சிட்லு கேட்லு
- சரிதா ஜோ

- Jan 15
- 6 min read

”கேட்லு, இந்தப் பாறையின் மறுபக்கம் என்ன இருக்கும்?” என்று சிட்லு மீன் கேட்டது.
”தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ உடனே பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு தன் வாலை வேகவேகமாக ஆட்டிக் கொண்டு பவளப்பாறையின் மறுபக்கத்தை நோக்கி நீந்திச் சென்றது கேட்லு மீன்.
”நில், கேட்லு! நில். அவசரப்படாதே. அங்கே ஏதாவது ஆபத்தான விலங்குகள் இருக்கும்!” என்றது அப்பா மீன்.
கேட்லு அப்பா சொல்வதைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. வேகவேகமாக பாறையின் மறு பக்கத்திற்குச் சென்றது. அப்பா மீனும் பின் தொடர்ந்து சென்றது.
திடீரென்று, பயங்கரமான உருவம் கொண்ட பெரிய மீன் ஒன்று வாயை “ஆ!” என்று திறந்து வைத்தபடி பாறையின் பின்னாலிருந்து கேட்லு மீனை நோக்கி வந்தது.
இப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற உள்ளுணர்வு கொண்ட அப்பா மீன் சட்டென்று கேட்லுவை தன் வாலால் இடித்துத் தள்ளிவிட்டது.
ஒருவழியாக கேட்லு மீன் அந்தப் பயங்கர உருவம் கொண்ட பெரிய மீனிடமிருந்து தப்பிவிட்டது.
"எல்லா நேரங்களிலும் துடுக்குத்தனத்தோடு நடந்து கொள்ளாதே கேட்லு! நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேள். உன் அவசரப்புத்தியால் நீ பெரிய ஆபத்தில் போய் மாட்டிக் கொள்வாய். இது பெரும் கடல். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று அப்பா மீன் கூறியது.
அப்பா மீன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் கேட்லு மீன் இல்லை. எப்போதும் போல் பெற்றோருக்குப் போக்கு காட்டிவிட்டுத் தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது கேட்லு.
கேட்லுவும் சிட்லுவும் அந்தக் கடலில் வாழும் குட்டி மீன்கள்.
கேட்லு மீன் சற்றும் பொறுமையே கிடையாது. எதற்கெடுத்தாலும் அவசரம். ஆனால், சிட்லு மீன் அப்படியல்ல. கேட்லு மீனுக்கு நேர் எதிர். பொறுமைசாலி. புத்திசாலியும் கூட.
ஒருநாள், கடலின் மேற்பரப்பில் சின்ன மீன்கள் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. சிட்லு அவற்றின் அருகில் மெதுவாக நீந்திச் சென்றது.
ஆனால் கேட்லு,“நான் முதலில் பிடிக்கிறேன்!” என்று கூறி மீன் கூட்டத்தின் நடுவில் 'பொத்' என்று குதித்தது.
குட்டி மீன்கள் அனைத்தும் பயத்தில் நாலாபுறமும் சிதறின.
"பார்த்தாயா! எல்லா மீன்களும் உன் வேகத்தைப் பார்த்துப் பயந்துப்போய் ஓடிவிட்டன. அவசரப்படக்கூடாது என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். பொறுமையாக இருக்கவேண்டும். உன் அவசரத்தால் சுலபமாக கிடைக்க வேண்டிய உணவுகூட இப்பொழுது கிடைக்காமல் போய்விட்டது" என்று கோபமாகக் கூறியது சிட்லு.
சிட்லுவும், கேட்லுவும் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்தன. குட்டிமீன்கள் எதுவும் தென்படாததால், "நீ இங்கேயே இருந்து பட்டினிகிட. நான் வேறு இடத்திற்குக் கிளம்புகிறேன்" என்று கூறிவிட்டு கேட்லு கிளம்பி விட்டது. ஆனால் சிட்லு அங்கேயே பொறுமையாகக் காத்திருந்தது. சற்று நேரத்தில் சின்ன மீன்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.
