இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- அறிவோம் ஆளுமை – 10
நம் குரலின் வலிமை – கிரேட்டா தன்பர்க் நகுலன் : அத்தை நீங்க மழையில நினைச்சுட்டீங்களா? நல்லவேளை நாங்கள் குடை எடுத்துட்டு வந்தோம். ஜோ : ஆமாம். நனைந்து விட்டேன். இது மழைக்காலமே இல்லை. முன்பெல்லாம் மழைக்காலத்தில் தான் மழை வரும் ஆனால் இப்போது பருவ நிலை மாற்றத்தால் எப்போது மழை வருகிறது? எப்பொழுது வெயிலடிக்கிறது? என்றே தெரிவதில்லை. ரதி : பருவநிலை மாற்றம் என்றால் என்ன? ஜோ: பருவநிலை மாற்றம் என்பது நீண்ட கால வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு எரித்தல், காடழிப்பு, போக்குவரத்து, தொழில் மற்றும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) போன்ற வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல வெப்பத்தை அடைத்து, புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கின்றன. இதைத் தடுக்கத்தான் கிரேட்டா தன்பர்க் தன் எட்டு வயதிலிருந்து இப்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார் ரதி : கிரேட்டா தன்பர்க் இந்தப் பெயரை கேள்விப்பட்டது போல இருக்கிறதே! யார் அவங்க? ஜோ : கிரேட்டா 2003-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர். தாத்தா இயக்குநர் மற்றும் நடிகர். அப்பாவும் நடிகர். அம்மா சர்வதேச பாடகர். எட்டு வயதிலிருந்தே காலநிலை மாற்றம் பற்றி கற்றும், கேட்டும், உணர்ந்தும் வந்தார் கிரேட்டா. அப்போது அவருக்கு எழுந்த முதல் கேள்வி என்ன தெரியுமா? “இவ்வளவு பெரிய பிரச்சனைன்னா இதைக் காப்பாற்ற யாரும் ஏன் முயற்சி எடுக்கல?” அந்தக் கேள்விதான் அவரைப் போராட்டத்துக்குக் கொண்டு வந்துச்சு. நகுலன் : எப்படிப் போராடினார்கள்? ஜோ : பள்ளிக்குப் போக வேண்டிய வயசுல வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு பதாகையை தாங்கிக் கொண்டு நின்னாங்க. அதுவும் தனியாக. யாரும் சேரல. உலகம் கவனிக்கல. ஆனா அந்த ஒற்றைக் குழந்தை நின்னது இன்னிக்கு “Fridays for Future” என்னும் உலகளாவிய போராட்டமாக மாறிடுச்சு. சென்னையில் கூட அந்த போராட்டம் நடந்தது. ரதி : என்னென்ன பிரச்சனைகளுக்காக போராடினார்? ஜோ : காலநிலை மாற்றத்திற்கு எதிராக. இயற்கையை அழிக்கும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக.“இது இயற்கை சீற்றம் இல்லை. அரசியல் தலைவர்களின் தவறான கொள்கைகள்தான் காரணம்" என்றார்.வெள்ளம், வறட்சி காரணமாக உணவு மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. நோய்கள் பரவுதல், தீவிர வெப்பம் போன்றவை. பேரிடர்கள் மற்றும் விவசாய பாதிப்புகளால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார். பேசுறதோட நிறுத்தல. வாழ்க்கையிலேயே மாற்றம் கொண்டுவந்தாங்க. வீட்டிலிருந்து ஆரம்பிச்சாங்க. அம்மாவும் துணை நின்னாங்க. நகுலன் : நான் மட்டும் பள்ளிக்கூடம் போகாம இப்படி செஞ்சிருந்தா அவ்வளவுதான். எங்க அம்மாவும் அப்பாவும் என்னை என்ன செய்திருப்பாங்க என்றே தெரியாது. ரதி : சரியாகச் சொன்னாய் நகுலா. நம்ம அம்மா அப்பாக்களைப் பொறுத்த வரைக்கும் பள்ளிக்கூடம் போகணும். படிக்கணும். மார்க் வாங்கணும். அவங்க கவலை எல்லாம் பக்கத்து வீட்டுக்காரங்க பசங்களை விட சொந்தக்காரங்க பசங்களை விட நாம நல்லா படிக்கணும். என் பொண்ணு இந்த காலேஜ்ல படிக்கிறாள். அந்த காலேஜ்ல படிக்கிறாள்னு பெருமை பீத்தனும் அவ்வளவுதான். நகுலன் : அவங்க அம்மா எப்படித் துணை நின்னாங்க? ஜோ : அம்மா மெலினா சர்வதேச பாடகர். விமானம் பறக்கும் போது வெளிவிடும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு என்று தெரிஞ்சதும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நிறுத்திட்டாங்க.இந்தக் குடும்ப மாற்றம்தான் கிரேட்டாவுக்கு வீதிகளுக்கு வந்து போராடும் மன வலிமையைக் கொடுத்தது. 2019-ல்ஜெர்மனியில் உள்ள ஹாம்பாக் காடுகள் நிலக்கரி சுரங்கத்துக்காக அழிக்கப்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுத்தாங்க. விமானங்களால் வெளிவரும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் எவ்வளவு ஆபத்து என்பதை ஸ்வீடனில் பிரச்சாரம் செய்தாங்க.அதன் விளைவாக அந்த ஆண்டு ரயில் பயணிகள் 8 சதவீதம் அதிகரித்தது. பல நாடுகளுக்குச் சென்று உரையாற்றியதோடு ஐநாவிலும் இது பற்றிப் பேசினார். ரதி : கிரேட்டா தன்பர்க் அம்மாவுக்கு ஒரு சல்யூட். எனக்கு ஒரு சந்தேகம். பல நாடுகளுக்குச் செல்ல விமானத்தில் தானே அவர் பயணித்திருக்க வேண்டும்? ஜோ : ரதி நீ சரியாக கவனித்திருக்கிறாய். ஐநாவில் பேசுவதற்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக்கா படகிலேயே போனாங்க. துளியும் புகை வராத சோலார் படகு. அமெரிக்கா, தென் அமெரிக்கா, பிரேசில் எல்லா இடங்களுக்கும் அதே முறையில்தான் பயணம் செய்தார். உன்னோட சந்தேகம் தீர்ந்து போச்சா? ரதி : தீர்ந்து போச்சு அத்தை. ஆனால் இன்னொரு சந்தேகம். அவங்க ஏதாவது புத்தகம் எழுதி இருக்காங்களா? ஜோ : “Scenes from the Heart” என்ற நூலைக் கிரேட்டா குடும்பமே சேர்ந்து எழுதியது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரோட உரைகளும் நூலாக வெளியிட்டிருக்கிறார். அவற்றிலிருந்து வரும் பணத்தை காலநிலை போராட்டத்துக்கே செலவழிக்கிறாங்க.. ரதி : உலக தலைவர்களை எல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார். இவருக்கு எதிர்ப்புகள வரவில்லையா? ஜோ : வராமல் இருக்குமா? ஏராளமான எதிர்ப்புகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சில அமைப்புகள். “மன வளர்ச்சி குன்றிய குழந்தை” அதனால்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறது என்றும் அவர்களுடைய பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை. அதனால் தான் உலகத் தலைவர்களை நோக்கி சற்றும் மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறது என்றும் கூடப் பேசினார்கள். ஆனா அவங்க தைரியமா க நின்னாங்க.பின்வாங்கல. “இப்போதுதான் சத்தமாக பேச வேண்டிய நேரம். நம் குரல்களை ஒடுக்க சத்தமில்லாமல் வேலை நடக்கிறது.” “நீங்கள் வயதால் இறக்கிறீர்கள். நாங்கள் காலநிலை மாற்றத்தால் இறக்கப் போகிறோம்.” “அறிவியலுக்கு செவிமடுங்கள். எங்களுக்கு துரோகம் செய்தால் நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்.” என்று உரக்கப் பேசினார். ரதி : மனவளர்ச்சி குன்றியவர் என்று ஏன் அவரை கூறினார்கள்? ஜோ : கிரேட்டாவுக்கு இருந்தது ASD. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் என்பார்கள். ஆட்டிசம் என்பது மனநோய் அல்ல. மூளை தகவல்களை செயல்படுத்தும் முறை சற்றே வேறுபடும் அவ்வளவே. சிந்தனை, கவனம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றில் தனித்தன்மை இருக்கும். கிரேட்டா துன்பெர்க் தன்னுடைய ஆட்டிசத்தை “Superpower” என்று பலமுறை கூறியுள்ளார். நான் விஷயங்களை கருப்பு, வெள்ளை போலத் தெளிவாகப் பார்க்கிறேன் தவறு தவறாகவே தெரியும் அதனால் சமரசம் செய்ய முடியாது என்கிறார். ஆட்டிசம் அறிவுக் குறைபாடு அல்ல. ஆட்டிசம் உள்ளவர்கள் பலர் அறிவாற்றல்,படைப்பாற்றல் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றில் முன்னணி மனிதர்களாக இருக்கிறார்கள் என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். கிரேட்டா ஒரு பெண் குழந்தை இல்லை. ஒரு எச்சரிக்கை. நகுலன் : உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இவ்வளவு செய்திருப்பவருக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்குமே? ஜோ : ஆம், அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. 2018 டைம் இதழ் தேர்ந்தெடுத்த உலகின் 25 தலைசிறந்த இளைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. அதே ஆண்டு டைம் இதழ் முகப்பு அட்டையில் “அடுத்த தலைமுறை தலைவர்” என்ற தலைப்பிட்டு அவருடைய புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டிருந்தது. பிரிட்டன் இதழில் “மாற்றத்திற்கான சக்திகள்” பட்டியலில் இடம இவரும் இடம் பெற்றிருந்தார். ஸ்வீடன் தன் நாட்டின் உயரிய விருதைக் கொடுத்து இவரைக் கௌரவப்படுத்தி இருக்கிறது. ஜோ : ஒரு தலைமுறையின் குரலாக கிரேட்டா தன்பர்க்கின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ரதி : கிரேட்டா இஸ் தி கிரேட். நகுலா! இனிமேல் நாமும் கேள்வி கேட்போம். நகுலன் : நாம் மட்டுமல்ல நம் நண்பர்களையும் இணைத்துக் கொள்வோம். இந்தப் பிரச்சனைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சனைக்கும் குரல் கொடுப்போம். பயப்படாமல் தைரியமாக துணிந்து கேள்விகளைக் கேட்போம். ஜோ : மகிழ்ச்சி குழந்தைகளே! உலகின் மிக வலிமையான குரல் உங்களுடையதுதான். சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- தத்துவம் அறிவோம் - 10
மனிதன் ஏன் வழிபாடுகளைச் செய்தான்? அவனுக்குப் புரியாத, தெரியாத அனைத்தையும் வழிபடுவதின் மூலம் அவற்றைச் சாந்தப்படுத்தலாம். அல்லது பிரதிபலன் பெறலாம் என்று நினைத்தான். அதனால் வழிபாடுகள், பூசை, சடங்கு என்று அன்று முதல் இன்றுவரை வேண்டுதல்களைச் செய்து கொண்டிருக்கிறான். இப்போது கூட பாருங்கள்! பரீட்சையில் பாசாக வேண்டுகிறோம். நோய் குணமாக வேண்டுகிறோம். ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுகிறோம். இல்லையா? பரீட்சையில் பாசாக என்ன செய்யவேண்டும்? படிக்க வேண்டும். நோய் குணமாக மருத்துவரைப் பார்த்து தேவையான மருத்துவச்சிகிச்சை எடுக்க வேண்டும். ஆசைப்பட்டது கிடைக்க அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் மனிதர்களின் வேண்டுதல்கள் குறையவே இல்லை. கோவில்களும் குறையவில்லை. பூசை, சடங்குகளும் குறையவில்லை. ஏன் என்று யோசித்திருக்கிறோமா? காரணங்கள் தெரிந்தும் ஏன் வேண்ட வேண்டும்?. ஏன் பூசைகளோ, சடங்குகளோ செய்ய வேண்டும்?. மனிதனால் தன்னை மீறி நடக்கும் இயற்கையின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்குத் தெரியும் இல்லையா? நம்முடைய பால்வெளி மண்டலத்தில், கோள்களில், பூமியில் முடிவில்லாமல் பொருள்கள் உயிர்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை நொடியின் பின்னத்தில் கூட திசைமாறினால் மற்ற பொருள்களுடன், உயிர்களுடன் மோத வேண்டியது தான். இதற்கான காரணங்களை இப்போது இயற்பியலும், கணிதவியலும், கண்டுபிடித்து விளக்கிவிட்டன. ஆனால் ஆதியில் மனிதனுக்கு எதுவுமே தெரியவில்லை. அப்போது அறிவியலோ, கணிதவியலோ, இயற்பியலோ, உயிரியலோ எதுவும் வளரவில்லை. . அதனால் மாறிக் கொண்டேயிருக்கும் காலநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. இயற்கையின் படைப்புகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் தனித்துவமான இயல்புகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உயிர்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இவையெல்லாம் முதன்முதலாக இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஹோமோசேப்பியன்ஸ் காலத்திலிருந்த அறிவின் வளர்ச்சி. இப்படியெல்லாம் எந்தக் குழப்பமும் பறவைகளுக்கு இல்லை. விலங்குகளுக்கு இல்லை. பூச்சிகளுக்கு இல்லை. பல்லிகளுக்கு இல்லை. பாம்புகளுக்கு இல்லை. அவை பிறந்தன. வளர்ந்தன. இனப்பெருக்கம் செய்தன. இறந்தன. அவ்வளவுதான். வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கும்போது செழித்து வளர்ந்தன. அப்படி இல்லாதபோது ஒன்று தன்னை மாற்றிக் கொண்டன அல்லது பூமியிலிருந்தே மறைந்து போய் விட்டன. அவற்றுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. தான் யார் என்று கேட்கவில்லை. தனக்கும் இந்த இயற்கைக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை. தனக்கும் மற்ற மனிதர்களுக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை. தனக்கும் மற்ற உயிர்களுக்கும் என்ன உறவு என்று கேட்கவில்லை. தன்னுடைய பிறப்பின் அர்த்தம் என்ன என்று கேட்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்கவில்லை. தான் ஏன் ஏழையாக இருக்கிறோம்? எவ்வளவு உழைத்தாலும் தான் ஏன் வறுமையில் வாடுகிறோம்? சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளுக்கு என்ன காரணம்? தன்னுடைய இறப்புக்குப் பின் என்ன நடக்கும் என்று கேட்கவில்லை. இந்தக் கேள்விகளைக் கேட்ட ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அல்லது விளக்கங்களை உலக முழுவதுமுள்ள சிந்தனையாளர்கள் ஆராய்ந்து சொன்னார்கள். சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதையே நாம் தத்துவம் என்று அழைக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கும் இயற்கைக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவும் முரண்பாடுமே தத்துவம். ( அறிவோம் தத்துவம் ) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- சிட்லு கேட்லு
”கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்?” என்று சிட்லு மீன் கேட்டது. ”தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ உடனே பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு தன் வாலை வேகவேகமாக ஆட்டிக் கொண்டு பவளப்பாறையின் மறுபக்கத்தை நோக்கி நீந்திச் சென்றது கேட்லு மீன். ”நில், கேட்லு! நில். அவசரப்படாதே. அங்கே ஏதாவது ஆபத்தான விலங்குகள் இருக்கும்!” என்றது அப்பா மீன். கேட்லு அப்பா சொல்வதைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. வேகவேகமாக பாறையின் மறு பக்கத்திற்குச் சென்றது. அப்பா மீனும் பின் தொடர்ந்து சென்றது. திடீரென்று, பயங்கரமான உருவம் கொண்ட பெரிய மீன் ஒன்று வாயை “ஆ!” என்று திறந்து வைத்தபடி பாறையின் பின்னாலிருந்து கேட்லு மீனை நோக்கி வந்தது. இப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற உள்ளுணர்வு கொண்ட அப்பா மீன் சட்டென்று கேட்லுவை தன் வாலால் இடித்துத் தள்ளிவிட்டது. ஒருவழியாக கேட்லு மீன் அந்தப் பயங்கர உருவம் கொண்ட பெரிய மீனிடமிருந்து தப்பிவிட்டது. "எல்லா நேரங்களிலும் துடுக்குத்தனத்தோடு நடந்து கொள்ளாதே கேட்லு! நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேள். உன் அவசரப்புத்தியால் நீ பெரிய ஆபத்தில் போய் மாட்டிக் கொள்வாய். இது பெரும் கடல். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று அப்பா மீன் கூறியது. அப்பா மீன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் கேட்லு மீன் இல்லை. எப்போதும் போல் பெற்றோருக்குப் போக்கு காட்டிவிட்டுத் தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது கேட்லு. கேட்லுவும் சிட்லுவும் அந்தக் கடலில் வாழும் குட்டி மீன்கள். கேட்லு மீன் சற்றும் பொறுமையே கிடையாது. எதற்கெடுத்தாலும் அவசரம். ஆனால், சிட்லு மீன் அப்படியல்ல. கேட்லு மீனுக்கு நேர் எதிர். பொறுமைசாலி. புத்திசாலியும் கூட. ஒருநாள், கடலின் மேற்பரப்பில் சின்ன மீன்கள் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. சிட்லு அவற்றின் அருகில் மெதுவாக நீந்திச் சென்றது. ஆனால் கேட்லு,“நான் முதலில் பிடிக்கிறேன்!” என்று கூறி மீன் கூட்டத்தின் நடுவில் 'பொத்' என்று குதித்தது. குட்டி மீன்கள் அனைத்தும் பயத்தில் நாலாபுறமும் சிதறின. "பார்த்தாயா! எல்லா மீன்களும் உன் வேகத்தைப் பார்த்துப் பயந்துப்போய் ஓடிவிட்டன. அவசரப்படக்கூடாது என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். பொறுமையாக இருக்கவேண்டும். உன் அவசரத்தால் சுலபமாக கிடைக்க வேண்டிய உணவுகூட இப்பொழுது கிடைக்காமல் போய்விட்டது" என்று கோபமாகக் கூறியது சிட்லு. சிட்லுவும், கேட்லுவும் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்தன. குட்டிமீன்கள் எதுவும் தென்படாததால், "நீ இங்கேயே இருந்து பட்டினிகிட. நான் வேறு இடத்திற்குக் கிளம்புகிறேன்" என்று கூறிவிட்டு கேட்லு கிளம்பி விட்டது. ஆனால் சிட்லு அங்கேயே பொறுமையாகக் காத்திருந்தது. சற்று நேரத்தில் சின்ன மீன்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. சிட்லு உடனே பாயவில்லை. பவளப் பாறையின் நிழலில் நீந்திக்கொண்டு சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மெதுவாக நீந்திச் சென்று குட்டி மீன்கள் சிலவற்றைப் பிடித்துச் சாப்பிட்டது. அதே நேரத்தில் எங்கெங்கோ சுற்றி உணவே கிடைக்காமல் அங்கு கோபத்தோடு வந்து சேர்ந்தது கேட்லு. சிட்லு தினமும் ஒரே பவளப் பாறைக்கு அருகில் மூன்று முறை சுற்றி நீந்திப் பயிற்சி செய்தது. ”ஏன் இதையே மீண்டும் மீண்டும் செய்கிறாய்?” என்று கேட்லு கேட்டது. ”வேகமாக நீந்தப் பயிற்சி எடுக்கிறேன். தொடர் பயிற்சிதான் வேகத்தையும் விவேகத்தையும் உருவாக்கும்” என்று சிட்லு சொன்னது. "மீன்களுக்கு நீந்தப் பயிற்சியா? நீ என்ன முட்டாளா? மீன்களுக்கு அதுவும் கடலில் இருக்கும் மீன்களுக்குப் பயிற்சி எல்லாம் ஒன்றும் தேவையில்லை. அதெல்லாம் இயல்பாக இருப்பது" என்று கிண்டலாகக் கூறியபடியே சிட்லுவைத் தன் வாலால் சீண்டியது கேட்லு. "ஓ! அப்படியா? சரி, உன்னால் முடிந்தால் என்னைத் துரத்திப் பிடி பார்க்கலாம்!" என்று கூறி வேகமாக நீந்தியது சிட்லு. கேட்லு மீன் சிட்லுவைப் பின்தொடர்ந்து நீந்தியது. சிட்லு வேகமாகச் சுழன்று சுழன்று நீந்தியது. கேட்லுவால் அதைத் தொடக்கூட முடியவில்லை. கேட்லுவுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. "எப்போதும் நீயேதான் போட்டியில் ஜெயிக்கிறாய்! ஒருநாள் நான் உன்னைப் பிடித்துக் காட்டுகிறேன் பார்! ஒரு நாள் என்ன, இப்போதே பிடிக்கிறேன் பார்" என்று கூறிவிட்டு மீண்டும் சிட்லுவைப் பிடிக்க வேகமாக நீந்திச் சென்றது கேட்லு. சிட்லு சிரித்துக் கொண்டே"எங்கே இப்போது பிடி பார்ப்போம்!" என்று கூறிவிட்டு பவளக் கல்லின் பின்னால் சென்று சட்டென்று ஒளிந்து கொண்டது. அம்மா மீனும், அப்பா மீனும் தொலைவில் நீந்திக் கொண்டே அவை இரண்டின் விளையாட்டை ரசித்துப் பார்த்தன. "இரண்டு குட்டிகளும் தினமும் இப்படியே சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், ஒன்றைப் பிரிந்து மற்றொன்று இருப்பதில்லை. சிறிது நேரத்தில் தங்களது சண்டையை மறந்துவிட்டுச் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுகின்றன" என்று கூறி அம்மா மீன் சிரித்தது. "அதுதான் குழந்தைகள். வளர்ந்த நம்மைப்போல அவர்களுக்கு மனசுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளத் தெரியாது" என்று கூறியது அப்பா மீன். அப்போது திடீரென்று அவைகளின் மேல் பெரிய நிழல் படிந்தது. பயந்துபோன சிட்லு, "அம்மா! அப்பா! பெரிய மீன்!" என்று கூச்சலிட்டுக் கத்தியது. "பயப்படாதே! அது சுறா மீன். இப்போது அது நம்மைக் கவனிக்கவில்லை. ஆனாலும், நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று அப்பா மீன் சொன்னது. "ஓஹோ! கவனிக்கவில்லையா? அந்தப் பெரிய மீனை நான் நீந்திச் சென்று தொடப் போறேன். அதைத் தொட்டு சிட்லுவை விட எனக்கு வலிமை இருக்கிறது என்று நிரூபிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு திடீரென்று சுறாவை நோக்கி வேகவேகமாக நீந்தியது கோட்லு. "அடடா, நீ எங்கே போகிறாய்? அவசரப்படாதே! நாம் இன்னும் வளரனும். அதை நம்மால் பிடிக்க முடியாது! அது நம்மைப் பார்த்து விட்டால் ஆபத்து. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை" என்றது சிட்லு. ஆனால் கேட்லு, சிட்லு சொன்னதைக் கொஞ்சமும் கேட்கவில்லை. சுறாவைத் துரத்திக் கொண்டு சென்றது. சுறா போகும் வேகத்திற்கு கேட்லுவால் ஈடுகொடுத்து நீந்த முடியவில்லை. நெடுநேரம் நீந்தியதில் கேட்லுவின் சிறிய வால் வலித்தது. பசி ஒருபுறம் வாலின் வலி ஒருபுறம். மிகவும் சோர்ந்து போன கேட்லு ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. ஆனால், அப்போது சிட்லு என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா? அருகில் நீந்திக் கொண்டிருந்த குட்டிக்குட்டி மீன்களைத் தன்னால் முடிந்த அளவுக்குப் பிடித்துச் சாப்பிட்டது. பிறகு, மிகவும் மகிழ்ச்சியாக அங்கிருந்த மற்ற நண்பர்களோடு துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது சிட்லு. அப்போது பசியோடு வந்த கேட்லுவைப் பார்த்து "மிகவும் களைப்பாக இருக்கிறாய். பசிக்கிறதா? வா! சற்று நேரம் பொறுமையாகப் பாறையின் பின்னால் காத்திருப்போம். மீண்டும் குட்டி மீன்கள் வரும் பிடித்துச் சாப்பிட்டு விடலாம்" என்று கூறியது சிட்லு. அந்த நேரத்தில் ஒரு பெரிய மீன் அவர்களைக் கடந்து சென்றது. "குட்டி மீன்கள் வரும் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது. அதோ அந்த மீனை நான் துரத்திப் பிடித்துச் சாப்பிட போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மீனைத் துரத்திச் சென்றது. ஆனால் அந்த மீனைக் கேட்லுவால் பிடிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அதீதக் கலைப்போடு திரும்பி வந்தது. "அம்மா… எனக்கு ரொம்பப் பசிக்கிறது. என்னை விடச் சற்று பெரிய மீன்களைத் துரத்துகிறேன். அவைகள் வேகமாக ஓடி விடுகின்றன. அதனால் அவைகளைப் பிடிக்க முடிவதில்லை. அது கூட சரி. ஆனால்,இங்கே இருக்கும் சின்னச்சின்ன மீன்களைக் கூட என்னால் பிடிக்க முடியவில்லை. நான் வருவதைப் பார்த்தாலே குட்டிக்குட்டி மீன்கள் தப்பித்துச் சென்று விடுகின்றன. பாருங்களேன்!