top of page

பனியை மாற்றிய பருத்தியும், கறுப்பியும்


ree

செண்பகக் காட்டில் வசிக்கும் வெள்ளை மயில் ‘பனி’ நேற்று வரை மிகவும் சந்தோஷமாகத் தானே இருந்தது. இன்று அதன் நடவடிக்கைகள் மாறி இருக்கிறதே. வெள்ளை மயிலுக்கு என்னாச்சு?


எப்போதும் போல மாலையில் விளையாட வந்திருக்கும் நண்பனைக் கண்டுகொள்ளாமல், குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்திருக்கிறதே. யாரோடும் சண்டையா? வேட்டையாடி விலங்குகளுக்குப் பயந்து பதுங்கியுள்ளதா? பனி மயிலைத் தேடி வந்த ‘பருத்தி’ முயலுக்கு, அது கவலையோடு இருப்பதைப் பார்த்து ஒரே குழப்பம்.


பனியும், பருத்தியும் தினமும் மாலை குளக்கரையில் விளையாடுவார்கள். வானில் மேகங்கள் கூடி, மழைக்கான அறிகுறி தெரிந்தால், பனி மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடும், பருத்தி முயல் இனிமையாக ஒரு பாடலைப் பாடும். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் களைகட்டும்.


ஆமாம்! அன்று பனி மயில் மனதளவில் காயம் பட்டிருந்தது போலும். அதற்குக் காரணம் என்ன?


செண்பகக் காடுகளில் வசிக்கும் மயில்கள் கூட்டத்தில் பனி மயிலும் ஒன்று. காட்டில் வாழும் மற்ற மயில்களைப் போல, அது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இல்லை. வானவில் போன்று பல வண்ணங்கள் கொண்ட தோகையும் அதற்கு இல்லை. மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். வித்தியாசமாக வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் பேரழகு.


அன்று காலை மயில்கள் கூட்டத்தில் நடந்தது இதுதான்.


திடீரென்று ஒரு வயதான பெண் மயில், என்றைக்கும்போல் இல்லாமல் பனியை உதாசீனப் படுத்தியது. நீண்ட நாட்களாக இருந்த கோபத்தை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்தது.


“நம்மள மாதிரி, இது வானவில் நிறங்களோட பொறக்கல. இயற்கையோட ஆசிர்வாதம் இதுக்குக் கிடைக்கல. மயில்களோட அழகே அதன் தோகையில் இருக்கும் வண்ண நிறங்கள் தான். வெறும் வெள்ளையாக இருந்தால் யார் ரசிப்பாங்க. காட்டில், மத்த விலங்குகள் மயில்கள் கூட்டத்தை மதிக்குமா? இது, நம்ம காட்டுக்கும் மயில் கூட்டத்துக்கும் கிடச்ச சாபம். இனிமேல் யாரும் இந்த மயில்கூடப் பழகாதீங்க” என்று தன்னை இழிவாகப் பேசியதைக் கேட்டு, வெள்ளை மயிலுக்கு அழுகை பீறிட்டு வந்தது. கூட்டத்தில் இருந்த மற்ற மயில்கள் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை.


செண்பகக் காட்டில், பனி மயிலின் வினோதமான வெள்ளை நிறத்தைப் பார்த்து மற்ற மயில்கள் மனதில் வெகுநாட்களாகவே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றில் சில, “இது, தீய சக்தியின் திருவிளையாடல்” என்று கூட தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டன.


மனமுடைந்த பனி மயில், கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடத் தீர்மானித்துக் குளக்கரை நாவல் மரத்தடியில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தது.


அப்போது வந்த பருத்தி முயல், தனது அழகான வாலால் மயிலை வருடி விட்டு, “பனி! நான் பார்த்ததிலேயே அழகான மயில் நீ! உனக்கு இன்னக்கி என்னாச்சு? ஏன் இப்படிச் சோகமாக உட்கார்ந்துக்க?" என்றதும் நடந்த கதையை நண்பனிடம் சொன்னது பனி.


“கவலைப் படாதே! உண்மையிலேயே நீ மின்னும் பனித்துளியைப் போன்ற வெள்ளை நிறம். அதனால தான் நான் உனக்குப் ‘பனி’ ன்னு பெயர் வெச்சேன். உன் அழகுக்கு ஈடாக இந்தக் காட்டில் எந்த மயிலும் இல்லை” என்று ஆறுதல் சொல்லித் தேற்றியது.


பனி எதையும் காதில் வாங்கவில்லை. அப்போது குளத்தில் தவளைகளின் ‘க்கிர்ரக்...க்கிர்ரக்’ சத்தம் கேட்கத் தொடங்கின. சில இசைக்குருவிகளின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பட்டாம் பூச்சிகள் கூட்டமாக வானில் பறக்கத் தொடங்கின.


