ஆனைப்பாறை
- ஜெ.பொன்னுராஜ்

- Dec 15, 2025
- 3 min read

மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை. படிப்பு ஏறலை’ என்று உறங்கும்போதும் தன்னையறியாமல் பேசிக்கொண்டிருந்தான். கணக்கு மட்டுமில்லை தமிழ் இலக்கண வகுப்பிலும் ஆங்கில வகுப்பிலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழிப்பான். ஆசிரியருக்கும் கேள்வி கேட்பதென்றதால் மணிராசு முகம்தான் ஞாபகத்தில் வருகிறது. வகுப்பில் முதல் கொட்டுக்காய் இவனுக்குத்தான் விழுகும். இவனைப்போலவே இன்னும் இரண்டுமூன்று பேர் இருந்தாலும் எதையெதையோ பதிலாக சொல்லி சமாளித்துக்கொண்டிருப்பார்கள். இவனுக்கு அதுவும் தெரியாது. குட்டுக்கள் வாங்குவதற்கென்றே பிறவி எடுத்தது போல் நின்று கொண்டிருப்பான். மற்றவர்கள், “மணிராசு இருக்காம்ல. மொத்த அடிகளும் அவனுக்குத்தான் விழும். நம்ம தப்பிச்சிரலாம்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
மணிராசுக்கு பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே கொட்டுக்காயும் பிரம்பும்தான் முன்னால் வந்து நிற்கிறது. இப்படியே எத்தனை நாள்தான் அடிகள் வாங்கிக்கொண்டிருப்பது. பள்ளிக்கு மட்டம் போட யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் பள்ளிக்கூடம் போவது போல் போய் வழியிலிருக்கும் பூங்காவில் போய் இருந்துகொள்வான். பள்ளிவிடும் நேரத்தில் நல்லபிள்ளையாக வீட்டுக்கு வந்துவிடுவதுமாக இருந்தான். அதுவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. இந்த விசயம் யாரோ சொல்லி அவன் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது.
மறுநாள் அதே போல பைக்கூடை தோளில் மாட்டிக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தான். பூங்காவின் இன்னொரு வாயில் வழியாக கையில் ஒரு குச்சியை பிடித்தபடி அவனது அம்மா எதிரில் வந்துகொண்டிருந்தார்.
“ஆஹா.. இங்கேயும் குச்சிக்கம்பு வருகிறதே” என்று திகைத்து நிற்கும்போதே பிட்டத்தில் ஒரு கொடுப்பு வைத்தார் அம்மா.
“ஒழங்கு மரியாதையாக பள்ளிக்கூடம் போவாயா” என்று அடுத்த அடிக்கு குச்சியை ஓங்கிப்பிடித்தார்.
“வேண்டாம்.. வேண்டாம். நான் பளள்ளிக்கூடம் போகிறேன்” அடிவிழுந்த இடத்தில் தடவிக்கொண்டே திரும்பி நடந்தான்.
“ராஸ்கோல்.. இனிமேல் பூங்காவுக்குள்ள பார்த்தேன்… முதுகுத்தொலியை உரிச்சிப்போடுவேன்.. உரிச்சி” அதட்டல் சத்தம் அவனை துரத்திக்கொண்டு போனது.
“இதென்ன.. படிக்கவில்லை என்றாலும் குட்டுகள் விழுகிறது. விளையாடப்போனாலும் குட்சிக்கம்பு மிரட்டுது. என்னதான் செய்ய” என்று மிரண்டு போய்விட்டான்.
வகுப்பில் நன்றாகப்படித்து முதல் மதிப்பெண் வாங்கும் நடேசனின் சிநேகிதம்தான் இவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“மணிராசு.. பள்ளிக்கூடத்திற்கு ரெண்டு நாள் லீவு விட்டாச்சி. பக்கத்துல இருக்கிற கருமலை காட்டிற்கு அப்பிடியே போயிட்டு வருவோம். வா.. போவோம்” என்று நடேசன்தான் கூப்பிட்டான்.
“வீட்டுப்பாடம் படிக்கலைன்னா வாத்தியார் திட்டுவாரு. நான் வரலை”
“ஏய்… பாடத்தையும் உன் பயத்தையும் தூக்கி ஓரமாக வையி. உனக்கு நான் சொல்லித்தாரேன்" என்றதும் கொஞ்சம் சமாதானமாகி சம்மதித்தான்.