சிட்லு எப்படியோ மீன்களை நைசாகப் பிடித்துச் சாப்பிட்டு விடுகிறது " என்று சோகமாகக் கூறியது கேட்லு. "கேட்லு, நீ இன்னும் குட்டி. பெரிய மீனைகளைப் பிடிக்க வேண்டிய நாள் வரும். அந்த நாளுக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றால், முதலில் சின்னச் சின்ன மீன்களைப் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். "அது மட்டும் இல்லை, இன்னும் நீ வளர வேண்டும். வால் வலிமை பெற வேண்டும். நீண்ட தூரம் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். வலிமை மட்டும் போதாது. மீன்களைப் பிடிப்பதற்கு அதுவும் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு நிறைய தந்திரங்கள் உள்ளன. அவற்றை அனுபவங்கள் வாயிலாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான நேரமும் காலமும் இன்னும் வரவில்லை" என்றது அம்மா மீன். "ஆனால் அம்மா, உங்களை எல்லாம் புரிந்து கொள்ளவே எனக்குச் சிரமமாக இருக்கிறது. நீங்கள்தான் ‘பெரிய கனவு காணுங்கள், பெரியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லுவீர்கள். இப்போது, சின்னச்சின்ன விசயங்களில் கவனமாக இருப்பதைப் பற்றி சொல்கிறீர்களே?" என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த பாறையின் மேல் ஏறி வழுக்கி வழுக்கி விளையாடியது கேட்லு. அம்மா மீன் புன்னகைத்தது. "பெரிதினும் பெரிதாக இலக்கு வைத்திருப்பது நல்லதுதான். ஆனால், அதற்கான காலம் வரும்வரைப் பயிற்சியும் முயற்சியும் அவசியம். பயிற்சியின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள். வெற்றி தோல்வியைத் தாங்கும் மனநிலை. இவை எல்லாம்தான் நம்முடைய இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்" என்று கூறிவிட்டு தன் வாலால் கேட்லுவை வருடிக் கொடுத்தது. "கேட்டுக்கொள், கேட்டுக்கொள், நன்றாகக் கேட்டுக்கொள். நீ ஒரு அவசரக் குடுக்கை. ஹா ஹா! பாரு, நீ துரத்திச்சென்ற பெரிய மீன் காணாமல் போய்விட்டது. நான் இருந்த இடத்திலேயே நிறைய மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டேன். என் வயிறு நிறைந்து விட்டது" என்று கூறிவிட்டு கேட்லுவை தனது வாலால் இடித்து விட்டு மீண்டும் நீந்த ஆரம்பித்தது. இதைக் கேட்ட கேட்லுவுக்கு கோபம் வந்தது. "நீ எப்போதுமே என்னைக் கிண்டல் செய்கிறாய். என்னால் உன்னைப் பிடிக்க முடியாது என்று தானே நினைக்கிறாய். நான் பெரியவனாகிவிட்டால் உன்னைவிட வேகமாக நீந்துவேன்!" என்று கூறி சிட்லுவைத் துரத்திச் சென்றது கேட்லு. இரண்டும் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு சண்டைப் போட்டன. சிட்லு அங்கிருந்த பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது. கேட்லு அதைத் தேடியது. அந்த இடத்தில் அங்கே சின்னச்சின்ன மீன்கள் ஏராளமாக நீந்தி கொண்டிருந்தன. "கேட்லு உனக்கு பசிக்குது தானே. வேகமாக இங்கே வா. இங்கே உனக்குப் பிடித்த மீன்கள் இருக்கின்றன" என்று கூறியது சிட்லு. சிட்லு கூறியதைக் கேட்டு கேட்லு அங்கே சென்றது. அங்கு இருந்த குட்டி மீன்களை லாவகமாகப் பிடித்துச் சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் சிட்லு மீது இருந்த கோபம் தணிந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின. அப்பா மீனும் அம்மா மீனும் அவைகளோடு சேர்ந்து விளையாடின. நாட்கள் நகர்ந்தன. கேட்லுவும் சிட்லுவும் சற்றே வளர்ந்தன. ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒரு பெரிய மீனைப் பிடிக்க முயற்சி செய்தது கேட்லு. "கேட்லு இன்னும் உனக்குப் பயிற்சி போதாது. தயவுசெய்து திரும்பி வந்துவிடு. இன்னும் நேரம் வரவில்லை" என்று கூறியது அம்மா மீன். ஆனால், கேட்லு மீன் அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அந்த மீனைப் பின்தொடர்ந்து நீண்ட தூரம் நீந்திச் சென்றது. முன்னால் நீந்திச் சென்று கொண்டிருந்த அந்தப் பெரிய மீன் தன் இரையைப் பிடிக்கும் ஆர்வத்தில் வேகமாகத் திரும்பியது. அதனுடைய பலம் மிகுந்த வால் கேட்லுவின் மீது மோதியது. அங்கு இருந்த பாறையின் மீது போய் 'பொத்' தென்று விழுந்தது கேட்லு. அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்துவிட்டது கேட்லு. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தது. தன் வீட்டிற்குச் செல்ல அதற்கு வழி தெரியவில்லை. பயந்துபோய் அழுதது. பெரிய மீன் அடித்ததனால் ஏற்பட்ட காயத்தால் அதனால் நகரக்கூட முடியவில்லை. உணவும் கிடைக்கவில்லை.பசியால் பாதி மயங்கிய நிலையில் அந்தப் பாறையின் மேலேயே கிடந்தது. அதனால் நீந்த முடியவில்லை. அம்மா! அப்பா! சிட்லு! என்று குரல் கொடுத்துப் பார்த்தது. கேட்லுவின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 'நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அவசப்பட்டது என் தவறுதான்' என்று நினைத்துக் கொண்டது. உடனே அம்மாவையும் அப்பாவையும் சிட்லுவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதனால் ஒரு அடி கூட நீந்த முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அப்பா மீன், அம்மா மீன், சிட்லு மீன் மூன்றுமே கேட்லு இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தன. "கேட்லு, தங்கமே! என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கிறாய்? உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா?” என்று கூறியபடி தன் வாலால் அணைத்துக் கொண்டது அம்மா மீன். கேட்லு மீன் பேசக்கூட முடியாமல் திறனற்றுக் கிடந்தது. "முதலில் கேட்லுவுக்கு உணவைக் கொடுப்போம்" என்றது அப்பா மீன். மூவரும் சேர்ந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சில மீன்களைப் பிடித்து வந்து கேட்லுவுக்குக் கொடுத்தன. சாப்பிட்டு முடித்ததும் சற்றே தெம்பாகிவிட்டது கேட்லு. "பெரிய மீன்களைப் பிடிக்க இன்னும் காலம் இருக்கிறது என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன். நான் சொல்வதை நீ ஒருபோதும் கேட்பதில்லை" என்று வாலால் கேட்லுவின் முதுகைத் வருடியபடி சொன்னது அப்பா மீன். "மன்னித்து விடுங்கள் அப்பா. இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பேன். சிட்லுவைப் போல் சரியான பயிற்சி எடுப்பேன்" என்று கூறி அப்பாவின் அருகில் நெருங்கிச் சென்றது. அப்பா மீன் தன் வாலால் கேட்லுவைச் சுருட்டி அணைத்தது. அடுத்த சில நாட்களில் கேட்லுவுக்கு உடல் தேறியது. கேட்லுவும் சிட்லுவும் ஒன்று சேர்ந்து பவளப் பாறைகளுக்கு இடையே உள்ள பொந்துகளுக்குள் ஒளிந்து விளையாடின. சில நேரங்களில் சின்னச் சின்ன கடல்குதிரையோடு நீந்திப் போட்டி போட்டன. சில நேரங்களில் சுறுசுறுப்பான மற்ற குட்டி நண்டுகளோடு விளையாடின. வேகமாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டன. ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டன. ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு பாடம் இருந்தது. சிறிய முயற்சிகள் சேர்ந்து பெரிய வெற்றியாக மாறும் என்பதை உணர்ந்து கொண்டது கேட்லு. காலம் செல்லச்செல்ல சிட்லு, கேட்லு இரண்டும் வளர்ந்தன. வால்கள் வலிமையாகின. வேகம் அதிகரித்தது. முன்பை விட எளிதில் மீன்களைப் பிடித்தன. ”பெரிய கனவு தவறல்ல. ஆனால் அதற்குச் செல்லும் பாதை சின்னச் சின்ன பயிற்சிகளால்தான் உருவாகும் என்பதை கேட்லு புரிந்துகொண்டது. ஒவ்வொரு நாளும் சிட்லுவும் கேட்லுவும் புதிய சவால்களைச் சந்தித்தன. ஒருநாள், தொலைவில் ஒரு பெரிய மீன் நீந்திச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பெரிய மீனைக் சுட்டிக்காட்டிய அம்மா 'இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது. நீ முயற்சி செய்யுங்கள்' என்றது. அதைக் கேட்டு உற்சாகமான கேட்லுவுமா சிட்லும் அந்தப் பெரிய மீனை நோக்கி நீந்திச் சென்றன. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- இலண்டனிலிருந்து அன்புடன் - 8
Nina Peanut is Amazing – ஒரு சிறந்த Middle Grade Graphic Novel காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? விதவிதமான வண்ணங்கள், அழகான ஓவியங்கள், குட்டி குட்டி வசனங்கள்—இதெல்லாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் தரும். காமிக்ஸ் உலகம் வளர வளர Graphic Novel எனும் தனிப்பிரிவும் உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட Graphic Novel களில் ஒன்றாகும் “Nina Peanut is Amazing”. 9 முதல் 12 வயதினருக்கான Middle Grade புத்தகம் இது. அயர்லாந்தைச் சேர்ந்த சாரா பௌவி (Sara Bowie) இதன் எழுத்தாளரும் ஓவியரும் ஆவார். 12 வயதான நீனா (Nina Peanut) இந்தக் கதையின் நாயகி. நீனாவின் நெருங்கிய நண்பன் ப்ரேன் (Brain)—நீனா என்ன செய்தாலும் அவன் எப்போதும் ஆதரவாக நிற்பான். நீனா தனக்கென ஒரு யூட்யூப் சானல் வைத்திருக்கிறாள். அவள் உருவாக்கும் வீடியோக்களுக்கு ப்ரேன்தான் காமெரா மேன். அந்த வீடியோக்களுக்கு விருப்பக்குறி(Like) இடுவதும் அவன்தான். நீனாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான மேகனும் சொந்தமாக யூட்யூப் சானல் வைத்திருக்கிறாள். சானலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பதால், மேகன் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராகவே நினைப்பாள். அதனால் சக நண்பர்களை எல்லாம் நன்றாக வேலை வாங்குவாள். நீனாவையும் ப்ரேயினையும் நண்பர்களாகச் சேர்த்துக்கொள்ள மாட்டாள். அந்த நேரத்தில்தான் ஆசிரியர், பள்ளியில் நடக்கவுள்ள ஆண்டு விழாவிற்காக மாணவர்களைச் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கிறார். அதில், நீனா மற்றும் மேகன் இருவரும் ஒரே குழுவில் சேர்த்தப்படுகிறார்கள். நீனா மற்றும் மேகன் இருவருக்கும் இடையில் பிறக்கும் போட்டி, பொறாமை, சண்டை, பின்னர் உருவாகும் நட்பு — இப்படிப்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம் இந்தக் கதை முன்னேறுகிறது. வழக்கமான காமிக்ஸ் பாணியைப் போல இல்லாமல், இந்தப் புத்தகத்தில் பல புதிய முயற்சிகளைக் காணலாம். குறிப்பாக, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாயகி நீனா தனக்கே உரிய சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்துவது மிகவும் புதுமையாக இருந்தது. மேலும், யூட்யூப் வீடியோ இந்தக் கதையின் முக்கிய அம்சமாக இருப்பதால், அதில் உள்ள சிறிய விவரங்களையும் ஆசிரியர் அழகான ஓவியங்களாக வடிவமைத்திருக்கிறார். இந்தச் சிறு சிறு காட்சிகள் கூட வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. நெருங்கிய நண்பனிடம் காரணமின்றி விலகிச் செல்வது, புதிய நண்பர்களுடன் கலவையில் நாமும் மாறிப்போகும் தருணங்கள், நாம் “bossy” ஆக நடந்துகொள்ளும் நேரங்களை புரியாமல் இருப்பது—இப்படி குழந்தைகளின் உண்மையான மனநிலைகளை மிக அழகாக ஆசிரியர் கதையில் பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாது. சில இடங்களில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்! நாங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாசித்து மகிழ்ந்தோம். உங்களும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் குடும்பத்துடன் வாசியுங்கள்! வாசித்துவிட்டு உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிருங்கள்! பஞ்சுமிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.
