இயலில் தேடலாம்!
337 results found with an empty search
- “நான் கதைகளை நேசிக்கிறேன்”
அமெரிக்க எழுத்தாளர் டே கெல்லர், கேட் டி’கமில்லோவிடம் அவரது புதியநாவலான ”ஃபெரிஸ்” குறித்தும், அவரது எழுத்துகளில் பரவலாகக் காணப்படும் முக்கியமான கருத்துக்கள் குறித்தும் பேசுகிறார் - தமிழாக்கம்: வே.சங்கர் டே கெல்லர் : வணக்கம். உங்களோடு நான் இந்த நேர்காணலைச் செய்வதற்கு மிகவும் பெருமிதமடைகிறேன். உங்கள் புத்தகங்களை நான் இப்போது மட்டுமல்ல, என் சிறுவயதில் இருந்தே நேசிக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும் போது The Tiger Rising புத்தகத்தை என் வகுப்பு ஆசிரியர் உரக்க வாசித்துக்காட்டிய நினைவுகள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. Despereaux புத்தகத்தை நூலகத்திற்குச் சென்று வாசித்ததும் மறக்கமுடியாத அனுபவம். இப்போது உங்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கேட் டி’கமில்லோ: உங்களது வார்த்தைகள் என்னை நெகிழச்செய்கிறது. குழந்தைகளின் புத்தக உலகம் என்பது யாராலும் கற்பனை செய்யமுடியாத அற்புதமான ஒன்று. ஒரு முறை கேதரின் பேட்டர்சனை சந்தித்தபோது, ’உங்களை நீண்டநாட்களாகப் பார்க்கவே முடியவில்லையே?’ என்று கேட்டேன். அதேபோல, கிரிஸ்டோபர் பால் கர்டிஸை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வை ஒருபோதும் மறக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன்தான் செயல்படுகிறோம் என்று தோன்றுகிறது. குழந்தைகள் தனிமையை உணராமல் இருக்க வேண்டுமானால் கதைகள் சொல்வதுதான் ஒரே வழி. வாழ்க்கை கடினமாக இருந்தபோதிலும், நாம் செய்யும் பணி மிகவும் மகத்துவமானது. உங்களுக்குள் இன்னும் இருந்துகொண்டிருக்கும் சிறுவயதுக் குழந்தைமைக்கு நன்றி. டே : உங்களுக்கு, உண்மையிலேயே நான்தான் நன்றி செல்லவேண்டும். இந்த அருமையான பணியில் ஈடுபட்டிருக்கும் மகத்தான மனிதர்கள் மத்தியில் நானும் இருப்பது என் அதிர்ஷ்டம்தான். இதை இறுதியில் கேட்கலாம் என்றிருந்தேன், ஆனால், இப்பொழுதே தொடங்குகிறேன். நீங்கள் முதன்முதலில் Winn-Dixie புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்திற்குப் போய், அப்போது இருந்த உங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வாய்ப்பு கிடைத்தால், என்ன சொல்வீர்கள்? கேட் : அருமையான கேள்வி. அந்தக் காலத்திற்குப் போவது மிகவும் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கதையை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒருவிதமான தெளிவற்ற உணர்வு இருந்தது. பிறகு காலப்போக்கில் ’இதுதான் என் வாழ்க்கையின் உன்னதமான பணி’ என்று புரிந்து கொண்டேன். அப்போது எனக்குள் ஏராளமான ஐயப்பாடுகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குத் திரும்பிச்சென்று சொல்லவேண்டுமானால், ”இதுதான் உனக்கான சரியான பாதை” என்று சொல்லிக்கொள்வேன். டே : மிகவும் அழகாகச் சொன்னீர்கள். உங்கள் இத்தனை கால எழுத்துப் பயணத்தில், “பொதுவெளியில் எழுத்தாளராகவும், உள்ளார்ந்த பிரபல இலக்கியப் படைப்பாளராகவும்” இருப்பதை எப்படிச் சமன் செய்கிறீர்கள்? கேட் : கடந்த வாரம் ஒரு நிகழ்வில் ஒருவர் கேட்டார்: “The Tale of Despereaux என் குழந்தைப் பருவத்தில் என் உயிரைக் காப்பாற்றியது என்று யாராவது சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்றார். ”அதைப் பற்றி என்னால் யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.” என்று பதில் சொன்னேன். ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள் எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன். பிறகு, அந்த கனம் நிறைந்த நிமிடங்களை நான் மறந்துவிடவேண்டும். இல்லையென்றால் மனம் குழம்பிவிடும். இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா! டே : ஆம். சிறார்களுக்கு எழுதும்போது பொறுப்பு கூடிவிடுகிறது. அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிலநேரங்களில் பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவர்களுக்கு எழும் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைப் புத்தகத்தில் தீர்த்துவிடவேண்டும் என்று திணிக்கிறோம். பிறகு எப்படி ஒரு கதையை எழுதுவது? கேட்: மிகவும் உண்மை. குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்களில், ”இதில் என்ன நீதி இருக்கிறது?” என கேட்பது வழக்கம். ஆனால் பெரியவர்களுக்கான எழுத்தாளர்களிடம் இம்மாதிரி அசட்டுத்தனமான கேள்விகள் கேட்கப்படுவதில்லை. நான் குழந்தைகளுக்கு எதையாவது கற்பிக்க முயன்றிருந்தால், நிச்சயம் தோல்வியடைந்திருப்பேன். எனவே, “இந்தக் கதையில், இவ்வுலகில் உள்ள குழந்தைகளை நம்பிக்கையுடன் வாழச் செய்யவேண்டும்” என்று எண்ணிக்கொண்டு எழுதினால், அது நடக்காது. அப்படிச் சிந்திக்கவும் கூடாது. நான் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அது மிகப்பெரியதொரு சுமையாக இருந்தது. அந்தந்த கணத்தில் முழுமையாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை நான் உணர்வேன். பிறகு விமானத்தில் திரும்பும்போது Colson Whitehead எழுதிய Harlem Shuffle புத்தகத்தை வாசித்தேன். நான் மீண்டும் என் உடலுக்குள் திரும்பிய மாதிரி உணர்ந்தேன். “நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் எப்போதும் தனித்துவமானவர்; உங்களுக்கே உரிய சிறப்புகள் உங்களுக்குள் உண்டு. முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்களுக்கே உரிய பிரகாசத்துடன் நீங்கள் ஜொலிப்பீர்கள்.” டே : “நீங்கள் உங்களுடைய உடலுக்குள் மீண்டும் திரும்பிவந்தேன் என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோன்ற உணர்வுகளை நானும் மிகத்துல்லியமாக உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர் என்ற உண்மையான சுயத்தையும், புத்தக ஆசிரியர் என்ற என் வெளிப்படையான முகத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கும்போது ’எழுதும் செயலே’ என்னை எனக்குள் திரும்ப அழைத்துவருவதைப் போல உணர்கிறேன். வகுப்பறைப் பாடம் என்ற கோணத்தில் ஒரு விசயத்தை அணுகும்போது உங்கள் புத்தகங்களில் வரும் சொற்கள்தான் எனக்கு நினைவில் வருகிறது. Ferris நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்ட சொற்களை நினைவுகூருகிறாள். அவற்றை தான் புரிந்துகொண்டதைப் போல வாசகருக்கும் கடத்துகிறாள். உங்கள் புத்தகங்கள் குழந்தைகளுக்கு புதிய சொற்களையும் அந்தச் சொற்களின் அர்த்தங்களையும் கற்றுத்தருகின்றன. கதையின் மூலம் நீங்கள் சொல்லவரும் நோக்கம் அதுதான் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. உங்களது சொந்தவரிகளையே நான் மேற்கோள் காட்டுவதாகத் தவறாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் சொல்கிறேன். ‘Ferris மற்றும் Billy எழுத்துக்களையும், வார்த்தைகளின் அர்த்தங்களையும் தேர்வுகளுக்காக படித்து மனப்பாடம் செய்தார்கள். அந்தச் சொற்கள் அவர்களின் மூளை மற்றும் இதயத்தில் நிரந்தரமாக பதிந்துவிட்டன. அவை இப்போது Ferris-இன் சொற்களாகிவிட்டன.’ என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த வரி என்னை மிகவும் ஆச்சரியப்படச் செய்தது. அதனால்தான் இந்தக் கேள்வி என் மனதில் உருவானது. உங்களுக்கு முதன்முறையாக ‘சொற்கள் எனக்கானவை’ என்று உணர்ந்த தருணம் எப்போது?” கேட்: “நான் எப்படியாவது விரைவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெறித்தனமாக இருந்தேன். அப்போது, என் மனம் முழுவதும் வேறொரு உலகில் இருந்தது. ’கதைகள்தான்’ எனக்கு மிகவும் அவசியம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்றவுடன் எங்களுக்கு உச்சரிப்புகள் (phonics) கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்கள். என்ன காரணத்தாலோ, phonics என் முளைக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. எனக்கு பயமாக இருந்தது. பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் கதறி அழுதேன். நான் கதைகள் வாசிக்க வேண்டும், ஆனால் இந்தத் எழுத்துக்கள் கொண்டிருக்கும் உச்சரிப்புகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன. நான் மிகவும் விரும்பிய வாசிப்பு என்ற அந்த விஷயம் என்னிடமிருந்து விலகிவிட்டது போலவே இருந்தது. என் அம்மா என்னுடைய சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். மிகவும் அன்பானவர். என்னவோ செய்யட்டும் என்று வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஓரமாக நிற்கவில்லை. ”அடடே! இதற்காகவா வருத்தப்படுகிறாய்? நீ எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வதில் வல்லவளாயிற்றே” என்றார். பிறகு எனக்காக வார்த்தை அட்டைகளைத் (flash cards) தயார் செய்தார். அதன் உதவியோடு சொற்களை மனப்பாடம் செய்து வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அம்மா ஏதாவது ஒரு சொல்லை ஃப்ளாஸ் கார்டில் காட்டி முடிப்பதற்குள் நான் சொல்வதில் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வார்த்தையையும் என் அம்மா எனக்கு காட்டும் போதெல்லாம் அது ஒரு பரிசு போலவும், ஒரு திறவுகோல் போலவும் இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது – நாங்கள் இருவரும் சமையலறையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்போம். அவர் அந்த அட்டைகளை எனக்கு காட்ட, ‘இவை என்னுடையவை. இந்தச் சொற்களைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்’ என்று என் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்” டே : நீங்கள் சொன்ன கதையைக் கேட்டவுடன் Ferris புத்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நீங்கள் இப்போது சொன்ன கதையும் ஒரு அன்புமிகுந்த கதையே. இது மிகவும் அழகானது மட்டுமல்ல மனித மனதைக் கனிவூட்டுவதாகவும் இருக்கிறது.” கேட் : “நீங்கள் இப்படி சொல்லும்போது எனக்கு இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என் அம்மாவுக்கு தெளிவாக நன்றி சொல்ல இயலாமல் போய்விட்டது. அது இன்றளவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் என்னிடம் என்னென்னவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஏனென்றால், அவர் எனக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கவனித்துக் கவனித்து நிவர்த்தி செய்தார். அவர் எப்போதும் என்னை ஒரு ‘வாசிப்பவளாகவே’ பார்த்தார். கவனித்தார். நான் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை முதன் முதலாக எனக்காக வாங்கித் தந்ததும் அவர் தான்.” டே : “அந்த மாதிரியானவர்கள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த நேர்காணலுக்குப் பிறகு, உடனே என் அம்மாவை அழைத்து நன்றி சொல்லப் போகிறேன்!” கேட் : “ஆம், கண்டிப்பாக நன்றி சொல்லுங்க!” டே : “ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதை என்ற கருத்து – நீங்கள் அந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பே நம்பினீர்களா? இல்லையெனில் எழுதிக் கொண்டிருக்கும்போது அது உங்களுக்குள் வந்ததா?” கேட் : : “நீங்கள் கேட்கும் விதமே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நாம் நண்பர்களாக இருக்கவேண்டும் போலிருக்கிறது!” டே : [வாய்விட்டுச் சிரிக்கிறார்] கேட் : “எனக்கொரு சிறந்த தோழி இருக்கிறாள், நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். அவளுக்கு 2019 டிசம்பர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அது என் அப்பாவின் பிறந்தநாளாகும். ஆனால், அவர் அதே ஆண்டின் நவம்பரில் இறந்துவிட்டார். 2020 ஜனவரி 1ஆம் தேதி, அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் என் கைபேசியில் வந்தன. அந்தக் குழந்தையின் பெயர் Rainy. அந்தக் குழந்தை அன்பு நிறைந்த உறவினர்களால் சூழப்பட்டிருந்தாள். அம்மா, அப்பா, இரண்டு பாட்டி-தாத்தாக்கள்...” அப்போது, நான் என்ன நினைத்தேன் என்றால், ‘இவ்வளவு பாசத்துடன் வாழ்த்துகள் சொல்லப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்கையை மையமாகக் கொண்டு ஒருகதையைத் தொடங்கினால் எப்படி இருக்கும்?’ ஏனென்றால் நான் எழுதிய எந்த கதையிலும் இப்படியொரு தொடக்கம் இருக்கவே இல்லை. அதே நேரத்தில் என் அப்பா என்னுடைய நினைவில் இருந்தார். அவர் மிக மோசமான, துயரமிக்க சிறுவயதைக் கொண்டவர். அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான். எங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. அது மிகவும் மோசமாகவே இருந்தது. அவர் இவ்வுலகை விட்டு சென்ற நேரத்தில், அந்தக் குழந்தை இந்த உலகில் வந்திருக்கிறாள். நான் என்ன நினைத்தேன் என்றால், ‘ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அன்பு நிரம்பி வளர்கிறாள் என்ற இடத்திலிருந்து கதை எழுதினால் எப்படி இருக்கும்?’ அதுவே என் கதையின் தொடக்கம். அன்பு மையமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு தடைகளையும் நான் விலக்கியபடியே சென்ற பிறகு, கதையில் உள்ள பாட்டி Charisse சொல்வதைப் பாருங்கள்: ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நான் உருவாக்குகிற கதாபாத்திரங்கள் என்னைவிட புத்திசாலிகள். காரணம், இது உண்மையாகவே நிகழ்கிறது. ஒவ்வொரு நல்ல கதையும் ஒரு அன்புசூழ் கதையாகத்தான் பரிணமிக்கிறது.” டே : “நீங்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது எனக்கு உடல் முழுக்க புல்லரிக்கிறது. இப்போது, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றியும் பேச ஆசையாக இருக்கிறது. உங்கள் எல்லா கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அவை எல்லாம் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், அவை கேலிச்சித்திரங்களில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஆகிவிடுவதில்லை. நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும்போது என்ன செய்கிறீர்கள்?” கேட் : கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க நான் பெரிதும் மெனக்கெடுவதில்லை. நான் கதாப்பாத்திரங்களைத் தேடுகிறேனோ இல்லையோ, உண்மையில் அவைகள் என்னைக் கண்டடைந்துவிடுகின்றன. கேலிச்சித்திரம்போல நான் அவைகளை உருவாக்கும் நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடுதான் நடக்கிறேன். அது மிகப்பெரிய சவால். ஆனால், உருவாக்கியபிறகு அதை என்ன செய்யவேண்டும் என்று எனக்கே தெளிவாகத் தெரிவதில்லை. அது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ஒருசிலர் கேட்பார்கள், “நீ எப்போ பெரியவர்கள் வாசிக்க ஒரு புத்தகம் எழுதப்போறே? என்று. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன். ஏனென்றால், குழந்தைகளுக்கு எழுதும் புத்தகங்களின் மீது எனக்குத் தீராத மயக்கமுண்டு. அது நேரடியாகத் தெரியாது. ஒரு விசித்திரமான அழகு மிதந்து செல்வதைப் போல ஓரக்கண்களால் பார்க்கும்போது தெரியும். அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது Katherine Paterson சொன்னது போல: ‘நம்பிக்கையான முடிவைத் தரவேண்டியது நம் கடமை. எழுதும்போது எதிர்பாராதவிதமாக வந்துசேரும் ஒரு சில வித்தியாசமான கதாபாத்திரங்கள், என் உள்ளத்தில் உண்மையாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நம்பிக்கை பயணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஏனெனில், நம்முடைய ஒற்றுமையை உணரும்போதுதான், நம்பிக்கைக்கான ஒரு இடம் உருவாகிறது. இதுதான் புத்தகங்கள் செய்யும் அற்புதம். “புத்தகங்கள் உன்னை யாரோ உண்மையில் பார்க்கிறார்கள் என்று உணரச்செய்கின்றன. அதே நேரத்தில், நீயும் பிறரை எப்படிப் பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கின்றன”. ஆசிரியர் குறிப்பு: கேட் டி’காமில்லோ (Kate DiCamillo) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர். 