மனதை மலர்த்தும் நெருப்பு விதை
- க.சம்பத்குமார்
- Sep 15
- 2 min read

இலக்கிய வகைமைகளில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நாட்டுப்புற இலக்கியங்களைக் கருதலாம். மனித உழைப்பின் வழியே வாழ்வை மேம்படுத்திக் கொண்டே வந்த மனித இனம், தான் கற்றுக் கொண்டவைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த முற்பட்டன. குகைகளில் வாழ்ந்த காலம் முதற்கொண்டு மனிதர்களிடம் இப்பழக்கம் நீட்டித்துக் கொண்டிருப்பதை பல சான்றுகளின் மூலம் அறிய முடியும்.
மனிதர்களின் வாழ்க்கை பல்வேறு கட்ட மாறுதல்களைக் கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. அவர்களது அந்தந்த காலத்தின் வாழ்வியல்களை ஆவணமாக பாதுகாத்து வைத்திருப்பது நாட்டுப்புற இலக்கியங்கள் தான்.
எழுத்துவடிவம் இல்லாது வாய்வழியாகவே கடத்தப்படும் கதைகள், கதைப்பாடல்கள், புதிர்கள், பழமொழிகள், விடுகதைகள் என பல வடிவங்களில் நாட்டுப்புற இலக்கியங்கள் வகைபடுத்தப்பட்டிருந்தாலும் நாட்டுப்புறக் கதைகள் பலரின் விருப்பமான வாசிப்பிற்கானதாக உள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்களின் வழியே அக்கால மக்களின் அற உணர்வு, பண்பாடு, வரலாறு, பொழுதுபோக்கு, அறிவு உணர்ச்சி, விளையாட்டு ஆகியன குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் நிலம் சார்ந்த எண்ணற்ற நாட்டுப்புறக் கதைகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதை பல நேரங்களில் நம்மால் உணர முடியும். உலகின் பல நாடுகளின் நாட்டுப்புற இலக்கியங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமலே மெய்நிகர் பயணமொன்றை நாம் அந்தந்த நாடுகளுக்கு நிகழ்த்தியவர்களாக நாம் உணர முடியும்.
உலக மொழிகளின் நாட்டுப்புறச் சிறார் கதைகள் என்கிற குறிப்பினைத் தாங்கி வெளியாகி உள்ள “நெருப்பு விதை” புத்தகம் முழுவதும் உலகின் பல மொழிகளில் வெளியாகியுள்ள நாட்டுப்புறக் கதைகளை உள்ளடக்கியுள்ளது.
இக்கதைகள் அனைத்தும் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர் பிம்பம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் நாணற்காடன் அவர்கள்.
அல்பேனியா முதல் பாகிஸ்தான் வரையில் உலக வரைபடத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டதாக இருபத்தியிரண்டு நாட்டுப்புறக் கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நூலின் பின்னட்டை குறிப்பிடுவது போல வெவ்வேறு நிலங்களில் உலவும் கற்பனைகளும் படிமங்களும் தன்னியல்பானதாகவும் அவற்றுக்குள் பொதுத்தன்மை கொண்டிருப்பதாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது.
இந்த நூலிலுள்ள கதைகள் அதிக விவரிப்புகள் இல்லாது நேரடியாக கதையின் மையத்தை தொட்டுவிடுகின்றன.ஒவ்வொரு கதையும் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. கதையின் முடிவுகள் சிக்கலில்லாது மிக எளிதானதாக அமைந்திருக்கின்றது. குறைவான பக்கங்களிலேயே கதைக்கான நல்ல தீர்வையும் சொல்லிவிடுகிறது.
குழந்தைகள் விருப்பமாக வாசிக்கக்கூடிய கதைத் தேர்வுகளாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. தொகுப்பு முழுவதும் அறிவிற்கு வேலை கொடுக்கும் கேள்விகளுக்கு விடை காணும் கதாபாத்திரங்களாக பெரும்பாலும் பெண்களின் கதாபாத்திரங்களே அமைந்திருக்கின்றன. காடுகளில், மலைகளில் உழைக்கும் கதாபாத்திரங்களாக ஆண்களே உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது உலகின் பொதுசிந்தனையை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது.
மரங்களில் இலைகளை ஒட்ட வைக்கும் மனிதர்கள், மனிதத் தலையை நிலத்தில் புதைத்து வளர்க்கும் செடி, பூமிக்கு வெளிச்சமளிக்கும் நெருப்பு விதைகள் என குழந்தைகள் கற்பனையாக கண்டுணர நிறைய காட்சிகள் நிறைந்தனவாக இந்நூல் அமைந்திருக்கின்றது. அதேபோல உலகின் தோற்றம் குறித்த பண்டைய நாடுகளின் பார்வை இந்த நூலில் கதைகளாக அமைந்திருக்கிறது. இது குழந்தைகளின் வாசிப்பிற்கு மட்டுமல்ல அவர்களின் அறிவின் தேடலுக்கும் உதவியாக அமையும்.
குழந்தைகளை மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள இக்கதைத் தொகுப்பு குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூலாக அமைந்திருக்கின்றது. மொழிபெயர்ப்பு என்றுணர முடியாதபடி தமிழில் அனைவரும் எளிதாக வாசிக்க முயற்சியெடுத்திருக்க எழுத்தாளரும் பாராட்டுக்குரியவர்.
நெருப்பு விதை, வாசிப்பவர்கள் மனதை நிச்சயம் மலர்த்தும். நீங்களும் வாசியுங்கள்.
Comments