top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • ஊருக்குப் போன அம்மா

    நேற்று அரவிந்தின் அம்மா இறந்து விட்டார். அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அம்மா இப்படி நீண்ட நேரம் படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பார். தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் விட்டு வருவார். தண்ணீர் எடுத்து சமையல் செய்வார். அரவிந்தின் சீருடைகளைத் துவைப்பார். அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவர் எப்போது உறங்குவார் என்று தெரியாது. எப்போது எழுந்திரிப்பார் என்று தெரியாது. ஆனால் இப்போது காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் படுத்துக் கிடந்தார். யார் யாரோ வந்தார்கள். மாலைகளைப் போட்டார்கள்.. அழுதார்கள். அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை. அம்மா அழகாக இருந்தார். அவருக்குப் பிடித்த நீலநிறப் புடவையைக் கட்டியிருந்தார். அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எழுந்து விடுவார் இப்போது எழுந்து விடுவார் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கண்ணைக் கூடச் சிமிட்டவில்லை. அவனுக்கு வயிறு பசித்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அரவிந்தன் அழுதபோது அவனுடைய பொன்னம்மா பாட்டி, “ அம்மா சாமிகிட்டே போயிட்டா..”  என்று சொல்லி அழுதாள். அவனுக்குப் புரியவில்லை. அவனிடம் அம்மாவின் வாயில் அரிசி போடச்சொன்னார்கள். ஒரு சின்னக்குச்சியைக் கொளுத்தி கொடுத்து திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அம்மா நெருப்புக்குப் பக்கத்தில் போகக்கூடாது என்று எப்போதும் சொல்வார். “ அவன் சின்னப்பையன்.. சுடுகாட்டுக்கு வேண்டாம்.. “  என்று யாரோ சொன்னார்கள்.  பிறகு அம்மாவை அலங்காரம் செய்த வண்டியில் வைத்துக் கொண்டு போனார்கள்.  ” எங்கே போகிறாள் அம்மா? “ அவன் சித்தியிடம் கேட்டான்.   ” அம்மா ஊருக்குப் போறாள்.. சீக்கிரம் வந்துருவா..” என்று சொல்லி அழுதார். இப்போது அரவிந்தனுக்குச் சமாதானமாக இருந்தது. பலமுறை அம்மா ஊருக்குப் போவார். காலையில் போய் விட்டு இரவில் திரும்பி வருவார். சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகிவிடும். அப்போது அவன் பாட்டி வீட்டில் தான் இருப்பான். அங்கிருந்து தான் பள்ளிக்கூடத்துக்குப் போவான். கடைசியாக ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்து வரும்போது இப்படி தூங்கிக் கொண்டே வந்தார். இப்போதும் ஊருக்குத் தானே போகிறார்.  “ அம்மா சீக்கிரம் வரவேண்டும் “ என்று மனதுக்குள் நினைத்தான். ஆனாலும் அவனுடைய மனதில் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது.  பள்ளியில் ஆசிரியர்கள் அவனிடம் பரிவு காட்டினார்கள். அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. அம்மா எப்போது வருவார் என்று பாட்டியிடம் தினம் கேட்பான். அப்படிக் கேட்டாலே பாட்டி அழுவார். அவர் அழுவதைப் பார்க்கச் சகிக்காது. அதனால் பாட்டியிடம் கேட்க மாட்டான். அடிக்கடி வீட்டின் பின்புறம் இருக்கிற புங்கை மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்வான். அந்த மரத்திடம் “ அம்மா எப்போ வருவார்? “ என்று கேட்பான். மரம் பதில் சொல்லாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அப்படி தினம் ஒருமுறையாவது கேட்க வேண்டும். அப்போது தான் அவனுக்கு நிம்மதி. புங்கைமரம் தலையாட்டும். சிலசமயம் பூக்களை அவன் தலையில் உதிர்க்கும். சில சமயம் காற்றினால் அவன் தலைமுடியைக் கோதி விடும்.  அப்போது இலையுதிர்காலம். புங்கை மரத்தின் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கியிருந்தன. எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருந்த அரவிந்த் மரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களைக் கவனிக்கவில்லை. அன்றும் அவன் மரத்தினடியில் உட்கார்ந்து, “ அம்மா எப்போ வாருவார்? “ என்று கேட்டான்.  அப்போது திடீரென ஒரு பெரிய காற்று வீசியது. புங்கை மரத்திலிருந்து பழுத்த இலைகள் மழை மாதிரி அரவிந்தின் தலைமீது விழுந்தன. தலையை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்திலும் சில இலைகள் விழுந்தன. புங்கை மரத்தில் பாதி இலைகள் இல்லை. அவன் நெற்றியில் விழுந்த இலையை எடுத்தான். அது பாதிபச்சையும் பழுப்புமாய் இருந்தது. அவனைச் சுற்றிலும் இலைகள். எல்லாம் அடர்பழுப்பு நிறத்திலும், மெல்லிய பழுப்பு நிறத்திலும், சில இலைகள் பச்சையும் மஞ்சளுமாக இருந்தன. அவனுக்கு இப்போது மரத்தைப் பார்க்கச் சோகமாக இருந்தது. மொட்டையாகத் தெரிந்தது. இலைகள் உதிர்ந்தால் மரம் அழுமோ.  கீழே மரத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் மாலை மாதிரி இலைகள் கிடந்தன. அவன் புங்கை மரத்தடிக்கு வரும்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குள்ளிருந்து அவனைக் கவனித்துக் கொண்டேயிருப்பார்.  பின்வாசலில் நின்று கொண்டு அவர், “ அரவிந்த் கண்ணு! இதுதான் இயற்கை.. பழுத்த இலைகள் உதிர்ந்திரும்.. சில சமயம் நோய்வாய்ப்பட்ட இலைகளும் உதிரும்.. அப்புறம் புது இலைகள் வளரும்..” என்றார். அரவிந்த் நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தான். பாட்டியும் மரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். “ உன் அம்மா ஒரு நோய்வாய்ப்பட்ட இலை.. அது தான் உதிர்ந்துட்டா.. இனி அவ வரமாட்டா.. மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய முடியும்? பழுத்த பிறகும் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. எங்கண்ணு….. புது இலையா நீ இருக்கீல்ல.. ” என்று உறுதியான குரலில் சொன்னார்.. அந்தக் குரலில் கவலை இல்லை. நம்பிக்கை இருந்தது. அரவிந்துக்கு ஏதோ புரிந்ததைப் போலிருந்தது. அவன் மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனான். பாட்டி அவனை அணைத்துக்கொண்டார். அன்று இரவு அரவிந்துக்கு தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒரு கனவில் அம்மாவும் சிரித்துக் கொண்டே வந்தார். தூங்கி எழுந்து பின்வாசலுக்கு வந்தான்.  என்ன ஆச்சரியம்!  புங்கை மரத்தில் புதிய தளிரிலைகள் தோன்றியிருந்தன. இளம் பச்சை நிறத்தில் மரத்தின் உடல் முழுவதும் அலங்காரம் செய்ததைப் போல இருந்தது. அரவிந்தைப் பார்த்து புங்கை மரம் சிரித்தது.  அரவிந்தின் உதடுகளும் புன்னகை பூத்தன. அந்தப் புன்னகையின் ஓரத்தில் அவனுடைய அம்மாவின் நினைவுகளும் ஒட்டியிருந்தன. உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • ஆனைப்பாறை

