top of page

மன்சூர்

கீதா துர்வே

தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ


ree

மன்சூருக்கு தன்னை அலங்காரம் செய்வது, குறிப்பாகக் கண் மை போடுவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் கையில் பிடித்துக்கொண்டு கண் இமைகளின் மேலும் கீழும் மிக நுணுக்கமாக கண் மை போட்டுக் கொள்வான்.  குச்சுப்புடி நடனக் கலைஞர்கள் கண்களை அசைப்பதுபோல, அவனும் தனது கண்களை இட வலமாக அசைத்துப் பார்த்து சிரிப்பான். சில நேரங்களில் நெற்றியிலும், கன்னத்திலும் சிறிய பொட்டு வைத்துக்கொள்வான்.


அவனுக்கு நிறைய தோழிகள் இருந்தனர். ஒரு நாள் தனது தோழி சஹத்தின் உடையைக் கேட்டு அணிந்து, உதட்டுச் சாயம் பூசிக்கொண்டான். அவளிடம் “நான் அழகாக இருக்கிறேனா? இந்த உடை அலங்காரத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது" என்றான். 

அதற்கு சஹத், "உன்னை இந்தக் கோலத்தில் உனது அம்மா பார்த்தால் அடிப்பார். என்னையும் பிடித்து உதைப்பார். நான் வரமாட்டேன்" என்றாள்.


மன்சூர், சஹத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "வா!.. என்னிடம் சிறுமிகள் அணியும் உடைகள் இல்லை. அம்மா அப்பாவுக்கு முன்னால் இதை உடுத்திக் கொள்ள முடியாது. சீக்கிரம் போய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம்" என்று கெஞ்சினான். 


சஹத், "சரி வா. ஆனால் முதலில் நீ இந்த உடைகளைக் கழற்றிவிட்டு, உதட்டுச் சாயத்தைத் துடைத்துவிடு" என்றாள்.


மன்சூர், "ஏன்?" என்று கேட்டான்.


சஹத், "இப்படி அலங்காரம் செய்துகொண்டு போனால், சனங்கள் எல்லோரும் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்... அங்கே போனதும் போட்டுக்கொள்" என்றாள்.


மன்சூருக்கு சஹத்தின் யோசனை பிடித்திருந்தது.  உடனே அவன் அலங்காரத்தைக் களைந்துவிட்டான். 


புகைப்படம் எடுக்கும் கடைக்கும் வந்ததும், "சரி, நீ உன் வளையல்களைக் கொடு. எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறேன்" என்றான்.


சிறுவயது முதல் மன்சூருக்கு தோழிகளின் அழகான உடைகளை அணிந்து நடனமாடுவது மிகவும் பிடிக்கும்.  அந்த உடைகளை அணியும்போது, தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதுபோல மகிழ்ச்சியாக உணர்ந்தான். 


தோழிகளுடன் விறகு சேகரிக்கச் செல்லும்போது, அவனது கண்கள் பெரும்பாலும் குப்பையில் கிடக்கும் பெண்களின் கைப்பைகள் மீது பதியும். அவற்றில் உதட்டுச் சாயம், பவுடர், வேறு ஒப்பனைப் பொருட்களைத் தேடுவான்.  ஏதாவது கிடைத்தால் உடனே எடுத்து அதை பூசிக்கொண்டு அழகு பார்ப்பான். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனக் கண்ணாடிகளில் தன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்வான்.  பிறகு கால்சட்டைப் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு வட்டமாகச் சுழன்று நடனமாடுவான்.


சிறுவயது முதலே மன்சூர், தோழிகள் விளையாடும் கோ-கோ, கயிறு தாண்டுதல் போன்ற எல்லா விளையாட்டுகளையும் விளையாடினான்.  அவனுக்கு இதுபோன்ற விளையாட்டுகள்தான் பிடிக்கும். 

சில நேரங்களில் அவர்கள் யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் நாடகம் நடத்துவார்கள். மன்சூர், எப்போதும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பான்.  சில நேரங்களில் அம்மா, சில நேரங்களில் அக்கா, சில நேரங்களில் மனைவி எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பான். ஆண் கதாபாத்திரங்களில் நடிப்பது அவனுக்குப் பிடிக்காது.


முதலில், மன்சூரின் தோழிகள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.  அப்போது அவன் கவலை அடைந்தான். சில நேரங்களில் அழுதான். ஆனால் அவன் தோழிகளுடன் தொடர்ந்து பழக விரும்பியதால், கவலையை மறந்து சிரிக்கத் தொடங்கினான்.


