இயலில் தேடலாம்!
337 results found with an empty search
- மாபெரும் பெண் ஆளுமை வசந்தி தேவி
வாழ்நாள் முழுவதும் பொது சமூகத்திற்காகவே உழைத்த வசந்தி தேவி என்னும் மாபெரும் பெண்ணாளுமை இன்று நம்மோடு இல்லை. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" என்ற குறளின்படி வாழ்ந்தவர். "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி" என்ற ராமலிங்கரின் அருட்பா வாசகத்தின் படி அப்பாவால் வழிநடத்தப்பட்ட வசந்தி தேவி இறுதியில் கம்யூனிசம் ஒன்றுதான் வழி. புரட்சி வந்தால் தான் அனைத்து விதமான சமூக சிக்கல்களும் சரியாகும் என்று தன் தந்தையால் திசை மாற்றம் செய்யப்பட்டார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மற்ற பெண் பிள்ளைகளைப் போன்று தன் வாழ்க்கையை தேர்வு செய்யாமல் வாசிப்பு விவாதம் ஆகியவற்றின் ஊடாக சமூகத்தை அறிய விரும்பினார். பெரியார் சிந்தனை காலனிய எதிர்ப்பு அரசியல், சாதிய சமுதாயத்தை விமர்சன பூர்வமாக அணுக வேண்டிய தேவை ஆகிய மூன்றையும் அவரின் தந்தையின் கருத்தியல் மூலமாக புரிந்து கொண்டார். 1957-ல் மாநில கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மார்க்சியத்தின் மீது வசந்தி தேவி அவர்களுக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் பிரம்மாண்டமான வளர்ச்சி, சீனத்தின் எழுச்சி, கியூபா, வியட்நாம் ஆகியவற்றின் போராட்ட வரலாறு வசந்தி தேவி அவர்களின் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்தன. அந்த காலகட்டத்தில் இந்திய அரசியலில் இடதுசாரி இயக்கத்தினர் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர். இது அனைத்தும் வசந்தி தேவியை மார்க்சியத்தின் பால் ஈர்த்தது. 1975 ஆம் ஆண்டு வசதி தேவி தன் கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றார். அப்போது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த இடதுசாரி அரசியல் கிளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட அறிவு புரட்சியும் அவருடைய உலக பார்வையை மாற்றி அமைத்தன. பிலிப்பைன்ஸ்ன் ஜனநாயகம் கெட்ட அரசியல் அந்நாட்டில் எத்தகைய விபரீதங்களை நிகழ்த்தியது என்பதை கண்கூடாக பார்த்த வசந்தி தேவி சுதந்திர இந்திய அரசினை ஜனநாயக படுத்த வேண்டும் என்பதிலும் மக்களின் அரசாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருந்தார். அரசு அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரத்தை சரியான வகையில் கையாளுவதிலும் அவர் கவனம் செலுத்தினார். "மகளிர் ஆணையத்தில் அவர் செயல்பட்ட போதும் சரி, பொதுக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி கல்வி உரிமை குறித்து பேசியும் எழுதியும் பரப்புரை செய்த போதும் சரி, மனித உரிமைக் கல்வியை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சரி ஜனநாயக மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் பணிகளாகவே அவற்றை வசந்தி தேவி அணுகினார்" என்கிறார் வ.கீதா. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக திருமதி வசந்தி தேவி 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். மகளிர் ஆணையத்தில் பணி செய்த தன்னுடைய பணி காலம் குறித்து வசந்தி தேவி அவர்கள் கூறும் போது "ஆணையத்தின் சிறிய கதவுகளை வந்து தட்டிய ஒவ்வொரு மனுவின் பின்னும் ஒரு பெண்ணின் ஆற்றமுடியாத கண்ணீர், கதறல், வேதனை, அவமானம், ஆதரவின்மை, ஆணாதிக்க சமுதாயத்தின் கொடூரங்களைப் பற்றிய அவலக் குரல்கள், ஆயிரம் ஆண்டு கடந்து தொடரும் பழம்பெரும் பாதகங்கள், நவீன இந்தியாவின் புதிய விவகாரங்கள், இவை அனைத்தையும் ஒரு அணுவில் குவிந்த குறுகிய உயிர்த்துளிகளைப் போல நான் கண்டேன்" என்கிறார். பெண்ணின் நிலை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களிடையே அவர் உருவாக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார். அவர் திண்டுக்கல் கல்லூரியில் பணியாற்றிய சமயத்தில் 'பெண்ணின் நிலை வரலாற்றுப் பின்னணியில்' என்ற கண்காட்சி ஒன்றை உருவாக்கியதன் மூலம் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்ணுக்கு நிகழும் அநீதிகளை வரலாற்றின் பின்னணியில் புள்ளி விவரங்களோடு சித்தரித்து வரலாறு முழுவதும் பெண்கள் பெற்ற வலியை உலகிற்கு உரக்கச் சொன்னார். அந்த கண்காட்சி தமிழகத்தின் பல கல்லூரிகளுக்கு பயணித்து பெரும் வெற்றி கண்டது. கல்லூரி மாணவியரும் ஆசிரியர்களும் வீதிக்கு வருவது என்பது மிகப் புதுமையாக இருந்த அந்த காலகட்டத்தில் உளுத்துப்போன நில பிரபுத்துவம் பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்கம் இவற்றுக்கு இலக்கணமாக கருதப்பட்ட கும்பகோணத்தின் தெருக்களில் அந்த புதுமையை வசந்தி தேவி நிகழ்த்தி காட்டினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் மகளிரியல் என்ற சிறப்புத் துறையை உருவாக்கி மாறுபட்ட கல்வி சூழலை ஏற்படுத்தி பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார் நிர்வாகத்திலும் ஆசிரியர்களின் நடத்தையிலும் ஆசிரியர் மாணவர் உறவிலும், மாற்றங்களை கொண்டு வருவதற்காக அவர் பெரும் புரட்சியே செய்தார். உசிலம்பட்டி தாலுகாவில் பெண் சிசுக்கொலைகள் பற்றிய அவரது ஆய்வு மிக சுவாரசியமானது என்கிறார் வ.கீதா சிசுக்கொலை தொடர்பான ஆய்வின் போது உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து இப் பிரச்சனை குறித்து பேசினார். பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொண்டார். இவை அனைத்தும் அவர் மகளிர் ஆணையத்தின் தலைவியாக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு மிகப்பெரிய அளவில அவருக்கு உதவியது என்பது மறக்க முடியாத உண்மை. அந்த ஆய்வு குறித்து வசந்த தேவி கூறும் போது "ஆய்வுகள் சமுதாயம் குறித்து நமக்குள்ள சராசரியான பார்வையை மாற்ற உதவும்" என்கிறார். ஜாதி மற்றும் பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான உறவை அதன் அத்துணை சிக்கலோடும் முரண்களோடும் வசந்தி தேவி அவர்கள் புரிந்து கொண்டதால் மகளிர் ஆணைய தலைவராக இருந்த போது குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை சமுதாய வேலைத்தளங்களில் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் ஆகியவற்றின் வேறான பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொண்டு அவற்றை தீர்வு நோக்கிய பாதையில் கொண்டு செலுத்துவதில் வசந்தி தேவியால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இப்படியாக வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மனித உரிமைக்காகவும் போராடிய ஆகச்சிறந்த ஆளுமையான திருமதி வசந்தி தேவி அவர்கள் இலக்கியத்திலும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளார். குழந்தைகள் மத்தியில் பாட புத்தகம் தாண்டிய வாசிப்பைக் கொண்டு செல்வதில் அரசோடு இணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தைகளுக்கான கதைகளையும் அவர் எழுதியுள்ளார். அனைவரும் சமம் அனைவருக்கும் சமநீதி சம உரிமை என்ற மேம்பட்ட சமூகம் அமைவதற்காக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் பெண் ஆளுமையாகத் திகழ்ந்த வசந்திதேவியின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் இழப்பு.
