இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- காட்டின் உழவன்
இதோ இருவாச்சி வந்துவிட்டான். இவனுடைய தாத்தா தான், நான் இங்கு முளைக்கக் காரணம்.. ஆம் .. அதோ, அங்கே யானை மாதிரி ஒரு பாறை தெரியுதே! அங்கிருக்கும் அந்தக் காட்டு ஜாதிக்காய் மரத்தின் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, விதையையும் எச்சத்தோடு சேர்த்து இங்கே விட்டுச் சென்றார். நல்ல ஏதுவான நீரோட்டம் அருகே இருக்கிற சதுப்பு நிலம். நான் முளைத்துவிட்டேன். இன்று உயரமாக வளர்ந்து நிற்கிறேன். இப்போது அவரின் பேரன், பழங்களைக் கொண்டுபோக இங்கே வந்திருக்கிறான். “அக்கா முட்டையிடப் போறா.. அதான் பழங்கள் கொண்டு போக வந்திருக்கான்” என்று சொன்னது ஒரு கும்பாரா தவளை. அது காட்டு ஜாதிக்காய் மரத்தின் வேர்களில் அமர்ந்திருந்தது. “ஆளு துரும்பா இளைச்சு போயிட்டானே.. இதோ பாரு! எத்தனை பழங்களை அவன் அலகுல சேர்க்கிறான்.. ஆனா எல்லாமே அவன் இணைக்கு தான்.. இவன் பசியில கிடந்தாலும், அவளுக்கு கொண்டு போய்விடுவான்..” என்று சொன்னது காட்டு ஜாதிக்காய் மரம். “ஆமாம்.. செய்யணும் இல்ல.. இருவாச்சி அக்கா அங்க முட்டையிட போறாங்கள்ல ..” என்று கூறிய கும்பாரா தவளை, ஆண் இருவாச்சியைப் பார்த்து கேட்டது, “எப்போ குஞ்சு பொரிக்கும் அண்ணே?” மரத்தின் மேல் வந்து அமர்ந்த ஆண் இருவாச்சி, “முட்டையிட்ட பிறகு, சுமார் 40 நாள்ல குஞ்சு பொரித்துவிடும்... அவளுடைய இறகுகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே பொந்துக்குள்ள முட்டையிடத் தயாராக இருக்கிறாள்.. இந்த நேரத்துல நல்லா கவனிக்கிறது தான் எனக்கு முக்கியமான வேலை..” என்று சொல்லி இன்னொரு பழத்தை அலகில் அதக்கியது. “நேத்து ரொம்ப நேரம் தேடிக் கொண்டிருந்தாயே .. கிடைத்ததா?” காட்டு ஜாதிக்காய் மரம் கேட்டது. “பொதுவாக நாங்கள் பழங்களைத்தான் அதிகம் சாப்பிடுவோம். ஆனால் இனப்பெருக்கக் காலத்தில், குறிப்பாக குஞ்சுகள் வளரும்போது, பூச்சிகள், சிறு ஊர்வன, பாம்புகள் போன்ற உயிரினங்களையும் தேடிச் சாப்பிட வேண்டியிருக்கும். காடுகள் அழிப்பு காரணமாக பூச்சிகளும் சிறு விலங்குகளும் குறைந்து கொண்டே போகின்றன.” கவலையோடு சொன்னது இருவாச்சி. “ஆமா பா.. நாங்க எப்போதுமே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் வாழ்கிறோம். எப்போ வெட்டுவாங்களோ என்று பயந்து பயந்து வாழ வேண்டியுள்ளது.” என்றது காட்டு ஜாதிக்காய் மரம். “நாங்க வழக்கமா முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது ஒரு சீனி மரத்தில். அந்த 100 வருட வயதான மரத்தை வெட்டிட்டாங்க. எல்லா மரங்களிலும் நாங்க குஞ்சு பொரிக்க முடியாது. பெரியதாகவும், வயதானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மரங்களில் உருவாகும் பெரிய பொந்துகள் எங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதில் எங்களால் பாதுகாப்பாகக் கூடு அமைக்க முடியும். எங்க இணையர் அம்மா.. உடனேலாம் ஓகே சொல்ல மாட்டாங்க.. நன்றாக பாத்து, யோசித்து தான் எங்கள் வீட்டைத் தேர்வு பண்ணுவாங்க.. இந்த முறை மரம் தேடியே நான் ஓஞ்சு போய்விட்டேன்” சலித்துக்கொண்டது இருவாச்சி. அதற்கு காட்டு ஜாதிக்காய் மரம், “வயதான மரங்கள் இல்லனா நீங்க அழிந்துவிடுவீர்கள்.. நீங்க இல்லனா இந்தக் காடே இல்லையே. நீங்கள் சாப்பிட்டுவிட்டு போடுகிற எச்சத்தில் தானே எத்தனையோ மரங்கள் உருவாகியிருக்கின்றன. அதுக்கு என்னமோ பெயர் வைத்து இருக்கிறார்களே. உங்களுக்கு.. என்ன அது..?” என்று தன் உச்சிக் கிளையை காற்றில் சொறிந்துகொண்டே கேட்டது. “காட்டின் உழவன்.” என்றது கும்பாரா தவளை கரகரத்த குரலில். “பெயர் மட்டும் நல்லா வைக்கிறார்கள் இந்த மனிதர்கள்.. ஆனா செய்வது எல்லாம் நமக்கு எதிரான வேலைகள்..” என இருவாச்சி சொன்னது. “அட.. நமக்கு மட்டுமா.. இயற்கை அழிப்பு என்பது மனிதர்களுக்கும் எதிரானது தானே.” என்றது காட்டு ஜாதிக்காய் மரம். “தனக்கு எதிரான வேலையை எப்படி தானே செய்கிறார்களோ.. இந்த மனிதர்கள். அபத்தமாக இல்லை?” என்று கேட்டது இருவாச்சி. மூவரும் சிரித்தார்கள். எதையோ கவனித்த கும்பாரா தவளை, பதற்றத்துடன் கேட்டது, “என்ன அண்ணே. என்ன ஆச்சு? கழுத்தில் காயம் இருக்கிறதே.” “நேற்று ஒருவன் என் இணையை வேட்டையாட வந்தான். நான் சரியான நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தேன். அவன் என்னைக் கவனிக்கும் முன், நான் அவனை அலகால் தாக்கினேன். அவன் வைத்திருந்த ஆயுதத்தால் என்னைத் தாக்கினான். எங்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம். நான் என் முழு பலத்தையும் கொண்டு போராடினேன். ஓடிப்போய்விட்டான். ஏதோ நேற்றைய பொழுது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உயிர் பிழைத்தோம்.” என்று சொன்னது இருவாச்சி. “அய்யோ. கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே. அவர்கள் ஏன் உங்களை வேட்டையாட வந்தார்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்ட பறவைகள் என்று அறிவிக்கப்பட்டவர்களாச்சே!” என்றது கும்பாரா தவளை. “கேவலம், எங்கள் அலகுக்காகவும் தலைக்கவசத்திற்காகவும் தான் எங்களை வேட்டையாட துடிக்கிறார்கள். இவை எங்கள் இனத்தின் இயற்கையான உடல் அமைப்புகள். உணவு தேடவும், எதிரிகளோட சண்டை போடவும், இன்னும் பல வேலைகளுக்கும் அவை உதவுகின்றன. எங்களைக் கொன்று எங்கள் அலகையும் தலைக் கவசத்தையும் பியித்து எடுக்கிறார்கள். அதில் என்னத்த அழகைக் கண்டார்களோ! ஒன்னும் புரியவில்லை.” என்று கவலையோடு சொன்னது இருவாச்சி. “ஒரு உயிரை அதன் வாழ்விடத்தில் வாழும்போது ரசிப்பது தானே அழகு. இப்படி செய்வது எப்படிப் பட்ட கொடூரச் செயல். ச்ச..” என்று சொன்னது காட்டு ஜாதிக்காய் மரம். இப்போது இன்னும் கொஞ்சம் பதற்றத்துடன் வேகவேகமாக பழங்களை சேகரித்தது இருவாச்சி. “சரி.. நேரம் ஆச்சு .. அவள், அந்த மரப்பொந்துக்குள்ள எனக்காக காத்திருப்பாள்.. கிட்டத்தட்ட இந்த மூன்று மாசம் அடைபட்டுக் கிடக்கிறாள். அவள் உலகத்தை ஒரு சின்ன ஓட்டை வழியே பாத்து வாழ்கிறாள்.. என்னை நம்பி தான் இருக்கா.. நான் கிளம்புறேன்.” என்று சொல்லிப் பறந்தது இருவாச்சி. “பத்திரமா போய் வாங்க அண்ணே!” என்றது கும்பாரா தவளை. மஞ்சள் நிறக் கழுத்து சூரிய ஒளியில் தங்கம் போல மின்னியது. கருப்பு வெள்ளை சிறகுகளை அசைத்தது. ஆண் இருவாச்சி தன் கூட்டை நோக்கிப் பறந்து போகிறது. அதை காட்டு ஜாதிக்காய் மரம் பார்த்துக் கொண்டே இருந்தது. அதோ பாருங்கள்! பளபளக்கும் மஞ்சள் அலகில் வைத்திருந்த பழங்களை ஒவ்வொன்றாய் எடுக்கிறது ஆண் இருவாச்சி. அவற்றை பொந்துக்குள் காத்திருந்த பெண் இருவாச்சிக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது. சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- இறுதி மரியாதை
”சாப்ளின், பக்கத்துவீட்டுத் தாத்தா இறந்துட்டாராம். காலையில நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரி கூட்டிகிட்டு போனாங்க. காப்பாத்த முடியலையாம். நான் போய் லீவு சொல்லிட்டு வரேன்” சாப்ளினுக்கு இடி விழுந்ததுபோல இருந்தது. தட்சிணா தாத்தைவைத்தான் மலைப்போல நம்பி இருந்தான். தட்சிணாமூர்த்தி என்ற தட்சிணா தாத்தா சாப்ளினின் இரண்டாம் வீட்டில் இருக்கின்றார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு ஒரு கல்லூரியில் சேர தட்சிணா தாத்தா உதவுவதாகச் சொல்லி இருந்தார். சாப்ளின் ஏழாவது படிக்கும்போதே அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா ஒரு பட்டு மளிகையில் வேலை செய்கின்றார். பள்ளிக்கு என்று செலவு எதுவும் இருக்கவில்லை. சக மாணவர்களைப்போல எதுவும் பெரியதாக சாப்ளின் ஆசைப்பட்டதும் இல்லை. தினமும் காலையில் மற்றவர்கள் டியூசன் போவார்கள். இவன் தட்சிணா தாத்தாவுடன் நடக்கச் செல்வான். கொஞ்ச தூரம் ஓடுவான். கொஞ்சம் அவரோடு நடப்பான். நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு டீ குடித்துவிட்டுத் திரும்புவார்கள். “தாத்தா, டீல சர்க்கரை கூடாது. ஆயாகிட்ட சொல்லிடுவேன்” என சாப்ளின் மிரட்டுவான். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த தினம் காலை 6 மணிக்கு எல்லாம் சிவன் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு பள்ளி வாசலில் காத்திருந்தார் தட்சிணா தாத்தா. “ஏண்டா சாப்ளின், ரிசல்ட் எல்லாம் பேப்பர்ல வரதில்லையா?” என்றார். மதிப்பெண் பட்டியலே அப்போது சாப்ளின் கையில் இருந்தது. பதினொன்றாம் வகுப்பு எந்த க்ரூப் என தேர்ந்து எடுக்க தாத்தாதான் உடன் வந்தார். “மேடம், எந்த க்ரூப் எடுத்தா வெளிநாட்டுக்கு எல்லாம் போய் பெருசா வருவானோ அதில் சேர்த்திவிடுங்க” என சிபாரிசு செய்தார். ”தாத்தா, நான் இங்கதான் இருப்பேன்” என்றான் சாப்ளின். ஆனால், அவனுக்குப் பிடிக்காத க்ரூப்தான் கொடுத்தார்கள். அந்த மதிப்பெண்ணிற்கு அவ்வளவுதான் தரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். தெருவில் சாவு மேளம் கேட்டது. இதை கேட்கும்போதெல்லாம் சாப்ளினின் அப்பா இறந்தது சாப்ளின் நினைவிற்கு வரும். வீட்டைச் சாத்திக்கொண்டு ஓடோடினான். தாத்தாவை வராண்டாவில் கடத்தி இருந்தார்கள். “சாப்ளின்னு... சாப்ளின்னு..பாருடா தாத்தாவை” எனப் பாட்டி ஒப்பாரி வைத்தார். இடிந்துவிழுவது என்றால் என்னவென அப்போதுதான் சாப்ளின்னுக்கு புரிந்தது. அப்பா இறந்தபோது அதன் தாக்கம் அப்போது அவனுக்குப் புரியவில்லை. இரண்டுங்கெட்டான் வயது. இப்போது தாத்தாதான் தனக்கான வெளிச்சம் என நினைத்துக்கொண்டு இருந்தான். கண்கள் இருட்டானது. “சாப்ளின், சைக்கிள் எடுத்துகிட்டுபோய் பந்தலுக்கு மட்டும் சொல்லிட்டு வந்துடு” என்றார் தாத்தாவின் மூத்த மருமகன். விடியற்காலையில் நெஞ்சுவலி என பாட்டியிடம் சொல்ல, உடனே உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கிருந்து வேலூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கின்றார்கள். காலை 4.30க்கு எல்லாம் உயிர் பிரிந்துவிட்டுள்ளது. எல்லோருக்கும் அப்பவே தகவல் சொல்லியாச்சு. அன்று மாலையே உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு வேகமாக நடந்தது. சாப்ளின் வேட்டியில்தான் இருந்தான். அவன் போடும் இரண்டு பேண்ட்களும் தாத்தா வாங்கி தந்தவைதான். வேண்டாம் என அம்மா சொன்னபோது, “என் மகளோட பையன் எனக்கு யாரு? பேரன் தானே” என்று கோபமாக கடிந்துகொண்டார் தாத்தா. ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்துபோனது. அப்பா இறந்தபோது தனியாளாக நின்று எந்த சடங்கு சம்பிரதாயமும் கூடாது என்று போராடினார். அம்மா பல சடங்குகளிலிருந்து தப்பித்தார். “இவன் போராளிடா அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்க” என அப்போது சத்தம்போட்டார். அப்பா ஊருக்காக உழைத்தவர் என அம்மா அடிக்கடி சொல்வார். எந்த பழக்கமும் இல்லை, திடீரென இறந்துவிட்டார். நூறு மாஸ்க் வாங்கி வந்தான் சாப்ளின். கொரோனா கெடுபிடிகள் இல்லை என்றாலும் முதல் மருமகன் எல்லோருக்கும் மாஸ்க் கொடுத்தார். கட்டாயப்படுத்தினார். முகத்தை மூடிக்கொண்டதால் முக்கால்வாசி நபர்கள் முகமே சரியாகத் தெரியவில்லை. விழுந்த மாலைகளை எல்லாம் ஓரமாக அடுக்கும் வேலை சாப்ளினுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. மிகுந்த சோர்வாக எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். இப்படி சாப்ளினை எப்போதாவது சோர்வாகப் பார்த்தால் உடனே தாத்தா அவனுக்கு ஏதாவது சாப்பிட வாங்கி தருவார், இல்லையேல் பாட்டியிடம் சாப்பாடு போடச்சொல்வார். அழுதுகொண்டே இருந்த சாப்ளினின் அம்மா இரண்டுமுறை சாப்ளினிடம் வந்து “இந்தா போய் ஏதாச்சும் சாப்பிட்டுவா” என காசினைக் கொடுத்தார். வேண்டாம் என மறுத்துவிட்டான். டீ கேன் வாங்கி வந்தபோது இரண்டு டீ குடித்ததோடு சரி. “டேய், அழுதுடுடா. மனசுக்குள்ளயே அழுகையை வெச்சிக்காத” என்றும் கரிசனமாகக் கூறினார். பளபளக்கும் கார் ஒன்று தெருமுனையில் நின்றது. கீர்த்தி அப்போது ஏதோ வேலையாக அங்கே நின்றுகொண்டிருந்தான். காரின் பின்னாடி கண்ணாடியில் “மகேஸ்வரன்” என்று எழுதி இருந்தது. அந்த காரினை இந்த ஊரில் பார்த்ததே இல்லை சாப்ளின். அதனால் ஒவ்வொரு அங்குலமாக அளந்தான். அதில் இருந்தவர் பெரிய மாலையுடன் தாத்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டார். அங்கே இருந்தவர்கள் யாரும் அவருடன் பேசவில்லை. கால்மணி நேரம் அமைதியாக அங்கே இருந்தவர் கொஞ்ச நேரம் குலுங்கிக் குலுங்கி அழுதார். சாப்ளின் மட்டும் இதனை எல்லாம் கவனித்தான். பின்னர் கிளம்பிச் சென்றுவிட்டார். இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை. ஒப்பாரி சத்தம் மட்டும் சாப்ளினின் மனதைப் பிசைந்தது. அதைவிட அவன் எதிர்காலம் நினைத்து இன்னும் வருத்தமாக இருந்தான். ஆதாரமாக இருக்க வேண்டிய அப்பாவும் இல்லை, அம்மாவால் எவ்வளவு முடியுமோ அதனைச் சிறப்பாகச் செய்கின்றார், கைக்கொடுப்பார் என நினைத்த தாத்தாவும் இவனை விட்டுச் சென்றுவிட்டார். தாத்தாவிற்கு விழுந்த