    மணிராசு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கணக்குப்பாடம் என்றாலே அட்டகோணலாய் முகம் சுழிக்கும். அதென்ன வேப்பங்காயா கசப்பதற்கு… ‘எனக்கு கணக்கு போட வரலை. படிப்பு ஏறலை’ என்று உறங்கும்போதும் தன்னையறியாமல் பேசிக்கொண்டிருந்தான். கணக்கு மட்டுமில்லை தமிழ் இலக்கண வகுப்பிலும் ஆங்கில வகுப்பிலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழிப்பான். ஆசிரியருக்கும் கேள்வி கேட்பதென்றதால் மணிராசு முகம்தான் ஞாபகத்தில் வருகிறது. வகுப்பில் முதல் கொட்டுக்காய் இவனுக்குத்தான் விழுகும். இவனைப்போலவே இன்னும் இரண்டுமூன்று பேர் இருந்தாலும் எதையெதையோ பதிலாக சொல்லி சமாளித்துக்கொண்டிருப்பார்கள். இவனுக்கு அதுவும் தெரியாது. குட்டுக்கள் வாங்குவதற்கென்றே பிறவி எடுத்தது போல் நின்று கொண்டிருப்பான். மற்றவர்கள், “மணிராசு இருக்காம்ல. மொத்த அடிகளும் அவனுக்குத்தான் விழும். நம்ம தப்பிச்சிரலாம்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.   மணிராசுக்கு பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே கொட்டுக்காயும் பிரம்பும்தான் முன்னால் வந்து நிற்கிறது. இப்படியே எத்தனை நாள்தான் அடிகள் வாங்கிக்கொண்டிருப்பது. பள்ளிக்கு மட்டம் போட யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் பள்ளிக்கூடம் போவது போல் போய் வழியிலிருக்கும் பூங்காவில் போய் இருந்துகொள்வான். பள்ளிவிடும் நேரத்தில் நல்லபிள்ளையாக வீட்டுக்கு வந்துவிடுவதுமாக இருந்தான். அதுவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. இந்த விசயம் யாரோ சொல்லி அவன் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது.  மறுநாள் அதே போல பைக்கூடை தோளில் மாட்டிக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தான். பூங்காவின் இன்னொரு வாயில் வழியாக கையில் ஒரு குச்சியை பிடித்தபடி அவனது அம்மா எதிரில் வந்துகொண்டிருந்தார்.  “ஆஹா.. இங்கேயும் குச்சிக்கம்பு வருகிறதே” என்று திகைத்து நிற்கும்போதே பிட்டத்தில் ஒரு கொடுப்பு வைத்தார் அம்மா. “ஒழங்கு மரியாதையாக பள்ளிக்கூடம் போவாயா” என்று அடுத்த அடிக்கு குச்சியை ஓங்கிப்பிடித்தார். “வேண்டாம்.. வேண்டாம். நான் பளள்ளிக்கூடம் போகிறேன்” அடிவிழுந்த இடத்தில் தடவிக்கொண்டே திரும்பி நடந்தான்.  “ராஸ்கோல்.. இனிமேல் பூங்காவுக்குள்ள பார்த்தேன்… முதுகுத்தொலியை உரிச்சிப்போடுவேன்.. உரிச்சி” அதட்டல் சத்தம் அவனை துரத்திக்கொண்டு போனது. “இதென்ன.. படிக்கவில்லை என்றாலும் குட்டுகள் விழுகிறது. விளையாடப்போனாலும் குட்சிக்கம்பு மிரட்டுது. என்னதான் செய்ய” என்று மிரண்டு போய்விட்டான். வகுப்பில் நன்றாகப்படித்து முதல் மதிப்பெண் வாங்கும் நடேசனின் சிநேகிதம்தான் இவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.  “மணிராசு.. பள்ளிக்கூடத்திற்கு ரெண்டு நாள் லீவு விட்டாச்சி. பக்கத்துல இருக்கிற கருமலை காட்டிற்கு அப்பிடியே போயிட்டு வருவோம். வா.. போவோம்” என்று நடேசன்தான் கூப்பிட்டான். “வீட்டுப்பாடம் படிக்கலைன்னா வாத்தியார் திட்டுவாரு. நான் வரலை” “ஏய்… பாடத்தையும் உன் பயத்தையும் தூக்கி ஓரமாக வையி. உனக்கு நான் சொல்லித்தாரேன்" என்றதும் கொஞ்சம் சமாதானமாகி சம்மதித்தான்.  ஊரிலிருந்து கொஞ்சதூர நடையிலேயே காட்டின் எல்லை ஆரம்பமானது. புதர்ச்செடிகளின் ஊடாகப் போன செம்மண் தடத்தில் நடந்து போகையில் புள்ளிமான்கள் பாதையின் குறுக்கே தாவி மறுபக்கமாய் ஓடியது. அவை முட்புதர்கள் பக்கமாய் போய் நின்றுகொண்டு இவர்களையே உற்றுப்பார்த்தன. கிளுவைச்செடிகளும் கள்ளிப்புதர்களும் அவற்றின்மேல் படர்ந்த பிரண்டைக்கொடிகளும் இருபுறமும் அடர்ந்து நின்றன. மலையடிவாரத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரிய அத்திமரம் கிளைகள் பரப்பி நின்றது. நீண்டு விரிந்த அதன் வேர்கள் தரைக்கு மேல் தலையை நீட்டி  வந்திருப்பவர்கள் யாரென்று முகம் பார்த்தது. அங்கே மயில்களின் அகவல் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. இவர்கள் நின்ற இடத்திற்கு மிக அருகில் ஒரு புளியமரத்தடியில் கொம்புகளோடு நின்ற ஒரு ஆண்மான் புளியம்பழங்களை தின்றுகொண்டிருந்தது. குளிர்ச்சியான அத்திமரக்காற்று சன்னமாக வீசி மேலெல்லாம் தொட்டுக்கொண்டுபோனது. கரும்பச்சை நிறத்தில் தடித்த அத்தி இலைகளும் அதன் சிவந்த பழங்களும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அந்த மரத்தடியில் நடந்து வந்த அலுப்புத்தீர காற்று வாங்கியபடி ‘உஸ்.. அப்பாடா’ என்று உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார்கள்.  மணிராசுக்கு பாடாய் படுத்திய கணக்குப்பாடமும்  கொட்டுக்காய்களும் இப்போது எங்கே போனதென்ற மாயம் தெரியவில்லை. மரநிழலின் குளிர்ச்சியும் காற்று வந்து வருடிப்போகும் ஸ்பரிசமும் புத்துணர்வின் ஊட்டமாய் இருந்தது. அருகிலிருந்த குளத்திற்குப் போய் அதில் பூத்திருந்த அல்லி மலர்களை பறித்துக்கொண்டு வந்தார்கள். மனமெல்லாம் அல்லிப்பூக்களாய் மலர்ந்து சிரித்தது.  “வா.. காட்டுக்குள்ளே இன்னும் கொஞ்சதூரம் போவோம்” என்று நடேசன் கூப்பிடவும் எழுந்து நடந்தார்கள். தண்ணீர் தாகமாக இருந்தது. ஓரிடத்தில் அழகிய நீர்ச்சுனை ஒன்று தென்பட்டது. அதில் ஊற்றெடுத்துப் பொங்கிய நீர் வாய்க்கால்வழியாக ஓடி அல்லிக்குளத்திற்கு போய்க்கொண்டிருந்தது.    தாகம்தீர சுனைநீரை உள்ளங்கைகளை குவித்து பருகினால் அதன் சுவை இதுவரை கண்டிராத வகையில் தேங்காய்ப்பாலாய் இனித்தது. உடலோடு மனதெல்லாம் அந்த சுவை நிறைந்து தளும்பியது. இன்னும் கொஞ்சதூரம் காட்டுக்குள் போனபோது நரிகள் ஊளையிடும் சத்தம் அருகில் கேட்டது. ஒரு பெரிய பாறை ஒன்று யானைத்தலை, துதிக்கை பெருத்த உடலுடன் படுத்திருப்பதைப் போல ஓரிடத்தில் இருந்தது. “அய்.ய்.யா..ஆனைப்பாறை” என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்து அந்தப்பாறை மீது ஏறிப்போனார்கள்.  அங்கிருந்து சுற்றிலும் பார்த்தால்  அவர்களது ஊரும் பள்ளிக்கூடமும் தெரிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தைப் பற்றிய பயம் விட்டுப்போயிருந்தது. கணக்கு வாத்தியார் ஒரு எலியைப் போன்ற உருவத்தில் ஓடுவது போலிருந்தது. கடினமான கணக்குகளுக்கும் எளிதாக விடை வந்தது போல் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.  வானத்தில் திட்டுதிட்டாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதன் நிழல் ஆனைக்கல்லை தொட்டுக்கொண்டு போனது. செடிகளில் பூத்திருந்த வண்ணப்பூக்களுக்கு மேல் பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. “குழந்தைகளே.. நன்றாகப்படிக்கிறீர்களா..” யாரோ பேசும் சத்தம் கேட்டது. மனிதர்களே இல்லாத காட்டில் இப்போது யார் பேசுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். ‘கணக்கு வாத்தியார்தான் இங்கேயும் வந்தவிட்டாரோ’ மணிராசுக்கு மின்னலாய் ஒரு எண்ணம் வந்து போனது. பார்த்தால் அருகில் ஒருவருமே இல்லை.  ‘அப்பாடா.. தப்பித்தேன்’ லேசாக மூச்சு வந்தது.  “மணிராசு.. நடேசா.. உங்களைத்தான் கேட்கிறேன்” மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.    இலேசாக பயம் வரவும் “வா.. போயிருவோம்” என்று எழுந்தனர். “அட.. நான் ஆனைக்கல் பேசுகிறேன். தைரியமாக இருங்க” மணிராசும் நடேசனும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.  “மணிராசு.. கவலைப்படாதே. நடேசனை மாதிரி நீயும் நன்றாகப் படிப்பாய். நீங்கள் அடிக்கொரு தடவை இங்கே வந்து போங்க. நான் உங்கள் நண்பன்” என்று சொல்லி மறுபடியும் அமைதியாகப் படுத்துக்கொண்டது. ஆனைக்கல் சொன்னது மாதிரியே இருவரும் அடிக்கொருதடவை அங்கே வருவதும் அதன் மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தார்கள். அவர்களுடைய நட்பில் ஆனைக்கல்லும் சந்தோசமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் வாத்தியார் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் மின்னல்வெட்டுப்போல பதில் சொல்கிறான் மணிராசு. கணக்கு வாத்தியாருக்கு ஆச்சரியமாக இ ரு ந்தது.          “மணிராசு.. எப்படி படிப்பாளி பையனாக மாறினாய். ஞாபகசக்தியும் ரொம்ப நன்றாக இருக்கிறதே. சொல்லிக்கொடுக்கிற பாடங்களை அப்படியே ஒப்பிக்கிறாய்.” “எல்லாம் ஆனைக்கல் கொடுத்த தைரியம்தான்” என்று மணிராசு நடேசனைப் பார்த்து மெளனமாகச் சிரித்துக்கொண்டான்.  அத்திமரக்காற்றும் நீர்ச்சுனையும் ஆனைப்பாறையும் சொல்லிக்கொடுத்த பாடத்தில் கொட்டுக்காய்களும் பிரம்புகளும் எங்கேயோ ஓடிப்போய் ஒளிந்துகொண்டன.       ஜெ.பொன்னுராஜ்  1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • சுதந்தர நதியில் நண்பன்