- அறிவோம் ஆளுமை - 9
'சே' விடுதலையின் குரல் ரதி : அத்தை.. நேற்று ரோஷினி அக்கா போட்டிருந்த டி-ஷர்ட்ல கம்பீரமாக ஒரு இளைஞரின் படம் இருந்துச்சு.. இவர் யாருன்னு கேட்டேன். இவர் பெயர் சேகுவேரா. இவர் ஒரு போராளின்னு சொன்னாங்க. ஜோ : ஆமா, சேகுவேரா ஒரு போராளி. மக்கள் விடுதலைக்காகப் போராடிய 'புரட்சியாளர் . அர்ஜென்டினாவில் பிறந்த அவரோட முழுப் பேரு எர்னஸ்டோ குவேரா டி லா வெர்னா. உலகம் அவரை 'சே' என்று கொண்டாடியது. நகுலன் : சேகுவேரா எப்படி போராளியனார் அத்தை? ஜோ : அதற்குக் காரணம் இரண்டு பெண்கள். ஒருவர் அவங்க அம்மா. சேகுவேராவின் அம்மாவோட பேரு ஸெலியா. அவங்களுக்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். பிடிக்காத ஒரே விஷயம் பயம். படிக்கும்போதே முற்போக்கு இடதுசாரி சிந்தனைகள் கொண்டவங்களா இருந்தாங்க. அவங்க முற்போக்கு இயக்கங்களோட தொடர்பு கொண்டவர்களா இருந்தாங்க. திருமணத்திற்கு முன்பு நிறைய போராட்டங்களில் கலந்துக்கிட்டிருக்காங்க. அதனாலே புரட்சி மற்றும் போராட்டம் என்பது சே யின் ரத்தத்திலேயே இருந்தது. ரதி : ரொம்ப இண்டிரெஸ்டிங்கா இருக்கு அத்தை! ஜோ : அர்ஜென்டினாவை உலுக்கிய உள்நாட்டு போர் பற்றி பெரியப்பா மூலம் தெரிந்து கொண்டார் சே. தனது வீட்டு தோட்டத்தில் ஒரு சிறிய போர்க்களத்தை உருவாக்கி பதுங்குகுழிகள் வெட்டினார் மலைகளை உருவாக்கினார். தன் தாயிடம் அரசியல் பேச ஆரம்பித்தார். நகுலன் : இன்னொரு பெண்மணி யார் அத்தை? ஜோ: மற்றொருவர் ஹில்டா. ஹில்டாவுடைய நட்புக்கு பிறகுதான் மார்க்ஸ் ஏங்கல்ஸ் மற்றும் லெனின் போன்றோரின் எழுத்துக்களை சே வாசிக்கத் தொடங்கினார். இதுதான் இவரை ஒரு புரட்சியாளராக மாற்றுவதற்கான முதலடியாக இருந்தது. காலனியாதிக்கத்தால் மக்கள் படும் துயரை கண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்க நினைத்தார். அதுவே அவரைப் போராளியாக்கியது. ரதி : சே சிறுவயதில் ரொம்ப துரு துருனு இருந்திருப்பாரு அப்படி தானே அத்தை! ஜோ : அப்படின்னு சொல்ல முடியாது. சிறுவயதில் ஒரு நோஞ்சான் குழந்தை. அவருக்கு இரண்டு வயதிலேயே ஆஸ்துமா வந்துவிட்டது. அதிக நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருக்கிறார். தொடர்ந்து ஆஸ்துமாவினால் இருமல் வந்து கொண்டே இருக்கும். ஆனால் சேவின் அம்மாவும் அப்பாவும் மற்ற குழந்தைகளை விட சேவின் மீது அதிக அக்கறை எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அதனால் சே மற்ற மாணவர்களை விட குறைந்த நாள் பள்ளிக்கு சென்றாலும் மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தார். ரதி : அப்படின்னா வீட்டில் சே நிறையப் புத்தகங்களை வாசிச்சிருப்பாரில்லையா? ஜோ : ஆமாண்டா செல்லம். சே வின் பெற்றோர் நிறைய கதைப் புத்தகங்களை வாங்கி சே வை வாசிக்க வைத்தார்கள். தான் படித்த கதைகளைப் பற்றி தன் நண்பர்களுடன் பேசுவதில் சே வுக்கு ஆர்வம் அதிகம் நகுலன் : சே என்ன படித்திருக்கிறார் அத்தை? ஜோ : ஆரம்பத்தில் சே பொறியாளராக வேண்டும் என்று எண்ணியிருந்தார். அந்த நேரத்தில் சே வின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போகிறார். சே விற்கு தன்னுடைய பெற்றோருக்கு அடுத்து மிகவும் பிடித்தவர் பாட்டி. நோயால் இனி யாரும் மரணம் அடையக் கூடாது அதனால் நான் மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று சே மருத்துவம் படித்தார். ரதி: அவங்க நாட்டுக்காகப் போராடி அவங்க நாட்டை காப்பாத்திட்டாரா? ஜோ : சே அவங்க நாட்டுக்காக போராடல! நகுலன் : அப்புறம்! வேற எந்த நாட்டுக்காக போராடினார்? ஜோ : கியூபாவுக்காக போராடினார். பொலிவியாவுக்காக போராடினார். ரதி : உண்மையாலுமே அவர் கிரேட் தான். நகுலன் : கியூபாவ எந்த நாடு ஆட்சி செய்தது? ஜோ : கியூபாவை ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆட்சி செய்தன. ரதி : எதுக்காக கியூபாவை அவங்க கைப்பற்றினார்கள்? ஜோ : அங்கிருக்கும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க. குறிப்பாக அங்கே கரும்பும் புகையிலையும் அதிகமாக விளையும். நகுலன் : ஏன் கியூபா விடுதலைக்காக போராட சே முடிவு பண்ணாரு? ஜோ : அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து லத்தின் அமெரிக்கா நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் உடனே எந்த போராட்டத்திற்கும் நேரடியாக இறங்கவில்லை. அவர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவருடைய உற்சாகம் மிகுந்த பேச்சு தன்னம்பிக்கை அவருடைய கனவு காணும் குணம் இதெல்லாம் 'சே'வை ஈர்த்தது. அதன் பிறகு தான் கியூபா விடுதலைக்காக போராட வேண்டும் என்று முடிவு செய்தார். நகுலன் : அவருக்குத்தான் ஆஸ்துமா இருந்ததே. பிறகு எப்படி அவரால் துப்பாக்கி எடுத்து சண்டையிடவெல்லாம் முடியும்? ஜோ : 'சே'வுடைய ஆஸ்துமா அவரை ஒவ்வொரு போரின் போதும் அவருக்கு மிகப்பெரிய தொந்தரவுகளை கொடுத்தது. சில நேரம் இறந்துவிட்டார் என்று கூட அவரோடு இருந்த வீரர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும் கடந்து தன்னுடைய உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் படைக்கு தலைமை வகித்துப் போரிட்டார். ரதி: பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குறிய மனிதனாக எப்போதுமே சே இருந்திருக்கிறார். அதனால்தான் உலகம் இன்றும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ரதி: கியூபாவுக்கு விடுதலை கிடைத்ததா? ஜோ : ஆமாம் பல போர்களுக்கு பிறகு கியூபா விடுதலை பெற்றது. கியூபாவின் வங்கி தலைவராக மற்றும் பணத்தாளில் சே என்று கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பொறுப்பு எல்லாவற்றையும் விட சவாலானது அத்தனை சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்தார் சே. நகுலன்: அமைச்சர் என்றாலே பந்தா வந்துருமே! ஜோ: அதுதான் இல்லை. என்னதான் பதவி வந்தாலும் சே மாறவில்லை அலுவலக காரை பணிக்கு மட்டுமே பயன்படுத்தினார். எங்காவது செல்ல வேண்டுமென்றால் நடந்தே சென்றார். அவசரம் என்றால் பேருந்து. தன்னை எந்த இடத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் அமைச்சரா இருந்தாலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ஞ்சாருன்னா பார்த்துக்கொள்ளுங்களேன். நகுலன் : கிரேட் அத்தை. விடுதலைக்குப் பின் கியூபா எப்படி இருந்தது? ஜோ: கியூபா மிகப்பெரும் மாற்றங்களையடைந்தது. புரட்சிக்கு முன் கியூபாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 23.6% அதன் பிறகு 98.82 சதவீதமாக மாறியது. கல்வி என்பது ஒரு தேசத்தின் உண்மையான சொத்து என்று பிடலுக்கும் 'சே'வுக்கும் தெரிந்திருந்தது. கியூபாவில் கல்வியும் மருத்துவமும் இலவசம். ரதி: ஏன் அவரோட தாய்நாட்டிற்காக அவர் போராடல.? ஜோ : சரியான கேள்வி அதன் பிறகு தான் அர்ஜென்டினாவை பற்றி மட்டுமல்ல லத்தின் அமெரிக்கா நாடுகளின் சுதந்திரம் பற்றி யோசித்தார். அதுமட்டுமல்ல. அமெரிக்கா அல்ஜீரியா நாடுகளின் விடுதலை குறித்தும் சிந்தித்தார்.அதன் பிறகு அவரால் கியூபாவில் இருக்க முடியவில்லை. நகுலன் : அப்புறம் அர்ஜென்டினா போய்ட்டாரா? ஜோ : காங்கோ சென்று விட்டா.ர் அங்கு அவர்களுக்காக போராட முடிவு செய்து போராட்டத்தில் இறங்கினார். மீண்டும் கியூபாவிற்கு வர வேண்டும் என்று காஸ்ட்ரோ கோரிக்கை வைத்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை. மாறாக அர்ஜென்டினா செல்வதாக கூறினார். ஆனால் காஸ்ட்ரோ அர்ஜென்டினாவுக்கு பதிலாக பொலிவியா செல்லலாமே என்று கேட்டார். பொலிவியாவில் இருந்தால் அவருக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என்று கேஸ்ட்ரோ நம்பினார். ரதி : அப்படின்னா பொலிவியா போய்ட்டாரா. ஜோ : ஆம் பொலிவியா சென்று கொரில்லா யுத்தம் என்று சொல்லப்படும் மறைந்து தாக்கும் யுத்தம் நடத்தினார். ஆனால், அங்கு பொலிவியா ராணுவம் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் உத்தரவுப்படி ஒரு பள்ளியில் சிறை வைத்திருந்த அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள். நகுலன், ரதி : என்னது அவரை கொன்னுட்டாங்களா? ஜோ : ஆமாம் தன்னுடைய நாட்டுக்காக போராடாமல் இன்னொரு நாட்டுக்காக போராடி வென்று அங்கு அவருக்கு கொடுத்த பதவியை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் போராட சென்ற ஒரு போராளியின் வாழ்க்கை என்னை மிகவும் ஈர்த்தது. அவர் இறந்தாலும் போராளியாக உலகமுழுவதும் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நகுலன் : ஆமாங்க அத்தை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை கேட்டதுக்கு அப்புறம் எதா இருந்தாலும் தைரியமா இருக்கணும். பிரச்சினையை எதிர்த்து போராடனும் அப்படிங்கற எண்ணம் ஏற்பட்டிருக்கு. நகுலன்,ரதி : We Love Che ஜோ : yes Children! We love che. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- குட்டிப்பூ சொன்னது என்ன?
