top of page

கருப்பு கடற்கரை

ஆங்கிலத்தில் – ஷௌன்னா – ஜான் ஸ்டித்

தமிழில் : சுகுமாரன்


ree

சாம் தன்னுடைய வகுப்பறையில் விருப்பமான இடத்தில் அமர்ந்து விருப்பமான படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள்.


அப்போது பிரின்சிபால் வந்தார். ஆசிரியையின் காதில் ஏதோ சொன்னார்.

சாம்-யின் ஆசிரியை முகம் சுளித்தவாறு ஜன்னலை நோக்கி நடந்தார். ஜன்னலின் வழியாக கடலை பார்த்தார்.


பிரின்சிபால் என்ன சொன்னார்?


ஆசிரியை என்ன பார்த்தார்?


சாம் வீட்டுக்கு வந்தாள். சாம்-யின் பெற்றோர் நடந்த பயங்கரத்தைப் பற்றி சொன்னார்கள். கடலில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தின் எண்ணெய் கசிந்து கடலில் கலந்துள்ளது. எண்ணெய் பொங்கி கடலில் வழிவதை சாண்டா பார்பரா தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

குலுக்கும் போது சோடா பாட்டிலின் மூடியை பிய்த்துக் கொண்டு சோடா வெளியேறுவது போலிருக்கிறது என்று எண்ணெய் கசிவைப் பற்றி அம்மா சொன்னார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தடிமமான கருப்பு எண்ணெய் கடற்கரையை மெழுகியிருந்தது.

சாம் கடற்கரையைப் போய் பார்த்த போது பதட்டமானாள். அவளுடைய நடையில் அந்த கவலை வெளிப்பட்டது.


அவளுக்குப் பயமும் தோன்றியது, கடல் கருப்பாகி விட்டது. கடற்கரையும் கருப்பாகி விட்டது. கரையில் வந்து மோதிக் கொண்டிருக்கும் அலைகள் 'ஸ்லாப்... ஸ்லாப்...' என்று சத்தமிட்டது. சாம் அமைதியாக நின்றாள்.


நகர மக்கள் உதவி செய்ய தயார் என்றாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

கடலுக்குள் துளையிடுதல் மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் இந்த மாதிரியான பேரழிவின் போது எண்ணெய் நிறுவனம் தயாராக இல்லை.


அதனால் சாண்டா பார்பரா நகர மக்கள் நிலைமை மேம்பட ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார்கள்.


சாம்யின் அப்பா அங்குள்ள மீனவர்களை குழுவாக சேர்த்தார். அவர்களைக் கொண்டு எண்ணெய்யை உறிஞ்சுவதற்கு வைக்கோல்களை கடலில் போட்டார்.


சாமின் அம்மா சிலரை சேர்த்தார். அவர்கள் கடற்பறவைகளின் சிறகுகள் மீது படிந்திருந்த எண்ணெய்யை துடைத்தார்கள், பறவைகள் எண்ணெய்யால் பறக்க முடியாமல் இருந்தன.

சாம் உதவி எதுவும் செய்யவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடற்கரை காட்சிகள் தொலைக்காட்சியில் தெரிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து கிளர்ச்சியடைந்தனர். இதற்கு முன் யாரும் இதைப் போல் பார்த்ததில்லை.

எண்ணெய் தொடர்ந்து கடலில் கசிந்துக் கொண்டிருந்தது.


சாம்-க்கு ஏற்பட்ட வருத்தம் இப்போது கோபமாக மாறியது. அவளுக்கு விருப்பமான இடம், பறவைகள், கடற்கரை, நீல நிற கடல் எல்லாம் சரியில்லை.


சாமும் அவளுடைய நண்பர்களும் சேர்ந்தார்கள். கடற்கரையிலுள்ள எண்ணெய்யை சிறிய பாட்டில்களில் நிரப்பினார்கள். அதை அரசியல் வாதிகளுக்கு தபாலில் அனுப்பி வைத்தனர்.

அதிகாரத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? இதே மாதிரி அழிவுகள் நடக்காமல் தடுப்பதற்கும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடிதம் வாயிலாக மாணவர்கள் கோரினர்.


செய்திகள் பரவின. ஆயிரக்கணக்கான மக்களின் கவனம் திரும்பியது. குடியரசுத்தலைவர் நிக்ஸன் ஹெலிகேப்டரில் வந்து பார்வையிட்டார்.


கடலில் எண்ணெய் வெடிப்பு ஏற்பட்டு ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன் சான்டா பார்ப்ரா வந்து பார்வையிட்டார். அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தும் பிற அரசியல்வாதிகளையும் இதில் கவனம் செலுத்த வைக்க போராட வேண்டியிருந்தது.

செனட்டர் பார்க்கும் போது கடலின் மேற்பரப்பில் எண்ணெய் இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருந்தது.