மாலைகளை எல்லாம் இறுதி ஊர்வலத்திற்கு வந்த வண்டியில் தூக்கிப் போட்டான் சாப்ளின். இடுகாடு வரையில் சாப்ளினும் உடன் சென்றான். புதைப்பதற்கு எல்லா ஏற்பாடும் நடந்து இருந்தது. சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. “கடைசியா முகத்தை பார்த்துக்கோங்க” என்ற போது இரண்டு கைகூப்பி வணங்கினான் சாப்ளின். அரசமரத்தின் கீழே அமர்ந்தான். இருட்டிக்கொண்டு வந்தது. யாரும் அங்கே இல்லை. தாத்தா எழுந்து வந்து “சாப்ளினு”ன்னு சொல்லுவார் என நினைத்தான். மரணம் பற்றிய பயமோ இறந்தவர்கள் பேயாக வருவார்கள் என்ற அச்சமோ சாப்ளினுக்கு இருக்கவில்லை. புல்லட் சத்தம் கேட்டது. தாத்தாவின் முதல் மருமகன் “சாப்ளின், இங்க என்ன செய்யற, வா வீட்டுக்குப் போகலாம்” என அழைத்துச் சென்றார். வாசலிலேயே குளித்துவிட்டு வீட்டிற்குள்ளும் சென்று குளித்து முடித்தான். தாத்தா பொங்கலுக்குக் கொடுத்த வேட்டியைக் கட்டிக்கொண்டான். “நாலு இட்லிய ராசாத்தியக்கா கடையில் வாங்கி வந்திருக்கேன். சாப்பிட்டுபடு” எனச்சொல்லி அம்மா படுக்கச் சென்றுவிட்டார். உடல் அசதி. அதனைவிட மனம் அசதியாக இருந்தது சாப்ளினுக்கு. வாசலில் யாரோ வந்து “இசக்கி மாமா உன்னை வரச்சொன்னார்” என்று செய்தி சொன்னார். தட்சிணா தாத்தாவின் முதல் மருமகன் தான் இசக்கி. "சாப்பிடக் கூப்பிடுவார் போ", என அம்மா போகச்சொன்னார்கள். தாத்தாவைக் கிடத்திவைத்த இடத்தை நன்றாகக் கழுவி இருந்தனர். கொஞ்ச நேரம் அங்கே நின்று வெறித்துப் பார்த்திருந்தான். “மாமா மேல இருக்கார் சாப்ளின். மாடிக்கு வரச்சொன்னார்” என்று ஒரு குரல். இசக்கி அடுத்தடுத்து என்ன காரியங்கள் என எழுதிக்கொண்டு இருந்தார். சாப்ளின் நின்றதை கவனித்துவிட்டு டயரியில் இருந்து ஒரு கவரை எடுத்தார். “சாப்ளின், தாத்தாவைப் பெரிய ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போற வழியில என்கிட்ட ஒன்னு சொன்னார். அவருக்கு அதுதான் கடைசி இரவுன்னு முன்னவே தெரிஞ்சு இருக்கு. ஒரு விசிட்டிங் கார்ட்டும் ஒரு லெட்டரும் இந்த டயரில இருக்கு கொடுத்திடுன்னு சொன்னார். இந்த கார்டில் இருப்பவரை பார்த்தால் உன் காலேஜ் சீட்டுக்கு ஏற்பாடு செய்வாராம். என்ன காலேஜ்ல படிக்கணுமோ அதில் அவர் ஏற்பாடு செய்வாராம். தாத்தா அவரை படிக்கவெச்சிருக்கார் போல. இந்தா லெட்டர். அப்புறம் உன் படிப்புச் செலவு எவ்வளவோ அது மொத்தத்தையும் நானே பார்த்துக்கறேன். எவ்வளவு லட்சம் செலவானாலும் பரவாயில்லை. எது உன் விருப்பமோ அதில் சேர்ந்து படி” என்று கவரை ஒப்படைத்தார். சாப்ளினின் உடல் சில்லென்று மாறியது. ஆழ்கிணற்றில் கூவிக்கொண்டே விழுந்து கொண்டிருப்பவனை யாரோ கைப்பிடித்துக் காப்பாற்றியது போன்ற உணர்வு. கவரை பிரித்தான். உள்ளே “மகேஸ்வரன்” என்ற பெயர் பொறித்த விசிட்டிங் கார்ட். அந்த நவீன வெள்ளைக்காரில் வந்தவர்தான் மகேஸ்வரன். ஒரு லெட்டர் இருந்தது. முன்னிரவு எழுதி இருக்க வேண்டும். அவருக்கு நிச்சயம் அது தன் கடைசி இரவு எனத் தெரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றார். லெட்டரில் ஒரே வரிதான். கிறுக்கல் கையெழுத்து. “பெரிய ஆளா வா ராசா”. இதனைப் படித்ததும் கண்களில் அவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வீடே நடுங்கும் அளவிற்குக் கதறி அழுதான்..”தாத்தா...” என்று. விழியன் தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்· கணிதப் பரப்புரையாளர் · கல்விச் சீர்திருத்தப் பங்களிப்பாளர் – AI கல்வியறிவு வடிவமைப்பாளர். சிறுவர்களுக்காகவும் அவர்களைப் பற்றியும் 70 புத்தகங்கள் மற்றும் 350 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சிறுவர்களினையய வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், கணிதச் சிந்தனைனய ஊக்குவிக்கவும் செயல்படுகிறார்; பள்ளிக் கல்வியில் AI-ன் பயன்பாட்டையும் ஆராய்கிறார்.
- 'பறவைகளின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு' - சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம்
சந்திப்பு : பா.செல்வ ஸ்ரீராம் கவிஞரும் சூழலியல் செயல்பாட்டாளருமான கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் குறித்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'காடறிதல்' என்ற பயண வழிக் கற்றல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சூழலியல் அழிவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பறவைகளின் மீது எனக்குள் ஏற்பட்ட ஈர்ப்பு, மெல்ல மெல்ல அவற்றைப் பார்க்கவும், கவனிக்கவும், பதிவு செய்யவும் என்னைத் தூண்டியது. அந்தப் பயணம் என் வாசிப்பையும் பசுமை இலக்கியம் நோக்கி நகர்த்தியது. அந்த வாசிப்பில் எனக்கு மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது எழுத்தாளர் கோவை சதாசிவம் தாத்தா அவர்களின் ஊர்ப்புறத்துப் பறவைகள் நூல். என்னைச் சுற்றி வாழும் பறவைகளைப் புதிதாகப் பார்க்கவும், அவற்றைக் கவனித்து பதிவு செய்யவும் அந்த நூல் என்னைத் தூண்டியது. அவருடைய நூல்களோடு, பல்வேறு சூழலியல் எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொடர்ந்து வாசித்ததன் மூலம் பறவைகளைப் பற்றிய அறிவோடு, நாம் வாழும் சூழலின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. எந்தச் சந்தேகம் என்றாலும் எளிமையாகத் தொடர்புகொண்டு கேட்கக்கூடிய அளவுக்கு இயல்பான மனிதர் கோவை சதாசிவம் தாத்தா. அவருடன் இந்த நேர்காணல் மூலம் உரையாடக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி தருகிறது. ஸ்ரீராம் : வணக்கம் தாத்தா.. கவிஞராகத் தொடங்கிய உங்கள் பயணம் எப்போது பசுமை இலக்கியம் நோக்கித் திரும்பியது? அந்தத் திருப்பத்தைப் பற்றி சொல்லுங்களேன். கோவை சதாசிவம் :- ஒருவர் கவிஞராகவே இருந்து காலத்தைக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. படைப்பாளியின் பயணத்தில் ஒரு படிநிலை வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எப்போதும் பொதுவானதுதான். கவிதையில் தொடங்கிய ஒருவர் சிறுகதையை நோக்கி நகர்வதும், சிறுகதைகளில் ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகு நாவலை நோக்கிப் பயணிப்பதும், படைப்பின் வெவ்வேறு தளங்களைத் தேடிச் செல்வதும் அந்தப் படிநிலை வளர்ச்சியின் அடையாளங்கள்தான். நானும் கவிஞனாகத்தான் இருந்தேன். மக்களின் அவலங்களையும் துயரங்களையும் என் கவிதைகளுக்குள் வடித்துக் கொண்டிருந்த எனக்கு, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. குறிப்பாக, திருப்பூரில் வாழ்ந்த எனக்கு, அங்கு நிலவிய சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது என்னைத் தொடர்ந்து சிந்திக்க வைத்த ஒரு முக்கியமான களமாக இருந்தது. சூழலியலில் மிக மோசமான ஒரு களத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அந்தச் சூழலியலைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒரு படைப்பாளிக்குள் இயல்பாகவே உருவாகிறது. அது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தல்ல; தான் வாழும் நிலம், தான் பார்க்கும் மனிதர்கள், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை படைப்பாளியின் உள்ளுக்குள் உருவாக்கும் இயல்பான மனவோட்டம். அந்த மனவோட்டத்தின் அடிப்படையில்தான் நான் பசுமை இலக்கியத்தை நோக்கி நகர்ந்தேன். பசுமை இலக்கியம் என்பது எனக்கு வெறுமனே கவிதைக்கான இன்னொரு களம் அல்ல. அதற்குள் கவிதையோடு மட்டும் நின்றுவிடாமல், கட்டுரைகள், பாடல்கள், நாடகங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இயங்கத் தொடங்கினேன். இன்னும் சொல்லப்போனால், தோல்பாவைக் கூத்து, அதாவது நிழல் பாவைக் கூத்து போன்ற கலை வடிவங்களைக்கூட சூழலியல் சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஊடகங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ஏனென்றால், சூழல் குறித்த ஒரு கருத்து எழுதப்பட்ட பக்கங்களுக்குள் மட்டும் சிக்கிக் கிடக்கக் கூடாது. அது மக்களிடம் எளிமையாகச் சென்றடைய வேண்டும்; குழந்தைகள் அதைத் தங்களுக்கான மொழியில் புரிந்துகொள்ள வேண்டும்; நாம் வாழும் நிலத்தோடும், நீரோடும், காற்றோடும், பறவைகளோடும், மரங்களோடும் அவர்களுக்கு ஓர் உறவு உருவாக வேண்டும். அதற்காகத்தான் பன்முகத்தன்மையோடு இன்றைக்கும் செயல்பட்டு வருகிறேன். பன்முகத்தன்மை என்பது எனக்குப் புதிதான ஒன்றல்ல; அது ஒரு படைப்பாளியின் இயல்பான பயணம்தான். ஒருவர் ஒரே இலக்கிய வடிவத்திற்குள்ளேயே தேங்கி நின்றுவிடாமல், இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் அதன் சாத்தியங்களையும் தேடிப் பார்ப்பதுதான் படைப்பு மனதின் வெற்றி என்று நான் கருதுகிறேன். ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தையும், தான் வாழும் நிலத்தையும், அந்த நிலத்தின் வலியையும் உணர்ந்து, அதற்கேற்ற புதிய மொழிகளையும் புதிய வடிவங்களையும் தேடிச் செல்வதே அவனுடைய படைப்புப் பயணத்தின் அடுத்த கட்டம். அந்த வகையில், கவிதையிலிருந்து பசுமை இலக்கியத்தை நோக்கிய எனது பயணம் என்பது ஒரு திடீர் திருப்பமல்ல; நான் வாழ்ந்த நிலமும், நான் கண்ட மனிதர்களும், நான் எதிர்கொண்ட சூழலியல் நெருக்கடிகளும் என்னை இயல்பாக அழைத்துச் சென்ற அடுத்த படிநிலை. ஸ்ரீராம்: அருமை தாத்தா. என்னைப் போன்ற குழந்தைகளை இயற்கையின் பால் திருப்ப வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது புத்தகங்களையா, மரங்களையா, பறவைகளையா? கோவை சதாசிவம்: குழந்தைகளுக்கு புத்தகங்களைக் கொடுத்து இயற்கையைப் புரிய வைப்பதைக் காட்டிலும், மரங்களை நடச் சொல்லி அல்லது மரங்களைப் பற்றிப் பேசி மரங்களின் பால், இயற்கையின் பக்கம் அவர்களை ஈர்ப்பதற்கும், பறவைகளைக் காட்டி அவர்களை ஈர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு குழந்தையை இயற்கையின் பக்கம் திருப்ப வேண்டுமானால், முதலில் அவர்களுக்குக் காட்ட வேண்டியது பறவைகளாக இருக்க வேண்டும். பாரதி சொல்வான், “வண்ணப் பறவைகளைக் கண்டு, நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” என்று. அதனால் குழந்தைகள் பறவைகளின் மீது எப்போதும் ஒரு பிரியத்தோடு இருப்பார்கள். பல வண்ணங்களில் அவர்கள் கண்ணெதிரே பறந்து போகிற பறவையின் மீது அவர்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும். முதலில் பறவைகளில் தொடங்கினால், அவர்கள் அந்தப் பறவையைப் பார்க்கத் தொடங்குவார்கள். பிறகு, அந்தப் பறவைக்கு என்ன பெயர் என்பார்கள். அந்தப் பறவை என்ன சாப்பிடுகிறது என்பார்கள். கூடு கட்டுகிறதா? எங்கே குஞ்சு பொரிக்கிறது? எதைச் சாப்பிடுகிறது? என்று கேட்கத் தொடங்குவார்கள். ஒரு பறவையின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள ஒரு குழந்தை முனையும்போதுதான் அவர்களுக்குள் இயல்பாகவே இயற்கையின் மீதான தேடல் தொடங்கும் என்பேன். ஆக, நான் குழந்தைகளுக்கு பறவைகளை முதலில் காட்டி, பறவைகளின் பழக்கத்தைச் சொல்லி, அவற்றின் பழக்க வழக்கங்களைச் சொல்லி, அது கூடு வைக்கும் முறை, அது எப்படி கத்தும், ஏன் கத்தும் என்று பறவையைப் பற்றி சொல்கிறபோதுதான் ஒவ்வொரு குழந்தையும் ஈர்க்கப்படும். ஆக, பறவைகளைப் பற்றிச் சொல்வதுதான் புத்தகங்களைக் காட்டிலும், மரங்களைக் காட்டிலும், பறவைகளைக் காட்டித்தான் குழந்தைகளை வெகுவாக நாம் ஈர்க்க முடியும் என்பது என் கருத்து. ஸ்ரீராம்: அருமையான பதில். தாத்தா, நீங்கள் பார்த்த பறவைகளில், மனிதர்களுக்கு ஆசானாக இருக்கக்கூடிய பறவை என்று எதைச் சொல்வீர்கள்? ஏன்? கோவை சதாசிவம்: நான் பார்த்த பறவைகளில் எல்லாப் பறவைகளுமே நமக்கு ஆசான்கள் தான். எல்லாப் பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பறவையும் தன்னுடைய வாழ்க்கைத் தேடலில், வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு செய்திகளை நமக்கு வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் தன்னுடைய வாழ்க்கை முறையிலே, மாறுபட்ட வாழ்க்கைப் போக்கைக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொரு பறவையிடத்திலும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. குறிப்பாக அதன் ஒற்றுமை, அதன் உழைப்பு. தூக்கணாங்குருவிக் கூட்டில் இருந்து நுட்பமான ஒரு உழைப்பை நாம் கற்றுக்கொள்ளலாம். இருவாச்சிப் பறவையிலிருந்து நல்ல காதலைக் கற்றுக்கொள்ளலாம். எல்லாப் பறவைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனுடைய மனதை மேம்படுத்துவதற்கும், மனிதனின் வாழ்வைப் பண்படுத்துவதற்கும் நிச்சயமாக உறுதுணையாக இருக்கும். எங்கோ 15,000 மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து வரும் பறவைகளைக்கூட நாம் இங்கு பார்க்க முடியும். இப்படி உலகம் முழுவதும் வலம் வருகின்ற பறவைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. அதற்கெல்லாம் ஓர் ஆயுள்தான் போதாது. ஆக, நாம் பார்க்கிற ஒவ்வொரு பறவையும் — சிட்டுக்குருவியாகட்டும், காகமாகட்டும், நாகணவாயாகட்டும் — நம்மைச் சுற்றி