மா லியாங்கின் மாயத்தூரிகை
- எழில் சின்னத்தம்பி
- Sep 15
- 2 min read
சீனமொழியில்: ஹாங் ஷிண்டாவ் (1950)
ஆங்கிலம் வழி தமிழில்: எழில் சின்னத்தம்பி

முன்னொரு ஒரு காலத்தில், மா லியாங் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் ஏழை மனிதன். இரக்க குணம் கொண்டவன்; ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இரவு, அவன் ஒரு கனவு கண்டான். அதில் வயதான மனிதர் ஒருவர் மாயத் தூரிகை ஒன்றை அவனிடம் கொடுத்து, ஏழைகளுக்கு உதவ அதைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். விழித்துப் பார்த்தபோது, அந்த மாய தூரிகை அவனது மேசையில் இருப்பதைக் கண்டான்.
அன்றிலிருந்து, ஏழைகளுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அவன் அந்தத் தூரிகையைப் பயன்படுத்தினான். மக்கள் தங்கள் வயல்களுக்குப் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் இருப்பதை அவன் கண்டபோது, ஒரு நதியை வரைந்தான். அந்த நதி உயிர் பெற்றது. மக்கள் அந்த நதியிலிருந்து வயலுக்குத் தண்ணீர் கொண்டு வந்து தங்கள் பயிர்களை வளர்க்க முடிந்தது. கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கச் சிரமப்படுவதைக் கண்டபோது, அவர்களுக்குச் சாப்பிட உணவு வரைந்தான். விரைவில், பலர் மாயத் தூரிகையைப் பற்றி அறிந்தனர்; அவர்கள் மாயத்தூரிகையினால் பயன் பெற்று, மா லியாங்கிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் மோசமானவன். மேலும் பணக்காரனாக மாற அந்த இளைஞனிடமிருந்து தூரிகையைத் திருட முடிவு செய்தான். எனவே அவன் தனது வேலைக்காரர்களை மா லியாங்கின் வீட்டிற்கு அனுப்பி அந்த மாயத் தூரிகையை திருடச் செய்தான்.
தூரிகை அவனிடம் வந்ததும், அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தனது புதிய உடைமையைக் காண்பிக்கத் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்தான். அவர்கள் வந்ததும் அவன் நிறையப் படங்களை வரைந்தான்; ஆனால் அவை எதுவும் உயிர் பெறவில்லை.
தூரிகை அவனுக்காக வேலை செய்யாததால் அவன் மிகவும் கோபமடைந்து, மா லியாங்கிற்கு ஆள் அனுப்பி வரவழைத்தான்.
அவன் மா லியாங்கிடம் "நீ எனக்காகச் சில படங்களை வரைந்து அவற்றை உயிர்ப்பித்தால், நான் உன்னை விடுவித்து விடுவேன்" என்றான்.
மா லியாங் அந்த மோசமான மனிதனுக்கு உதவ விரும்பவில்லை, ஆனால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவன் அந்த கெட்ட மனிதனிடம், "நான் உங்களுக்கு என்ன வரைய வேண்டும்?" என்று கேட்டான்.
பணக்காரன், "எனக்கு ஒரு தங்க மலை வேண்டும். அங்கு சென்று நான் அந்தத் தங்கத்தை எல்லாம் எடுத்துக் கொள்வேன்" என்றான்.
ஆனால் மா லியாங் முதலில் ஒரு கடலை வரைந்தான்.
பணக்காரன் கோபமடைந்து, "ஏன் ஒரு கடலை வரைந்தாய்? எனக்கு ஒரு தங்கமலை வேண்டும். அதை விரைவாக வரை!" என்றான்.
எனவே மா லியாங் ஒரு தங்கமலையை வரைந்தான். அது கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தது.
பணக்காரன், "ஒரு பெரிய கப்பலை விரைவாக வரை. நான் மலைக்குச் சென்று தங்கம் சேகரிக்க வேண்டும்" என்றான்.
மா லியாங் அமைதியாகப் புன்னகைத்து ஒரு பெரிய கப்பலை வரைந்தான். பணக்காரன் கப்பலில் ஏறித் தங்கத்தைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் கப்பல் கடலின் நடுப்பகுதிக்குச் சென்றபோது, மா லியாங் அந்த ஓவியத்தில் ஒரு பெரிய அலையை வரைந்தான். அந்த அலை சுழன்றடித்துக் கப்பலை அழித்தது. அதன் பிறகு அந்தப் பணக்காரன் மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப வரவேயில்லை.
அதன் பிறகு, மா லியாங் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். வயதான மனிதர் கேட்டுக் கொண்டபடி ஏழைகளுக்கு உதவ மாயத் தூரிகையைப் பயன்படுத்தினான். அந்த மாயத் தூரிகை அனைவராலும் விரும்பப்பட்டு மென்மேலும் உதவிகள் செய்தது.
Comments