- புலிக்குகை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய மாலை நேரம். மாலாவும் மீனாவும் ஊரை அடுத்திருந்த சொர்ணமலைக்கு போய்வருவோம் என்று புறப்பட்டார்கள். மலையுச்சியில் ஒரு பழமையான கதிரேசன் கோவில் இருந்தது. அதுவரை போய் அதற்கடுத்திருந்த சரிவில் இறங்கினார்கள். நடந்த களைப்பில் தண்ணீர் தாகமாய் இருந்தது. எங்கும் பாறைகளும் எலுமிச்சைப்புல்லுமாய் நிறைந்திருந்தன. “அய்.ய்.யா.. வாசனைப்புல்” என்று ஓட்டமாய் போய் புல்லைப் பிடுங்கி உள்ளங்கைகளில் தேய்த்து முகர்ந்து பார்த்தார்கள். அதன் வாசனையில் களைப்பு நீங்கியது போலிருந்தது. ‘தண்ணீர் குடித்தால் தேவலை’ என்றிருந்தது. எங்கேயாவது கிடைக்குமா என்று கொஞ்சதூரம் போய் தேடினார்கள். மழையில் நனைந்தும் ஈரக்காற்று பட்டும் பாசம் பற்றி வெயிலில் கரேலென காய்ந்துபோன ஒரு பாறை பக்கமாய் போனபோது அங்கிருந்த ஒரு எறும்புத்தின்னி இவர்களைப் பார்த்தது. “குழந்தைகளே.. எங்கே வந்தீர்கள்” பாறை இடுக்கிலிருந்து தலையை நீட்டியபடி கேட்டது. மாலா பயந்துபோய் ஓர் எட்டு பின்வாங்கினாள். “மாலா பயப்படாதே. எறும்புத்தின்னி நம்மை ஒன்றும் செய்யாது. அது சாதுவாக இருக்கும்” மீனா தைரியப்படுத்தினாள். “இதற்கு வால் ஏன் நீளமாக இருக்கு” “அதோட குட்டி அந்த வால் மேலே உட்கார்ந்து சவாரி போகுமாம்” “உடம்பெல்லாம் அதற்கு செதில்களாக இருக்கே” “செதில்கள் இருக்கிறதாலதான் புலிகூட இதைத் தின்னாதாம்” “நீ சொல்வதை பார்த்தால் ஆர்வமாக இருக்கே.. நான் தொட்டுப்பார்க்கட்டுமா” “ம்.. தொட்டுப்பாரு” மாலா எறும்புத்தின்னியை தொட்டு நீவினாள். அது சாதுவாக இருந்தது. “மாலா.. எறும்புத்தின்னி நம்ம கூட பழகீருச்சி. எதிரிகளைப் பார்த்தால்தான் அது பந்துபோல சுருண்டுகொள்ளும். இப்போது நாம் இதோடு பேசலாம்”. “நாங்க புலிக்குகையை பார்க்க வந்தோம். தண்ணீர் தாகமாக இருக்கிறது. குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா” “என்கூட வாங்க” என்று ஒரு உயரமான பாறைக்கு அருகில் கூட்டிக்கொண்டு போனது. பாறை இடுக்கில் ஒரு அழகான நீர்ச்சுனை தென்பட்டது. உள்ளங்கைகளை குவித்து அள்ளிக்குடித்தால் அது ஒரு சுவையான நீராக இருந்தது”. “எறும்புத்தின்னி.. இங்கே புலிக்குகை எங்கே இருக்கு” “இங்கிருந்து கொஞ்சதூரம் போனால் குன்றின் மேற்குச்சரிவில் இருக்கிறது.. வாங்க போகலாம்” என்று கூட்டிக்கொண்டு சென்றது. “குழந்தைகளே.. நீங்கள் போய் பாருங்கள். சீக்கிரமாக இங்கேயிருந்து போயிரணும். புலி குகைக்கு திரும்பி வருகிற நேரம். என் குட்டியை பார்க்க பாறை வீட்டுக்கு போகிறேன்” என்று திரும்பிப்போனது. புலிக்குகை ஒரு விசாலமான குவிமாடம் போன்ற அமைப்பில் இருந்தது. குகையின் முன்புறம் உயர்ந்து அகன்ற வாயிலும் அதற்கேற்ப ஒரு கல்கதவு பக்கவாட்டுப்பாறையில் சாய்த்துவைக்கப்பட்டும் இருந்தது. குகையின் உள்ளே நுழைந்தால் வலதுபுறம் வெளியேறிப்போக ஒரு திறப்பு இருந்தது. இடது மூலையில் ஒரு ஆள் தவழ்ந்து போகும்படியாக குகைப்பாதை நீண்டுபோனது. குகைக்குள் அகல்விளக்கு தீபம் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தவழ்ந்துபோய் பார்த்தால், ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கும் அளவிற்கு குகையின் மேல்பகுதி உயர்ந்திருந்தது. அங்கிருந்த கல்திண்டில் சிறிதுநேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். அதற்கப்பால் குகையினுள் ஒன்றுமே தெரியவில்லை. சரி போவோம் என்று குகைவாயிலுக்கு திரும்பிவந்தார்கள். வெளிக்காற்று சிலீரென வாயில் வழியாக குகைக்குள் வீசிக்கொண்டிருந்தது. சூரியன் தொடுவானத்தில் இறங்குவது தெரிந்தது. மஞ்சள்வெயில் பாறைச்சுவர்களின் மேல் படர்ந்திருந்தது. “குழந்தைகளே.. நான் பூமியின் இன்னொரு பக்கமுள்ள தேசத்திற்கு செல்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது இருட்டிவிடும். நீங்கள் வெளிச்சத்திலேயே வீட்டிற்கு போய்விடுங்கள்” என்று செவேலென கிரணங்களை கையசைப்பது போல் விசிறி சிரித்தது. குகைக்கு வெளியே புலியின் உறுமல் சப்தம் கேட்டது. சிறுமிகள் நடுங்கிப்போய் குகையின் ஒரு மூலையில் போய் ஒண்டியபடி பதுங்கிக்கொண்டனர். “இப்ப என்ன செய்வது. சற்றுமுன்பே இங்கிருந்து போயிருக்கலாமே” மாலா முணுமுணுத்தாள். “என்ன.. புதிதாக இன்றைக்கு மனிதவாசம் வீசுகிறதே..” கேட்டபடியே புலி குகைக்குள் நுழைந்தது. ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த சிறுமிகளை உற்றுப்பார்த்தது. “ஏய்.. குழந்தைகளே.. நீங்கள் யார்.. என் வீட்டில் வந்து என்ன செய்கிறீர்கள்” அதட்டலாய் கேட்டது. “எங்களை ஒன்றும் செய்துராதே. இங்கிருந்து போயிருவோம்” “பயப்படாதீர்கள். நான் உங்களுடைய நண்பன். வரும் வழியில் எறும்புத்தின்னி உஙகளைப் பற்றி சொல்லி அனுப்பியது” என்று தான் கொண்டு வந்திருந்த மல்பெரி பழங்களையும் சிவந்த ஜிங்கிலிகினி பழங்களையும் குழந்தைகளிடம் நீட்டியது. அவை இரவு நேரங்களில் குகையில் தங்கவரும் வெளவால்களுக்காக வழக்கமாக கொண்டு வரும் பழங்கள். நீலமும் சிவப்பு நிறமுள்ள அந்த காட்டுப்பழங்கள் பார்ப்பதற்கு வசீகரமானதாக இருந்தன. “ம்.. சாப்பிடுங்கள் குழந்தைகளே. பழங்கள் சுவையாய் இருக்கும். நீங்கள் என் விருந்தாளிகள்” புலி உபசரித்தது. “நீ மனிதர்களை பார்த்தால் அடிச்சி சாப்பிட்டுருவேன்னு ஊர்ல சொன்னாங்களே.. எங்களிடம் அன்பாக இருக்கிறாயே” புலி மீதான பயம் இப்பொழுது விட்டுப்போயிருந்தது. “உங்களைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன். நீங்க நல்ல பிள்ளைங்கன்னு. மற்றவர்களை துன்புறுத்துகிற கொடூரமான மனிதர்களைத்தான் எனக்குப் பிடிக்காது” “அப்படியென்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்று அருகில் போய் புலியைத் தொட்டு வருடிக்கொடுத்தனர். அது பூனையைப் போல் சாதுவாகி கண்களை மூடிமூடித்திறந்து பார்த்தது. அந்த நேரத்தில் வெளவால்கள் கூட்டமாக பறந்து வந்து குகையின் மேற்கூரையில் தலைகீழாக தொங்கியபடி கேட்டது, “புலி நண்பா.. எங்களுக்கு பழங்களை கொண்டு வந்திருக்கிறாயா”. புலி கல்திண்டில் இன்னுமிருந்த பழங்களை எடுத்து நீட்டியது. பழங்களை தின்ற வெளவால்கள் குகைக்கு உள்ளேயும் வெளியேயும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. “இப்படி வாஞ்சையோடு உபசரிக்கிற நீ எதற்காக மான், காட்டுப்பன்றி, கேளை ஆடுகளை அடிச்சி சாப்பிடுறே..” மாலா தன் மனதிலிருந்த சந்தேகத்தை கேட்டாள். “இயற்கையில் மாமிசம் உண்பது என்னோட சுபாவம். அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கவும் காடு சமநிலையை பராமரிக்கவும் இது இயல்பாக நடக்கிற ஒன்றுதானே” “சரி. நாங்கள் புறப்படுகிறோம். பொழுது இருட்டி நேரமாகிப்போச்சி” “உங்களிடம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற்றமாகி சகமனிதர்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளை செய்யணும். பணம் பொருளுக்கு ஆசைப்பட்டு மயங்கிப்போய் யாரையும் துன்புறுத்தி கையேந்தியாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் கொடுப்பவர்களாகத்தான் இருக்கணும். அதுதான் இந்த புலி நண்பனின் விருப்பம்” “அப்படியே செய்கிறோம் என்று வாக்குத் தருகிறோம். சொன்ன சொல்லை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றுவோம். இப்போது நாங்கள் விடை பெறுகிறோம்” நிலவு கீழ்வானில் எழும்பிக்கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் பாதையில் படர்ந்திருந்தது. ஊர் எல்லைவரை வழித்துணையாக புலியும் கூடவே போய் வந்தது. வெளவால்களும் வானவெளியில் பறந்தபடியே சுற்றிசுற்றி வந்தன. நட்சத்திரங்கள் மினுக்மினுக்கென கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.