2014 – 2015- ஆண்டுக்கான (National Ambassador for Young People & Literature) அமெரிக்க சிறார் இலக்கிய தூதராக நியமிக்கப்பட்டார். தன் எழுத்துக்களின் மூலம் குழந்தைகளின் பழக்கவழக்கங்களை, நுண் உணர்வுகளை, வாழ்க்கை மீதான பார்வைகளைக் கதாபாத்திரங்களின் வழியாகவும், உருக்கமான உரையாடல்கள் மூலமாகவும், குழந்தைகளின் உலகத்தை உணர்த்தும் வகையிலும் கற்பனைக் கதைகளைப் படைப்பதில் வல்லவர். மார்ச் 25, 1964ல் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்த இவர், சிறுவயதின் பெரும்பாலான காலத்தை ஃப்ளோரிடா மாகாணத்தில் கழித்தவர். Because of Winn-Dixie (2000) இவரது முதல் நாவல். ஒரு சிறுமிக்கும், அவளால் அழைத்துச்செல்லப்படும் ஒரு நாய்க்கும் இடையே உருவாகும் நட்பு பற்றிப் பேசும் இந்நாவல் Newbery Honor விருதைப் பெற்றது. The Tale of Despereaux (2003), Despereaux என்ற பெயர்கொண்ட ஒரு சிறிய சுண்டெலி பற்றிய நாவல். இந்நாவல் தைரியம், பாசம், மற்றும் ஒரு அரண்மனை உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருது பெற்றது. Flora & Ulysses (2013) என்ற நாவல் Flora என்ற சிறுமியும் ஒரு சக்திவாய்ந்த ardent சிட்டுக்குருவி மற்றும் Ulysses இடையே நடக்கும் அதிசய அனுபவங்களைப் பற்றியது. இந்நாவல் ஒரு காமிக்ஸ் பாணியில் எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருதை மீண்டும் வென்றது. The Miraculous Journey of Edward Tulane (2006) என்ற நாவல் porcelain rabbit எட்வர்ட் டுலேனின் பயணத்தைச் சொல்வது. இந்நாவல், பயணத்தின் வழியே அன்பு, பாசம், இழப்பு, தியாகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. Raymie Nightingale (2016) என்ற நாவல் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் ஏக்கம், நண்பர்களுடன் வளர்கின்ற உறவுகள் பற்றி அழகாகச் சொல்கிறது. கேட் டி’காமில்லோவின் எழுத்துக்களில் அன்பு, நம்பிக்கை, நகைச்சுவை இவை மூன்றும் எல்லா இடங்களிலும் பிரதானமாக வெளிப்படுகிறது). டே கெல்லர் (Tae Keller) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுதிய கதைகளில் பெரும்பாலும் இரட்டைக் கலாச்சாரப் பின்னணியை மையமாகக் கொண்ட சிறுமிகள், தங்களது தனித்துவமான அடையாளத்தைக் கண்டறிய முயல்வதைப்பற்றியதாக இருக்கிறது. இவரது ’When You Trap a Tiger (2020)’ என்ற நாவல் ஒரு இரட்டை கலாச்சார வாழ்வைக்கொண்ட சிறுமி லில்லி மற்றும் அவரது கொரிய பாட்டி இடையிலான உறவைப் பற்றியது. கொரிய நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தப்பட்ட இக்கதை, 2021ஆம் ஆண்டு Newbery Medal விருதைப் பெற்றது. The Science of Breakable Things (2018) என்ற இந்தக் கதை, ஒரு சிறுமி தனது தாயின் மனநலக் குறைபாட்டை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பயணத்தை விவரிக்கிறது. இது 2018ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. Jennifer Chan Is Not Alone (2022) என்ற இவரது நாவல், சமூக ஒதுக்கீடு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றியதாக இருக்கிறது. நன்றி – School Library Journal
- சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
"சூரியனுடைய ஒளிதான் எல்லா உணவுச்சங்கிலிகளுக்கும் அடிப்படையானது" என்று நாம் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். சூரிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது, தாவரங்கள் இல்லாமல் உணவுச்சங்கிலியும் இயங்காது. ஆகவே சூரியனுடைய ஒளி இல்லாமல் எந்த உணவுச்சங்கிலியும் செயல்பட முடியாது. 1977 வரை எல்லாரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கண்டுபிடிப்பு எல்லாவற்றையும் மாற்றியது. 1977ம் ஆண்டில் என்ன நடந்தது? தென்னமெரிக்காவுக்கு அருகில் உள்ள கலபகோஸ் தீவுகளில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் குழுவின் தலைமை அறிவியலாளராக இருந்தவர் ராபர்ட் பல்லார்ட் என்ற நிலவியலாளர். நார் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் அமர்ந்துகொண்டு அவர்கள் ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் கருவிகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். கடலுக்கு அடியில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் (Hydrothermal Vent) என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்று தேடியபோது, அவர்கள் ஒரு புதிய வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தார்கள். இந்த பாக்டீரியா எப்படியெல்லாம் உணவு தயாரிக்கிறது என்று சோதனை செய்து பார்த்தபோது அறிவியலாளர்கள் வியந்துபோனார்கள். ஏனென்றால், இந்த பாக்டீரியா, கரியமில வாயு என்று அழைக்கப்படும் கார்பன் டை ஆக்சைடையும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயுவையும் மட்டுமே வைத்துக்கொண்டு உணவு தயாரித்துவிடும்! சூரிய ஒளி இல்லாமல் உணவு தயாரிக்கும் முதல் உயிரினம் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது! "இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். "நாங்கள் எல்லாருமே பேசக்கூட மறந்து அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனோம். இந்த உயிரிகளைக் கண்டுபிடித்தது ஒரு அட்டகாசமான உணர்வைத் தந்தது" என்று அந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார் ராபர்ட் பல்லார்ட். கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரி, அறிவியலையே மாற்றியமைத்தது. சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழ முடியும் என்று அனைவரும் அறிந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, சூரிய ஒளி படாத ஆழ்கடலில் முழுமையான உணவுச்ச்சங்கிலிகள் இருக்கும் என்பதையும் அன்றுதான் கண்டுபிடித்தார்கள். சூரிய ஒளி இல்லாமல் இவ்வாறு உணவு தயாரிப்பதை வேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் ஆயிரக்கணக்கான வேதிச்சேர்க்கை நுண்ணுயிர் இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்தான் வேதிச்சேர்க்கை செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த வகை நுண்ணுயிர்கள் வெப்பம் அதிகமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளிலும்கூட தாக்குப்பிடித்து வாழும் தகுதி படைத்தவை. கடினமான சூழலில் வாழும் இதுபோன்ற உயிரிகளை Extremophile என்று அழைப்பார்கள். அதீதத் தன்மையை விரும்பும் உயிரிகள் என்று இதற்குப் பொருள் கூறலாம். இந்த வேதிச்சேர்க்கை நுண்ணுயிரிகளின் இன்னொரு சிறப்பம்சத்தை சொல்லட்டுமா? சிலவகை வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் தனியாக வாழும். இன்னும் ஒரு சில நுண்ணுயிர்கள், பிற விலங்குகளின் உடலில் இணைந்து கூட்டாக வாழும்! அந்த விலங்குகள் தனியாக வேட்டையாடவோ,உணவு தயாரிக்கவோ தேவையில்லை. இந்த பாக்டீரியாக்கள் தயாரித்துத் தரும் உணவை அப்படியே சாப்பிட்டால் போதுமானது. விலங்குகளுக்கு உணவு கிடைத்துவிடும், பாக்டீரியாக்களுக்கு இருப்பதற்கு இடம் கிடைத்துவிடும். இருவருக்கும் சாதகமான நட்பு இது. நண்டுகள், ஆழ்கடல் புழுக்கள், சிப்பிகள் என பல வகை உயிரினங்களுடன் இந்த பாக்டீரியாக்கள் இணைந்து வாழ்கின்றன. இந்த பூமியில் உயிர்கள் உருவானபோது சூரிய ஒளியை வைத்து உணவு தயாரிக்கும் முறை இருக்கவில்லை என்றும், இந்த வேதிச்சேர்க்கை முறைதான் முதலில் வந்தது என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். சூரிய ஒளியும் அதிகப்படியான ஆக்சிஜனும் இல்லாமலேயே இந்த உயிரிகளால் வாழ முடியும் என்பதால் இவைதான் பண்டைய உயிரினங்களாக இருந்திருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், வியாழன் கோளின் நிலவான யுரோப்பா போன்ற பல இடங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் எல்லாம் இதுபோன்ற வேதிச்சேர்க்கை நடப்பதற்கே வாய்ப்பு அதிகமாம்! ஆகவே இங்கெல்லாம் ஒருவேளை நுண்ணுயிர்கள் வாழ்ந்தால் அவையும் வேதிச்சேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிர்களாகத்தான் இருக்குமாம். பில் நை என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆர்வலர், "மனித இனத்தின் 100 நூறு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் அதில் வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் கட்டாயம் இடம்பெறும்" என்கிறார்.
