இயலில் தேடலாம்!
268 results found with an empty search
- சறுக்கு ரயில் சாகசத்தில் ஒரு கணிதப் பாடம்!
புத்தகங்களோடு ஒரு இன்பச் சுற்றுலா - 4 நம்ம ஊர்ல திருவிழா நடக்கிற நேரத்துல ராட்டினம், குடைராட்டினம் எல்லாம் பார்க்லாம். இப்பவும் கடற்கரைகள்லேயும் சிறுவர் பூங்காக்கள்ளேயும் பார்க்க முடியுது. தெருவுக்கே கூட சின்ன அளவு குடைராட்டினத்தைத் தள்ளிட்டு வர்றாங்க. செங்குத்தா மேலே போயிட்டு, கீழே இறங்குற ராட்டினத்தில அடியிலே இருக்கிறப்ப கைக்குட்டையையோ வேற ஏதாச்சும் ஒரு பொருளையோ தரையில போட்டுட்டு, மறுபடி பெட்டி கீழே வர்றப்ப அதை எடுக்கிறதே ஒரு சாகசமா இருக்கும். இப்ப, சுற்றுலா மையங்களா இருக்கிற மனமகிழ் பூங்காக்கள்ல தொடர்வண்டி போலவே பல பெட்டிகளோட இருக்கிற ரோலர் கோஸ்டர் எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. திறந்த நிலையில் இருக்கும் பெட்டிகளோட இருக்கைகள்ல உட்கார்ந்துகிட்டா, வண்டி புறப்பட்டு, வளைஞ்ச வளைஞ்சு திரும்புற தண்டவாளங்கள்ல வேகமாகப் போகும். ஏறி இறங்குற இடங்கள் நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கும். பயமா இருந்தாலும் அந்தச் சவாரி வேணாம்னு மறுக்கிறவங்க ரொம்பக் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க. ஆ…ஈ… ஊ… ஏ… ஓ… என்று கூச்சல் போட்டுக்கிட்டே அதிலே பயணம் செய்யத்தான் பொதுவா எல்லாரும் விரும்புவாங்க. அந்த ரோலர் கோஸ்டர் பயணத்தை கணினிக் கணித முறையில் நிரலாக்குவது பற்றி ஒரு சுவையான புத்தகம் வந்திருக்கிறது. நம்ம கைப்பேசியிலோ, இல்லாட்டி தொலைக்காட்சி விளையாட்டுக்கு உள்ளேயோ நுழையுறதுக்கு ஒரு கடவுச் சொல் பயன்படுத்துறோம். அந்தக் கடவுச்சொல் ஒரு கோட், இல்லைன்னா நிரலாக்கம்னு சொல்லலாம். நாம பயன்படுத்துற எல்லாத்தையுமே ஒரு முறையான வரிசைப்படியான செயலுக்கு உட்படுத்த முடியும். அதாவது நிரலாக்கம் அல்லது கோட் செய்ய முடியும். என்ன பயன்? அப்படி கணினி வழியில் செய்கிற நிரலாக்கத்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? அதைப் பத்திப் பேசுற புத்தகம்தான் ‘ஹவ் டு கோட் எ ரோலர் கோஸ்டர்’. தமிழ்ல சொல்றதுன்னா, ‘ஒரு சறுக்கு ரயிலை நிரலாக்கம் செய்வது எப்படி’. இந்த அறிவியல், தொழில்நுட்பத் புத்தகத்தை, ஒரு கதைப் புத்தகம் போல சுவைபட எழுதியிருப்பவர் ஜோஷ் ஃபங்க். சிறார் அறிந்துகொள்ள வேண்டிய நடைமுறை அறிவியலுக்கு எளிதான கதவைத் திறந்துவிடுதுன்னு இந்தப் புத்தகம் பத்திச் சொல்றாங்க. “கோடிங்” –இப்படி ஆங்கிலத்திலேயும் “கணினி நிரலாக்கம்” –இப்படித் தமிழ்லேயும் சொல்றோமே, இது எதிர்காலத்துல கண்டிப்பா தெரிஞ்சி வைச்சிருக்க வேண்டிய அடிப்படையான, இன்றியமையாத ஒரு திறன். அதை சலிப்பூட்டாமல், ரோலர்கோஸ்டர் சவாரி எப்படி சிலிர்ப்பும் சுவையுமாக இருக்குமோ அதையே தலைப்பாகவும் வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஃபங்க். புத்தகத்தின் ஒரு சிறப்பாக, “இப்படி இருக்குமானால்” (இஃப்), “அதன் பின்” (தென்) என்ற கூற்றுகளை நூலாசிரியர் வரிசைப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுறாங்க நூல் திறனாய்வாளர்கள். அவ்வாறு வரிசைப்படுத்துற செயலையும், அதற்குப் பிறகு ஏற்படும் சுழற்சி (லூப்) எனும் அடிப்படைக் கூறுகளையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் விளக்குறதா அவங்க சுட்டிக்காட்டுறாங்க. அன்றாட வாழ்க்கையிலேயே கணினி நிரலாக்கம எப்படிப் பயன்படுதுன்னு விளக்குறதன் மூலம், தொழில்நுட்பம் என்பது வெறும் கணினித் திரை அல்ல, அது நம்மைச் சுற்றியுள்ள உலகம்னு இந்தப் புத்தகம் புரிய வைக்குது. இதுவும் புத்தகத்தோட ஒரு சிறப்புதான்னு சொல்றாங்க. ரோலர் கோஸ்டர் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்தானே? அதையே பின்னணியா வைச்சிக்கிட்டு, அதன் பாதுகாப்பை உறுதி செய்றதுக்கும், சரியான நேரத்தில் சவாரியைத் தொடங்குறதுக்கும், வேகத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும் இந்தக் கணினி நிரலாக்கம் மிக முக்கியமானது. இது போன்ற வெற்றிகரமான நூல்களின் வெற்றிக்குப் பெரும்பாலும் எளிய மொழியும், வண்ணமயமான ஓவியங்களும் முக்கியமா பங்களிக்கும். இந்த நூலும் அப்படிப்பட்ட தெளிவான விளக்கப் படங்களைக் கொண்டிருக்குது. இது கடினமான கருத்துகளைக் கூட சிறுவர்கள் புரிந்துகொள்ள உதவுதுன்னும் பாராட்டியிருக்காங்க. குழந்தைகளை வெறும் வாசகர்களாக நிறுத்திவிடாமல், இளம் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்றாங்க. எல்லாருக்குமான புத்தகம் புத்தகத்துல இருக்கிற இன்னொரு முக்கியமான சிறப்பு என்ன தெரியுமா? பொதுவா நம்ம ஊர்லேயும் மத்த எல்லா நாடுகள்லேயும் பெண், ஆண் ஆகிய இரண்டு பாலினங்களை மட்டும்தான் அடையாளப்படுத்துவாங்க. ஆண்–பெண் சமத்துவம்னு அவங்களை அறியாமலே ஆணைத்தான் முதல்ல குறிப்பிடுவாங்க. இந்தப் புத்தகம், இந்த இரண்டு பாலின வரையறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக்க விரும்பாதவங்க இருக்காங்க. இருவகைப் பாலினமும் அல்லாதவங்களா வாழுற “நான்–பைனரி” மனுசங்களும் தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட மாதிரி, அவங்களையும் உள்ளடக்கியதா எழுதப்பட்டிருக்காம். அதுக்காகவே ஜோஷ் ஃபங்க்கைப் பாராட்டலாம்னு தோணுதுல்ல? சரி, இப்படிப்பட்ட பாலின சமத்துவ எண்ணம் எப்படி வந்திருக்கும்? “நிரலாக்கம் செய்திடும் சிறுமிகள்” (கேர்ஸ் ஹூ கோட்) என்ற கருத்துடன் ஒரு திட்டத்தை அமெரிக்காவிலே தொடங்கினாங்களாம். படிப்படியா அது மத்த நாடுகளுக்கும் பரவியிருக்காம். நம்ம நாட்டிலேயும் இதைப் பல இயக்கங்கள் ஏற்றுக்கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாத சமத்துவம் என்ற கருத்தைப் பரப்பிட்டு இருக்காங்க. அந்த இயக்கத்தோட ஒரு பகுதியாத்தான், நான்–பைனரி மக்களையும் சேர்த்துக்கிடணுன்னு வலியுறுத்துறாங்க. அதை ஏத்துக்கிட்டுதான் ஜோஷ் ஃபங்க் தன் புத்தகத்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி எழுதியிருக்கிறாராம். இந்த நூல் 2019ஆம் ஆண்டுல வெளிவந்துச்சு. முதல்ல சொன்ன திட்டத்துல பல புத்தகங்களைத் தொடர்ச்சியா வெளியிட்டுட்டு வர்றாங்க. இதை வெளியிட்டிருக்கிற பதிப்பகத்தோட பெயர் ‘பெங்குயின் யங் ரீடர்ஸ்’. உலகம் முழுக்க இந்த இயக்கத்தோட புத்தகங்கள் பல லட்சக்கணக்கான படிகள் வித்திருக்காம். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை உலக அளவில் அதிக விற்பனையான புத்தகங்களோட பட்டியல்ல, இந்தத் தொடரையும் சேர்த்திருக்காங்க. பேர்ளும் பாஸ்கலும் கதைப் புத்தகம் இல்லைன்னாலும் கூட, இதிலே ஒரு பொண்ணு வர்றாங்க. அவங்க பேரு பேர்ள். அவங்களுக்குத் துணையா ஒரு ரோபோ வருது. அதோட பேரு பாஸ்கல். அவங்க ரெண்டு பேரும் ஒரு மனமகிழ் பூங்காவுல இருக்கிற ரோலர் கோஸ்டரிலே ஒரு சுத்து சவாரிக்கு எவ்வளவு பேரை ஏத்திக்கிடறது, எத்தனை அடையாள வில்லை விக்கிறது, அடுத்த சவாரியைத் தொடங்குறதுக்கு எத்த நேரம் எது அப்படீங்கிறதையெல்லாம், கணினியைப் பயன்படுத்தி நிரலாக்கம் செய்றாங்க. சறுக்கு ரயிலை இயக்குறவங்களுக்கும், அதிலே பயணம் செய்ய விரும்புறவங்களுக்கும் இவங்களோட நிரலாக்கம் ரொம்ப உதவியா இருக்கு. இதைச் சொல்றப்பவே, நிரலாக்கம்னா என்ன, அது எங்கேயெல்லாம் பயன்படுது, இதை எப்படி சிரமமில்லாம கத்துக்க முடியும்கிற விளக்கங்கள் கணினித் தரவுத்தளங்களின் தகவல்கள் போல அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்குது. கதை வாசிக்கிறது போலவே சுவையாவும் இருக்கின்றன. அந்த ரோபோவுக்கு பாஸ்கல்னு பெயர் வைச்சிருக்காங்க இல்ல? பிரெஞ்சு நாட்டவரான பிளேஸ் பாஸ்கல் என்ற கணித மேதையின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்குது. 17ஆம் நூற்றாண்டுல வாழ்ந்தவரான அவர் கணித ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய பங்களித்தவர். இன்றைய கணினிக்கெல்லாம் முன்னோடியாக இயந்திரவியல் கணக்குக் கருவியை உருவாக்கியவர். நூலாசிரியர் ஜோஷ் ஃபங்க் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்குமான படைப்புகளுக்குப் புகழ்பெற்றிருப்பவர். மிகவும் அனுபவம் வாய்ந்த ஓர் எழுத்தாளர். கல்வி சார்ந்த, அறிவியல் தொடர்பான, வரலாறு பேசுகிற, கணிதத்தை விளக்குகிற புத்தகங்களை ஏராளமா எழுதியிருக்கிறாராம். வாய்ப்பு உள்ளவங்க, இணையத்தளத்திலே ஒரு சிற்றுலா போய் இந்தப் புத்தகத்தைப் பெற்றுப் படித்துப் பயனடையலாம். அ.குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.
- நெல்லிக்காய்
அழகு குண்டு நெல்லிக்காய் ! மெழுகு பளிங்கு நெல்லிக்காய் ! வெளிர் பச்சை நெல்லிக்காய் ! களிப்பாய் உண்ண நெல்லிக்காய்! அரிஅரியாய் நெல்லிக்காய் ! எளியோர் ஆப்பிள் நெல்லிக்காய்! சாறு குடிக்க நெல்லிக்காய் ! சாதம் செய்ய நெல்லிக்காய் ! சத்து நிறைந்த நெல்லிக்காய் ! ரத்தம் கூட்டும் நெல்லிக்காய் ! தித்திக்கும் நெல்லிக்காய் ! தினமும் தின்ன நெல்லிக்காய் ! கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
- யூனிசெப் பிரகடனம் - சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் - 9
ஒரு குடும்பம். சிறியது; ஆனால் அழகானது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளம் இணையரின் குடும்பம் அது. இருவருமே படித்தவர்கள். இருவரும் நவீனமான பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் பணி செய்பவர்கள். கை நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள்;ஆனால், அதற்குப் பல மடங்கு அதிகமாக ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பணிகளில் கடும் உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள். எப்போதும் மனமும்,உடலும் அழுத்தம் தாங்காமல் துவண்டு போகும் நிலையில் இருப்பவர்கள். பணப் பற்றாக்குறை இல்லைதான்; ஆனால், தாங்கமுடியாத வேலைப்பளு, உடல்-மன அழுத்தங்களின் விளைவாக இருவருக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வரும் தமிழ் இலக்கிய மொழியில் சொன்னால், 'ஊடல்'கள் வரும்! திருமணமாகி இரண்டாவது ஆண்டில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மிக அழகான பெண் குழந்தை. குறுகுறு நடந்து, சிறு கைகள் நீட்டி மழலை மொழியில் பேசிக் களிப்பூட்டும் சிறுமியாக அக்குழந்தை வளரத் தொடங்கியது. பெண் குழந்தை என்பதால் கணவனுக்குச் சற்றே ஏமாற்றம்;வருத்தம்;ஏக்கம். அந்த உணர்வுகள் அவரின் தாயாரின் தூபம் போடுதலால் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெருகி வளர்ந்தன. அலுவலகம் விட்டு வரும் போதே அலுப்பும் சலிப்புமாக வரும் கணவன்; வீட்டிலோ குழந்தையைப் பார்த்துக்கொண்டு சமையலில் கவனம் செலுத்தியவாறு பரபரவென்று இயங்கும் மனைவி. "இவ்வளவு நேரமாகுது, ஒரு காப்பி குடுக்கக்கூட உன்னால முடியலையா?" என்பான் கணவன். முதலில் கொஞ்ச நாள்கள் வரை ஒரு பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, " இதோ கொண்டு வர்றேங்க" என்று காப்பியுடன் போய்க் கொண்டிருந்த மனைவிக்கு, ஓரிரு சந்தர்ப்பங்களில் இயலாமை காரணமாகக் கோபம் வந்தது. முதலில் இலேசான முணுமுணுப்புடன் நின்று போன அந்தக் கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியது. போதாக்குறைக்கு மனைவியின் நிறுவனத்தில் வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. பெண்களை இரவு ஷிப்டுகளிலும் வேலைக்கு வருமாறு செய்யலாம் என ஒரு நீதிமன்றத்தீர்ப்பு வந்தாலும் வந்தது, அந்தப்பெண்ணின் நிறுவனம் அவளது வேலை நேரத்தை மாலை நான்கு மணியிலிருந்து இரவு மூன்று மணி வரை என மாற்றியது. வீட்டில் பூகம்பம். பெண்ணுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. குழந்தை அம்மாவுக்காகத் தவித்தது. கணவன் வேலை முடிந்து வரவே இரவு ஏழு மணி கூட ஆகி விடும்; ஆனால், மனைவி நான்கு மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தார் கள். கணவனின் மனதில் ஆயிரத்தெட்டுச் சந்தேகங்கள். இதற்கு மேல் விவரிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சண்டைகள். முடிவுறாத வாக்குவாதங்கள். மனைவிக்குத் தெரியாமலேயே கணவன் வெளி நாட்டு வேலைக்கு விண்ணப்பித்து திடுதிப்பென்று கிளம்பிப் போவதற்கும் தயாராகி விட்டான். மனைவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வளவோ பேசியும் கணவனின் முடிவில் மாற்றமில்லை. அதை விட மோசம், குழந்தையைத் தானே அழைத்துக் கொண்டு போகப்போவதாகச் சொன்னான் அவன். இரகசியமாகத் திட்டம் தீட்டி அவனும்,அவனின் குடும்பத்தினரும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.குழந்தை யைக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தன் அம்மா, அப்பா இருவரையும் கூடவே வெளிநாட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான் கணவன். குழந்தை,கணவன் இருவரையும் பிரிந்த பெண், முதலில் நிலைகுலைந்து போய் அலுவலகத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தாள். தன்னை ஒரு வழியாக உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் சொன்னார் : "பெற்றோரில் ஒருவரது சம்மதம் இல்லாமல், அவருக்குத் தகவல் கூட த் தெரிவிக்காமல் ஒரு குழந்தையைக் கணவனோ அல்லது மனைவியோ எவர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது, சட்டப்படி அது தவறு. நீங்கள் உங்கள் கணவன் மீதும், மாமனார்-மாமியார் மீதும் வழக்குத் தொடரலாம். யூனிசெப் பிரகடனத்தின்படி, ஒரு குழந்தையை, அந்தக் குடும்பத் திற்குத் தொடர்பேயில்லாத வெளி நபர் ஒருவரோ அல்லது கணவன்- மனைவி இருவரில் எவர் ஒருவரோ மற்றவரின் அனுமதியில்லாமல்,அவருக்குத் தகவல் சொல்லாமல் வெளிநாட்டிற்கு அழைத்துப் போவது முடியாது. அது சட்டப்படி குற்றம்!" என்று விரிவாக விளக்கினார் வழக்கறிஞர். இப்போது மனைவியின் நிலைமை பரிதாபமாக இருந்தது.'கணவன் மீதும், மாமனார் மாமியார் மீதும் வழக்குத் தொடுக்கலாமா? உலகம் என்ன சொல்லும்?ஏற்கெனவே நம் மீது கணவனுக்கு நம்பிக்கையில்லை. இப்போது என்ன செய்வது?' என்று குழம்புகிறாள் மனைவி. இது கதையல்ல; நிஜம். நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தின் பல குடும்பங்களில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. யுனிசெப் நிறுவனம் இது பற்றிய விதி எண் -11 இல் மேற்கண்ட விளக்கத்துடன் இன்னொரு விஷயத்தை யும் சேர்த்தே சொல்கிறது. அதன்படி, "குழந்தைகளை உரியவர்கள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஒரு நாட்டை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு யாரேனும் செய்தால் அது சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்தக் குழந்தையையும் வெளியே கடத்திக் கொண்டு போக முடியாதபடி கவனித்து தடை செய்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்." கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 7
1. ஏன் ஊர் ஊருக்கு வெயில், மழை என்று மாறிமாறி கிளைமேட் இருக்கு? - ஆதிரன், 2ஆம் வகுப்பு, கோவில்பட்டி. ஆதிரன் வணக்கம். நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்க கேட்டிருக்கிற கேள்விக்கான பதில் ரொம்பப் பெரிசு. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். ஒரு நாளிலோ, சில நாட்களுக்கோ நீடிக்கும் வெயில், மழை, காத்து போன்றவற்றை Climate என்று சொல்லக் கூடாது. Weather-னுதான் ஆங்கிலத்தில் சொல்லணும். தமிழில் அதற்குப் பெயர் தட்பவெப்பநிலை. இந்த தட்பவெப்பநிலை ரொம்ப காலத்துக்கு எப்படி இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணினா, அதுதான் கிளைமேட் (காலநிலை). அதனால, ரெண்டு வார்த்தையையும் குழப்பிக்கக் கூடாது. சரி, இப்போ உங்க கேள்விக்கு வருவோம். இயற்கைல நிறைய விஷயங்கள் சுழற்சியின் அடிப்படையில்தான் காலம்காலமாக நடைபெற்று வருது. பருவகால மாற்றமும் (Seasonal Cycles) அப்படிப்பட்டதுதான். பொதுவா கோடை காலம், மழைக் காலம், குளிர் காலம்னு மூன்று வகை பருவங்கள் நமக்கு வரும். இன்னும் தெளிவா சொல்லணும்னா, நமது முன்னோர்கள் காலங்களை ஆறா பிரிச்சிருக்காங்க. ஜனவரி மாசத்துல முன்பனிக்காலம் தொடங்கினா பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம், கார்காலம், கூதிர்காலம்னு (குளிர்காலம்) டிசம்பர் மாசத்துல முடியும். ஏன் இப்படி காலங்கள் வேறுபடுது? ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கிற நமது பூமி சூரியனை சுத்தி வருது. ஆனா, இப்படிச் சுத்தும்போது, அது சாதாரண பந்து மாதிரி சுத்தல. ஆரஞ்சுப் பழத்தோட நடுவுல ஒரு கம்பிய செருகி, அதை 23.5 டிகிரி சாய்வுக்கு சாய்ச்சா எப்படி இருக்கும்? பூமியும் அப்படித்தான் சாஞ்சுக்கிட்டே சூரியனை சுத்தி வருது. இப்படி சுத்தும்போது பூமி மேல இருக்கும் நிலப்பகுதிகள் சிலவற்றுக்கு, ஆண்டின் சில மாதங்களுக்கு சூரிய வெப்பம் கம்மியா போய் சேரும். இதனால அந்தப் பகுதிகள்ல குளிர் அதிகமா இருக்கும். அதேநேரம் சில பகுதிகள் மேல சூரிய ஒளி அதிகமாக படும். அப்ப அங்க வெப்பம் அதிகமா இருக்கும். பூமியின் வட பகுதிகள் குளிரா இருக்கும்போது, தெற்கு பகுதிகள் வெப்பமாகவும், பின்னர் அப்படியே தலைகீழா மாறியும் இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்துல இயற்கை நீர் சுழற்சி பற்றி படிச்சிருப்போம். அதாவது நீர்நிலைகள்ல இருக்கும் நீரை, வெப்பம் ஆவியாக்கும். இந்த நீராவி மேல போகும். அந்த நீராவி ஒன்னுசேர்ந்து மேகமாத் திரளும். மேகத்தில் நீராவி சுருங்கி மழைத்துளிகள் உருவாகும். மழையா பெய்யும். இதுவே பருவமழை காலம் என்றால் மழை அதிகமாகப் பொழியும். சரி அதுக்காக மழை, குளிர் காலத்துல வெயில் அடிக்காதா? அடிக்கும். அடிச்சாலும் வெயில் அதிகமா இருக்காது, வெயில் அடிக்கும் நாட்களும் இந்தக் காலத்துல குறைவா இருக்கும். சரி, கோடை காலத்துல மழை பெய்யாதா? அரிதா கோடை மழை பெய்யும். அதேநேரம் நிறைய நாள் வெப்பமா இருக்கும். நம்ம ஊரோட தட்பவெப்பநிலை குறிப்பிட்ட காலத்துக்கு வெப்பமாவும் குறிப்பிட்ட காலத்துக்கு மழையாவும் இருக்கிறதுக்கு அடிப்படைக் காரணம் பூமி சாய்வா இருக்கிறதுதான். அத்துடன் காத்து, மழை, பருவமழை, புயல் போன்றவையும் தட்பவெப்பநிலையை தீர்மானிக்கிறதுல தாக்கம் செலுத்துகின்றன. பூமியின் இயற்கைச் சமநிலை, இயற்கை சுழற்சிகள் தொந்தரவுக்கு உள் ஆகாம முறையா இருக்கிறப்ப, இதுல பெருசா எந்தப் பிரச்சினையும் வர்றதில்ல. அதேநேரம், ஒரு நாள் மழையும் ஒரு நாள் வெயிலும் மாறிமாறிக்கூட வரலாம். ஒரு ஊருல மழையும், பக்கத்து ஊருல மழை இல்லாமலும் இருக்கலாம். மழை மேகங்கள் ஒன்றுதிரளும்போது அவை ரொம்பப் பெரிசா இல்லாவிட்டால் சூரிய வெப்பம், பெரிய காற்றடிக்கும்போது மேகம் நகர்ந்துசென்றுவிடும். அதேநேரம் மழை மேகம் ரொம்ப அடர்த்தியா இருந்தா, சூரிய வெப்பம், காற்றால ஒன்னும் செய்ய முடியாது. காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் போன்றவை உருவாகும்போது நிறைய மேகங்கள் ஒரு பகுதில திரண்டுவிடும். சூரிய வெப்பமோ, சாதாரண காற்றோ அதை நகர்த்திவிட முடியாது. இதனால் அடுத்தடுத்து பல நாட்களுக்கு மழை பெய்யும். பக்கத்துப் பக்கத்து ஊர்கள்லயும் மழை பெய்யும். பல நாட்களுக்கு சூரிய வெப்பத்தையே பார்க்க முடியாமல் போகும்.
- தத்துவம் அறிவோம் - 9
ஆரம்பகாலத்தில் மனிதர்கள் இயற்கையைக் கண்டு பயந்தார்கள். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோடைகாலம் ஏன் வருகிறது? மழைக்காலம் ஏன் வருகிறது? குளிர்காலம் ஏன் வருகிறது? வசந்த காலம் ஏன் வருகிறது? ஒவ்வொரு காலத்திலும் பூமி மாற்றமடைகிறது. சில உயிர்கள் அழிகின்றன. சில உயிர்கள் உருவாகின்றன. சில உயிர்கள் புதைகின்றன. சில உயிர்கள் முளைக்கின்றன. செடி, கொடி, மரங்களில் பூக்கள் பூக்கின்றன. பூத்தவுடன் எங்கிருந்தோ பூச்சிகள் வந்து தேன் அருந்துகின்றன. பூச்சிகள் வந்து சென்றதும் காய் காய்க்கின்றது. சில காலம் கழித்து காய் பழுக்கின்றது. பழுத்த பழங்களைச் சாப்பிடப் பறவைகள் வருகின்றன. பறவைகள் பறந்து சென்ற இடங்களில் அந்த மரங்கள் முளைக்கின்றன. இயற்கையின் இந்தச் சங்கிலியை இப்போது நாம் முறையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால் இப்படி வரிசையாகச் சொல்ல முடிகிறது. ஆனால் ஆதிமனிதர்களுக்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது. எல்லாம் தனித் தனி நிகழ்வாகத் தெரிந்தன. தனித் தனித்தனி நிகழ்வுகளின் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ளவே பல நூற்றாண்டுகள் ஆனது. அப்படி என்றால் திடீர் திடீர் என்று நிகழும் இயற்கை மாற்றங்களை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால் அடைமழையோ, கொடும்வெயிலோ, புயற்காற்றோ, பூகம்பமோ, நிலநடுக்கமோ எது நடந்தாலும் பயந்தார்கள். ஏன் பயப்பட வேண்டும்? அந்தப் பேரிடர்கள் அழிவைக் கொண்டு வந்தன. புயலில் செடி கொடி மரங்கள் அழிந்தன. விலங்குகள், பறவைகள் அழிந்தன. மனிதர்களும் எதிர்பாராமல் அழிந்தனர். அதுவரை இருந்த ஒன்று திடீரென்று இல்லாமல் போனால் எல்லோரும் பயப்படுவார்கள் தானே. தங்களை மீறிய சக்தியைக் கண்டு பயந்தனர். அவற்றை ஆவிகள் என்று நம்பினர். எனவே இயற்கையின் அடிப்படைகளான நிலம், நீர், காற்று, மண், வெளி (வானம்) எல்லாவற்றையும் வழிபடத் தொடங்கினார்கள்.. இயற்கையில் அவர்கள் பார்த்த ஒவ்வொரு புல்லிலும் ஆவி இருக்கிறது. ஒவ்வொரு பூச்சியிலும் ஆவி இருக்கிறது. மரத்திலும் ஆவி இருக்கிறது. மனிதர்களிலும் ஆவி இருக்கிறது. என்ற நம்பிக்கை வளர் ந்த து. அதனால் தன்னுடன் இருந்த மனிதர்கள் இறந்த போது அவர்களையும் வழிபட ஆரம்பித்தான். அதேபோல அவனுக்கு நோயைக் கொடுத்த, அழிவைக் கொண்டு வந்த, பயிர்களை அழித்த, வேறு பல துன்பங்களைக் கொடுத்த பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றையும் வழிபட்டான். அதே போல அவனுக்கு வளத்தைக் கொடுத்த செடி, கொடி, மரம், பயிர்கள், பறவைகள், விலங்குகளையும் வழிபட்டான். அப்போது மனிதர்கள் குழுக் குழுவாக வாழ்ந்தனர். அதைக் குலம் என்று அழைத்தனர். ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு பொருளை, தாவரத்தை, விலங்கை தங்களுடைய குலச் சின்னமாக அதாவது குல தெய்வமாக வழிபட்டனர். உதாரணத்துக்கு ஒரு குலம் எலியைக் கும்பிட்டனர். ஒரு குலம் யானையைக் கும்பிட்டனர். ஒரு குலம் உருளைக்கிழங்கைக் கும்பிட்டனர் ஒரு குலம் வேப்பமரத்தைக் கும்பிட்டனர். ஆனால் எல்லாக்குலங்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை வழிபட்டனர். இப்படித் தான் ஆரம்பத்தில் வழிபாடுகள் தோன்றின. இந்த வழிபாடுகளில் நாம் போன அத்தியாயத்தில் பார்த்த கேள்விகளுக்கான ஆரம்பம் இருந்த து. மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் இதுவரையிலும் இனிமேலும் வரும் த த்துவங்கள் அனைத்துமே இந்தக் கேள்வியைச் சுற்றியே தான் இருக்கும். சரியா? ( தத்துவம் பயில்வோம் ) உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- வண்ணங்களும் வடிவங்களும்
பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் உடலில் பல்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் இருப்பதைப் பார்க்கலாம். இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவை உண்டு. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த வண்ணங்களும் வடிவங்களும் மீன்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றன. பவளத்திட்டுகளில் இருக்கும் நிறங்களோடு ஒன்றி மறைந்துகொள்ள சில மீன்களின் உடல் நிறங்கள் உதவுகின்றன. "நான் ஆபத்தானவன், விஷம் கொண்டவன், என்னை சாப்பிடாதீர்கள்" என்று வேட்டையாடிகளை எச்சரிக்கவும் பளீர் வண்ணங்கள் உதவுகின்றன. பல பவளத்திட்டு மீன்களின் உடலில், வட்டமான கறுப்புப் புள்ளிகளைப் பார்க்க முடியும். இவற்றை ஆங்கிலத்தில் "Eyespot" என்று அழைப்பார்கள். இவற்றுக்கு இரண்டு வகையான பயன்கள் உண்டு. வேட்டையாடிகளையே பயமுறுத்தும் பெரிய விலங்குகளின் கண்களைப் போல இந்த வட்டங்கள் இருப்பதால் வேட்டையாடிகள் பயப்படலாம். இன்னொரு பயன் என்ன தெரியுமா? இந்த வட்டங்கள் மீன்களின் வால் பகுதியில் இருக்கும். டக்கென்று பார்க்கும் வேட்டையாடி, இரை மீனின் தலை அந்தப் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாலுக்கு அருகில் கடிக்க வரும். இதை முன்னாலிருந்து கவனிக்கும் குட்டி மீன், தப்பித்து ஓடிவிடும்! பல மீன்களின் உடலில் வரிகள் இருக்கும். கூட்டமாக நீந்தும்போதோ அலைகளுக்கு இடையில் போகும்போதோ இந்த வரிகள் அப்படியும் இப்படியும் அசையும். தூரத்திலிருந்து பார்க்கும் வேட்டையாடி மீன், இரை மீனின் உடல் எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்று தெரியாமல் குழம்பிவிடும். Jack Knifefish என்ற ஒரு மீன் இருக்கிறது. இது மேற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மட்டுமே இருக்கக்கூடிய மீன். இதன் விநோதமான உடல் அமைப்பும் வேட்டையாடிகளைக் குழப்புவதற்கு ஏற்பட்டதுதான். பவளத்திட்டுகளில் வாழும் மீன்களின் இந்த அழகான வண்ணங்களும் வடிவங்களுமே அவற்றுக்கு சில நேரம் ஆபத்தானதாக மாறிவிடுகின்றன. இந்த அழகான உருவம் காரணமாக இவை மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. இப்படி வளர்க்கப்படுவதற்காக இவற்றை அதிக அளவில் பிடிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இவற்றைப் பிடித்தால் இந்த மீன்களின் இனம் அழிவின் விளிம்புக்குப் போகலாம். தொட்டியிலேயே பிறந்து அங்கேயே வளரும் மீன்கள் என்றால் பரவாயில்லை, அவற்றை நாம் ஆசையாக வளர்க்கலாம். இவ்வாறு இயற்கை சூழலில் இருக்கும் மீன்களை அளவுக்கு அதிகமாகப் பிடிக்கக்கூடாது. அரியவகை மீன்கள், exotic pet fish என்பது போன்ற பெயர்களோடு பல காணொளிகளை நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.அவை எங்கிருந்து வந்திருக்கின்றன என்று முழுவதும் தெரிந்துகொண்டபிறகே வளர்க்க ஆரம்பிக்கவேண்டும். அழகாக இருக்கிறதே என்று ஆசைப்பட்டு நீங்கள் வாங்கும் ஒரு மீன், அழியும் நிலையில்கூட இருக்கலாம். நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நீங்கள் இதைப் பின்பற்றுவீர்கள்தானே? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது ,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும் , விலங்குகளும் பாலினமும் , ஆழ்கடல், சூழலும் பெண்களும் , நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
- தத்துவம் அறிவோம் - 8