வாஷிங்டனுக்கு திரும்பிய பிறகு அவர் இளைஞர்களை சேர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசிய தினம் ஒன்றை கொண்டாடினார். அது பூமி தினம் (Earth Day) என்று அழைக்கப்பட்டது.

சுற்றுச் சூழல் பிரச்சனையைப்பற்றி ஒரு அடிமட்ட இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.


பெரும்பான்மையான மக்களும் அரசியல் வாதிகளும் பூமியின் தேவையைப் பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகிறது.


மாணவர்களும் ஆசிரியர்களும் பூமி தினத்தைக் கொண்டாடுவதற்குத் தயாரானார்கள்.

ஏப்ரல் 22, 1970, அன்று சாம் படிக்கும் பள்ளியில் பெரிய அளவில் பூமி தினம் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொருவரும் மறுசுழற்சிக்குரிய பொருட்களை சேகரித்தனர். தேனீ வளர்ப்பின் நன்மைகளைத் தெரிந்துக் கொண்டார்கள். பூச்சிகளைக் கொல்லும் DOT ரசாயன பூச்சிக் கொல்லி உண்டாக்கும் சுற்றுச்சூழல் கேட்டை புரிந்துக் கொண்டார்கள். நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் சுற்றுசூழலை மேம்படுத்துவது தொடர்பாக பேசுவதின் மூலம் பூமி தினத்தை பயனுள்ளதாக மாற்றினார்கள்.


சாம் நிறைய கற்றுக் கொண்டாள். அவ்வாறு கற்றுக் கொண்டது பல வகைகளிலும் உதவும் என்று நினைத்தாள்.


முதல் பூமி தின கொண்டாட்டத்தில் 20 இலட்சம் மக்கள் கலந்துக் கொண்டார்கள். 'பூமியைக் காப்பாற்றுங்கள், சுத்தமான பூமிதான் மகிழ்ச்சிக்குரியது' என்று கோரிக்கைகளை எழுப்பி சிலர் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.


ஒரு இயக்கம் பிறந்து விட்டது.


சான்டா பார்ப்ரா கடற்கரையிலுள்ள உயிரினங்களின் நிலைமை மெதுவாக சீரடைந்தது. முற்றிலும் சரியாக சிறிது நாளாகும்.


எண்ணெய் கசிவுக்கு முன்பு சாம், எண்ணெய் கிணறுகள் தனக்குப் பிடித்த இடத்தின் ஒரு பகுதியாகத் தான் இல்லை என்று மேம் போக்காக நினைத்தாள். இப்போதும் அவள் அவர்களைத் தாண்டி பார்க்க விரும்பவில்லை.


இன்னும் நிறைய வேலைகள் இருந்தன. சாமும் அவளுடைய தோழிகளும் இப்போதுதான் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்.


சாமும் தோழிகளும் சுற்றப்புறச் சூழலை காக்க 10 விதிகளை உருவாக்கி அதை பிரச்சாரம் செய்தனர்.

  1. சுற்றுப்புற குப்பைகளை அகற்றுவதில் பங்கேற்க வேண்டும்.

  2. அறையை விட்டு வெளியே வரும் போது மின் விளக்கை அணைக்க வேண்டும்.

  3. சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும்.

  4. மீண்டும் பயன்படுத்த கூடிய தண்ணீர் பாட்டிலை பயன்படுத்த வேண்டும்.

  5. பிளாஸ்டிக் பயன்பாட்டை கை விட வேண்டும்.

  6. துணிப் பையை பயன்படுத்த வேண்டும்.

  7. உங்கள் உணவுக் கழிவுகளை உரமாக்குங்கள்.

  8. உந்து வண்டிகள் பயன்பாட்டை குறைத்தல்.

  9. சுற்றுச் சூழல் இயக்கங்களில் பங்கெடுத்தல்

  10. பூமியைக் காக்க சுற்றுச் சூழல் பிரச்சனைகளை அறிதல்.

தினமும் பூமி தினமே!


பின் குறிப்பு :


1969-ஆம் ஆண்டு யூனியன் எண்ணெய் நிறுவனத்தினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சான்டா பார்ப்பரா கடற்கரைப் பகுதியில் சுற்றுச் சூழல் கேட்டை உருவாக்கியது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிகழ்வு மக்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இச்சிறுகதை 'கருப்பு கடற்கரை' எழுதப்பட்டுள்ளது. செளன்னா மற்றும் ஜான் ஸ்டித் ஆகிய இருவரும் பூமியைக் காக்கும் இயக்கத்தில் பற்று கொண்டவர்கள். சான்டா பார்ப்பரா நிகழ்வு இருவரின் மனதிலும் ஆழ்ந்த கிளர்ச்சியைத் தூண்டியது. இந்த இரு இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முதல் கதை இது.

சுகுமாரன்
சுகுமாரன்

1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Nov 19
Rated 5 out of 5 stars.

Awesome!!

Like
bottom of page