குழந்தைகளின் உரிமைகள் – 2
- கமலாலயன்
- May 15
- 2 min read

ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள், அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை எந்தப்பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், வயது வந்த பெரிய குழந்தைகள் என்றால், அவர்கள் இந்தக் கல்லூரியில் சேர வேண்டும், இன்ன படிப்புப் படிக்க வேண்டும் என்ற பல்வேறு முடிவுகளையும் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் எடுக்கின்றனர்.
“ என் பையன் / பொண்ணு நாங்க கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டாங்க”
என்று பெருமையுடன் சொல்லும் பெரியவர்களை, பெற்றோரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மாதிரிச் செய்யக்கூடாது என்று சொல்கிறது யூனிசெப் அமைப்பின் பிரகடனம்.
பெரியவர்கள் இம்மாதிரி முடிவுகளை, அல்லது குடும்பத்தில் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தாங்கள் எடுக்கும் முடிவுகள், தமது குழந்தைகளை எந்த வகையில் பாதிக்கும் என்று தீர யோசித்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்கிறது யூனிசெப்.
குழந்தைகளுக்கு இந்த உலகிலுள்ள ஆகச் சிறந்த அனைத்தையும் தர வேண்டும் என்பது உலகக் குழந்தைகள் நல அமைப்பின் இரண்டாவது அம்சம். மாமேதை லெனின் இதையே எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்று நாம் மனதிற் கொள்ள வேண்டும் : “ உலகின் ஆகச் சிறந்தவை அனைத்தும் குழந்தைகளுக்கே !” என்பது லெனினின் முழக்கம் .
பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் - இப்படி வேறு யாராக இருந்தாலும் அவர்களின் எந்த ஒரு செயலும் மிகச் சிறந்தவற்றையே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது யூனிசெப்பின் விதி. இதை, அநேகமாக உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு யூனிசெப் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் அனைவரும் வழங்குகிறோமோ என்பதை அந்தந்த நாட்டின் அரசாங்கம்தான் கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்திக் கூறுகிறது.
பெற்றோரால் அவரவர் குழந்தைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா, பாதுகாக்கப்படுகிறார்களா என்பதையும் அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த விதி சொல்கிறது. பெற்றோர் அப்படி என்ன அக்கறையே இல்லாமல் இருப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழும்.
அறியாமை, கவனக்குறைவு, அலட்சியம், இயலாமை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணங்களால் அன்றாடம் எங்கேனும், யாரேனும் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை, உயிரையே இழப்பதை செய்திகளில் நாம் பார்க்க முடிகிறது.
காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை ! ஒரு நர்சரி பள்ளியில் தண்ணீர்த்தொட்டிக்குள் விழுந்து ஒரு நான்கு வயதேயான பெண் குழந்தை இறந்து போன செய்தி போன வாரம் செய்தித்தாள்களில் வந்து அதிர
வைத்தது.
எங்கே குழந்தைகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பெரியவர்கள் தாம் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்கிறது யூனிசெப். அரசாங்கம் இதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி.
இதை நாம் செய்கிறோமா, அரசாங்கம் செய்கிறதா என்று நாம் கவனிக்க வேண்டும். ஆகச் சிறந்த அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடமை நமக்கு அன்றி, வேறு யாருக்கு இருக்கும் ?
Comments