பனி மயிலை ஆற்றுப் படுத்த முயன்ற முயல், “இது போல, ஒரு மழை நாள்ல தான், நீ எனக்கு ‘பருத்தி’ன்னு பெயர் வெச்ச. வெடித்த பருத்திப் பூவைப் போல ‘புஷுபுஷுன்’ன்னு, என் உடல் முழுவதும் ரோமத்தைப் பார்த்து ‘பருத்தி’ ன்னு கூப்பிட்டயே. அது நினைவிருக்கா?” என்று கேட்க, “பருத்தி! உன் சமாதான முயற்சிகள் பலனளிக்காது. இனி எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை. நம்ம ‘கறுப்பி’ குட்டி வந்ததும் அதுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்” என்றது.


அதே நேரத்தில் வேறு ஏதோ விலங்கு ஒன்று, கீழே கிடந்த காய்ந்த சருகுகளைத் தாண்டி வரும் சத்தத்தைக் கேட்டு இரண்டும் பதுங்கிக் கொண்டன.


சில நிமிடங்களுக்குப் பிறகு, மறைவிலிருந்து எட்டிப் பார்த்து, வந்திருப்பது ‘கறுப்பி’ என்று புரிந்து கொண்டன.


கறுப்பி, ஒரு தேன் கரடிக் குட்டி. ஒரு நாள், அம்மா கரடி மரத்தில் ஏறி தேன் சேகரிக்கச் சென்றபோது குட்டியை மரத்தடியில் விளையாட அனுமதித்தது. ஏற்கனவே மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பனியும், பருத்தியும் அன்று முதல் நண்பர்களானார்கள்.


“ஓ! நீ தானா கறுப்பி! எப்படி இருக்க? இன்னக்கி உங்க அம்மா வரலியா?” என்று பேச்சைத் தொடங்கிய பருத்தி, “நீயே இன்னக்கி நடந்த கதையைக் கேளு. பனி மயிலுக்கு செண்பகக் காட்டில் இனி வாழப் பிடிக்கலையாம். காட்டை விட்டு வெளியேறப் போகுதாம். உங்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு செஞ்சு காத்திருக்குது” என்றது.


விவரம் கேட்டறிந்த கறுப்பி குட்டி, பனி மயிலை அருகில் அழைத்துத் தனது முதுகில் ஏற்றி கொண்டது.


“யார் யாரோ புரியாம ஏதேதோ சொல்றாங்கன்னு கவலைப்பட்டு, வேறு மாதிரியான முடிவுகளை எடுக்காதே. உலகத்தில வெள்ளையா ஒரு மயில் பிறக்கக் கூடாதா? நிறத்தை நீயோ நானோ தேர்வு செய்றதில்லை... என்னைப் பாரு. எனக்கு, நீயும், பருத்தியும் சேர்ந்து தான் ‘கறுப்பி’ன்னு பெயர் வெச்சீங்க. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன்னு கவலைப் படலையே. ஊரே கறுப்பு நிறத்தை அவமானமாகப் பார்க்கிறப்ப, ஒங்க மயில்கள் கூட்டத்தில் வெள்ளை நிற வெறுப்பா?... இதையெல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது. காக்கா, கறுப்பு தான். ஆனால் அதோட விருந்தோம்பல் பண்பு எந்தப் பறவைக்காவது இருக்கா? யானை, கறுப்பு தான். காட்டில் மரங்கள் வளர யானைகள் உதவுற மாதிரி வேறு விலங்குகள் உதவுறதா? கறுப்பு, வெறுப்பின் நிறம் இல்லை. வெள்ளையால் எந்தத் தொல்லையும் இல்லை. அந்தப் பெண் மயிலை மனதார மன்னிச்சு விட்டுடு” என்றது.


அதன் அறிவுரைகளைக் கேட்டு, பனி மயிலுக்கு சிறிதளவு நம்பிக்கை பிறந்தது. “கறுப்பி! நன்றி... இனி நான் மனம் தளரவே மாட்டேன்” என்று நண்பர்களுக்கு உறுதி அளித்தது.


விளையாடிய பிறகு, மூவரும் விடைபெறத் தயாரானபோது, மரத்திலிருந்து பறந்து இறங்கிய ஒரு ஆண் மயில், “கொஞ்சம் நில்லுங்க” என்றதும் மூன்றும் மரியாதையுடன் “வணக்கம்” என்றன.


ஆமாம்! அது, மயில்களின் தலைவனான ஆண் மயில்.


பனிக்கு அருகில் வந்த அந்த ஆண் மயில், “மன்னிகணும். காலையில் நடந்ததை நெனச்சு வருத்தப் படாதே. விபத்துன்னு நெனச்சு விட்டுடு. வெள்ளை நிறத்தில் பிறந்ததால... நீ ஒன்னும் தகுதி இழந்து போகலை. மயில்களோட வழக்கமான நிறத்தில இருந்து மரபணு மாற்றம் அடைஞ்ச அதிசய மயில் நீ!.. வா! நாம திரும்பப் போகலாம்” என்றதும், பனி சமாதானம் அடைந்தது. கவலையில் இருந்தும் மீண்டது.


மகிழ்ச்சியில் பனி, காடு அதிர அகவியது. சிறிது இடைவெளியில், எதிர்புறத்தில் மயில்கள் அகவும் சத்தம் அடுத்தடுத்து கேட்டன.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page