ஊரிலிருந்து கொஞ்சதூர நடையிலேயே காட்டின் எல்லை ஆரம்பமானது. புதர்ச்செடிகளின் ஊடாகப் போன செம்மண் தடத்தில் நடந்து போகையில் புள்ளிமான்கள் பாதையின் குறுக்கே தாவி மறுபக்கமாய் ஓடியது. அவை முட்புதர்கள் பக்கமாய் போய் நின்றுகொண்டு இவர்களையே உற்றுப்பார்த்தன. கிளுவைச்செடிகளும் கள்ளிப்புதர்களும் அவற்றின்மேல் படர்ந்த பிரண்டைக்கொடிகளும் இருபுறமும் அடர்ந்து நின்றன.
மலையடிவாரத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரிய அத்திமரம் கிளைகள் பரப்பி நின்றது. நீண்டு விரிந்த அதன் வேர்கள் தரைக்கு மேல் தலையை நீட்டி வந்திருப்பவர்கள் யாரென்று முகம் பார்த்தது. அங்கே மயில்களின் அகவல் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. இவர்கள் நின்ற இடத்திற்கு மிக அருகில் ஒரு புளியமரத்தடியில் கொம்புகளோடு நின்ற ஒரு ஆண்மான் புளியம்பழங்களை தின்றுகொண்டிருந்தது. குளிர்ச்சியான அத்திமரக்காற்று சன்னமாக வீசி மேலெல்லாம் தொட்டுக்கொண்டுபோனது. கரும்பச்சை நிறத்தில் தடித்த அத்தி இலைகளும் அதன் சிவந்த பழங்களும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அந்த மரத்தடியில் நடந்து வந்த அலுப்புத்தீர காற்று வாங்கியபடி ‘உஸ்.. அப்பாடா’ என்று உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்கள்.
மணிராசுக்கு பாடாய் படுத்திய கணக்குப்பாடமும் கொட்டுக்காய்களும் இப்போது எங்கே போனதென்ற மாயம் தெரியவில்லை. மரநிழலின் குளிர்ச்சியும் காற்று வந்து வருடிப்போகும் ஸ்பரிசமும் புத்துணர்வின் ஊட்டமாய் இருந்தது. அருகிலிருந்த குளத்திற்குப் போய் அதில் பூத்திருந்த அல்லி மலர்களை பறித்துக்கொண்டு வந்தார்கள். மனமெல்லாம் அல்லிப்பூக்களாய் மலர்ந்து சிரித்தது.
“வா.. காட்டுக்குள்ளே இன்னும் கொஞ்சதூரம் போவோம்” என்று நடேசன் கூப்பிடவும் எழுந்து நடந்தார்கள். தண்ணீர் தாகமாக இருந்தது. ஓரிடத்தில் அழகிய நீர்ச்சுனை ஒன்று தென்பட்டது. அதில் ஊற்றெடுத்துப் பொங்கிய நீர் வாய்க்கால்வழியாக ஓடி அல்லிக்குளத்திற்கு போய்க்கொண்டிருந்தது. தாகம்தீர சுனைநீரை உள்ளங்கைகளை குவித்து பருகினால் அதன் சுவை இதுவரை கண்டிராத வகையில் தேங்காய்ப்பாலாய் இனித்தது. உடலோடு மனதெல்லாம் அந்த சுவை நிறைந்து தளும்பியது.
இன்னும் கொஞ்சதூரம் காட்டுக்குள் போனபோது நரிகள் ஊளையிடும் சத்தம் அருகில் கேட்டது. ஒரு பெரிய பாறை ஒன்று யானைத்தலை, துதிக்கை பெருத்த உடலுடன் படுத்திருப்பதைப் போல ஓரிடத்தில் இருந்தது. “அய்.ய்.யா..ஆனைப்பாறை” என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்து அந்தப்பாறை மீது ஏறிப்போனார்கள். அங்கிருந்து சுற்றிலும் பார்த்தால் அவர்களது ஊரும் பள்ளிக்கூடமும் தெரிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தைப் பற்றிய பயம் விட்டுப்போயிருந்தது. கணக்கு வாத்தியார் ஒரு எலியைப் போன்ற உருவத்தில் ஓடுவது போலிருந்தது. கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை வந்தது போல் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.