- லண்டனிலிருந்து அன்புடன் - 2
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம், “இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தொடரை, இலண்டனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலிருந்து நாம் தொடங்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் hologauze animations வழியே தோன்றி வாழ்த்துச் சொன்ன “பேடிங்கடன் கரடி” குறித்து சென்ற பதிவில் நாம் பேசியிருந்தோம். உலகப் புகழ் பெற்ற “பேடிங்கடன் கரடி” புத்தகம் பற்றித்தான் நாம் இனி பார்க்க இருக்கிறோம். "A Bear Called Paddington" என்ற குறுநாவல் 1958ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பாண்ட். 1958யிலிருந்து 2016 வரை மொத்தம் 30 புத்தகங்கள் பேடிங்க்டன் கரடி கதாபாத்திரம் கொண்டு வெளியாகியுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 8-10 அத்தியாயங்கள் கொண்டவை. நீங்கள், எட்டு வயதிற்கு மேல் உள்ளவர் என்றால் நீங்களாகவே இந்தப் புத்தகத்தை வாசித்துவிடலாம். Paddington என்பது இலண்டனில் உள்ள ஓர் ஊரின் பெயர். அங்கு ஒரு பெரிய ரயில் நிலையமும் உண்டு. அந்த ரயில் நிலையிலிருந்து, இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு தொலைதூர ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்வது வழக்கம். கதையின்படி, மிஸ்டர் பிரவுன் மற்றும் அவரது மனைவி இருவரும் பேடிங்கடன் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அவர்களது குழந்தைகள் வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், குழந்தைகள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். ரயிலின் வருகைக்காக அவர்கள் காத்திருந்த போதுதான், கோட்சூட் & தொப்பி அணிந்த கரடி ஒன்று தனது பெட்டியுடன் ரயில் நிலையத்தில் தனியே அமர்ந்திருப்பதை இருவரும் கவனித்தனர். அந்தக் கரடியின் கழுத்தில் “Please look after this bear” என்றும் எழுதப்பட்டிருந்தது. இருவரும் அந்தக் கரடியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தனர். தான் பெரு(Peru) எனும் நாட்டிலிருந்து வருவதாகவும், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டதால், தனது அத்தை லூசி தன்னை இலண்டன் அனுப்பினார் என்றும் ஆனால் தனக்கு எங்குச் செல்வது, எங்குத் தங்குவது, யாரிடம் உதவி கேட்பதும் தெரியவில்லை என்று வருத்தமாகக் கூறுகிறது. வந்து நீண்ட நேரமாகியும், யாரும் தன்னுடன் பேசவில்லை என்றும், தனக்கு மிகவும் பசிக்கிறது என்றும் பேடிங்கடன் கரடி பதில் அளித்தது. கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர். அப்படித்தான் பேடிங்க்டன் கரடி ப்ரவுன் குடும்பத்தில் இணைகிறது. அதன் பிறகு அந்தக் கரடி குடும்பத்தினருடன் இலண்டனிலுள்ள ஒவ்வொரு பகுதிக்குச் செல்வதும் அங்குச் செல்லும்போது அது செய்யும் சேட்டைகளுமே இந்தப் புத்தகத்தின் கதை. பேடிங்க்டனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் உண்டு. அது குழந்தைகள் போலவே சிந்திக்கும். orange marmalade எனப்படும் ஒரு இனிப்பு தான் பேடிங்கடனுக்கு பிடித்த உணவு. ஊர் சுற்றுவது, அத்தைக்குக் கடிதம் எழுதுவது, ரகசியமாக வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிசுகள் ஏற்பாடு செய்வது என அது நிறையத் திட்டமிடும். ஆனால் அதன் சில செயல்கள் மட்டுமே பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பல நேரங்களில் அது செய்யும் செயல்கள் சொதப்பி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும். அதிலிருந்து தப்பிப்பதுதான் பேடிங்க்டன் கரடியின் சுவாரஸ்யமான கதை. திரைப்படங்களில் ரசித்த வடிவேலு அவர்களின் நகைச்சுவை போன்றே பேடிங்க்டன் கரடியின் செயல்களும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். பேடிங்க்டன் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்கூட “Paddington at Peru” எனும் மூன்றாம் பாகம் வெளியானது. பேடிங்க்டன் கரடி தனது சொந்த ஊரான பெருவுக்கு சென்று தனது அத்தையைத் தேடுவதாகக் கதை அமைந்திருக்கும். கதையின் முடிவில், பேடிங்க்டனின் சொந்த ஊரான பெருவிலே தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்தா? பெருவா? எது தனது சொந்த ஊர் என்ற குழப்பத்தில் பேடிங்க்டன் தவித்துக்கொண்டிருக்கும். நாம் அனைவருமே வெவ்வேறு காரணங்களுக்காக, நமது சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கோ, வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ மாறியிருப்போம். புதிய இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், சொந்த ஊரை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். “சொர்கமே என்றாலும் அது நம் சொந்த ஊர் போல வருமா” பாடலைகூட நாம் கேட்டிருப்போம். எது நமது சொந்த ஊர்? பிறந்த ஊரா? அல்லது நாம் தற்போது வாழும் ஊரா? என்ற குழப்பம் அனைவருக்குமே உண்டு. அதே குழப்பத்தில்தான் பேடிங்க்டன் கரடியும் தவித்துக்கொண்டிருக்கும். பேடிங்க்டன் தனது கரடி சொந்தங்களுடன் பெருவில்தான் தங்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்க்க, இங்கிலாந்துதான் தனது சொந்த ஊரென பேடிங்க்டன் முடிவெடுக்கும். ஏன் தெரியுமா? ஏனென்றால், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்கிறது பேடிங்க்டன். அதனால்தான், உலக அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது பேடிங்க்டன் கரடி.
