top of page

சுதந்தர நதியில் நண்பன்

ஆங்கிலம் : Gloria Whelan

தமிழில் : சுகுமாரன்

ree

கடைசி வாத்துகளும் எழுந்து பறப்பதை லூயிஸ் கவனித்தான். டெட்ராய்ட் நதி சீக்கிரத்தில் உறையப் போகிறது. மீன் பிடிக்கும் படகை பாதுகாக்க லூயிஸ் திருப்பினான். இதை எப்போதும் அவனுடைய அப்பா செய்வதுதான். அப்பா வடக்கே வேலையாக சென்று விட்டார்.


அப்பா போவதற்கு முன்பு அவனிடம் சொல்லியிருந்தார். 'மகனே, தோட்டம் உன்னுடைய பொறுப்பு, நான் என்ன செய்தேனோ அதை நீ செய்தால் போதும்' என்றார்.

குளிரான டிசம்பர் மாத காற்று 'பியர்ஸ்' மரத்தின் இலைகளை சுருள வைத்திருந்தது. லூயிஸ்-யின் தாத்தா பிரான்சிலிருந்து அமெரிக்கா வந்த போது கொண்டு வந்த மரங்கள் அவை.

டெட்ராய்ட் நதியின் ஓட்டத்திலேயே எஞ்சின் படகுகளும் பாய்மர படகுகளும் கடலுக்கு செல்வதை லூயிஸ் பார்த்தான்.


புதரில் அசைவு ஏற்பட்டது. மானா அல்லது நரியா, எதுவென தெரியவில்லை லூயிஸ் நினைத்தான்.

'நீ நண்பனா?' ஒரு குரல் கேட்டது.


லூயிஸ் படகை நிறுத்தினான். தப்பித்து ஓடுகிற அடிமைகளின் வார்த்தைகள் அவை, நண்பர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்காக அடிமைகள் சொல்வதாக அவனுடைய அப்பா சொல்லி இருக்கிறார்.


'என்ன வேண்டும்?' என்று அவன் கேட்டான்.

'சுதந்தரம்' 

நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டான்

'நம்பிக்கை இருக்கிறது' என்று பதில் வந்தது.


மூடியிருந்த சால்வையை விலக்கிக் கொண்டு ஒரு கருப்பின பெண் புதரிலிருந்து வெளிப்பட்டாள். ஒரு சிறுமி அவளுடன் இருந்தாள். ஒரு பையனும் வந்தான். அவனுக்கு லூயிஸ் வயது, 12 அல்லது 13 இருக்கும்.


'கடவுள் உன்னை காப்பாராக' என்று அந்தப் பெண் சொன்னாள். 'என் பெயர் சாரா, என் மகள் லூசி, என் மகன் டெய்லர்' என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.


டெட்ராய்டு பாப்டிஸ்ட் ஆலயத்தில் லூயிஸ்சின் தந்தையைப் பார்த்த போது அவர் உதவுவதாகச் சொன்னார். தப்பித்து ஓடும் அடிமைகளைப் பிடிப்பதற்காக இரத்த வெறி பிடித்தவர்கள் எங்களைத் தேடுகிறார்கள். இந்த நதியைக் கடந்து கனடா நாட்டிற்கு சென்று விட்டால் சுதந்தரம் கிடைத்து விடும் என்று அந்த பெண் கூறினாள்.


இரவு நேரத்தில் இந்த நதியைக் கடப்பது ஆபத்தானது. அடிமைகள் தப்பித்துக் செல்வதற்கு உதவி செய்தால் சட்டப்படி உதவுபவர்களுக்கும் தண்டனை உண்டு. அதனால் அப்பாவை அம்மா உதவ வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டது லூயிஸ்க்குத் தெரிந்திருந்தது.


ஆனால் எவ்வளவு சொன்னாலும் அப்பா கேட்பதில்லை. ஒரு ஆத்மா அடிமை வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்பார்.


'அப்பா இங்கே இல்லை. நதி ஐஸ்-யாக உறைந்து விட்டது. காற்றும் பலமாக அடிக்கிறது. மூன்று மணி நேரம் பயணமாக வேண்டும்' என்றான் லூயிஸ்.


'தண்ணீர் அதிக குளிராக இல்லை, காற்றும் பலமாக வீசவில்லை. நாங்கள் ஏற்கனவே இரண்டு நதிகளைக் கடந்து வந்தோம். டெட்ராய்ட் நதி சுதந்தர நதி. இதுதான் எங்கள் கடைசி வாய்ப்பு. எங்கள் எஜமானர் இந்த குழந்தைகளை விற்று விட்டார். என் பையன் டெய்லர் ஒரு குதிரை அல்லது மாடு மாதிரி அவர்களால் நடத்தப்படுகிறான். நீ எங்களை அழைத்துக் செல்லாவிட்டால் இந்த நதியில் குதித்து இறந்துப் போவோம்' என்றார் சாரா.