சிட்லு உடனே பாயவில்லை. பவளப் பாறையின் நிழலில் நீந்திக்கொண்டு சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மெதுவாக நீந்திச் சென்று குட்டி மீன்கள் சிலவற்றைப் பிடித்துச் சாப்பிட்டது. அதே நேரத்தில் எங்கெங்கோ சுற்றி உணவே கிடைக்காமல் அங்கு கோபத்தோடு வந்து சேர்ந்தது கேட்லு.
சிட்லு தினமும் ஒரே பவளப் பாறைக்கு அருகில் மூன்று முறை சுற்றி நீந்திப் பயிற்சி செய்தது.
”ஏன் இதையே மீண்டும் மீண்டும் செய்கிறாய்?” என்று கேட்லு கேட்டது.
”வேகமாக நீந்தப் பயிற்சி எடுக்கிறேன். தொடர் பயிற்சிதான் வேகத்தையும் விவேகத்தையும் உருவாக்கும்” என்று சிட்லு சொன்னது.
"மீன்களுக்கு நீந்தப் பயிற்சியா? நீ என்ன முட்டாளா? மீன்களுக்கு அதுவும் கடலில் இருக்கும் மீன்களுக்குப் பயிற்சி எல்லாம் ஒன்றும் தேவையில்லை. அதெல்லாம் இயல்பாக இருப்பது" என்று கிண்டலாகக் கூறியபடியே சிட்லுவைத் தன் வாலால் சீண்டியது கேட்லு.
"ஓ! அப்படியா? சரி, உன்னால் முடிந்தால் என்னைத் துரத்திப் பிடி பார்க்கலாம்!" என்று கூறி வேகமாக நீந்தியது சிட்லு.
கேட்லு மீன் சிட்லுவைப் பின்தொடர்ந்து நீந்தியது. சிட்லு வேகமாகச் சுழன்று சுழன்று நீந்தியது. கேட்லுவால் அதைத் தொடக்கூட முடியவில்லை.
கேட்லுவுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. "எப்போதும் நீயேதான் போட்டியில் ஜெயிக்கிறாய்! ஒருநாள் நான் உன்னைப் பிடித்துக் காட்டுகிறேன் பார்! ஒரு நாள் என்ன, இப்போதே பிடிக்கிறேன் பார்" என்று கூறிவிட்டு மீண்டும் சிட்லுவைப் பிடிக்க வேகமாக நீந்திச் சென்றது கேட்லு.
சிட்லு சிரித்துக் கொண்டே"எங்கே இப்போது பிடி பார்ப்போம்!" என்று கூறிவிட்டு பவளக் கல்லின் பின்னால் சென்று சட்டென்று ஒளிந்து கொண்டது.
அம்மா மீனும், அப்பா மீனும் தொலைவில் நீந்திக் கொண்டே அவை இரண்டின் விளையாட்டை ரசித்துப் பார்த்தன.
"இரண்டு குட்டிகளும் தினமும் இப்படியே சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், ஒன்றைப் பிரிந்து மற்றொன்று இருப்பதில்லை. சிறிது நேரத்தில் தங்களது சண்டையை மறந்துவிட்டுச் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுகின்றன" என்று கூறி அம்மா மீன் சிரித்தது.
"அதுதான் குழந்தைகள். வளர்ந்த நம்மைப்போல அவர்களுக்கு மனசுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளத் தெரியாது" என்று கூறியது அப்பா மீன்.
அப்போது திடீரென்று அவைகளின் மேல் பெரிய நிழல் படிந்தது. பயந்துபோன சிட்லு, "அம்மா! அப்பா! பெரிய மீன்!" என்று கூச்சலிட்டுக் கத்தியது.

"பயப்படாதே! அது சுறா மீன். இப்போது அது நம்மைக் கவனிக்கவில்லை. ஆனாலும், நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று அப்பா மீன் சொன்னது.
"ஓஹோ! கவனிக்கவில்லையா? அந்தப் பெரிய மீனை நான் நீந்திச் சென்று தொடப் போறேன். அதைத் தொட்டு சிட்லுவை விட எனக்கு வலிமை இருக்கிறது என்று நிரூபிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு திடீரென்று சுறாவை நோக்கி வேகவேகமாக நீந்தியது கோட்லு.