    ஆங்கிலம் : Gloria Whelan தமிழில் : சுகுமாரன் கடைசி வாத்துகளும் எழுந்து பறப்பதை லூயிஸ் கவனித்தான். டெட்ராய்ட் நதி சீக்கிரத்தில் உறையப் போகிறது. மீன் பிடிக்கும் படகை பாதுகாக்க லூயிஸ் திருப்பினான். இதை எப்போதும் அவனுடைய அப்பா செய்வதுதான். அப்பா வடக்கே வேலையாக சென்று விட்டார். அப்பா போவதற்கு முன்பு அவனிடம் சொல்லியிருந்தார். 'மகனே, தோட்டம் உன்னுடைய பொறுப்பு, நான் என்ன செய்தேனோ அதை நீ செய்தால் போதும்' என்றார். குளிரான டிசம்பர் மாத காற்று 'பியர்ஸ்' மரத்தின் இலைகளை சுருள வைத்திருந்தது. லூயிஸ்-யின் தாத்தா பிரான்சிலிருந்து அமெரிக்கா வந்த போது கொண்டு வந்த மரங்கள் அவை. டெட்ராய்ட் நதியின் ஓட்டத்திலேயே எஞ்சின் படகுகளும் பாய்மர படகுகளும் கடலுக்கு செல்வதை லூயிஸ் பார்த்தான். புதரில் அசைவு ஏற்பட்டது. மானா அல்லது நரியா, எதுவென தெரியவில்லை லூயிஸ் நினைத்தான். 'நீ நண்பனா?' ஒரு குரல் கேட்டது. லூயிஸ் படகை நிறுத்தினான். தப்பித்து ஓடுகிற அடிமைகளின் வார்த்தைகள் அவை, நண்பர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்காக அடிமைகள் சொல்வதாக அவனுடைய அப்பா சொல்லி இருக்கிறார். 'என்ன வேண்டும்?' என்று அவன் கேட்டான். 'சுதந்தரம்'  நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டான் 'நம்பிக்கை இருக்கிறது' என்று பதில் வந்தது. மூடியிருந்த சால்வையை விலக்கிக் கொண்டு ஒரு கருப்பின பெண் புதரிலிருந்து வெளிப்பட்டாள். ஒரு சிறுமி அவளுடன் இருந்தாள். ஒரு பையனும் வந்தான். அவனுக்கு லூயிஸ் வயது, 12 அல்லது 13 இருக்கும். 'கடவுள் உன்னை காப்பாராக' என்று அந்தப் பெண் சொன்னாள். 'என் பெயர் சாரா, என் மகள் லூசி, என் மகன் டெய்லர்' என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். டெட்ராய்டு பாப்டிஸ்ட் ஆலயத்தில் லூயிஸ்சின் தந்தையைப் பார்த்த போது அவர் உதவுவதாகச் சொன்னார். தப்பித்து ஓடும் அடிமைகளைப் பிடிப்பதற்காக இரத்த வெறி பிடித்தவர்கள் எங்களைத் தேடுகிறார்கள். இந்த நதியைக் கடந்து கனடா நாட்டிற்கு சென்று விட்டால் சுதந்தரம் கிடைத்து விடும் என்று அந்த பெண் கூறினாள். இரவு நேரத்தில் இந்த நதியைக் கடப்பது ஆபத்தானது. அடிமைகள் தப்பித்துக் செல்வதற்கு உதவி செய்தால் சட்டப்படி உதவுபவர்களுக்கும் தண்டனை உண்டு. அதனால் அப்பாவை அம்மா உதவ வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டது லூயிஸ்க்குத் தெரிந்திருந்தது. ஆனால் எவ்வளவு சொன்னாலும் அப்பா கேட்பதில்லை. ஒரு ஆத்மா அடிமை வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்பார். 'அப்பா இங்கே இல்லை. நதி ஐஸ்-யாக உறைந்து விட்டது. காற்றும் பலமாக அடிக்கிறது. மூன்று மணி நேரம் பயணமாக வேண்டும்' என்றான் லூயிஸ். 'தண்ணீர் அதிக குளிராக இல்லை, காற்றும் பலமாக வீசவில்லை. நாங்கள் ஏற்கனவே இரண்டு நதிகளைக் கடந்து வந்தோம். டெட்ராய்ட் நதி சுதந்தர நதி. இதுதான் எங்கள் கடைசி வாய்ப்பு. எங்கள் எஜமானர் இந்த குழந்தைகளை விற்று விட்டார். என் பையன் டெய்லர் ஒரு குதிரை அல்லது மாடு மாதிரி அவர்களால் நடத்தப்படுகிறான். நீ எங்களை அழைத்துக் செல்லாவிட்டால் இந்த நதியில் குதித்து இறந்துப் போவோம்' என்றார் சாரா. அந்தப் பையன் லூயிஸிடம் முகம் சுளித்தான். 'நான் பந்தயம் வைக்கிறேன். என்னால் படகில் இந்த நதியை கடக்க முடியும்' என்றான். அந்தப் பையனின் சவால் லூயிஸ்-யைக் குத்தியது. 'உன்னால் முடியாது. எங்கெங்கே நீரோட்டம் மற்றும் ஆழமற்ற பகுதிகள் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்' என்றான். அந்தப் பெண்மணி நடுங்கினாள். அந்த சிறுமி சத்தமில்லாமல் அழுதாள். 'யாருக்கும் சத்தம் கேட்காமல் எப்படி அழுவது என்பதை அவள் கற்று வைத்திருக்கிறாள்' என்று லூயிஸ் நினைத்தான். அப்பா இப்போது இருந்தால் என்ன செய்திருப்பார் என்பது லூயிஸ்க்குத் தெரியும். 'இங்கே காத்திருங்கள்' என்றான் அவன். வெதுவெதுப்பான மேலாடையைப் போல் இருந்த சமையலறையின் சூடு லூயிஸ்யைச் சூழ்ந்தது. கனலாக இருந்த கரிகளுக்கு மேல் 'கெட்டில்' தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை மீனின் குழம்பு வாசனை அவனின் மூக்கை துளைத்தது. அந்த வெள்ளை மீன் அவன் பிடித்தது. 'கிட்டதட்ட இரவு உணவு தயாராகி விட்டது, லூயிஸ்' என்று அம்மா சொன்னார். 'படகில் ஒரு நிமிட வேலையிருக்கிறது. என்னுடைய 'ஸ்கார்ப்'யை எடுக்க வந்தேன்' என்றான் அவன். லூயிஸ் படுக்கையறைக்குப் போனான். படுக்கையில் கிடந்த ஸ்வெட்டரையும் மேலாடையையும் எடுத்துக் கொண்டான். பிறகு அவன் சமையலறைக்கு வந்தான். லூயிஸ் அம்மாவுடன் உரத்த குரலில் பாடி மேசையை சுற்றி நடனமாடினான். நடனத்தின் போது அம்மா சிரித்துக் கொண்டாள். உடம்பு வலியால் சிறிது முணங்கவும் செய்தாள். அவளுக்கு குளிராகவும் இருந்தது. அவன் கதவை சிறிது அம்மாவுக்கு நேராக திறந்தான். 'கவலை வேண்டாம் அம்மா, என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருள் என்பது பகல் வெளிச்சத்தை உள்ளே திருப்பும்' என்றான். அம்மா புன்னகையுடன், 'உன் அப்பா எப்போதும் இப்படித்தான் சொல்வார்' என்றாள். கம்பளி உடைகள், சாக்லேட், ரொட்டி ஆகியவற்றை லூயிஸ் சாராவுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தான். லூயிஸ்யைப் போலிருந்த டெய்லர் மேலாடையை போடவில்லை. லூயிஸ் அவனை போட சொன்னான். 'அதைப் பற்றி கவலை வேண்டாம். அவன் வலுவானவன்' என்றார் சாரா. வெள்ளையினத்தவர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று நான் அவளிடம் சொல்லியிருக்கிறேன்' என்றும் சொன்னார். இரண்டு பையன்களும் படகை தண்ணீரில் தள்ளினார்கள். சாராவும் லூசியும் படகில் தாவி ஏறினார்கள். 'உனக்கு துடுப்பு போட தெரியுமா?' என்று லூயிஸ் டெயிலரிடம் கேட்டான். 'என்னால் முடியும், எஜமானர் ஹார்மன்னுடன் மீன் பிடிக்கச் செல்லும் போது துடுப்பு போட்டிருக்கிறேன். சகதியான ஏரியில் கூட செலுத்தியிருக்கிறேன்' என்றான் டெயிலர். லூயிஸ்யும் டெயிலரும் துடுப்புகளை எடுத்தனர். பலமான நீரோட்டத்திலும் வலிமையான கரங்களால் துடுப்பு போட்டார்கள். அந்த நதி லூயிஸ்க்கு பகலைப் பொறுத்த வரை நண்பன், இரவிலோ ஆபத்தானவன். துடுப்புகளை நீரோட்டத்தை எதிர்த்து மேலும் கீழும் அசைக்கும்படி லூயிஸ் சொன்னான். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தில் அடித்தது. தோட்ட வீட்டின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது. 'எப்படி இங்கே வந்தீர்கள்?' என்று சாராவை லூயிஸ் கேட்டான். 'முதலில் ஓஹியோ நதியைக் கடந்தோம். ஒவ்வொரு இடமாக பாதாள ரயிலில் வந்தோம்' என்றாள் சாரா. 'தப்பியோடும் அடிமைகளைப் பிடிப்பவர்கள் எங்களை தொடந்தார்கள்' என்றாள் லூசி. 'மோப்பம் பிடிக்க அவர்கள் நாய்களையும் அனுப்பினார்கள்' என்றான் டெய்லர். 'சில நல்ல மனம் படைத்தவர்களால் நாங்கள் இங்கு வரைக்கு வந்தோம்' என்றாள் சாரா. படகு மெல்லிய ஐஸ் கட்டிகளுக்கிடையே செல்ல தடுமாறியது. பகல்நேரமென்றால் லூயிஸ்க்குத் துணையாக மீன் பிடிக்கும் படகுக் காரர்களும் இருப்பார்கள். லூயிஸ்-சின் பற்கள் கிட்டித்தன. விரல்கள் மரத்தன. சாரா லூசியை குளிர் காற்றிலிருந்து காப்பாற்ற துணியால் போத்தினார். தோட்ட வீட்டின் விளக்கு வெளிச்சம் மறைந்து விட்டது. ஆனால் வேறொரு வெளிச்சம் நதியில் தெரிந்தது. அது கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. கண்காணிப்பு படகிலுள்ளவர்கள் கண்டு பிடித்தால் லூயிஸ் ஜெயிலுக்கு அனுப்பப்படுவான். சாராவும் அவளுடைய பிள்ளைகளும் மறுபடி அடிமைகளாக்கப்படுவார்கள். 'படகை நிறுத்து. எல்லோரும் அமைதியாக இருங்கள்' என்றான் லூயிஸ். படகு நிறுத்தப்பட்டு நதி நீரில் மிதந்துக் கொண்டிருந்தது. ஆண்களின் பேச்சு சத்தம் கண்காணிப்பு படகிலிருந்து வந்தது. ஆனால் கண்காணிப்பு படகின் வெளிச்சம் அவர்கள் மீது படவில்லை. இப்போது பேச்சு சத்தம் கேட்கவில்லை. கண்காணிப்பு படகு தொலைவுக்கு சென்றிருந்தது. பையன்கள் மீண்டும் துடுப்பு போடத் தொடங்கினர். அவர்களின் தோள்கள் வலியெடுக்கத் தொடங்கின. டெய்லர் லூயிஸ்க்காக வருந்தினான். அங்கிருந்த மெளனத்தைக் கலைக்க டெய்லர் லூயிஸ்யிடம் கேட்டான். 'இந்த நதியில் எந்த மாதிரியான மீன்கள் பிடிப்பாய்?' 'வெள்ளை மீன், ஹெரிங், பெர்ச், ஸ்டெர்ஜன் வகை மீன்களைப் பிடிப்போம். அப்பா 80 பவுண்டு எடையுள்ள ஸ்டெர்ஜன் மீனைக் கூட பிடித்திருக்கிறார்' என்றான் லூயிஸ். 'அது பெரிய மீன். அதைப் பிடிக்க தனி பலம் வேண்டும். ஏரிகளில் மீன்களைப் பிடிக்க வலைகளை அமிழ்த்தி வைப்பார்கள்' என்றான் டெய்லர். 'காற்று அவர்களுக்கு எதிராக இருந்தது. தண்ணீர் ஐஸ் கட்டிகளாக வலுப்பெற்றிருந்தது. நதியில் படகு வலுக்கி செல்வது போலிருந்தது. படகில் இருப்பவர்களை பத்திரமாக கரை சேர்க்க லூயிஸ் அப்பாவை நினைத்துக் கொண்டான். சாரா ஒரு பாட்டு பாடத் தொடங்கினார். பிள்ளைகளும் சேர்ந்துப் பாடினார்கள். 'ஓ! கடவுளே, எங்களை மூழ்குவதிலிருந்து காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!'  படகு மேலும் கீழும் தாழ்கிறது. மூழ்குவதிலிருந்து காப்பாற்றுங்கள் தேவதைகள் வருவதைப் பார்க்கிறேன். காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!' என்று அவர்கள் பாடினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு லூயிஸ்யும் சேர்ந்து பாடினான். காற்று பாட்டின் வார்த்தைகளை அவர்களுக்குப் பின்னால் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் அவர்கள் வெளிச்சத்தைப் பார்த்தார்கள். 'இன்னொரு கண்காணிப்பு படகா?' என்று டெய்லர் திகைத்தான். ஆனால் அந்த வெளிச்சம் நிலையாக தெரிந்தது. 'அது கனடா' என்று லூயிஸ் கத்தினான். அவர்கள் கனடாவின் கரைக்கு வந்து விட்டார்கள். லூயிஸ்யும் டெய்லரும் வெளியே குதித்து படகை கரைக்கு இழுத்தார்கள். அருகிலுள்ள ஒரு தோட்ட வீட்டின் கதவைத் தட்டினான் லூயிஸ். வீட்டிலுள்ளவர்கள் அவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டால் என்ன செய்வது? லூயிஸ்க்கு மூச்சே நின்றது. ஆனால் வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஆணும் பெண்ணும் வரவேற்றார்கள். உணவளித்தார்கள். அன்றிரவு லூயிஸ்யை தங்கச் சொன்னார்கள். 'உன்னால் இந்த இரவில் திரும்பி போக முடியாது' என்றான் அந்த மனிதன். 'நான் போக வேண்டும். நான் படகில் சென்றிருப்பது அம்மாவுக்குத் தெரியும். நான் திரும்பி போகாவிட்டால் மூழ்கி விட்டதாக அம்மா நினைப்பார்கள்' என்றான் லூயிஸ். சாரா அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். லூசி அவனின் கால்களைத் தழுவிக் கொண்டாள். இரு பையன்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள். 'நான் திரும்ப வருவேன். இருவரும் சேர்ந்து கோடையில் ஸ்டெர்ஜன் மீனைப் பிடிப்போம்' என்று லூயிஸ் உறுதியளித்தான். அவர்களை சுதந்தரமாக விட்டுவிட்டு லூயிஸ் கிளம்பினான். லூயிஸ்சின் முகத்தில் குளிர் காற்று அடித்தது. துடுப்பால் ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு லூயிஸ் படகைச் செலுத்தினான். இப்போது படகு எடையற்று இருந்தது. ஓட்டுவது சுலபமாக இருந்தது. அவன் மட்டும் தனியாக இருந்தது பயமுறுத்தியது. டெய்லரின் துணையை நினைத்துக் கொண்டான். அவன் பாடினான். அது துணையாக இருந்தது. 'படகு கவிழாமல் காப்பாற்றுக' என்ற வார்த்தைகள் காற்றில் கலந்து படகைத் தொடர்ந்தது. சாராவின் குரலையும் பிள்ளைகளின் குரலையும் கேட்டான். இருட்டில் தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. காற்று கூட அவன் வருகையை தெரிவித்துக் கொண்டிருந்தது. ஐஸ் கட்டிகளை உடைத்துக் கொண்டு படகு முன்னேறியது. அவனுடைய அம்மா கரையில் காத்திருந்தார். கரையில் இறங்கியதும் அம்மா அவனை அணைத்துக் கொண்டார். அவன் சாராவையும் லூசியையும் டெய்லரையும் பற்றி அம்மாவிடம் சொன்னான். 'அப்பா திரும்பி வந்தவுடன் சொல்வேன். அப்பா, நீங்கள் நினைத்ததை நான் செய்துவிட்டேன்' லூயிஸ் இதை அம்மாவிடம் சொன்னான். பின் குறிப்பு: 1850 டிசம்பர் மாதம். டெட்ராய்ட் நதி பனியால் உறைந்து விடும். அதில் படகுப் பயணம் தடை செய்யப்படும். இந்நிலையில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற கனடாவிற்கு தப்பியோடும் சாரா, அவளுடைய இரண்டு பிள்ளைகளைப் படகில் ஏற்றுக் கொண்டு ஆபத்தான படகுப் பயணம் செய்கிறான். 15 வயது சிறுவன் லூயிஸ். அவன் வெள்ளை இனத்தவன். லூயிஸ்சின் அப்பா படகோட்டி. வெளியூர் சென்றிருந்தார். அப்பா இருந்திருந்தால் அடிமைகள் விடுதலை பெற உதவியிருப்பார் என்று நினைத்து ஆபத்தான இந்த முடிவை லூயிஸ் எடுக்கிறான். 'சுதந்தரநதியில் நண்பன்' இச்சிறுகதை உணர்ச்சிவேகம், இரக்கம், தைரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இக்கதையை எழுதிய குளோரியா வீலன் விருதுப் பெற்ற பெண் எழுத்தாளர். அவருடைய இன்னொரு நூலான Homeless Bird தேசிய விருதை வென்றது. அவர் தனது கணவர் ஜோவுடன் வட மிச்சிகனில் வசிக்கிறார். சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.