அந்தப் பையன் லூயிஸிடம் முகம் சுளித்தான். 'நான் பந்தயம் வைக்கிறேன். என்னால் படகில் இந்த நதியை கடக்க முடியும்' என்றான்.


அந்தப் பையனின் சவால் லூயிஸ்-யைக் குத்தியது. 'உன்னால் முடியாது. எங்கெங்கே நீரோட்டம் மற்றும் ஆழமற்ற பகுதிகள் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்' என்றான்.


அந்தப் பெண்மணி நடுங்கினாள். அந்த சிறுமி சத்தமில்லாமல் அழுதாள். 'யாருக்கும் சத்தம் கேட்காமல் எப்படி அழுவது என்பதை அவள் கற்று வைத்திருக்கிறாள்' என்று லூயிஸ் நினைத்தான்.

அப்பா இப்போது இருந்தால் என்ன செய்திருப்பார் என்பது லூயிஸ்க்குத் தெரியும்.


'இங்கே காத்திருங்கள்' என்றான் அவன்.

வெதுவெதுப்பான மேலாடையைப் போல் இருந்த சமையலறையின் சூடு லூயிஸ்யைச் சூழ்ந்தது. கனலாக இருந்த கரிகளுக்கு மேல் 'கெட்டில்' தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை மீனின் குழம்பு வாசனை அவனின் மூக்கை துளைத்தது. அந்த வெள்ளை மீன் அவன் பிடித்தது.


'கிட்டதட்ட இரவு உணவு தயாராகி விட்டது, லூயிஸ்' என்று அம்மா சொன்னார்.


'படகில் ஒரு நிமிட வேலையிருக்கிறது. என்னுடைய 'ஸ்கார்ப்'யை எடுக்க வந்தேன்' என்றான் அவன்.


லூயிஸ் படுக்கையறைக்குப் போனான். படுக்கையில் கிடந்த ஸ்வெட்டரையும் மேலாடையையும் எடுத்துக் கொண்டான்.


பிறகு அவன் சமையலறைக்கு வந்தான்.


லூயிஸ் அம்மாவுடன் உரத்த குரலில் பாடி மேசையை சுற்றி நடனமாடினான். நடனத்தின் போது அம்மா சிரித்துக் கொண்டாள். உடம்பு வலியால் சிறிது முணங்கவும் செய்தாள். அவளுக்கு குளிராகவும் இருந்தது.


அவன் கதவை சிறிது அம்மாவுக்கு நேராக திறந்தான். 'கவலை வேண்டாம் அம்மா, என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருள் என்பது பகல் வெளிச்சத்தை உள்ளே திருப்பும்' என்றான்.

அம்மா புன்னகையுடன், 'உன் அப்பா எப்போதும் இப்படித்தான் சொல்வார்' என்றாள்.

கம்பளி உடைகள், சாக்லேட், ரொட்டி ஆகியவற்றை லூயிஸ் சாராவுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தான்.


லூயிஸ்யைப் போலிருந்த டெய்லர் மேலாடையை போடவில்லை. லூயிஸ் அவனை போட சொன்னான்.


'அதைப் பற்றி கவலை வேண்டாம். அவன் வலுவானவன்' என்றார் சாரா. வெள்ளையினத்தவர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று நான் அவளிடம் சொல்லியிருக்கிறேன்' என்றும் சொன்னார்.

இரண்டு பையன்களும் படகை தண்ணீரில் தள்ளினார்கள். சாராவும் லூசியும் படகில் தாவி ஏறினார்கள்.


'உனக்கு துடுப்பு போட தெரியுமா?' என்று லூயிஸ் டெயிலரிடம் கேட்டான்.

'என்னால் முடியும், எஜமானர் ஹார்மன்னுடன் மீன் பிடிக்கச் செல்லும் போது துடுப்பு போட்டிருக்கிறேன். சகதியான ஏரியில் கூட செலுத்தியிருக்கிறேன்' என்றான் டெயிலர்.

லூயிஸ்யும் டெயிலரும் துடுப்புகளை எடுத்தனர். பலமான நீரோட்டத்திலும் வலிமையான கரங்களால் துடுப்பு போட்டார்கள். அந்த நதி லூயிஸ்க்கு பகலைப் பொறுத்த வரை நண்பன், இரவிலோ ஆபத்தானவன்.


துடுப்புகளை நீரோட்டத்தை எதிர்த்து மேலும் கீழும் அசைக்கும்படி லூயிஸ் சொன்னான். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் அடித்தது. தோட்ட வீட்டின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது.