"அடடா, நீ எங்கே போகிறாய்? அவசரப்படாதே! நாம் இன்னும் வளரனும். அதை நம்மால் பிடிக்க முடியாது! அது நம்மைப் பார்த்து விட்டால் ஆபத்து. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை" என்றது சிட்லு.
ஆனால் கேட்லு, சிட்லு சொன்னதைக் கொஞ்சமும் கேட்கவில்லை. சுறாவைத் துரத்திக் கொண்டு சென்றது. சுறா போகும் வேகத்திற்கு கேட்லுவால் ஈடுகொடுத்து நீந்த முடியவில்லை.
நெடுநேரம் நீந்தியதில் கேட்லுவின் சிறிய வால் வலித்தது. பசி ஒருபுறம் வாலின் வலி ஒருபுறம். மிகவும் சோர்ந்து போன கேட்லு ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது.
ஆனால், அப்போது சிட்லு என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
அருகில் நீந்திக் கொண்டிருந்த குட்டிக்குட்டி மீன்களைத் தன்னால் முடிந்த அளவுக்குப் பிடித்துச் சாப்பிட்டது.
பிறகு, மிகவும் மகிழ்ச்சியாக அங்கிருந்த மற்ற நண்பர்களோடு துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது சிட்லு.
அப்போது பசியோடு வந்த கேட்லுவைப் பார்த்து
"மிகவும் களைப்பாக இருக்கிறாய். பசிக்கிறதா? வா! சற்று நேரம் பொறுமையாகப் பாறையின் பின்னால் காத்திருப்போம். மீண்டும் குட்டி மீன்கள் வரும் பிடித்துச் சாப்பிட்டு விடலாம்" என்று கூறியது சிட்லு.
அந்த நேரத்தில் ஒரு பெரிய மீன் அவர்களைக் கடந்து சென்றது.
"குட்டி மீன்கள் வரும் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது. அதோ அந்த மீனை நான் துரத்திப் பிடித்துச் சாப்பிட போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மீனைத் துரத்திச் சென்றது.
ஆனால் அந்த மீனைக் கேட்லுவால் பிடிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அதீதக் கலைப்போடு திரும்பி வந்தது.
"அம்மா… எனக்கு ரொம்பப் பசிக்கிறது. என்னை விடச் சற்று பெரிய மீன்களைத் துரத்துகிறேன். அவைகள் வேகமாக ஓடி விடுகின்றன. அதனால் அவைகளைப் பிடிக்க முடிவதில்லை. அது கூட சரி. ஆனால்,இங்கே இருக்கும் சின்னச்சின்ன மீன்களைக் கூட என்னால் பிடிக்க முடியவில்லை. நான் வருவதைப் பார்த்தாலே குட்டிக்குட்டி மீன்கள் தப்பித்துச் சென்று விடுகின்றன.
பாருங்களேன்!சிட்லு எப்படியோ மீன்களை நைசாகப் பிடித்துச் சாப்பிட்டு விடுகிறது " என்று சோகமாகக் கூறியது கேட்லு.
"கேட்லு, நீ இன்னும் குட்டி. பெரிய மீனைகளைப் பிடிக்க வேண்டிய நாள் வரும். அந்த நாளுக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றால், முதலில் சின்னச் சின்ன மீன்களைப் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
"அது மட்டும் இல்லை, இன்னும் நீ வளர வேண்டும். வால் வலிமை பெற வேண்டும். நீண்ட தூரம் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். வலிமை மட்டும் போதாது. மீன்களைப் பிடிப்பதற்கு அதுவும் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு நிறைய தந்திரங்கள் உள்ளன. அவற்றை அனுபவங்கள் வாயிலாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான நேரமும் காலமும் இன்னும் வரவில்லை" என்றது அம்மா மீன்.
"ஆனால் அம்மா, உங்களை எல்லாம் புரிந்து கொள்ளவே எனக்குச் சிரமமாக இருக்கிறது. நீங்கள்தான் ‘பெரிய கனவு காணுங்கள், பெரியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லுவீர்கள்.