  • பேசும் கடல் - 8

    குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் இயல்பு உண்டு.  அமுதாவும் இனியனும் இதில் விதிவிலக்கு இல்லை.  கேள்விகள் கேட்பதால்  அவர்களுக்கு பலத்தெளிவுகள் கிடைக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. பல நேரங்களில் குழந்தைகளின் கேள்வியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். கேள்வி கேட்கும் போது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மேம்படுகிறது. சரியான, வியப்பான பதில் கிடைக்கும்போது நம்பிக்கை கூடுகிறது.  கடல் பாட்டியை இனியனும் அமுதாவும் அதிகம் தேடத் தொடங்கிவிட்டார்கள். தினமும் கடற்கரைக்கு வருவது, கடல் பாட்டியோடு உரையாடுவது, கேள்வி கேட்பது அவர்களுக்கு பிடித்தமானதும், நெருக்கமானது என்றாகிவிட்டது. "இனியன் நம்ப அப்பாவுக்கு 'பாடே' இல்லையாம், அம்மா சொன்னாங்க, அப்போ நமக்கு காசு கிடைக்காதுல்ல......" அமுதா இனியனிடம் கேட்டாள். " ஆமாம் அமுதா..... இந்த மாதம் முழுவதும் 'பாடே' இல்ல. கடல்ல மீன்கள் எல்லாம் வெலங்க போயிடும். குளிர், மழை, காற்று இருப்பதால் நம்ம அப்பாவால வெலங்க போக முடியாது அதான் 'பாடு' இல்ல. இனியன் நீண்ட விளக்கம் கொடுத்தான் .  என்ன பேரப்பிள்ளைகளா? இப்பெல்லாம் நீங்க இரண்டு பேருமே கேள்வி பதில முடித்துக் கொள்கிறீர்களா? பெரும் இரைச்சலுடன் அலையடித்து ஓய்ந்தது. " பாட்டி...... பாட்டி உங்க மேல எங்களுக்கு கோபம்....."  அமுதா செல்லமாக கூறினாள்.  அவள் முகத்தை திருப்பியும் கொண்டாள். காற்றில் முடி  பறந்தது. " ஆஹ.... கோபமா... ஏன் ?" எங்க அப்பா தொழிலுக்கு வந்த இந்த மாசம் 'பாடே' இல்ல தெரியுமா? டிசம்பர் மாதம் தான் அரையாண்டு விடுமுறை. கிறிஸ்மஸ் புத்தாண்டு புது டிரஸ் எல்லாம் எடுக்கிற மாசம், பாடே இல்ல..... நீங்க எங்களுக்கு நிறைய பாடு தரலாம் தானே". படபடவென வெடித்தாள் அமுதா. " ஆமாம் பாட்டி...... தினம் தினம் உழைக்கிற அப்பாவுக்கு பாடு இல்லன்னா கஷ்டம் தானே?  நிதானமாக கேட்டான் இனியன். " அது சரி..... ரெண்டு பேரும் அதான் கோபமா இருக்கீங்களா?  நாம கொஞ்சம் பேசுவோமா? " சரி சரி ....."கோரஸாக கூறினார்கள். "  நாமெல்லாம் யாரு? கடல் பாட்டி கேள்வியைத் தொடங்கினாள். " மீனவர்கள்" அமுதா பட்டென  கூறினாள். " very good மீனவர்கள் கடல்ல என்ன செய்வாங்க...." " மீன்பிடிப்பாங்க, என்ன பாட்டி நீ இப்படி கேக்குற இனியன் உரிமையோடு கேட்டான். " இல்ல....."  'அய்யோ பாட்டி..... குழப்புறீங்க' இருவரும் மணல்ல அமர்ந்து கொண்டார்கள். "நெய்தல் பூர்வகுடி  மீனவர்கள் கடலில் மீன்களை தேடிச் சென்று பிடிப்பதில்லை. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வாழும் காட்டுவாசிகள் மரங்களை வெட்டுவதில்லை. மரங்களிலிருந்து விழும் குச்சிகளை தான் பொறக்குவார்கள். அது போல மீனவர்கள் என்னிடம் (கடல்) மீன்களை பிடிக்க வேண்டும் என்று வருவதில்லை. " மீன்பிடிக்க வரமாட்டாங்களா? அமுதா குறுக்கிட்டாள். " ஆமாம்..... அவர்கள் வலைகளைப் போடுவார்கள் எது 'படுகிறதோ' அதை மட்டும் தமக்கு எடுத்து வருவார்கள். மீனவர்கள் தங்கள் தொழிலில்  இலாப நட்டம் பார்க்க மாட்டார்கள்.  "பாடு உண்டா" என்று தான் பார்ப்பார்கள்". கடல்பாட்டி உணர்வுபூர்வமாக விளக்கினாள். " பாடு..... விரிவாக சொல்லுங்க பாட்டி" அமுதா  "எவ்வளவு மீன் பிடிச்சீங்கன்னு யாரும் கேட்க மாட்டோம். 'என்ன பாடு'  'என்ன பட்டிருக்கு என்று தானே கேட்போம்." " ஆமாமா.. ஆமாம்.... " மீனை நாம் பிடித்தால் இயற்கையை நாம் வெல்வது என்று பொருள்.  மீன் அதுவாக வலைகளில் பட வேண்டும், அதுதான் நமக்குரியது.  இயற்கையை நம்பி வாழ்பவர்கள் எப்போதும் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நமக்கு கிடைப்பது இயற்கையின் கொடை என்று நம்புவார்கள். அதனால் தான் கிடைத்ததை 'பாடு' என்கிறார்கள். " பாட்டி சூப்பர்......" " 'படு... படுவது... பாடு' என்று பொருள். என்ன படுக்கிறதோ அதுதான் பாடு. அதற்குமேல் அவர்கள் சலிப்படைவது இல்லை.  மறுநாள் மீண்டும் கடலுக்கு செல்வார்கள். " உண்மைதான் பாட்டி, சில நேரம் நிறைய மீன்பட்டால் வலுத்த பாடு என்று அப்பா சொல்வார், மீன் படவில்லை என்றால் சுருக்கப்பாடு என்பார்கள்." இனியன் கூறினான். " எனக்கு புரிஞ்சத சொல்லட்டுமா?" அமுதா கேட்டாள். " பாடு உண்டா? என்றால் படுதல் உண்டா என்று அர்த்தம்.  மீன் பிடிக்கிறோம் என்றால் நாம் பிடிக்கிறோம் என்று பொருள்.  மீன் பட்டிருக்கிறது என்றால் இயற்கையே கொடுக்கிறது என்று பொருள்‌."  இப்போ புரியுதா கடலை நம்பி வாழ்பவர்கள் தங்கள் சொல்லில் கூட எவ்வளவு நன்றி உணர்வோடு வாழ்கிறார்கள். அதான் என் மக்கள். கடல்ல பாடு இல்லனா சேர்ந்து போவார்கள் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்."  என்று பூரிப்புடன் கடல் பாட்டி பேச ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அமுதாவும், இனியனும். – கடல் பேசும்

  • வெல்லம் தின்னால் ஜாலி (நட)

    1 மேல ஏறுனா மலை கீழ விழுந்தா மழை 2 வெல்லம் தின்னால் ஜாலி  வெள்ளம் வந்தால் காலி 3 கொழம்புல கொதிக்குது கோழி  கூட்டமாய் ஆடலாம் கோலி  4 நிறைய தின்னு பழம் அப்பதான் கிடைக்கும் பலம் 5 நாரை மூக்கு அலகு  நாந்தான் எப்பயும் அழகு 6 பாதியா பிச்சா அரை படுத்துத் தூங்குவது  அறை  7 சுவற்றில் போவது பல்லி  படிக்கப் போனா பள்ளி 8 மனுசனுக் கிருப்பது தலை மரத்தில்  இருப்பது தழை 9 விட்டெறிவது கல் ஊத்திக் குடிப்பது கள் சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

  • சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!

    புத்தகங்களோடு ஒரு இன்பச் சுற்றுலா - 4 நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது. தெருவுக்கே கூட சின்ன அளவு குடைராட்டினத்தைத் தள்ளிட்டு வர்றாங்க. செங்குத்தா மேலே போயிட்டு, கீழே  இறங்குற ராட்டினத்தில அடியிலே இருக்கிறப்ப கைக்குட்டையையோ வேற ஏதாச்சும் ஒரு பொருளையோ தரையில போட்டுட்டு, மறுபடி பெட்டி கீழே வர்றப்ப அதை எடுக்கிறதே ஒரு சாகசமா இருக்கும். இப்ப, சுற்றுலா மையங்களா இருக்கிற மனமகிழ் பூங்காக்கள்ல தொடர்வண்டி போலவே பல பெட்டிகளோட இருக்கிற ரோலர் கோஸ்டர்  எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. திறந்த நிலையில் இருக்கும் பெட்டிகளோட இருக்கைகள்ல உட்கார்ந்துகிட்டா, வண்டி புறப்பட்டு, வளைஞ்ச வளைஞ்சு திரும்புற தண்டவாளங்கள்ல வேகமாகப் போகும். ஏறி இறங்குற இடங்கள் நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கும். பயமா இருந்தாலும் அந்தச் சவாரி வேணாம்னு  மறுக்கிறவங்க  ரொம்பக் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க. ஆ…ஈ… ஊ… ஏ… ஓ… என்று கூச்சல் போட்டுக்கிட்டே அதிலே பயணம் செய்யத்தான் பொதுவா எல்லாரும் விரும்புவாங்க. அந்த ரோலர் கோஸ்டர் பயணத்தை கணினிக் கணித முறையில் நிரலாக்குவது பற்றி ஒரு சுவையான புத்தகம் வந்திருக்கிறது. நம்ம கைப்பேசியிலோ, இல்லாட்டி தொலைக்காட்சி விளையாட்டுக்கு உள்ளேயோ நுழையுறதுக்கு ஒரு கடவுச் சொல் பயன்படுத்துறோம். அந்தக் கடவுச்சொல் ஒரு கோட், இல்லைன்னா நிரலாக்கம்னு சொல்லலாம். நாம பயன்படுத்துற எல்லாத்தையுமே ஒரு முறையான வரிசைப்படியான செயலுக்கு உட்படுத்த முடியும். அதாவது நிரலாக்கம் அல்லது கோட் செய்ய முடியும். என்ன பயன்? அப்படி கணினி வழியில் செய்கிற நிரலாக்கத்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? அதைப் பத்திப் பேசுற புத்தகம்தான் ‘ஹவ் டு கோட் எ ரோலர் கோஸ்டர்’. தமிழ்ல சொல்றதுன்னா, ‘ஒரு சறுக்கு ரயிலை நிரலாக்கம் செய்வது எப்படி’. இந்த அறிவியல், தொழில்நுட்பத் புத்தகத்தை, ஒரு கதைப் புத்தகம் போல சுவைபட  எழுதியிருப்பவர் ஜோஷ் ஃபங்க்.  சிறார் அறிந்துகொள்ள வேண்டிய நடைமுறை அறிவியலுக்கு எளிதான கதவைத் திறந்துவிடுதுன்னு இந்தப் புத்தகம் பத்திச் சொல்றாங்க.  “கோடிங்” –இப்படி ஆங்கிலத்திலேயும் “கணினி நிரலாக்கம்” –இப்படித் தமிழ்லேயும் சொல்றோமே, இது எதிர்காலத்துல கண்டிப்பா தெரிஞ்சி வைச்சிருக்க வேண்டிய அடிப்படையான, இன்றியமையாத ஒரு திறன். அதை சலிப்பூட்டாமல், ரோலர்கோஸ்டர்  சவாரி எப்படி சிலிர்ப்பும் சுவையுமாக இருக்குமோ அதையே தலைப்பாகவும் வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஃபங்க்.  புத்தகத்தின் ஒரு சிறப்பாக, “இப்படி இருக்குமானால்” (இஃப்), “அதன் பின்” (தென்) என்ற கூற்றுகளை நூலாசிரியர்   வரிசைப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுறாங்க நூல் திறனாய்வாளர்கள். அவ்வாறு வரிசைப்படுத்துற செயலையும், அதற்குப் பிறகு ஏற்படும் சுழற்சி (லூப்) எனும் அடிப்படைக் கூறுகளையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் விளக்குறதா அவங்க சுட்டிக்காட்டுறாங்க. அன்றாட வாழ்க்கையிலேயே கணினி நிரலாக்கம எப்படிப்  பயன்படுதுன்னு விளக்குறதன் மூலம், தொழில்நுட்பம் என்பது வெறும் கணினித் திரை அல்ல, அது நம்மைச் சுற்றியுள்ள உலகம்னு இந்தப் புத்தகம் புரிய வைக்குது. இதுவும் புத்தகத்தோட ஒரு சிறப்புதான்னு  சொல்றாங்க.                             ரோலர் கோஸ்டர் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்தானே? அதையே பின்னணியா வைச்சிக்கிட்டு, அதன் பாதுகாப்பை உறுதி செய்றதுக்கும், சரியான நேரத்தில் சவாரியைத் தொடங்குறதுக்கும்,  வேகத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும் இந்தக் கணினி நிரலாக்கம் மிக முக்கியமானது. இது போன்ற வெற்றிகரமான நூல்களின் வெற்றிக்குப் பெரும்பாலும் எளிய மொழியும், வண்ணமயமான ஓவியங்களும் முக்கியமா பங்களிக்கும். இந்த நூலும் அப்படிப்பட்ட தெளிவான விளக்கப் படங்களைக் கொண்டிருக்குது. இது கடினமான கருத்துகளைக் கூட சிறுவர்கள் புரிந்துகொள்ள உதவுதுன்னும் பாராட்டியிருக்காங்க. குழந்தைகளை வெறும் வாசகர்களாக நிறுத்திவிடாமல், இளம் கண்டுபிடிப்பாளர்களாக  மாற்றத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்றாங்க. எல்லாருக்குமான புத்தகம் புத்தகத்துல இருக்கிற இன்னொரு முக்கியமான சிறப்பு என்ன தெரியுமா? பொதுவா நம்ம ஊர்லேயும் மத்த எல்லா நாடுகள்லேயும் பெண், ஆண் ஆகிய இரண்டு பாலினங்களை மட்டும்தான் அடையாளப்படுத்துவாங்க. ஆண்–பெண் சமத்துவம்னு அவங்களை அறியாமலே ஆணைத்தான் முதல்ல குறிப்பிடுவாங்க. இந்தப் புத்தகம், இந்த இரண்டு பாலின வரையறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக்க விரும்பாதவங்க இருக்காங்க. இருவகைப் பாலினமும் அல்லாதவங்களா வாழுற “நான்–பைனரி” மனுசங்களும் தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட மாதிரி, அவங்களையும் உள்ளடக்கியதா  எழுதப்பட்டிருக்காம். அதுக்காகவே ஜோஷ் ஃபங்க்கைப் பாராட்டலாம்னு தோணுதுல்ல? சரி, இப்படிப்பட்ட பாலின சமத்துவ எண்ணம் எப்படி வந்திருக்கும்? “நிரலாக்கம் செய்திடும் சிறுமிகள்” (கேர்ஸ் ஹூ  கோட்) என்ற கருத்துடன் ஒரு திட்டத்தை அமெரிக்காவிலே தொடங்கினாங்களாம். படிப்படியா அது மத்த நாடுகளுக்கும் பரவியிருக்காம். நம்ம நாட்டிலேயும் இதைப் பல இயக்கங்கள் ஏற்றுக்கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாத சமத்துவம் என்ற கருத்தைப் பரப்பிட்டு இருக்காங்க. அந்த இயக்கத்தோட ஒரு பகுதியாத்தான், நான்–பைனரி மக்களையும் சேர்த்துக்கிடணுன்னு வலியுறுத்துறாங்க. அதை ஏத்துக்கிட்டுதான்  ஜோஷ் ஃபங்க் தன் புத்தகத்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி எழுதியிருக்கிறாராம். இந்த நூல் 2019ஆம் ஆண்டுல வெளிவந்துச்சு. முதல்ல சொன்ன திட்டத்துல பல புத்தகங்களைத் தொடர்ச்சியா வெளியிட்டுட்டு வர்றாங்க. இதை வெளியிட்டிருக்கிற பதிப்பகத்தோட பெயர் ‘பெங்குயின் யங் ரீடர்ஸ்’. உலகம் முழுக்க இந்த இயக்கத்தோட புத்தகங்கள் பல லட்சக்கணக்கான படிகள் வித்திருக்காம். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை உலக அளவில் அதிக விற்பனையான புத்தகங்களோட பட்டியல்ல, இந்தத் தொடரையும் சேர்த்திருக்காங்க. பேர்ளும் பாஸ்கலும் கதைப் புத்தகம் இல்லைன்னாலும் கூட, இதிலே  ஒரு பொண்ணு வர்றாங்க. அவங்க பேரு பேர்ள். அவங்களுக்குத் துணையா ஒரு ரோபோ வருது.  அதோட பேரு பாஸ்கல். அவங்க ரெண்டு பேரும் ஒரு மனமகிழ் பூங்காவுல இருக்கிற ரோலர் கோஸ்டரிலே ஒரு சுத்து சவாரிக்கு  எவ்வளவு பேரை ஏத்திக்கிடறது, எத்தனை அடையாள வில்லை விக்கிறது, அடுத்த  சவாரியைத் தொடங்குறதுக்கு எத்த நேரம் எது அப்படீங்கிறதையெல்லாம், கணினியைப் பயன்படுத்தி நிரலாக்கம் செய்றாங்க.  சறுக்கு ரயிலை இயக்குறவங்களுக்கும், அதிலே பயணம் செய்ய விரும்புறவங்களுக்கும் இவங்களோட நிரலாக்கம் ரொம்ப உதவியா இருக்கு. இதைச் சொல்றப்பவே, நிரலாக்கம்னா என்ன, அது எங்கேயெல்லாம் பயன்படுது, இதை எப்படி சிரமமில்லாம கத்துக்க முடியும்கிற  விளக்கங்கள் கணினித் தரவுத்தளங்களின் தகவல்கள் போல அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்குது. கதை வாசிக்கிறது போலவே சுவையாவும் இருக்கின்றன. அந்த ரோபோவுக்கு பாஸ்கல்னு பெயர் வைச்சிருக்காங்க இல்ல? பிரெஞ்சு நாட்டவரான பிளேஸ் பாஸ்கல் என்ற கணித மேதையின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்குது. 17ஆம் நூற்றாண்டுல வாழ்ந்தவரான அவர் கணித ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய பங்களித்தவர்.  இன்றைய கணினிக்கெல்லாம் முன்னோடியாக இயந்திரவியல் கணக்குக் கருவியை உருவாக்கியவர். நூலாசிரியர் ஜோஷ் ஃபங்க் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்குமான படைப்புகளுக்குப் புகழ்பெற்றிருப்பவர். மிகவும் அனுபவம் வாய்ந்த ஓர் எழுத்தாளர். கல்வி சார்ந்த, அறிவியல் தொடர்பான, வரலாறு பேசுகிற, கணிதத்தை விளக்குகிற புத்தகங்களை ஏராளமா எழுதியிருக்கிறாராம். வாய்ப்பு உள்ளவங்க, இணையத்தளத்திலே ஒரு சிற்றுலா போய் இந்தப் புத்தகத்தைப் பெற்றுப் படித்துப் பயனடையலாம். அ.குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • நெல்லிக்காய்