கோடை விடுமுறை நாட்களில் மாயா எப்பொழுதும் தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊரில் தாத்தா வீட்டை சுற்றி ஒரு அழகான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார். அதில் பூக்கள் அழகழகாய் கொத்து கொத்தாய் பூத்து குலுங்கும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை தரும். அதிலிருந்து ஒரு பூவை தன் தலையில் வைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை மாயாவுக்கு இருந்தது ஏனென்றால் அவளது தாத்தா யாரையும் பூக்களைத் தொட அனுமதிக்க மாட்டார். இன்று எப்படியாவது ஒரு பூவை பறித்து தன் தலையில் வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.வீட்டில் அனைவரும் உறங்கும் நேரமாய் பார்த்து மெதுவாக பூந்தோட்டத்தை நோக்கி நடந்தாள்அங்கே அவளைக் கவரும் விதமாக ஒரு அழகான குட்டி பூ ஒன்று தனியாக தெரிந்தது.மெல்ல நடந்து அந்தப் பூவை பறிக்க பார்த்தாள். அப்பொழுது அந்த குட்டிப்பூ தன் கீச் குரலில் கத்தியது. "ஐயோ வேண்டாம் என் குடும்பத்து கிட்ட இருந்து என்னை பிரிச்சிறாத" இதைக் கேட்ட மாயா மிகவும் ஆச்சரியமடைந்தாள். "குட்டிப் பூவே நீயா இப்ப பேசுன?"என்று கேட்டாள் "ஆமாம் நான்தான் பேசினேன்"என்றது குட்டிப் பூ "சரி நான் உன்ன பறிக்காம இருக்கணும்னா அதுக்கான காரணத்தை நீ சொல்லு"என்று மாயா கேட்க சற்றே குட்டி பூ அதிர்ந்தது. பிறகு நன்கு யோசித்தபின் "உனக்கு தேன் பிடிக்குமா?" "ஓ! புடிக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்" "ஆ.. நீ விரும்பி சாப்பிடுற தேன் உற்பத்தியாக காரணமே நான் தான்" ஆச்சரியத்தில் மூழ்கிய மாயா "எப்படி?"என்று கேட்டாள். "ஆமாம் என்னிடமிருந்து தான் தேனை எடுத்து தேனீக்கள் சேமித்து வைக்கும் அதை மனிதர்கள் நீங்கள் எடுத்து சாப்பிடுவீர்கள்" "ஓ அப்படியா! அப்படின்னா சரி நான் உன்னை பறிக்க மாட்டேன்"என்று கூறிய உடன் குட்டிப் பூ மிக மகிழ்ச்சியுடன் துள்ளியது அதன் பிறகு ஊருக்கு வரும்போதெல்லாம் குட்டிப் பூ மட்டுமின்றி தோட்டத்தில் இருந்த அனைத்து பூக்களையும் தன் தாத்தாவோடு பராமரித்தாள். தயவு செய்து யாரும் மாயாவோட தாத்தா வளக்குற பூந்தோட்டம் பக்கம் போகாதீங்க நீங்க பூவப் பறிக்க வரீங்க நினைச்சு மாயா கோவிச்சுப்பா ஆமா! மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது.
- அலெக்ஸாந்திரியா நூலகம்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது எகிப்திய நாகரீகம். நைல் நதியின் இருமருங்கும் வளர்ந்த எகிப்திய நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது. சிலகாலம் பாரசீக ஆட்சிக்குள் சிக்கிய எகிப்தை மாவீரன் அலெக்ஸாண்டர் கி. மு. 332-ல் மீட்டுத் தனது இராச்சியத்தின் கீழ் கொண்டுவந்தான்; எகிப்திய அரசனாகவும் (ஃபாரோ) முடிசூட்டப் பட்டான். அலெக்ஸாண்டரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரக்கோட்டிஸ் ஏரிக்கும் மத்தியதரைக்கடலுக்கும் நடுவே அமைந்த பூசந்தி நிலப்பகுதியில் கட்டப்பட்ட நகரமே அலெக்ஸாந்திரியா. கனோப்பஸ் என்னும் நைல் நதியின் கிளைநதி அங்கே ஓடிக்கொண்டிருந்தது. மேற்குப்பகுதியில் அமைந்த கடைசிக் கிளைநதி அது. சில வருடங்கள் கழித்து அலெக்ஸாண்டர் இறந்துவிட, அவன் வென்ற நாடுகளை அவனது தளபதிகள் பிரித்துக் கொண்டனர். எகிப்தின் ஆளுகை அலெக்ஸாண்டரின் ஒரு தளபதியான தாலமி-யிடம் வந்து சேர்ந்தது. தாலமியும் அவனைத் தொடர்ந்து வந்த தாலமி வம்சத்தினரும் சுமார் முன்னூறு ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்தார்கள் . மாசிடோனியர்கள் ஆண்ட எகிப்தின் தலைநகரமாக அலெக்ஸாந்திரியா விளங்கியது. தாலமி வம்சத்துக் கடைசி அரசர் கிளியோபாட்ரா. போர்ப்படைகளையும், ஆயுதங்களையும் அரண்மனைகளையும் கட்டியதோடு மட்டும் அல்லாமல் மனித அறிவாலும் ஆராய்ச்சியாலும் பகுத்தறிக் கருவி கொண்டு கட்டப்பட்ட நகரம் அலெக்ஸாந்திரியா. கிரேக்கத்தில் எழுச்சி பெற்றிருந்த தத்துவக் கொள்கைகளையும் அறிவுசார் நூல்களையும் அறிந்திருந்த முதலாம் தாலமி (தாலமி சோட்டர்) அலெக்ஸாந்திரியாவையும் கற்றறிந்த அறிஞர்களால் நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டரும் தாலமி சோட்டரும் கிரேக்கத்தின் தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் பயின்றவர்கள். அரிஸ்டாட்டிலின் மறைவுக்குப் பிறகு அவரது சீடர் தியோஃப்ரேஸ்டஸ், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலமி சோட்டர் தனது மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி தியோஃப்ரேஸ்டஸைக் கேட்க, அவர் அதனை மறுத்து, தனது சீடர் டெமிட்ரியஸை அலெக்ஸாந்திரியாவுக்கு அனுப்பி வைத்தார். ‘உலகில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களும் அலெக்ஸாந்திரியாவில் இருக்க வேண்டும்’ என்பதே தாலமி சோட்டர் டெமிட்ரியஸிடம் இட்ட கட்டளை. கிரேக்கத்திலிருந்து பல்துறை அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவுக்கு வருகை தர, ஆராய்ச்சிகளுக்கென ஒரு கல்விக்கூடம் போல ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் புத்தகங்கள் சேரத்துவங்கின. அந்தக் காலத்துப் புத்தகங்கள் ஓலை நாணல் செடியான பாப்பிரஸ் தண்டுகளால் செய்யப்பட்டு பாப்பிரஸ் சுருள் புத்தகங்களாக எழுதப்பட்டன. கிரேக்க மொழியிலேயே பெரும்பாலான நூல்கள் எழுதிவைக்கப் பட்டன. சில எகிப்திய மொழி நூல்களும் சேர்ந்தன. அரண்மனையை ஒட்டி அமைக்கப்பட்ட அந்த நூலகத்தின் உள்ளும் புறமும் எண்ணற்ற தூண்கள் விண்ணைத் தொட்டன. கடவுளரின் சிலைகள் ஒவ்வொரு மூலையிலும் அணிவகுத்தன. ‘பிப்லியோதெக்கை’ என்றழைக்கப்பட்ட முக்கிய அறைகளில், செவ்வக மர அலமாரிகளில் பாப்பிரஸ் சுருள்களில் புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டன. தனது காலத்திலேயே டெமிட்ரியஸ் இரண்டு லட்சம் பாப்பிரஸ் சுருள்களைச் சேர்த்து வைத்தார் இந்த நூலகத்தில். தாலமி சோட்டரின் மரணத்துக்குப் பிறகு மன்னனான அவனது மகன் இரண்டாம் தாலமி (தாலமி ஃபிலடெல்ஃபஸ்) நூலகத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக நூல்கள் சேர்க்கத் தலைப்பட்டான். பிற நாடுகளிலிருந்து வந்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு, மூலப்புத்தகம் நூலகத்தில் வைக்கப்பட்டது; பிரதி எடுக்கப்பட்ட புத்தகம் திருப்பித் தரப்பட்டது. அந்த நூலகத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பாப்பிரஸ் சுருள்களுக்கும் மேல் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்வி கற்பதற்கும் ஆராய்ச்சிகள் செய்வதற்கும் பல நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் குவிந்தவண்ணம் இருந்தனர். கிரேக்க இலக்கியம், தத்துவம், எகிப்திய வரலாறு, கணிதம், மருத்துவம், வானியல், புவியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் இங்கே இருந்தன. மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த எகிப்திய வரலாறு மானெத்தோ என்பவரால் எழுதப்பட்டது. இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது. கணிதமேதை ‘யூக்லிட்’ வடிவியல், வட்டம், அளவியல், எண்கள், இருபடி மூலம், பரும வடிவியல் தோற்றங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதி வைத்தார். எரட்டாஸ்தெனிஸ் எனும் பல்துறை அறிவாளர் கணிதவியல், புவியியல் மற்றும் புவியளவீட்டியலில் ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் எழுதி வைத்தார். பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டுச் சொன்னவர் எரட்டாஸ்தெனிஸ் ஆவார். சைரீன் நகரத்திலிருந்து வந்த அறிஞர் கல்லிமாச்சஸ் இந்த நூலகத்தின் நூலகராக இருந்தபோது (கி.மு 240) இங்கிருக்கும் நூல்கள் அனைத்தையும் பற்றிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார். மருத்துவத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து உடலியல், உடற்கூற்றியலில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துப் பதிவு செய்த ஹெரோஃபிலஸ் மற்றும் எராசிஸ்றேட்டஸ், இலக்கிய ஆய்வுகள் செய்து கவிதைகள், இலக்கிய நூல்கள் வெளியிட்ட அப்போலொனியஸ் மற்றும் அரிஸ்டார்சஸ், கிரேக்க மொழி இலக்கண ஆய்வுகள் செய்த அரிஸ்டோஃபேன்ஸ் என்று கணக்கிடவியலாத பல அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்து வந்தனர். முன்னூறு ஆண்டுகளாக அலெக்ஸாந்திரிய நூலகம் அறிவுத்தேடல் செய்ய வந்த அனைவருக்கும் பயன்பட்டு வந்தது. கி.மு. 48-ல் ரோமாபுரியின் ஜூலியஸ் சீஸர் அலெக்ஸாந்திரியாவைத் தாக்கியபோது, தனது கப்பல்களைக் காப்பாற்றுவதற்காக, துறைமுகக் கிடங்குகளில் தீவைத்தான். அந்தத் தீ அருகிலிருந்த கட்டடங்களுக்குப் பரவி, நூலகத்தின் காப்பகப் பகுதியில் இருந்த பெரும்பாலான பாப்பிரஸ் சுருள்களை எரித்து அழித்தது. இருப்பினும் நூலகம் தொடர்ந்து இயங்கியது. முன்னூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரோமாபுரியின் பேரரசன் ஆரெலியன், அலெக்ஸாந்திரியாவைக் கைப்பற்ற நடந்த போரில் நூலகத்தின் முக்கியக் கட்டடப் பகுதி சேதமடைந்து பெரும்பாலான நூல்கள் அழிந்து விட்டன. பதவியாசை பிடித்த அற்ப மனிதர்களின் செயலால் அற்புதமான புத்தகங்களும், வரலாறும், அறிவு நூல்களும் அழிந்து போய்விட்டன. எத்தனையோ நூலகங்கள் பின்னர் வரலாற்றில் தோன்றிப் புகழ் பெற்றிருந்தாலும் உலகில் முதன்முதலில் தோன்றி எண்ணற்ற நூல்களால் நிரம்பியிருந்த அலெக்ஸாந்திரியாவின் நூலகத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கிறது. எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- இருபெரும் விழா
குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் (நவம்பர் 7) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும் என தசிஎகச மாநிலத் தலைமையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலினை தொடர்ந்து, நெல்லை மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் திரு. துரை பாண்டியன் அவர்களை (தமுஎகச வி.மு.சத்திரம் கிளை பொருளாளர்) அணுகினோம். அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. துரை பாண்டியன் அவர்கள் பணிபுரியும் அனவரதநல்லூர் அரசுப் பள்ளியில், அழ. வள்ளியப்பாவை நினைவுகூர்ந்து கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சிறார் பாடல்கள், பேச்சுப் போட்டி என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும், தமுஎகச (வி.மு. சத்திரம் கிளை) சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து இன்று (11.12.2025) பள்ளி வளாகத்தில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர நாரயணன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக • தமிழ் எக்கோஸ் திரு. மு. வெங்கட்ராமன் • தமுஎகச வி.மு. சத்திரம் கிளைத் தலைவர் திருமதி சத்தியா •சமூக சேவகர் மற்றும் தசிஎகச நெல்லைக் கிளை முன்னாள் செயலாளர் திரு. சுரேஷ் • தசிஎகச நெல்லைக் கிளைத் தலைவர் திரு. தேவர்பிரான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர். ஆசிரியர் திரு. துரை பாண்டியன் விழா நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் என மொத்தம் 12 பரிசுகள் தசிஎகச நெல்லைக் கிளை சார்பில் வழங்கப்பட்டன. தனிச்சொற்பொழிவாக இல்லாமல், மாணவர்களுடன் நேரடியாகப் பேசும் கலந்துரையாடல் முறையில் திரு. வெங்கட்ராமனும் திருமதி சத்தியாவும் நிகழ்வை உயிரோட்டமாக வழிநடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது. மேலும், விழாவின் இறுதியில், இதுபோன்ற கல்வி-கலாச்சார நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவது குறித்தும், உலகத் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. (தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இதைப் பின்பற்றி வருகிறது. திரு. வெங்கட்ராமன் இதை ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய முன்னோடி ஆவார்.) விழாவைத் தொடர்ந்து, நன்செய் நிறுவனத்திலும் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பில் மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 85% பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனத்தில், “பெண்கள் ஏன் பாரதியாரை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் நாளைத் தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் என அறிவுறுத்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற, பாகுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்க குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுவோம்; கற்போம்; கற்பிப்போம்!