வாழ்கிற ஒவ்வொரு பறவையும் நமக்கு நல்ல ஆசான்கள்தான். அவைகளிடத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நமக்கு நல்ல ஆசான்கள் பறவைகள்தான். ஸ்ரீராம்: ஆமாம் தாத்தா. அந்த சின்னஞ்சிறு உயிர்கள் நமக்கு மிகப்பெரிய ஆசான்கள். தாத்தா, கைபேசியையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை வானத்தைப் பார்க்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை அது கவனிக்கத் தொடங்கும்போது, அந்தக் குழந்தைக்குள் என்ன மாற்றம் ஏற்படும்? கோவை சதாசிவம்: நிச்சயமாக மாற்றம் ஏற்படும். கைபேசியின் திரையில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் கவனம், வானத்தை நோக்கித் திரும்பும்போது அது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பார்க்கத் தொடங்குகிறது. குறிப்பாக, பறந்து செல்லும் ஒரு பறவையைப் பார்க்கும்போது, அந்தப் பறவை எங்கே போகிறது, என்ன பறவை, எங்கிருந்து வந்தது, என்ன செய்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் குழந்தைக்குள் இயல்பாகவே உருவாகும். அந்த ஆர்வம்தான் குழந்தையை இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும். குழந்தைகளுக்கு காட்சியாக ஏதாவது ஒன்று வேண்டும். குழந்தைகள் இன்றைக்கு செல்பேசியைக் கேட்டு வாங்குகிறார்கள். பெரியவர்களிடம் கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லாமல் ஒரு குழந்தை செல்போனைக் கேட்டு வாங்கிக்கொள்கிறது. அதில் திரையில் ஏதேனும் ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம், குழந்தைகளுக்குக் காட்சியைப் பார்க்கப் பிடிக்கும். அது என்ன காட்சி என்றாலும்கூட, ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கப் பிடிக்கும். அதனால்தான் செல்போன்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. “சொல் பேச்சு கேட்காத குழந்தைகள்கூட செல் பேச்சு கேட்கிறார்கள்” என்று கவிதை எழுதும் அளவுக்கு, செல்போனும் குழந்தைகளும் பிரிக்க முடியாத சக்திகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால், செல்போனில் வருகின்ற எந்த ஒரு காட்சியும் குழந்தைக்கு அறிவைத் தராது; அந்தக் குழந்தையைச் சிந்திக்கவும் வைக்காது. அதற்கு மாற்றாக நாம் ஒரு பைனாக்குலரை வாங்கித் தரலாம். தமிழில் அதற்கு “இருகண் நோக்கி” என்று சொல்வார்கள். அந்த இருகண் நோக்கியை வைத்து முதலில் அவர்கள் வானத்தைப் பார்க்க வைக்க வேண்டும். வானத்தில் தவழும் மேகங்களைப் பார்ப்பார்கள். பறவைகளைப் பார்ப்பார்கள். இந்த விரிந்த வானம் அவர்களுக்கு மிகப்பெரிய காட்சிப் பிம்பத்தை ஏற்படுத்தும். ஒரு காட்சி வேண்டுமென்றால் அவர்கள் வானத்தைப் பார்க்க வேண்டும்; பைனாக்குலரில் பார்க்க வேண்டும்; பறக்கின்ற பறவைகளைப் பார்க்க வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஒரு பறவை பறக்கிறது, பறக்கிற பறவை என்ன பறவை என்றும் தெரிந்துகொள்கின்ற அளவிற்கு அவர்களுக்குக் கவனம் ஏற்படும். குழந்தைகளுக்குக் காட்சி முக்கியம். எந்தக் காட்சியைக் காட்ட வேண்டும் என்பதை முடிவெடுப்பது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் நல்ல காட்சியைக் காட்ட வேண்டுமானால், செல்போனைப் பிடுங்கிவிட்டு அந்தக் குழந்தைகளின் கைகளில் பைனாக்குலரைத் தர வேண்டும். ஸ்ரீராம்: தாத்தா, பறவைகளைப் பார்க்கத் தொடங்கிய குழந்தைகள், மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றியும் சூழலைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள் அல்லவா? அப்படியிருக்கும்போது, சுற்றுச்சூழலைப் பற்றி குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது? அவர்களைப் பயமுறுத்தாமல், எளிமையாக ஒரு கதை போல அவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? கோவை சதாசிவம்: சுற்றுச்சூழலைக் குழந்தைகளுக்கு முதலில் சொல்லும்போதெல்லாம், நாம் பெரியவர்களிடம் சொல்வதைப் போலவே சுற்றுச்சூழலைப் பற்றி சொல்லிவிட முடியாது. குழந்தைக்கு இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை, பெரியவர்களுக்குச் சொல்வது போல குழந்தைகளிடம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது. குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் என்பது, அவர்களைச் சுற்றி வாழும் உயிர்களை அடையாளப்படுத்துவதுதான். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதும் சுற்றுச்சூழலின் அடிப்படை விதிதான். ஒழுங்காக நடந்துகொள்வதுகூட சுற்றுச்சூழலின் ஓர் அடிப்படை விதிதான். ஆக, குழந்தைகளுக்கு நாம் கதையாகச் சொல்லும்போது, அது குழந்தைகளுக்குப் புரிந்த உலகமாக இருக்க வேண்டும். குழந்தைகள் பேசுகின்ற சொல்லாடலாக இருக்க வேண்டும். அந்தச் சொல்லாடலில்தான் அவர்களைச் சுற்றி வாழ்கின்ற உயிரினங்களைப் பற்றிய அறிமுகத்தை நாம் தொடங்க வேண்டும். இதுதான் சுற்றுச்சூழலின் தொடக்கமாக இருக்க வேண்டும். பிறகு அதன் அழிவு என்ன என்பதைப் பற்றி சொல்லலாம். முதலில் ஆக்கங்களை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் படைப்பு நுட்பங்களை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அதை நாம் ஏன் அழிக்கிறோம், அதன் விளைவுகள் என்ன, அதனால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன என்பதையெல்லாம் சொல்லித் தரலாம். குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகள் எளிமையாக இருக்க வேண்டும். அவர்களுடைய சொல்லாடல்களாக இருக்க வேண்டும். அவர்கள் பார்க்கிற காட்சியாக இருக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை விதி . ஸ்ரீராம்: தாத்தா, மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்படுகிறது. ஒருவேளை மேற்குத் தொடர்ச்சி மலைகள் நமக்கு இல்லாமல் போயிருந்தால், தமிழகம் எப்படி இருந்திருக்கும்? கோவை சதாசிவம்: மேற்குத் தொடர்ச்சி மலைகள் இல்லாமல் போயிருந்தால் தமிழகம் எப்படி இருந்திருக்கும் என்ற இந்தக் கேள்வி மிகவும் முதன்மையான கேள்வி. நான் உள்ளபடியே ஸ்ரீராமைப் பாராட்டுகிறேன். காரணம், மேற்குத் தொடர்ச்சி மலைகளை நாம் பெரும்பாலும் மரங்களையும், மலைகளையும் கொண்ட ஒரு பகுதியாகவோ, சுற்றுலா சென்று திரும்பும் இடமாகவோதான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், நமக்கு மட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இல்லாமல் போயிருந்தால், தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னகமே ஒரு பெரும் பாலைவனமாக மாறியிருக்கும். ஒரு பெரும் பாலைவனமாக மாறியிருக்க வேண்டிய நிலப்பரப்பை, இன்றைக்கு அற்புதமான நிலப்பரப்பாகவும், பயிர்கள் விளைகிற, உயிர்கள் வாழ்கிற நிலப்பரப்பாகவும் மாற்றியிருப்பதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான். அங்கிருந்துதான் நமக்கு ஏறத்தாழ 25 கோடி மக்களின் நீராதாரம் கிடைக்கிறது. அதுபோக, உயிர்க்காற்றும் நமக்குக் கிடைக்கிறது. பருவமழையைத் திசைதிருப்பாமல் கொண்டு வந்து சேர்ப்பதும், கீழே ஓடுகின்ற எல்லா நதிகளையும் நிரப்பி, அவற்றை வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதும்கூட மேற்குத் தொடர்ச்சி மலையின் வேலைதான். ஆக, மேற்குத் தொடர்ச்சி மலை என்பது வெறும் பெரும் பாறைகளோ, மரங்களோ அல்ல. அது நம் தண்ணீர்த் தொட்டி; நம் உயிர்மூச்சு. இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிற மேம்பாட்டுத் திட்டங்களாக இருந்தாலும் சரி, அதற்காக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளாக இருந்தாலும் சரி, கனிம வளங்களுக்காக மேற்குத் தொடர்ச்சி மலை சிதைக்கப்பட்டால், தென்னகம் ஒரு பாலைவனமாக மாறும். இந்த உண்மையைப் பல்வேறு வடிவங்களில் அடுத்த தலைமுறைக்குச் சொல்லித் தர வேண்டிய கடமை உணர்வோடு நாம் இருக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது என்பது மலையைப் பாதுகாப்பது மட்டுமல்ல; நம்முடைய தண்ணீரையும், காற்றையும், நதிகளையும், உயிர்களையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பது. ஸ்ரீராம்: அருமை தாத்தா. மேற்குத் தொடர்ச்சி மலையின் அருமையைப் புரிந்துகொண்டால், அதை காக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். தாத்தா, இயற்கையைப் பார்க்கும்போது அதை புகைப்படம் எடுப்பதுதான் முக்கியமா, இல்லை அதை அமைதியாகக் கவனிப்பதுதான் முக்கியமா? கோவை சதாசிவம்: இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பது என்பது வேறு; இயற்கையைப் புரிந்துகொள்வது என்பது வேறு. நாம் ஒரு புகைப்படம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். குறிப்பாக விலங்குகளையோ, பறவைகளையோ, பூச்சிகளையோ, ஏதாவது உயிரினங்களையோ படம் பிடிக்கும்போது, நம்முடைய கவனம் முழுவதும் படம் எடுப்பதில் போய்விடுகிறது. அதனால், அந்த உயிரினத்தின் நகர்வையும், அதன் நடத்தையையும் புரிந்துகொள்வதை விட்டுவிடுகிறோம். அல்லது அதை நெருக்கமாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை நாமே நழுவவிட்டுவிடுகிறோம். அதனால், புகைப்படம் எடுப்பதைவிடச் சற்று தள்ளி நின்று அவற்றின் நடத்தையைக் கவனிக்க வேண்டும். அது பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், அவை என்ன செய்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். குறிப்பாக, பூச்சிகள் எங்கெங்கு தாவுகின்றன? என்ன செய்கின்றன? அவை வேறு பூச்சிகளைச் சாப்பிடுகின்றனவா? மகரந்தங்களை எடுத்துக்கொள்கின்றனவா? என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பறவை தனியாக இருக்கிறதா, இரண்டு பறவைகளாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். விலங்குகள் ஒற்றையாகத் திரிகின்றனவா, மந்தையாகத் திரிகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படிக் கவனிப்பதன் மூலம்தான் அந்த உயிரினத்தின் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். புகைப்படங்கள் என்பது நாம் பார்த்ததற்கான ஒரு சாட்சியாக இருக்கலாம்; ஆனால் அது நமக்கான அறிவுக் களமாகிவிடாது. புகைப்படத்தை எடுத்துவிட்டோம் என்பதற்காக அந்த உயிரினத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது. புகைப்படம் எடுப்பதைவிட, புகைப்படம் எடுப்பதற்கு முன்னால் நம் கண்களுக்கு விரியும் அந்தக் காட்சியை ரசிப்பதும், அதை உணர்வதும், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்வதும்தான் நம் அறிவை மேம்படுத்தும்.இயற்கையைப் பார்ப்பது என்பது வெறுமனே பார்ப்பது அல்ல; அதை உற்றுநோக்குவது, உணர்வது, புரிந்துகொள்வது. அந்த அனுபவம்தான் இயற்கையோடு நமக்கான உண்மையான உறவை உருவாக்கும். ஸ்ரீராம்: தாத்தா, பறவைகளுக்கும் பசுமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? குறிப்பாக, பறவைகளுக்கும் காடுகளுக்கும் இடையே இருக்கும் அந்த உயிருள்ள உறவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். கோவை சதாசிவம்: நான் “பறவைகளின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு” என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். பறவைகளுக்கும் இந்தப் பசுமைப் பரப்பிற்கும் நிறைய தொப்புள்கொடி உறவு இருக்கிறது. காரணம், பல மரங்களும் தாவரங்களும் தங்களுடைய விதைகள் பறவையின் எச்சத்தின் வழியாகத்தான் பரவ வேண்டும் என்ற இயற்கையின் விதியை வைத்திருக்கின்றன. ஒரு விதை பறவையின் உடலுக்குள் சென்று, அங்கு நொதிக்கப்பட்டு, பிறகு எச்சத்தின் வழியாக வேறொரு நிலத்தில் விழுந்தால்தான் அது முளைக்கும். அதனால்தான் நான் பறவையை பசுமை பரப்பாளன் என்று சொல்கிறோம். ஓரிடத்தில் இருக்கும் ஒரு விதையை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியைப் பறவைகள் செய்கின்றன. ஒரு பறவை ஒரு நாளில் பல கிலோமீட்டர் தூரம் பறந்து, இரை தேடிக் கூடு திரும்புகிறது. அது சாப்பிடுகின்ற பழங்களின் விதைகள், அது கழிக்கும் எச்சத்தின் வழியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று விழுகின்றன. அப்படி ஒரு பறவை பறந்து பறந்து, ஒரு பெரிய நிலப்பரப்பின் பசுமையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பறவை பசுமையை மட்டும் பரப்புவதில்லை; பூச்சிகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது. இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதில் ஒரு பறவையின் பங்கு அளப்பரியது; மகத்தானது. அது இந்த இயற்கையைச் செழுமையாக வைத்திருப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் வானத்தை அளக்கிறது. பறந்து பறந்து பசுமைப் பரப்பின் பெரும் பரவலுக்கு காரணமாகிறது. ஆக, பறவையையும் பசுமையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல், பசுமையும் பறவையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த உயிர் உறவாகப் பார்க்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். பறவை இல்லாமல் பசுமையின் பயணத்தைப் புரிந்துகொள்ள முடியாது; பசுமை