    அழகு குண்டு நெல்லிக்காய் ! மெழுகு பளிங்கு நெல்லிக்காய் ! வெளிர் பச்சை நெல்லிக்காய் ! களிப்பாய் உண்ண நெல்லிக்காய்! அரிஅரியாய் நெல்லிக்காய் ! எளியோர் ஆப்பிள் நெல்லிக்காய்! சாறு குடிக்க நெல்லிக்காய் ! சாதம் செய்ய நெல்லிக்காய் ! சத்து நிறைந்த நெல்லிக்காய் ! ரத்தம் கூட்டும் நெல்லிக்காய் ! தித்திக்கும் நெல்லிக்காய் ! தினமும் தின்ன நெல்லிக்காய் ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

  • யூனிசெப் பிரகடனம் - சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் - 9

    ஒரு குடும்பம். சிறியது; ஆனால் அழகானது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் இணையரின் குடும்பம் அது. இருவருமே படித்தவர்கள். இருவரும் நவீனமான பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் பணி செய்பவர்கள். கை  நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள்;ஆனால், அதற்குப் பல மடங்கு அதிகமாக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி  நேரத்திற்கும் மேலாகப் பணிகளில் கடும் உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள். எப்போதும் மனமும்,உடலும் அழுத்தம் தாங்காமல் துவண்டு போகும் நிலையில் இருப்பவர்கள்.  பணப் பற்றாக்குறை இல்லைதான்; ஆனால், தாங்கமுடியாத வேலைப்பளு, உடல்-மன அழுத்தங்களின் விளைவாக இருவருக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வரும் தமிழ் இலக்கிய மொழியில் சொன்னால், 'ஊடல்'கள் வரும்! திருமணமாகி இரண்டாவது ஆண்டில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மிக அழகான பெண் குழந்தை. குறுகுறு நடந்து, சிறு கைகள் நீட்டி மழலை மொழியில் பேசிக் களிப்பூட்டும் சிறுமியாக அக்குழந்தை வளரத் தொடங்கியது. பெண் குழந்தை என்பதால் கணவனுக்குச் சற்றே ஏமாற்றம்;வருத்தம்;ஏக்கம். அந்த உணர்வுகள் அவரின் தாயாரின் தூபம் போடுதலால் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெருகி வளர்ந்தன.  அலுவலகம் விட்டு வரும் போதே அலுப்பும் சலிப்புமாக வரும் கணவன்; வீட்டிலோ குழந்தையைப் பார்த்துக்கொண்டு சமையலில் கவனம் செலுத்தியவாறு பரபரவென்று இயங்கும் மனைவி. "இவ்வளவு நேரமாகுது, ஒரு காப்பி குடுக்கக்கூட உன்னால முடியலையா?" என்பான் கணவன். முதலில் கொஞ்ச நாள்கள் வரை ஒரு பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, " இதோ கொண்டு வர்றேங்க" என்று காப்பியுடன் போய்க் கொண்டிருந்த மனைவிக்கு, ஓரிரு சந்தர்ப்பங்களில் இயலாமை காரணமாகக் கோபம் வந்தது. முதலில் இலேசான முணுமுணுப்புடன் நின்று போன அந்தக் கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியது.  போதாக்குறைக்கு மனைவியின் நிறுவனத்தில் வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. பெண்களை இரவு ஷிப்டுகளிலும் வேலைக்கு வருமாறு செய்யலாம் என ஒரு நீதிமன்றத்தீர்ப்பு வந்தாலும் வந்தது, அந்தப்பெண்ணின் நிறுவனம் அவளது வேலை நேரத்தை மாலை நான்கு  மணியிலிருந்து இரவு மூன்று மணி வரை என மாற்றியது. வீட்டில் பூகம்பம். பெண்ணுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. குழந்தை அம்மாவுக்காகத் தவித்தது. கணவன் வேலை முடிந்து வரவே இரவு ஏழு மணி கூட ஆகி விடும்; ஆனால், மனைவி நான்கு மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தார் கள். கணவனின் மனதில் ஆயிரத்தெட்டுச் சந்தேகங்கள்.  இதற்கு மேல் விவரிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சண்டைகள். முடிவுறாத வாக்குவாதங்கள். மனைவிக்குத் தெரியாமலேயே கணவன் வெளி நாட்டு வேலைக்கு விண்ணப்பித்து திடுதிப்பென்று கிளம்பிப் போவதற்கும் தயாராகி விட்டான். மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வளவோ பேசியும் கணவனின் முடிவில் மாற்றமில்லை. அதை விட மோசம், குழந்தையைத் தானே அழைத்துக் கொண்டு போகப்போவதாகச் சொன்னான் அவன். இரகசியமாகத் திட்டம் தீட்டி அவனும்,அவனின் குடும்பத்தினரும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.குழந்தை யைக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தன் அம்மா, அப்பா இருவரையும் கூடவே வெளிநாட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான் கணவன்.  குழந்தை,கணவன் இருவரையும் பிரிந்த பெண், முதலில் நிலைகுலைந்து போய் அலுவலகத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தாள். தன்னை ஒரு வழியாக உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் சொன்னார் : "பெற்றோரில் ஒருவரது சம்மதம் இல்லாமல், அவருக்குத் தகவல் கூட த் தெரிவிக்காமல் ஒரு குழந்தையைக் கணவனோ அல்லது மனைவியோ எவர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது, சட்டப்படி அது தவறு. நீங்கள் உங்கள் கணவன் மீதும், மாமனார்-மாமியார் மீதும் வழக்குத் தொடரலாம். யூனிசெப் பிரகடனத்தின்படி, ஒரு குழந்தையை, அந்தக் குடும்பத் திற்குத் தொடர்பேயில்லாத வெளி நபர் ஒருவரோ அல்லது கணவன்- மனைவி இருவரில் எவர் ஒருவரோ மற்றவரின் அனுமதியில்லாமல்,அவருக்குத் தகவல் சொல்லாமல் வெளிநாட்டிற்கு அழைத்துப் போவது முடியாது. அது சட்டப்படி குற்றம்!" என்று விரிவாக விளக்கினார் வழக்கறிஞர்.  இப்போது மனைவியின் நிலைமை பரிதாபமாக இருந்தது.'கணவன் மீதும், மாமனார் மாமியார் மீதும் வழக்குத் தொடுக்கலாமா? உலகம் என்ன சொல்லும்?ஏற்கெனவே நம் மீது கணவனுக்கு நம்பிக்கையில்லை. இப்போது என்ன செய்வது?' என்று குழம்புகிறாள் மனைவி.  இது கதையல்ல; நிஜம். நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தின் பல குடும்பங்களில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. யுனிசெப் நிறுவனம் இது பற்றிய விதி எண் -11 இல் மேற்கண்ட விளக்கத்துடன் இன்னொரு விஷயத்தை யும் சேர்த்தே சொல்கிறது. அதன்படி, "குழந்தைகளை உரியவர்கள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஒரு நாட்டை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு யாரேனும் செய்தால் அது சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்தக் குழந்தையையும் வெளியே கடத்திக் கொண்டு போக முடியாதபடி கவனித்து தடை  செய்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்." கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 7

