top of page

முகம் தெரியாத தோழிக்கு ஒரு கடிதம்

ree

என் பெயர் நஸீரா, நான் காசா நகரத்தில் இந்த நிமிடம் வரை உயிருடன் வாழ்ந்து வருகிறேன்.


இல்லையில்லை. என் பெயர் அமெலினா. நான் உக்ரைன் நாட்டிலுள்ள கீவ் நகரில் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கிறேன்.


எந்தப் பெயராக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? 


ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு நேரத்தில் தான் யுத்தம் ஒரு புயலைப் போல வீசியது. எங்கள் பள்ளிக்கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாகி ஓராண்டு ஆகிறது. நேற்று கூட என்னுடைய பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கிய என்னுடைய அறிவியல் புத்தகத்தைத் தேடிப் போனேன்.


என்னுடைய வகுப்பு இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றேன். அந்த வகுப்பு நடப்பதைப் போலவே கண்டேன். என் வகுப்புத்தோழி அதோ ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் இப்போது இல்லை. சொர்க்கத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறாள்..

அவள் எவ்வளவு அழகு தெரியுமா?


எனக்கு அழுகை வருகிறது. 


நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அமைதியாக வாழ்ந்தோம். எங்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதம் இருந்தது. சிலநேரம் நல்வாய்ப்பாக மூன்று வேளைகூட கிடைத்தது.


நான், என் தங்கை,தம்பி, எல்லாரும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவோம். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறாண்டிக் கொள்வோம். சிலசமயம் எங்களுக்கு அடி விழும். அழுவோம். பிறகு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். சிரிப்போம். கேலி செய்வோம். ஓடிப்பிடித்து விளையாடுவோம்.


ஆமாம்.காலையில் சூரியன் எல்லாருக்கும் போல எங்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சினான். இரவில் நிலவின் குளிர்ந்த ஒளி எங்களையும் குளிப்பாட்டியது. மழை எங்களையும் நனைத்தது. பூக்கள் எங்களுக்கும் மணம் வீசின. எனக்கு அருகிலுள்ள ரோஜா தோட்டத்திலிருந்து வரும் வாசனை மிகவும் பிடிக்கும். அதை அப்படியே முகர்ந்து கொண்டே அந்த ரோஜா தோட்டத்தில் இருப்பதாகக் கற்பனை செய்வேன். காலையில் குயில்கள் எங்களுக்காகவும் பாடின. 


எங்களுக்கு என்று ஒரு வீடு இருந்தது. சின்னஞ்சிறிய வீடு.. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு வரும் அப்பாவும் அம்மாவும் காலை நீட்டிப் படுக்க ஒரு வீடு. எல்லாருக்கும் படுக்க இடம் போதாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவ்ர் இடித்துக் கொண்டு படுத்து உறங்கினோம். உறக்கம் நன்றாகவே வந்தது.


எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்களுக்கு இருப்பதைப் போலவே. எங்கள் கடவுளும் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் இறந்தவருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உங்கள் கடவுளைப் போலவே. எங்கள் கடவுளும் ஏழைகளுக்கு உதவியிருக்கிறார் .


ஒவ்வொரு நாளும் கடவுளைத் தொழுகிறோம், உங்களைப் போலவே. ஒவ்வொரு நாளும் கடவுள் உதவி செய்வார் என்று நம்புகிறோம் உங்களைப் போலவே. ஒரு சிறிய நன்மை நடந்தாலே இந்தக் காரியம் கடவுளால் நடந்தது என்று புகழ் பாடுகிறோம் உங்களைப் போலவே. அவர் இந்த யுத்தத்தை எப்படியாவது நிறுத்தி விடுவார் என்று உங்களைப்போலவே நாங்களும் நம்புகிறோம்.


எங்கள் பாட்டி இருந்தபோது தினமும் கதைகளைச் சொல்வார். நல்லவர்களைப் புகழ்கிற கதைகள். தீயவர்கள் அழிவது உறுதி  என்று சொல்கிற  கதைகள். கடவுள் ஒருபோதும் ஏழை, எளிய மக்களைக் கைவிடமாட்டார் என்கிற கதைகள் வாழ்க்கை சொர்க்கம் போல மாறும் என்று நம்பிக்கை தரும் கதைகள்.


நான் நம்பினேன் எங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பினேன். சொர்க்கம் எல்லாம் வேண்டாம். மூன்று வேளை உணவு, கிழியாத உடைகள், படிப்பதற்குப் பள்ளிக்கூடம் இவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பினேன். 


எங்கள் பள்ளிக்கூடம் குண்டு வீச்சில் தகர்ந்து வெகுகாலம் ஆகி விட்டது. புத்தகங்கள் தொலைந்து விட்டன. மருத்துவமனையின் மீது கூட குண்டு வீசப்பட்டது. வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. தினம் நிறையப்பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற குழந்தைகள் உடல் சிதறி, தலை சிதறி, இறந்து போகிறார்கள்.


