ஊருக்குப் போன அம்மா
- உதயசங்கர்

- Dec 15, 2025
- 3 min read

நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அம்மா இப்படி நீண்ட நேரம் படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார். தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் விட்டு வருவார். தண்ணீர் எடுத்து சமையல் செய்வார். அரவிந்தின் சீருடைகளைத் துவைப்பார். அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவர் எப்போது உறங்குவார் என்று தெரியாது. எப்போது எழுந்திரிப்பார் என்று தெரியாது.
ஆனால் இப்போது காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக் கிடந்தார். யார் யாரோ வந்தார்கள். மாலைகளைப் போட்டார்கள்.. அழுதார்கள். அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை. அம்மா அழகாக இருந்தார். அவருக்குப் பிடித்த நீலநிறப் புடவையைக் கட்டியிருந்தார். அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது எழுந்து விடுவார் இப்போது எழுந்து விடுவார் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை.
அவனுக்கு வயிறு பசித்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அரவிந்தன் அழுதபோது அவனுடைய பொன்னம்மா பாட்டி,
“ அம்மா சாமிகிட்டே போயிட்டா..” என்று சொல்லி அழுதாள். அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் அம்மாவின் வாயில் அரிசி போடச்சொன்னார்கள். ஒரு சின்னக்குச்சியைக் கொளுத்தி கொடுத்து திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அம்மா நெருப்புக்குப் பக்கத்தில் போகக்கூடாது என்று எப்போதும் சொல்வார்.
“ அவன் சின்னப்பையன்.. சுடுகாட்டுக்கு வேண்டாம்.. “
என்று யாரோ சொன்னார்கள். பிறகு அம்மாவை அலங்காரம் செய்த வண்டியில் வைத்துக் கொண்டு போனார்கள்.
” எங்கே போகிறாள் அம்மா? “
அவன் சித்தியிடம் கேட்டான்.
” அம்மா ஊருக்குப் போறாள்.. சீக்கிரம் வந்துருவா..” என்று சொல்லி அழுதார். இப்போது அரவிந்தனுக்குச் சமாதானமாக இருந்தது. பலமுறை அம்மா ஊருக்குப் போவார். காலையில் போய் விட்டு இரவில் திரும்பி வருவார். சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகிவிடும். அப்போது அவன் பாட்டி வீட்டில் தான் இருப்பான். அங்கிருந்து தான் பள்ளிக்கூடத்துக்குப் போவான்.
கடைசியாக ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து வரும்போது இப்படி தூங்கிக் கொண்டே வந்தார். இப்போதும் ஊருக்குத் தானே போகிறார்.
“ அம்மா சீக்கிரம் வரவேண்டும் “ என்று மனதுக்குள் நினைத்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது.
பள்ளியில் ஆசிரியர்கள் அவனிடம் பரிவு காட்டினார்கள். அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது.
அம்மா எப்போது வருவார் என்று பாட்டியிடம் தினம் கேட்பான். அப்படிக் கேட்டாலே பாட்டி அழுவார். அவர் அழுவதைப் பார்க்கச் சகிக்காது. அதனால் பாட்டியிடம் கேட்க மாட்டான்.
அடிக்கடி வீட்டின் பின்புறம் இருக்கிற புங்கை மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வான். அந்த மரத்திடம் “ அம்மா எப்போ வருவார்? “ என்று கேட்பான். மரம் பதில் சொல்லாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படி தினம் ஒருமுறையாவது கேட்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு நிம்மதி. புங்கைமரம் தலையாட்டும். சிலசமயம் பூக்களை அவன் தலையில் உதிர்க்கும். சில சமயம் காற்றினால் அவன் தலைமுடியைக் கோதி விடும்.