- மலரின் மொழி
அழகான பூந்தோட்டம். அங்கே விதவிதமான மலர்கள் இருந்தன. டிக்கா தான் அங்கே இருப்பதிலேயே பெரிய பூ. அது ஒரு செங்காந்தள் மலர். அந்த தோட்டத்திற்கு நிறைய தேனீக்கள் தேன் சேகரிக்க வரும். சுக்கா அன்று தான் தேன் சேகரிக்க முதன்முதலாக வந்தது. அதனோடு வந்த தேனீக்கள் எல்லாம் சரியான தேன் இருக்கும் பூக்களில் அமர்ந்து அழகாக தேனை சேகரித்தன. சுக்கா தேன் சேகரிக்கச் செல்லும் போது சில பூக்களின் நிறங்கள் மாறின. எதற்காக அப்படி மாறுகிறது என்பது சுக்காவிற்கு குழப்பமாகவே இருந்தது. சுக்கா வரிசையாக ஒவ்வொரு பூவாக சென்று அமரும். அதில் சிலவற்றில் தேன் இருக்கும் சிலவற்றில் இருக்காது. மற்ற தேனீக்கள் எப்படி சரியாக தேன் இருக்கும் மலர்களின் சென்று அமர்கின்றன எனவும் அதற்கு புரியவே இல்ல. இன்றைய நாள் சுக்காவிற்கு சரியாக அமையவில்லை. அது தேனெடுக்க அமர்ந்த மலர்களில் ஒன்றில் கூட தேன் இல்லை. சுக்கா சோர்வாக அமர்ந்தது. அப்போது அதன் அக்கா ஜிக்கா வந்து அமர்ந்தது. "சுக்கா தேன் சேகரிக்காம ஏன் இங்க உக்காந்திருக்க? ஏன் சோகமா இருக்க? என்கிட்ட சொல்லு" "எந்தப் பூவும் எனக்கு தேன் கொடுக்க மாட்டேங்குது. நான் பூகிட்ட போகறப்பல்லாம் அந்த பூக்கள் வேற நிறத்துக்கு மாறுது. எனக்கு ஏன் இப்படி நடக்குது" என சோகமாக சொன்னது சுக்கா. "என்னோட வா" என சுக்காவை டிக்காவிடம் அழைத்துப் போனது. "டிக்கா என் தங்கைக்கு சொல்லிக் கொடு" என்றது ஜிக்கா. "என்ன பூ பேசுமா?" என ஆச்சரியமாக கேட்டது சுக்கா. "சுக்கா, உன்னை சுத்தி நல்லா கவனி. பூக்கள் தேன் மட்டும் கொடுக்கறதில்லை. அவங்களோட மொழிய புரிஞ்சிக்க முயற்சி செய்" என பறந்து சென்றது ஜிக்கா. சுக்கா, "என்ன பூக்கள் பேசுமா? அத புரிஞ்சிக்கனுமா?" என யோசித்தது. அப்போது டிக்கா ஒளிர்ந்தது. அதன் கதகதப்பான ஒளி சுக்காவை ஈர்த்தது. அது டிக்காவிடம் போய் தேனை உறிஞ்சியது. அதன் பின் சுக்கா மலர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தது. சுக்காவை கண்டதும் நிறம் மாறும் மலர்களாக சென்று தேன் எடுக்க முயன்றது. தேனே இல்லை. நிறம் மாறாமல் அழகாக புதிதாக தோன்றும் மலர்களில் சென்று அமர்ந்தால் தேன் கிடைத்தது. புத்திசாலி மலர்கள். அவற்றில் இருந்து ஒரு தேனீ தேனை எடுத்துக் கொண்டால், தம்மை நோக்கி வரும் பிற தேனீக்களை வராதே என சொல்வதற்காக நிறம் மாறுகின்றன. இந்த இரகசியத்தைக் கண்டுபிடித்ததும் சுக்கா மிகவும் மகிழ்ச்சியடைந்தது. சுக்காவைக் கண்டதும் நிறம் மாறும் பூக்கள் அருகே வராதே என சொல்வது புரிந்ததால், அவற்றின் அருகே சென்று நேரத்தை வீணாக்காமல் புதுப்புது பூக்களைத் தேடி பறந்தது சுக்கா. "சுக்கா சுக்கா நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமா தேன் சேகரிக்கிற எனக் கேட்டது சுக்காவின் தங்கை தேனீ. அதன் பெயர் பக்கா. பக்காவை அழைத்துக் கொண்டு போய் டிக்காவிடம் நிறுத்தியது சுக்கா. ராஜலட்சுமி நாராயணசாமி
- புத்தகமூட்டையைக் குழந்தைகளின் முதுகில் ஏற்றாதீர்கள் – கார்த்திகா கஜேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரிமித்ரா பள்ளிக்குழுமம் ராஜபாளையம்.
மித்ரா கல்விக் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் எங்கிருந்து தோன்றியது? விப்ரோவில் ஹெச். ஆராக வேலை செய்து கொண்டிருந்தேன். 2015ல் என் மகள் சாரு பிறந்தாள். மகள் பிறந்த ஒரு ஆறு மாசம் எனக்கு வீட்ல இருக்க வேண்டிய சூழல். என்னோட மகளைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அந்த மாதிரி ஒரு வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எப்படியாவது வேலைக்கு போகணும் என் வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதிச்சுக்கிட்டே இருக்கணும் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ஒரு பள்ளி தொடங்கலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது. ஓசூரில் இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவம் அதற்குக் கை கொடுத்தது. மித்ரா மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். அதன் பிறகு மற்றொரு இடத்தில் அடுத்த மாண்டிசோரி பள்ளி தொடங்கினேன். ஒவ்வொரு பகுதிக்கும் தேவை இருந்தது. அதன் அடிப்படையில் தொடங்கினேன். இது மித்ரா கல்விக் குழுமமாக மாறியது. வீட்டுப்பாடம் இல்லாத பள்ளி என்ற முறையை தங்கள் பள்ளியில் கொண்டு வர காரணம் என்ன? அதுக்கு காரணம் என்னுடைய மகள் தான். ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள். 'என்னடா லட்டு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?' என்று நான் கேட்டேன். பேக் எடுத்துட்டு போகாம நான் பள்ளிக்கூடம் போன மாதிரி எனக்கு கனவு வந்ததுங்க அம்மா.’ என்று அவள் கூறினாள். அது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பெரியவங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். ஆனால் இவ்வளவு சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா? என்று நான் நினைத்தேன். பேக் எடுத்துக்கொண்டு செல்வது குழந்தைகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போதிருந்தே என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு தொடக்கப்பள்ளியை வாங்கினேன். வீட்டுப்பாடம் இல்லாத ஒரு பள்ளியாக இந்தப் பள்ளியை செயல்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது புத்தக மூட்டை. வீட்டு பாடம் இல்லை என்றால் புத்தகமூட்டைகளைக் குழந்தைகள் சுமந்து திரிய வேண்டியது இல்லை. இது எவ்வளவு பெரிய விடுதலை. அவங்களுக்கு தேவையான மதிய உணவை, தண்ணீர் மற்றும் ஸ்னாக்ஸ் மட்டும் ஒரு சிறு பேகில் எடுத்து வந்தால் போதும். இதற்கு மையப்புள்ளி என்று சொன்னால் ஒரு குழந்தையின் ஏக்கம்தான். என் மகள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது. இதுபோன்ற பள்ளி வேறு ஏதாவது செயல்படுகிறதா? தமிழ்நாட்டுல திருவண்ணாமலை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுவரை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது இதுவரை எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். அதை நாங்கள் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம். இந்த புதுமையான முறைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்கிறது? இந்த முறையை ஆரம்பத்தில் பெற்றோர்களுக்குப் புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். ஹோம் ஒர்க் இல்லாமல் பிள்ளைங்க எப்படி நல்லாப் படிப்பாங்க? எப்படி சிலபஸ் முடிப்பீங்க? எப்படி டெஸ்ட் வைப்பீங்க? இப்படி ஆயிரம் கேள்விகள் பெற்றோரிகளிடமிருந்து வந்தன. இது மற்ற பள்ளிகள் போல எட்டு பீரியட்ஸ் இருக்கிற பள்ளி கிடையாது. இது ஒரு மாண்டிசோரி பள்ளி. இதில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். அதை அவர்களை வாசிக்க வைத்து, அது சார்ந்த செயல்பாடுகளைக் கொடுத்து ஆசிரியர்கள் உடனிருந்து இவற்றைச் செய்ய வைப்பார்கள். இதுபோன்று அவர்களோடு தொடர்ந்து உரையாடினேன். உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் கூட சில பெற்றோர்கள் வீட்டுப்பாடம் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக ஒன்றோ இரண்டோ கொடுப்போம். அதுவும் கண்டிப்பாக செய்து வர வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வீட்டிற்கு ரிலாக்ஸாகப் போகிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு ரிலாக்ஸாக வருகிறார்கள். ஒன்று வீட்டு பாடம் செய்ய தேவையில்லை. இரண்டாவது புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இருந்தால் யாருக்குத் தான் மகிழ்ச்சியாக இருக்காது? வீட்டுப்பாடம் செய்யும் அந்த நேரத்தை தங்களுடைய தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதை மகிழ்வோடு கூறி இருக்கிறார்கள். குழந்தைகளும் கூறி மகிழ்ந்திருக்கிறார்கள். தங்களின் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து கவனித்து வந்த வகையில், விளையாட்டு, நாடகம், மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட பல கற்றல் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொடுக்கும் புதுமையான கல்வி முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிய முடிந்தது. இவை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் அறிவாளிகள் தான். ஆனால், எந்தக் குழந்தை கேள்வி கேட்கிறதோ அந்தக் குழந்தையை அறிவாளி என்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் கேள்வி கேட்பதில்லை. அப்படிக் கேள்வி கேட்பதற்குத் தடையாக இருப்பது அவர்களிடம் தைரியம் இல்லாததுதான். குழந்தைகளில் இரண்டு வகை ஒன்று தைரியம் இருக்கும் குழந்தை. மற்றொன்று தைரியம் இல்லாத குழந்தை. ஒரு குழந்தைக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் புரியவில்லை என்றால் இது எனக்குப் புரியவில்லை சொல்லிக் கொடுங்கள் என்று எழுந்து கேட்பதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் வந்து விட்டாலே போதும். முதலில் தைரியத்தை வளர்க்க பயத்தை உடைக்க வேண்டும். அதற்கு ஒரு பயிற்சி தேவைப்பட்டது. அந்த பயிற்சிதான் மேடைப்பேச்சு, புத்தக வாசிப்பு, நாடகம் நடிக்க வைத்தல் மற்றும் கதை சொல்லல் உள்ளிட்ட ஏராளமான செயல்பாடுகள். இவை அனைத்துமே குழந்தைகள் பத்து இருபது பேருக்கு முன்னால் நின்று பேசுவதற்கான பயிற்சி. எங்களுடைய பள்ளியில் ஒன்றரை வயதில் இருந்தே இதைத் தொடங்கி விடுவோம். பிரைமரி வரை அது தொடரும். ஒரு குழந்தைக்கு ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் தேவை. ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட் என்பது கல்வி மற்றும் திறன்களை மட்டும் சார்ந்து இருக்காமல் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சமூகத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றைச் சேர்ந்ததுதான். இப்படியான குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மித்ரா கல்விக் குழுமத்தின் நோக்கம். கதைகள் குழந்தைகள் உலகில் என்னவாக இருக்கிறது? மிக அழகான கேள்வி. நான் பார்த்த வரைக்கும் குழந்தைகள் தினமும் கதை சொல்கிறார்கள். கதை சொல்லாத நாளே கிடையாது. தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள்தான் கதை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டும். ஆனால் ஸ்பான்ட்டனியஸாக குழந்தைகள் கதை சொல்கிறார்கள். குழந்தைகள் கதை கூறும் போது நான் ஒன்றைக் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் மிகவும் ரிலாக்ஸகிறார்கள். கதை சொல்லச் சொல்ல ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்கிறார்கள். சில நேரங்கள்ல அந்தக் கதைக்குள் நிறைய இமேஜினேஷன் இருக்கும். நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கும். சில நேரங்களில் நியூ கிரியேஷன் இருக்கும். இதை நாம் பில்டப் என்று சொல்லுவோம். சாதாரணமான ஒன்றை குழந்தைகள் ரொம்பப் பெரிது பண்ணிச் சொல்லுவாங்க. கேட்கவே ரொம்பக் கியூட்டாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து கதைகளைப் பிரிக்கவே முடியாது. குழந்தைகள் வேறு கதைகள் வேறு கிடையாது. குழந்தைகளும் கதைகளும் ஒன்று தான். ஒரு எக்சைட்மென்ட் அப்படின்னு சொல்லலாம். குழந்தைகளுக்கு ஒரு ரொட்டீன் இருக்கு காலைல எழுந்திருக்கணும், குளிக்கணும், பிரஷ் பண்ணனும், ஸ்கூலுக்கு வரணும், சாப்பிடணும் மற்றும் படிக்கணும் இதையெல்லாம் தாண்டி கதைகள் என்று வந்துவிட்டாலே அது அவர்களுக்கு ஒரு ரெப்ரஷ்மெண்ட்போலத்தான். ஏனென்றால் இது அந்த ரொட்டீன்ல் இருந்து வேறுபடுகிறது. கதைகள் மட்டுமே குழந்தைகளை மனிதத்தன்மையோடு இயங்க வைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் கவனித்த வரையில் பெரும்பான்மையான கதை சொல்லிகள் குழந்தை மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இளமையாகவும் இருக்கிறார்கள். அதற்கு கதைகளும் குழந்தைகளுமே காரணம் என்று நினைக்கிறேன். சமூகப் பொறுப்பு மிக்க இந்தப் பணியில் தங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது? ஒரு பெண் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் நான் ஒன்றைச் செய்கிறேன். நீ ஒன்றைச் செய்துவிடு என்று பங்கிட்டுக் கொள்வோம். என்னுடைய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். என் கணவர் சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அம்மா சில வேலைகளைச் செய்வார். என்னுடைய அப்பா சில வேலைகளைச் செய்வார். நாங்கள் எல்லோரும் அதை எங்களுடைய பொறுப்புகளாகப் பார்க்கிறோம். வேலையாகப் பார்க்கவில்லை. அதனால் வீட்டு வேலை எந்த வகையிலும் என்னுடைய பள்ளிக்கூட வேலைகளுக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காலை 9 மணிக்கு அனைத்து வேலைகளையும் முடித்து விடுவோம். என்னுடைய பள்ளி சார்ந்த அகாடமிக் மேனேஜ்மென்ட் வேலைகள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். வீட்டில் இவ்வளவு சப்போர்ட் இல்லையென்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. தொடர்ந்து கல்வி சார்ந்து சிந்திக்கவும் முடியாது. புதுமையான ஒன்றை யோசிக்கிறதுக்கு நமக்கு ஒரு ஸ்பேஸ் தேவை. அதை என்னுடைய குடும்பம் கொடுக்கிறது. என்னுடைய குடும்பம் என்றால் என் மகள் உட்பட. என் மகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவளுடைய லஞ்ச் பாக்ஸை அவளை கழுவி வைத்து விடுவாள். காலையில் குளிப்பதிலிருந்து அவளுடைய வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். குறிப்பாக அவள் சாப்பிட்ட தட்டை அவளே கழுவி வைத்து விடுவாள். இந்த நேரத்தில் என்னுடைய மகள், கணவர், அப்பா, அம்மா, மட்டுமின்றி மாமனார் மாமியாருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் பெரும்பான்மையான நேரத்தில் என்னுடன் கரம் பற்றி நின்று இருக்கிறார்கள். சமகால கல்வி முறை குறித்து தங்களுடைய பார்வை? சமகால கல்வி முறையில் எது மாதிரியான மாற்றம் இருந்தால் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? சமகால கல்வி முறையில நான் பார்க்கின்ற மிக முக்கியமான ஒன்று வீட்டுப் பாடம். பெற்றோர்களில் சிலர் படித்தவர்கள். சிலர் படிக்காதவர்கள். சிலர் வேலைக்குச் செல்பவர்கள். அதனால் அவர்களுக்கு வீட்டில் சொல்லிக் கொடுப்பது என்பது சிரமம். கற்றல் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். ஆனால்,கல்வி என்பது பள்ளியில் தொடங்கி பள்ளியில் முடிய வேண்டும். காலையிலிருந்து எட்டு மணி நேரம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே வன்முறைதான். அதைத் தாண்டி திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க வைப்பது என்பது அது அதைவிட வன்முறை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் வீட்டுப்பாடம் இல்லாத ஒரு முறையை உருவாக்கி அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் தொடர்ந்து சில குழந்தைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அது முதலில் மாற வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லா தனியார் பள்ளிகளிலும் இருக்கின்றன. அதில் சிலம்பம், பாட்டு, நடனம் மற்றும் ஓவியம் உள்ளிட்டவை இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையான ஏதோ ஒன்றோ இரண்டோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். குழந்தைகளுக்கு எது வரும், எது வராது என்று அவர்களுக்குத் தெரியாது. அதை செய்து பார்த்த பிறகு தான் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கும் எல்லாப் பயிற்சியையும் கொடுக்கும் போது, அவர்களுக்கு எது வருகிறது என்று அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். எந்தக் குழந்தைக்கு எந்தத் திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி, சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆண்டுவிழா மாதிரியான விழாக்களில் சுழற்சி முறையிலாவது குழந்தைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். எங்களுடைய பள்ளியில் 150 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லோருக்குமே ஆண்டு விழா மாதிரியான விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படும். அதற்குத் தான் நாங்கள் இங்கே பயிற்சி கொடுக்கிறோம். எல்லாப் பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது வாசிப்பு பயிற்சி அதிகமாக இருந்தது. நான் வாசித்த தில் என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதுவேன். ஆனால் இப்போது பள்ளிகளில் ஒரே ஒரு முறை பாடத்தை நட த்தி விட்டு நேரடியாக கேள்விகளையும் பதில்களையும் எழுதிப் போட்டு விடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் வாசிக்க வைப்பதில்லை. அப்படியே மீறி வாசிக்க வைத்தாலும் நன்றாக படிக்கும் குழந்தைகளை வாசிக்க வைத்து விட்டு, ஹோம் ஒர்க் கொடுத்து விடுகிறார்கள். 90% குழந்தைகளுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது. மிக முக்கியமாக இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைப்பது இதைத்தான். எல்லாக் குழந்தைகளுக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று முதலில் தெரிய வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்குப் பரந்துபட்ட பார்வை கிடைக்கும். வெறும் கேள்வி பதிலால் பரந்துபட்ட பார்வை கிடைக்காது. முக்கியமாக இது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எல்லாக் கலைகளிலும் எல்லா விளையாட்டுகளிலும் குழந்தைகள் பங்கு பெறுவதற்கான சூழலையும் வாய்ப்பையும் ஒவ்வொரு பள்ளியும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சமீபத்தில் தங்கள் வாசித்த கல்வி சார்ந்த புத்தகங்கள் பற்றி? ஆயிஷா நடராசன் புத்தகங்கள் மரியா மாண்டிசோரி The whole brain child - Daniel j.seigel உதயசங்கர் ,சரிதா ஜோ கதை புத்தகங்கள்.நீதிமணி குழந்தைப்பாடல்கள் இதெல்லாம் வாசித்து ரொம்ப ரசிச்சது. சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- ஊருக்குப் போன அம்மா
நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அம்மா இப்படி நீண்ட நேரம் படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார். தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் விட்டு வருவார். தண்ணீர் எடுத்து சமையல் செய்வார். அரவிந்தின் சீருடைகளைத் துவைப்பார். அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவர் எப்போது உறங்குவார் என்று தெரியாது. எப்போது எழுந்திரிப்பார் என்று தெரியாது. ஆனால் இப்போது காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக் கிடந்தார். யார் யாரோ வந்தார்கள். மாலைகளைப் போட்டார்கள்.. அழுதார்கள். அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை. அம்மா அழகாக இருந்தார். அவருக்குப் பிடித்த நீலநிறப் புடவையைக் கட்டியிருந்தார். அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எழுந்து விடுவார் இப்போது எழுந்து விடுவார் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை. அவனுக்கு வயிறு பசித்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அரவிந்தன் அழுதபோது அவனுடைய பொன்னம்மா பாட்டி, “ அம்மா சாமிகிட்டே போயிட்டா..” என்று சொல்லி அழுதாள். அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் அம்மாவின் வாயில் அரிசி போடச்சொன்னார்கள். ஒரு சின்னக்குச்சியைக் கொளுத்தி கொடுத்து திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அம்மா நெருப்புக்குப் பக்கத்தில் போகக்கூடாது என்று எப்போதும் சொல்வார். “ அவன் சின்னப்பையன்.. சுடுகாட்டுக்கு வேண்டாம்.. “ என்று யாரோ சொன்னார்கள். பிறகு அம்மாவை அலங்காரம் செய்த வண்டியில் வைத்துக் கொண்டு போனார்கள். ” எங்கே போகிறாள் அம்மா? “ அவன் சித்தியிடம் கேட்டான். ” அம்மா ஊருக்குப் போறாள்.. சீக்கிரம் வந்துருவா..” என்று சொல்லி அழுதார். இப்போது அரவிந்தனுக்குச் சமாதானமாக இருந்தது. பலமுறை அம்மா ஊருக்குப் போவார். காலையில் போய் விட்டு இரவில் திரும்பி வருவார். சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகிவிடும். அப்போது அவன் பாட்டி வீட்டில் தான் இருப்பான். அங்கிருந்து தான் பள்ளிக்கூடத்துக்குப் போவான். கடைசியாக ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து வரும்போது இப்படி தூங்கிக் கொண்டே வந்தார். இப்போதும் ஊருக்குத் தானே போகிறார். “ அம்மா சீக்கிரம் வரவேண்டும் “ என்று மனதுக்குள் நினைத்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது. பள்ளியில் ஆசிரியர்கள் அவனிடம் பரிவு காட்டினார்கள். அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. அம்மா எப்போது வருவார் என்று பாட்டியிடம் தினம் கேட்பான். அப்படிக் கேட்டாலே பாட்டி அழுவார். அவர் அழுவதைப் பார்க்கச் சகிக்காது. அதனால் பாட்டியிடம் கேட்க மாட்டான். அடிக்கடி வீட்டின் பின்புறம் இருக்கிற புங்கை மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வான். அந்த மரத்திடம் “ அம்மா எப்போ வருவார்? “ என்று கேட்பான். மரம் பதில் சொல்லாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படி தினம் ஒருமுறையாவது கேட்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு நிம்மதி. புங்கைமரம் தலையாட்டும். சிலசமயம் பூக்களை அவன் தலையில் உதிர்க்கும். சில சமயம் காற்றினால் அவன் தலைமுடியைக் கோதி விடும். அப்போது இலையுதிர்காலம். புங்கை மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கியிருந்தன. எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருந்த அரவிந்த் மரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களைக் கவனிக்கவில்லை. அன்றும் அவன் மரத்தினடியில் உட்கார்ந்து, “ அம்மா எப்போ வாருவார்? “ என்று கேட்டான். அப்போது திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. புங்கை மரத்திலிருந்து பழுத்த