    1. ஏன் ஊர் ஊருக்கு வெயில், மழை என்று மாறிமாறி கிளைமேட் இருக்கு? - ஆதிரன், 2ஆம் வகுப்பு, கோவில்பட்டி. ஆதிரன் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்க கேட்டிருக்கிற கேள்விக்கான பதில் ரொம்பப் பெரிசு. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். ஒரு நாளிலோ, சில நாட்களுக்கோ நீடிக்கும் வெயில், மழை, காத்து போன்றவற்றை Climate என்று சொல்லக் கூடாது. Weather-னுதான் ஆங்கிலத்தில் சொல்லணும். தமிழில் அதற்குப் பெயர் தட்பவெப்பநிலை. இந்த தட்பவெப்பநிலை ரொம்ப காலத்துக்கு எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணினா, அதுதான் கிளைமேட் (காலநிலை). அதனால, ரெண்டு வார்த்தையையும் குழப்பிக்கக் கூடாது. சரி, இப்போ உங்க கேள்விக்கு வருவோம். இயற்கைல நிறைய விஷயங்கள் சுழற்சியின் அடிப்படையில்தான் காலம்காலமாக நடைபெற்று வருது. பருவகால மாற்றமும் (Seasonal Cycles) அப்படிப்பட்டதுதான். பொதுவா கோடை காலம், மழைக் காலம், குளிர் காலம்னு மூன்று வகை பருவங்கள் நமக்கு வரும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, நமது முன்னோர்கள் காலங்களை ஆறா பிரிச்சிருக்காங்க. ஜனவரி மாசத்துல முன்பனிக்காலம் தொடங்கினா பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம், கார்காலம், கூதிர்காலம்னு (குளிர்காலம்) டிசம்பர் மாசத்துல முடியும். ஏன் இப்படி காலங்கள் வேறுபடுது? ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கிற நமது பூமி சூரியனை சுத்தி வருது. ஆனா, இப்படிச் சுத்தும்போது, அது சாதாரண பந்து மாதிரி சுத்தல. ஆரஞ்சுப் பழத்தோட நடுவுல ஒரு கம்பிய செருகி, அதை 23.5 டிகிரி சாய்வுக்கு சாய்ச்சா எப்படி இருக்கும்? பூமியும் அப்படித்தான் சாஞ்சுக்கிட்டே சூரியனை சுத்தி வருது. இப்படி சுத்தும்போது பூமி மேல இருக்கும் நிலப்பகுதிகள் சிலவற்றுக்கு, ஆண்டின் சில மாதங்களுக்கு சூரிய வெப்பம் கம்மியா போய் சேரும். இதனால அந்தப் பகுதிகள்ல குளிர் அதிகமா இருக்கும். அதேநேரம் சில பகுதிகள் மேல சூரிய ஒளி அதிகமாக படும். அப்ப அங்க வெப்பம் அதிகமா இருக்கும். பூமியின் வட பகுதிகள் குளிரா இருக்கும்போது, தெற்கு பகுதிகள் வெப்பமாகவும், பின்னர் அப்படியே தலைகீழா மாறியும் இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்துல இயற்கை நீர் சுழற்சி பற்றி படிச்சிருப்போம். அதாவது நீர்நிலைகள்ல இருக்கும் நீரை, வெப்பம் ஆவியாக்கும். இந்த நீராவி மேல போகும். அந்த நீராவி ஒன்னுசேர்ந்து மேகமாத் திரளும். மேகத்தில் நீராவி சுருங்கி மழைத்துளிகள் உருவாகும். மழையா பெய்யும். இதுவே பருவமழை காலம் என்றால் மழை அதிகமாகப் பொழியும். சரி அதுக்காக மழை, குளிர் காலத்துல வெயில் அடிக்காதா? அடிக்கும். அடிச்சாலும் வெயில் அதிகமா இருக்காது, வெயில் அடிக்கும் நாட்களும் இந்தக் காலத்துல குறைவா இருக்கும். சரி, கோடை காலத்துல மழை பெய்யாதா? அரிதா கோடை மழை பெய்யும். அதேநேரம் நிறைய நாள் வெப்பமா இருக்கும். நம்ம ஊரோட தட்பவெப்பநிலை குறிப்பிட்ட காலத்துக்கு வெப்பமாவும் குறிப்பிட்ட காலத்துக்கு மழையாவும் இருக்கிறதுக்கு அடிப்படைக் காரணம் பூமி சாய்வா இருக்கிறதுதான். அத்துடன் காத்து, மழை, பருவமழை, புயல் போன்றவையும் தட்பவெப்பநிலையை தீர்மானிக்கிறதுல தாக்கம் செலுத்துகின்றன. பூமியின் இயற்கைச் சமநிலை, இயற்கை சுழற்சிகள் தொந்தரவுக்கு உள் ஆகாம முறையா இருக்கிறப்ப, இதுல பெருசா எந்தப் பிரச்சினையும் வர்றதில்ல. அதேநேரம், ஒரு நாள் மழையும் ஒரு நாள் வெயிலும் மாறிமாறிக்கூட வரலாம். ஒரு ஊருல மழையும், பக்கத்து ஊருல மழை இல்லாமலும் இருக்கலாம். மழை மேகங்கள் ஒன்றுதிரளும்போது அவை ரொம்பப் பெரிசா இல்லாவிட்டால் சூரிய வெப்பம், பெரிய காற்றடிக்கும்போது மேகம் நகர்ந்துசென்றுவிடும். அதேநேரம் மழை மேகம் ரொம்ப அடர்த்தியா இருந்தா, சூரிய வெப்பம், காற்றால ஒன்னும் செய்ய முடியாது. காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் போன்றவை உருவாகும்போது நிறைய மேகங்கள் ஒரு பகுதில திரண்டுவிடும். சூரிய வெப்பமோ, சாதாரண காற்றோ அதை நகர்த்திவிட முடியாது. இதனால் அடுத்தடுத்து பல நாட்களுக்கு மழை பெய்யும். பக்கத்துப் பக்கத்து ஊர்கள்லயும் மழை பெய்யும். பல நாட்களுக்கு சூரிய வெப்பத்தையே பார்க்க முடியாமல் போகும்.

  • குட்டிப்பூ சொன்னது என்ன?

    கோடை விடுமுறை நாட்களில் மாயா எப்பொழுதும் தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஊரில் தாத்தா வீட்டை சுற்றி ஒரு அழகான பூந்தோட்டத்தை அமைத்துள்ளார். அதில் பூக்கள் அழகழகாய் கொத்து கொத்தாய் பூத்து குலுங்கும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியை தரும். அதிலிருந்து ஒரு பூவை தன் தலையில் வைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை மாயாவுக்கு இருந்தது ஏனென்றால் அவளது தாத்தா  யாரையும் பூக்களைத் தொட அனுமதிக்க மாட்டார்.  இன்று எப்படியாவது  ஒரு பூவை பறித்து தன் தலையில் வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.வீட்டில் அனைவரும் உறங்கும் நேரமாய் பார்த்து மெதுவாக பூந்தோட்டத்தை நோக்கி நடந்தாள்அங்கே அவளைக் கவரும் விதமாக ஒரு அழகான குட்டி பூ ஒன்று தனியாக தெரிந்தது.மெல்ல நடந்து அந்தப் பூவை பறிக்க பார்த்தாள். அப்பொழுது அந்த குட்டிப்பூ தன் கீச் குரலில் கத்தியது.   "ஐயோ வேண்டாம் என் குடும்பத்து கிட்ட இருந்து என்னை பிரிச்சிறாத" இதைக் கேட்ட மாயா மிகவும் ஆச்சரியமடைந்தாள். "குட்டிப் பூவே நீயா இப்ப பேசுன?"என்று கேட்டாள்  "ஆமாம் நான்தான் பேசினேன்"என்றது குட்டிப் பூ  "சரி நான் உன்ன பறிக்காம இருக்கணும்னா அதுக்கான காரணத்தை நீ சொல்லு"என்று மாயா கேட்க சற்றே குட்டி பூ அதிர்ந்தது. பிறகு நன்கு யோசித்தபின்  "உனக்கு தேன் பிடிக்குமா?" "ஓ! புடிக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்" "ஆ.. நீ விரும்பி சாப்பிடுற தேன் உற்பத்தியாக காரணமே நான் தான்" ஆச்சரியத்தில் மூழ்கிய மாயா "எப்படி?"என்று கேட்டாள். "ஆமாம் என்னிடமிருந்து தான் தேனை எடுத்து தேனீக்கள் சேமித்து வைக்கும் அதை மனிதர்கள் நீங்கள் எடுத்து சாப்பிடுவீர்கள்" "ஓ அப்படியா! அப்படின்னா சரி  நான் உன்னை பறிக்க மாட்டேன்"என்று கூறிய உடன் குட்டிப் பூ மிக மகிழ்ச்சியுடன் துள்ளியது அதன் பிறகு ஊருக்கு வரும்போதெல்லாம் குட்டிப் பூ மட்டுமின்றி தோட்டத்தில் இருந்த அனைத்து பூக்களையும் தன் தாத்தாவோடு பராமரித்தாள்.  தயவு செய்து யாரும் மாயாவோட தாத்தா வளக்குற பூந்தோட்டம் பக்கம் போகாதீங்க நீங்க பூவப் பறிக்க வரீங்க நினைச்சு மாயா கோவிச்சுப்பா ஆமா! மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது.

