top of page

பேசும் கடல் - 6

ree

பாட்டியிடம் பேசும்போது அமுதாவுக்கும் இனியனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அப்போது அப்பாவின் குரல் கேட்டது. 


" இனியா...... இனியா போய் சார்லஸ் மாமா கிட்ட அப்பாவோட பங்கு காசு வாங்கி வாய்யா" என்று இனியனிடம் அப்பா கூற,  இனியனும் சார்லஸ் மாமா வீட்டை நோக்கி சென்றான்.


 கடல் பாட்டி...... உயரமான அலையாக எழும்பி  கரையைத் தொட்டு திரும்பிக் கொண்டிருந்தாள்


" அமுதா...... அமுதா அண்ணனை எங்கே?" என்று கடல் பாட்டி  கேட்க,


"நான் இங்கதானே இருக்கேன் என்னைய கேட்காம இனியனை தேடுறீங்களே......"

 அமுதா சிணுங்கி கொண்டே கேட்டாள்.


 "அப்படி இல்லம்மா.... இருப்பதை விட இல்லாததை தானே தேடுவோம்" என்றது கடல் பாட்டி.


 ” என்னதான் இருந்தாலும் இது ஒர் ஆணாதிக்க சமூகம், ஆண்களை தான் முதலில் தேடுவார்கள் . எங்கள் ஊரில் ஆண்கள் மட்டும் தான் கடலுக்கு போகிறார்கள்.  பெண் பிள்ளைகள் எங்களை கடலில் விளையாடக் கூட விட மாட்டாங்க...."  என்று படபடவென வெடித்தாள் அமுதா.


 வேகமாக ஓடி வந்தான் இனியன்...... "அப்பா... அப்பா... சார்லஸ் மாமா இல்ல ” என்று கூறிக்கொண்டே கடல் பாட்டியிடம் சென்றான்.


" பாட்டி , அமுதா என்ன கேள்வி கேட்டாள்?" என்றான் இனியன்.


" அவள் கேள்வியை தொடங்குவதற்குள் நீ வந்துட்ட....  எங்க போனாய்?"  என்று நுரையாய்ச் சிரித்தாள் கடல் பாட்டி 


"அப்பாவோட பங்கு காசு வாங்கப் போனேன்". இனியன் பேசிக்கொண்டே ஈர மணலில் முழந்தாளிட்டு கடல் நீரை உடம்பில் அப்பிக் கொண்டான்.


" அமுதா...... இனியன் 'பங்கு காசுன்னா' என்னன்னு தெரியுமா?” என்று கேள்விக்குறி போல அலையை எழுப்பிக் கேட்டாள்.


" தெரியாது" என்றாள் அமுதா.


" அப்பாவுக்கான கூலி" என்றான் இனியன்.


" இனியன்..... கடலோர மீனவர்களிடம், அதாவது என் மக்களிடம் கூலி கொடுப்பது என்ற பேச்சே இருக்காது.  செய்கிற தொழிலுக்கு கூலி கொடுக்கிறேன், வாங்குறேன் என்று சொல்லவே மாட்டார்கள்". 


"பாட்டி.... பாட்டி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" அமுதாவுக்கு ஆர்வம் மிகுதியானது.


 "உலகிலேயே மிகவும் கடினமான அபாயகரமான தொழில்களில் முதலிடம் கடல் மீன்பிடித் தொழில்தான்.  இதில் இழப்பு என்றால் எல்லோருக்கும் தான். அதனால் கிடைப்பதை பொதுவாக பங்கிட்டு கொள்வார்கள். எனவே அதை பங்குப்பணம் என்கிறார்கள்" பாட்டியின் வார்த்தைகளில் உற்சாகம் கூடியது.


 "எப்படி பங்கு  பிரிப்பார்கள்?" இனியன் கேட்க.


" மீனவர்கள் முதலில் கட்டுமரம், அதன் பிறகு இயந்திரம் பொருந்திய நாட்டுப் படகு, விசைப்படகு என்று மீன்பிடித்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.  கட்டுமரம் பயன்படுத்திய போது செலவு மிகக் குறைவு. கிடைத்ததை எல்லாம் பொதுவாக வைத்து சரிபாதியாக பிரித்துக் கொள்வார்கள்.  கட்டுமரத்தில் மூன்று பேர் சென்றால் 3000 ரூபாய் வருமானம் கிடைத்தால் ஆளுக்கு ஆயிரம் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள் . 


கூலி என்ற வார்த்தை ஆண்டான் அடிமை சமூகத்தை நினைவூட்டுகிறது. கடல்தொழிலில் எல்லாரின் உயிரும் சமம்,  எல்லாரின் உழைப்பும் சமம். எனவே இலாபம் சமமாக பங்கிடப்படும்." என்று கடல்பாட்டி பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டான் இனியன்.


" பாட்டி... பாட்டி.... இப்போ நாட்டுப் படகு, விசைப்படகு என்று மாறிவிட்டதே". . 


 ” ஆமாம் நாட்டுப் படகு, விசைப்படகு, வெளிப் பொருந்து இயந்திரங்கள் கொண்டு படகை செலுத்தும் போது மண்ணெண்ணெய், டீசல் போன்ற முதலீடுகள், படகு முதலீடுகள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது ஒரு படகில் 5 பேர் தொழில் செய்ய சென்றால், ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் மீன்பிடித்தலில் வருமானம் கிடைத்தால் அதில் 5000 ரூபாய் படகு உரிமையாளர் எடுத்துக் கொள்வார்கள். இதில் மண்ணெண்ணெய், டீசல், படகு தேய்மானம், இஞ்சின் பழுது நீக்குதல், வலைகள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவு செய்வதற்கு ஒதுக்கப்படும். மீதி 5000 அனைவருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப்படும்." என்று விரிவாக பேசிக் கொண்டிருந்தாள் கடல் பாட்டி. 


" பாட்டி மற்ற தொழிலுக்கும் கடல் தொழிலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது...? இனியன் கேள்வி கேட்டான். .


"இனியா , உலகில் மற்ற எந்த தொழிலிலும் இலாபத்தை பங்கிட மாட்டார்கள். மீன்பிடித் தொழிலில் மட்டும்தான் இலாபப் பங்கீடு உண்டு. இன்று பத்தாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான், 50,000 மீன் பட்டாலும் சமபங்குதான், ஐயாயிரம் ரூபாய் மீன் பட்டாலும் சம பங்குதான்". என்று பாட்டி சொல்லி முடிப்பதற்குள்,


"I love fisher People " அமுதா பூரிப்புடன் கூறினாள்.


" wow great " என்று துள்ளி குதித்தான் இனியன்.


" பாட்டி நாங்க அப்பா கிட்ட இது பத்தி கேட்க போறோம்...."  என்று இருவரும் தன் அப்பாவை நோக்கி ஓடினார்கள்.


 கடல் பாட்டி சொன்னது எல்லாம் அப்படியே ஒன்று விடாமல் தன் அப்பாவிடம் கேட்டார்கள்.


" எவ்வளவு மீன் பட்டாலும், பணம் கிடைச்சாலும் கரைக்கு திரும்பி வந்தாதான் மீனவனுக்கு வாழ்வு, அதனால்தான் கிடைத்ததை செலவு போக அனைத்தையும் பொதுவில் வைத்து பங்கு போட்டு பிரித்துக் கொள்வோம்" என்று கூறிய அப்பா தன் வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலை துப்பினார். பின் அதன் மீது மண் மூடினார். 


 இனியன் கடல் பாட்டி சொன்னதை நினைத்து கடலைப் பார்த்தான் . அது அமைதியாக இருந்தது. அழகாய் சிறுஅலை எழும்பி வந்தது . அருகில் இருந்த அமுதாவும், இனியனும் இணைந்து "I love you"  கடல்பாட்டி என்று கோரசாகக் கூறினார்கள்.


( கடல் பேசும் )



1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Sep 15
Rated 5 out of 5 stars.

👍👍👍

Like
bottom of page