பிரம்மாண்ட ஊசிக்கணவாய்
- நாராயணி சுப்பிரமணியன்

- Sep 15
- 1 min read

ஆங்கிலத்தில் இதன் பெயர் Giant Squid - தமிழில் நாம் இந்த விலங்கை பிரம்மாண்ட ஊசிக்கணவாய் என்று அழைத்துக்கொள்ளலாம். சும்மா பெயரில் மட்டும் இல்லை இந்த பிரம்மாண்டம். இது 43 அடி, அதாவது 13 மீட்டர் நீளம் வளரக்கூடியது, பெண் ஊசிக்கணவாய்கள் 275 கிலோ எடை வரை இருக்கும். இது 3 யானைக்குட்டிகளின் எடைக்கு சமம். இதன் கண் எவ்வளவு பெரியது தெரியுமா? கண்ணுடைய விட்டம் மட்டுமே ஒரு அடி இருக்கும்!

300மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கடற்பகுதியில் மட்டுமே இவை வசிக்கும்.ஆகவே இவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன,இந்த விலங்குகளை நேரில் பார்ப்பதும் தகவல்களை சேகரிப்பதும் கடினமாக இருக்கிறது. இப்போதைக்கு வெப்பமண்டல மற்றும் துருவக்கடல்களில் இந்த ஊசிக்கணவாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 1850களிலேயே இதுபற்றிய குறிப்புகள் வந்துவிட்டன.
ஆனால் 2004ல்தான் இந்த விலங்கின் முதல் வீடியோ எடுக்கப்பட்டது, அந்த அளவுக்கு இது அறியப்படாத இனமாகவே இருக்கிறது.
இது மிகத்திறமையாக வேட்டையாடக்கூடிய விலங்கு. 32 அடி தொலைவில் இரை இருந்தாலும் தனது கைகளை நீட்டி இரையைப் பிடித்துவிடும். பெரிய ஆழ்கடல் மீன்களை விரும்பி சாப்பிடும்.
இவ்வளவு பெரிய விலங்காக இருக்கிறதே, இதற்கு எதிரிகளே கிடையாது என்று யோசிக்கிறீர்களா? அதுதான் இல்லை. இயற்கையில் எல்லாவிதமான விலங்குகளையும் கட்டுப்படுத்தக்கூடிய வேட்டையாடிகள் உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள், பைலட் திமிங்கிலங்கள், ஒருவகை சுறாக்கள், ஆர்காக்கள் எனப் பல பெரிய விலங்குகள் இந்த பிரம்மாண்ட ஊசிக்கணவாய்களை வேட்டையாடுகின்றன!

அளவில் பிரம்மாண்டமாக இருந்தாலும் இந்த விலங்குகள் மனிதர்களை எதுவும் செய்வதில்லை. இவை ஆழ்கடலில் வசிக்கின்றன. நாமாகப் போய் தொந்தரவு செய்து இவற்றை எரிச்சல்படுத்தாதவரை இந்த ஊசிக்கணவாய்கள்
மனிதர்களைத் தாக்காது.




Comments