- குழந்தைகளின் உரிமைகள் – 2
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள், அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை எந்தப்பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், வயது வந்த பெரிய குழந்தைகள் என்றால், அவர்கள் இந்தக் கல்லூரியில் சேர வேண்டும், இன்ன படிப்புப் படிக்க வேண்டும் என்ற பல்வேறு முடிவுகளையும் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் எடுக்கின்றனர். “ என் பையன் / பொண்ணு நாங்க கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டாங்க” என்று பெருமையுடன் சொல்லும் பெரியவர்களை, பெற்றோரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மாதிரிச் செய்யக்கூடாது என்று சொல்கிறது யூனிசெப் அமைப்பின் பிரகடனம். பெரியவர்கள் இம்மாதிரி முடிவுகளை, அல்லது குடும்பத்தில் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தாங்கள் எடுக்கும் முடிவுகள், தமது குழந்தைகளை எந்த வகையில் பாதிக்கும் என்று தீர யோசித்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிறது யூனிசெப். குழந்தைகளுக்கு இந்த உலகிலுள்ள ஆகச் சிறந்த அனைத்தையும் தர வேண்டும் என்பது உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இரண்டாவது அம்சம். மாமேதை லெனின் இதையே எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்று நாம் மனதிற் கொள்ள வேண்டும் : “ உலகின் ஆகச் சிறந்தவை அனைத்தும் குழந்தைகளுக்கே !” என்பது லெனினின் முழக்கம் . பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் - இப்படி வேறு யாராக இருந்தாலும் அவர்களின் எந்த ஒரு செயலும் மிகச் சிறந்தவற்றையே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது யூனிசெப்பின் விதி. இதை, அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு யூனிசெப் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் அனைவரும் வழங்குகிறோமோ என்பதை அந்தந்த நாட்டின் அரசாங்கம்தான் கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்திக் கூறுகிறது. பெற்றோரால் அவரவர் குழந்தைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா, பாதுகாக்கப்படுகிறார்களா என்பதையும் அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த விதி சொல்கிறது. பெற்றோர் அப்படி என்ன அக்கறையே இல்லாமல் இருப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழும். அறியாமை, கவனக்குறைவு, அலட்சியம், இயலாமை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணங்களால் அன்றாடம் எங்கேனும், யாரேனும் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை, உயிரையே இழப்பதை செய்திகளில் நாம் பார்க்க முடிகிறது. காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை ! ஒரு நர்சரி பள்ளியில் தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து ஒரு நான்கு வயதேயான பெண் குழந்தை இறந்து போன செய்தி போன வாரம் செய்தித்தாள்களில் வந்து அதிர வைத்தது. எங்கே குழந்தைகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பெரியவர்கள் தாம் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்கிறது யூனிசெப். அரசாங்கம் இதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி. இதை நாம் செய்கிறோமா, அரசாங்கம் செய்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆகச் சிறந்த அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடமை நமக்கு அன்றி, வேறு யாருக்கு இருக்கும் ?
- சவரக்கத்தி
மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல பிளேடுகளை (blades), இன்றைய குழந்தைகள் கண்டிருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்.. இரு புறமும் கூர்முனை கொண்ட பிளேடுகள் இவை. பள்ளியில் பென்சிலை கூர்ப்படுத்த கருவி இல்லையென்றாலும், வீட்டில் உள்ள ஆண்கள் சவரம் செய்வதென்றாலும் இந்த பிளேடுகள்தான் உதவும். வேண்டுதலுக்காகக் கோவிலுக்குப் போனால் கூட, இந்த பிளேடுகளில் ஒரு பாதியை வைத்து, தலைமுடியை மொட்டையடித்துவிடுவார்கள். தற்போது, சவரம் செய்பவர்கள் எது மாதிரியான சவரக்கத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? இதோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகையான சவரக்கத்தியாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு சவரக்கத்தி உங்கள் வீட்டில் இருந்தாலோ, இல்லை அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் இருந்தாலோ, அதை எடுத்துப் பாருங்கள். ஒரு பிளேடுக்கு பதிலாக மூன்று பிளேடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது அல்லவா? ஒரேயொரு பிளேடு வைத்து, சவரம் செய்து வந்தவர்கள், இப்படி மூன்று பிளேடு கொண்ட சவரக்கத்திக்கு மாறியது எப்படி? “ஒன்னு வாங்கினா ரெண்டு இலவசம்” அப்படி இப்படியென்று சும்மாவெல்லாம் இந்த மாற்றம் வரவில்லை. இதற்குப் பின்னால், பல கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வு இருக்கிறது. கிங் கேம்ப் கில்லட் (King Camp Gillette) என்பவர் கண்டுபிடித்த 1901ஆம் ஆண்டு சவரக்கத்தியானது. இதற்கு ஆங்கிலத்தில் ‘safety razor’ என்று பெயர். ஒரு பிளேடை இரண்டு புறமும் பாதுகாப்புக்கூறுகள் கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இந்தப் பெயர். இந்தக் கண்டுபிடிப்பினை முன்வைத்து, கில்லட் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான சவரக்கத்திகள் விற்கப்பட்டு, இன்று நாம் அன்றாடம் புழங்கக்கூடிய பெயராக கில்லட் மாறியுள்ளது. சாதாரண கத்திரிக்கோல் அல்லது ஏதோ சிறு சிறு கருவிகளின் துணைகொண்டு சவரம் செய்துவந்த மக்கள், கில்லட்டின் சவரக்கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு கண்டுபிடிப்பின் மூலம், லாபம் வந்தது. அதோடு நின்றுவிடலாம் என்று கில்லட் நிறுவனம் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தது. 1971ஆம் ஆண்டு, “Trac II” எனப்படும் ஒரு ஒரே உறையில் இரண்டு பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகளை அறிமுகப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு பிளேடுகள் எதற்கு என்பதற்கும் அவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது. முதல் பிளேடு, முடியை தோலிலிருந்து சற்றே வெளியே இழுக்கும். இரண்டாவது கத்தி அந்த இழுக்கப்பட்ட முடியை அதன் வேர் அருகேவே வெட்டிவிடும் - அது மீண்டும் உள்ளே நுழைவதற்குள். விளைவு? மிருதுவான சவரம்! இந்த யோசனையை “பின்னிடைவு விளைவு” (hysteresis effect) என்று அழைத்தனர். ஆனால் அர்த்தம் சுலபம்: ஒரு கத்தி இழுக்கிறது, அடுத்தது வெட்டுகிறது. ‘சவர’ உலகில் இதுவே பெரும் புரட்சி என்றால், அத்தோடு நின்றுவிடவில்லை கில்லட் நிறுவனம். ஒன்றுக்கு பதிலாக, இரண்டு பிளேடுகளை வைத்ததற்கே, இவ்வளவு மிருதுவான சவரம் கிடைக்கிறதென்றால், இன்னும் அதிக எண்ணிக்கையில் பிளேடுகளைக் கொண்டு சவரக்கத்திகளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தனர். யோசனை மட்டும் போதுமா? ‘செயல்’ அல்லவா முக்கியம்! இதற்காக 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. தற்சமயத்தில், 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது சுமார் 6,262.5 கோடி ரூபாய் ஆகும். இந்தக் காசில் பத்து ‘மங்கள்யான்’களையாவது நம்மால் தயாரிக்க முடியும். சின்ன சவரக்கத்திக்கு அவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது? மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் “Mach 3” எனப்படும் சவரக்கத்திகள். மூன்று பிளேடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கத்திகள். அதற்குப்பின்பு, நான்கு ஐந்து என்று பல பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகள் வடிவமைக்கப்பட்டுவிட்டாலும், “Mach 3” என்பது தனித்துவமாக நிலைத்துவிட்டது. ஒரு சின்ன கத்திக்கு எத்தனை பெரிய வேலை!!!
- Adolescence web series - 1
Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். 'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம். வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம். குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம். வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம். Adolescence பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி. 'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார். "நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான். இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும். 13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந் தது என்ன? (தொடரும்)
- விடுகதைகள்
1. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன? 2. சின்னவன் தலைக்குச் சீரான கிரீடம். அது என்ன? 3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு; ஓட்டு வீட்டைப் பிரித்தால் வெள்ளை மாளிகை; உள்ளே குளம். அது என்ன? 4. இத்தனூண்டு சிட்டுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப் புடவை. அது என்ன? 5. மூன்று பெண்ணுக்கும் ஒரே முகம்; மூத்த பெண் ஆற்றிலே; நடுப் பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே. அவர்கள் யார் யார்? விடைகள்:- 1. முட்டை 2. குண்டூசி 3. தேங்காய் 4. வெங்காயம் 5. முதலை, உடும்பு, பல்லி.
