ஒரு சோம்பேறி சாகச வீரனாக மாறிய கதை!
- அ.குமரேசன்
- Sep 15
- 2 min read

தொலைக்காட்சியில் ‘தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ (மோதிரங்களின் மாமன்னன்) பார்த்து ரசிச்சிருப்பீங்கதானே? தென்னாப்பிரிக்கா நாட்டிலே 1892ஆம் ஆண்டு பிறந்து பிரிட்டனில் 1973 வரையில் வாழ்ந்தவர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன். அவர் எழுதி 1954, 1955 ஆண்டுகள்ல மூணு பாகங்களாக வெளியான நாவலைத்தான் முதல்ல திரைப்படமாகவும், அப்புறம் வலைத் தொடராகவும் தயாரிச்சாங்க. அதுக்கு ஒரு முன்கதை போல அவர் எழுதி 1937ஆம் ஆண்டுல வந்த நாவல்தான் ‘தி ஹோபிட்‘. அதைப் பத்திதான் இப்ப நாம பார்க்கப் போறோம்.
பல நாடுகள்லேயும் பசங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச புத்தகம் இது. குழந்தைகளுக்கு எப்பவுமே பிடிக்கிற மாய உலகக் கதைதான். இந்தக் கதையில்தான், ரிங்ஸ் தொடரில் வர்ற மைய பூமியை டோல்கீன் முதல்ல அறிமுகப்படுத்தினார்.
கதை என்னான்னு பார்க்கலாமா?
ஹோபிட்டுங்கிறது என்னன்னா டோல்கீன் கற்பனையாக உருவாக்கிய ஒரு இனத்தோட பெயர். அந்தச் இனத்தைச் சேர்ந்தவங்க சின்ன உருவத்தோட இருக்கிறவங்க. நல்லா சாப்பிட்டுட்டு பரபரப்பு இல்லாம அமைதியாக வாழ விரும்புறவங்க. அங்கே இங்கேன்னு சுத்தாம ஊருலேயே இருக்க நினைக்கிறவங்க.
அப்படிப்பட்ட ஹோபிட் இனத்தைச் சேர்ந்தவன்தான் பில்போ பேகின்ஸ். அவனும் வீட்டுல அமைதியா சுகமா இருந்தா போதும்னு நினைக்கிறவன்தான். வழிகாட்டியும் மாயவித்தைகள் தெரிஞ்சவருமான காண்டால்ஃப், உயரம் குறைஞ்சவங்களா இருக்கிற ஒரு குழுவைச் சேர்ந்த 13 பேர்களைக் கூட்டிக்கிட்டு பில்போவைப் பார்க்க வர்றாரு. அந்தக் குட்டி மனுசங்களோட குழுத் தலைவன் தோர்ன் ஓக்கன்ஷீல்ட்.
அவங்க வருகையால பில்போவொட அமைதி குலையுது. அவங்க மேல அவனுக்கு முதல்ல கோபம் வருது. அவங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு அவன்ட்ட சொல்றாங்க.
கைப்பற்றப்பட்ட செல்வங்கள்
அந்தக் குட்டி மனுசங்களோட பல செல்வங்களை ஒரு கொடிய டிராகன் பறிச்சு வெச்சிருக்கு. அதோட பெயர் ஸ்மாக். அவங்களோட ஆதி காலத்துக் குடியிருப்பு ஒரு மலை. அதுக்குப் பேரு தனிமை மலை. அதுவும் ஸ்மாக் ஆக்கிரமிப்புலதான் இருக்கு.
“எங்க கூட நீ வரணும், ஒரு திருடனா மாறி எங்க பரம்பரைச் செல்வங்களை மீட்டுக் கொடுக்கணும்.” இப்படி தோர்ன் ஓக்கன்ஷீல்ட் கேட்டுக்கிடுறான்.
.
பில்போ தயக்கத்துடன் இந்த சாகசப் பயணத்துல இணையுறான். காண்டால்ஃப் வழிகாட்டுறாரு. போற வழியிலே, நிறையா பூதம் வருது, குட்டி அரக்கர் நாலைஞ்சு பேரு வர்றாங்க. பெரிய பெரிய சிலந்திப் பூச்சிகள் மிரட்டுது. இது மாதிரி வேற பல ஆபத்துகளையும் அவங்க சந்திக்கிறாங்க.