அப்போது இலையுதிர்காலம். புங்கை மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கியிருந்தன. எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருந்த அரவிந்த் மரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களைக் கவனிக்கவில்லை. அன்றும் அவன் மரத்தினடியில் உட்கார்ந்து,
“ அம்மா எப்போ வாருவார்? “ என்று கேட்டான்.
அப்போது திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. புங்கை மரத்திலிருந்து பழுத்த இலைகள் மழை மாதிரி அரவிந்தின் தலைமீது விழுந்தன. தலையை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்திலும் சில இலைகள் விழுந்தன. புங்கை மரத்தில் பாதி இலைகள் இல்லை. அவன் நெற்றியில் விழுந்த இலையை எடுத்தான்.
அது பாதிபச்சையும் பழுப்புமாய் இருந்தது. அவனைச் சுற்றிலும் இலைகள். எல்லாம் அடர்பழுப்பு நிறத்திலும், மெல்லிய பழுப்பு நிறத்திலும், சில இலைகள் பச்சையும் மஞ்சளுமாக இருந்தன.
அவனுக்கு இப்போது மரத்தைப் பார்க்கச் சோகமாக இருந்தது. மொட்டையாகத் தெரிந்தது. இலைகள் உதிர்ந்தால் மரம் அழுமோ.
கீழே மரத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் மாலை மாதிரி இலைகள் கிடந்தன.
அவன் புங்கை மரத்தடிக்கு வரும்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குள்ளிருந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருப்பார்.
பின்வாசலில் நின்று கொண்டு அவர்,
“ அரவிந்த் கண்ணு! இதுதான் இயற்கை.. பழுத்த இலைகள் உதிர்ந்திரும்.. சில சமயம் நோய்வாய்ப்பட்ட இலைகளும் உதிரும்.. அப்புறம் புது இலைகள் வளரும்..” என்றார். அரவிந்த் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தான். பாட்டியும் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார்.
“ உன் அம்மா ஒரு நோய்வாய்ப்பட்ட இலை.. அது தான் உதிர்ந்துட்டா.. இனி அவ வரமாட்டா.. மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய முடியும்? பழுத்த பிறகும் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. எங்கண்ணு….. புது இலையா நீ இருக்கீல்ல.. ”
என்று உறுதியான குரலில் சொன்னார்.. அந்தக் குரலில் கவலை இல்லை. நம்பிக்கை இருந்தது. அரவிந்துக்கு ஏதோ புரிந்ததைப் போலிருந்தது. அவன் மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனான். பாட்டி அவனை அணைத்துக்கொண்டார்.
அன்று இரவு அரவிந்துக்கு தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒரு கனவில் அம்மாவும் சிரித்துக் கொண்டே வந்தார். தூங்கி எழுந்து பின்வாசலுக்கு வந்தான்.
என்ன ஆச்சரியம்!
புங்கை மரத்தில் புதிய தளிரிலைகள் தோன்றியிருந்தன. இளம் பச்சை நிறத்தில் மரத்தின் உடல் முழுவதும் அலங்காரம் செய்ததைப் போல இருந்தது. அரவிந்தைப் பார்த்து புங்கை மரம் சிரித்தது.
அரவிந்தின் உதடுகளும் புன்னகை பூத்தன. அந்தப் புன்னகையின் ஓரத்தில் அவனுடைய அம்மாவின் நினைவுகளும் ஒட்டியிருந்தன.

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம் என்று குறளை படித்தாலும் ஏற்கிற, புரிகிற பக்குவம் யாருக்கு இருக்கும்... ஆனாலும் ஏற்பது காலத்தின் நியதி. ஆக உடலே பொய்ப் பொருள் (நிலையானதில்லை. அது ஒரு கால எல்லைக்குட்பட்டது). பொய்ப்பொருளில் பதவி, பொருள், அந்தஸ்து, புகழ், பாராட்டு,பெருமை, வி.வி.ஐ.பி? அனைத்தும் எனக்கே என்றால் அந்த உணர்வு தரும் விளைவு என்னவாக இருக்கிறது... எங்கே இருக்கிறது... அது ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன... என்ன...
எல்லாவற்றுக்கும் ஒரு கால நிர்ணயம் இருக்கவே செய்யும்போது அது ஆண்டிக்கும் அரசனுக்கும் வேறுபாடு பார்க்குமா... வாழ்ந்துவிட்டு போவதை தவிர வேறென்ன மிச்சம் இருக்கப்போகிறது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு