செல்வி சாப்பிடணும்
- கொ மா கோ இளங்கோ

- Sep 15
- 1 min read

செல்ல நிலா, வெண்ணிலா – என்
உள்ளங் கையில் வருவாயா?
செல்வி பாப்பா இப்போது - ஏனோ
சோறு சாப்பிட மறுக்கிறாள்.
ஆரஞ்சு வண்ணப் பட்டாம்பூச்சி- நீ
அழகோவியம் வரைவாயா?
நூறு தடவை கொஞ்சியும் - பாப்பா
சோறு சாப்பிட மறுக்கிறாள்.
கொன்றை மரக் கருங்குயிலே- நீ
காதோரம் பாட்டுப் பாடாயோ?
குறும்புக்காரி ராசாத்தி- ஒரு வாய்ச்
சோறு சாப்பிட மறுக்கிறாள்.
மிளகாய் மூக்கு கிளியக்கா- நீ
மிட்டாய்க் கதை சொல்லாயோ?
செல்லக் குட்டி இளவரசி- ஒரு கவளச்
சோறு சாப்பிட மறுக்கிறாள்.
தட்டாம் பூச்சி தங்கச்சி- நீ
‘தையத் தக்கா’ நடனமாடாயோ?
குட்டிப் பாப்பா குறும்பு மறையும்!
கிண்ணத்தில் சோறு குறையும்!




Comments