மாய மோதிரம்
ஒரு சிக்கலான நேரத்துல, பில்போ அந்தப் பயணக் குழுவிலிருந்து எப்படியோ பிரிஞ்சிடுறான். ஒரு குகைக்குள்ள நுழையுறான். அங்கே ஒரு விசித்திரமான பிறவியைப் பார்க்கிறான். அதோட பெயர் கோல்லம். “நான் புதிர் போடுறேன், நீ பதில் சொல்லு. என்னோடு கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொல்லிட்டா உன்னை விட்டுடுறேன்.” இப்படி அந்த கோல்லம் நிபந்தனை போடுது. அந்தப் புதிர் விளையாட்டுல, எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் சொல்லி பில்போ வெற்றியடையுறான். கோல்லம் ஒரு மோதிரத்தைப் பரிசாக் கொடுத்து அவனை மகிழ்ச்சியா அனுப்பி வைக்குது.
அது சாதாரணமான மோதிரம் இல்லை, அதிசய மோதிரம்! அதை விரல்ல மாட்டிக்கிட்டா நாம யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோமாக்கும்.
குட்டி மனுசங்களோட மறுபடி சேரும் பில்போ மாய மோதிரத்தைப் பயன்படுத்தி அவங்களோட செல்வங்களை மீட்கிறான். அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னா, அந்த செல்வங்களுக்காக ஐந்து படைகளின் போர் ஏற்படுது.
ஸ்மாக் டிராகன் வீழ்த்தப்பட்டதால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளவும், சொத்துகளைக் கைப்பற்றவும் திட்டமிடுற கோப்ளின், வர்க் என்ற கூட்டங்கள் சேர்ந்து ஒரே படையா வர்றாங்க.. ஸ்மாக் தோற்கடிக்கப்பட்டால், அது கைப்பற்றி வைத்திருந்த தங்களுடைய சொத்துகளும் திரும்பக் கிடைக்கும்னு எதிர்பார்க்கும் மனுசங்க ஏரி நகரிலிருந்து வர்றாங்க. அதே மாதிரி எதிர்பார்ப்புடன் காட்டிலேயிருந்து ஏல்வ் என்ற இனம் ஒரு கூட்டமாக வருது. இவங்களும் குட்டி மனுசங்களும் ஒரு படையா சேருறாங்க. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம உதவி செய்யுற நோக்கத்துடன் கழுகுகள் படை வந்து சேருது. இந்த ஐந்து படைகளின் போரில் குட்டி மனுசங்க – ஏரி மனுசங்க – காட்டு உயிரி படைகளுக்கு வெற்றி கிடைக்குது. அவரவர் உடைமைகள் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கழுகுப்படைக்கு நன்றி சொல்லிட்டுப் புறப்படுறாங்க.
சோம்பேறியாவும் கோழையாவும் சுயநலவாதியாவும் இருந்த பில்போ சுறுசுறுப்பானவனாக, துணிச்சல்காரனாக, மத்தவங்களுக்காகப் பாடுபடுறவனாக மாறுறான். போரில் வெற்றி பெற்று புது மனுசனா வீடு திரும்புறான்.

கதையின் பெயர் வந்த கதை
ஜே.ஆர்.ஆர். டோல்கீன் ஆங்கிலோ–சாக்ஸன் எனப்படும் பழங்குடி இன மக்கள் தொடர்பாகவும் அவர்களுடைய மொழி, இலக்கியங்கள் பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு பேராசிரியர். அவர் தன் பேரக் குழந்தைகள் வாசிப்பதற்காகத்தான் இந்த நாவலை எழுதினாராம். அவருடைய ஆராய்ச்சி அறிவு நாவலில் அழகா வெளிப்படுதுன்னு எழுத்தாளர்கள் சொல்றாங்க. அதே நேரத்திலே பசங்க விரும்பிப் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி எளிமையா எழுதியிருக்காருன்னும் சொல்றாங்க.
ஹோபிட் –இந்த வார்த்தை எப்படிக் கிடைச்சது தெரியுமா? “ஹோல்பைட்லா” என்ற பழங்கால ஆங்கிலச் சொல்லிலிருந்து கிடைச்சதாம். ஹோல் என்றால் துளை என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஹோல்பைட்லா என்றால் “துளையில் வாழ்கிறவர்” என்று பொருள். அதாவது, வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் தன்னுடைய ஊர், தன்னுடைய வீடுன்னு சுருங்கிப்போய் வாழுற இனம்னு உணர்த்துறதுக்காகத்தான் அதிலேயிருந்து ஹோபிட்டுங்கிற பெயரை டோல்கீன் கற்பனையாக உருவாக்கினாராம்.
சுயநலமா தனிச்சுப் போகாம, மத்தவங்களுக்குப் பயனளிக்கிற வாழ்க்கையை வாழ்ந்தா மனசுக்கு நிறைவா இருக்கும்னு இந்தக் கதை சொல்லுதுல்ல? அது மட்டுமில்லாம தங்கம், வைரம் மாதிரியான செல்வம் எப்படி மனுசங்களை மோத வைக்குதுன்னும் கதை காட்டுது, சரிதானே நண்பர்களே?
Comments