வன ராணி
- சூடாமணி

- Nov 15
- 3 min read

மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை. தேன்மொழி மிக குதூகலமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். படித்து கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்திவிட்டு "தேனு..பக்கத்து வீடு பால் வண்ணம் மாமா வீட்டுக்கு நாறும்பூ மாமா வந்துருக்காங்க .
உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் "என்று அம்மா கூறினாள்.
தேன்மொழிக்கு சந்தோசம் தாங்கல .."மாமா எப்போ வந்தாலும் நிறைய கதை சொல்லுவாங்க,மாமா சொல்ற கதை எல்லாம் புதுசா இருக்கும் "
மாமவ பார்க்க போனாள். மாமா இவள பார்த்ததும் "தேனு எப்படிம்மா இருக்க" என்று கேட்டாங்க,ரெண்டு பேரோட பேச்சு அப்படியே போகும் போது "மாமா ஒரு கதை சொல்லுங்க" என்று கேட்க...
மாமாவும் கதை சொல்ல தொடங்கினார்.
"ஒரு அடர்ந்த வனம்.அந்த வனத்தை ஆண்டது ஒரு ராணி "
'ராணியா 'என்று தேன்மொழி கேட்க
"ஆமா, அந்த காலத்தில் ராணியும் ஆட்சி செய்தார்கள்.
அவ பெயர் மீனாட்சி..
காட்டை அந்த ராணி ரொம்ப சிறப்பாக ஆட்சி செய்தாள். அங்குள்ள பழங்குடி மக்களும் மகிழ்ச்சியாக,அன்புடன் அனைவரும் கூடி வாழ்ந்தார்கள். எந்த ஒரு ஏற்ற தாழ்வும் கிடையாது. காடு தனக்கே உரியது என நினைக்காமல் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என உயிர்மெய்நேயம் உடையவர்கள்.
ஒரு நாள் மூன்று நபர்கள் வெளிநாட்டில் இருந்து அந்த காட்டிற்கு வந்து ராணியின் அனுமதி இல்லாமல் ஒரு குடில் போட்டாங்க."
' குடில்னா 'யோசனையா கேட்டா தேன்மொழி
"குடில்னா தங்குறதுக்கு ஒரு ஓலை வீடு அப்டினு அர்த்தம்" மாமா சிரிச்சிகிட்டே சொன்னாங்க
"இது ஒற்றர்கள் மூலம் ராணிக்கு தெரிந்தது.உன் வீட்டில் உன்கிட்ட கேட்காமல் யாரவது வந்தா "
தங்க விடுவியா!! யாரு நீங்க என்ன ஏதுன்னு விசாரிப்பல்ல அந்த ராணியும் அதைத்தான் பண்ணாங்க
ஒரு மந்திரியை அனுப்பி "ராணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் தங்கணும்"என்று சொல்ல
சொன்னாள். ஆனால் அந்த மந்திரியை அடித்து அனுப்பினர். இதனால் கோவம் அடைந்த ராணி நேராக சென்று பேசினாள். அவர்களோ அதிகார தொனியில் பேசினார்கள். இது ஒரு வாக்குவாதமாக மாறி, அந்த மூவரில் ஒருவன் வில்லை எடுத்து ராணியின் மூக்கு, காது, மார்பை அறுத்தான்."
'இது என்ன கொடூரம், இதை யாரும் தட்டி கேட்கலையா'
"பழங்குடிகள், ஏழைகளுக்கு நடக்கும் குற்றங்களை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். அதிகார வர்க்கம் எப்போவும் அடிமைப்படுத்ததான் நினைக்கும்."
'மாமா, இது சூர்ப்பணகை கதை மாதிரியே இருக்கு'
சிரித்துக்கொண்டே"கண்டு பிடிச்சிட்டியா "
'ஆனால், நான் சூர்ப்பணகையை வஞ்சி மகளுன்னு படிச்சேன்.. அவ அரக்கி தானே, அழகா இருப்பானு சொல்றிங்க, மீனாட்சினு வேற சொன்னிங்க'என கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள்.
மாமா..
"பொறுமையா இரு. சொல்றேன்.
சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பணகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சினு lபெயர் வச்சாங்க ..
'ச்சே, எவ்வளவு தப்பா புரிஞ்சி வச்சிருக்கேன், ஏன் அவளை அரக்கி என்று சொல்றோம்'தேன்மொழி வருத்தப்பட்டாள்.
"சூர்ப்பணகை போராட்ட குணம் படைத்தவள்... தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவள். அதை பயமின்றி சொன்னவள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.. ,. அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்."
' எப்போவுமே கதை கதாநாயகன், கதாநாயகி, பார்வையில் தான் இருக்கிறது.
கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சொல்ல படுவது இல்லை'
" இது கற்பனை இதிகாசங்களில் மட்டும் இல்லை, இப்போதும் அடக்குமுறை இருக்கிறது "மாமா சொன்னாங்க.
' இப்போதுமா'..'தேன்மொழி ஆச்சிரியமாக கேட்க..
"பல உலக நாடுகள், இந்தியா உட்பட பழங்குடிகளை காட்டில் இருந்து தள்ளி நகரங்களாக மாற்றுகிறது.
ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.தான்" என்று மாமா சொல்ல
'மாமா இன்னும் அவங்கள பத்தி சொல்லுங்க மாமா 'என்று ஆவலுடன் தேன்மொழி கேட்டாள்
"உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி மக்கள் இருககாங்க.., இதில் 476 மில்லியன் மக்கள் உள்ளனர் - இது உலக மக்கள் தொகையில் சுமார் 6.2% தான். 4,000 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள்.
அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் அதே கடுமையான யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் மீறப்படுகின்றன, மேலும் அவர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.. .
பழங்குடியின் கையில் இருந்த சோலைவனம் இப்போது நம்மிடம் பாலைவனமாக உள்ளது."என்று மாமா சொல்ல ..
'இதுக்கு நம்ம என்ன செய்யலாம்'
தேன்மொழி கேட்டாள்
"இதை உன் நண்பர்கள் கிட்ட பகிரலாம், சமூக வலைத்தளங்களில் இது போன்ற நல்ல கருத்துகளை பதிவிடலாம்."
'கண்டிப்பாக செய்வேன், ரொம்ப நன்றி மாமா' என்று கூறிவிட்டு தேன்மொழி வெளியே வந்தாள். கருமேகங்கள் நகர்ந்து சூரிய ஒளி பிரகாசமாக தெரிந்தது, வானில் மட்டும் அல்ல தேன்மொழியின் மனதிலும் தான்...
மிக விரைவில் அவள் அதைப் பற்றி ஒரு குழந்தைகள் புத்தகத்தில் ஒரு கதையை எழுதுவாள், நாம் அனைவரும் ஒரு நாள் அதைப் படிப்போம்

மு.சூடாமணி, வயது 15 ,11ம் வகுப்பு மாணவி, திருநெல்வேலி
கதைசொல்லி, இளம் ஓவியர் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர், இளம் சொற்பொழிவாளர்
சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதியிருக்கும் சூடாமணி ஓவியரும் கூட..




அருமையான கதை, சமூகத்திற்கு வேறுபட்ட பார்வயைத் தருகிறது
வெகு சிறப்பாக சொல்லப்படுகிறது கதை
சமூகத்திற்கான உயரிய விழுமியங்களை நல்ல கதை சொல்லும் உத்தியுடன் தந்துள்ளது, வயதில் சிறியோர்க்கு மட்டுமன்றி பெரியோர்க்குமானது
Nice