top of page

இலண்டனிலிருந்து அன்புடன் – 13

குவெண்டின் பிளேக் (Quentin Blake)
குவெண்டின் பிளேக் (Quentin Blake)

ஆங்கிலச் சிறார் இலக்கியத்தில் எழுத்தாளர் ரோல்ட் டால் (Roald Dahl) மிகவும் புகழ்பெற்றவர். அவரது Matilda, Charlie and the Chocolate Factory போன்ற புத்தகங்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. ரோல்ட் டாலின் கதைகள் பல திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இவரது புத்தகங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.


எழுத்தாளர் ரோல்ட் டால் எவ்வளவு பிரபலமானவரோ, அவருக்கு இணையாக ஓவியர் குவெண்டின் பிளேக் அவர்களும் எல்லோராலும் அறியப்பட்டவர். ஏனெனில், ரோல்ட் டாலின் பெரும்பாலான புத்தகங்களுக்கு இவர்தான் ஓவியங்கள் வரைந்துள்ளார். ரோல்ட் டாலின் எழுத்துகள் நமக்குக் கடத்தும் அதே சுவாரசியத்தை பிளேக்கின் ஓவியங்களும் நமக்குத் தரும்.


1932இல் பிறந்த பிளேக், கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் ஓவியம் பற்றி முறையான கல்வி ஏதும் பெறாமலேயே, அவர் ஒரு சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். பின்னாட்களில், ஓவியக் கல்லூரியில் பகுதி நேரமாகப் படித்துத் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது ஓவியங்கள் முதன்முதலில் The Wonderful Button என்ற புத்தகத்தில் வெளிவந்தன. தற்போது 90 வயதைத் தாண்டியும் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.


இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களுக்கு இவர் ஓவியங்கள் வரைந்துள்ளார். அதில் ரோல்ட் டாலின் புத்தகங்கள் மட்டும் 18 ஆகும். ஓவியம் வரைவதுடன் நின்றுவிடாமல், அவரே சொந்தமாக 35 புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான 'ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது' (Hans Christian Andersen Award) பெற்றார். அதுமட்டுமல்லாமல், பிரித்தானிய குழந்தைகள் இலக்கியத்திற்கான முதல் 'Children's Laureate' என்ற பெருமையும் இவரையே சேரும்.


அவரது ஓவியங்களுக்காகவும், ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் கடந்த மாதம் (05/06/2026) ஓவியங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஓவியங்களுக்கென இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுவே ஆகும். "உலகை மாற்றும் பெரும் சக்தி ஓவியங்களுக்கு உண்டு; அதனை உலகிற்கு வலியுறுத்துவதற்காகவே இந்த அருங்காட்சியகம் செயல்படும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சரி வாருங்கள்! இவ்வளவு சிறப்புகள் மிக்க பிளேக் எழுதிய புத்தகங்களில் ஒன்றான Never Grow Up என்ற புத்தகத்தைப் பற்றி இனிப் பார்ப்போம்.


“Never Grow Up” – ரோல்ட் டாலின் புகழ்பெற்ற வாசகம் இது. இந்த வாசகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பிளேக் அவர்கள் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். பிளேக் அவர்களின் ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞரின் ஆற்றலுடன், குழந்தைத்தனமும் இதில் வெளிப்படும். இவரது ஓவியங்கள் 'Scribble' (அதாவது, கிறுக்கல் போன்ற) வகைமையைச் சார்ந்தது. அதனால், குழந்தைகள் நீங்கள் வரைவது போன்றே இது இருக்கும்.


இந்தப் புத்தகம், “நீங்கள் சமத்தாக இருக்கும் குழந்தையா? பெரியவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவரா? அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கி, நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்” என்று முதல் பக்கமே மிகவும் அதிரடியாகத் தொடங்குகிறது. அதன் இரண்டாவது பக்கத்தில், “நீங்கள் தற்போது இரண்டாவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது இல்லை. தயவுசெய்து புத்தகத்தை மூடிவிடுங்கள்” என்று மேலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.


“நான் சொல்லியும் கேட்காமல் நான்காவது பக்கத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் குறும்பான சேட்டைகள் செய்யும் ஒரு சுட்டிதான்!” என்று இந்தப் புத்தகம் உங்களை வரவேற்கிறது. அடுத்த சில பக்கங்களில், குழந்தைகள் நீங்கள் செய்யும் சேட்டைகளையெல்லாம் அழகான ஓவியங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது.


அதன் பிறகு, "பெரியவர்கள் பெரும்பாலும் வளர்ந்த பிறகு ஏன் சுவாரசியமற்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்? ஆனால், வெகு சிலரே வாழ்வில் சுவாரசியமான விஷயங்களைச் செய்து, தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மகிழ்விக்கிறார்கள். அவர்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருகிறார்கள்; அவர்கள்தான் புதிய இனிப்புகளை உருவாக்குகிறார்கள்; அவர்கள்தான் அழிந்து போகும் உயிரினங்களைக் கூட மீட்கிறார்கள்; அவர்கள்தான் பெரிய அளவிலான சாக்லேட் கேக்குகளைத் தயாரிக்கிறார்கள்" எனப் பெரிய பட்டியலையே தருகிறார்.


எனவே, நீங்களும் அந்தச் சிலரைப் போல் இருங்கள்; நிறைய சேட்டைகள் செய்யுங்கள்; நிறைய குறும்புத்தனம் செய்யுங்கள். ஒரே மாதிரியான உலகத்தில் புதிய, சுவாரசியமான நல்ல விஷயங்களைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலைகீழாக நிற்கும் ஒரு குழந்தையின் ஓவியத்துடன் இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார்.


இந்தப் புத்தகம் “Never Grow Up, always down!” என்ற வாசகத்துடன் நிறைவடைகிறது. (நாம் தலைகீழாக நிற்கும்போது, 'கீழ் நோக்கி வளருங்கள்' என்று சொல்வதுதானே சரி! அதாவது, மாற்றி யோசியுங்கள் என்கிறார்.)


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page