ஏன்? எதற்கு? எப்படி? தத்துவத்தின் அடிப்படைகள் தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது? மனித உழைப்பு. இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, சரியா?. ஒரு விஷயம் தெரியுமா? இன்று இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், வரலாற்றியல், பண்பாடு, இலக்கியம் என்று எத்தனையோ அறிவுத்துறைகள் இருக்கின்றன அல்லவா? தொடக்கக் காலத்தில் இவற்றையும் இயற்கைத் தத்துவ இயல் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகே அறிவியல் துறைகளிலிருந்து தத்துவத்தை பிரித்திருக்கிறார்கள். அதனால் என்ன? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், தத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதாவது எல்லா அறிவுத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுபவை. இன்னொரு வகையில் இந்த உலகம், இயற்கை, மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று பாதிப்படையும்போது, இன்னொன்றும் அதனால் தாக்கம் பெறும். எடுத்துக்காட்டுக்கு காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தியது யார்? மனிதர்கள்! இப்போது அதன் விளைவுகளை அனுபவிப்பது யார்? மனிதர்கள் மட்டுமா? நிச்சயமாக இல்லை. அதற்கு நேரடியாகக் காரணமாக இருக்காத அனைத்து உயிர்களும் தாக்கத்தை அனுபவிக்கின்றன. இயற்கையின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. உயிர்ச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்கிறோம். உலகில் எதுவும் தனியாக நிகழ்வதில்லை. இந்த உலகத்தில் நடைபெறும் எல்லாச் செயல்களுக்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. தத்துவம் என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான். தத்துவம் என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை அல்ல. அந்தரத்தில் அரண்மனை கட்டுவதும் இல்லை. மாயாஜாலமும் இல்லை. சரியா? தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளைப் போன்ற மற்றுமொரு அறிவுத்துறை. மூளை என்கிற உறுப்பின் செயல்பாடு. மனிதர்களின் மூளை வளர்ச்சியடையும்போது அதன் செயல்பாடுகளும் நுட்பமடைகிறது. புதிய சிந்தனை முறைகள் உருவாகின்றன. ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய விளக்கம் என்று சொல்லலாம். அவையும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவைதான். ஆனால், இலக்கியமும் தத்துவமும் மனிதர்களின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கம் செலுத்துகிற அறிவுத்துறை எனலாம். மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றிய காலம் முதல் அவர்களிடம் கேள்விகள் உருவாகிவிட்டன. நான் ஏன் பிறந்தேன்? எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? மனிதர்களிடையே பாகுபாடுகள் எப்படி வந்தன? கடவுள் இருக்கிறாரா? யார் கடவுள்? கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மதம் என்றால் என்ன? இவ்வளவு கடவுளர்கள் எப்படி உருவானார்கள்? இவ்வளவு மதங்கள் எப்படி உருவாயின? சாதி என்றால் என்ன? மேல்சாதி, கீழ்சாதி என்கிற வேறுபாடு எப்படி உருவானது? மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டா? மரணத்துக்குப் பிறகு மறுபிறவி உண்டா? மனிதனைவிட உயர்வான உயிரினம் தோன்றுமா? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றின. தோன்றிக்கொண்டே இருக்கினறன. தோன்றிக்கொண்டேதான் இருக்கும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். யார், என்ன, எப்படிச் சொன்னார்கள்? அடுத்தடுத்து பார்ப்போம். (தத்துவம் பயில்வோம்) உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஈஸ்டர் தீவு (ராப்பா நூயி)
தென்னமெரிக்க நாடான சிலி நாட்டிலிருந்து, மேற்கே மூவாயிரத்து எழுநூறு கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குப் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஒரு சிறிய தீவு அமைந்திருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வெடித்துக் கிளம்பிய எரிமலை குளிர்ந்ததால் இந்தத் தீவு கடலுக்கு நடுவே உருவானது. முக்கோண வடிவிலான இந்தத் தீவு அறுபத்தி மூன்று சதுர மைல் பரப்பே உடையது. முழுத் தீவும் பெரும்பாலும் எரிமலைக் கற்களால் ஆனது. மூன்று முக்கிய எரிமலைகளான ரானோ காவு, தேரெவாகா மலை மற்றும் ரானோ அரேகா போன்றவை இந்தத் தீவின் வடிவமைப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்தத் தீவில் என்ன சிறப்பு? 1722 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, ஈஸ்டர் திருநாள் அன்று, டச்சு மாலுமியான ஜேக்கப் ரகவீன் என்பவர் இந்தத் தீவுக்கு முதன்முதலில் வந்திறங்கினார். இத்தீவுகளில் மனிதர்கள் வாழ்வதை வெளியுலகத்துக்கு அறிவித்தார். அவர் வந்திறங்கிய நாளின் நினைவாக அவர் இதற்கு ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். ஆனால் இங்கு வசித்துக் கொண்டிருந்த பூர்வகுடிகள் வைத்திருந்த பெயர் ராப்பா நூயி. இங்கு கண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டக் கற்சிலைகளே ஜேக்கப் ரகவீன் கண்டறிந்த ஆச்சரியம். ஒவ்வொரு சிலையும் ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்தச் சிலைகளை மோவாய் என்று அழைக்கிறார்கள். மோவாய் சிலைகள் மனித முக வடிவமைப்புடன், நீண்ட காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைப்பகுதியில், சிலைகளுக்கு ஒரு சிவப்பு நிற 'தொப்பி' போன்ற அமைப்பு (புக்கவ்) வைக்கப்பட்டிருக்கும். இச்சிலைகள் பெரும்பாலும் மார்பளவு வரையிலான உருவங்களாகவே உள்ளன. இருப்பினும் சில முழு உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. பத்து மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலைகள் சுமார் 80 டன் எடை கொண்டவை. இதுவரை எண்ணூற்று எண்பத்து ஏழு சிலைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தச் சிலைகள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின? இந்தத் தீவுகளின் பூர்வகுடிகளான ராப்பா நூயி மக்கள் இச்சிலைகளை உருவாக்கியவர்கள் ஆவர். அவர்கள் பாலினேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழியும் ராப்பா நூயி என்றே அழைக்கப் படுகிறது. அவர்களது நாகரீகத்தில் இறந்த தங்களது மூதாதையரின் ஆவிகளைச் சிறப்பிக்கும் விதமாக இந்தச் சிலைகளை அமைத்தனர். தீவைக் காக்கும் தெய்வங்கள் போல இச்சிலைகள் கடலைப் பார்க்காமல், கடலுக்கு முதுகு காட்டி, தீவின் கிராமங்களைப் பார்க்கும் வண்ணம் வரிசையாக நிற்கின்றன. எரிமலைப் பாறைகளால் இந்தச் சிலைகளைச் செதுக்கினர். பின்னர் இச்சிலைகளைக் கயிறுகள் கொண்டு கட்டி, மரக்கட்டைகளைத் தரையில் அடுக்கி அவற்றின் மீது வைத்து நகர்த்தி, கடற்கரைப் பகுதிக்குச் சென்று கல்மேடைகளில் நிறுத்தி வைத்தனர். இந்தக் கல்மேடைகள் ‘ஆஹூ’ என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் மோவாய் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராப்பா நூயீ நாகரிகம், சில நூற்றாண்டுகளுக்குள் திடீரென வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. இருப்பினும், ஆய்வாளர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்: காடழிப்பு: மோவாய் சிலைகளை நகர்த்தவும், போக்குவரத்திற்காகவும் ராப்பா நூயீ மக்கள் தீவில் இருந்த அனைத்து பெரிய மரங்களையும் வெட்டித் தீர்த்தனர். மரங்கள் இழந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, படகு கட்ட முடியாமல் மீன்பிடித்தலும் தடைபட்டது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. உள்நாட்டுப் போர்: பஞ்சம் தலைவிரித்தாடியபோது, குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிலைகளைத் தூக்கி நிறுத்துவதைக் கைவிட்டு, ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. வெளியார் வருகை: ஐரோப்பியர்கள் தீவுக்கு வந்த பிறகு, அங்கு அடிமை