'எப்படி இங்கே வந்தீர்கள்?' என்று சாராவை லூயிஸ் கேட்டான்.


'முதலில் ஓஹியோ நதியைக் கடந்தோம். ஒவ்வொரு இடமாக பாதாள ரயிலில் வந்தோம்' என்றாள் சாரா.

'தப்பியோடும் அடிமைகளைப் பிடிப்பவர்கள் எங்களை தொடந்தார்கள்' என்றாள் லூசி.

'மோப்பம் பிடிக்க அவர்கள் நாய்களையும் அனுப்பினார்கள்' என்றான் டெய்லர்.


'சில நல்ல மனம் படைத்தவர்களால் நாங்கள் இங்கு வரைக்கு வந்தோம்' என்றாள் சாரா.

படகு மெல்லிய ஐஸ் கட்டிகளுக்கிடையே செல்ல தடுமாறியது. பகல்நேரமென்றால் லூயிஸ்க்குத் துணையாக மீன் பிடிக்கும் படகுக் காரர்களும் இருப்பார்கள்.


லூயிஸ்-சின் பற்கள் கிட்டித்தன. விரல்கள் மரத்தன. சாரா லூசியை குளிர் காற்றிலிருந்து காப்பாற்ற துணியால் போத்தினார்.

தோட்ட வீட்டின் விளக்கு வெளிச்சம் மறைந்து விட்டது. ஆனால் வேறொரு வெளிச்சம் நதியில் தெரிந்தது. அது கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. கண்காணிப்பு படகிலுள்ளவர்கள் கண்டு பிடித்தால் லூயிஸ் ஜெயிலுக்கு அனுப்பப்படுவான். சாராவும் அவளுடைய பிள்ளைகளும் மறுபடி அடிமைகளாக்கப்படுவார்கள்.


'படகை நிறுத்து. எல்லோரும் அமைதியாக இருங்கள்' என்றான் லூயிஸ்.

படகு நிறுத்தப்பட்டு நதி நீரில் மிதந்துக் கொண்டிருந்தது. ஆண்களின் பேச்சு சத்தம் கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. ஆனால் கண்காணிப்பு படகின் வெளிச்சம் அவர்கள் மீது படவில்லை.

இப்போது பேச்சு சத்தம் கேட்கவில்லை. கண்காணிப்பு படகு தொலைவுக்கு சென்றிருந்தது.

பையன்கள் மீண்டும் துடுப்பு போடத் தொடங்கினர். அவர்களின் தோள்கள் வலியெடுக்கத் தொடங்கின.


டெய்லர் லூயிஸ்க்காக வருந்தினான். அங்கிருந்த மெளனத்தைக் கலைக்க டெய்லர் லூயிஸ்யிடம் கேட்டான். 'இந்த நதியில் எந்த மாதிரியான மீன்கள் பிடிப்பாய்?'

'வெள்ளை மீன், ஹெரிங், பெர்ச், ஸ்டெர்ஜன் வகை மீன்களைப் பிடிப்போம். அப்பா 80 பவுண்டு எடையுள்ள ஸ்டெர்ஜன் மீனைக் கூட பிடித்திருக்கிறார்' என்றான் லூயிஸ்.


'அது பெரிய மீன். அதைப் பிடிக்க தனி பலம் வேண்டும். ஏரிகளில் மீன்களைப் பிடிக்க வலைகளை அமிழ்த்தி வைப்பார்கள்' என்றான் டெய்லர்.


'காற்று அவர்களுக்கு எதிராக இருந்தது. தண்ணீர் ஐஸ் கட்டிகளாக வலுப்பெற்றிருந்தது. நதியில் படகு வலுக்கி செல்வது போலிருந்தது.


படகில் இருப்பவர்களை பத்திரமாக கரை சேர்க்க லூயிஸ் அப்பாவை நினைத்துக் கொண்டான்.

சாரா ஒரு பாட்டு பாடத் தொடங்கினார். பிள்ளைகளும் சேர்ந்துப் பாடினார்கள்.


'ஓ! கடவுளே, எங்களை மூழ்குவதிலிருந்து

காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!' 

படகு மேலும் கீழும் தாழ்கிறது.

மூழ்குவதிலிருந்து காப்பாற்றுங்கள்

தேவதைகள் வருவதைப் பார்க்கிறேன்.

காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!' என்று அவர்கள் பாடினார்கள்.


சில நிமிடங்களுக்குப் பிறகு லூயிஸ்யும் சேர்ந்து பாடினான்.

காற்று பாட்டின் வார்த்தைகளை அவர்களுக்குப் பின்னால் கொண்டு வந்தது.

அந்த நேரத்தில் அவர்கள் வெளிச்சத்தைப் பார்த்தார்கள்.

