வாசிப்புப் பண்பாடும் சிறார் இலக்கியமும் - 2
- சாலை செல்வம்

- 14 hours ago
- 2 min read

நீங்கள் எப்படி வாசிக்கத் துவங்கினீர்கள்? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் விதம் விதமான பதிலை நாம் பெறமுடிகிறது. தனித்துவமான பல பதில்களுக்கிடையே தனித்துவமான அனுபவங்களும் பொதுவான அனுபவங்களும் ஈர்ப்புடையதாக உள்ளன. அவ்வனுபவங்கள் அவர்களை வாசிப்பு என்ற நிலைக்கு உயர்த்துவதைப் பார்க்கமுடிகிறது.
எங்கள் வீட்டில் தினமும் பைபிள் படிக்கும் வழக்கம் உண்டு. இரவு உணவிற்குப் பின் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஜெபம் சொல்லி பைபிள் படித்து முடித்துவிட்டு படுக்கச் செல்வோம். ஒவ்வொருவருக்கும் வாசிப்பு முறை வரும்.
ஓதக் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் தமிழ் குர்ரானை வாசிக்கும் வழக்கம் இருந்தது. கவனத்தோடு எல்லோரும் சேர்ந்தமர்ந்து பக்தியோடு படிப்போம்.
எங்கள் வீட்டில் அக்கா நாவல் படிக்கும் பழக்கம் உள்ளவள். அவள் படிக்கும் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி நானும் படிக்கத் துவங்கிவிட்டேன்.
அம்மா பெட்டிக்கடை வைத்திருந்தாள். பொட்டலம் மடிக்க பழைய புத்தகங்கள் கடைக்கு வாங்குவோம். அவற்றை அம்மா படித்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கும் படித்துக் காட்டுவார்கள். அப்படியே படிக்கத்துவங்கி...
நான் நன்றாகப் படிப்பதால் என்னை கடிதம் வாசிக்கவும் வேறு எதையாவது வாசித்துக் காட்டவும் என்னை அழைப்பார்கள். மற்றவர்களுக்காகப் படித்துப் படித்து என் வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது.
இதுபோன்று இன்னும் இன்னும் என பல அனுபவங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களின் இது போன்ற அனுபவங்களை பொதுவெளியில் பரவலாகப் பார்க்கிறோம்.
வாசிப்பு என்ற நிலை உருவானபொழுது ஒவ்வொரு எழுத்தும் மேன்மை பொருந்திய ஒன்றாகக் கருதப்பட்டு பதிப்பிக்கப் பட்டது. தமிழில் வாசிப்பு ஒரு கலாச்சாரமாக உருவெடுப்பதற்குக் காரணமாக அச்சு முறை இருந்தது. அதுவும் பக்தியோடு இணைக்கப்பட்ட ஒன்றாகவும் எடுத்துச் செல்லப்பட்டது.
மொக மொக மொக மொக மொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
நவீன வாசிப்பிற்கு முன்பும் ஏன் இன்றும் கூட தெருக்களிலும் கோயில்களிலும் திருவெம்பாவையை, திருப்புகழை, கந்த சஷ்டிக் கவசத்தை என பெரியவர்களும் அவர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து வாசிக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. குழந்தைகள் கை வைத்துக் கொண்டே பெரியவர்களையும் வாய்மொழிப்பதிவையும் பின் தொடர்கின்றனர்.
அதோடு தங்களுக்கு விருப்பமான இடங்கள் வரும்பொழுதும் சுவாரஸ்யாமான மொழிப்பிரயோகங்களுக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வாசிப்பு இடங்களில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களை மீண்டும் மீண்டும் அதை நோக்கி பயணிக்க வைக்கிறது.
வழிபாட்டு முறைகளில் புதுமையை தனித்துவத்தை வித்தியாசமாகக் காட்டி வந்த வள்ளலார், ரமணர், நாராயணகுரு, மெய்வழிச்சாலை…போன்றவர்களின் வழிபாட்டு முறைகளிலும் வாழ்வியல் முறைகளிலும் மனித நேயத்தை முன் வைத்து செயல்பட்டனர். கூடிப்பாடி, பாடிப் படித்து, கூடிச் செயல்பட்டு என்ற இம்முறையில் குழந்தைகள் பங்கேற்றனர்.
ஆறுகால் வண்டினங்கா
காட்டு மைனாவினங்கா
அரங்கன் வந்ததை இங்கு
யாரேனும் காணிரோ....
என்று பாடும் குழந்தைக்கு, பாடியதைக் கேட்கும் குழந்தைக்கு மொழியில், அனுபவத்தில், வாழ்வியலில் புதுமையைக் கொண்டுவருகிறது. வாசிப்புப் பழக்கத்திற்கான இலக்கிய வகைமையாக இவற்றையும் கொள்ளலாம். இசை, இணைந்த செயல்பாடு, நாடக பாணி, வாசிப்பு என எல்லாமுமாக இணைந்த பண்பாடாக அவை பிண்ணிப் பிணைந்து உள்ளது.
(தொடர்ந்து பேசுவோம்)

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.
புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.





Comments