மகன் உதட்டுச் சாயம் பூசி, வளையல்கள் அணிந்திருப்பதை மன்சூரின் அம்மா பார்த்தால் கோபம் அடைவார். எப்போது சிக்கினாலும் அவனைப் பிடித்து நன்றாக அடிக்க வேண்டுமென்று கையில் தடியுடன் தெரு முழுவதும் தேடுவார். 


நாள் முழுவதும் தோழிகளுடன் சந்தோஷமாக இருப்பான். ஆனால் வீடு திரும்பும் நேரம் வந்ததும் வருத்தமடைவான். வீட்டிற்குப் போனால் அடி விழும் என்று அவனுக்குத் தெரியும். அம்மாவைச் சமாதானம் செய்வது எளிது, ஆனால் அப்பா...? 


ஒருமுறை அவர் கையில் சிக்கினால், வீட்டிற்குள் கட்டி வைத்து அடிப்பார். "உதட்டுச் சாயம், கண் மை போடுவியா? உனக்கு பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசையா? பெண்களுடன் சுற்றுவியா? இந்தத் தெருவில் எங்களது மானத்தைக் கெடுப்பியா?" என்று கேட்பார். 


அப்பாவின் அடியைவிட அவரது வார்த்தைகள்தான் மன்சூரைத் ததுன்புறுத்தும். வெடித்து அழ வைக்கும்.  அவன் அழுதாலும், "பெண்கள் மாதிரி அழுவதை நிறுத்து" என்று அதட்டுவார் அப்பா. 

மன்சூரின் அம்மா அவனைத் தெருவிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் போது, "பெண்களுடன் பழக வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன். ஏன் நீ பெண்கள் மாதிரி நடக்கிறாய்?" என்று கேட்பார். 


அவனை நீண்ட நேரம்  திட்டிவிட்டுத் தானும் அழுவார்.  மன்சூரின் செயலால் அக்கம் பக்கத்தவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். 

சிலர் அவனை ‘திருநங்கை’ என்று அழைக்கிறார்கள். அதைக் கேட்டு மன்சூருக்குக் கோபம் வரும், ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். வீட்டில் உள்ளவர்கள் அப்படிப் பேசும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும். 


சஹத்தும், தமன்னாவும் மன்சூருக்குப் பிடித்த தோழிகள்.  அவர்கள் இருவரும் அவனை ஒருபோதும் அன்னியமாக நினைத்ததில்லை. மன்சூர் எப்படி இருந்தானோ அப்படியே அவனை ஏற்றுக்கொண்டார்கள். 


அவர்களுடன் சுற்றுவதும், வேலை செய்வதும் மன்சூருக்கு நிம்மதி அளித்தது. தோழிகளுடன் சேர்ந்து சமையல் செய்வது, சாணம் மெழுகுவது,  வீட்டைப் பெருக்கி துடைப்பது போன்ற பல வேலைகளைக் கற்றுக்கொண்டான்.  இரண்டு மூன்று வீடுகளில் பெருக்கி, குப்பைகளை அகற்றும் வேலையும் அவனுக்குக் கிடைத்தது. 


தீபாவளி நேரத்தில், வீட்டு முற்றத்தில் சாணம் மெழுகும்போது, ​​ அக்கம்பக்கத்தவர்கள் அவனை ‘பொட்டை’ என்று சொல்லிக் கேலி செய்தார்கள். மன்சூர், யாரையும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.


ஒருநாள் சஹத், மன்சூரிடம் அவனது பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னாள்: 

"கோண்டி மொழியில் மன்சூர் என்றால் அழகான மயில்.  மயில் தோகையில் உள்ள வண்ணங்கள் அவற்றின் அழகை இரட்டிப்பு ஆக்குகின்றன. ஆனால் அவற்றின் கால்கள் அழகற்றவை.  மக்கள் மனதில் மயிலின் அழகான தோகைக்கு கிடைத்த இடம் கால்களுக்குக் கிடைக்கவில்லை. மன்சூர் என்பதற்கு 'ஏற்றுக்கொள்ளுதல்' அல்லது 'அங்கீகரித்தல்' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு" என்றாள். 


சஹத்தின் வார்த்தைகளைக் கேட்ட மன்சூர், "நான் மன்சூர் என்பதால் என்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையோ? இந்த உலகில் நான் மட்டும் விசித்திரமானவனா? நான் எந்த அடையாளத்துடன் வாழ விரும்புகிறேனோ, அதற்கு இங்கு இடம் கிடைக்குமா?" என்று கேட்டான். சஹத் அதிர்ச்சி அடைந்தாள். 


ஆனால் மன்சூரின் கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page