'இன்னொரு கண்காணிப்பு படகா?' என்று டெய்லர் திகைத்தான்.

ஆனால் அந்த வெளிச்சம் நிலையாக தெரிந்தது.

'அது கனடா' என்று லூயிஸ் கத்தினான்.

அவர்கள் கனடாவின் கரைக்கு வந்து விட்டார்கள். லூயிஸ்யும் டெய்லரும் வெளியே குதித்து படகை கரைக்கு இழுத்தார்கள்.


அருகிலுள்ள ஒரு தோட்ட வீட்டின் கதவைத் தட்டினான் லூயிஸ். வீட்டிலுள்ளவர்கள் அவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டால் என்ன செய்வது? லூயிஸ்க்கு மூச்சே நின்றது.

ஆனால் வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஆணும் பெண்ணும் வரவேற்றார்கள். உணவளித்தார்கள். அன்றிரவு லூயிஸ்யை தங்கச் சொன்னார்கள்.


'உன்னால் இந்த இரவில் திரும்பி போக முடியாது' என்றான் அந்த மனிதன்.

'நான் போக வேண்டும். நான் படகில் சென்றிருப்பது அம்மாவுக்குத் தெரியும். நான் திரும்பி போகாவிட்டால் மூழ்கி விட்டதாக அம்மா நினைப்பார்கள்' என்றான் லூயிஸ்.

சாரா அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். லூசி அவனின் கால்களைத் தழுவிக் கொண்டாள்.


இரு பையன்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள். 'நான் திரும்ப வருவேன். இருவரும் சேர்ந்து கோடையில் ஸ்டெர்ஜன் மீனைப் பிடிப்போம்' என்று லூயிஸ் உறுதியளித்தான்.

அவர்களை சுதந்தரமாக விட்டுவிட்டு லூயிஸ் கிளம்பினான்.

லூயிஸ்சின் முகத்தில் குளிர் காற்று அடித்தது. துடுப்பால் ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு லூயிஸ் படகைச் செலுத்தினான்.


இப்போது படகு எடையற்று இருந்தது. ஓட்டுவது சுலபமாக இருந்தது. அவன் மட்டும் தனியாக இருந்தது பயமுறுத்தியது. டெய்லரின் துணையை நினைத்துக் கொண்டான்.

அவன் பாடினான். அது துணையாக இருந்தது. 'படகு கவிழாமல் காப்பாற்றுக' என்ற வார்த்தைகள் காற்றில் கலந்து படகைத் தொடர்ந்தது. சாராவின் குரலையும் பிள்ளைகளின் குரலையும் கேட்டான்.

இருட்டில் தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. காற்று கூட அவன் வருகையை தெரிவித்துக் கொண்டிருந்தது. ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு படகு முன்னேறியது.


அவனுடைய அம்மா கரையில் காத்திருந்தார். கரையில் இறங்கியதும் அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.


அவன் சாராவையும் லூசியையும் டெய்லரையும் பற்றி அம்மாவிடம் சொன்னான்.

'அப்பா திரும்பி வந்தவுடன் சொல்வேன். அப்பா, நீங்கள் நினைத்ததை நான் செய்துவிட்டேன்' லூயிஸ் இதை அம்மாவிடம் சொன்னான்.


பின் குறிப்பு:

1850 டிசம்பர் மாதம். டெட்ராய்ட் நதி பனியால் உறைந்து விடும். அதில் படகுப் பயணம் தடை செய்யப்படும்.


இந்நிலையில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற கனடாவிற்கு தப்பியோடும் சாரா, அவளுடைய இரண்டு பிள்ளைகளைப் படகில் ஏற்றுக் கொண்டு ஆபத்தான படகுப் பயணம் செய்கிறான். 15 வயது சிறுவன் லூயிஸ். அவன் வெள்ளை இனத்தவன்.

லூயிஸ்சின் அப்பா படகோட்டி. வெளியூர் சென்றிருந்தார். அப்பா இருந்திருந்தால் அடிமைகள் விடுதலை பெற உதவியிருப்பார் என்று நினைத்து ஆபத்தான இந்த முடிவை லூயிஸ் எடுக்கிறான்.

'சுதந்தரநதியில் நண்பன்' இச்சிறுகதை உணர்ச்சிவேகம், இரக்கம், தைரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.


இக்கதையை எழுதிய குளோரியா வீலன் விருதுப் பெற்ற பெண் எழுத்தாளர். அவருடைய இன்னொரு நூலான Homeless Bird தேசிய விருதை வென்றது. அவர் தனது கணவர் ஜோவுடன் வட மிச்சிகனில் வசிக்கிறார்.

சுகுமாரன்
சுகுமாரன்

1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page