குட்டிப்பூ சொன்னது என்ன?
- மீனா

- Dec 15, 2025
- 1 min read

கோடை விடுமுறை நாட்களில் மாயா எப்பொழுதும் தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊரில் தாத்தா வீட்டை சுற்றி ஒரு அழகான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார். அதில் பூக்கள் அழகழகாய் கொத்து கொத்தாய் பூத்து குலுங்கும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை தரும். அதிலிருந்து ஒரு பூவை தன் தலையில் வைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை மாயாவுக்கு இருந்தது ஏனென்றால் அவளது தாத்தா யாரையும் பூக்களைத் தொட அனுமதிக்க மாட்டார்.
இன்று எப்படியாவது ஒரு பூவை பறித்து தன் தலையில் வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.வீட்டில் அனைவரும் உறங்கும் நேரமாய் பார்த்து மெதுவாக பூந்தோட்டத்தை நோக்கி நடந்தாள்அங்கே அவளைக் கவரும் விதமாக ஒரு அழகான குட்டி பூ ஒன்று தனியாக தெரிந்தது.மெல்ல நடந்து அந்தப் பூவை பறிக்க பார்த்தாள். அப்பொழுது அந்த குட்டிப்பூ தன் கீச் குரலில் கத்தியது.
"ஐயோ வேண்டாம் என் குடும்பத்து கிட்ட இருந்து என்னை பிரிச்சிறாத"
இதைக் கேட்ட மாயா மிகவும் ஆச்சரியமடைந்தாள்.
"குட்டிப் பூவே நீயா இப்ப பேசுன?"என்று கேட்டாள்
"ஆமாம் நான்தான் பேசினேன்"என்றது குட்டிப் பூ
"சரி நான் உன்ன பறிக்காம இருக்கணும்னா அதுக்கான காரணத்தை நீ சொல்லு"என்று மாயா கேட்க சற்றே குட்டி பூ அதிர்ந்தது.
பிறகு நன்கு யோசித்தபின்
"உனக்கு தேன் பிடிக்குமா?"
"ஓ! புடிக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்"
"ஆ.. நீ விரும்பி சாப்பிடுற தேன் உற்பத்தியாக காரணமே நான் தான்"
ஆச்சரியத்தில் மூழ்கிய மாயா "எப்படி?"என்று கேட்டாள்.
"ஆமாம் என்னிடமிருந்து தான் தேனை எடுத்து தேனீக்கள் சேமித்து வைக்கும் அதை மனிதர்கள் நீங்கள் எடுத்து சாப்பிடுவீர்கள்"
"ஓ அப்படியா! அப்படின்னா சரி நான் உன்னை பறிக்க மாட்டேன்"என்று கூறிய உடன் குட்டிப் பூ மிக மகிழ்ச்சியுடன் துள்ளியது அதன் பிறகு ஊருக்கு வரும்போதெல்லாம் குட்டிப் பூ மட்டுமின்றி தோட்டத்தில் இருந்த அனைத்து பூக்களையும் தன் தாத்தாவோடு பராமரித்தாள்.
தயவு செய்து யாரும் மாயாவோட தாத்தா வளக்குற பூந்தோட்டம் பக்கம் போகாதீங்க நீங்க பூவப் பறிக்க வரீங்க நினைச்சு மாயா கோவிச்சுப்பா ஆமா!

மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்
இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்
இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்
விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது.




அருமை "பூக்களை பறிக்காதீர்" என்ற வார்த்தைகளில் தேனீக்களும் மனிதர்களும் ஒளிந்து கொண்டிருக்கிறார்களே.
குடும்பத்திலிருந்து பூக்களை பிரிப்பதை இதுவரை உணரலையே.. ஆம் தூரஇடைவெளி விட்டு பூக்களை பார்ப்பதே அழகு.
கூந்தலை அலங்கரிப்பதில் இருக்கிறது பூக்களின் தியாகம்.🌹🌷🌺
கதையின் வழியாக கதாசிரியர் ,'பூக்களை பறிக்காதே' என்று நாம் பூங்காக்களில் அவ்வப்போது காணும் வாசகத்திற்கான மிகச் சிறந்த காரணத்தை எளிய முறையில் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறார்