top of page

புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 4

ree

1. நட்சத்திரங்கள் ஏன் கீழே விழுவதில்லை? 

-அருண் பிரசாத், நான்காம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.


அன்புள்ள அருண் பிரசாத்,

உங்கள் ஊரில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன என்று நினைக்கிறேன். நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் இருக்க முடியாது. ஆனால், இந்த நட்சத்திரங்கள் அந்தரத்தில் அல்லவா இருக்கின்றன. அப்படியானால், அவை கீழே விழுந்தாக வேண்டுமே, ஏன் விழுவதில்லை?

முதல் விஷயம் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வாயுப் பந்துகள். இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஈர்ப்புசக்தி உண்டு. அது மட்டுமில்லாமல், அவை அங்கம் வகிக்கும் பால்வெளியில் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டும், அவற்றினுடைய பால்வெளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. அவற்றின் உள்ளே நிலவும் ஈர்ப்புசக்தி, செயலற்றதன்மை (inertia) ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இடத்தை பராமரிக்கின்றன. சூரியனைச் சுற்றி சூரியக்குடும்பக் கோள்கள் எப்படி இடைவிடாமல் தாங்கள் சுழன்றுகொண்டும், சூரியனை சுற்றிவந்தும்கொண்டிருக்கின்றன. அதைப் போலவே நட்சத்திரங்களும் சுற்றிகொண்டிருக்கின்றன. இப்படி இடைவிடாது சுற்றுவதால், அவை கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை. 


2. கால யந்திரம் கண்டுபிடிக்கப்படுமா? அதில் பயணம் செய்து மனிதர்கள் குழந்தைகளாக மாற முடியுமா? 

- ஜோ.ச. சச்சின், நான்காம் வகுப்பு, ஈரோடு.


அன்புள்ள சச்சின்,

வணக்கம். மனிதர்கள் எல்லாருமே கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதும், கடந்த காலத்துக்குப் போக ஆசைப்படுவதும் இயல்புதான். நீங்கள் குழந்தையாக இருந்ததை படத்தில் பார்த்திருப்பீர்கள். அப்போது நீங்கள் செய்த குறும்புகளை, சேட்டைகளை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வது சுவாரசியமாக இருக்கும். அந்தக் காலத்துக்கே திரும்பிப் போய்விட முடிந்தால் நன்றாக இருக்குமே என ஆர்வமாக இருக்கும். இதுபோல் மனிதர்கள் பலரும் யோசித்தார்கள், யோசிக்கிறார்கள். புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் 'தி டைம் மெஷின்' (கால இயந்திரம்) என்கிற கதையை 1895இல் எழுதினார். 


அந்தக் கதையில் வரும் கால இயந்திரத்தில் ஏறினால் கடந்த காலத்துக்குப் போகலாம், எதிர்காலத்துக்கும் போகலாம். ஆனால், அதேநேரம் இன்றுவரை கால இயந்திரம் என்பது அறிவியல்ரீதியாக சாத்தியப்படவில்லை. கதைகளிலும் திரைப்படங்களிலும் கற்பனையில் இப்படி சித்தரிக்க முடிகிறது. நமது பழங்கதைகளில் கூடுவிட்டு கூடு பாய்தல், அதன் மூலம் ஒரு மனிதர் வேறொருவராக மாறுதல் பற்றியெல்லாம் கூறப்படுகிறது. கால இயந்திரம் இதுபோல் கடந்த காலம், எதிர்காலத்துக்கு செல்லலாம் என்கிறது. 

இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின்படி கடந்த காலம், எதிர்காலத்துக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை. அதேநேரம் ஹெச்.ஜி.வெல்ஸ் கால இயந்திரம் கதையை எழுதிய பிறகு, உலகில் பல சிறார் /பெரியவர்களுக்கான கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு வடிவங்களிலும் கால இயந்திரம் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு நடப்பு வாழ்க்கையைவிட பழைய நினைவுகளை ரசிப்பதும், தற்போது உள்ளதைவிட எதிர்காலத்தில் மாறுபட்ட வகையில் இருப்பதிலும் உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது. நம் எல்லாருக்குமே கற்பனை செய்வதில் ஆர்வம் இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.


எனவே, கால இயந்திரம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். மனிதர்கள் குழந்தையாக மாற நினைத்தால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிமையான வாழ்க்கையை உருவாக்கப் பெரியவர்கள் மெனக்கெட வேண்டும். தங்கள் மனதை என்றைக்கும் இளமையாகவும் வெள்ளந்தியாகவும் வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கே உரிய ஆச்சரியப்படும் தன்மை, எதையும் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை காலாகாலத்துக்கும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆணவம், மற்றவர் மேல் கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவற்றை விலக்கி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எல்லாரும் கால இயந்திரத்தில் உட்காராமலேயே குழந்தைகளாக மாறலாம்.

-அமிதா

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page