வானத்தில் திட்டுதிட்டாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதன் நிழல் ஆனைக்கல்லை தொட்டுக்கொண்டு போனது. செடிகளில் பூத்திருந்த வண்ணப்பூக்களுக்கு மேல் பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.
“குழந்தைகளே.. நன்றாகப்படிக்கிறீர்களா..” யாரோ பேசும் சத்தம் கேட்டது. மனிதர்களே இல்லாத காட்டில் இப்போது யார் பேசுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். ‘கணக்கு வாத்தியார்தான் இங்கேயும் வந்தவிட்டாரோ’ மணிராசுக்கு மின்னலாய் ஒரு எண்ணம் வந்து போனது. பார்த்தால் அருகில் ஒருவருமே இல்லை. ‘அப்பாடா.. தப்பித்தேன்’ லேசாக மூச்சு வந்தது.
“மணிராசு.. நடேசா.. உங்களைத்தான் கேட்கிறேன்” மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.
இலேசாக பயம் வரவும் “வா.. போயிருவோம்” என்று எழுந்தனர்.
“அட.. நான் ஆனைக்கல் பேசுகிறேன். தைரியமாக இருங்க”
மணிராசும் நடேசனும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.
“மணிராசு.. கவலைப்படாதே. நடேசனை மாதிரி நீயும் நன்றாகப் படிப்பாய். நீங்கள் அடிக்கொரு தடவை இங்கே வந்து போங்க. நான் உங்கள் நண்பன்” என்று சொல்லி மறுபடியும் அமைதியாகப் படுத்துக்கொண்டது.
ஆனைக்கல் சொன்னது மாதிரியே இருவரும் அடிக்கொருதடவை அங்கே வருவதும் அதன் மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தார்கள். அவர்களுடைய நட்பில் ஆனைக்கல்லும் சந்தோசமாக இருந்தது.
இப்பொழுதெல்லாம் வாத்தியார் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் மின்னல்வெட்டுப்போல பதில் சொல்கிறான் மணிராசு. கணக்கு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“மணிராசு.. எப்படி படிப்பாளி பையனாக மாறினாய். ஞாபகசக்தியும் ரொம்ப நன்றாக இருக்கிறதே. சொல்லிக்கொடுக்கிற பாடங்களை அப்படியே ஒப்பிக்கிறாய்.”
“எல்லாம் ஆனைக்கல் கொடுத்த தைரியம்தான்” என்று மணிராசு நடேசனைப் பார்த்து மெளனமாகச் சிரித்துக்கொண்டான்.
அத்திமரக்காற்றும் நீர்ச்சுனையும் ஆனைப்பாறையும் சொல்லிக்கொடுத்த பாடத்தில் கொட்டுக்காய்களும் பிரம்புகளும் எங்கேயோ ஓடிப்போய் ஒளிந்துகொண்டன.

1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல்.
பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2




ஆனைப்பாறைக் கதை சொல்லிய விதம் குழந்தைகளுக்குத் தெம்பூட்டும் கதைக்கரு ....... அருமை
மணிராசுவைப் போல இங்கு எல்லோருக்கும் 'வாழ்வை திருத்தியமைக்க', எந்த வயதிலும் ஒரு ஆனைப்பாறை தேவைப்படுகிறது...
ஒருமுறையேனும் இந்த ஆனைக்கல்லில் ஏறிப் பார்க்கணும் போலுள்ளது...
அருமை எங்கள் 'வாழும் கி.ரா'. தொடரட்டும்...
காடுகள் மலைகள் போன்ற இடத்திற்கு சென்றாலே போதும்.நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.இங்கு ஆனைக்கல் வழியாக மணிராசுக்கு பாக்கியம் கிடைத்துள்ளது.கதை அருமையாக உள்ளது.
முழுமையாக படித்தேன்,
மிகவும் அருமை சார்
வாழ்த்துக்கள் சார்
மிகவும் இனிமையான கரிசல் கதை, மாணவன் மணிராசுவுக்கு தைரியமும் படிக்க உத்வேகமும் தந்தது இயற்கையும், ஆனைப்பாறையும் என சிறப்பாக தந்துள்ளார் கதாசிரியர்.
கதாசிரியரின் படைப்புகள் எப்போதுமே மிகவும் அருமை, இது இன்னமும் இனிமை!
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கதாசிரியர் பொன்ராஜ்!