இல்லாமல் பறவையின் வாழ்க்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஸ்ரீராம்: தாத்தா, பனைமரம் நிலத்தடி நீரை உயர்த்துவதில் எப்படி உதவுகிறது? பனைமரங்கள் குறைந்ததால்தான் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது என்று சொல்கிறார்களே... அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் தாத்தா. கோவை சதாசிவம்: வெப்பமண்டலப் பகுதியில் நிறைந்திருக்க வேண்டிய தாவரங்களில் பனையும் ஒன்று. பனை என்பது மரம் அல்ல; பனை என்பது ஒரு புல். அவ்வளவுதான். இந்தப் பனையின் வேர்களைப் பாருங்கள். குறிப்பாக, வெப்பமண்டலப் பகுதி முழுவதும் பரவி இருக்கிற பனையின் வேர்கள் குழாய் குழாயாக இருக்கும். மழை பெய்யும்போது, அந்த வேர்களின் வழியே மழைநீரை அடி ஆழத்திற்குக் கொண்டு சென்று, நிலத்தடி நீரை முதலில் செறிவூட்டுகிறது; பிறகு அதை மேலே கொண்டு வருகிறது. முக்கியமாக, பனைமரத்திற்கு அதிகமாகத் தண்ணீர் தேவையில்லை. அது வறட்சியைத் தாங்கி வாழக்கூடிய ஒரு தாவரம். தனக்காக அதிகத் தண்ணீரை எடுத்துக்கொள்ளாமல், பெய்யும் மழைநீரை நிலத்தடிக்குக் கொண்டு போய் நீர் சேகரிப்பு வேலையைச் செய்கிறது. பனை என்பது ஓர் அற்புதமான தாவரம். அதற்கு அதிகம் நீர் தேவையில்லை; ஆனால் அது நமக்கு நிறையத் தருகிறது. பனையின் அத்தனை பகுதிகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். இன்றைக்கு பனைமரம் தமிழ்நாட்டில் அருகிப்போயிருக்கிறது. வறட்சியை எதிர்கொண்டு வளரக்கூடிய இந்த மரங்கள் பெருக வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் இருக்கிற இந்த உள்ளூர் நீராதாரத்தையும், வானம் பார்த்த பூமிகளில் வாழும் மக்களுக்கான குடிநீரையாவது நாம் பாதுகாக்க முடியும். ஆக, பனை வளர்ப்பது என்பது தமிழ் நிலத்தின் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்கு ஒப்பானது. பனைமரங்கள் நிறையப் பெருக வேண்டும். ஒரு காலத்தில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். இன்றைக்கு சில லட்சங்கள்தான் இருக்கின்றன. இதிலிருந்தே நாம் எத்தனை பனைமரங்களை இழந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதனால், நிறைய பனைமரங்களை நட்டு வளர்க்க வேண்டும். பனையை வளர்ப்பது என்பது ஒரு மரத்தை வளர்ப்பது மட்டுமல்ல; நம் நிலத்தடி நீரையும், நம் நிலத்தையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும். ஸ்ரீராம்: தாத்தா, யானை–மனித மோதல் என்று நாம் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், நீங்கள் இதை “யானை–மனித எதிர்கொள்ளல்” என்று சொல்கிறீர்கள். ஏன் தாத்தா? இந்த எதிர்கொள்ளல் ஏன் தொடர்ந்து நடக்கிறது? இதை யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியுமா? கோவை சதாசிவம்: யானை–மனித மோதல் என்பது சரியான சொல்லாடல் அல்ல. “யானை–மனித எதிர்கொள்ளல்” என்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். காரணம், யானை நம்மோடு மோத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. யானைகளுக்கும் நமக்கும் சொத்துப் பத்து தகராறு கிடையாது; பாகப்பிரிவினையும் கிடையாது. ஆனால், இன்று யானைகள் வாழ்ந்துகொண்டிருக்கிற காடுகள் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வகைக் காடுகளுக்குள்ளும் இன்றைக்கு தோட்டங்கள், பயிர்கள், பழத்தோட்டங்கள், பங்களாக்கள், சாலைகள் என்று வந்துவிட்டன. காடுகள் நகரங்களாகவும், ஊர்களாகவும் மாறியிருக்கின்றன. ஒரு தொடர்ச்சியான காடுகளை மேற்குத் தொடர்ச்சி மலையில் பார்ப்பதே இன்றைக்கு அரிதாகிவிட்டது. எல்லா காடுகளுக்குள்ளும் சாலைகள் ஊடுருவிச் செல்கின்றன. அங்கே ஒரு ஊர் இருக்கலாம்; அந்த ஊரின் பெரும் தொழிலாக தேயிலைத் தொழில் இருக்கலாம்; அல்லது பல்வேறு பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கலாம். இப்படியாக யானைகளின் பூமி என்பது, மனிதர்களுக்கு வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் தருகின்ற இடமாக மாறிய பிறகு, யானை உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிவாரம் வரை நடக்க வேண்டியதாகிறது. அதனால்தான் யானைகள் எளிதாக மனிதர்களைச் சந்திக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. இந்தச் சூழல்தான் யானையை மனிதனோடு எதிர்கொள்ள வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் உருவாக்கியிருக்கிற இந்தச் சூழல், இதுகாறும் பாதுகாக்கப்பட்டு வந்த காட்டின் ஆதாரத்தையே சிதைத்து, யானைகளை அழிவை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் எண்ணிக்கையில் தெரிகிறது. ஒரு ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் யானைக் கணக்கெடுப்பில் அதன் எண்ணிக்கை குறைந்து வருவதற்கும் இதுதான் காரணம். நீருக்கும் சோற்றுக்கும் சாலைக்கு வந்து, சாலையில் அடிபட்டு சாகிறது. யானைகளின் வாழ்விடத்திற்குள் நாம் தொடர்ந்து நுழைந்துகொண்டே இருக்கிறோம். மனிதர்களுக்கு வருகின்ற நோய்கள்கூட இன்று யானைகளுக்கு வருவதாக கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆக, யானை–மனித எதிர்கொள்ளல் என்பது எதிர்காலத்தில் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் அற்றுப்போகும் சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, “யானைகளைப் பார்க்கிற கடைசித் தலைமுறையாகத்தான் நீங்கள் இருப்பீர்களோ?” என்ற கேள்வி எனக்குள் எழுந்துகொண்டிருக்கிறது. அந்தக் கேள்விக்கு நீங்கள் விடை சொல்ல வேண்டிய தலைமுறையாகவும் இருக்கிறீர்கள். யானைகள் வாழும் காட்டை நாம் காப்பாற்றினால்தான் யானைகளையும் காப்பாற்ற முடியும். யானைகளைக் காப்பது என்பது ஒரு விலங்கைக் காப்பது மட்டுமல்ல; அது வாழும் காடையும், அந்தக் காட்டைச் சார்ந்து வாழும் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் காப்பதுதான். ஸ்ரீராம்: தாத்தா, மேகதாது அணை கட்டப்பட்டால் அங்குள்ள காடுகளுக்கும் வன உயிரினங்களுக்கும் என்ன ஆகும்? அந்த அணையால் அவற்றின் வாழிடம் பாதிக்கப்படுமா? அணை கட்டும்போது இயற்கையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா? கோவை சதாசிவம்: மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராது என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு அணை கட்டப்படும்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பெரும் பகுதியை, ஒரு பெரிய பள்ளத்தாக்கை, ஒரு பெரிய பீடபூமியை நீருக்குள் மூழ்கடிக்கிறோம் என்ற கவலை இதுவரை நமக்கு வந்ததே இல்லை. அணை கட்டுவதால் தண்ணீரைத் தேக்குகிறோம் என்று மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், அந்தத் தண்ணீருக்குள் ஒரு காடு மூழ்குகிறது; அதனோடு சேர்ந்து எத்தனையோ மரங்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் வாழ்ந்த வாழிடங்கள் அழிகின்றன என்பதை நாம் சிந்திப்பதில்லை.நீரை வைத்து அரசியல் செய்கிற மனிதர்கள், ஒரு நீரால் ஒரு காடு எப்படி அழிகிறது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. நீரை இயல்பாக ஓடவிடாமல் தடுத்து நிறுத்துவது இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் சீரழிவு. இயற்கையாக உருவாகிற தண்ணீருக்கு, அது எங்கு போய்ச் சேர வேண்டும் என்பது தெரியும். காரணம், இந்தத் தண்ணீரை உற்பத்தி செய்வது மனிதன் அல்ல. மனிதனால் ஒருபோதும் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது. இயற்கையால் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட தண்ணீர் எங்கு உற்பத்தியாக வேண்டும், எங்கு முடிய வேண்டும், எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் இயற்கை தன்னுடைய வழியை வைத்திருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்த நீர் தன்னுடைய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இதையே மனிதன் அணை கட்டி, அணை கட்டி, அணை கட்டி, தண்ணீரை மறித்து, இன்றைக்கும் அரசியல் செய்துகொண்டு, பல்வேறு மாநிலங்களின் பகையையும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான். நீர் தன்னுடைய பாதையில், தன் இயல்பான போக்கில் நகர முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கிறது. ஆசைப்பட்டு நீரைச் சிறைபிடித்த இடமெல்லாம் அணையாகத்தான் மாறுகிறது. அதனால், ஒரு அணையைப் பற்றி பேசும்போது எவ்வளவு தண்ணீரைத் தேக்க முடியும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அந்தத் தண்ணீருக்குள் எவ்வளவு காடு போகிறது, எத்தனை உயிர்களின் வாழிடம் அழிகிறது, ஒரு நதியின் இயல்பான ஓட்டம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் சேர்த்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும். இயற்கையைத் தவிர்த்துவிட்டு எந்த நீர்த் திட்டத்தையும் நாம் முழுமையான வளர்ச்சித் திட்டம் என்று சொல்ல முடியாது. ஸ்ரீராம்: தாத்தா, பருவநிலை பிறழ்வு பற்றி இன்று நிறைய பேசுகிறோம். ஆனால், அதன் உண்மையான ஆபத்தை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா? குறிப்பாக, இதைப் பற்றி குழந்தைகளுக்கும் மக்களுக்கும் எப்படி எளிமையாகப் புரிய வைக்கலாம்? கோவை சதாசிவம்: பருவநிலை என்பது இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கடந்த காலத்தில் “பருவநிலை மாற்றம்” என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றைக்கு “பருவநிலை பிறழ்வு” என்று பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையை மாற்றியிருக்கிறோம். இதைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நிலநடுக்கங்கள் இன்றைக்கு அதிகரித்திருக்கின்றன; மின்னல்கள் அதிகரித்திருக்கின்றன; எரிமலைகள் அதிகரித்திருக்கின்றன; நிலச்சரிவுகள் அதிகரித்திருக்கின்றன; கடல் சீற்றம் அதிகரித்திருக்கிறது; சூறாவளிகள் அதிகரித்திருக்கின்றன. இப்படி இயற்கை நம்மைச் சுற்றி ஒரு சீற்றத்தோடும் பேரழிவோடும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு நிலநடுக்கமும் நிலச்சரிவும் நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு உலகத்தின் நிலைமை இருக்கிறது. குழந்தைகள் அச்சத்தோடு பிறக்கிறார்கள் என்று இன்றைக்கு மருத்துவர்கள் சொல்கிறார்கள். காரணம், “இந்தப் பூமியில் நாம் எப்படி வாழப்போகிறோம்? இந்தப் பூமியின் இயற்கைச் சீற்றங்களையும், இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு எப்படி வாழப்போகிறோம்?” என்ற ஒரு கவலை அவர்களுக்குள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இத்தனை மாற்றங்களுக்கும் மனிதர்களே பலமுறை காரணமாக இருக்கிறோம். ஆக, இதை குழந்தைகளுக்குத் தெரியாமல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளும் இதைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இந்த உலகம், உண்மையில் அவர்களுக்கான உலகமாக இல்லை. அவர்களுக்காக இருந்திருக்க வேண்டிய உலகத்தை நாம் வெகுவாகச் சீர்குலைத்திருக்கிறோம். இந்த உண்மையை குற்ற உணர்வோடும், பொறுப்புணர்வோடும் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளும் மனம் நமக்கு வேண்டும். அவர்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல; அவர்களுக்கான உலகத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புணர்வை உருவாக்குவதற்காக. ஸ்ரீராம்: என்னுடைய கேள்விகளுக்கு ஆழமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாகவும் விளக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாத்தா. பா.செல்வ ஸ்ரீராம் மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வாசிப்பும் , பறவை பார்த்தலும் அது சார்ந்த பயணங்களும் மிகப் பிடித்த விஷயங்கள். சதுரங்க விளையாட்டு, இறகு பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். 8 ஆவது வயதில் இவருடைய முதல் புத்தகமான 'கரிச்சான் குஞ்சும் குயில் முட்டையும்' வெளிவந்தது. தன் தங்கை மதிவதனியுடன் இணைந்து 'என்ன சொன்னது லூசியானா? ' , 'அற்புத எறும்பு' என்ற இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
- அறமதியின் கதை -7 : சமூக நீதி என்னும் ஆணிவேர்