- குழந்தையிடம் அம்மா செல்வது எப்படி?
குழந்தை அம்மவிடம் செல்ல உதவுங்கள் செல்லக்குட்டி! படம் உதவி: நாஜலட்சுமி நாராயணசாமி
- ஏன் பிறந்தோம் - 2
சிந்திக்கும் ஆற்றல் எனறால் என்ன? முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுதல். அதாவது வேப்பமரம் என்ற ஒன்றை அறிந்து கொள்வது முதல் செயல். அத்துடன் அதைப் போன்றே வடிவத்துடன் இருக்கக்கூடியவை புளியமரம், மருதமரம், கொய்யாமரம், முருங்கைமரம், ஆலமரம், அரசமரம். இவை அனைத்தும் மரங்கள் என்று புரிந்துகொள்வது இரண்டாவது செயல். ஒன்றை ஒன்றுடன் இணைத்துப் பார்ப்பதும் வேறுபடுத்திப் பார்ப்பதும்தான் அறிதல். அறிதலின் வழியே ஒரு பொதுக்கருத்து உருவாகிறது. அதாவது மரம் என்கிற பொதுவான ஒன்று இருக்கிறது. அதற்குள் தனித்தனி மரங்களும் இருக்கின்றன. அதாவது மரத்துக்குள் வேப்பமரம், புளியமரம் என்ற தனித்த மரங்களும் அடங்கும். அதேபோல் ஒரு பொதுக்கருத்துக்குள், தனித்த கருத்துகளும் இருக்கும். ஒன்றை அறிதல் என்பது முதல் படி. அறிந்ததுடன் வேறுபட்ட ஒன்றை இணைப்பது இரண்டாவது படி. ஆனால், இப்போது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதாக இந்தச் செயல் மனித மூளைக்குள் நடந்துவிடவில்லை. மனித மூளையில் சிந்தனை என்ற வேதிவினை நடைபெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. மனிதன் மட்டும்தான் சிந்திக்கின்றானா? இல்லை. இயற்கையில் உயிருள்ள அனைத்தும் மூளையை-நரம்புத்தொகுப்பைக் கொண்டுள்ளன. தாவரங்களோ, விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, எந்த உயிராக இருந்தாலும் தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நரம்புகளை, வேதித் தூதுவர்களை, மின் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. தாம் நினைப்பதை வெளிப்படுத்துவதற்கு வேறுவேறு வழிகளைத் தங்களுடைய பரிணாமவளர்ச்சியில் அவை கண்டுபிடித்திருக்கின்றன. என்ன மாதிரியான வழிகள் என்பதைப் பார்ப்போமா? கண்ணுக்குத் தெரிந்த உயிர்கள் அனைத்துமே புலன்களின் வழியே உயிர்வாழ்பவை. உடல் என்கிற ஒன்றின் வழியே உயிருடன் இருப்பவை. அப்படி என்றால் உயிர் என்றால் என்ன என்கிற கேள்வி வருகிறதா? உயிர் என்றால் உடலை இயக்குகிற சக்தி. அந்த சக்தி உடலின் மூலமாகவே உருவாக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பது. பின்னிப்பிணைந்திருப்பது என்று சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் உயிர் ஒரு ஒளியைப் போலத் தனியே பிரிந்து செல்வதாகக் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள். அது எல்லாம் கப்சா! பொய்! உயிர் என்கிற ஒன்று தனியே கிடையாது. அது உடலை இயக்கும் ஒரு சக்தி. உடல் இயங்குவதற்காக உருவான சக்தி. சரியா? அதனால் உடல் இல்லாத உயிர் கிடையாது. எளிய பாசியிலிருந்து மனிதர்கள் வரை உடலும் உயிரும் இணைந்து இயங்குவதன் மூலமே வாழ்கிறார்கள். உயிர்ப்பட்டியலில் மிகக்குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் தன்னுடைய உடலின் வழியே செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இயற்கைச் சூழல்தான் அந்த உயிர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. அவை உயிர் வாழ்வது சார்ந்தும் தன் இனத்தைப் பெருக்குவது சார்ந்தும் மட்டுமே செயல்படுகின்றன. அது இயற்கையின் எழுதப்படாத விதி. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான விதி. எனவேதான் சாதகமான சூழல் இல்லாதபோது குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் அமைதியாக மடிந்துவிடுகின்றன. மறைந்து விடுவதில்லை. தன் விதைகளை அல்லது உடலை உறக்கநிலையில் பாதுகாத்து வைத்துக்கொள்கின்றன. மீண்டும் சாதகமான சூழல் வரும்போது, அவை உயிர்த்தெழுகின்றன. பாசி, புல், பூச்சிகள், புழுக்கள் என்று இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லமுடியும். சில தாவரங்கள் இயற்கையில் உயிர் பிழைத்திருக்க பலவிதமான சிக்கலான திட்டங்களை வைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு பூச்சிகளைச் சாப்பிடும் தாவரம், பூச்சிகள் சாப்பிட்டுவிடாமல் இருக்க ஒரு வேதிப்பொருளை சுரக்கும் தாவரம், தொட்டால் சுருங்கிக் கொள்ளும் தாவரம் என்று சில உதாரணங்களைச் சொல்லலாம். நீங்களும்கூட வேறு என்னென்ன தாவரங்கள் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்துபாருங்களேன். தான் வாழ்வதற்காக இயற்கையுடன் அனுசரித்துச் செல்கின்றன தாவரங்கள். அதேநேரம் தனக்கென தனியான குணாதிசயங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்த அளவுக்குத்தான் அவற்றின் செயல்பாடு/சிந்தனை இருக்கிறது. உயிர் வாழ்வதைத் தவிர வேறு சிந்தனை கிடையாது. (அதுவும் அதன் கையில் நூறு சதவீதம் கிடையாது.) இதுதான் அதன் தத்துவம். அந்தச் சிந்தனையின் எல்லைகள் மிகக்குறுகியவை. அவை இயற்கையுடன் பிணைக்கப்பட்டவை. இயற்கையைப் பிரதிபலிப்பவை. புரியலையே! ஆமாம். கொஞ்சம் கடினம்தான். மூளையின் நுட்பமான, சிக்கலான வேதிச் செயல்பாடுதான் சிந்தனை. இந்த அளவுக்கு இப்போது புரிந்துகொண்டால் போதும். என்ன விளையாடுகிறீர்களா? எங்களுக்கு வேறு வேலை கிடையாதா என்று கோபம் வருகிறதா? சரி, சரி. கொஞ்சம் எளிமையாகச் சொல்லமுடியுமா என்று பார்ப்போம். உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலைகளைக் கிள்ளித் துண்டாக்கிக்கொண்டே இருந்தால், அந்த இலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் அதிர்வலைகள் செடியின் வேர் முதல் நுனிவரை சென்று சேர்கின்றன. அந்த அதிர்வலைகள்தான் ஞாபகப் பதிவாகிறது. அந்த ஞாபகப்பதிவுகள் யாராவது அந்தச் செடியைத் தொட்டாலே பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது. அது அதிர்ந்து நடுங்குகிறது. மின்காந்த அலைகளின் வழியே எதிர்வினை புரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் விலங்குகள், பூச்சிகள், பறவைகள், புழுக்கள் எப்படிச் சிந்திக்கின்றன? ( தத்துவம் அறிவோம் )
- பாடிக்கிட்டே படிக்கலாம்!