வியாபாரம், தொற்றுநோய்கள் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பூர்வீக மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இன்று, ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு மண்டலமாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சிலி நாட்டினர் தங்கள் கட்டுப்பாட்டில் இந்தத் தீவுகளைக் கொண்டுவந்தனர். இத்தீவுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது. மோவாய் சிலைகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஈஸ்டர் தீவு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோவாய் சிலைகளை எப்படி நகர்த்தினார்கள், அவற்றின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, அந்த நாகரிகம் ஏன் வீழ்ச்சியடைந்தது போன்ற கேள்விகளுக்கு முழுமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பதில்கள் இன்னமும் இல்லை. இந்த மர்மங்களே ஈஸ்டர் தீவை இன்றுவரை உலகின் மிகவும் வியப்புக்குரிய இடங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றன. இவர்களது எழுத்துமொழியை எப்படிப் படிப்பது என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்டர் தீவு மனிதக் கலைப்படைப்புகளுக்கு ஒரு அற்புதச் சான்று. இயற்கையும் மனிதக் கலைத்திறனும் இணைந்தது இந்த தீவு. பழங்கால நாகரிகங்கள் எவ்வளவு திறமையானவை என்பதை இன்றும் உலகுக்கு நினைவூட்டுகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தத் தீவுகளுக்குச் சென்று பார்த்துவிட்டு பழைய நாகரீகத்துக்குள் பயணம் செய்யலாம்! (படங்கள் உதவி: விக்கிபீடியா) எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- வன ராணி
மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை. தேன்மொழி மிக குதூகலமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். படித்து கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்திவிட்டு "தேனு..பக்கத்து வீடு பால் வண்ணம் மாமா வீட்டுக்கு நாறும்பூ மாமா வந்துருக்காங்க . உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் "என்று அம்மா கூறினாள். தேன்மொழிக்கு சந்தோசம் தாங்கல .."மாமா எப்போ வந்தாலும் நிறைய கதை சொல்லுவாங்க,மாமா சொல்ற கதை எல்லாம் புதுசா இருக்கும் " மாமவ பார்க்க போனாள். மாமா இவள பார்த்ததும் "தேனு எப்படிம்மா இருக்க" என்று கேட்டாங்க,ரெண்டு பேரோட பேச்சு அப்படியே போகும் போது "மாமா ஒரு கதை சொல்லுங்க" என்று கேட்க... மாமாவும் கதை சொல்ல தொடங்கினார். "ஒரு அடர்ந்த வனம்.அந்த வனத்தை ஆண்டது ஒரு ராணி " 'ராணியா 'என்று தேன்மொழி கேட்க "ஆமா, அந்த காலத்தில் ராணியும் ஆட்சி செய்தார்கள். அவ பெயர் மீனாட்சி.. காட்டை அந்த ராணி ரொம்ப சிறப்பாக ஆட்சி செய்தாள். அங்குள்ள பழங்குடி மக்களும் மகிழ்ச்சியாக,அன்புடன் அனைவரும் கூடி வாழ்ந்தார்கள். எந்த ஒரு ஏற்ற தாழ்வும் கிடையாது. காடு தனக்கே உரியது என நினைக்காமல் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என உயிர்மெய்நேயம் உடையவர்கள். ஒரு நாள் மூன்று நபர்கள் வெளிநாட்டில் இருந்து அந்த காட்டிற்கு வந்து ராணியின் அனுமதி இல்லாமல் ஒரு குடில் போட்டாங்க." ' குடில்னா 'யோசனையா கேட்டா தேன்மொழி "குடில்னா தங்குறதுக்கு ஒரு ஓலை வீடு அப்டினு அர்த்தம்" மாமா சிரிச்சிகிட்டே சொன்னாங்க "இது ஒற்றர்கள் மூலம் ராணிக்கு தெரிந்தது.உன் வீட்டில் உன்கிட்ட கேட்காமல் யாரவது வந்தா " தங்க விடுவியா!! யாரு நீங்க என்ன ஏதுன்னு விசாரிப்பல்ல அந்த ராணியும் அதைத்தான் பண்ணாங்க ஒரு மந்திரியை அனுப்பி "ராணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் தங்கணும்"என்று சொல்ல சொன்னாள். ஆனால் அந்த மந்திரியை அடித்து அனுப்பினர். இதனால் கோவம் அடைந்த ராணி நேராக சென்று பேசினாள். அவர்களோ அதிகார தொனியில் பேசினார்கள். இது ஒரு வாக்குவாதமாக மாறி, அந்த மூவரில் ஒருவன் வில்லை எடுத்து ராணியின் மூக்கு, காது, மார்பை அறுத்தான்." 'இது என்ன கொடூரம், இதை யாரும் தட்டி கேட்கலையா' "பழங்குடிகள், ஏழைகளுக்கு நடக்கும் குற்றங்களை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். அதிகார வர்க்கம் எப்போவும் அடிமைப்படுத்ததான் நினைக்கும்." 'மாமா, இது சூர்ப்பணகை கதை மாதிரியே இருக்கு' சிரித்துக்கொண்டே"கண்டு பிடிச்சிட்டியா " 'ஆனால், நான் சூர்ப்பணகையை வஞ்சி மகளுன்னு படிச்சேன்.. அவ அரக்கி தானே, அழகா இருப்பானு சொல்றிங்க, மீனாட்சினு வேற சொன்னிங்க'என கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள். மாமா.. "பொறுமையா இரு. சொல்றேன். சூர்ப்பனகையை விகாரத் தோற்றம் உடையவளாகவும் துர்க்குணம் நிறைந்தவளாகவும் நம் மனம் சித்தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையில் சூர்ப்பணகை அழகானவள். பிறக்கும் போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களை அழகில் விஞ்சியிருந்தாளாம். அவள் கண்களின் அழகுக்காக மீனாட்சினு lபெயர் வச்சாங்க .. 'ச்சே, எவ்வளவு தப்பா புரிஞ்சி வச்சிருக்கேன், ஏன் அவளை அரக்கி என்று சொல்றோம்'தேன்மொழி வருத்தப்பட்டாள். "சூர்ப்பணகை போராட்ட குணம் படைத்தவள்... தங்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வுடன் இருந்தவள். அதை பயமின்றி சொன்னவள்.. வெறும் கொலு பொம்மை போலின்றி அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.. ,. அதனால் அவர்கள் கெட்ட குணங்களை படைத்தவர்களாக சித்தரிக்கப்பட்டு விட்டார்கள்." ' எப்போவுமே கதை கதாநாயகன், கதாநாயகி, பார்வையில் தான் இருக்கிறது. கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சொல்ல படுவது இல்லை' " இது கற்பனை இதிகாசங்களில் மட்டும் இல்லை, இப்போதும் அடக்குமுறை இருக்கிறது "மாமா சொன்னாங்க. ' இப்போதுமா'..'தேன்மொழி ஆச்சிரியமாக கேட்க.. "பல உலக நாடுகள், இந்தியா உட்பட பழங்குடிகளை காட்டில் இருந்து தள்ளி நகரங்களாக மாற்றுகிறது. ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.தான்" என்று மாமா சொல்ல 'மாமா இன்னும் அவங்கள பத்தி சொல்லுங்க மாமா 'என்று ஆவலுடன் தேன்மொழி கேட்டாள் "உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி மக்கள் இருககாங்க.., இதில் 476 மில்லியன் மக்கள் உள்ளனர் - இது உலக மக்கள் தொகையில் சுமார் 6.2% தான். 4,000 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பழங்குடி மக்கள் உலகம் முழுவதும் அதே கடுமையான யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் மீறப்படுகின்றன, மேலும் அவர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.. . பழங்குடியின் கையில் இருந்த சோலைவனம் இப்போது நம்மிடம் பாலைவனமாக உள்ளது."என்று மாமா சொல்ல .. 'இதுக்கு நம்ம என்ன செய்யலாம்' தேன்மொழி கேட்டாள் "இதை உன் நண்பர்கள் கிட்ட பகிரலாம், சமூக வலைத்தளங்களில் இது போன்ற நல்ல கருத்துகளை பதிவிடலாம்." 'கண்டிப்பாக செய்வேன், ரொம்ப நன்றி மாமா' என்று கூறிவிட்டு தேன்மொழி வெளியே வந்தாள். கருமேகங்கள் நகர்ந்து சூரிய ஒளி பிரகாசமாக தெரிந்தது, வானில் மட்டும் அல்ல தேன்மொழியின் மனதிலும் தான்... மிக விரைவில் அவள் அதைப் பற்றி ஒரு குழந்தைகள் புத்தகத்தில் ஒரு கதையை எழுதுவாள், நாம் அனைவரும் ஒரு நாள் அதைப் படிப்போம் சூடாமணி மு.சூடாமணி, வயது 15 ,11ம் வகுப்பு மாணவி, திருநெல்வேலி கதைசொல்லி, இளம் ஓவியர் இளம் எழுத்தாளர், இளம் கவிஞர், இளம் சொற்பொழிவாளர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதியிருக்கும் சூடாமணி ஓவியரும் கூட..