- யாருக்குப் பழம் ?
அனிதா பத்து வயது சிறுமி. வீட்டில் அவள் ஒருத்தி தான். கூட பிறந்த தம்பி, தங்கை, அக்கா கிடையாது. அதனால் செல்லமாக வளர்ந்தாள். அவள் நினைப்பது நடந்தது. கேட்டது கிடைத்தது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பாள். அனிதா தினமும் வீட்டில் செய்யும் ஒரு வேலை உண்டு. அவள் குழந்தையாக இருக்கும் போது வைத்த கொய்யா மரத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதுதான். 'என் கொய்யா மரமே, நீ சீக்கிரம் பழம் காய்க்கனும். முதல் பழத்தை நான்தான் சாப்பிடனும்' என்று மரத்திடம் பேசுவாள். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசும். மரம் ஆடும். 'ஓ'... சரியென்று தலையாட்டுகிறாயா?' என்று அனிதா கேட்பாள். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் தோட்டத்திற்கு வந்தாள், தண்ணீர் ஊற்றினாள். மரத்தைப் பார்த்த அனிதாவின் கண்கள் பெரிதாயின. 'ஆஹா!' என்று கத்தினாள். கொய்யா மரத்தில் பச்சையாக ஒரு பழம் தொங்கிக் கொண்டிருந்தது. அனிதா துள்ளிக் குதித்து அம்மாவிடம் ஓடினாள். 'அம்மா என் கொய்யா மரத்தில் முதல் பழம் காய்ந்திருக்கு' என்று சொன்னாள். 'பழம்னு சொல்லாதே. காய்னு சொல்லு' என்று அம்மா திருத்தினாள். 'இப்போ காய்... பிறகு பழம்... சரிதானே!' என்றாள் அனிதா. 'எங்கே காட்டு?' என்று அம்மாவும் தோட்டத்திற்கு வந்தாள். அனிதா விரலால் காட்டினாள். கொய்யா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் சில பூக்கள் வந்திருந்தன. ஒரு பூவில் கோலி குண்டு அளவில் காய் காய்த்திருந்தது. 'இப்போதான் பிஞ்சு வந்திருக்கு...' என்றாள் அம்மா. அந்த நாளிலிருந்து அனிதாவுக்கு ஒரு புதிய வேலை வந்து விட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் அந்த காயைப் பார்க்கச் செல்வாள். சில வாரங்களுக்குப் பிறகு காய் பச்சையிலிருந்து மாறி மெல்ல மஞ்சள் கலந்து பச்சையாக மாறியது. அனிதாவின் மனதில் ஒரு இனிய கனவு. 'இந்தப் பழத்தை நான் பறித்து சாப்பிட வேண்டும். இது என் உழைப்பின் பலன்.' ஆனால் அவளுக்குத் தெரியாமல் இன்னொரு உயிர் அந்தப் பழத்தைக் கவனித்து வந்தது. தோட்டத்தில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டும் எதையாவது எடுத்து வாயில் வைத்து கொறித்துக் கொண்டும் இருக்கும் ஒரு அணில் தான் அந்த உயிர். மரக்கிளையிலிருந்த பழத்தை நோக்கி, 'சிறிய பழம்... இன்னும் கொஞ்ச நாட்களில் இனிப்பாக மாறும். அப்போ அதை நான் சாப்பிடுவேன்' என்று தன்னைப் பார்க்க வந்த நண்பன் அணிலிடம் சொன்னது. இப்படியாக, மரத்திலுள்ள கொய்யா பழத்தை அனிதாவும் அணிலும் தனக்கே சொந்தம் என்று நினைத்தனர். கொய்யா மரத்தின் கிளைகளில் அணில் ஓடுவதையும் பறவைகள் வருவதையும் அனிதா பார்த்தாள். பழத்தைப் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி கட்டலாமா? என்று நினைத்தாள், அதை அப்பாவிடம் கேட்டாள். 'அப்படி செய்தால் பழம் வீணாகி விடும்' என்று அப்பா சொன்னார். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்லும் முன் அனிதா பழத்தைப் பார்த்தாள். 'இன்னும் இரண்டு நாட்களில் இதை பறிக்கலாம்' என்று மனதிற்குள் நினைத்தாள். அப்போது கிளையில் அமர்ந்திருந்த அணில் அவளை நோக்கி 'சுற்... சுற்...' என்று சத்தமிட்டது. அனிதா சிரித்தாள். 'ஓ! நீயும் இந்தப் பழத்துக்காக காத்திருக்கிறாயா? ஆனா இது எனக்குத் தான்' என்று விளையாட்டாகச் சொன்னாள். அணிலும் அவள் சொல்வதுப் புரிந்தது போல, வாலை அசைத்துக் கொண்டே பழத்தை கண்களை சிமிட்டிப் பார்த்தது. அடுத்த நாள். பழம் இன்னும் அதிகமாக மஞ்சளாகி வாசம் வீசத் தொடங்கியது. அனிதா அதை பறிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் அணில் வேகமாக பாய்ந்து வந்து கிளையில் அமர்ந்து விட்டது. அந்த காட்சியைப் பார்த்த அனிதாவுக்கு மனதில் வேறொரு எண்ணம் வந்தது. 'இந்த மரத்தில் காய்த்த முதல் பழம்... நான் சாப்பிட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இதை எப்போதும் மரத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் அணிலுக்குக் கொடுத்தால்? அது எவ்வளவு சந்தோஷப்படும்.' அனிதா அணிலைப் பார்த்து சிரித்தாள். 'அணில் நண்பா, இந்தப் பழம் உனக்குத்தான். நீ சாப்பிடு. நான் கடையில் கூட வாங்கி சாப்பிடுவேன். உன்னால் முடியாது. நீ சாப்பிடு' என்று அன்போடு சொன்னாள். அனிதா அப்படிச் சொன்னதும் அணில் ஒரு பாய்ச்சலுடன் பழத்தைப் பறித்துக் கொண்டு கிளையில் அமர்ந்து மென்று சாப்பிட ஆரம்பித்தது. அதன் கண்களில் வெளிச்சமும், முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அந்த காட்சியைப் பார்த்த அனிதாவின் மனம் மகிழ்ந்தது. நான் சாப்பிடவில்லையென்றாலும் இதனால் இன்னொரு உயிருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. அதுவே உண்மையான மகிழ்ச்சி என்று நினைத்தாள். சில நாட்களில் கொய்யா மரத்தில் இன்னும் பழங்கள் காய்த்தன. அனிதா பழங்களை குடும்பத்தோடு பகிர்ந்து சாப்பிட்டாள். ஆனால் முதல் பழம் அணிலுக்கு விட்டுக் கொடுத்தாள்... மறக்க முடியாத இனிய நினைவாக மாறி விட்டது.
- தத்துவம் அறிவோம் -6
N.R.A உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஒரே ஒரு ஊர் தான் சொந்த ஊர் தெரியுமா? யார் சொன்னார்கள்? அறிவியல் சொல்லுது. இந்த உலகத்திலுள்ள அத்தனை நாட்டு மக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெவ்வேறு நிலப்பகுதிகளுக்குச் சென்றார்கள்.– இது என்ன புதுக்குழப்பம்? குழப்பம் இல்லை. அறிவியல் பூரவமான உண்மை. ஆமாம். எத்தியோப்பியாவில் ஹோமினிட் வகை பொது மூதாதை இரண்டு குழந்தைகள் பெற்றது. அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று தான் ஹோமோ சேப்பியன்ஸ். மற்றொன்று சிம்பன்சி வகை வாலில்லாக்குரங்கு. நம்முடைய புரிதலுக்காக இப்படிச் எளிமையாகச் சொல்லலாம். அந்த ஹோமோ சேப்பியன்ஸ் தான் கிட்ட த் தட்ட 70000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவை விட்டு புலம் பெயர்ந்தனர். அதனால் தான் அறிவியல் சொல்கிறது, நாம் அனைவரும் Non Residential Africans நம்பும்படி இல்லையே. ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் உயரமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கருப்பாக வலுவாக இருக்கிறார்கள். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருக்கும் மக்கள் மஞ்சள் நிறத்துடன் உயரம் குறைவானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் பல நிறத்திலும் பல விதத்திலும் இருக்கிறார்கள். கொஞ்சமும் சம்பந்தமில்லையே. சந்தேகம் சரிதான். ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டவர்கள் இயற்கை அனுமதித்த அளவில் அவர்களுக்குப் பிடித்த இடங்களில் வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு, அத்துடன் அங்கிருந்த மற்ற மனித இனங்களுடன் ( 9 வகையான மனித சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன ) உருவான உறவு இவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய உருவம், நிறம், உயரம், பருமன், மொழி, இவற்றை உருவாக்கியது. அதனால் தான் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற ஒரே இனத்துக்குள் இவ்வளவு வேறுபாடுகள் தோன்றின. ஆனால் உலகம் முழுவதும் உள்ள ஹோமோ சேப்பியன்ஸின் அடிப்படையான மரபணுக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவும் உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மரபணுவும் ஒன்றாகவே இருக்கிறது. இதைத்தான் மரபணு அறிவியல் கண்டறிந்துச் சொல்லியிருக்கிறது. இப்போது இன்னும் குழப்பம் அதிகமாகிறதா? ஆமாம். ஒரே மாதிரியான மரபணுக்களை, உடலமைப்பை, மூளையைக் கொண்ட மனிதர்கள் ஏன் வெவ்வேறு மொழி பேசுகிறார்கள்?. ஏன் வெவ்வேறு இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?. ஏன் வெவ்வேறு கடவுளரை வணங்குகிறார்கள்?. ஏன் வெவ்வேறு மதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் இந்தியா போன்ற நாடுகளில் ஏராளமான சாதிகளை உருவாக்கியிருக்கிறார்கள்?. ஏன் எண்ணற்ற தத்துவங்களைச் சொல்கிறார்கள்? உண்மை தான். அறிவியலின்படி அனைத்து மனிதர்களின் மரபணு, மூளை அளவு, உடலமைப்பு எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்னொரு இனத்தைச் சேர்ந்தவரைப் போல இருப்பதில்லை. எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த தத்துவத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், சரி எல்லாரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறானவர்களாக இருக்கிறார்களே ஏன் தெரியுமா? சூழ்நிலையும், வாழ்நிலையும் தேவைகளும் தான் மனிதர்களின் உடலிலும் சிந்தனையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்குகின்றன. சூழ்நிலை என்பது புவியியல் சூழலைக் குறிக்கும். அதாவது வாழும் இடம், தட்பவெப்பம், உணவு, தண்ணீர், இவையே அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைநிலையைத் தீர்மானிக்கும். உதாரணத்துக்கு காட்டில் வாழும் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் உணவு, நீர், அங்கேயுள்ள தட்பவெப்பம் இதற்கு ஏற்றவாறு தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இயற்கையுடன் இயற்கையாக வாழும் அவர்கள் எதற்கும் பேராசைப்படுவதில்லை. அதனால் அவர்களுடைய தேவை என்பது மிகக் குறைவு. அவர்களுக்கு பணம் முக்கியமில்லை. ஆடம்பரம் என்றால் என்னவென்றே தெரியாது. இல்லையா? அதேநேரம் நகரத்தில் வாழ்பவர்களின் தேவைகளை நினைத்துப்பாருங்கள். கார், பைக், மின்சார அடுப்பு, கேஸ் அடுப்பு, டி.வி. ஏ.சி. பெரிய பெரிய வீடுகள், விதவிதமான செயற்கை உணவுகள், உடைகள், ஆடம்பரம், என்று தேவைகள் அதிகமாக அதிகமாக ஆசைகளும் அதிகமாகின்றன. ஆசைகளைப் பூர்த்தி செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் சுலபமாக கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி. தான் மட்டும் முன்னேற வேண்டும். திடீரென்று எப்படி முன்னேற முடியும்? அதற்கு நம்முடன் சேர்ந்து வாழ்கிற நம்முடைய சக மனிதர்களை ஏமாற்ற வேண்டும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும். என்பது போன்ற சிந்தனைகள் உருவாகின்றன. இதையே காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் சுருக்கமாகச் சொல்கிறார். ‘ வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கும் ‘ வாழ்நிலையும் சூழ்நிலையும் சிந்தனையை மட்டுமல்ல. உடலமைப்பு, உருவம் நிறம், மொழி, இனம், தத்துவம், சாதி, மதம், கடவுள், என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும். சரி. இப்போ முதல்லருந்து ஆரம்பிப்போம். தத்துவம் எப்போது தோன்றியது? ( தத்துவம் அறிவோம் ) உதயசங்கர் 150 க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- வெப்பநிலைமானிகளும் இரு உலோகங்களும்
திரவமாக இருக்கும் ஒரே ஒரு உலோகம் எல்லோரும் அறிந்ததே. அது பாதரசம். இதன் உறை நிலை −39℃ ஆகும். இந்த உறைநிலையே இது பல்வேறு வகை வெப்பநிலைமானிகளில் பயன்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. வெப்பநிலைமானிகளில் பயன்படும் பாதரசத்திற்கு ஒரு முக்கியமான எதிரியென்றால் காலியத்தைக் கூறலாம். காரணம் என்னவென்றால், பாதரசமானது கிட்டத்தட்ட 300℃- இல் கொதிக்கிறது. இதன் காரணமாகவே, பாதரசமானது உயர் வெப்பநிலையை மதிப்பிடப் பயன்படும் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்த இயலாததாய் இருக்கிறது. காலியமானது 2000℃- இல் ஆவியாகத் தொடங்குகிறது. காலியத்தின் உருகுநிலையோ உள்ளங்கையில் வைத்தாலே உருகிவிடும் வெப்பநிலை. ஆம், காலியம் 29.7℃- இல் உருகி விடும். காலியத்தைத் தவிர எந்த ஒரு உலோகமும் இவ்வளவு நீண்ட வெப்பநிலை இடைவெளியில் திரவமாக இருக்க முடியாது. ஆம். காலியம் 30℃ முதல் 1999℃ வரை திரவ நிலையிலேயே இருக்கக்கூடியது. இதன் காரணமாகவே உயர் வெப்பநிலைகளை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானிகளுக்கு காலியம் சிறந்த தேர்வாக உள்ளது.
- தக்காளி நீ! தக்காளி!
தக்காளி நீ! தக்காளி! செக்கச் சிவந்த தக்காளி! கிரீடம் வச்ச தக்காளி உருண்டு ஓடும் தக்காளி! அம்மா வந்து ஆசையோடு கைகளாலே அள்ளி எடுக்க அம்மா கையில் நீ இருக்க ஆசையோடு நான் பிடிக்க தப்பி எட்டி நீ குதிக்க தாவி ஓடி நானும் வர கண்ணாமூச்சி நீயாட கண்ட நானும் பிடித்து விட! அம்மா கையில் உன்னைத் தர வாங்கிக் கொண்ட அம்மாவும்! துண்டு துண்டாய் வெட்டியே கொதிக்கும் குழம்பில் போட்டு விட! ஆஹா என்ன வாசனை ஆசையாகத் தட்டில் போட்டு அள்ளி அள்ளித் தின்றேனே! தலையைக் கோதும் அம்மாவை வாரி அணைத்துக் கொண்டேனே! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- பேசும் கடல் - 6
பாட்டியிடம் பேசும்போது அமுதாவுக்கும் இனியனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்போது அப்பாவின் குரல் கேட்டது. " இனியா...... இனியா போய் சார்லஸ் மாமா கிட்ட அப்பாவோட பங்கு காசு வாங்கி வாய்யா" என்று இனியனிடம் அப்பா கூற, இனியனும் சார்லஸ் மாமா வீட்டை நோக்கி சென்றான். கடல் பாட்டி...... உயரமான அலையாக எழும்பி கரையைத் தொட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் " அமுதா...... அமுதா அண்ணனை எங்கே?" என்று கடல் பாட்டி கேட்க, "நான் இங்கதானே இருக்கேன் என்னைய கேட்காம இனியனை தேடுறீங்களே......" அமுதா சிணுங்கி கொண்டே கேட்டாள். "அப்படி இல்லம்மா.... இருப்பதை விட இல்லாததை தானே தேடுவோம்" என்றது கடல் பாட்டி. ” என்னதான் இருந்தாலும் இது ஒர் ஆணாதிக்க சமூகம், ஆண்களை தான் முதலில் தேடுவார்கள் . எங்கள் ஊரில் ஆண்கள் மட்டும் தான் கடலுக்கு போகிறார்கள். பெண் பிள்ளைகள் எங்களை கடலில் விளையாடக் கூட விட மாட்டாங்க...." என்று படபடவென வெடித்தாள் அமுதா. வேகமாக ஓடி வந்தான் இனியன்...... "அப்பா... அப்பா... சார்லஸ் மாமா இல்ல ” என்று கூறிக்கொண்டே கடல் பாட்டியிடம் சென்றான். " பாட்டி , அமுதா என்ன கேள்வி கேட்டாள்?" என்றான் இனியன். " அவள் கேள்வியை தொடங்குவதற்குள் நீ வந்துட்ட.... எங்க போனாய்?" என்று நுரையாய்ச் சிரித்தாள் கடல் பாட்டி "அப்பாவோட பங்கு காசு வாங்கப் போனேன்". இனியன் பேசிக்கொண்டே ஈர மணலில் முழந்தாளிட்டு கடல் நீரை உடம்பில் அப்பிக் கொண்டான். " அமுதா...... இனியன் 'பங்கு காசுன்னா' என்னன்னு தெரியுமா?” என்று கேள்விக்குறி போல அலையை எழுப்பிக் கேட்டாள். " தெரியாது" என்றாள் அமுதா. " அப்பாவுக்கான கூலி" என்றான் இனியன். " இனியன்..... கடலோர மீனவர்களிடம், அதாவது என் மக்களிடம் கூலி கொடுப்பது என்ற பேச்சே இருக்காது. செய்கிற தொழிலுக்கு கூலி கொடுக்கிறேன், வாங்குறேன் என்று சொல்லவே மாட்டார்கள்". "பாட்டி.... பாட்டி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" அமுதாவுக்கு ஆர்வம் மிகுதியானது. "உலகிலேயே மிகவும் கடினமான அபாயகரமான தொழில்களில் முதலிடம் கடல் மீன்பிடித் தொழில்தான். இதில் இழப்பு என்றால் எல்லோருக்கும் தான். அதனால் கிடைப்பதை பொதுவாக பங்கிட்டு கொள்வார்கள். எனவே அதை பங்குப்பணம் என்கிறார்கள்" பாட்டியின் வார்த்தைகளில் உற்சாகம் கூடியது. "எப்படி பங்கு பிரிப்பார்கள்?" இனியன் கேட்க. " மீனவர்கள் முதலில் கட்டுமரம், அதன் பிறகு இயந்திரம் பொருந்திய நாட்டுப் படகு, விசைப்படகு என்று மீன்பிடித்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டுமரம் பயன்படுத்திய போது செலவு மிகக் குறைவு. கிடைத்ததை எல்லாம் பொதுவாக வைத்து சரிபாதியாக பிரித்துக் கொள்வார்கள். கட்டுமரத்தில் மூன்று பேர் சென்றால் 3000 ரூபாய் வருமானம் கிடைத்தால் ஆளுக்கு ஆயிரம் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள் . கூலி என்ற வார்த்தை ஆண்டான் அடிமை சமூகத்தை நினைவூட்டுகிறது. கடல்தொழிலில் எல்லாரின் உயிரும் சமம், எல்லாரின் உழைப்பும் சமம். எனவே இலாபம் சமமாக பங்கிடப்படும்." என்று கடல்பாட்டி பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டான் இனியன். " பாட்டி... பாட்டி.... இப்போ நாட்டுப் படகு, விசைப்படகு என்று மாறிவிட்டதே". . ” ஆமாம் நாட்டுப் படகு, விசைப்படகு, வெளிப் பொருந்து இயந்திரங்கள் கொண்டு படகை செலுத்தும் போது மண்ணெண்ணெய், டீசல் போன்ற முதலீடுகள், படகு முதலீடுகள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது ஒரு படகில் 5 பேர் தொழில் செய்ய சென்றால், ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் மீன்பிடித்தலில் வருமானம் கிடைத்தால் அதில் 5000 ரூபாய் படகு உரிமையாளர் எடுத்துக் கொள்வார்கள். இதில் மண்ணெண்ணெய், டீசல், படகு தேய்மானம், இஞ்சின் பழுது நீக்குதல், வலைகள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவு செய்வதற்கு ஒதுக்கப்படும். மீதி 5000 அனைவருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப்படும்." என்று விரிவாக பேசிக் கொண்டிருந்தாள் கடல் பாட்டி. " பாட்டி மற்ற தொழிலுக்கும் கடல் தொழிலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது...? இனியன் கேள்வி கேட்டான். . "இனியா , உலகில் மற்ற எந்த தொழிலிலும் இலாபத்தை பங்கிட மாட்டார்கள். மீன்பிடித் தொழிலில் மட்டும்தான் இலாபப் பங்கீடு உண்டு. இன்று பத்தாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான், 50,000 மீன் பட்டாலும் சமபங்குதான், ஐயாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான்". என்று பாட்டி சொல்லி முடிப்பதற்குள், "I love fisher People " அமுதா பூரிப்புடன் கூறினாள். " wow great " என்று துள்ளி குதித்தான் இனியன். " பாட்டி நாங்க அப்பா கிட்ட இது பத்தி கேட்க போறோம்...." என்று இருவரும் தன் அப்பாவை நோக்கி ஓடினார்கள். கடல் பாட்டி சொன்னது எல்லாம் அப்படியே ஒன்று விடாமல் தன் அப்பாவிடம் கேட்டார்கள். " எவ்வளவு மீன் பட்டாலும், பணம் கிடைச்சாலும் கரைக்கு திரும்பி வந்தாதான் மீனவனுக்கு வாழ்வு, அதனால்தான் கிடைத்ததை செலவு போக அனைத்தையும் பொதுவில் வைத்து பங்கு போட்டு பிரித்துக் கொள்வோம்" என்று கூறிய அப்பா தன் வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலை துப்பினார். பின் அதன் மீது மண் மூடினார். இனியன் கடல் பாட்டி சொன்னதை நினைத்து கடலைப் பார்த்தான் . அது அமைதியாக இருந்தது. அழகாய் சிறுஅலை எழும்பி வந்தது . அருகில் இருந்த அமுதாவும், இனியனும் இணைந்து "I love you" கடல்பாட்டி என்று கோரசாகக் கூறினார்கள். ( கடல் பேசும் )
- குழந்தைக்கு ஒரு பெயர் –அதன் உரிமை
பெயரும், தேசிய இனமும் : எந்த ஒரு குழந்தையும் பிறந்து கொஞ்ச நாள்களான பின், அதன் பெற்றோர்களும், பாட்டி - தாத்தா உள்ளிட்ட மற்றோரும் ஒரு விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?" ஒரு நல்ல நாளில், பெற்றோரும், உற்றார் உறவினரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையின் இல்லத்தில் கூடுவார்கள். வீட்டின் முன் அறையில், தரைப்பரப்பில் நெல்மணிகள் பரப்பப் பட்டிருக்கும். அவற்றின் மீது, குழந்தையின் தாய்மாமன் தன் சுட்டுவிரலினால் ஒரு பெயரை எழுதுவார். அதை அவர் உரக்கப் படித்துச் சொன்னதும்,அதுவே அந்தக் குழந்தையின் பெயர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில், வீடுகளில் குழந்தைகளுக்குப் பெயர் இடுவது இந்த முறையில் நடப்பதை நாம் அறிவோம். இது வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு மனித இனங்களில் வெவ்வேறு முறைகளில் நடக்கும். யுனிசெப் நிறுவனப் பிரகடனத்தின் ஏழாவது விதி,ஒவ்வொரு குழந்தைக்கும் அவன் / அவளுக்கென்றே உரிய பெயர் ஒன்றைப் பெற்றிருப்பது அவர்களின் உரிமை என்கிறது. எனவே, "பெயரில் என்ன இருக்கு?" என யாரும் யாரையும் கேட்டு விட முடியாது / கூடாது ! ஒவ்வொரு குழந்தையையும்,அதற்கே உரிய பெயரையும், அது பிறந்த நாளையும்,பிறந்த ஊர்,இடம் போன்ற எல்லா விவரங்களையும், அவற்றைப் பதிவு செய்வதற்கென்றே இயங்கும் அரசு அலுவலகத்திற்குப் போய், உரிய படிவம் ஒன்றில் பூர்த்தி செய்து கொடுத்தால், அவற்றை அங்குள்ள ஒரு பதிவேட்டில் அலுவலர்கள் பதிவு செய்து விடுவார்கள். சில நாள்களில், அவையனைத்தையும் சரி பார்த்து விட்டு ஓர் அரசுச் சான்றிதழ் பெற்றோருக்கு வழங்கப்படும். அதுதான் அந்தக் குழந்தையின்பிறப்புச் சான்றிதழ். பிற்பாடு அந்தக் குழந்தை தொடக்கப்பள்ளியில் பெறுவதற்கும், அடுத்தடுத்த உயர்கல்வி நிலையங்களில் பெறுவதற்கும், இன்னும் பல்வேறு காரியங்களுக்கும் அந்தப் பிறப்புச்சான்றிதழ் ஓர் அத்தியாவசியமான ஆவணமாகி விடுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசாங்கம், இந்தப் பிறப்புச் சான்றிதழ் இல்லாத பல இலட்சம் மக்களைக் கணக்கெடுத்து, அவர்கள் இந்த நாட்டு மக்கள் அல்லர் எனவும், அவர்கள் பங்களாதேஷ், பர்மா, மலேஷியா போன்ற பல்வேறு அண்டை அயல் நாடுகளிலிருந்து இங்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அறிவித்து விட்டது. அவர்கள் அனைவரையும் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், அவ்வாறு அனைவரும் வெளியேற்றப்படும் வரை அவர்களைத் தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமான முறையில் ஒன்றிய அரசாங்கம் செய்து வருகிறது. நமது அன்புக்குரிய குழந்தைகளிடம் உரிய பிறப்புச்சான்றிதழ் இல்லாமற்போனால், அவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதற்கு மேற்கண்ட அரசாங்க நடவடிக்கை ஓர் எச்சரிக்கை மணியாகும். தமிஸ்நாடு போன்ற மாநிலங்களில், இன்னும் நாம் இப்படியான நெருக்கடிகளை நேரடியாக எதிர்கொள்ளவில்லைதான். ஆனால் மேற்கு வங்காளம்,பஞ்சாப், காஷ்மீர்' இமாச்சலப்பிரதேசம் போன்ற எல்லையோர மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இது மக்கள் நடுவே மிகப்பெரிய ஓர் அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கென்று ஒரு பெயரைப்பெற்றிருக்கும் உரிமையைப் போலவே, அவர்களுக்கென ஒரு தேசிய இன ( Nationality ) அடையாளம் ஒன்றையும் பெற்றிருக்க உரிமையுண்டு என யுனிசெப் பின் மேற்கண்ட ஏழாவது விதி மேலும் கூறுகிறது. அதோடு, ஒரு பெயர், தேசிய இனம் இவற்றுடன், குழந்தைகள் தமது பெற்றோர் இன்னார்தாம் என்பதையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்;அதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு எனவும் கூறுகிறது. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் நன்கு பராமரித்துக் கொண்டு வருவது அவர்களின் சட்டபூர்வமான கடமை; அது குழந்தைகளின் உரிமையும் கூட எனவும் யுனிசெப் விதித்திருக்கிறது. நமக்கு இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம். அம்மா, அப்பா யாரென்று தெரியாமல் கூடக் குழந்தைகள் இருப்பார்களா,என்ன? ஆம், இருக்கிறார்களே! வறுமை, முறையற்ற உறவுகள், இணையருக்கிடையே நேரும் பிணக்குகள், சாதிய ரீதியான நெருக்கடிகள் போன்ற பல்வேறு காரணங்களினால் கணவர்கள், தமது மனைவி-குழந்தைகளைக் காய் விட்டு விட்டுப் போய் விடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்,கேள்விப்படுகிறோம். உலகம் எங்கும் போர்களின் போது பெற்றோரைப் பறிகொடுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய் யார்,தந்தை எவர் என்பது எப்படித் தெரிந்திருக்கும் ? கணவர் கைவிட்டு விட்டுப் போனபின், பல குடும்பங்களில் பெண்கள் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து சம்பாதித்துப் போராடி குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கி விடும் அனுபவங்கள் எத்தனையோ! இப்படியான குழந்தைகளும் உலகமெங்கும் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஒப்பீட்டு அளவில் பெரும்பான்மையான குழந்தைகள் பாதுகாப்பாக,அன்பான பெற்றோரின் பாசமிக்க அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஒரு வாதத்திற்காக நாம் வைத்துக் கொள்வோம். ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி ஓர் அரண் அமைய வேண்டுமென்பதே யுனிசெப் அமைப்பின் இல்டசியம். அதன் பொருட்டேமேற்கண்ட உரிமைப் பிரகடனம் ! ஒரு பெயர் ! ஒரு நாடு ! பாதுகாப்பான ஒரு வீடு ! குழந்தைகளுக்கு இவற்றைப் பெறுவதற்கு உரிமைகள் உள்ளன. அவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை. அரசுகளின் கடமை. கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- இலண்டனிலிருந்து அன்புடன் - 6
இலண்டனிலிருந்து அன்புடன் தொடரில் தற்போது நாம், Dav Pilkey அவர்கள் உருவாக்கிய “Dog Man” series புத்தகங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம். இது காமிக்ஸ் வகையைச் சார்ந்தது. இங்குள்ள நூலகங்களில் குழந்தைகளால் அதிகம் வாசிக்கப்படும் புத்தகம் இது. ஒரு புத்தக உருவாக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்? எழுத்தாளர், மொழிபெயர்ப்பு நூல் என்றால் அதனை மொழிபெயர்த்தவர், ஓவியர், வடிவமைப்பாளர், அட்டைப்பட வடிவமைப்பாளர், காமிக்ஸ் புத்தகம் என்றால் அதற்கான பிரத்யேக வடிவமைப்பாளர், மேற்பார்வையிட்டு கருத்துகளையும் தகவல்களையும் சரி பார்ப்பவர்கள் (அவர்களை எடிட்டர் என்று குறிப்பிடலாம்), பிழைத்திருத்துபவர், பிறகு இறுதியாகப் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளர். இவர்களைத் தாண்டி வேறு யாராவது இருக்க வாய்ப்புள்ளதா? எனக்கு எதுவும் தோன்றவில்லை. உங்களுக்கு? இந்த வரிசையில் புதிய பெயரை “Dog Man” புத்தகத்தில் பார்த்தேன். அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன். அதற்கு முன்பு புத்தகத்தின் அறிமுகத்தைப் பார்த்துவிடுவோம் வாருங்கள். “Dog Man” புத்தகத்தின் ஆசிரியர் டேவ் அவர்கள் சிறு வயதில் கற்றல் குறைபாடு உள்ளவராம். வகுப்பில் மிகுந்த சேட்டை செய்பவராகவும் இருந்துள்ளார். வகுப்பில் இருந்ததைவிட தண்டனைப் பெற்று வகுப்பிற்கு வெளியேதான் அதிகம் இருந்தாராம். அப்படி வெளியே நின்ற நாட்களில் தனது நோட்டுப் புத்தகத்தில் நிறைய காமிக்ஸ் படங்களை வரைந்துள்ளார். இரண்டாம் வகுப்பில் இருக்கும்போது அவர் சொந்தமாக சூப்பர் ஹீரோ கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். “Captain underpants” என்று சூப்பர் ஹீரோவுக்குப் பெயரும் வைத்துள்ளார். அந்த புத்தகத்தைப் பார்த்த அவரது பள்ளி ஆசிரியர், “இப்படி ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்” என்று திட்டிவிட்டு சென்றாராம். ஆனால் நல்ல வேளை தான் அந்த ஆசிரியரின் பேச்சைக் கேட்கவில்லை, அதனால் எழுத்தாளாராகிவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். டேவ் கல்லூரியில் படிக்கும் காலத்தில், அங்கிருந்த பேராசிரியர் ஒருவர்தான் அவருடைய ஓவியத்திறமையைப் பார்த்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். அப்படித்தான் அவர் குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும், ஓவியராகவும் உருவாகியிருக்கிறார். தனது பள்ளிப்பருவத்தில் அவர் விளையாட்டாக உருவாக்கிய கதாப்பாத்திரம்தான் நாய்மனிதன்(Dog Man). நாய்மனிதன் புத்தகத் தொடரில் மட்டும் 13 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஒரு காவல் அதிகாரியும் அவரது நாயும் திருடனைப் பிடிக்கச் செல்கிறது. அப்போது அங்கு ஒரு டைம் பாம் இருக்கிறது. அதிலிருக்கும் தவறான பட்டனை அழுத்தியதால், பெரிய விபத்து நடந்துவிடுகிறது. காவல் அதிகாரியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அவருடைய நாயின் தலையும் காவல் அதிகாரியின் உடலையும் இணைக்கும்படி ஆகிவிடுகிறது. அப்படித்தான் நாய் மனிதன் உருவாகிறான். அந்த நாய் மனிதன் காவல் அதிகாரியாக இருந்து எப்படியெல்லாம் தனது ஊரைக் காப்பாற்றுகிறான் என்பதே இதன் கதை. இந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர் கப், பார்சல் கவர்கள்கூட இதில் கதாபாத்திரங்களாக வருகின்றன. இவை காமிக்ஸ் என்பதாலும், மிகவும் வண்ணமயமாக இருப்பதாலும், குட்டி குட்டி அத்தியாங்கள் இருப்பதாலும் முழு புத்தகத்தையும் கடகடவென வாசித்துவிடலாம். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நாம் விழுந்து விழுந்து சிரிக்கவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனுடன், புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களை எளிமையாக வரைந்தும் பார்க்கலாம். ஓவியங்களை வரைந்து பார்ப்பது போலவே, இதிலுள்ள கதாபாத்திரங்களைப் பொம்மையாகவும் செய்யலாம். அதற்காக தனியே step-by-step instructionsகளும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல சுட்டிகளே, இந்தப் புத்தகத்துடன் நாம் விளையாடவும் செய்யலாம். அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்…இருங்கள் சொல்கிறேன். Flip Pages என புத்தகத்தில் ஒரு புதிய உத்தியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். புத்தகத்தின் பக்கங்களை வேகமாக திருப்பி விளையாடும் முறை இது. அதன் மூலம் இரண்டு பக்கங்களிலுள்ள ஓவியங்கள் நகர்வதுபோல் நமக்குக் காட்சியளிக்கும். “Cat Kid”, “Captain Underpants”, “Mighty Robot”,”Dragons”, “Kat Kong” என நிறைய காமிக்ஸ் தொடர்களையும் டேவ் உருவாக்கியிருக்கிறார் “Dog Man” சமீபத்தில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் புத்தகத்தின் உருவாக்கத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன் அல்லவா? இந்தப் புத்தகத்தை எழுதி ஓவியம் வரைந்தவர் டேவ் பில்கி, அவருடன் “COLORIST” என “Jose Garibaldi” என்பவரை குறிப்பிட்டிருந்தனர். என்னது வண்ணம் தீட்ட தனியே ஒருவரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா. ஆமாம் செல்லங்களே! ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட தனியே ஒருவர் இந்தப் புத்தகத் தொடரில் இருக்கிறார். இதுபோல் நிறைய புதுமைகளை இந்தப் புத்தக வரிசை கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தக வரிசை குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப் பாருங்கள். அவை கட்டாயம் உங்களை மகிழ்விக்கும்.
- மனதை மலர்த்தும் நெருப்பு விதை
இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன. குகைகளில் வாழ்ந்த காலம் முதற்கொண்டு மனிதர்களிடம் இப்பழக்கம் நீட்டித்துக் கொண்டிருப்பதை பல சான்றுகளின் மூலம் அறிய முடியும். மனிதர்களின் வாழ்க்கை பல்வேறு கட்ட மாறுதல்களைக் கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. அவர்களது அந்தந்த காலத்தின் வாழ்வியல்களை ஆவணமாக பாதுகாத்து வைத்திருப்பது நாட்டுப்புற இலக்கியங்கள் தான். எழுத்துவடிவம் இல்லாது வாய்வழியாகவே கடத்தப்படும் கதைகள், கதைப்பாடல்கள், புதிர்கள், பழமொழிகள், விடுகதைகள் என பல வடிவங்களில் நாட்டுப்புற இலக்கியங்கள் வகைபடுத்தப்பட்டிருந்தாலும் நாட்டுப்புறக் கதைகள் பலரின் விருப்பமான வாசிப்பிற்கானதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களின் வழியே அக்கால மக்களின் அற உணர்வு, பண்பாடு, வரலாறு, பொழுதுபோக்கு, அறிவு உணர்ச்சி, விளையாட்டு ஆகியன குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் நிலம் சார்ந்த எண்ணற்ற நாட்டுப்புறக் கதைகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதை பல நேரங்களில் நம்மால் உணர முடியும். உலகின் பல நாடுகளின் நாட்டுப்புற இலக்கியங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமலே மெய்நிகர் பயணமொன்றை நாம் அந்தந்த நாடுகளுக்கு நிகழ்த்தியவர்களாக நாம் உணர முடியும். உலக மொழிகளின் நாட்டுப்புறச் சிறார் கதைகள் என்கிற குறிப்பினைத் தாங்கி வெளியாகி உள்ள “நெருப்பு விதை” புத்தகம் முழுவதும் உலகின் பல மொழிகளில் வெளியாகியுள்ள நாட்டுப்புறக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் அனைத்தும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர் பிம்பம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் நாணற்காடன் அவர்கள். அல்பேனியா முதல் பாகிஸ்தான் வரையில் உலக வரைபடத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டதாக இருபத்தியிரண்டு நாட்டுப்புறக் கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நூலின் பின்னட்டை குறிப்பிடுவது போல வெவ்வேறு நிலங்களில் உலவும் கற்பனைகளும் படிமங்களும் தன்னியல்பானதாகவும் அவற்றுக்குள் பொதுத்தன்மை கொண்டிருப்பதாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. இந்த நூலிலுள்ள கதைகள் அதிக விவரிப்புகள் இல்லாது நேரடியாக கதையின் மையத்தை தொட்டுவிடுகின்றன.ஒவ்வொரு கதையும் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. கதையின் முடிவுகள் சிக்கலில்லாது மிக எளிதானதாக அமைந்திருக்கின்றது. குறைவான பக்கங்களிலேயே கதைக்கான நல்ல தீர்வையும் சொல்லிவிடுகிறது. குழந்தைகள் விருப்பமாக வாசிக்கக்கூடிய கதைத் தேர்வுகளாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. தொகுப்பு முழுவதும் அறிவிற்கு வேலை கொடுக்கும் கேள்விகளுக்கு விடை காணும் கதாபாத்திரங்களாக பெரும்பாலும் பெண்களின் கதாபாத்திரங்களே அமைந்திருக்கின்றன. காடுகளில், மலைகளில் உழைக்கும் கதாபாத்திரங்களாக ஆண்களே உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது உலகின் பொதுசிந்தனையை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. மரங்களில் இலைகளை ஒட்ட வைக்கும் மனிதர்கள், மனிதத் தலையை நிலத்தில் புதைத்து வளர்க்கும் செடி, பூமிக்கு வெளிச்சமளிக்கும் நெருப்பு விதைகள் என குழந்தைகள் கற்பனையாக கண்டுணர நிறைய காட்சிகள் நிறைந்தனவாக இந்நூல் அமைந்திருக்கின்றது. அதேபோல உலகின் தோற்றம் குறித்த பண்டைய நாடுகளின் பார்வை இந்த நூலில் கதைகளாக அமைந்திருக்கிறது. இது குழந்தைகளின் வாசிப்பிற்கு மட்டுமல்ல அவர்களின் அறிவின் தேடலுக்கும் உதவியாக அமையும். குழந்தைகளை மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள இக்கதைத் தொகுப்பு குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூலாக அமைந்திருக்கின்றது. மொழிபெயர்ப்பு என்றுணர முடியாதபடி தமிழில் அனைவரும் எளிதாக வாசிக்க முயற்சியெடுத்திருக்க எழுத்தாளரும் பாராட்டுக்குரியவர். நெருப்பு விதை, வாசிப்பவர்கள் மனதை நிச்சயம் மலர்த்தும். நீங்களும் வாசியுங்கள்.
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 4
1. நட்சத்திரங்கள் ஏன் கீழே விழுவதில்லை? -அருண் பிரசாத், நான்காம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம். அன்புள்ள அருண் பிரசாத், உங்கள் ஊரில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன என்று நினைக்கிறேன். நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் இருக்க முடியாது. ஆனால், இந்த நட்சத்திரங்கள் அந்தரத்தில் அல்லவா இருக்கின்றன. அப்படியானால், அவை கீழே விழுந்தாக வேண்டுமே, ஏன் விழுவதில்லை? முதல் விஷயம் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வாயுப் பந்துகள். இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஈர்ப்புசக்தி உண்டு. அது மட்டுமில்லாமல், அவை அங்கம் வகிக்கும் பால்வெளியில் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டும், அவற்றினுடைய பால்வெளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. அவற்றின் உள்ளே நிலவும் ஈர்ப்புசக்தி, செயலற்றதன்மை (inertia) ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இடத்தை பராமரிக்கின்றன. சூரியனைச் சுற்றி சூரியக்குடும்பக் கோள்கள் எப்படி இடைவிடாமல் தாங்கள் சுழன்றுகொண்டும், சூரியனை சுற்றிவந்தும்கொண்டிருக்கின்றன. அதைப் போலவே நட்சத்திரங்களும் சுற்றிகொண்டிருக்கின்றன. இப்படி இடைவிடாது சுற்றுவதால், அவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை. 2. கால யந்திரம் கண்டுபிடிக்கப்படுமா? அதில் பயணம் செய்து மனிதர்கள் குழந்தைகளாக மாற முடியுமா? - ஜோ.ச. சச்சின், நான்காம் வகுப்பு, ஈரோடு. அன்புள்ள சச்சின், வணக்கம். மனிதர்கள் எல்லாருமே கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதும், கடந்த காலத்துக்குப் போக ஆசைப்படுவதும் இயல்புதான். நீங்கள் குழந்தையாக இருந்ததை படத்தில் பார்த்திருப்பீர்கள். அப்போது நீங்கள் செய்த குறும்புகளை, சேட்டைகளை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வது சுவாரசியமாக இருக்கும். அந்தக் காலத்துக்கே திரும்பிப் போய்விட முடிந்தால் நன்றாக இருக்குமே என ஆர்வமாக இருக்கும். இதுபோல் மனிதர்கள் பலரும் யோசித்தார்கள், யோசிக்கிறார்கள். புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் 'தி டைம் மெஷின்' (கால இயந்திரம்) என்கிற கதையை 1895இல் எழுதினார். அந்தக் கதையில் வரும் கால இயந்திரத்தில் ஏறினால் கடந்த காலத்துக்குப் போகலாம், எதிர்காலத்துக்கும் போகலாம். ஆனால், அதேநேரம் இன்றுவரை கால இயந்திரம் என்பது அறிவியல்ரீதியாக சாத்தியப்படவில்லை. கதைகளிலும் திரைப்படங்களிலும் கற்பனையில் இப்படி சித்தரிக்க முடிகிறது. நமது பழங்கதைகளில் கூடுவிட்டு கூடு பாய்தல், அதன் மூலம் ஒரு மனிதர் வேறொருவராக மாறுதல் பற்றியெல்லாம் கூறப்படுகிறது. கால இயந்திரம் இதுபோல் கடந்த காலம், எதிர்காலத்துக்கு செல்லலாம் என்கிறது. இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின்படி கடந்த காலம், எதிர்காலத்துக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதேநேரம் ஹெச்.ஜி.வெல்ஸ் கால இயந்திரம் கதையை எழுதிய பிறகு, உலகில் பல சிறார் /பெரியவர்களுக்கான கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு வடிவங்களிலும் கால இயந்திரம் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு நடப்பு வாழ்க்கையைவிட பழைய நினைவுகளை ரசிப்பதும், தற்போது உள்ளதைவிட எதிர்காலத்தில் மாறுபட்ட வகையில் இருப்பதிலும் உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது. நம் எல்லாருக்குமே கற்பனை செய்வதில் ஆர்வம் இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எனவே, கால இயந்திரம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். மனிதர்கள் குழந்தையாக மாற நினைத்தால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிமையான வாழ்க்கையை உருவாக்கப் பெரியவர்கள் மெனக்கெட வேண்டும். தங்கள் மனதை என்றைக்கும் இளமையாகவும் வெள்ளந்தியாகவும் வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கே உரிய ஆச்சரியப்படும் தன்மை, எதையும் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை காலாகாலத்துக்கும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆணவம், மற்றவர் மேல் கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவற்றை விலக்கி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எல்லாரும் கால இயந்திரத்தில் உட்காராமலேயே குழந்தைகளாக மாறலாம். -அமிதா
- கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்
கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா! குண்டு குண்டு கத்தரிக்கா! கொத்துக் கொத்தாக் காச்சிருக்கு கொண்டையாட்டும் கத்தரிக்கா! ஊதா நிறக் கத்தரிக்கா! உன் போல் இங்கே யார் இருக்கா! குழம்பு சாம்பார் எல்லாத்திலும் நீ இல்லைன்னா சுவை இருக்கா! கொழுக்கு மொழுக்கு கத்திரிக்கா! குண்டு குண்டு கத்தரிக்கா! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.













