top of page

போரே! போ! போ

ree


என்றைக்கும் இல்லாத அளவிற்கான கரும்புகை மேகக் கூட்டத்தை நெருங்கியது. நிவ்யா மேகம் அன்றைய கதையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது.


  நிவ்யாவின் அம்மா வஞ்சி அன்றைய புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. சில நாட்கள் புத்தகங்கள் வரும். சில நாட்கள் புத்தகங்கள் வராது. 


அன்று ஏராளமான புத்தகங்கள் வந்திருந்தன.  வஞ்சி என்று ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருந்தது. அந்தப் புத்தகம் வஞ்சியின் மனதை மிகவும் பாதித்தது. அதைக் குழந்தைகளிடம் எப்படிப் பகிர்வது என்று பலத்த யோசனையோடு இருந்தது வஞ்சி. ஆனாலும் குழந்தைகள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துச் சென்றது. 


நிவ்யாவும் வஞ்சியும் வானத்தில் தவழ்ந்து திரிகின்ற மேகங்கள். 


வஞ்சி ஒரு எழுத்தாளர். கீழே எரிக்கப்படுகின்ற புத்தகங்களின் புகை வழியாக வரும் கதைகளோடு தன்னுடைய கற்பனையையும் கலந்து எழுதும். சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில் வாசிக்கப்படாத புத்தகங்களில் இருந்து பறந்து மேலே வரும் கதைகளில் இருந்து கூட தன்னுடைய கற்பனையைக் கலந்து கதைகளை உருவாக்கும்.


அப்படி அது எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு இருக்கும் நூலகத்தில் இருக்கின்றன. அந்தப் புத்தகங்களை படிப்பதற்கு மேகக் கூட்டங்களுக்கு ஒரு பெரும் போட்டியே ஏற்படும். 


தினமும் மாலை நேரத்தில் வஞ்சி தன் வேலைகளை முடித்துவிட்டு வரும். கையோடு தான் அன்று எழுதிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரும். அந்த மாலை நேரத்திற்காக வயதான மேகங்கள் மற்றும் குழந்தை மேகங்கள் எல்லாம் காத்திருக்கும். தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் இருக்கும் கதைகளை அவர்களுக்குக் கூறும். 

அன்றும் அப்படித்தான் நிவ்யாவோடு எல்லா மேகங்களும் ஆர்வத்தோடு காத்திருந்தன. 


வஞ்சி மேகம் வந்து அமர்ந்தது. அதுவரை ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குட்டி மேகங்கள் வஞ்சியை நோக்கி ஓடிவந்தன. வஞ்சியின் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சோகமாக இருந்தது. 


"அம்மா இன்று ஏன் ரொம்ப சோகமா இருக்கீங்க?" என்று கேட்டது நிவ்யா மேகம்.


"இன்று நான் எழுதிய புத்தகம் என்னை மிகவும் பாதித்தது. எப்படி இதை உங்களிடம் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. உங்களைப் போலத் தானே மனிதக் குழந்தைகளும் கீழே விளையாடிக் கொண்டிருக்கும்"


"அந்தப் புத்தகத்துடைய தலைப்பு என்ன?" என்று கேட்டது வயதான மேகம் தேஜா.  


"போர்" 


"போரா? போர் என்றால் என்ன அம்மா ?"


"போர் என்றால் இரண்டு நாடுகள் சண்டையிட்டுக் கொள்வது" 


" நானும் பூஸும் சண்டையிட்டு கொள்வது போலவா அம்மா"

என்று கூறிவிட்டு தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் பூஸை விளையாட்டாக ஒரு குத்து குத்தியது நிவ்யா. 


"அப்படி அல்ல. இந்தப் போரில் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வார்கள்"


"அய்யய்யோ துப்பாக்கியாலா? துப்பாக்கியால் சுட்டுக் கொண்டால் இறந்து விடுவார்களே" என்று சோகமாக கேட்டது பூஸ்


"அப்பொழுது தானே எந்த நாடு வலிமையானது என்று தெரிந்து கொள்ள முடியும்" என்றது நிவ்யா. 


"அப்படி அல்ல தங்கமே. போரில் வென்றாலும் தோற்றாலும் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" 


"இரண்டு நாடுகளும் சண்டையிட்டு கொள்வதற்குக் காரணம் என்ன அம்மா ?"


"ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதில் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரக் காரணங்கள். சில நேரங்களில் போரின் காரணங்கள் மிகவும் சிக்கலானது."


"வஞ்சி அத்தை எனக்குப் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூறுங்களேன்" என்று கேட்டது நிவ்யாவிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டி மேகம் மோலி. 