பள்ளிப் பாடங்கள் இலக்கியமாக இருக்கும்போதும், இலக்கியப் பார்வையோடு பாடங்களை அணுகும்பொழுதும் கற்றல் கற்பித்தலில் வேகம் அதிகரிக்கும். இது ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து அனுபவிக்கக்கூடிய ஒன்று. படங்கள், பாடல்கள், புதிர்கள், கதைகள், படக்கதைகள், உரையாடல், கடிதம், நாடகம் எனப் பல்வேறு இலக்கிய வகைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. மொழி சார்ந்த கற்றலில் அது நேரடியாகச் செயல்பட்டாலும் கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என இலக்கிய வடிவங்களில் தர முடியும். அப்படிப்பட்ட பாடங்களை, செயல்பாடுகளை அதிகப்படுத்தி நவீனக் கல்வி முறை தன்னை தகவமைத்துக் கொண்டுவருகிறது. அந்த வகையில் ஆரம்பக் கல்வி தமிழ்ப் பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடல்களைப் பற்றி இந்த முறை பார்ப்போம். ஆரம்பக் கல்வியில் தமிழ்ப் பாடமும் பாடல்களும் குழந்தைகளை எப்பொழுதும் மகிழ்விப்பவை. தமிழ் எழுத்துக்களையும்கூட ராக தாளத்துடன் கற்று, மனதில் ஏற்றிக்கொள்பவர்கள் நம் குழந்தைகள். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இசை இணைந்து பயணிக்கிறது. மொழிப்பாடம் என்பதும் முத்தமிழின் ஒவ்வொரு வகையிலும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் பாடல்கள் வெவ்வேறு வகைகளை உள்ளடக்கியுள்ளன. - குழந்தைகள் தனியாகவும் இணைந்து குழுவாகவும் பாடும்படி உள்ளன. - அனுபவித்துப் பாடும்படியாக, அவர்களின் வயதுக்கேற்ப புரிந்துகொள்ளும்படியாக இருக்கின்றன. - ஒரே இசை வடிவத்தில் இல்லாமல் இசையோடு இணைந்து, நாட்டுப்புற இசை வடிவங்கள் அடிப்படையில், சேர்ந்திசை...எனப் பல்வேறுபட்டு இருக்கின்றன. - பாடுவதோடு மட்டுமல்லாமல் ஆடுதல், இசையுடன் இணைத்து ஆடிப்பாடுவதாகவும் உள்ளன. - பாடல் படித்தல், பாடல் ஒப்பித்தல போன்ற பழைமை நடைமுறையைக் கடக்க க்யூ.ஆர். கோட் மூலம் பாடல் சென்றுசேர்கிறது. பாடல் என்பது உயிர்ப்புள்ள செயல்பாடாக மாறியிருப்பதை மகிழ்ச்சியான கற்றல் உறுதிப்படுத்துகிறது. - ஒவ்வொரு தமிழ்ப் பாடமும் இயற்கை சார்ந்த பாடல்கள், கேள்வி கேட்கும் பாடல்கள், கதைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறார் பாடலாசிரியர்களான அழ. வள்ளியப்பா, பாரதியார், தேசிக விநாயாகம் பிள்ளை போன்றோரின் பாடல்களை உள்ளடக்கியுள்ளன. பாடல்கள்களுக்கு ஏற்ற வண்ண ஓவியங்களும் தேவையாகிறது. - பாடப்பொருள், மொழித்திறன் சார்ந்து குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை மாணவர்கள் அடைவதையும் பாடல்கள் மையப்படுத்தியுள்ளன. இயற்கைப் பாடகள்: ஆலமரத்தில் விளையாட்டு, வண்ணத்துப்பூச்சி, மழை, அனுபவப் பாடல்கள்: கைவீசம்மா கைவீசு அம்மா இங்கே வா வா – மே.வீ.வேணுகோபாலன் தடதடவென இடி இடிக்குது தாளம் தப்பாமல் நிலா பாரு நிலா பாரு நீல வானிலே கண்ணாடி – அழ.வள்ளியப்பா நாட்டுப்புறப் பாடல்கள் ஐலசா ஐலசா, பூனைக்கும் பூனைக்கும், அந்துமல்லி பூத்திருக்கு, முளைப்பாரி பாடல், கும்மியடி கதைப்பாடல் உப்பு மூட்டை, பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம், சட்டை மேல சட்டை போட்டு என்கிற காவல்காரன் பாடல் கேள்வி எழுப்பும் பாடல்கள்: எங்கே போறீங்க? அச்சுவெல்லம் தின்று பார்த்து, இனிப்பு சுவையைக் கண்டுபிடி? என்ன வண்ணம் வேண்டும்? யாரு யாரு யாரு, காரணம் தெரிஞ்சா கூறு கூறு – வையம்பட்டி முத்துசாமி எதனாலே எதனாலே, எதனால் எதனால் எதனாலே? மொழியை சொல்லிக் கொடுக்கும் பாடல்கள்: அதோ பாராய் – அழ.வள்ளியப்பா பொம்மை, பட்டம் பறக்குது வண்ணம் தொட்டு இறகு – அழ.வள்ளியப்பா அழகுத் தோட்டம் பூம் பூம் வண்டி வருகுது ஓடி விளையாடு பாப்பா– பாரதியார் விந்தை மனிதர் கடற்கறைக்குப் போகலாம் கடினமான பாடல்கள் வெற்றி வேற்கை நன்னெறி மேற்கண்ட விதம்விதமான பாடல்களைக் குழந்தைகள் பாடி, ஆடி, இசைத்து, சேர்ந்திசைத்து... என்ற முன்னெடுப்பை பள்ளிகளும் வகுப்பறைகளும் முன்னெடுத்துச் சென்று மாணவர்களின் கற்றலை உறுதிப்ப டுத்த வேண்டும்.
- எல்லை இல்லா இயற்கை
அடுத்த வீட்டுச் சேவல் ஒன்று கூவி எழுப்பி விட்டது. அருகில் உள்ள வீட்டு மல்லி மலர்ந்து மணத்தைத் தந்தது. அண்டை இருந்த மரத்தின் குயிலும் கூவி இசையைப் பொழிந்தது. அடுத்த ஊரின் ஏரி நீரும் கிணற்றின் ஊற்றாய் நிறைந்தது. நாடு கடந்து ஆறு பிறந்து நீரைச் சுமந்து வந்தது. காடு பிறக்கும் தூய காற்று கடந்து ஊரைச் சூழ்ந்தது தொலைவில் தெரியும் மலையில் இருந்து தென்றல் தவழ்ந்து வந்தது. அலையும் கடலும் முகிலாய் எழுந்து மழையை எங்கும் பொழிந்தது. எல்லை கடந்தும் நன்மையாகும் இயற்கை என்றும். சிறந்தது. எல்லை மறந்தும் இணைந்து வாழும் அன்பு உள்ளம் உயர்ந்தது
- பனியை மாற்றிய பருத்தியும், கறுப்பியும்
செண்பகக் காட்டில் வசிக்கும் வெள்ளை மயில் ‘பனி’ நேற்று வரை மிகவும் சந்தோஷமாகத் தானே இருந்தது. இன்று அதன் நடவடிக்கைகள் மாறி இருக்கிறதே. வெள்ளை மயிலுக்கு என்னாச்சு? எப்போதும் போல மாலையில் விளையாட வந்திருக்கும் நண்பனைக் கண்டுகொள்ளாமல், குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்திருக்கிறதே. யாரோடும் சண்டையா? வேட்டையாடி விலங்குகளுக்குப் பயந்து பதுங்கியுள்ளதா? பனி மயிலைத் தேடி வந்த ‘பருத்தி’ முயலுக்கு, அது கவலையோடு இருப்பதைப் பார்த்து ஒரே குழப்பம். பனியும், பருத்தியும் தினமும் மாலை குளக்கரையில் விளையாடுவார்கள். வானில் மேகங்கள் கூடி, மழைக்கான அறிகுறி தெரிந்தால், பனி மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடும், பருத்தி முயல் இனிமையாக ஒரு பாடலைப் பாடும். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் களைகட்டும். ஆமாம்! அன்று பனி மயில் மனதளவில் காயம் பட்டிருந்தது போலும். அதற்குக் காரணம் என்ன? செண்பகக் காடுகளில் வசிக்கும் மயில்கள் கூட்டத்தில் பனி மயிலும் ஒன்று. காட்டில் வாழும் மற்ற மயில்களைப் போல, அது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இல்லை. வானவில் போன்று பல வண்ணங்கள் கொண்ட தோகையும் அதற்கு இல்லை. மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் பேரழகு. அன்று காலை மயில்கள் கூட்டத்தில் நடந்தது இதுதான். திடீரென்று ஒரு வயதான பெண் மயில், என்றைக்கும்போல் இல்லாமல் பனியை உதாசீனப் படுத்தியது. நீண்ட நாட்களாக இருந்த கோபத்தை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்தது. “நம்மள மாதிரி, இது வானவில் நிறங்களோட பொறக்கல. இயற்கையோட ஆசிர்வாதம் இதுக்குக் கிடைக்கல. மயில்களோட அழகே அதன் தோகையில் இருக்கும் வண்ண நிறங்கள் தான். வெறும் வெள்ளையாக இருந்தால் யார் ரசிப்பாங்க. காட்டில், மத்த விலங்குகள் மயில்கள் கூட்டத்தை மதிக்குமா? இது, நம்ம காட்டுக்கும் மயில் கூட்டத்துக்கும் கிடச்ச சாபம். இனிமேல் யாரும் இந்த மயில்கூடப் பழகாதீங்க” என்று தன்னை இழிவாகப் பேசியதைக் கேட்டு, வெள்ளை மயிலுக்கு அழுகை பீறிட்டு வந்தது. கூட்டத்தில் இருந்த மற்ற மயில்கள் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. செண்பகக் காட்டில், பனி மயிலின் வினோதமான வெள்ளை நிறத்தைப் பார்த்து மற்ற மயில்கள் மனதில் வெகுநாட்களாகவே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றில் சில, “இது, தீய சக்தியின் திருவிளையாடல்” என்று கூட தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டன. மனமுடைந்த பனி மயில், கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடத் தீர்மானித்துக் குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது வந்த பருத்தி முயல், தனது அழகான வாலால் மயிலை வருடி விட்டு, “பனி! நான் பார்த்ததிலேயே அழகான மயில் நீ! உனக்கு இன்னக்கி என்னாச்சு? ஏன் இப்படிச் சோகமாக உட்கார்ந்துக்க?" என்றதும் நடந்த கதையை நண்பனிடம் சொன்னது பனி. “கவலைப் படாதே! உண்மையிலேயே நீ மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். அதனால தான் நான் உனக்குப் ‘பனி’ ன்னு பெயர் வெச்சேன். உன் அழகுக்கு ஈடாக இந்தக் காட்டில் எந்த மயிலும் இல்லை” என்று ஆறுதல் சொல்லித் தேற்றியது. பனி எதையும் காதில் வாங்கவில்லை. அப்போது குளத்தில் தவளைகளின் ‘க்கிர்ரக்...க்கிர்ரக்’ சத்தம் கேட்கத் தொடங்கின. சில இசைக்குருவிகளின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பட்டாம் பூச்சிகள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கின. பனி மயிலை ஆற்றுப் படுத்த முயன்ற முயல், “இது போல, ஒரு மழை நாள்ல தான், நீ எனக்கு ‘பருத்தி’ன்னு பெயர் வெச்ச. வெடித்த பருத்திப் பூவைப் போல ‘புஷுபுஷுன்’ன்னு, என் உடல் முழுவதும் ரோமத்தைப் பார்த்து ‘பருத்தி’ ன்னு கூப்பிட்டயே. அது நினைவிருக்கா?” என்று கேட்க, “பருத்தி! உன் சமாதான முயற்சிகள் பலனளிக்காது. இனி எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. நம்ம ‘கறுப்பி’ குட்டி வந்ததும் அதுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்” என்றது. அதே நேரத்தில் வேறு ஏதோ விலங்கு ஒன்று, கீழே கிடந்த காய்ந்த சருகுகளைத் தாண்டி வரும் சத்தத்தைக் கேட்டு இரண்டும் பதுங்கிக் கொண்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு, மறைவிலிருந்து எட்டிப் பார்த்து, வந்திருப்பது ‘கறுப்பி’ என்று புரிந்து கொண்டன. கறுப்பி, ஒரு தேன் கரடிக் குட்டி. ஒரு நாள், அம்மா கரடி மரத்தில் ஏறி தேன் சேகரிக்கச் சென்றபோது குட்டியை மரத்தடியில் விளையாட அனுமதித்தது. ஏற்கனவே மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பனியும், பருத்தியும் அன்று முதல் நண்பர்களானார்கள். “ஓ! நீ தானா கறுப்பி! எப்படி இருக்க? இன்னக்கி உங்க அம்மா வரலியா?” என்று பேச்சைத் தொடங்கிய பருத்தி, “நீயே இன்னக்கி நடந்த கதையைக் கேளு. பனி மயிலுக்கு செண்பகக் காட்டில் இனி வாழப் பிடிக்கலையாம். காட்டை விட்டு வெளியேறப் போகுதாம். உங்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு செஞ்சு காத்திருக்குது” என்றது. விவரம் கேட்டறிந்த கறுப்பி குட்டி, பனி மயிலை அருகில் அழைத்துத் தனது முதுகில் ஏற்றி கொண்டது. “யார் யாரோ புரியாம ஏதேதோ சொல்றாங்கன்னு கவலைப்பட்டு, வேறு மாதிரியான முடிவுகளை எடுக்காதே. உலகத்தில வெள்ளையா ஒரு மயில் பிறக்கக் கூடாதா? நிறத்தை நீயோ நானோ தேர்வு செய்றதில்லை... என்னைப் பாரு. எனக்கு, நீயும், பருத்தியும் சேர்ந்து தான் ‘கறுப்பி’ன்னு பெயர் வெச்சீங்க. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன்னு கவலைப் படலையே. ஊரே கறுப்பு நிறத்தை அவமானமாகப் பார்க்கிறப்ப, ஒங்க மயில்கள் கூட்டத்தில் வெள்ளை நிற வெறுப்பா?... இதையெல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது. காக்கா, கறுப்பு தான். ஆனால் அதோட விருந்தோம்பல் பண்பு எந்தப் பறவைக்காவது இருக்கா? யானை, கறுப்பு தான். காட்டில் மரங்கள் வளர யானைகள் உதவுற மாதிரி வேறு விலங்குகள் உதவுறதா? கறுப்பு, வெறுப்பின் நிறம் இல்லை. வெள்ளையால் எந்தத் தொல்லையும் இல்லை. அந்தப் பெண் மயிலை மனதார மன்னிச்சு விட்டுடு” என்றது. அதன் அறிவுரைகளைக் கேட்டு, பனி மயிலுக்கு சிறிதளவு நம்பிக்கை பிறந்தது. “கறுப்பி! நன்றி... இனி நான் மனம் தளரவே மாட்டேன்” என்று நண்பர்களுக்கு உறுதி அளித்தது. விளையாடிய பிறகு, மூவரும் விடைபெறத் தயாரானபோது, மரத்திலிருந்து பறந்து இறங்கிய ஒரு ஆண் மயில், “கொஞ்சம் நில்லுங்க” என்றதும் மூன்றும் மரியாதையுடன் “வணக்கம்” என்றன. ஆமாம்! அது, மயில்களின் தலைவனான ஆண் மயில். பனிக்கு அருகில் வந்த அந்த ஆண் மயில், “மன்னிகணும். காலையில் நடந்ததை நெனச்சு வருத்தப் படாதே. விபத்துன்னு நெனச்சு விட்டுடு. வெள்ளை நிறத்தில் பிறந்ததால... நீ ஒன்னும் தகுதி இழந்து போகலை. மயில்களோட வழக்கமான நிறத்தில இருந்து மரபணு மாற்றம் அடைஞ்ச அதிசய மயில் நீ!.. வா! நாம திரும்பப் போகலாம்” என்றதும், பனி சமாதானம் அடைந்தது. கவலையில் இருந்தும் மீண்டது. மகிழ்ச்சியில் பனி, காடு அதிர அகவியது. சிறிது இடைவெளியில், எதிர்புறத்தில் மயில்கள் அகவும் சத்தம் அடுத்தடுத்து கேட்டன.