நேற்று கூட குண்டு வீச்சினால் இடிந்த வீட்டிலிருந்து என் தம்பிக்கு ஒரு காலணி எடுத்தேன். ஒரு காலணியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைக்கிறாயா? காலணிகளே இல்லாத என் தம்பிக்கு அந்த ஒரு காலணி அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது தெரியுமா?


ஆனால் சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக மறைந்து விட்டது.


 ஆமாம். தெருவில் இறங்கி நண்பர்களிடம் காட்டுவதற்காகப் போன தம்பி திரும்பவில்லை. இடிந்த கட்டிடத்தின் சிதைவுகளில் அவனுடைய காலணி அணிந்த அந்த ஒரு கால் மட்டுமே தெரிந்தது. எனக்குக் கண்ணீர் வரவில்லை. தினம் தினம் என்னைப் போன்ற குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன். அழுதழுது கண்கள் மரத்துப் போய் விட்டது


நாளை நான் இருப்பேனா என்று தெரியாது. என் அப்பா அம்மா நாங்கள் இருக்கும் சின்னஞ்சிறு வீடு, சின்னஞ்சிறு ரோஜாச்செடி, அதன் வாசனை எல்லாம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சூரியன் இருக்கும். சந்திரன் இருக்கும். நாளையும் வெயில் அடிக்கும். மழை பொழியும். மனிதர்கள் இருக்கும்வரை உன் கடவுளும் இருப்பார். என் கடவுளும் இருப்பார். மனிதர்கள் நம்புவதற்கு யாராவது வேண்டுமில்லையா?


இந்த பூமி எல்லாருக்கும் சொந்தமானது தானே. ஈ, எறும்பு முதல் யானை வரை எல்லாருக்குமானது தானே. அப்புறம் ஏன் மனிதர்கள் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். குண்டுகளை வீசி யுத்தம் செய்கிறார்கள். மனிதர்களைக் கொல்கிறார்கள். பெண்களைக் கொல்கிறார்கள். குழந்தைகளைக் கொல்கிறார்கள். 


இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடும்? இதோ போர் விமானங்கள் மேலே பறக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் என் மீது விழலாம். இறந்து போன என் தம்பியுடன் நானும் சொர்க்கத்தில் கண்ணாமூச்சி விளையாடலாம்.  குழந்தைகளுக்காகக் கடவுள் சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம்.

தம்பியின் இறுதிச்சடங்கில் மதபோதகர் சொன்னார்.


முகம் தெரியாத என் சிறுமியே! உன்னுடைய நாடு எதுவாயினும் சரி. உன்னுடைய நகரம் எதுவாயினும் சரி. அங்கே யுத்தம் வராமலிருக்கட்டும். குண்டுகளின் கரும்புகை வெண்மேகங்கள் மிதந்து செல்லும் நீலவானத்தைக் களங்கப்படுத்தாமலிருக்கட்டும். மனிதர்கள் இயற்கையாகவே மரணமடையட்டும்.


மனிதனின் மிகக் கொடிய கண்டுபிடிப்பு யுத்தம். நான் போரிடும் இந்த உலகத்தின் மனசாட்சியைப் பார்த்துக் கேட்கிறேன். 


 குழந்தைகள் இல்லாத இந்த உலகத்தில் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் நீங்கள்?

 

உனக்கும் இப்படி ஒரு கேள்வி வந்தால் நீயும் என்னுடைய அன்புத்தோழி தான். 

உனக்கு நீண்ட வாழ்நாளை உன்னுடைய கடவுள் அருளட்டும் என என்னுடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

உதயசங்கர்
உதயசங்கர்

150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.



6 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
அரங்கன்.பரணி
Sep 23
Rated 4 out of 5 stars.

போருக்குக் காரணமே அந்தக் கடவுளும் மதமுமாக இருக்க, எந்தக்கடவுள் அந்தப் போரை நிறுத்தப் போகிறார் ? குழந்தையும் கடவுளும் ஒன்றுதான்; விவரம் அறியாதவரை !

Like

Guest
Sep 22
Rated 5 out of 5 stars.

கடவுளும் குழந்தையும் ஒன்று

ஏன் இந்த மனிதர்கள் இப்படி

மாறினார்கள் என்று இருவருமே

நினைக்கின்றனர்

Like

Guest
Sep 22

அருமை!நன்றி!💐

Like

மணவை கார்னிகன்
Sep 22
Rated 5 out of 5 stars.

இந்த ஒரு குழந்தையின் கடிதத்தை எல்லோரும் வாசிக்க வேண்டும்.


அந்த ஒத்த செருப்பை மாட்டிக்கொண்டு கட்டிட சிதைவுக்குள் கிடக்கும் சிறுவனை

கைபிடித்து காப்பத்துங்கள்


Like

Guest
Sep 22
Rated 5 out of 5 stars.

எவ்வளவு வலி மிகுந்த கதை... நிதர்சனம் உரைக்கிறது.. மனிதம் என்று உயிர்க்குமோ தெரியவில்லை 🙏

Like
bottom of page