- மந்திரப்பேனா
அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார். பாட்டியோ பேத்தியை பார்த்த மகிழ்ச்சியில் வாரி அணைத்து கொண்டார். பிறகு அவளுக்கு பரிசாக ஒரு பேனாவை தந்தார். இதனால் அறிவழகி ஏமாற்றம் அடைந்தாள் "என்ன பாட்டி நீங்க பொம்மை வாங்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்" என்று வருந்தினாள் அதற்குப் பாட்டி"என் செல்லக்குட்டியே இது சாதாரண பேனா இல்ல மந்திர பேனா"என்றார் "எது மந்திர பேனாவா?…"என்று ஆச்சரியமடைந்தாள். சிரித்தபடி ஆமாம் என்று தலையசைத்தார் பாட்டி. பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தூக்கம் வந்துவிட்டது எனவே அவரது மடியில் படுத்து உறங்கினாள். சிறிது நேரம் கழித்து எழுந்த பொழுது தெரிந்தது மணி ஆறு ஆகிவிட்டது என்று. ஏனெனில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுப் பாடத்தை முடித்து, சாப்பிட்டுவிட்டு 8:00 மணிக்கே தூங்கி விடுவாள் ஆனால் இன்றோ வழக்கத்துக்கு மாறாக சாயந்திரமே தூங்கியதால், வீட்டுப் பாடத்தை எழுத மறந்திருந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வீட்டுப் பாடத்தின் கேள்விகளை எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் கடினமாக உணர்ந்தாள்.பாட்டி பரிசாக தந்த மந்திர பேனாவை வைத்து நோட்டில் முதல் கேள்வியை எழுதினாள் 'மரங்களின் பயன்கள் என்ன?' அட என்ன ஆச்சரியம்! அவள் எழுதியதும் பேனாவுடைய மை அவளை இழுத்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் விட்டது அங்கே இருந்த ஒரு பெரிய மரம் பேச ஆரம்பித்தது "மரங்கள் ஆகிய நாங்கள் உயிர்களை வாழ வைக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறோம், மேலும் பறவைகளுக்கு வீடுகளாக அவைகள் சாப்பிடும் பழங்களை உண்டு பண்ணுகிறோம்.. "என்று பேசி முடித்தவுடன் மீண்டும் அவள் வீட்டிற்குள் இருந்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அறிவழகி மரம் கூறிய விஷயத்தை ஞாபகப்படுத்தி எழுதினாள் பிறகு இன்னொரு கேள்வியை எழுத ஆரம்பித்தாள் 'உலகின் மிக உயரமான சிகரம் எந்த மலையில் உள்ளது?' என்றும் எழுதி முடித்தவுடன் இமயமலையில் இருந்தாள் இமயமலை பேச ஆரம்பித்தது "நான் தான் இமயமலை, என்னிடம் தான் உலகின் உயரமான சிகரம் உள்ளது அதன் பெயர் எவரெஸ்ட்." என்று பேசி முடிக்க மீண்டும் அவள் வீட்டிற்கு வந்தாள் மிகவும் குளிராக இருந்ததால் அருகில் உள்ள கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். அடுத்த கேள்விக்கு எழுத ஆரம்பித்தாள் 'சுற்றுச்சூழலுக்கு தீங்காக இருப்பது எது?' என்ற உடன் அவள் மிகவும் ஒரு மோசமான நிலத்தில் இருந்தாள். அந்த நெகிழி நிறைந்த மண் பேச ஆரம்பித்தது "என்னை மட்டுமல்ல கடல் காற்று மற்றும் பல விஷயங்களை இந்த நெகிழி போன்ற பொருட்களால் பாதிப்பை அடைகின்றோம் அதுமட்டுமின்றி நெகிழி மக்குவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாத காரியம் ஆகும் அது மண்ணில் மக்கி போவது மிகவும் சிரமம் நெகிழியை உண்ட விலங்குகள் பல உயிரிழந்துள்ளது எனவே நெகிழி பயன்ப்படுத்தாதீங்க" என்று அழுதது. இந்த காட்சியை கண்ட பின் நெகிழியை இனி குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினாள். மறுநாள் காலை வீட்டு பாடத்தை முடித்த அறிவழகி ஆசிரியையிடம் காட்டினாள். அவளைப் பாராட்டும் விதமாக ஒரு மிட்டாயை அன்பளிப்பாக அளித்தார் . வீட்டில் தனது பாட்டியிடம் காட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவள் பையில் ஓரமாக இருந்த பேனா மகிழ்ந்தது மீனா மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது
- கய்மூது
"ஹரி ... உன்ன குளிக்க சொல்லி அரை மணி நேரம் ஆச்சு.இன்னும் அப்படியே உக்கார்ந்து இருக்க. இப்ப குளிக்க போரியா-இல்லையா ?" ஹரி ஏழு வயது சுட்டி பையன். அவன் அம்மா அவனை குளிக்க சொல்கிறார். ஆனால் ஹரியோ கண்கள் சிமிட்டாமல் அம்மா சொல்லை காதில் வாங்காமல் ஆர்வமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். சிறிது கோபமடைந்த அம்மா டிவியை அணைத்தார். உடனே பொங்கி எழுந்த ஹரி "அம்மா எதுக்கு இப்போ டிவியை ஆஃப் பண்ணீங்க ? நான் பாட்டுக்கு பார்த்துகிட்டு தானே இருந்தேன் ? " என்று சண்டை போட தொடங்கினான். "டேய் உன்ன அடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன், அடிக்க வச்சிறாத. ஒழுங்காப் போய் குளி. " என்று அம்மா கத்தியவுடன் வேகமாக பாத்ரூமை நோக்கி ஓடினான். பத்து நிமிடம் கழித்து, "அம்மா டவல் கொடு மா!" என்று ஹரியின் குரல் கேட்டது. அம்மா, "ஒரு வேலை கூட உருப்படியாக செய்ய விடுவதில்லை!" என்று புலம்பிக் கொண்டே டவலை எடுத்து கொடுத்தார். குளித்து முடித்து மீண்டும் டிவி பார்க்கலாம் என்று நினைத்து ஹரி டிவியிடம் நெருங்கினான். கிச்சனிலிருந்து அவன் அம்மா கத்தினார் " டேய் டிவி போட்டின்னா அவ்வளவுதான் ஒழுங்கா போய் வேற வேலை இருந்தா பாரு. " ஹரி என்ன செய்வது என்று தெரியாமல், அலமாரியில் இருந்த பழைய பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்போது அவன் கண்ணில் மூன்று குரங்கு பொம்மைகள் தென்பட்டன. "ஐ! ஐ! இது என்ன புது பொம்மை , அழகா இருக்கு!" என்று கைகளில் எடுத்து பார்க்கையில் அது கீழே விழுந்து உடைந்து விட்டது. "ஐயையோ! அம்மாக்கு தெரிந்தால் திட்டுவார்களே , இப்போது என்ன செய்வது?" என்று ஹரி முனகினான். அலமாரியைப் பூட்டிவிட்டு அந்த பொம்மையை கட்டிலுக்கு அடியில் தள்ளினான். அப்போது அவனுக்கு ஏதோ ஷாக் அடித்தது போல ஒரு உணர்வு வந்தது. ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல் உணர்ந்தான். அச்சமயம் அம்மா செய்யும் பிரியாணி வாசனை அவனைத் தூண்டியது , எல்லாவற்றையும் மறந்து விட்டு சோபாவில் அமர்ந்தான். " அம்மா எப்போ மா சாப்பாடு போடுவீங்க ரொம்ப பசிக்குது! என்றான். உடனே "அய்யய்யோ" என்று கத்தினான். உடனே அம்மா ஓடி வந்தார், "என்னடா ஆச்சு?" என்று பதறினார் . அம்மா வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவன் தன் கண்களால் பேசினான் என்று . அவரால் தன்னை நம்ப முடியவில்லை. "என்னடா ஆச்சு கண்ணால பேசுற?. கண்ணால பேசுறத கேள்விதான் பட்டிருக்கேன் ஆனா இப்போதான் பார்க்கிறேன்." என்றார் அம்மா. "ஆமாம்மா என்னன்னே தெரியல என் கண்ணு தானே அசைஞ்சு பேசுது" என்று கண்ணாலேயே பதில் சொன்னான் . "சரி கண்ணால பேசுற கண்ணால பார்க்க முடியுதா? " என்று கேட்டார் அம்மா. " இல்லம்மா நான் வாயால தான் உன்னை பார்க்கிறேன் " என்றான் ஹரி. "என்னடா உளர்ற " என்று அம்மா குழம்பினார். " சரி காது ஆச்சு ஒழுங்கா கேக்குதானு பாரு பிரியாணி வாசனை வருதா ? " என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டார் அம்மா. "அம்மா காது கேக்குது ஆனா லைட்டா தான் கேக்குது வாசனையும் சைடுல இருந்து வர மாதிரி இருக்கு " என்றான். "டேய் உன் காதும், மூக்கும் மாறி இருக்குடா கண்ணும் வாயும் மாறி இருக்குடா என்னத்த டா பண்ணி தொலச்ச ? "என்றார் அம்மா. "அம்மா , நான் எதுவும் பண்ணல மா பயமா இருக்குமா "இன்று அழத் தொடங்கினான் ஹரி. அவன் வாயிலிருந்து கண்ணீர் கொட்டியது . என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவும், பையனும் குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முன்னே ஒரு சிறு வெளிச்சத்துடன் மூன்று குரங்குகள் தோன்றின. அந்த மூன்று குரங்குகளும் ஹரி பார்த்த அந்த பொம்மைகளைப் போலவே இருந்தன. ஒரு குரங்கு கண்களை மூடியபடி இருந்தது. மற்றொன்று வாயை மூடி இருந்தது. மூன்றாவது குரங்கு காதை மூடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹரி பதட்டத்தில் அம்மாவிடம் உண்மையை கூறினான். " அம்மா நான்தாம்மா இந்த குரங்குகள் மாதிரி அலமாரியில் இருக்கிற பொம்மைகளை உடைச்சேன். ஒருவேளை அதனாலதான் இப்படி எல்லாம் ஆயிருக்குமோ ? " என்றான். "பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து அழறதை பாரு. " என்றார் அம்மா. அந்த மூன்று குரங்குகளும் ஹரி இடம் வந்து அழாத தம்பி என்று சமாதானம் படுத்தின . "நான் உங்கள மாதிரி இருக்கும் பொம்மையை உடைச்சதுக்கு சாரி இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அதுக்கு என்ன பழி வாங்காதீங்க என்ன பழைய படி மாற்றுங்கள். " என்றான் ஹரி . "சரி சரி அழாத நீ எங்களைப் போல இருப்பாய் என்றால் நாங்கள் உன்னை பழையபடி மாற்றுகிறோம்" என்றனர் மூவரும் . "எனக்கு நீங்க சொல்றது புரியல!" என்றான் ஹரி. "நீ எங்களைப் போலவே கெட்டதை பார்க்க கூடாது, கெட்டதை பேசக்கூடாது கெட்டதை கேட்கக் கூடாது . சத்தியம் செய்து கொடு " என்றனர். ஹரியும் சரி என்று ஒப்புக்கொண்டு சத்தியம் செய்தான். தான் கெட்டதை பார்க்க மாட்டேன், கெட்டதை கேட்க மாட்டேன், கேட்டதை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தான். நல்ல பையன் என்று ஹரியை பாராட்டி தாங்கள் ஹரியை மாற்றுவதாக முன் வந்தனர் . "உனக்கு கண்ணும் வாயும் மாறி இருக்கின்றதல்லவா ஆகையால் காய் என்று கூறு . அதுபோல் காதும் மூக்கும் மாறி இருக்கின்றது அல்லவா அதற்கு மூது என்று கூறு. இப்போது இரண்டையும் சேர்த்து காய்மூது என்று மூன்று முறை உச்சரி என்றனர். இந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் மூவரும். அந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்ததும், ஹரிக்கு எல்லாம் பழையபடி மாறிவிட்டது. அவனுக்கு பயங்கர சந்தோஷம். தான் செய்த சத்தியத்தை என்றைக்கும் மீறமாட்டேன் என்றும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி என்றும் கூறி வழி அனுப்பினான். அவர்கள் சென்றவுடன் அம்மாவிடம் " அம்மா எங்கேம்மா அந்த பொம்மையை வாங்குன ? "என்று கேட்டான். அதற்கு அம்மா," எனக்கு எதுவும் தெரியாதுடா , நான் எல்லாம் அந்த பொம்மையை வாங்கல . நீ எந்த பொம்மையை சொல்ற ? "என்றார். அவன் சாட்சிக்காக கட்டிலுக்கு அடியில் பொம்மையை தேடினான். ஆனால் அது அங்கு இல்லை . இது அந்த மந்திர குரங்குகளின் வேலை, எல்லா பிள்ளைகளும் நல்ல குழந்தைகளாக இருக்க அவர்களிடம் இருந்து சத்தியம் வாங்க உருவாக்கிய திட்டம் எது . சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டு குட்டி பெண் அம்மா என்று அலறிய சத்தம் கேட்டது . அனுக்ரஹா கார்த்திக் தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அனுக்ரஹா கார்த்திக் சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டவர். பத்து வயதில் இவர் எழுதிய 'காணாமல் போன சிறகுகள்' என்ற கதை, 'சுட்டி உலகம்' வலைத்தளம் நடத்திய சிறார்க்கான கதைப் போட்டியில் முதல் பரிசு வென்றது. 'நாலு கால் நண்பர்கள்,' 'தப்பித்து ஓடு' என்ற இரு சிறார் நூல்களைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர் 'பூஞ்சிட்டு' குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
- கலங்காதே கண்ணம்மா
துள்ளி ஓடும் கண்ணம்மா உன் கண்ணில் கண்ணீர் ஏனம்மா? குறைகளை கண்டு கலங்காதே குறையும் நிறைதான் வருந்தாதே! வெண்ணிற மேகம் கருத்தது வான் மழை எங்கும் கொட்டியது! கூட்டுப்புழுவும் சுருங்கியது பட்டாம் பூச்சியாய் பறந்தது! மின்னல் மண்ணில் முட்டியது காளான் அங்கே பிறந்தது! ஜன்னல் கொஞ்சம் திறந்தது அதில் பரந்த வானம் தெரிந்தது! பசுவின் மடியோ கனத்தது கன்றின் வயிறோ நிறைந்தது! முட்டை உள்ளே உடைந்தது அழகிய குஞ்சும் பிறந்தது! விதையும் மண்ணில் புதைந்தது மரமும் ஒன்று துளிர்த்தது! நெல்லும் ஆலையில் வெந்தது நாம் உண்ணும் உணவாய் வந்தது! இடர்களை கண்டு கலங்காதே புது விடியலும் பிறக்கும் வருந்தாதே! ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார். முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.