அன்பினியும் அறமதியும் இப்போது மேகத்தில் அமர்ந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். அறமதி தன் கால் சிலம்பு சலசலக்க, காற்றை எத்தி மேகத்தை ஆட்டிக் கொண்டிருந்தாள். இதமான குளிர் காற்று அவர்களின் மேல் மோதியது. பரந்து விரிந்த இந்திய தேசத்தை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மழைக்காடுகளும், அருவிகளும், பனி மலைகளும், பாலைவனமும், ஆறுகளும், நகரங்களும், கிராமங்களும், பசுமையான விளைநிலங்களும் பூரிப்பைத் தந்தன. மக்கள்.. எங்கும் மக்கள். உழைக்கும் மக்கள் நாடெங்கும் தெரிந்தார்கள். “நம்ம நாட்டோட மிகப் பெரிய சொத்து மக்கள் தான்.. இல்ல அறமதி” என்றாள் அன்பினி. “ஆமா. ஒரு நாடு என்றாலே அது மக்களைத் தானே குறிக்கிறது. உனக்குப் பிடித்த நகரத்தைச் சொல்லு, நம்ம அங்க போகலாம்.” என்றாள் அறமதி. “நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேனே. அத மறந்துட்டியா?” என்றாள் அன்பினி. “மறக்கல... பதில் தேடித்தான் போக போறோம். சொல்லு” என்றாள் அறமதி. “ஹம்.. எனக்கு நிறைய நகரங்கள் புடிக்குமே.. எல்லாத்துக்கும் கூட்டிட்டுப் போறியா? மும்பை, சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத் , அகமதாபாத்...” விளையாட்டாகக் கேட்ட அன்பினி சிரித்தாள். அடுத்த நொடி அறமதி சிலம்பை அசைக்க, அவர்கள் ஒரு குப்பை லாரியில், மும்பையின் ஜூகு பீச் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். அன்பினி தன்னோடு ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருப்பதை பார்த்தாள். அவளால் துர்நாற்றம் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தான். அவன் அப்பாதான் ஓட்டுநர். பள்ளிக்கு நேரமாகி விட்டதை அவருக்கு நினைவுபடுத்தினான். “இந்தப் பையனும் உன்னுடைய வகுப்பு தான்.” என்றாள் அறமதி. அன்பினி அவனின் கிழிந்த புத்தகப் பை, லாரியின் ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். அவன் பள்ளி சீருடையில், குப்பை மூட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டிருந்தான். அந்த லாரி ரோட்டோரமாக நின்றது. பையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இந்த சந்தர்ப்பத்தில், இருவரும் குதித்து இறங்கிக்கொண்டனர். இப்போது தான் மூச்சு விட முடிவதைப் போல இருந்தது. அறமதி இன்னொரு கேள்வியைக் கேட்டாள், “அந்த பையனுக்கும் உன்னப் போலவே வக்கீல் ஆகணும் என்று ஆசை. ரெண்டு பேருக்கும் ஒரே பரீட்சை வச்சு, முதல் மதிப்பெண் எடுக்குறவங்களுக்கு மட்டும் தான் வக்கீலுக்குப் படிக்க வாய்ப்பு என்று சொன்னால் சரியா?”. “அது எப்படி சரி? நான் ஸ்கூலுக்கு ஆட்டோவில் போறேன், படிக்கிறதத் தவிர எனக்கு பெரிசா எந்த வேலையும் இல்ல. ஆனா, இந்தப் பையன் அவங்க அப்பாவோட சேர்ந்து வேலை பாக்குறான், ஸ்கூலுக்கு நடந்து போறான். அவன் ரொம்ப கஷ்டப்படுறான். அவனுக்கு ஏதாவது உதவி கிடைக்கணுமே.” “இதுதான் சமூக நீதி. பலமானவர்களையும் பலம் இல்லாதவர்களையும், ஒரு நாளும் சமமாக நடத்தக் கூடாது. கல்வியிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசியல் அதிகாரத்திலும் சமூகத்தில் இருக்குற எல்லோருக்கும் சமபங்கு தர வேண்டும். இத ஒரு வகையில தருவதுதான் இட ஒதுக்கீடு.” என்று விளக்கினாள் அறமதி. “ஆனா, நம்ம அரசியல் அமைப்பு சட்டம் சமத்துவமா நடத்தணும்னு சொல்லுதே..?” என்று கேட்டாள் அன்பினி “ஆர்டிகில் 14, சட்டத்தின் முன் சமத்துவம் (Equality before the law) மற்றும் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவம் (Equal protection of the laws) என்று தெளிவாக விளக்குகிறது” என்றாள் அறமதி. “எங்க விளக்குது, கன்பியூஸ் இல்ல பண்ணுது” என்றாள் அன்பினி. “சொல்றேன் கேளு. சட்டத்தின் பார்வையில எல்லோரும் சமம். அதாவது அதிகாரம், பணம், புகழ் இருக்குற ஆளாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண எளிமையான ஆளாக இருந்தாலும் சரி, ரெண்டு பேருக்கும் ஒரே சட்டம்தான். யார் தப்பு செய்தாலும் ஒரே தண்டனைதான். இதுதான் சட்டத்தின் முன் சமத்துவம். “அப்போ. சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவம் என்றால் என்ன?” என்று கேட்டாள் அன்பினி. “ஒரு சின்ன உதாரணத்தோட சொல்லுறேன். ஒரு திருட்டு நடந்திருக்கு. குற்றம் செய்தவாராக சொல்லப் படுபவர் வசதி இல்லாதவர். இந்த மாதிரி சூழ்நிலையில, அரசே அவருக்காக ஒரு வக்கீலை வழங்கணும். ஏன்?” என்று கேட்டாள் அறமதி. “அப்போ தானே அவரு என்ன சொல்லவருகிறார் என்று தெரியும்.” என்றாள் அன்பினி. “சரி. ஒரு வசதி படைத்தவர், அவருக்கான வக்கீலை பணம் கொடுத்து அவருக்காக வாதாட வைக்க முடியும். அந்த வாய்ப்பு இல்லாதவர, அப்படியே கொண்டு போய், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்லி, விட்டுவிட முடியாது இல்லையா? இரண்டு நபர்களுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் கிடைக்கணும் என்றாலே இங்கே அரசின் நேர்மறையான குறுக்கீடு தேவைப்படுகிறது. அதனால்தான் சட்டம் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவது மட்டும் போதாது. சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் எல்லோரும் சமம் என்று சொல்லி, சமத்துவம் இல்லாத சூழ்நிலைகளில் அரசு, குடிமக்களுக்கு இது மாதிரியான பாதுகாப்பு செய்து கொடுக்க அரசியல் அமைப்பில் வழி செய்தார்கள்.” “எனக்கு இப்போ புரியுது அறமதி. நம்ம நாட்டோட ஒவ்வொரு குடிமக்களுக்கும் நீதி கிடைக்கணும் என்று எவ்வளவு யோசிச்சு இதெல்லாம் செய்திருக்காங்க இல்ல.” என்று வியந்து கேட்டாள் அன்பினி. “ஆம். இப்போ இதுக்கு பதில் சொல்லு. ஒரு தனி மனிதருக்கு சட்ட உதவி தேவைப்படுற மாதிரி, சில சமூகங்களுக்கும் பல நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கே! அதற்கு என்ன செய்யலாம்?” என்றாள் அறமதி. “அவங்க முன்னேறவும் அரசு ஏதாவது செய்யணும்.” “சரியா சொன்ன. கல்வி மறுக்கப் பட்டு, ஜாதி பாகுபாட்டினால பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்ய, இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை வகுக்க, அரசிற்கு நம்ம அரசியல் அமைப்பு வகை செய்கிறது.” என்றாள் அறமதி. “இட ஒதுக்கீடு பத்தி எங்க SJSF (Social Justice Students Force) சார் ஒரு கதை சொன்னாரு. ஒரு பள்ளியில ஒரு ஓட்டப்பந்தயம் நடத்தினாங்கலாம். ஆனா சில மாணவர்களை பந்தயம் ஆரம்பிக்கும் கோட்டிலிருந்து 50 மீட்டர் பின்னாடி நிறுத்தி, பந்தயம் ஆரம்பம் என்று சொன்னாங்களாம். இலக்குக் கோட்டுக்கு யாரு முதல்ல வருகிறார்களோ, அவுங்கதான் வெற்றி பெற்றவங்க என்று சொன்னால், அது எப்படி சரி ஆகும்? பின்னாடி நிற்குறவங்க முதல்ல ஆரம்பக் கோட்டை அடையணும். அதுக்குத்தான் ரிசர்வேஷன் என்று சொன்னாரு.” என்றாள் அன்பினி “ஒரு குட்டி கதையில அழகா சொல்லிட்டியே. ஆயிரம் ஆண்டுகளா கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்கள், இன்னமும் பாரபட்சமா நடத்தப்படுறாங்க. அவர்கள் முன்னேற கொடுக்கப்படுகிற ஒரு கருவி தான் இட ஒதுக்கீடு.” “அம்பேத்கர் சொன்ன மாதிரி முரண்பாடான சமூகமா நம்ம நாடு இன்னமும் இருக்கு இல்ல அறமதி.” என்றாள் அன்பினி. “நம்ம சமத்துவம் பத்தி பேசின போது சொன்னதச் சரியா ஞாபகம் வச்சிருக்கிறியே, அன்பினி. நம்ம நாடு எல்லோருக்கும் வாக்கு உரிமையை கொடுத்து அரசியல் சமத்துவத்தை அடைந்திருக்கிறது. மேலோட்டமா பாத்தா அது ஒரு அழகான மாளிகை. ஆனா, சமூக பொருளாதார நிலையில ஏற்றத்தாழ்வுகள் இருக்கு.” “அரசியல் சமத்துவம் போதாதா?” என்று கேட்டாள் அன்பினி. “போதாது” “ஏன்?” "அடித்தளம் பலவீனமா இருந்தா மாளிகை நிற்குமா?" "நிற்காது.” “இதத் தான் அம்பேத்கர் சொன்னாரு. நம்ம நாட்டுல அரசியல் மக்களாட்சி நிலைக்கணும் என்றால் சமூக மக்களாட்சி வரணும். இல்லை என்றால் மொத்த அமைப்பும் சிதைந்து விடும் ஆபத்து இருக்கு என்று எச்சரிக்கை கொடுத்தார்.” “அப்போ சமத்துவம் கொண்டு வரவே இங்க சமூக நீதி தேவைப்படுது சரியா?” என்றாள் அன்பினி. “ஆமா. சமூக நீதிதான் ஆணிவேர். நம்ம நாட்டில் பல கணக்கெடுப்புகள் என்ன காட்டுதுன்னா, சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பல சமூகங்கள் பொருளாதாரத்திலும் தொடர்ந்து பின்தங்கியே இருக்கின்றன.” “அப்போ, ஜாதி அழிந்தால்தான் நம்ம நாடு உண்மையிலேயே சுதந்திரம் அடையும். இல்ல” என்றாள் அன்பினி. “நிச்சயமாக. ஜாதி ஒழிந்தால்தான் நம்ம நாடு ஒரு உண்மையான நாடாகவே மாறும், ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வை இங்க தடுக்கிறது ஜாதி என்று அம்பேத்கர் சொன்னாரு. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற மூன்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறையாக மாறணும்.” “ஆமா. நான் நிச்சயம் அப்படித்தான் வாழ்வேன். என் நண்பர்களுக்கும் சொல்லுவேன். எங்கள மாதிரி குழந்தைகள் நினைச்சா இங்க எல்லாமே எளிமையா மாறிடும். இல்ல அறமதி” “கண்டிப்பாக மாறும்” “நம்ம பார்த்த அந்த பையன் ஒரு நாள் வக்கீலா ஆகணும்.” என்றாள் அன்பினி. அப்போது ஒரு மேகத்திலிருந்து வந்த காற்றில் அறமதியின் பொன்னிற சேலை ஆடியது. சூரிய ஒளி ஒரு பனித் துளியின் மீது பட்டு உருவான வானவில், அவள் சேலையின் மீது படர்ந்தது. (அறிவோம் தெளிவோம்) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- "வண்ணப் பூக்களின் தோட்டம்" - நூல் வெளியீடு
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் மு.சுலைகா பானு மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச. நஜுமுதீன் அவர்களால் தொகுக்கப்பட்டு, மதுரை மாநகர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக மதுரையில் வெளியிடப்பட்ட "வண்ணப் பூக்களின் தோட்டம்" என்பது வெறும் சிறுகதைத் தொகுப்பு அல்ல; குழந்தைகளின் கற்பனை, கனவு, சமூக அக்கறை மற்றும் மனிதநேய உணர்வுகளை ஒரே தோட்டத்தில் மலரச் செய்திருக்கும் அரிய படைப்பு. 'வண்ணப் பூக்களின் தோட்டம்' என்ற தலைப்பே இந்த நூலின் உள்ளடக்கத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் கதையும் ஒரு வண்ணமயமான பூவாக மலர்ந்து, மொத்த நூலையும் மணம் வீசும் தோட்டமாக மாற்றுகிறது. 22 சிறுவர்களின் படைப்புகளைத் தொகுத்து, மிகைப்படுத்தப்படாமல் அவர்களின் இயல்பான குரலைக் காத்து வெளியிட்டிருப்பது இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பாகும். இந்தக் கதைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் அவசியம், அன்பு, நட்பு, மனிதநேயம், விலங்குகள் மீதான கருணை, குடும்ப உறவுகள், சமூகப் பொறுப்பு போன்ற பல்வேறு கருத்துகள் குழந்தைகளின் பார்வையில் எளிமையாகவும் இயல்பாகவும் வெளிப்படுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளை வாசிப்பு எழுத்தின் பக்கம் ஈர்க்கும் சிறந்த முயற்சியாக இந்த நூல் விளங்குகிறது. குழந்தைகளின் மொழிநடையை மாற்றாமல், அவர்களின் சிந்தனையை மதித்து வெளியிட்டிருப்பது தொகுப்பாசிரியர்களின் இலக்கியப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு சிறிய விதையைப் போன்றது. இன்று அது ஒரு கதையாகத் தோன்றினாலும், நாளை ஒரு பெரிய எழுத்தாளரின் இலக்கிய மரமாக வளரக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. பெரியவர்கள் இந்த உலகத்தை பார்க்கும் விதத்திலிருந்து மாறுபட்டு குழந்தைகள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த நூல் தெளிவாகப் பதிவு செய்கிறது. நல்லாசிரியர் மு. சுலைகா பானு மற்றும் ச. நஜுமுதீன் குழந்தைகளின் எழுத்துக்களை வெறும் தொகுப்பாக அல்லாமல், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் இலக்கியப் பயணமாக மாற்றியுள்ளனர். எதிர்கால எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சியில் இந்த நூல் முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. சிறுவர்களின் படைப்பாற்றலை அங்கீகரித்து புத்தக வடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது அவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய ஊக்கமாகும். பள்ளி நூலகங்கள், வாசகர் வட்டங்கள் மற்றும் சிறார் இலக்கிய மன்றங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல்களில் ஒன்றாக வண்ணப் பூக்களின் தோட்டம் திகழ்கிறது. எளிய மொழிநடை, தெளிவான கருத்துகள், புதிய புதிய திருப்பங்கள், வாசகனைச் சிந்திக்க வைக்கும் முடிவுகள் ஆகியவை இந்நூலை சிறுவர்களுக்கான நூல் என்ற வரையறையை தாண்டி எல்லோருக்குமான பயனுள்ள வாசிப்பனுபவத்தை தரும் என்பதில் மிகையில்லை.. குழந்தைகள் எழுதிய இலக்கியம் என்பது குழந்தைகளுக்காக மட்டுமல்ல; பெரியவர்களும் குழந்தைகளின் மன உலகைப் புரிந்துகொள்ள உதவும் அரிய ஆவணமாகும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. சிறுவர் இலக்கியத்தில் புதிய குரல்களை அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. சிறுவர்கள் எழுதினாலும், பெரியவர்களும் படித்து சிந்திக்க வேண்டிய நூலாக 'வண்ணப் பூக்களின் தோட்டம்' திகழ்கிறது. இந்த நூல் ஒரு முடிவு அல்ல; இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் உருவாகப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரு தொடக்கம். முடிவாக, வண்ணப் பூக்களின் தோட்டம் என்பது 22 கதைகளின் தொகுப்பு மட்டுமல்ல; 22 இளம் இதயங்களின் கனவுகள் மலர்ந்திருக்கும் இலக்கியத் தோட்டம். இந்தத் தோட்டத்தில் மலர்ந்த ஒவ்வொரு கதையும் வாசகர்களின் மனதில் நம்பிக்கை, அன்பு, மனிதநேயம் ஆகியவற்றின் விதைகளை விதைக்கிறது. சிறார் இலக்கிய உலகிற்கு இந்த நூல் ஒரு சிறந்த வரவாகும். ஒவ்வொரு கதையும் ஒரு பூ.. ஒவ்வொரு குழந்தையும் ஒரு பூந்தோட்டக்காரன்.. குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் வரைந்த சிறார் இலக்கியத் தோட்டம் - இந்த வண்ணப் பூக்களின் தோட்டம். ✍️ துளிர் பொருளாளர், தசிஎகச மதுரை மாநகர். மதுரை.