இப்போது, சின்னச்சின்ன விசயங்களில் கவனமாக இருப்பதைப் பற்றி சொல்கிறீர்களே?" என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த பாறையின் மேல் ஏறி வழுக்கி வழுக்கி விளையாடியது கேட்லு.
அம்மா மீன் புன்னகைத்தது. "பெரிதினும் பெரிதாக இலக்கு வைத்திருப்பது நல்லதுதான். ஆனால், அதற்கான காலம் வரும்வரைப் பயிற்சியும் முயற்சியும் அவசியம்.
பயிற்சியின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள். வெற்றி தோல்வியைத் தாங்கும் மனநிலை. இவை எல்லாம்தான் நம்முடைய இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்" என்று கூறிவிட்டு தன் வாலால் கேட்லுவை வருடிக் கொடுத்தது.
"கேட்டுக்கொள், கேட்டுக்கொள், நன்றாகக் கேட்டுக்கொள். நீ ஒரு அவசரக் குடுக்கை. ஹா ஹா! பாரு, நீ துரத்திச்சென்ற பெரிய மீன் காணாமல் போய்விட்டது.
நான் இருந்த இடத்திலேயே நிறைய மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டேன். என் வயிறு நிறைந்து விட்டது" என்று கூறிவிட்டு கேட்லுவை தனது வாலால் இடித்து விட்டு மீண்டும் நீந்த ஆரம்பித்தது.
இதைக் கேட்ட கேட்லுவுக்கு கோபம் வந்தது. "நீ எப்போதுமே என்னைக் கிண்டல் செய்கிறாய். என்னால் உன்னைப் பிடிக்க முடியாது என்று தானே நினைக்கிறாய். நான் பெரியவனாகிவிட்டால் உன்னைவிட வேகமாக நீந்துவேன்!" என்று கூறி சிட்லுவைத் துரத்திச் சென்றது கேட்லு.
இரண்டும் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு சண்டைப் போட்டன. சிட்லு அங்கிருந்த பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது. கேட்லு அதைத் தேடியது.
அந்த இடத்தில் அங்கே சின்னச்சின்ன மீன்கள் ஏராளமாக நீந்தி கொண்டிருந்தன.
"கேட்லு உனக்கு பசிக்குது தானே. வேகமாக இங்கே வா. இங்கே உனக்குப் பிடித்த மீன்கள் இருக்கின்றன" என்று கூறியது சிட்லு.
சிட்லு கூறியதைக் கேட்டு கேட்லு அங்கே சென்றது. அங்கு இருந்த குட்டி மீன்களை லாவகமாகப் பிடித்துச் சாப்பிட்டது.
வயிறு நிறைந்ததும் சிட்லு மீது இருந்த கோபம் தணிந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.
அப்பா மீனும் அம்மா மீனும் அவைகளோடு சேர்ந்து விளையாடின.
நாட்கள் நகர்ந்தன. கேட்லுவும் சிட்லுவும் சற்றே வளர்ந்தன. ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒரு பெரிய மீனைப் பிடிக்க முயற்சி செய்தது கேட்லு.
"கேட்லு இன்னும் உனக்குப் பயிற்சி போதாது. தயவுசெய்து திரும்பி வந்துவிடு. இன்னும் நேரம் வரவில்லை" என்று கூறியது அம்மா மீன்.
ஆனால், கேட்லு மீன் அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அந்த மீனைப் பின்தொடர்ந்து நீண்ட தூரம் நீந்திச் சென்றது.
முன்னால் நீந்திச் சென்று கொண்டிருந்த அந்தப் பெரிய மீன் தன் இரையைப் பிடிக்கும் ஆர்வத்தில் வேகமாகத் திரும்பியது. அதனுடைய பலம் மிகுந்த வால் கேட்லுவின் மீது மோதியது.
அங்கு இருந்த பாறையின் மீது போய் 'பொத்' தென்று விழுந்தது கேட்லு. அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்துவிட்டது கேட்லு.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தது. தன் வீட்டிற்குச் செல்ல அதற்கு வழி தெரியவில்லை. பயந்துபோய் அழுதது.
