குழந்தைகளின் உரிமைகள் - 15
- கமலாலயன்

- 2 days ago
- 2 min read
ஐக்கிய நாடுகளின் பிரகடனம் – சர்வதேசக் குழந்தைகளின் உரிமைகள் :

குழந்தைகளுக்கும் தனிப்பட்ட - அந்தரங்க உரிமைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் குடும்பம், வீடு, தகவல் தொடர்புகள் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வயது வந்த ஆணும்,பெண்ணும் பேசும் போது “என்னோட ‘பிரைவசி’யில் யார் தலையிடுவதையும் நான் விரும்புவதில்லை” என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்களின் நெருங்கிய நண்பர்களோ,பெற்றாரோ,உறவினர்களோ,அண்டை-அயல் வீட்டுக்காரர்களோ யாருமே அவ்வாறு தலையிடுவதை, பொதுவாக ஆணோ பெண்ணோ யாரும் விரும்புவதில்லை. அவர்களாக விரும்பி, முன்வந்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு;அது வேறு விஷயம். ஆனால், அவர்கள் விரும்பாத போது, வேறு யாரும் அவர்களின் அந்தரங்க உலகில் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார்கள். இப்படிக் குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகள் உண்டு என்று ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பிரகடனத்தின் 16-ஆவது பிரிவு கூறுகிறது.
“என்னது?குழந்தைகளுக்கும் அந்தரங்க உரிமைகளா? அது எப்படிச்சாத்தியம்?” என்று முதலில் நாம் அதிர்ச்சியே அடைவோம். இதுதான் எண்றில்லை,எந்த ஓர் உரிமை என்றாலும் அது பெரியவர்களின் கவனத்திலேயே பதிந்திருப்பதில்லை. பெரியவர்களின் உரிமைகளைப் பற்றியே பலருக்கும் விழிப்புணரவோ, பரிச்சயமோ, புரிதலோ இன்று வரைக்கும் இல்லை எனும்போது, குழந்தைகளின் அந்தரங்க உரிமைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு என்று அப்படியென்ன அந்தரங்கம் இருக்க முடியும் என்று உடனே ஒரு கேள்வியும் எழும். ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால், ஓரளவுக்குப் புரிந்து விடும்.
சமீப காலங்களில், இரண்டு வயது மூன்று வயதேயான பெண் குழந்தைகள் முதல், 75 வயது நிரம்பிய மூதாட்டி வரை, வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் காம வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய செய்திகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் பெயர்கள்,புகைப்படங்கள், குடும்பம்,முகவரி போன்ற எந்த விவரத்தையும் செய்தி ஊடகங்களிலோ,காவல்துறை,நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான ஆவணங்களிலோ வெளியிடக் கூடாது என்று ஒரு சட்டவிதி உள்ளது.
அவ்வாறு உண்மைத்தகவல்கள் வெளியானால்,அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு தொடர்புடையவர்களைப் பற்றி விவரங்களை வெளியிடக்கூடாது என்பதற்குக் காரணம், அவ்வாறு வெளியிடுவதால், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு,ஏற்கெனவே கடும்மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருப்போர், மேலும் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்வாறான மன அழுத்தங்களுக்கு, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை ஆளாக்கிவிடக்கூடாது என்பதில் இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
குழந்தைகளின் மன உலகம் மிகவும் நுண்ணியதாக இருக்கும். நம் பார்வையில் மிக அற்பமானவையாகத் தோன்றும் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றக்கூடும். இன்றைய அவசர உலகில், அவர்களின் நுண் உணர்வுகளைக் கவனித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையோ,புரிதலோ பெரியவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே முரட்டுத்தனமாகக் குழந்தைகளை அணுகும் நிலைக்குப் பெரியவர்கள் ஆளாகிறார்கள். ஓர் அரசுப்பள்ளியில்,சிறு மாணவியிடம் அவரின் ஆங்கிலத்திறனைப் பரிசோதிக்கிறேன் என்று ஓர் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவை நாம் சமூக ஊடகத்தில் காண முடிந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இன்றைய பெற்றோர்கள், ஒன்று, குழந்தைகளின் மனவுலகம் என்ன மாதிரியான தன்மையுடன், எந்தவிதமான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது என்பதைப் பற்றிய துளிக்கவனமும் இல்லாமல் தங்களுடைய விருப்பங்களைக் குழந்தைகள் மீது திணித்து, தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே குழந்தைகள் செய்தாக வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். குழந்தைகள் பொதுவாகப் பெரியவர்களின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடிவதில்லை;முயல்வதுமில்லை.
இதற்கு நேர எதிர்நிலையில், வேறு சில பெற்றோர்கள் குழந்தை எதை விரும்பினாலும் மறு பேச்சே இல்லாமல்,அந்தக் குழந்தை விரும்பும் எது ஒன்றையும் உடனே வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். அதன் விருப்பம் என்னவாக இருந்தாலும்,அது சரியா தவறா என்றெல்லாம் யோசனையே செய்யாமல் அதை நிறைவேற்றி விடுகிறார்கள். எடுத்துக்காட்டுக்காக, குழந்தை விரும்பிக் கேட்கிறது என்பதற்காக செல்போன் வாங்கிக் கொடுப்பதற்குக்கூட இந்த வகைப் பெற்றோர் தயங்குவதில்லை. செல்போனில் எந்தெந்த வகையான செயலிகள் இருக்கின்றன,அவற்றில் என்ன வகையான விஷயங்கள், செயல்பாடுகள் இடம் பெறுகின்றன என்பதைப் பற்றி அந்தப் பெற்றோர் எவ்விதப் புரிதலும், அறிதலும் இல்லாமலே குழந்தையின் கைகளில் விலையுயர்ந்த செல்போனைக் கொடுத்து விடுகிறார்கள்.
குழந்தைகளின் இயல்பான துறுதுறுப்பின் விளைவாக குழந்தைகள்,தங்களின் வயதுக்கு மீறிய ஆட்சேபகரமான வன்முறைகள்,பாலியல் காட்சிகளைப் பாரக்கத்தொடங்கி அவற்றில் தங்களின் கவனம் முழுவதையும் செலுத்துகிறார்கள். அதன் விளைவுகளை நம் ஊடகங்களிலும், அண்டை வீடுகளிலும் பார்த்துக்கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் பெற்றோர் அதே தவறுகளைச்செய்யும் போது இறுதியில் பாதிப்புகளால் சிதைவுறுவது அந்தக் குழந்தைகள்தாம்.
இத்தகைய ஒரு சூழலில், குழந்தையின் அந்தரங்க உரிமைகளை நாம் எப்படி அணுகுவது? இது ஒரு பெரிய உளவியல் சிக்கலாக மாறி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரகடனம் சொல்லும் இந்த உரிமையின் அம்சங்களை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் நமது குழந்தைகளை நாம் சரியாகக் கையாள முடியும்.
தொடர்ந்து சிந்திப்போம்...

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.





Comments