top of page

தத்துவம் அறிவோம் -12


வாழ்க்கை உருவாக்கிய கேள்விகள் :


மனிதர்களின் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவு வளராத காலத்தில் மனிதர்கள் யார் எதைச் சொன்னாலும் நம்பினார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் யார் காரணம்?


ஏன் இப்படி நடக்கிறது?


இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத போது தன்னை மீறிய சக்தி இந்த உலகத்தில் இருக்கிறது என்று உணர்ந்தார்கள்.


அது கடவுள் என்று சிலர் சொன்னார்கள்.

அது இயற்கை என்று சிலர் சொன்னார்கள்

அது தலைவிதி என்று சிலர் சொன்னார்கள்.

அது தற்செயல் என்று சிலர் சொன்னார்கள்

அது மனிதனால் ஏற்பட்ட து என்று சிலர் சொன்னார்கள்.


மனிதர்களுக்கு விடை தெரியாத கேள்விகள் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.


கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார், 

உயிர்களைப் படைத்தார், 

மனிதனைப் படைத்தார், 

பிறப்பையும் இறப்பையும் படைத்தார்.

இன்ப துன்பங்களைப் படைத்தார். 

ஏற்ற தாழ்வுகளைப் படைத்தார். 

உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகளைப் படைத்தார். 

ஏழை, பணக்காரனைப் படைத்தார்.

ஆணிலிருந்து பெண்ணைப் படைத்தார். 

என்று ஏராளமான கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். 

இன்றும் இந்தக் கட்டுக்கதைகளுக்கு மவுசு இருக்கிறது. 

பெரும்பாலான மக்கள் இவற்றை நம்புகிறார்கள். 


தங்களுடைய துன்பங்களுக்குக் காரணம் தெரியாத போது தலை எழுத்து, தலைவிதி என்று நம்பத் தொடங்கினார்கள். அதை மாற்றுவதற்காகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தார்கள். வேண்டுதல் செய்தார்கள். பரிகாரம், நேர்த்திக்கடன் என்று கடவுளிடம் பேரம் பேசினார்கள்.


இந்த பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் தோன்றினார். ஆதிப்பழங்குடி மக்கள் வழிபட்ட ஆவிகள், இயற்கை உயிர்கள் இப்போது பெரிய கடவுளாக மாறினார்கள்.

இந்தக் கடவுளருக்குக் கதைகள் தோன்றின.


இந்த பூமியைப் போலவே இன்னொரு இடம் இருப்பதாக க் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன. 

மனிதர்கள் இறந்த பிறகு அந்த மேல் உலகத்துக்குப் போவார்கள் என்று நம்பச் சொன்னார்கள்.

இந்த வாழ்க்கையில் செய்யும் நல்லது கெட்ட துகளுக்கு ஏற்ப அங்கே சொர்க்கமோ நரகமோ கிடைக்கும்.


அதாவது நல்லது செய்தால் சொர்க்கமோ, கெட்ட து செய்தால் மீண்டும் வேறு வேறு பிறவிகளை எடுத்து துன்பமடைய வேண்டும் என்று சொன்னார்கள்.


இப்படி ஏழு பிறவிகளை எடுத்தபிறகு சொர்க்கத்துக்குச் சென்று கடவுளை வேண்டி முக்தி அடையலாம். அதாவது கடவுளோடு ஒன்றாக க் கலந்து விடலாம் என்று கப்சா விட்டார்கள்.

பெரும்பாலும் இந்தக் கதைகளின் அடிப்படையில் சிலச் சில மாற்றங்களுடனே பூமியின் மற்ற பகுதிகளிலும் சொன்னார்கள். 


எனவே மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் அவர்கள் காரணம் இல்லை.

 

எது காரணம்?


போனபிறவியில் செய்த நல்லது கெட்ட து. 

கடவுளின் விருப்பம்.

பிறக்கும் போது தலையில் எழுதிய எழுத்து. அதாவது விதி.

இந்த மூடநம்பிக்கைகளை வைத்து சோசியம் பிறந்தது. 

சரி. மூடநம்பிக்கை என்றால் என்ன?

மூட நம்பிக்கை என்றால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை.

ஆதாரம் இல்லாதவை.


உண்மையில் நடக்க இயலாத கற்பனைகள்.

கட்டுக்கதைகளை அடிப்படையாக க் கொண்டவை.

என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


நீங்களே யோசியுங்களேன். நம்முடைய வீட்டில் இப்படி என்ன என்ன நம்பிக்கைகள் இருக்கின்றன?

அவற்றைப் பட்டியலிட்டு இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டமாக எழுதுங்கள் பார்க்கலாம். 


( அறிவோம் தெளிவோம் )



உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page