பெரிய மீன் அடித்ததனால் ஏற்பட்ட காயத்தால் அதனால் நகரக்கூட முடியவில்லை. உணவும் கிடைக்கவில்லை.பசியால் பாதி மயங்கிய நிலையில் அந்தப் பாறையின் மேலேயே கிடந்தது. அதனால் நீந்த முடியவில்லை. அம்மா! அப்பா! சிட்லு! என்று குரல் கொடுத்துப் பார்த்தது. கேட்லுவின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
'நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அவசப்பட்டது என் தவறுதான்' என்று நினைத்துக் கொண்டது.
உடனே அம்மாவையும் அப்பாவையும் சிட்லுவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதனால் ஒரு அடி கூட நீந்த முடியவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அப்பா மீன், அம்மா மீன், சிட்லு மீன் மூன்றுமே கேட்லு இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தன.

"கேட்லு, தங்கமே! என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கிறாய்? உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா?” என்று கூறியபடி தன் வாலால் அணைத்துக் கொண்டது அம்மா மீன்.
கேட்லு மீன் பேசக்கூட முடியாமல் திறனற்றுக் கிடந்தது. "முதலில் கேட்லுவுக்கு உணவைக் கொடுப்போம்" என்றது அப்பா மீன்.
மூவரும் சேர்ந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சில மீன்களைப் பிடித்து வந்து கேட்லுவுக்குக் கொடுத்தன.
சாப்பிட்டு முடித்ததும் சற்றே தெம்பாகிவிட்டது கேட்லு.
"பெரிய மீன்களைப் பிடிக்க இன்னும் காலம் இருக்கிறது என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன். நான் சொல்வதை நீ ஒருபோதும் கேட்பதில்லை" என்று வாலால் கேட்லுவின் முதுகைத் வருடியபடி சொன்னது அப்பா மீன்.
"மன்னித்து விடுங்கள் அப்பா. இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பேன். சிட்லுவைப் போல் சரியான பயிற்சி எடுப்பேன்" என்று கூறி அப்பாவின் அருகில் நெருங்கிச் சென்றது. அப்பா மீன் தன் வாலால் கேட்லுவைச் சுருட்டி அணைத்தது.
அடுத்த சில நாட்களில் கேட்லுவுக்கு உடல் தேறியது. கேட்லுவும் சிட்லுவும் ஒன்று சேர்ந்து பவளப் பாறைகளுக்கு இடையே உள்ள பொந்துகளுக்குள் ஒளிந்து விளையாடின.
சில நேரங்களில் சின்னச் சின்ன கடல்குதிரையோடு நீந்திப் போட்டி போட்டன. சில நேரங்களில் சுறுசுறுப்பான மற்ற குட்டி நண்டுகளோடு விளையாடின.
வேகமாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டன. ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டன.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு பாடம் இருந்தது.
சிறிய முயற்சிகள் சேர்ந்து பெரிய வெற்றியாக மாறும் என்பதை உணர்ந்து கொண்டது கேட்லு.
காலம் செல்லச்செல்ல சிட்லு, கேட்லு இரண்டும் வளர்ந்தன. வால்கள் வலிமையாகின. வேகம் அதிகரித்தது. முன்பை விட எளிதில் மீன்களைப் பிடித்தன.
”பெரிய கனவு தவறல்ல. ஆனால் அதற்குச் செல்லும் பாதை சின்னச் சின்ன பயிற்சிகளால்தான் உருவாகும் என்பதை கேட்லு புரிந்துகொண்டது.
ஒவ்வொரு நாளும் சிட்லுவும் கேட்லுவும் புதிய சவால்களைச் சந்தித்தன.
ஒருநாள், தொலைவில் ஒரு பெரிய மீன் நீந்திச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பெரிய மீனைக் சுட்டிக்காட்டிய அம்மா 'இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது. நீ முயற்சி செய்யுங்கள்' என்றது.
அதைக் கேட்டு உற்சாகமான கேட்லுவுமா சிட்லும் அந்தப் பெரிய மீனை நோக்கி நீந்திச் சென்றன.

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments