இது என்ன வினோதம்? குழந்தை தனது பெற்றோருடன்தானே வசிக்கும், வேறு எங்கே அது போகும்?" என மேற்கண்ட உரிமையைப் பற்றி நாம் வியப்படையக் கூடும். பொதுவாகப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோருடன்தான் வசிக்கும்; அதில் எவ்வித ஐயமும் இல்லைதான். ஆனால், பல்வேறு காரணங்களால், பல குழந்தைகள் தமது பெற்றோர் வாழும் இடங்களில், அவர்களுடனேயே சேர்ந்து பாதுகாப் பாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் சூழ்நிலை அமையாமல் போய்விடுகிறது. 


குறிப்பாகப் போர், இயற்கைச் சீற்றங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் ஓர் இடத்திலும், அவர்களின் பெற்றோர் வேறிடத்திலும் வாழும்படியான நிலை இன்று பல நாடுகளில் நிலவுகிறது. பெரும்பாலும், ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மக்களின் குடியுரிமைகள் தொடர்பான பிரச்னைகள் எழும் பட்சத்தில், இந்த மாதிரியான பிரிந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. 


நமது இந்தியாவிலேயே, இப்போது குடியுரிமை என்ற பிரச்னை மிகவும் தீவிரமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றியுள்ள ஒன்றிய அரசு, அந்தச் சட்டத்தின்படி, பல கோடிப்பேரை,"நீங்கள் இந்தியர்கள் அல்லர்; பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" என்று முத்திரை குத்தி, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. எனினும், நாடு முழுக்க இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக நடந்ததால், தற்போதைக்கு அந்த வெளியேற்றம் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. 


இப்போது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கிறோம் என்று பீகார் மாநிலத்தில் சுமார் 65 இலட்சம் மக்களுக்கு வாக்குரிமையை இல்லாமல் செய்திருக்கிறது ஒன்றிய அரசு. இதன் மூலம், மறைமுகமாகக் குடியுரிமையை மறுத்து விடவும் வாய்ப்புகள் உள்ளன. 

இவ்வாறாகக் குடியுரிமை இல்லாமற் போகும் போதும், போரினால் பெற்றோரை இழக்கும் போதும், உள்நாட்டுக்கலவரங்களால் மொத்தமாக ஒரே சமயத்தில் ஏராளமான மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து போகும் போதும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். 


சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போதும் முதலில் பாதிக்கப்படுவோர் குழந்தைகளே. 


பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும், பாதுகாப்பும் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களாக உள்ளன. புறக்காரணங்களால் மட்டுமன்றி, பெற்றோருக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை, பிரிவு, மண விலக்கு, மண முறிவு போன்ற அகக் காரணங்களாலும் குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவதை நாம் இன்று பெரும் அளவில் காண்கிறோம். இத்தகைய பிரிவுகளால் அநாதைகளாக ஆகி விடும் / ஆக்கப்பட்டு விடும் குழந்தைகள் அந்தத் துயரினால் அடையும் மன அழுத்தங் கள் மிகவும் கொடுமையானவை. 


குறிப்பாகப் போர்களினாலும், உள்நாட்டுக் கலவரங்களாலும் பெற்றோரை இழந்து தனித்து வாழும் குழந்தைகளின் நிலை மிக மிகப் பரிதாபமானது. அத்தகைய குழந்தைகள், கிடைக்கும் வாய்ப்புக ளைப்  பயன்படுத்திக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குத் தப்பியோட முயல்கின்றனர். எல்லைகளைத் தாண்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செல்லுகையில், அந்த வேற்று நாட்டு இராணுவமும், காவல் துறையும் இவர்களைக் குழந்தைகளாயிற்றே என எந்தக் கருணையும் காட்டுவதில்லை. 


சமீப காலங்களில், இஸ்ரேல் நாட்டு இராணுவம், பலஸ்தீன மண்ணில் காஸா பகுதியிலும் பிற இடங்களிலும் நிகழ்த்தும் படு கொலைகளை, ஒட்டு மொத்த உலகமும் வேடிக்கை பார்ப்பதை நாம் அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? இலங்கையிலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற சமயம் எத்தனை ஆயிரம்/ இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது பற்றிய விவரங்களை அந்த நாடு இன்று வரை வெளியிடவில்லை என்பது மற்றொரு உதாரணம். 


யூனிசெப் பிரகடனம், இதைப்பற்றிய விதியின் கீழ், ஒரு குழந்தை,தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் வாழ நேரும் பட்சத்தில், அந்தக் குழந்தையும், பெற்றோரும் பயணங்களை மேற்கொண்டு ஒருவரோடொருவர் மீண்டும் இணைவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தவறாமல் செய்துதர வேண்டும் என்கிறது. அவ்வாறு செய்தால் தான், அந்தக் குழந்தையும், அதன் பெற்றோரும் பரஸ்பரம் தொடர்பில் இருக்க முடியும் என்றும், ஒன்றிணைந்து வாழ முடியுமென்றும் கூறுகிறது. 


நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் பல்வேறு கொடுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருக்கும் அத்தனை நாடுகளும் இந்த விதிகளை உண்மையிலேயே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. வார்த்தைகளில் இந்த உரிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டிருக்கும் உலக நாடுகள், உண்மையிலேயே அவற்றை முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினால், எத்தனையோ இலட்சம் குழந்தைகளின் இருண்டு  போன வாழ்க்கை ஒளிமயமாகும். அவ்வாறு செய்யுமா அந்த நாடுகள்?   

கமலாலயன்
கமலாலயன்

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று

பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page