  • அலெக்ஸாந்திரியா நூலகம்

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது எகிப்திய நாகரீகம். நைல் நதியின் இருமருங்கும் வளர்ந்த எகிப்திய நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருந்தது. சிலகாலம் பாரசீக ஆட்சிக்குள் சிக்கிய எகிப்தை மாவீரன் அலெக்ஸாண்டர் கி. மு. 332-ல் மீட்டுத் தனது இராச்சியத்தின் கீழ் கொண்டுவந்தான்; எகிப்திய அரசனாகவும் (ஃபாரோ) முடிசூட்டப் பட்டான். அலெக்ஸாண்டரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரக்கோட்டிஸ் ஏரிக்கும் மத்தியதரைக்கடலுக்கும் நடுவே அமைந்த பூசந்தி  நிலப்பகுதியில் கட்டப்பட்ட நகரமே அலெக்ஸாந்திரியா. கனோப்பஸ் என்னும் நைல் நதியின் கிளைநதி அங்கே ஓடிக்கொண்டிருந்தது. மேற்குப்பகுதியில் அமைந்த கடைசிக் கிளைநதி அது. சில வருடங்கள் கழித்து அலெக்ஸாண்டர் இறந்துவிட, அவன் வென்ற நாடுகளை அவனது தளபதிகள் பிரித்துக் கொண்டனர். எகிப்தின் ஆளுகை அலெக்ஸாண்டரின் ஒரு தளபதியான தாலமி-யிடம் வந்து சேர்ந்தது. தாலமியும் அவனைத் தொடர்ந்து வந்த தாலமி வம்சத்தினரும் சுமார் முன்னூறு ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்தார்கள் . மாசிடோனியர்கள் ஆண்ட எகிப்தின் தலைநகரமாக அலெக்ஸாந்திரியா விளங்கியது. தாலமி வம்சத்துக் கடைசி அரசர் கிளியோபாட்ரா.  போர்ப்படைகளையும், ஆயுதங்களையும் அரண்மனைகளையும் கட்டியதோடு மட்டும் அல்லாமல் மனித அறிவாலும் ஆராய்ச்சியாலும் பகுத்தறிக் கருவி கொண்டு கட்டப்பட்ட நகரம் அலெக்ஸாந்திரியா. கிரேக்கத்தில் எழுச்சி பெற்றிருந்த தத்துவக் கொள்கைகளையும் அறிவுசார் நூல்களையும் அறிந்திருந்த முதலாம் தாலமி (தாலமி சோட்டர்) அலெக்ஸாந்திரியாவையும் கற்றறிந்த அறிஞர்களால் நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டரும் தாலமி சோட்டரும் கிரேக்கத்தின் தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் பயின்றவர்கள். அரிஸ்டாட்டிலின் மறைவுக்குப் பிறகு அவரது சீடர் தியோஃப்ரேஸ்டஸ், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். தாலமி சோட்டர் தனது மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி தியோஃப்ரேஸ்டஸைக் கேட்க, அவர் அதனை மறுத்து, தனது சீடர் டெமிட்ரியஸை அலெக்ஸாந்திரியாவுக்கு அனுப்பி வைத்தார்.  ‘உலகில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களும் அலெக்ஸாந்திரியாவில் இருக்க வேண்டும்’ என்பதே தாலமி சோட்டர் டெமிட்ரியஸிடம் இட்ட கட்டளை. கிரேக்கத்திலிருந்து பல்துறை அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவுக்கு வருகை தர, ஆராய்ச்சிகளுக்கென ஒரு கல்விக்கூடம் போல ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் புத்தகங்கள் சேரத்துவங்கின. அந்தக் காலத்துப் புத்தகங்கள் ஓலை நாணல் செடியான பாப்பிரஸ் தண்டுகளால் செய்யப்பட்டு பாப்பிரஸ் சுருள் புத்தகங்களாக எழுதப்பட்டன. கிரேக்க மொழியிலேயே பெரும்பாலான நூல்கள் எழுதிவைக்கப் பட்டன. சில எகிப்திய மொழி நூல்களும் சேர்ந்தன. அரண்மனையை ஒட்டி அமைக்கப்பட்ட அந்த நூலகத்தின் உள்ளும் புறமும் எண்ணற்ற தூண்கள் விண்ணைத் தொட்டன. கடவுளரின் சிலைகள் ஒவ்வொரு மூலையிலும் அணிவகுத்தன. ‘பிப்லியோதெக்கை’ என்றழைக்கப்பட்ட முக்கிய அறைகளில், செவ்வக மர அலமாரிகளில் பாப்பிரஸ் சுருள்களில் புத்தகங்கள் சேமித்து வைக்கப் பட்டன. தனது காலத்திலேயே டெமிட்ரியஸ் இரண்டு லட்சம் பாப்பிரஸ் சுருள்களைச் சேர்த்து வைத்தார் இந்த நூலகத்தில்.  தாலமி சோட்டரின் மரணத்துக்குப் பிறகு மன்னனான அவனது மகன் இரண்டாம் தாலமி (தாலமி ஃபிலடெல்ஃபஸ்) நூலகத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக நூல்கள் சேர்க்கத் தலைப்பட்டான். பிற நாடுகளிலிருந்து வந்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டு,  மூலப்புத்தகம் நூலகத்தில் வைக்கப்பட்டது; பிரதி எடுக்கப்பட்ட புத்தகம் திருப்பித் தரப்பட்டது. அந்த நூலகத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பாப்பிரஸ் சுருள்களுக்கும் மேல் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்வி கற்பதற்கும் ஆராய்ச்சிகள் செய்வதற்கும் பல நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் குவிந்தவண்ணம் இருந்தனர். கிரேக்க இலக்கியம், தத்துவம், எகிப்திய வரலாறு, கணிதம், மருத்துவம், வானியல், புவியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் இங்கே இருந்தன. மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த எகிப்திய வரலாறு மானெத்தோ என்பவரால் எழுதப்பட்டது. இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது. கணிதமேதை ‘யூக்லிட்’  வடிவியல், வட்டம், அளவியல், எண்கள், இருபடி மூலம், பரும வடிவியல் தோற்றங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதி வைத்தார். எரட்டாஸ்தெனிஸ் எனும்  பல்துறை அறிவாளர் கணிதவியல், புவியியல் மற்றும் புவியளவீட்டியலில் ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் எழுதி வைத்தார். பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டுச் சொன்னவர் எரட்டாஸ்தெனிஸ் ஆவார். சைரீன் நகரத்திலிருந்து வந்த அறிஞர் கல்லிமாச்சஸ் இந்த நூலகத்தின் நூலகராக இருந்தபோது (கி.மு 240) இங்கிருக்கும் நூல்கள் அனைத்தையும் பற்றிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார். மருத்துவத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து உடலியல், உடற்கூற்றியலில் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துப் பதிவு செய்த ஹெரோஃபிலஸ் மற்றும் எராசிஸ்றேட்டஸ், இலக்கிய ஆய்வுகள் செய்து கவிதைகள், இலக்கிய நூல்கள் வெளியிட்ட அப்போலொனியஸ் மற்றும் அரிஸ்டார்சஸ், கிரேக்க மொழி இலக்கண ஆய்வுகள் செய்த அரிஸ்டோஃபேன்ஸ் என்று கணக்கிடவியலாத பல அறிஞர்களும் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்து வந்தனர். முன்னூறு ஆண்டுகளாக அலெக்ஸாந்திரிய நூலகம் அறிவுத்தேடல் செய்ய வந்த அனைவருக்கும் பயன்பட்டு வந்தது.  கி.மு. 48-ல் ரோமாபுரியின் ஜூலியஸ் சீஸர் அலெக்ஸாந்திரியாவைத் தாக்கியபோது, தனது கப்பல்களைக் காப்பாற்றுவதற்காக, துறைமுகக் கிடங்குகளில் தீவைத்தான். அந்தத் தீ அருகிலிருந்த கட்டடங்களுக்குப் பரவி, நூலகத்தின் காப்பகப் பகுதியில் இருந்த பெரும்பாலான பாப்பிரஸ் சுருள்களை எரித்து அழித்தது. இருப்பினும் நூலகம் தொடர்ந்து இயங்கியது. முன்னூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரோமாபுரியின் பேரரசன் ஆரெலியன், அலெக்ஸாந்திரியாவைக் கைப்பற்ற நடந்த போரில் நூலகத்தின் முக்கியக் கட்டடப் பகுதி சேதமடைந்து பெரும்பாலான நூல்கள் அழிந்து விட்டன. பதவியாசை பிடித்த அற்ப மனிதர்களின் செயலால் அற்புதமான புத்தகங்களும், வரலாறும், அறிவு நூல்களும் அழிந்து போய்விட்டன.  எத்தனையோ நூலகங்கள் பின்னர் வரலாற்றில் தோன்றிப் புகழ் பெற்றிருந்தாலும் உலகில் முதன்முதலில் தோன்றி எண்ணற்ற நூல்களால் நிரம்பியிருந்த அலெக்ஸாந்திரியாவின் நூலகத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கிறது.    எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’  ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • இருபெரும் விழா

    குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் (நவம்பர் 7) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும் என தசிஎகச மாநிலத் தலைமையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலினை தொடர்ந்து, நெல்லை மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் திரு. துரை பாண்டியன் அவர்களை (தமுஎகச வி.மு.சத்திரம் கிளை பொருளாளர்) அணுகினோம். அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. துரை பாண்டியன் அவர்கள் பணிபுரியும் அனவரதநல்லூர் அரசுப் பள்ளியில், அழ. வள்ளியப்பாவை நினைவுகூர்ந்து கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சிறார் பாடல்கள், பேச்சுப் போட்டி என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும், தமுஎகச (வி.மு. சத்திரம் கிளை) சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து இன்று (11.12.2025) பள்ளி வளாகத்தில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர நாரயணன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக • தமிழ் எக்கோஸ் திரு. மு. வெங்கட்ராமன் • தமுஎகச வி.மு. சத்திரம் கிளைத் தலைவர் திருமதி சத்தியா •சமூக சேவகர் மற்றும் தசிஎகச நெல்லைக் கிளை முன்னாள் செயலாளர் திரு. சுரேஷ் • தசிஎகச நெல்லைக் கிளைத் தலைவர் திரு. தேவர்பிரான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர். ஆசிரியர் திரு. துரை பாண்டியன் விழா நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் என மொத்தம் 12 பரிசுகள் தசிஎகச நெல்லைக் கிளை சார்பில் வழங்கப்பட்டன. தனிச்சொற்பொழிவாக இல்லாமல், மாணவர்களுடன் நேரடியாகப் பேசும் கலந்துரையாடல் முறையில் திரு. வெங்கட்ராமனும் திருமதி சத்தியாவும் நிகழ்வை உயிரோட்டமாக வழிநடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது. மேலும், விழாவின் இறுதியில், இதுபோன்ற கல்வி-கலாச்சார நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவது குறித்தும், உலகத் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. (தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இதைப் பின்பற்றி வருகிறது. திரு. வெங்கட்ராமன் இதை ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய முன்னோடி ஆவார்.) விழாவைத் தொடர்ந்து, நன்செய் நிறுவனத்திலும் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பில் மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 85% பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனத்தில், “பெண்கள் ஏன் பாரதியாரை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் நாளைத் தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் என அறிவுறுத்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற, பாகுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்க குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுவோம்; கற்போம்; கற்பிப்போம்!

bottom of page