இலைகள் மழை மாதிரி அரவிந்தின் தலைமீது விழுந்தன. தலையை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்திலும் சில இலைகள் விழுந்தன. புங்கை மரத்தில் பாதி இலைகள் இல்லை. அவன் நெற்றியில் விழுந்த இலையை எடுத்தான். அது பாதிபச்சையும் பழுப்புமாய் இருந்தது. அவனைச் சுற்றிலும் இலைகள். எல்லாம் அடர்பழுப்பு நிறத்திலும், மெல்லிய பழுப்பு நிறத்திலும், சில இலைகள் பச்சையும் மஞ்சளுமாக இருந்தன. அவனுக்கு இப்போது மரத்தைப் பார்க்கச் சோகமாக இருந்தது. மொட்டையாகத் தெரிந்தது. இலைகள் உதிர்ந்தால் மரம் அழுமோ. கீழே மரத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் மாலை மாதிரி இலைகள் கிடந்தன. அவன் புங்கை மரத்தடிக்கு வரும்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குள்ளிருந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருப்பார். பின்வாசலில் நின்று கொண்டு அவர், “ அரவிந்த் கண்ணு! இதுதான் இயற்கை.. பழுத்த இலைகள் உதிர்ந்திரும்.. சில சமயம் நோய்வாய்ப்பட்ட இலைகளும் உதிரும்.. அப்புறம் புது இலைகள் வளரும்..” என்றார். அரவிந்த் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தான். பாட்டியும் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். “ உன் அம்மா ஒரு நோய்வாய்ப்பட்ட இலை.. அது தான் உதிர்ந்துட்டா.. இனி அவ வரமாட்டா.. மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய முடியும்? பழுத்த பிறகும் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. எங்கண்ணு….. புது இலையா நீ இருக்கீல்ல.. ” என்று உறுதியான குரலில் சொன்னார்.. அந்தக் குரலில் கவலை இல்லை. நம்பிக்கை இருந்தது. அரவிந்துக்கு ஏதோ புரிந்ததைப் போலிருந்தது. அவன் மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனான். பாட்டி அவனை அணைத்துக்கொண்டார். அன்று இரவு அரவிந்துக்கு தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒரு கனவில் அம்மாவும் சிரித்துக் கொண்டே வந்தார். தூங்கி எழுந்து பின்வாசலுக்கு வந்தான். என்ன ஆச்சரியம்! புங்கை மரத்தில் புதிய தளிரிலைகள் தோன்றியிருந்தன. இளம் பச்சை நிறத்தில் மரத்தின் உடல் முழுவதும் அலங்காரம் செய்ததைப் போல இருந்தது. அரவிந்தைப் பார்த்து புங்கை மரம் சிரித்தது. அரவிந்தின் உதடுகளும் புன்னகை பூத்தன. அந்தப் புன்னகையின் ஓரத்தில் அவனுடைய அம்மாவின் நினைவுகளும் ஒட்டியிருந்தன. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஆனைப்பாறை
மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை. படிப்பு ஏறலை’ என்று உறங்கும்போதும் தன்னையறியாமல் பேசிக்கொண்டிருந்தான். கணக்கு மட்டுமில்லை தமிழ் இலக்கண வகுப்பிலும் ஆங்கில வகுப்பிலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழிப்பான். ஆசிரியருக்கும் கேள்வி கேட்பதென்றதால் மணிராசு முகம்தான் ஞாபகத்தில் வருகிறது. வகுப்பில் முதல் கொட்டுக்காய் இவனுக்குத்தான் விழுகும். இவனைப்போலவே இன்னும் இரண்டுமூன்று பேர் இருந்தாலும் எதையெதையோ பதிலாக சொல்லி சமாளித்துக்கொண்டிருப்பார்கள். இவனுக்கு அதுவும் தெரியாது. குட்டுக்கள் வாங்குவதற்கென்றே பிறவி எடுத்தது போல் நின்று கொண்டிருப்பான். மற்றவர்கள், “மணிராசு இருக்காம்ல. மொத்த அடிகளும் அவனுக்குத்தான் விழும். நம்ம தப்பிச்சிரலாம்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மணிராசுக்கு பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே கொட்டுக்காயும் பிரம்பும்தான் முன்னால் வந்து நிற்கிறது. இப்படியே எத்தனை நாள்தான் அடிகள் வாங்கிக்கொண்டிருப்பது. பள்ளிக்கு மட்டம் போட யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் பள்ளிக்கூடம் போவது போல் போய் வழியிலிருக்கும் பூங்காவில் போய் இருந்துகொள்வான். பள்ளிவிடும் நேரத்தில் நல்லபிள்ளையாக வீட்டுக்கு வந்துவிடுவதுமாக இருந்தான். அதுவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. இந்த விசயம் யாரோ சொல்லி அவன் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது. மறுநாள் அதே போல பைக்கூடை தோளில் மாட்டிக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தான். பூங்காவின் இன்னொரு வாயில் வழியாக கையில் ஒரு குச்சியை பிடித்தபடி அவனது அம்மா எதிரில் வந்துகொண்டிருந்தார். “ஆஹா.. இங்கேயும் குச்சிக்கம்பு வருகிறதே” என்று திகைத்து நிற்கும்போதே பிட்டத்தில் ஒரு கொடுப்பு வைத்தார் அம்மா. “ஒழங்கு மரியாதையாக பள்ளிக்கூடம் போவாயா” என்று அடுத்த அடிக்கு குச்சியை ஓங்கிப்பிடித்தார். “வேண்டாம்.. வேண்டாம். நான் பளள்ளிக்கூடம் போகிறேன்” அடிவிழுந்த இடத்தில் தடவிக்கொண்டே திரும்பி நடந்தான். “ராஸ்கோல்.. இனிமேல் பூங்காவுக்குள்ள பார்த்தேன்… முதுகுத்தொலியை உரிச்சிப்போடுவேன்.. உரிச்சி” அதட்டல் சத்தம் அவனை துரத்திக்கொண்டு போனது. “இதென்ன.. படிக்கவில்லை என்றாலும் குட்டுகள் விழுகிறது. விளையாடப்போனாலும் குட்சிக்கம்பு மிரட்டுது. என்னதான் செய்ய” என்று மிரண்டு போய்விட்டான். வகுப்பில் நன்றாகப்படித்து முதல் மதிப்பெண் வாங்கும் நடேசனின் சிநேகிதம்தான் இவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. “மணிராசு.. பள்ளிக்கூடத்திற்கு ரெண்டு நாள் லீவு விட்டாச்சி. பக்கத்துல இருக்கிற கருமலை காட்டிற்கு அப்பிடியே போயிட்டு வருவோம். வா.. போவோம்” என்று நடேசன்தான் கூப்பிட்டான். “வீட்டுப்பாடம் படிக்கலைன்னா வாத்தியார் திட்டுவாரு. நான் வரலை” “ஏய்… பாடத்தையும் உன் பயத்தையும் தூக்கி ஓரமாக வையி. உனக்கு நான் சொல்லித்தாரேன்" என்றதும் கொஞ்சம் சமாதானமாகி சம்மதித்தான். ஊரிலிருந்து கொஞ்சதூர நடையிலேயே காட்டின் எல்லை ஆரம்பமானது. புதர்ச்செடிகளின் ஊடாகப் போன செம்மண் தடத்தில் நடந்து போகையில் புள்ளிமான்கள் பாதையின் குறுக்கே தாவி மறுபக்கமாய் ஓடியது. அவை முட்புதர்கள் பக்கமாய் போய் நின்றுகொண்டு இவர்களையே உற்றுப்பார்த்தன. கிளுவைச்செடிகளும் கள்ளிப்புதர்களும் அவற்றின்மேல் படர்ந்த பிரண்டைக்கொடிகளும் இருபுறமும் அடர்ந்து நின்றன. மலையடிவாரத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரிய அத்திமரம் கிளைகள் பரப்பி நின்றது. நீண்டு விரிந்த அதன் வேர்கள் தரைக்கு மேல் தலையை நீட்டி வந்திருப்பவர்கள் யாரென்று முகம் பார்த்தது. அங்கே மயில்களின் அகவல் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. இவர்கள் நின்ற இடத்திற்கு மிக அருகில் ஒரு புளியமரத்தடியில் கொம்புகளோடு நின்ற ஒரு ஆண்மான் புளியம்பழங்களை தின்றுகொண்டிருந்தது. குளிர்ச்சியான அத்திமரக்காற்று சன்னமாக வீசி மேலெல்லாம் தொட்டுக்கொண்டுபோனது. கரும்பச்சை நிறத்தில் தடித்த அத்தி இலைகளும் அதன் சிவந்த பழங்களும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அந்த மரத்தடியில் நடந்து வந்த அலுப்புத்தீர காற்று வாங்கியபடி ‘உஸ்.. அப்பாடா’ என்று உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்கள். மணிராசுக்கு பாடாய் படுத்திய கணக்குப்பாடமும் கொட்டுக்காய்களும் இப்போது எங்கே போனதென்ற மாயம் தெரியவில்லை. மரநிழலின் குளிர்ச்சியும் காற்று வந்து வருடிப்போகும் ஸ்பரிசமும் புத்துணர்வின் ஊட்டமாய் இருந்தது. அருகிலிருந்த குளத்திற்குப் போய் அதில் பூத்திருந்த அல்லி மலர்களை பறித்துக்கொண்டு வந்தார்கள். மனமெல்லாம் அல்லிப்பூக்களாய் மலர்ந்து சிரித்தது. “வா.. காட்டுக்குள்ளே இன்னும் கொஞ்சதூரம் போவோம்” என்று நடேசன் கூப்பிடவும் எழுந்து நடந்தார்கள். தண்ணீர் தாகமாக இருந்தது. ஓரிடத்தில் அழகிய நீர்ச்சுனை ஒன்று தென்பட்டது. அதில் ஊற்றெடுத்துப் பொங்கிய நீர் வாய்க்கால்வழியாக ஓடி அல்லிக்குளத்திற்கு போய்க்கொண்டிருந்தது. தாகம்தீர சுனைநீரை உள்ளங்கைகளை குவித்து பருகினால் அதன் சுவை இதுவரை கண்டிராத வகையில் தேங்காய்ப்பாலாய் இனித்தது. உடலோடு மனதெல்லாம் அந்த சுவை நிறைந்து தளும்பியது. இன்னும் கொஞ்சதூரம் காட்டுக்குள் போனபோது நரிகள் ஊளையிடும் சத்தம் அருகில் கேட்டது. ஒரு பெரிய பாறை ஒன்று யானைத்தலை, துதிக்கை பெருத்த உடலுடன் படுத்திருப்பதைப் போல ஓரிடத்தில் இருந்தது. “அய்.ய்.யா..ஆனைப்பாறை” என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்து அந்தப்பாறை மீது ஏறிப்போனார்கள். அங்கிருந்து சுற்றிலும் பார்த்தால் அவர்களது ஊரும் பள்ளிக்கூடமும் தெரிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தைப் பற்றிய பயம் விட்டுப்போயிருந்தது. கணக்கு வாத்தியார் ஒரு எலியைப் போன்ற உருவத்தில் ஓடுவது போலிருந்தது. கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை வந்தது போல் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வானத்தில் திட்டுதிட்டாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதன் நிழல் ஆனைக்கல்லை தொட்டுக்கொண்டு போனது. செடிகளில் பூத்திருந்த வண்ணப்பூக்களுக்கு மேல் பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. “குழந்தைகளே.. நன்றாகப்படிக்கிறீர்களா..” யாரோ பேசும் சத்தம் கேட்டது. மனிதர்களே இல்லாத காட்டில் இப்போது யார் பேசுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். ‘கணக்கு வாத்தியார்தான் இங்கேயும் வந்தவிட்டாரோ’ மணிராசுக்கு மின்னலாய் ஒரு எண்ணம் வந்து போனது. பார்த்தால் அருகில் ஒருவருமே இல்லை. ‘அப்பாடா.. தப்பித்தேன்’ லேசாக மூச்சு வந்தது. “மணிராசு.. நடேசா.. உங்களைத்தான் கேட்கிறேன்” மறுபடியும் அந்தக்குரல் கேட்டது. இலேசாக பயம் வரவும் “வா.. போயிருவோம்” என்று எழுந்தனர். “அட.. நான் ஆனைக்கல் பேசுகிறேன். தைரியமாக இருங்க” மணிராசும் நடேசனும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர். “மணிராசு.. கவலைப்படாதே. நடேசனை மாதிரி நீயும் நன்றாகப் படிப்பாய். நீங்கள் அடிக்கொரு தடவை இங்கே வந்து போங்க. நான் உங்கள் நண்பன்” என்று சொல்லி மறுபடியும் அமைதியாகப் படுத்துக்கொண்டது. ஆனைக்கல் சொன்னது மாதிரியே இருவரும் அடிக்கொருதடவை அங்கே வருவதும் அதன் மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தார்கள். அவர்களுடைய நட்பில் ஆனைக்கல்லும் சந்தோசமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் வாத்தியார் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் மின்னல்வெட்டுப்போல பதில் சொல்கிறான் மணிராசு. கணக்கு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இ ரு ந்தது. “மணிராசு.. எப்படி படிப்பாளி பையனாக மாறினாய். ஞாபகசக்தியும் ரொம்ப நன்றாக இருக்கிறதே. சொல்லிக்கொடுக்கிற பாடங்களை அப்படியே ஒப்பிக்கிறாய்.” “எல்லாம் ஆனைக்கல் கொடுத்த தைரியம்தான்” என்று மணிராசு நடேசனைப் பார்த்து மெளனமாகச் சிரித்துக்கொண்டான். அத்திமரக்காற்றும் நீர்ச்சுனையும் ஆனைப்பாறையும் சொல்லிக்கொடுத்த பாடத்தில் கொட்டுக்காய்களும் பிரம்புகளும் எங்கேயோ ஓடிப்போய் ஒளிந்துகொண்டன. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2