- வண்ண மீன்களால் மின்னும் வீடுகள்
காலையில் விரைவிலேயே விழித்துக்கொண்ட அக்காள் ஆயிஷா தேன்மொழி, தம்பி அகமது தமிழினியன் இருவருடைய கண்களும் சன்னல் அருகில் இருக்கும் மேசையின் பக்கம் திரும்பின. உடனே “உய்” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினார்கள். சில நாட்களாகவே அவர்களுக்கு வீட்டில் ஒரு கண்ணாடித் தொட்டி வைத்து, வண்ண மீன்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருந்தது. என்ன விந்தை! இப்போது உண்மையாகவே வீட்டுக்குள் மீன்தொட்டி வந்திருக்கிறதே! “எப்படிக்கா இது இங்கே வந்துச்சு,” என்று கேட்டான் அகமது. “தெரியலைடா. நாம எதை நினைச்சு உறுதியா ஆசைப்படுறோமோ அது நடக்கும்னு டிவியில ஒருத்தர் பேசினாருல்ல? அப்படி நடந்திருக்குமோ,” என்றாள் ஆயிஷா. இருவரும் ஓடிச்சென்று அம்மாவையும் அப்பாவையும் கைகளைப் பிடித்து இழுத்து வந்தார்கள். மீன்தொட்டியைக் காட்டி, “நாங்க ஆசைப்பட்டது நடந்திருச்சு,” என்று சொன்னார்கள். அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாகச் சிரித்துக்கொண்டார்கள். முதல் நாள் இரவு மீன்தொட்டியைக் கொண்டுவந்ததே அவர்கள்தானே! பிள்ளைகளுடைய ஆசையைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் சொல்லாமலே அதை நிறைவேற்றினார்கள். அதை உடனே சொல்லி குழந்தைகளுடைய உணர்ச்சிக் கொண்டாட்டத்தைக் குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆகவே அவர்களும், “அட, நீங்க ஆசைப்பட்டது போலவே நடந்துருச்சே,” என்று சொல்லி வியந்து போனது போல நின்றார்கள். “தினமும் நான்தான் மீனுக்குச் சாப்பாடு போடுவேன்,” என்றான் அகமது. “காலையிலே நீ போடு, சாயங்காலம் நான் போடுறேன்,” என்றாள் ஆயிஷா. அப்புறம் அவளே கேட்டாள்: “இவங்களுக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்? நாம சாப்பிடுற சோறு, பிரியாணி, இட்லி, காராபூந்தி இதெல்லாம் போடலாமா?” அம்மா சொன்னார்: “அதெல்லாம் போட்டா தொட்டித் தண்ணியும், மீன்களோட உடம்பும் கெட்டுப்போயிடும்.” அப்பா தொட்டிக்குப் பக்கத்திலே இருந்த, “ஃபிஷ் பெல்லட்ஸ்” என்று அச்சிட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். உள்ளே சிவப்பு நிறத்தில் கடுகு போலக் குட்டிக் குட்டி உருண்டைகள் இருந்தன. “இதுதான் மீனுக்குச் சாப்பாடு. கொஞ்சமா, பத்து நிமிசத்துல எல்லா மீனும் சாப்பிட்டு முடிக்கிற அளவுக்குப் போட்டா போதும்.” உலர்ந்த புழுக்களாகிய டிரை வொர்ம்ஸ், அவற்றைச் சதுர வில்லைகளாகப் பதப்படுத்திய டியூபிஃபிக்ஸ் வொர்ம்ஸ் என வேறு சில உணவு வகைகளும் இருப்பதை அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்கள் வெளியூர் செல்லும்போது தொட்டியில் வைத்துவிட்டுப் போகக்கூடிய சற்றுப் பெரிய மாத்திரையும் இருக்கிறது என்றார். “தொட்டியில நாலு பேரு கோல்டு ஃபிஷ். மத்தவங்க யாரு?” “இவங்க பேரு பிளாக் மாலி. இவங்க ஒயிட் மாலி. விசிறி மாதிரி வாலை ஆட்டிக்கிட்டு சர்ருசர்ருன்னு போறாங்களே, அவங்க பேரு கப்பி,” என்றார் அம்மா. “இங்க பாருங்க, அமைதியான லீடர் போல கம்பீரமா போகுதே, அது ஏஞ்ஜல்," என்று அப்பா தேவதை மீனைக் காட்டினார். "இவங்க எப்படி தண்ணிக்குள்ள சுவாசிப்பாங்க? நமக்குத் தண்ணிக்குள்ள மூச்சு முட்டுதே?" என்று ஆயிஷா கேட்டாள். "நல்ல கேள்வி! தண்ணியிலே ஆக்சிஜன், ஹைடிரஜன் ரெண்டு வாயுவும் கலந்திருக்குது. மீன் வாயைத் திறந்து திறந்து தண்ணியைக் குடிச்சிக்கிட்டே இருக்கும். அந்தத் தண்ணி, மீன் உடம்புல ரெண்டுபக்கமும் இருக்கிற செவுள்களுக்கு வரும். நமக்கு நுரையீரல் மாதிரிதான் மீனுக்கு செவுள். அது தண்ணியிலேயிருந்து வேணும்கிற ஆக்சிஜனை எடுத்துக்கிடும். மீதித் தண்ணியை வெளியேத்திடும்,” என்று அப்பா விளக்கினார். பிள்ளைகள் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பது பெற்றோருக்குப் பெருமையாக இருந்தது. அப்பா தொட்டிக்குள் விளக்கை ஒளிர விட்டார். அடியில் பரப்பப்பட்டிருந்த பல வண்ணக் கூழாங்கற்களும், மணலும் மின்னின. ஒரு நீர்ச்செடி அழகாக இலைகளை உயர்த்தி அசைந்தது. அடியிலிருந்த ஒரு கல்லிலிருந்து நீர்க்குமிழிகள் வரத் தொடங்கின. “இது எதுக்கும்மா?” “இந்தக் காத்துக் குமிழிகள் தண்ணியோட மேல் மட்டத்துக்கு வர்றப்ப உடையுது பார்த்தீங்களா... அப்படி உடையுறப்ப பிரியுற ஆக்சிஜன் தண்ணியில கலக்கும். கார்பன் டை ஆக்ஸைடு மேலே போயிடும்.” “ஆனா, இப்படி பபிள்ஸ் நிறையா வந்தா வேற ஏதாச்சும் எதிரி விலங்கு இருக்குமோன்னு மீன் பயப்படும்னு என் ஃபிரெண்டு சொன்னாளே?” “குமிழி பெரிசு பெரிசா இருந்தாலோ, வேகமா வந்தாலோ, அதனால நீரோட்டமும் வேகமாயிட்டாலோ, மோட்டார் இரைச்சல் போட்டாலோ மீன் பயப்படும்தான். அதனால சின்னச் சின்னதா, நிதானமான வேகத்துல பபிள்ஸ் வர்றதுக்கு அட்ஜஸ்ட் பண்ணனும். அதுக்கேத்த மாதிரிதான் இந்த அக்வேரியம் ஏர் பம்ப் இருக்குது. இது சைலன்ட்டாவும் ஓடும்…” பிரவுன் கோல்டு, பிளாக் கோல்டு, ஜெப்ரா டானியோ, பிளாட்டி, கோய்கார்ப், டாங்க் கிளீனர், டைகர், ஷார்க் … என்று பல்வேறு மீன்களைக் குழந்தைகள் தெரிந்துகொண்டார்கள். அகமது எதையோ ஞாபகப்படுத்தினான். ஆயிஷா இப்படிக் கேட்டாள்: “போன மாசம் பாட்டி அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தோமே, அங்கே ஒரு பெரிய டேங்க் இருந்துச்சு. அதிலே பெரிய சைஸ்ல ஒரே ஒரு மீன் சுத்தி வந்துச்சுல்ல…” அவள் கேட்க வருவதைப் புரிந்துகொண்டார் அப்பா: “அதுக்குப் பேரு டிராகன் ஃபிஷ். இன்னொரு பேரு ஆரோவானா. அதை இங்கே வாஸ்து மீனுன்னு சொல்லி விக்கிறாங்க. அதை வளர்த்தா தொழில்ல லாபம் கிடைக்கும், வீட்டிலே செல்வம் பெருகும்னெல்லாம் சொல்வாங்க. ஆனா தொழிலை ஒழுங்கா நடத்துனாதான் லாபம் கிடைக்கும், உழைச்சு சம்பாதிச்சு சேமிச்சாதான் செல்வம் பெருகும்.” “இதிலே பரிதாபம் என்னன்னா, அதை ஒற்றையாதான் வளர்ப்பாங்க. பாவம், எல்லா உயிர்களையும் போல அதுவும் குடும்பத்தோட வாழத்தானே விரும்பும்…” என்றார் அம்மா. “என் ஃபிரெண்டு வீட்டுல ஃபைட்டர் மீனைத் தனியா பாட்டில்ல வைச்சிருக்காங்களே?” “ஆமால்ல? இன்னிக்கே சாயங்காலம் நாம அக்வேரியம் கடைக்குப் போயி விசாரிப்போம்…” பிள்ளைகள் மாலையில் பள்ளியிலிருந்து வந்த பின் எல்லோருமாக வண்ண மீன்கள் கடைக்குப் போனார்கள். “சில நாடுகள்ல தண்ணீர்க் குட்டையிலேயும், நீரோடையிலேயும் வாழுற பெட்டா ஃபிஷ்சைத்தான் ஃபைட்டர்னு சொல்றோம். அது இயற்கையாவே சண்டைக் குணத்தோட இருக்கும். தன்னைச் சுத்தி ஒரு பாதுகாப்பு வட்டம் மாதிரி வெச்சிக்கிட்டு, அதுக்குள்ள வேற எந்த மீன் வந்தாலும் சண்டை போட்டுக் காயப்படுத்திடும், சில நேரங்கள்ல கொன்னுடும். அதனாலதான் ஃபைட்டர்னு பேரு. இன்னொரு ஃபைட்டர் வந்தா கூட சண்டைதான். பெண் ஃபைட்டர் குஞ்சு போடுறப்ப மட்டும் சேர்ந்து இருக்கும். மத்த மீன்கள் தள்ளி இருக்கும். தொட்டியில குட்டை, நீரோடை அளவுக்கு இடம் இருக்காது, அதனாலதான் தனியா வைக்க வேண்டியிருக்கு,” என்றார் கடைக்காரர். இப்போது பெரும்பாலான மீன்கள் பண்ணைகளில் உள்ள தொட்டிகளிலேயே பிறந்து வந்தவைதான். டியூபிஃபிக்ஸ் வொர்ம்ஸ் எனப்படும் புழுக்கள் உயிருடனும் கிடைக்கின்றன. உயிருடன் நழுவும் புழுக்களைத் தேடிச் சென்று கவ்வுவது மீன்களுக்குச் சுறுசுறுப்பைத் தரும். தொட்டியின் அடியில் புழுக்களின் துண்டுபட்ட உடல்கள் கிடந்து அழுகிவிடும். ஆகவே அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். தண்ணீர் மாற்றுவது பற்றி அப்பா விசாரித்தார். வாரம் ஒரு தடவை கால்வாசியும், மாதம் ஒருதடவை முழுதாகவும் தண்ணீர் மாற்றுவது நல்லது. மூன்று அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறை இதற்கான பணியாளரை வரவழைக்கலாம். அவர் தொட்டியை உள்ளேயும் வெளியேயும் கழுவி, வண்ணக் கூழாங்கற்களையும் மணலையும் மாசு நீக்கி, மோட்டாரைப் பரிசோதித்து, செடிகளை ஒழுங்குபடுத்தித் தருவார். இந்த நடைமுறைகளால் மீன்கள் நீண்ட காலம் நலமாக வாழும் என்று கடைக்காரர் குறிப்பிட்டார். அன்றிலிருந்து குழந்தைகள் நாள்தோறும் மீன்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஓய்வின்றி மீன்கள் நீந்துவதைப் பார்க்கிறபோது, வேலைகளால் ஏற்படும் சோர்வு நீங்குவது போல் பெற்றோரும் உணர்ந்தார்கள். விருந்தினர்கள் மற்ற கலைப் பொருள்களைப் போல வண்ண மீன் தொட்டியும் வீட்டுக்கு அழகு சேர்ப்பதாகப் பாராட்டினார்கள். ஒரு நாள் எதிர்வீட்டில் ஏதோ சலசலப்புக் கேட்டது. ஆயிஷா தேன்மொழியும் அகமது தமிழினியனும் போய்ப் பார்த்தார்கள். அங்கேயும் வண்ண மீன் தொட்டி வந்திருந்தது. இரு வீட்டு நண்பர்களும் “ஹை ஃபை” என்று கைகளைத் தட்டிக்கொண்டார்கள். அ. குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.
- வளர்ப்போம்... வளர்வோம்...
பகுதி – 1 : குழந்தைகள் மட்டும் வளர்வதில்லை.. நாமும் வளர்கிறோம்! ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்திற்கு வரும் போது கூடவே நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. அது ஒரு குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகத்திற்கானது. ஆனால் அந்த நம்பிக்கை இறுதி வரை காப்பாற்றப் படுகிறதா? என்பது சிந்தனைக்குறிய கேள்வி. இந்தக் கேள்வி, ஒரு உளவியலாளராக நான் சந்தித்த ஒவ்வொரு குழந்தையையும் எனக்கு நினைவூட்டுகிறது. "வளர்ப்போம்... வளர்வோம்..." என்ற இந்தப் பயணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இது பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கும் ஒரு தொடர் அல்ல. குழந்தைகளின் மன உலகத்தைப் புரிந்துகொள்ளவும், பெற்றோர்களின் மனப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவும், நமக்குள் நடக்கும் ஒரு உரையாடல். அன்பு மட்டும் போதுமா?: குழந்தைகள், பதின்பருவத்தினர் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் பயணித்த, பணியாற்றிய அனுபவத்தில் நான் உணர்ந்த மிகப்பெரிய உண்மை ஒன்று உண்டு. அது “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லதையே நினைக்கிறார்கள்.” அவர்களின் எண்ணத்திலும் அன்பிலும் எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. அந்த அன்பு சில நேரங்களில் அதீத செல்லமாகவோ இல்லை அதீதக் கண்டிப்பாகவோ வெளிப்படுகிறது. சில நேரங்களில் அதிக அக்கறையாகவும், சில நேரங்களில் பயமாகவும், சில நேரங்களில் கவலையாகவும், சில நேரங்களில் கோபமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் குழந்தை வளர அந்த அன்பு மட்டும் போதுமானதா? இன்றைய பெற்றோரின் சவால்கள்: குழந்தை கோபப்படும்போது எப்படி அணுகுவது? தன்னம்பிக்கையை இழக்கும்போது என்ன பேசுவது? கேட்பதை வாங்கித் தர வேண்டுமா இல்லை தவிர்க்க வேண்டுமா? தவறு செய்தால் கண்டிப்பதா, தண்டிப்பதா இல்லை பேசிப் புரியவைக்க வேண்டுமா? பதின்பருவத்தில் தூரமாகிப் போகும் குழந்தையுடன் மீண்டும் எப்படி நெருக்கமாவது? இப்படிப்பட்ட கேள்விகள் தினமும் பெற்றோரைத் துரத்துகின்றன. அதிலும் இன்றைய பெற்றோரின் வாழ்க்கைமுறை முன்பை விடவும் சவாலானதாக மாறியுள்ளது. அதற்கான காரணங்கள் பல.. 1.கல்விச் சூழல் அழுத்தம். 2.திரை நேரத்தின் தாக்கம் 3.சமூக ஊடகங்கள் தரும் அழுத்தம் 4.வேகமான வாழ்க்கை முறை 5.குடும்பத்தோடு செலவிட நேரப் பற்றாக்குறை 6.பொருளாதார நெருக்கடிகள் யார் சிறந்த பெற்றோர்?: இதற்கிடையில் "நான் ஒரு நல்ல பெற்றோராக இருக்கிறேனா? என் குழந்தைகளை நன்றாக வளர்க்கிறேனா?" என்ற கேள்விகளையும் பலர் மனதில் சுமந்துகொண்டே தான் வாழ்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது. அது 'குற்றமற்ற, சிறந்த, நூறு மதிப்பெண் பெறும் பெற்றோர்' என்று யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. குழந்தைகளின் தேவை, குறைகளே இல்லாத பெற்றோர் அல்ல; தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பெற்றோர். பேசும்போது முழுமையாகக் காது கொடுத்துக் கேட்கும் பெற்றோர். தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அந்தத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளத் துணை நிற்கும் பெற்றோர். வீட்டிலும் வெளியிலும் தனித்தன்மையோடு சுயமாக செயல்பட அனுமதிக்கும் பெற்றோர். அதனை ஊக்குவிக்கும் பெற்றோர். வளர்க்கிறோமா? வளர்கிறோமா?: ஒரு தாயாக நான் கற்றுக் கொண்ட ஒரு அழகான பாடம் ”குழந்தை வளர்ப்பு என்பது ஒருவழிப் பயணம் அல்ல”. நாம் அவர்களை வளர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவர்களும் நம்மை வளர்க்கிறார்கள். நமக்கு பொறுமையைக் கற்றுத்தருகிறார்கள். சின்னஞ்சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண கற்றுத்தருகிறார்கள். நம் சிறுவயது நினைவுகளை நமக்கு மீட்டுத் தருகிறார்கள். சில நேரங்களில், நமக்கே தெரியாத நம்முடைய பயங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் அனைத்தையும் நமக்குக் காட்டும் கண்ணாடியாகவும் மாறுகிறார்கள். அதனால்தான் இந்தத் தொடருக்கு "வளர்ப்போம்... வளர்வோம்..." என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். நாமும் அம்மாவாக, அப்பாவாக ஒவ்வொரு நாளும் வளர்கிறோம். நம்மை இன்னும் பக்குவமானவர்களாகவும், கனிவானவர்களாகவும், உணர்வுப்பூர்வமான மனிதர்களாகவும் மாற்றும் பயணமாக குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு உரையாடலிலும்... ஒவ்வொரு அணைப்பிலும்... ஒவ்வொரு மன்னிப்பிலும்... ஒவ்வொரு சிரிப்பிலும்... நமக்கான பாடம் உள்ளது. ஒரு குழந்தையின் மனம் எப்படி மலர்கிறது? குழந்தைகளின் மூளை எப்படி வளர்கிறது?அவர்களின் நடத்தைக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன? இவற்றை எல்லாம் பற்றி பேசப்போகிறோம். குழந்தைகளின் வளர்ச்சிப் படி நிலைகள், நடத்தை மாற்றங்கள், சமூகக் கற்றல், தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, நட்பு, திரை நேரம், ஒழுக்கம், பதின்பருவ மாற்றங்கள், மனஅழுத்தம், உணர்வுகளைக் கையாளும் திறன்—இவை அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களோடும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களோடும் இணைத்து என்னால் முடிந்த வரை எளிமையாகப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நீங்கள் இங்கு தனியாக இல்லை: மிக முக்கியமாக, இந்தத் தொடர் யாரையும் குறை சொல்லும் இடமல்ல. உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம் பிடித்து அழுதிருக்கலாம்... பதின்பருவ மகன் அல்லது மகள் உங்களிடம் பேசாமல் இருக்கலாம்... ஒரு நாள் கோபத்தில் நீங்கள் அதிகமாகக் கண்டித்துவிட்டு, பின்னர் மனம் வருந்தியிருக்கலாம்... அப்படியான அனுபவங்கள் இருந்தால், நீங்கள் மட்டும் இங்கு தனியாக இல்லை. இது பல குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையில் ஒரு பகுதிதான். நம் தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொண்டு, நாளுக்கு நாள் குழந்தையுடன் சேர்ந்து வளர்வது தான் இயல்பான பெற்றோரியம். அன்பு, பாதுகாப்பு, ஏற்றுக்கொள்ளுதல்—இந்த மூன்றும் ஒரு குழந்தையின் மன வளர்ச்சிக்கான வேர்கள். இந்தத் தொடரின் மூலம், ஒரு ஆலோசகராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் உலகத்தை தினமும் பார்த்து, கேட்டு, கற்றுக்கொண்டு, அவர்களுடன் பயணிக்கும் ஒருவராக என் அனுபவங்களையும் சிந்தனைகளையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். நீங்கள் பெற்றோராக இருந்தாலும்... ஆசிரியராக இருந்தாலும்... தாத்தா, பாட்டியாக இருந்தாலும்... அல்லது குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் யாராக இருந்தாலும்... இந்தப் பயணத்தில் உங்களுக்கான ஒரு சிறு ஒளிக்கீற்று கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களைப் புரிந்துகொள்ளும் பெரியவர்கள் தேவை. ஒவ்வொரு பெரியவருக்கும், குழந்தைகளோடு சேர்ந்து வளர ஒரு வாய்ப்பு தேவை. இந்த முதல் சந்திப்பை இப்படி நிறைவு செய்கிறேன். "குழந்தைகள் இயல்பாகவே மலர்கிறார்கள். அந்த மலர்ச்சியை ரசிக்கும் தருணத்தில், நாமும் அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்." (வளர்வோம்) சக்தி செண்பகவல்லி உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார். உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions), 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
- பறக்கும் செல்போனும் கோவைச் சுற்றுப்பயணமும்
பொது முடக்க காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கற்றலுக்காக பயன்படுத்தத் துவங்கியதிலிருந்து அலைபேசி மாணவர்களின் ஓர் உடல் அங்கமாகவே மாறிவிட்டது. அங்கமாக மாறிய அலைபேசி தன்னுள் பொதிந்துள்ள தகவல்கள் மூலமாக இருந்த இடத்தில் உலகைச் சுற்றிக் காட்டுகிறது. அலைபேசிக்கு இறக்கை முளைத்து அதன் மீது பயணம் செய்யும்படி பரிணமித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை கதையாக்கியுள்ளார் எழுத்தாளர் மு.ஆனந்தன். எழுத்துலகில் தன் முத்திரையை கவிதை,சிறுகதை,கட்டுரை,மொழியாக்கம் என அழுத்தமாக பதிவு செய்துள்ள மு.ஆனந்தன் சிறார் இலக்கியத்திற்குள் இந்நாவல் மூலம் தடம் பதித்துள்ளார்.குழந்தைகள் வாசிக்கத் தகுந்த எளிமையான எழுத்து நடை, விறு விறுப்பான கதைக்கு இடையே குட்டிக் குட்டி பாடல்கள் என சுவாரசிய விருந்து படைத்துள்ளார். 25 குட்டிக் குட்டி அத்தியாயங்கள் கோவையைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை தருகிறது. ஆறாம் வகுப்பு படிக்கும் தாராவின் பிறந்த நாள் பரிசான பறக்கும் செல்போனுடன் தன் நண்பன் மாறனுடன் அவர்கள் வசிக்கும் கோவையைச் சுற்றுகின்றனர். வெள்ளியங்கிரி மலை, வ.உ.சி.பூங்கா, புரூட் பில்ட் மால், டவுன் ஹால் மணிகூண்டு என நகரின் சிறப்புமிக்க பகுதிகளையும், வரலாற்றையும் சொல்கிறது. கோயம்புத்தூர் எனப் பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் சுவாரசிய கதைகள், 1800 வருடத்திற்கு முந்தைய பேரூர் பட்டீஸ்வரன் கோவில் வரலாறு, வெளிநாட்டிலிருந்து வரும் பறவைகள், 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் இருக்கும் காடு, 100 வருடத்திற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலை என நாவல் குட்டி குட்டித் தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. தாரா, மாறன் இருவருடன் வாசிக்கும் நாமும் பறக்கும் செல்போன் அலாவுதீனுடன் கோவையில் உள்ள வாலங்குளம், உக்கடம் பெரியகுளம், பேரூர் பட்டீஸ்வரன் கோவில், சிறுவாணி அணை என சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை தருகிறது. காடு என்றால் அதற்கு ராஜா இருப்பார். அவர் பெரும்பாலும் சிங்கமாகத் தான் இருப்பார் என்ற மாயபிம்பத்தை உடைக்கிறது. எல்லா காடுகளிலும் சிங்கங்கள் இருக்காது. குறிப்பிட்ட சில காடுகளில் மட்டும் தான் இருக்கும் என்ற தகவலையும் கூறுகிறது. கோவைக்கு குடிநீர் எங்கிருந்து வருகிறது? ஆறு, குளங்களின் இன்றைய நிலை எப்படி உள்ளது? என்பதையும் எளிமையாக விளக்குகிறது. நகரிலிருந்து காட்டுக்குள் நுழையும் தாராவும், மாறனும் சந்திக்கும் பேராபத்தை எப்படி எதிர்க்கொள்கிறார்கள்? அவர்களுக்கு யார்.. யார் உதவி செய்கிறார்கள்? என திக் திக் திருப்பங்களுடன் விறுவிறுப்பான வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பறக்கும் செல்போன் புதுவித சிந்தனை கற்பனையும், அறிவியலும் இணைந்த கதைக்களம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் வாசிப்பிற்கும் சிறந்த படைப்பு. காடுகளையும்,விலங்குகளையும் பாதுகாப்பது குறித்து குழந்தைகள் எளிமையாக புரிந்து கொண்டு செயல்பட வழிகாட்டுகிறது. செல்போனின் ஆபத்தையும் இடை இடையே பேசுகிறது. குழந்தைகளுக்கான முதல் படைப்பு என சொல்லமுடியாத இயல்பான எழுத்து நடை, கதைக் களத்திற்கு ஏற்ற ஓவியங்கள் என நாவல் மிளிர்கிறது. ஆகச்சிறந்த படைப்பை புத்தகமாக்கிய புக்ஸ் ஃபார் சில்ரன் ப்திப்பகத்திற்கும்,எழுத்தாள்ர் மு.ஆனந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ரா.சண்முகலட்சுமி கதை சொல்லி, தமுஎகச அறம் கிளையின் பொருளாளர். பெருந்தலைவர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர். 2020ஆம் ஆண்டு முதல் தமுஎகச அறம் கிளையின் முகிழ் சிறார் குழுவை தொடங்கி, நடத்தி வருகிறார். இணைய வழியில் கதை சொல்லல், குழந்தைகளுக்கான நிகழ்சிகள் ஒருங்கிணைத்தல் என்று சிறார் வெளியில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
- வானவில்
மாலை நேரத்து வானத்திலே மஞ்சள் சூரியன் ஜொலிக்கிறதே ! மெல்ல மெல்ல கருமேகக் கூட்டம் திரண்டு திரண்டு வருகிறதே ! சின்ன சின்னப் பனித்துளியாய் மழைத்தூறல் தெறித்தே விழுகிறதே ! ஆஹா ! ஆஹா ! மழையினிலே ஆட்டம் போட்டால் ஆனந்தமே ! மின்னல் வருமோ ? இடி வருமோ? இன்னும் பலத்த மழை வருமோ ? பார் ! பார் ! அதிசயம் வானத்திலே ! ஏழு வண்ணத்தில் வானவில்லே ! வளைந்து விரியும் வானவில்லை நான் வரைந்தே பார்ப்பேன் வண்ணங்களால் ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- மாதுளைப் பறல்களென குழந்தைகளின் ரகசியம்
பள்ளி தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. கோடை விடுமுறையில் உறவுகளோடும் சக நண்பர்களோடும் வாயாடித் திரிந்த குழந்தைகள் இந்த காலத்தில் “கீப் கொய்ட்…சைலன்ஸ்” என்கிற சொற்களின் அதிகாரத்திற்குள் மீண்டும் வந்து விழுந்திருப்பார்கள். குழந்தைகள், வாயை கட்டிக் கொண்டு காதுகளை மட்டும் வகுப்பறையில் திறந்து வைத்திருக்க பழக்கமாகியிருக்கும் இவ்வேளையில் நாம் அறிமுகப்படுத்த இருக்கின்ற சிறிய நூலொன்று குழந்தைகளின் மனதை அவர்களின் சொற்களிலேயே பதிவு செய்திருக்கின்றது. நீண்ட நாட்களாக குழந்தைகள் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் உஷா ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள ‘குழந்தைகளின் ரகசியம்' என்கிற நூல்தான் அது. நடைமுறையில் நமது வகுப்பறைகள், 'குழந்தைகள் மையக் கல்விமுறைக்கு' வந்துவிட்டதாக நாம் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் வகுப்பறைகள் குழந்தைகளின் சுதந்திரத்திற்கு வாய்ப்புள்ள இடங்களாக இன்னும் மாறவில்லை என்பதே நிதர்சனம். பாடத்திட்டங்களும் மதிப்பெண்களும் தேர்வுகளும் இன்னும் வலு குன்றாமல் இருப்பதே வகுப்பறைகளின் மாறாத்தன்மைக்கு சான்றாக விளங்குகின்றன. தற்காலப்படுத்திய பாடத்திட்டங்கள் குழந்தைகளை பள்ளிச்சூழல்களில் சிறிது ஓய்வாக நண்பர்களோடு உரையாடிக் களிக்கும் நேரத்தையும் அபகரித்துக் கொள்கின்றன. உணவுண்ணும் நேரத்தைக்கூட அபகரித்து கணினி அறைகளுக்குள் குழந்தைகளை தள்ளிவிடுகின்றன. பதின்பருவத்தை எட்டும்வரை குழந்தைகள் தங்கள் உரையாடல்களின் வழியாகவே சமூகத்தோடு வலுவான பிணைப்புகளை உருவாக்கிக் கொள்ள முனைகின்றனர். ஆனாலும் அவர்கள் யாரிடமும் அவ்வளவு எளிதில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் விரும்புவதில்லை. பழக்கத்தின் வழியாகவும் தொடர் உரையாடல்கள் வழியாகவும் யாரிடம் அவர்கள் நெருங்கி வருகிறார்களோ அவர்களிடமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். வகுப்பறைகளில் குழந்தைகள் தனித்தனி குழுக்களாக பிரிவதும் குழுவினர்களிடையே ஏற்படும் முரண்களுக்கும் அடிப்படையாக அமைவதே குழந்தைகளின் இப்படியான உளப்பூர்வமான நட்பு இணைத் தேர்விற்காகத்தான். குழந்தைகளுக்கான இந்த அடிப்படை உரிமைகள் கூட வரம்புமீறலாகவும் ஒழுங்கீனமாகவும் கருதுகின்ற பள்ளி வளாகச் சூழலே அவர்களின் அதீதமான கோப உணர்ச்சிக்கும் நெறிபிறழான நடத்தைகளுக்கும் காரணமாய் அமைகின்றன. வகுப்பறைகள் மட்டுமின்றி வீட்டுச்சூழல்கள் கூட பல நேரங்களில் குழந்தைகளின் அக திறப்புகளுக்கான வாய்ப்பினை அளிப்பதில்லை. பெரும்பாலான அரசுப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பணிச்சூழல் காரணமாக குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். வீட்டின் மூத்த குழந்தைகளே பெற்றோர்கள் வரும்வரையில் வீட்டிற்கான கடமைகளை நிறைவேற்றுபவர்களாக மாறிவிடுகின்றனர். இப்படியான சூழல்கள் குழந்தைகளிடம் அவ்வப்போது தோன்றி மறைகின்ற உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தடையாக அமைகின்றன. தன் தலைமுடியைக் கண்ணாடி முன் நின்று அழகழகாய் வாரிப் பார்ப்பதுபோல் தன்னுள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசிப்பழக சூழலின்றி புதைத்துக் கொள்கின்றனர் குழந்தைகள். கள்ளம் கபடமற்று அனைவரோடும் கலந்துறவாடி பேசி மகிழ்கின்ற ஆரோக்கியமான சூழல் வாய்க்கப் பெறாத குழந்தைகள் நிறைந்ததாக இச்சமூகம் மாறி வருகிறது. குழந்தைகள் குழந்தைகளாக வளர வாய்ப்பில்லாத எதிர்கால சமூகம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திடும் என்பது குறித்த பார்வை பெரியவர்களாக நம் அனைவருக்குள்ளும் அவசியம் ஏற்பட்டாக வேண்டும். தொடர்ந்து குழந்தைகளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் உஷா ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள ‘குழந்தைகள் ரகசியம்' என்கிற நூல் உணர்த்தும் செய்திகள்தான் மேலே குறிப்பிட்ட செய்திகள் குறித்த உணர்வுகளை என்னுள் கடத்தியது. தான் சந்திக்கும் குழந்தைகளிடையே படைப்பாற்றல் கல்வியை பயிற்றுவித்து அவர்களை வாழ்வியல் திறன் பெற்றவர்களாக மாற்றிட உஷா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. குழந்தைகளுக்கு கற்பிக்கவும் அவர்களிடம் கற்றுக்கொள்ளவதுமாக நிறைந்த அவரது பயிற்சிக்களத்தில் விளைந்த நல்லதொரு செயல்முறைதான் இந்த புத்தகமாக விரிந்துள்ளது. ஆறுமாத காலம் தொடர்ந்து ஒரு அரசுப்பள்ளியில் திறன் பயிற்றுநராக பணியாற்றியதால் நூலாசிரியரை தன்னுள் ஒருவராக குழந்தைகள் உணரத் தொடங்கியுள்ளனர். கதை எழுதத் தொடங்குவதன் முயற்சியின் ஒரு திருப்பத்தில் குழந்தைகள் தங்கள் வாழ்வனுபவங்களை ஆசிரியரோடு் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அப்படி குழந்தைகள் பகிர்ந்த சுய அனுபவங்கள் மாதுளையின் குட்டிக்குட்டி பறல்களாக நூலில் அணி செய்கின்றன. நம் பார்வைக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும் இக்கதைகளை வாசிக்கும்போது குழந்தைகளின் மனதினை வாய்க்கப் பெறுபவர்கள் தமக்குள் சுடறேற்றிக் கொள்வார்கள். அம்மாக்களோடான சண்டைகளும் அப்பாக்களோடான பயணங்களும் உறவுகளோடான நெருக்கங்களும் தம்பி தங்கைகளோடும் வளர்ப்பு பிராணிகளோடுமான அவர்களது உலகம் மிகச்சிறியதாக நமக்கு தெரியக்கூடும். அவர்களின் மன அதிர்வுகள் நமக்கு கேலியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவைகளின் வழியே அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடம் அழிவில்லாததாக அமைகின்றது. ‘குழந்தைகளின் ரகசியம்' என்கிற இந்நூலிற்கு ச. மாடசாமி அய்யா அவர்களின் அணிந்துரை இரண்டு பக்கங்களிலான ஆய்வுரையாக அமைந்திருப்பது அழகு. எடுத்ததும் வாசித்து முடித்துவிடுகிற அளவில் சிறியதாக உள்ள இப்புத்தகம் வாசிப்பவர்களை குழந்தைகளுக்கு நெருக்கமானவர்களாக மாற்றிடும் சூட்சுமம் பொருந்தியது. பாரதி புத்தகாலயம் பதிப்பித்த குழந்தைகள் குறித்த நூல்களில் கவனம் பெறவேண்டிய நூல் இது. நம்பிக்கையோடு உங்கள் கைகளிலேந்தி மனதில் இருத்துங்கள் ‘குழந்தைகளின் ரகசிய’த்தை. நல்லதொரு அனுபவம் கிட்டும் உங்களுக்கும். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.
- இலண்டனிலிருந்து அன்புடன் – 14
"இலண்டனிலிருந்து அன்புடன்" தொடரில் இம்மாதம் கவிஞர் மைக்கேல் ரோசன் அவர்களின் “Out of this World” எனும் கவிதைப் புத்தகம் குறித்துப் பார்க்கப் போகிறோம். "கவிதை" என்றதும் அது பெரியவர்களுக்கானது என்று நினைத்துவிட வேண்டாம்; இது சிறுவர்களுக்கான கவிதை! “ஓ! ரைம்ஸ்தானே (Rhymes)!” என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. Rhymes என்பதும் ஒருவகை கவிதைதான் என்றாலும், அந்தப் பாடல்கள் பொதுவாக 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கானவை. ஆனால், சிறுவர்களுக்கான கவிதைகள் என்பது 8 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கானது. கவிதைகளை நம்மை அறியாமலே பல வடிவங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நாமும்கூட கவிஞர்களாய் மாறிவிடுவோம்! ஓர் உதாரணம் சொல்லவா? நமக்குப் பிடித்தமான ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் சரியாகத் தெரியாவிட்டாலும்கூட, பாடலின் இசையிலுள்ள தாளத்திற்கு ஏற்றவாறு நமக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சேர்த்துப் பாடுவோம் அல்லவா? அதுகூட ஒருவகையில் நாம் கவிஞர்களாய் மாறுவது போல்தான். இலண்டனில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் மைக்கேல் ரோசன் அவர்களுக்குத் தற்போது 80 வயது ஆகிறது. இவர் ஓர் ஆங்கில ஆசிரியர். சிறுவர்களுக்குக் கவிதை எழுதுவதில் இவர் மிகவும் திறமைசாலி. கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதை, நாவல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு துறைகளில் இவர் வேலை பார்த்திருந்தாலும், அனைத்திலும் சிறுவர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவார். அவரிடம் "கவிதை என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, அவர் இவ்வாறு கூறினார்: “கவிதை என்பது நம் குடும்ப ஆல்பத்தில் உள்ள மிகவும் பிடித்த புகைப்படம் போன்றது. ஓர் அழகான புகைப்படம், நமக்குப் பிடித்த தருணங்களையெல்லாம் கண் முன்னே காட்சிகளாய் எப்படிச் சட்டெனக் கொண்டு வருமோ, அதுபோல்தான் கவிதையும்! கவிதைகளில் நீங்கள் எல்லா விஷயங்களையும் முழுமையாகச் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற அவசியமில்லை! கதைகளைப் போல இறுதியில் எல்லாவற்றையும் சரியாக முடித்து வைக்க வேண்டியதில்லை. கவிதைகள் கேள்விகளோடு முடியலாம், பதில்களே இல்லாமலும் நிற்கலாம், புதிய சிக்கல்களைப் பற்றி யோசிக்கவும் வைக்கலாம். வாழ்க்கை என்பதே கேள்விகளும் பிரச்சினைகளும் நிறைந்ததுதானே! குறிப்பாகக் குழந்தைகளுக்கு எத்தனை கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியும் எவ்வளவு சுவாரஸ்யமானது! இந்தக் கேள்விகள்தாம் கவிதைகளாய் மாறுகின்றன.” ஆஹா! எவ்வளவு அழகாகச் சொன்னார் பார்த்தீர்களா! சரி, வாருங்கள் அவருடைய புத்தகம் குறித்தும் பார்த்துவிடுவோம். “Out of this world” - இது 12 கவிதைகள் கொண்ட, 200 பக்கப் புத்தகம். வெறும் 12 கவிதைகளுக்கு 200 பக்கங்களா என எனக்கும் சற்றுத் தயக்கமாகவே இருந்தது. ஆனால், படிக்க ஆரம்பித்ததும் மிகவும் சுவாரஸ்யமாக உணர்ந்தேன். இதில் “Letters” (கடிதங்கள்) எனும் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. இவரது கவிதைகள் பெரும்பாலானவை, இவரது சிறுவயது சேட்டைகளிலிருந்தே உருவானவை. ஆதலால், அவற்றை வாசிக்க வாசிக்க நமது சேட்டைகளும் நினைவுக்கு வந்துவிடும்! “கடிதங்கள்” எனும் கவிதையில் மைக்கேல் ரோசன்தான் ஹீரோ! அவரது அண்ணன் பெயரில் வீட்டிற்கு முதன்முறையாகக் கடிதம் வருகிறது. அதைப் பார்த்ததும், "அப்பாவிற்கு கடிதம் வருகிறது, அம்மாவிற்கு கடிதம் வருகிறது, தற்போது அண்ணனுக்கும் கடிதம் வருகிறது... ஆனால், தனக்கு மட்டும் கடிதம் ஏதும் வரவில்லையே!" என்று மைக்கேல் மிகவும் வருத்தமடைகிறான். தனக்கும் கடிதம் வர வேண்டும் என்று யோசிக்கிறான். செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்க்கிறான். அதில் எவையெல்லாம் “இலவசம்! உங்கள் விருப்பத்தைக் கடிதம் மூலம் தெரிவியுங்கள்” என்ற வாசகத்தோடு இருக்கிறதோ, அதற்கெல்லாம் இவன் கடிதம் போடுகிறான். வழுக்கைத் தலைக்கான மருந்து, யோகா என வரிசையாக அவன் கடிதம் போட, அவனுக்கும் பதில் கடிதங்கள் வரத் தொடங்குகின்றன! அதன் பிறகு அவன் தன் அண்ணனிடம், “யாருக்கு அதிக கடிதங்கள் வருகின்றன என்று போட்டி வைக்கலாமா?” என வம்பிழுக்கிறான். அதன் பிறகு என்ன ஆனது எனும் சுவாரஸ்யமான சம்பவத்தை அழகான கவிதை வடிவில் இந்தப் புத்தகம் தந்துள்ளது. 20-25 பக்கங்கள் கொண்ட இக்கவிதையை 10 நிமிடங்களில் வாசித்து முடித்த பிறகு, நீங்கள் கட்டாயம் வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்! இந்தக் கவிதையை வாசித்த பிறகு நான் மைக்கேல் ரோசன் அவர்களின் தீவிர ரசிகராகிவிட்டேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... நீங்களும் என்னைப் போல ரசிகராக மாறுவீர்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால் கட்டாயம் ஒரு கவிஞராக மாறுவீர்கள்! பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.
- ஐயங்கள்
அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே மீன்கள் இருக்குமா? ஆழத்திலே இறங்கி நின்றால் காலைக் கடிக்குமா? அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே ஓடம் போகுமா? அக்கரைக்கும் இக்கரைக்கும் மிதந்து போகுமா? அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே முத்து இருக்குமா? ஆழத்திலே மூழ்கிப் பார்த்தால் கைக்குக் கிடைக்குமா? அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே முதலை இருக்குமா? அகலமாக வாயைத் திறந்து விழுங்கப் பார்க்குமா? பாவண்ணன் இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.