"இனப் பிரச்சினை மற்றும் மதப் பிரச்சினை, இயற்கை வளங்கள், நிலம் மற்றும் தண்ணீர் இதுக்காகக் கூடப் போர் நடக்கலாம். சில பேரின் சுயநலத்திற்காகக் கூட இருக்கலாம்"


"கியூபாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தது. அதைக் கொள்ளை அடிக்கிறதுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்‌. பிறகு அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டார்களே அந்த மாதிரி சொல்றீங்களா?" என்று வயதான மேகம் ஒன்று கேட்டது.


"சரியா சொன்னீங்க. அந்த மாதிரி தான். கியூபா விடுதலைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறதே எப்படி?" என்று கண்கள் விரியக் கேட்டது வஞ்சி.


"நீங்கள் எழுதிய கியூபா விடுதலை புத்தகத்தை நமது நூலகத்தில் இருந்து எடுத்து நான் வாசித்து இருக்கிறேன். அதை வாசித்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் "


"பரவாயில்லையே இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே"


"எனக்கு கேட்டதை விட பார்த்ததை விட வாசிப்பது மனதில் எப்போதுமே மறக்காது. அதுமட்டுமில்லாமல் மகிழ்ச்சியான ஒன்றைவிட மனதைப் பாதித்தது எனக்கு மறக்க முடிவதில்லை" என்று கூறிய அந்த அந்த வயதான மேகத்தின் முகத்தில் அத்தனை சோகங்கள் அப்பிக் கிடந்தன.


"நாட்டுடைய எல்லையில் இருக்கிற பகுதி என்னுடையது உன்னுடையது என்று சண்டை வரலாம். நான் பேசும் மொழி வேறு நீ பேசும் மொழி வேறு அதனால் நீ எனக்கு எதிரி என்று கூட சண்டை வரலாம்" என்றது வஞ்சி மேகம்.


"இந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறீர்கள் அம்மா?" என்று கேட்டுவிட்டு அம்மாவின் கையில் இருந்த புத்தகத்தைத் தடவியபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தது நிவ்யா. 


"போர் எப்படித் தொடங்குது? போரின் மூலம் ஏற்படும் அழிவுகள் என்ன? அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? இது பற்றித் தான்"


"போரால் யாருக்கு முதலில் பாதிப்பு?"


"போர்கள் நடக்கும்போது அந்தப் போரால் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். போர் மனிதர்களைப் பயத்தில் வைத்திருக்கிறது. அதன் பிறகு நூலகம்.  ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிப்  நான் எழுதி இருக்கிறேன். அது பற்றி கூட உங்களுக்குக் கூறியிருக்கிறேன் ஞாபகம் இருக்கிறதா?" 


"ஆமாம் ஆமாம் புத்தக தேவதை ஆலியா. ஈராக்கில் யுத்தம் நடந்த போது அங்கிருந்த நூலகர் ஆலியா நூலகத்தில் இருந்த புத்தகங்களைக் காப்பாற்றினார் சரியா அத்தை ?" என்று கேட்டது குட்டி மேகம் மோலி. 


"சரியாகச் சொன்னாய் மோலி குட்டி" என்று கூறி மோலியின் தலையை வருடியது வஞ்சி மேகம்.


உடனே பெருமை பொங்க பார்த்தாயா என்ன அறிவை என்பது போல் நிவ்யாவைப் பார்த்து முகத்தை ஆட்டியது மோலி மேகம். 


சரி சரி நீயும் அறிவாளி தான் ஒத்துக்கொள்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது நிவ்யா மேகம்


"நூலகத்தின் மீது ஏன் குண்டுகளைப் போடுகிறார்கள்? புத்தகங்களை ஏன் அழிக்க வேண்டும்?" என்று கேட்டது பவுஸி மேகம். 


குட்டி மேகம் பவுஸி வேறு நாட்டிலிருந்து வந்து சமீபத்தில் தான் இந்தக் கூட்டத்தில் இணைந்து.


"ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் அறிவுச் சொத்தாக இருக்கும் நூலகத்தை அழிக்க வேண்டும். அதனால்தான் நூலகத்தின் மீது குண்டு போடுவார்கள்"


"காலையிலிருந்து வரும் புகையை பார்த்தால், இப்போது கூட நூலகத்தின் மீது குண்டு போட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்றது ஒரு வயதான மேகம்.


"எப்போதாவது, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் நேரங்களில் தான் புத்தகங்கள் கிடைக்கும். இந்த நாட்டில் யாரும் புத்தகங்களை எரிப்பது இல்லை. புத்தகங்களை அறிவின் சுரங்கமாக நினைக்கிறார்கள். ஆனால் இன்று ஏராளமான புத்தகங்கள் வந்தன. அனேகமாக ஏதாவது நூலகத்தை எரித்து இருப்பார்கள் என்று நான் அப்போதே நினைத்தேன்"


வஞ்சி மேகம் கூறிய தகவல்களைக் கேட்டு மற்ற மேகங்கள் மிரட்சியோடு அமர்ந்திருந்தன.


"சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று கரும்புகை என்னைத் தாக்கியது. கலவரத்தின் போது ஒரு வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த குழந்தை எரிந்து கொண்டிருக்கும் தன் வீட்டிற்குள் சென்று புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தது.   


நான் படிக்கணும் நான் படிக்கணும் என்று கதறிக்கொண்டே வந்தது.


புகை வழியாக அந்தக் கதறல் என் காதுகளை அடைந்தது. அந்த நேரத்தில் இருந்து இப்பொழுது வரை அந்தக் கதறல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது" என்று வருத்தம் கலந்த குரலில் கூறியது வஞ்சி மேகம். 


கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தது வஞ்சிமேகம். வஞ்சி மேகத்தைச் சுற்றி அமர்ந்திருந்த அனைத்து மேகங்களின் முகங்களிலும் பயத்தின் ரேகை தாறுமாறாக ஓடியது.


குட்டி மேகம் பவுஸி அழ ஆரம்பித்தது. 


"எதற்காக அழுகிறாய் பவுஸி?" 


"இதற்கு முன் நான் இருந்த நாட்டில் போர் நடைபெற்றது. அங்கு ஏராளமானவர்கள் போரில் இறந்து போனார்கள். போர் நடைபெற்ற நேரத்திலும் போர் முடிந்த பிறகும் கூட அவர்கள் உணவிற்குச் சிரமப்பட்டார்கள். தண்ணீருக்குச் சிரமப்பட்டார்கள். குழந்தைகளையும் கூட கொன்று குவித்தார்கள். அதைப் பார்த்து பயந்து தான் நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து முடிவாக இங்கு வந்து சேர்ந்தேன்" 


"அடடா அப்படியா ! இத்தனை நாளாக நீ இதைப் பற்றிக் கூறவே இல்லையே" 


"அதை நான் மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.


இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வந்த புதிதில் நான் பேசும் மொழி உங்களுக்கு புரியாது. நீங்கள் பேசும் மொழி எனக்கு புரியாது. ஆனாலும், என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இந்த ஒரு மாத காலமாக இங்கு கேட்கும் சத்தங்கள் எனக்கு திரும்பவும் பயத்தைக் கொடுத்திருக்கிறது" என்றது பவுஸி. 


"ஒருவேளை பவுஸி சொல்வது போல் இங்கும் போர் வந்து விட்டதோ?" என்று கேட்டது நிவ்யா மேகம்.


"போராகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் அப்படி இருக்கக் கூடாது" என்றது பவுஸி


"சரியாகச் சொன்னாய். மக்கள் பதட்டத்தோடு தான் இருக்கிறார்கள். இங்கு இப்போது போர் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றித் தான் இதில் எழுதி இருக்கிறேன்"


"அம்மா என்று கூறி தன் அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டது நிவ்யா. நிவ்யாவை வாரி அணைத்துக் கொண்டது வஞ்சி மேகம். 


அதைப் பார்த்தவுடன் பவுஸிக்கு தன் அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது. கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டது பவுஸி.


வஞ்சி புத்தகத்தைக் கையில் எடுத்த  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மேகக் கூட்டத்திற்குள் ஏதோ ஒன்று பாய்ந்தது. பயத்தில் மேகங்கள் கலைந்து ஓட ஆரம்பித்தன. பாய்ந்து வந்த அது வஞ்சியின் மார்பைத் துளைத்துச் சென்றது.


நிவ்யாவும் தன்னை அறியாமல் எங்கெங்கோ ஓடியது. முடிவில் ஓர் இடத்தில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. அங்கு யாருமே இல்லை. நிவ்யாவும் தான் இருந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தது. 


"அம்மா அம்மா நீ எங்க இருக்கே?" என்று கதறியது.


அந்தக் கதறல் அனைவருக்கும் கேட்டது.


அம்மா உயிரோடு இல்லை என்பதை நிவ்யாவிற்குச் சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது?


சரிதா ஜோ 
சரிதா ஜோ 

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Rajathilagam Balaji
Sep 15
Rated 5 out of 5 stars.

இன்றைய சூழ்நிலையை சிறப்பாக கூறியிருக்கிறீர்கள். போரினால் ஏற்படும் பெரும் சேதம் குறித்த விழிப்புணர்வு நம்முடைய அடுத்தத் தலைமுறையினருக்கு அவசியம் தெரிய வைக்க வேண்டும். சிறப்பு அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐

Like

Guest
Sep 15
Rated 5 out of 5 stars.

தற்கால சூழலுக்கு ஏற்ற கதை. போரின் தீமைகள் பற்றி குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக சொல்லப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு. விஜிரவி

Like

Guest
Sep 15
Rated 5 out of 5 stars.

தற்கால சூழலுக்கு ஏற்ற கதை. போரின் தீமைகள் பற்றி குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக சொல்லப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு.

Like
bottom of page