top of page

மலரின் மொழி


அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன.


டிக்கா தான் அங்கே இருப்பதிலேயே பெரிய பூ.


அது ஒரு செங்காந்தள் மலர்.


அந்த தோட்டத்திற்கு நிறைய தேனீக்கள் தேன் சேகரிக்க வரும்.


சுக்கா அன்று தான் தேன் சேகரிக்க முதன்முதலாக வந்தது.


அதனோடு வந்த தேனீக்கள் எல்லாம் சரியான தேன் இருக்கும் பூக்களில் அமர்ந்து அழகாக தேனை சேகரித்தன.


சுக்கா தேன் சேகரிக்கச் செல்லும் போது சில பூக்களின் நிறங்கள் மாறின.


எதற்காக அப்படி மாறுகிறது என்பது சுக்காவிற்கு குழப்பமாகவே இருந்தது.


சுக்கா வரிசையாக ஒவ்வொரு பூவாக சென்று அமரும். அதில் சிலவற்றில் தேன் இருக்கும் சிலவற்றில் இருக்காது.


மற்ற தேனீக்கள் எப்படி சரியாக தேன் இருக்கும் மலர்களின் சென்று அமர்கின்றன எனவும் அதற்கு புரியவே இல்ல.


இன்றைய நாள் சுக்காவிற்கு சரியாக அமையவில்லை. அது தேனெடுக்க அமர்ந்த மலர்களில் ஒன்றில் கூட தேன் இல்லை.


சுக்கா சோர்வாக அமர்ந்தது. அப்போது அதன் அக்கா ஜிக்கா வந்து அமர்ந்தது.


"சுக்கா தேன் சேகரிக்காம ஏன் இங்க உக்காந்திருக்க? ஏன் சோகமா இருக்க? என்கிட்ட சொல்லு"


"எந்தப் பூவும் எனக்கு தேன் கொடுக்க மாட்டேங்குது. நான் பூகிட்ட போகறப்பல்லாம் அந்த பூக்கள் வேற நிறத்துக்கு மாறுது. எனக்கு ஏன் இப்படி நடக்குது" என சோகமாக சொன்னது சுக்கா.


"என்னோட வா" என சுக்காவை டிக்காவிடம் அழைத்துப் போனது.


"டிக்கா என் தங்கைக்கு சொல்லிக் கொடு" என்றது ஜிக்கா.


"என்ன பூ பேசுமா?" என ஆச்சரியமாக கேட்டது சுக்கா.


"சுக்கா, உன்னை சுத்தி நல்லா கவனி. பூக்கள் தேன் மட்டும் கொடுக்கறதில்லை. அவங்களோட மொழிய புரிஞ்சிக்க முயற்சி செய்" என பறந்து சென்றது ஜிக்கா.


சுக்கா, "என்ன பூக்கள் பேசுமா? அத புரிஞ்சிக்கனுமா?" என யோசித்தது.


அப்போது டிக்கா ஒளிர்ந்தது.


அதன் கதகதப்பான ஒளி சுக்காவை ஈர்த்தது. அது டிக்காவிடம் போய் தேனை உறிஞ்சியது.


அதன் பின் சுக்கா மலர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தது.


சுக்காவை கண்டதும் நிறம் மாறும் மலர்களாக சென்று தேன் எடுக்க முயன்றது. தேனே இல்லை.


நிறம் மாறாமல் அழகாக புதிதாக தோன்றும் மலர்களில் சென்று அமர்ந்தால் தேன் கிடைத்தது.


புத்திசாலி மலர்கள். அவற்றில் இருந்து ஒரு தேனீ தேனை எடுத்துக் கொண்டால், தம்மை நோக்கி வரும் பிற தேனீக்களை வராதே என சொல்வதற்காக நிறம் மாறுகின்றன.


இந்த இரகசியத்தைக் கண்டுபிடித்ததும் சுக்கா மிகவும் மகிழ்ச்சியடைந்தது.


சுக்காவைக் கண்டதும் நிறம் மாறும் பூக்கள் அருகே வராதே என சொல்வது புரிந்ததால், அவற்றின் அருகே சென்று  நேரத்தை வீணாக்காமல் புதுப்புது பூக்களைத் தேடி பறந்தது சுக்கா.


"சுக்கா சுக்கா நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமா தேன் சேகரிக்கிற எனக் கேட்டது சுக்காவின் தங்கை தேனீ.


அதன் பெயர் பக்கா.


பக்காவை அழைத்துக் கொண்டு போய் டிக்காவிடம் நிறுத்தியது சுக்கா. 

ராஜலட்சுமி நாராயணசாமி
ராஜலட்சுமி நாராயணசாமி

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
ஜெ.பொன்னுராஜ்
Dec 20, 2025
Rated 5 out of 5 stars.

சுக்கா.. டிக்கா.. ஜிக்கா.. பக்கா.. அட்ரா சக்கை. மட்டன் வறுவல் போட்ட மாதிரி இருக்கே..

நிறம் மாறாத பூக்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

"தேன் இல்லை. போ.. " என்று மலர்கள் சொல்வது புனைவா அல்லது அதில் இரசாயனம் ஏதும் இருக்கிறதா

Edited
Like
bottom of page