தத்துவம் அறிவோம் - 9
- உதயசங்கர்

- 7 hours ago
- 2 min read

ஆரம்பகாலத்தில் மனிதர்கள் இயற்கையைக் கண்டு பயந்தார்கள். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
கோடைகாலம் ஏன் வருகிறது?
மழைக்காலம் ஏன் வருகிறது?
குளிர்காலம் ஏன் வருகிறது?
வசந்த காலம் ஏன் வருகிறது?
ஒவ்வொரு காலத்திலும் பூமி மாற்றமடைகிறது. சில உயிர்கள் அழிகின்றன. சில உயிர்கள் உருவாகின்றன. சில உயிர்கள் புதைகின்றன. சில உயிர்கள் முளைக்கின்றன.
செடி, கொடி, மரங்களில் பூக்கள் பூக்கின்றன. பூத்தவுடன் எங்கிருந்தோ பூச்சிகள் வந்து தேன் அருந்துகின்றன. பூச்சிகள் வந்து சென்றதும் காய் காய்க்கின்றது. சில காலம் கழித்து காய் பழுக்கின்றது. பழுத்த பழங்களைச் சாப்பிடப் பறவைகள் வருகின்றன. பறவைகள் பறந்து சென்ற இடங்களில் அந்த மரங்கள் முளைக்கின்றன.
இயற்கையின் இந்தச் சங்கிலியை இப்போது நாம் முறையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால் இப்படி வரிசையாகச் சொல்ல முடிகிறது. ஆனால் ஆதிமனிதர்களுக்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது.
எல்லாம் தனித் தனி நிகழ்வாகத் தெரிந்தன. தனித் தனித்தனி நிகழ்வுகளின் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ளவே பல நூற்றாண்டுகள் ஆனது.
அப்படி என்றால் திடீர் திடீர் என்று நிகழும் இயற்கை மாற்றங்களை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
அதனால் அடைமழையோ, கொடும்வெயிலோ, புயற்காற்றோ, பூகம்பமோ, நிலநடுக்கமோ எது நடந்தாலும் பயந்தார்கள்.
ஏன் பயப்பட வேண்டும்?
அந்தப் பேரிடர்கள் அழிவைக் கொண்டு வந்தன. புயலில் செடி கொடி மரங்கள் அழிந்தன.
விலங்குகள், பறவைகள் அழிந்தன.
மனிதர்களும் எதிர்பாராமல் அழிந்தனர்.
அதுவரை இருந்த ஒன்று
திடீரென்று இல்லாமல் போனால் எல்லோரும் பயப்படுவார்கள் தானே.
தங்களை மீறிய சக்தியைக் கண்டு பயந்தனர். அவற்றை ஆவிகள் என்று நம்பினர்.
எனவே இயற்கையின் அடிப்படைகளான நிலம், நீர், காற்று, மண், வெளி (வானம்) எல்லாவற்றையும் வழிபடத் தொடங்கினார்கள்..
இயற்கையில் அவர்கள் பார்த்த ஒவ்வொரு புல்லிலும் ஆவி இருக்கிறது.
ஒவ்வொரு பூச்சியிலும் ஆவி இருக்கிறது.
மரத்திலும் ஆவி இருக்கிறது.
மனிதர்களிலும் ஆவி இருக்கிறது.
என்ற நம்பிக்கை வளர் ந்த து. அதனால் தன்னுடன் இருந்த மனிதர்கள் இறந்த போது அவர்களையும் வழிபட ஆரம்பித்தான்.
அதேபோல அவனுக்கு நோயைக் கொடுத்த, அழிவைக் கொண்டு வந்த, பயிர்களை அழித்த, வேறு பல துன்பங்களைக் கொடுத்த பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றையும் வழிபட்டான்.
அதே போல அவனுக்கு வளத்தைக் கொடுத்த செடி, கொடி, மரம், பயிர்கள், பறவைகள், விலங்குகளையும் வழிபட்டான்.
அப்போது மனிதர்கள் குழுக் குழுவாக வாழ்ந்தனர். அதைக் குலம் என்று அழைத்தனர். ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு பொருளை, தாவரத்தை, விலங்கை தங்களுடைய குலச் சின்னமாக அதாவது குல தெய்வமாக வழிபட்டனர்.
உதாரணத்துக்கு ஒரு குலம் எலியைக் கும்பிட்டனர்.
ஒரு குலம் யானையைக் கும்பிட்டனர்.
ஒரு குலம் உருளைக்கிழங்கைக் கும்பிட்டனர்
ஒரு குலம் வேப்பமரத்தைக் கும்பிட்டனர்.
ஆனால் எல்லாக்குலங்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை வழிபட்டனர்.
இப்படித் தான் ஆரம்பத்தில் வழிபாடுகள் தோன்றின.
இந்த வழிபாடுகளில் நாம் போன அத்தியாயத்தில் பார்த்த கேள்விகளுக்கான ஆரம்பம் இருந்த து.
மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
இந்த உலகத்தில் இதுவரையிலும் இனிமேலும் வரும் த த்துவங்கள் அனைத்துமே இந்தக் கேள்வியைச் சுற்றியே தான் இருக்கும்.
சரியா?
( தத்துவம் பயில்வோம் )

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.




Comments